மாணவர்களின் உரிமைக்காகவும் பொதுப் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதற்காக முதுகலைப் படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சுரேந்திரனை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்க உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கரூர் பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளரான தோழர் சுரேந்திரன், கரூர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் இளங்கலை படிப்பை முடித்த மாணவர். இக்கல்லூரியில் பயின்ற மூன்றாண்டு காலத்தில் கல்லூரியில் அடிப்படை வசதிகளுக்காகவும் மாணவர்களின் உரிமைக்காகவும் மற்றும் பொதுவில் மக்களை பாதிக்கும் பொதுப்பிரச்சினைகளுக்காகவும் முன்னின்று பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

மாணவர் சுரேந்திரன்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் திணிப்புக்கெதிரான போராட்டம், பேருந்து கட்டண உயர்வுக்கெதிரான போராட்டம், ஆசிரியர்களின் உரிமைக்கான போராட்டம், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி நடைபெற்ற போராட்டம், இதே கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவந்த பேராசிரியர் இளங்கோவனை தண்டிக்கக்கோரி நடைபெற்ற போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மாணவர்களிடம் சமூக அக்கறையையும் கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டுமென்ற உணர்வையும் ஏற்படுத்தி உரிமைக்கான போராட்டத்தில் அவர்களை பங்கெடுக்க செய்ததுதான் தோழர் சுரேந்திரன் செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்காகத்தான், வரலாற்றுத்துறையில் முதுகலை படிப்பில் சேர்க்க மறுத்து அவரை வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம்.

அதாவது, தோழர் சுரேந்திரன் 2018 – 2019 கல்வி ஆண்டில் இளங்கலை வரலாறு படிப்பை முடித்துவிட்டு, முதுகலை வரலாறு படிப்பதற்காக கடந்த  26-06-2019 அன்று சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 12-07-2019 அன்று நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அழைக்காமலேயே, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

முதலில் விண்ணப்பமே கல்லூரி நிர்வாகத்திற்கு வந்து சேரவில்லை என்று மழுப்பிய நிலையில், கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டபோது, ”உன் மேல போலீஸ் கேஸ் நிறைய இருக்கு. கல்லூரியில நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கிற. உனக்கு சீட்டு கொடுக்கக்கூடாதுனு எஸ்.பி. ஆபீசில் இருந்து லெட்டர் வந்திருக்கு. உன் மேல கேஸ் இல்லைனு போலீசுகிட்ட இருந்து லெட்டர் வாங்கி வா, அதன் பிறகு சீட்டு கொடுக்கிறேன்” என்று போலீசின் கையாளாகவே பதிலுரைத்திருந்தார் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன்.

”கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு எதுவும் இல்லை. எல்லாமே பொதுப்பிரச்சினைக்காக, உரிமைக்காக போராடியதற்காக போடப்பட்ட பொய் வழக்குகள். அரசியல் ரீதியான காரணங்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள்.” என்று சுரேந்திரன் நிராகரித்தார்.

மேலும், ”உன்னை மீண்டும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்பது, 09-07-2019 அன்று கல்லூரி நிர்வாகக்குழுவில் விவாதித்து எடுத்த முடிவு. நான் அக்குழுவின் தலைவர் என்றாலும், இம்முடிவை மாற்றும் அதிகாரம் எனக்கில்லை” என்றும் தெரிவிருந்தார் அவர். இம்முடிவை, எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு கேட்டபோதும், அவ்வாறு கொடுக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக, ஜனநாயக சிந்தனை கொண்ட கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து, ”வகுப்பறைகளில் அம்மாணவன் எந்தவித ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபடுவனில்லை. அவனால் எந்த இடையூறும் இல்லை” என்று தனது கருத்தாக வரலாற்றுத்துறை தலைவர் தெரிவித்திருந்த நிலையிலும், ”எதற்கெடுத்தாலும் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துறான். இவனால் கல்லூரிக்குத்தான் கெட்டப்பெயர்.” என்று  பேராசிரியர் ராதாகிருஷ்ணன் முன் வைத்தக் கருத்தை ஆதரித்தும், போலீசு எஸ்.பி. கொடுத்த அழுத்தம் காரணமாகவும்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தியதோடு, கடந்த 15-07-2019 அன்று கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தமது தரப்பு நியாயத்தை புகாராக அனுப்பியிருந்தார் சுரேந்திரன். மனு கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும் எந்த பதிலும் வராத நிலையிl, மீண்டும் கடந்த 22-07-2019  அன்று தமிழக ஆளுநர், உயர்க்கல்வித்துறை செயலர், உயர் கல்வி கல்லூரி இயக்குனர், மண்டல கல்லூரி இணை இயக்குனர் உயர்கல்வித்துறை, பாராதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரி இணை இயக்குனர், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கும் கல்லூரியில் சேர்க்க ஆவண செய்யுமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.

சட்டப்பூர்வமான முறையில் உயர்கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முறையிட்டும் பலன் எதும் கிடைக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார், சுரேந்திரன்.

சுரேந்திரன் சார்பாக வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்து வாதