கீழடி: ‘‘ஆரிய மேன்மைக்கு’’ விழுந்த செருப்படி !

ரு கரித்துண்டின் ஆயுளை வைத்துக்கொண்டு தமிழின் வயது மூத்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்படியெல்லாம் பேசி, நீங்கள் வேண்டுமானால் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள். இதை வெளிநாட்டு ஆய்வாளர்கள் கேட்டால் சிரிப்பார்கள்.” –  கீழடி தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் பத்திரிகையாளர் பி.ஏ.கிருஷ்ணன். விவாதத்தில் துறைசார் வல்லுநர்கள், முன்னாள் துணைவேந்தர் முனைவர் ராசேந்திரன் மற்றும் பேராசிரியர் ராஜவேலு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அதே விவாதத்தில் கீழடியைக் குறித்து, அதன் தொடக்கம் முதலே பேசி, எழுதிச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இருந்தார். இவர்களுடன், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் வரலாற்று ஆய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இருவர், “அவாள்” தரப்பை முன்வைக்க வந்திருந்தனர். ஒருவர் பி.ஏ. கிருஷ்ணன், மற்றொருவர் பத்திரிகையாளர் மாலன்.

கீழடியில் அகழாய்வு நடத்தப்பட்ட பகுதியும், அதனை நேரில் காண குவிந்திருக்கும் தமிழக மக்களும்.

காலத்தால் பிந்தைய பானையோடுகளை யாரேனும் ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும்; எனவே, அதே மட்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கரித்துண்டுகளின் ஆயுளைக் கொண்டு அதனுடன் கிடைத்த பானையோடுகளின் ஆயுளை நிர்ணயிப்பது தவறு என்பது பி.ஏ.கிருஷ்ணனின் வாதம். அதே போல் கீழடியில் இதுவரை தோண்டப்பட்ட இடங்களில் தெருக்கள் ஏதும் இருந்த அடையாளம் கிடைக்கவில்லை என்றும், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட பி.ஏ.கிருஷ்ணன், இதே காரணங்களுக்காக அதை ஒரு நகர நாகரிகம் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். மேலும், நதிக்கரை நாகரிகம் என்பது பெரிய நதிக்கரையில் தான் இருக்கும்” என்றொரு கருத்தைச் சொல்லி விவாத அரங்கில் இருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தார்.

பி.ஏ. கிருஷ்ணனுக்குப் பதிலளித்த ராஜவேலு, ராசேந்திரன் மற்றும் சு.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உலகம் முழுவதும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் தொன்மையைக் கணிக்க ஆய்வாளர்கள் சார்ந்திருப்பது கரிமப் பரிசோதனை என்பதை சுட்டிக்காட்டினர். அதேபோல் அகழாய்விற்காகத் தோண்டப்படும் குழியில் வெவ்வேறு மட்டங்களில் கிடைக்கும் பொருட்களுடைய காலம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை விளக்கினர். மேலும், கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துக்களின் தொன்மையை பி.ஏ. கிருஷ்ணன் சொல்வது போல் ஒரு “கரித்துண்டை”க் கொண்டு மட்டும் தீர்மானிக்கவில்லை எனவும், பிற இடங்களில் இதே போல் கிடைத்த எழுத்துக்களுடன் ஒப்பிட்டே அவற்றின் காலத்தை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.

கீழடியில் நகர நாகரிகம் நிலவியதற்குச் சான்று பக்ரும் நீளமான செங்கல் கட்டுமானம்.

மேலும், தோண்டப்பட்ட இடம் ஒரு சிறிய பகுதி என்பதையும் அது பிரதானமாகத் தொழிற்கூடம் அமைந்திருந்த பகுதி என்பதையும், மக்கள் வசிப்பிடம் அகழ்வாய்வு செய்யப்படும்போது தெரு அமைப்புகள் வெளிப்படும் என்பதையும் பிறர் சுட்டிக்காட்டினர். இந்த விவாதங்களின் போது சமஸ்கிருத எழுத்துக்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிறிஸ்துவுக்கு பிந்தைய நூற்றாண்டிலேயே கிடைப்பதையும், தமிழுக்கான ஆதாரம் கிறிஸ்துவுக்கு முன் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைப்பதையும் கீழடியை முன்வைத்துப் பேசினார் பேராசிரியர் ராஜவேலு.

இதற்கு பதிலளித்த பி.ஏ.கிருஷ்ணன், சமஸ்கிருதத்தின் தொன்மையை அகச்சான்றுகளைக் கொண்டே அளவிட வேண்டும் எனக் கூச்சலிட ஆரம்பித்தார். அதை இடைமறித்த சு.வெங்கடேசன், தமிழின் தொன்மை என்று வரும் போது அறிவியல் சான்றுகளைக்கூட நுணுகி ஆராய்வதையும் சமஸ்கிருதத்தின் தொன்மை என்று வரும்போது அகச்சான்றே போதும் என கண்களை மூடிக் கொள்வதையும் சுட்டிக்காட்டினார். பி.ஏ.கிருஷ்ணனிடம் அதற்குப் பதில் இல்லை.

பார்ப்பன வட்டாரங்களில் கீழடி ஆய்வு முடிவுகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொள்வதற்கு இந்த விவாதம் ஒரு சிறிய உதாரணம்.

படிக்க:
தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

♦ ♦ ♦

கீழடியின் நான்காம் கட்ட முடிவுகளைத் தமிழகத் தொல்லியல் ஆராய்ச்சித் துறை வெளியிட்டதை அடுத்து அரசியல் அரங்கில் அது வெவ்வேறு வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவில் ஜனநாயக மற்றும் முற்போக்கு அரசியல் பேசும் பிரிவினர் கீழடியில் மதச்சார்பு கொண்ட அடையாளங்கள் கிடைக்காததையும் தமிழின் தொன்மை மேலும் ஒரு மூன்று நூற்றாண்டுகள் பின் சென்றிருப்பதையும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால், வலதுசாரிகளான ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட வட்டாரங்களில் இந்த ஆய்வு முடிவு ஏற்படுத்திய தாக்கம் நமது அக்கறைக்கு உரியது.

அதைப் புரிந்து கொள்ள கீழடியின் நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகளின் கேந்திரமான அம்சங்களை பார்க்க வேண்டும்.

முதலாவதாக, இதுவரை சங்ககாலத்தின் காலவரையறை கி.மு 3 நூற்றாண்டு என்று இருந்த புரிதல், கீழடிக்குப் பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டு எனப் பின்னோக்கி நகர்த்தப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வாழ்வியல் முறை, தொழில்கள், பழக்க வழக்கங்களை கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு பொருத்திப் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியம் புறச்சான்று எதுவும் இல்லாத மனிதக் கற்பனைதான் எனக் கருதப்பட்டு வந்தது தகர்ந்து போனது. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட வாழ்க்கை முறைக்கான தொல்லியல் சான்றாக கீழடி கருதப்படுகின்றது.

இரண்டாவதாக, ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவின் முதல் நகர நாகரிகம் எனக் கருதப்படுகின்றது. ஏறத்தாழ கி.மு ஆறாம் நூற்றாண்டில் கங்கை நதிக்கரையிலும் அதே காலப்பகுதியில் சிந்து சமவெளிப்பகுதியிலும் இரண்டாம் நகர நாகரிகம் உருவானது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் நகரங்கள் உருவாகவில்லை எனவும், துண்டு துக்கடாவாக சில வீடுகள், ஊர் அமைப்புகள் இருந்தது என்றாலும், ஒரு முழுமையான நகரம் உருவாகவில்லை எனவும் கருதப்பட்டு வந்தது. தற்போது கீழடியில் கிடைக்கும் ஆதாரங்கள் தமிழகத்திலும் நகர நாகரிகம் இருந்ததையும் அதுவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிலவியதையும் உறுதிப்படுத்துகின்றது. மேலும், கீழடியின் தொல்லியல் மேட்டின் கீழ் அடுக்குகளில் அகழாய்வுகள் செய்யப்படும் போது தமிழகத்தின் நகர நாகரீகத்தின் காலம் மேலும் காலத்தால் முந்தையது என உறுதிப்படும் வாய்ப்பும் உள்ளது.

கீழடி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட காதணி, மணி உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் தாயக் கட்டைகள் : ஓர் உயர்வான நாகரிகத்தின் சாட்சியங்கள்.

கீழடியில் கிடைத்துள்ள தடயங்கள் அது நகர நாகரீகம் என்பதை உறுதிப்படுத்துவதுடன் ரோம் உள்ளிட்ட நாடுகளோடு இருந்த வணிகத் தொடர்பையும் நிரூபிக்கின்றது. மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைத்த ரோமானியப் பானைகளில் இருந்த மூலப்பொருட்கள் ரோமைச் சார்ந்தவையாக இருக்கும்போது கீழடியில் கிடைத்த ரோமானிய பொருட்களின் மூலப்பொருட்கள் இதே பகுதியைச் சார்ந்தவை என்பதும் உறுதியாகியுள்ளது. அதாவது, பண்டைய இந்தியாவின் மற்ற பகுதிகள் ரோமில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளன. அதே சமயம் தமிழகத்தில் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துள்ளனர் என்பது உறுதியாகின்றது.

மூன்றாவதாக, தமிழ் பிராமி என்பது அசோகன் பிராமியில் இருந்து உருவானது என்றும் தமிழ் பிராமியின் காலம் கி.மு. 2- நூற்றாண்டு என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் கிடைத்துள்ள எழுத்துருக்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதியாகியிருப்பதன் மூலம் தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கும் முந்தையது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் இதற்கு மேலும் தமிழ் பிராமி எனக் குறிப்பிடத் தேவையில்லை எனவும், பண்டைய தமிழ் எழுத்துக்களைத் தமிழி எனக் குறிப்பிட வேண்டும் எனவும் முன்வைக்கின்றனர். அதே போல் பேராசிரியர் ராஜவேலு உள்ளிட்டவர்கள், அசோகன் பிராமியே தமிழி எழுத்துருவில்இருந்துதான் உருவாகியிருக்க வேண்டும் என முன்வைக்கின்றனர். பிராமி எழுத்துக்களின் மூலம் தமிழி என்பதை ஆய்வுகளை மென்மேலும் விரிவுபடுத்துவதன் வழியாகத்தான் உறுதி செய்ய இயலும்.

படிக்க:
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்
♦ பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !

மேலும், கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய எழுத்து வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன.  தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அகழ்வாய்வில் மட்டுமே 56 தமிழி எழுத்துகளைக் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் எழுத்துகளின் பரவலான பயன்பாடு தெரியவந்துள்ளது. அதாவது, எழுத்தறிவு அன்றைக்கு சாதாரண மக்களிடையே பரவலாக இருந்தது என்பதை இது சுட்டுகின்றது.

நான்காவதாக, சிந்து சமவெளியில் கிடைத்த சில்லுக் குறியீடுகளுக்கும் பிராமி எழுத்துக்களுக்கும் இடையில் கீறல் வடிவ எழுத்து முறை ஒன்று உள்ளது. இன்னமும் படித்தறிய முடியாத இந்தக் கீறல் வடிவ எழுத்துக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், சிந்து சமவெளியிலும் கிடைத்துள்ளன (கங்கை சமவெளியில் இது கிடைக்கவில்லை). இந்த கீறல் வடிவ எழுத்துக்களே சிந்து சமவெளியின் முத்திரைகளில் காணப்படும் எழுத்துருக்களுக்கும், பிராமி எழுத்துருவுக்கும் இடைக்கட்டமானது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது கீழடியிலும் அதே விதமான கீறல் எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சிந்து சமவெளியின் மொழி பண்டைய திராவிட மொழியாக இருக்க வேண்டும் என்கிற கருதுகோள் மேலும் வலுவடைந்துள்ளது.

அரியானா மாநிலம் ராகிகரி என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4500 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு. இதன் மரபணுக்கள் தென்னிந்தியர்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகின்றன.

ஐந்தாவதாக, திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்புகள் மக்கள் வாழ்விடங்களில் கிடைத்ததன் மூலம் அவ்விலங்குகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தியிருப்பதனை அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்ககாலச் சமூகம் வேளாண்மையினை முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பினைத் துணைத் தொழிலாகவும் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும், தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பானைகளும் கிடைத்துள்ளன. பானை செய்யும் தொழிற்கூடங்களை ஒத்த அமைப்புகளும், கைத்தறி நெசவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகளும் கிடைத்திருப்பதால் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் வணிகத்திற்கான பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது தெரிய வருகின்றது.

இறுதியாக, கீழடியில் கிடைத்த நூற்றுக்கணக்கான சான்றுகளில் எதுவும் அங்கே பெருந்தெய்வ வழிபாடு –  அதாவது பார்ப்பன, வைதீகக் கடவுளர்களின் வழிபாடு – இருந்ததற்கு எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. அங்கே வாழ்ந்த மக்கள் ஒருவேளை இயற்கை அல்லது முன்னோர் வழிபாடு செய்திருக்கலாம். ஆனால், வேதங்களில் குறிப்பிடப்படும் ஆரியக் கடவுகள்களை அவர்கள் வழிபட்டதற்கு எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

♦ ♦ ♦

நாங்கள் ஆரியரும் இல்லை திராவிடரும் இல்லை. “நாம் தமிழர்கள்” என்பது நாம் தமிழர் கட்சியினரின் முதற்கட்ட பிரகடனம். ‘அண்ணன் உட்பட கட்சியின் முக்கிய தலைகள், செல்ல வேண்டிய திசையை சுட்டிக்காட்டிய பின் களத்தில் இறங்கினர் தம்பிமார்கள்.  திராவிடமும் சொறியானும் வந்த பின்தான் தமிழன் கல்வியறிவு பெற்றான் என்று சொன்னீர்களே? இப்போது கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எந்தச் சொறியான் வந்து எங்கள் பெரும்பாட்டன் ஆதனுக்கு எழுதப்படிக்க சொல்லிக் கொடுத்தான்?” என ஆர்ப்பரித்தார் நாம் தமிழர் தம்பி ஒருவர்.

இணையவெளியில் கீழடி ஆய்வு முடிவுகளை முக்காடாகப் போட்டுக் கொண்டு பெரியாரை குறிவைத்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட “களமாடல்களில்” பல இடங்களில் பா.ஜ.க.வினரும் கைகோர்த்துக் கொண்டதை கவனிக்க முடிந்தது.  சமீப நாட்களாக ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. பெருச்சாளிகளின் ட்வீட்டுகளில், “தமிழன் பெருமை, ராஜராஜ சோழன், அங்கோர்வாட் கோயில்” என இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !
♦ நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?

“கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு பெற்ற தமிழனின் இன்றைய வாரிசுகளின் தந்தையரும் பாட்டன்மார்களும் ஏன் கைநாட்டுகளாகப் போனார்கள்?” எனவும், “முப்பாட்டன் முருகன் மற்றும் பெரும்பாட்டன் மாயோனின் சிலைகள் கீழடியில் கிடைக்காததன் மர்மம் என்ன?” என்றும்  முற்போக்கு முகாமில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து தம்பிமார்கள் அடக்கி வாசிக்கத் தொடங்கினர்.

எனினும், நாம் தமிழர் கட்சியின் பங்காளிகளான ஆர்.எஸ்.எஸ். கும்பல் தங்கள் முகத்தில் கீழடி பூசியுள்ள கரியை எப்படிக் கழுவுவது எனத் திகைத்துப் போயுள்ளனர் என்பதைத்தான் தொலைக்காட்சி விவாதங்களில் அவர்கள் பதைப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பொது வெளியில் “தமிழர்களின் ஆதிகாலப் பண்பாட்டு மேன்மை” பேசு பொருள் ஆனதைத் தொடர்ந்து சங்கப் பரிவாரத்தின் கைத்தடியான தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் களமிறக்கி விடப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “கீழடி தமிழர் பண்பாடு அல்ல; அது பாரதப் பண்பாடு” என்றார் பாண்டியராஜன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் அறிவுச் செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம் வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள். எனவே, சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மூத்த மொழி. எனவே, சமஸ்கிருதம் தெய்வீகத் தன்மை கொண்டது. எனவே, சமஸ்கிருதம் அறிவியல் தன்மையும் கொண்டது (இதை நாசாவே சொல்லி விட்டது). எனவே, பிற பிராந்திய மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அரிய வகை அறிஞர்களான “அவாள்களுக்கு” கடன்பட்டவர்கள். எனவே, சாதியும் சாதித் தூய்மையும் பேணப்பட வேண்டும்.  இவையெல்லாம் பார்ப்பனியக் கும்பலும் அதன் குண்டாந்தடிகளான ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள் மக்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள்.

இவையனைத்திற்கும் ஒரே வீச்சில் ஆப்பறைந்துள்ளது கீழடி.

சாக்கியன்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart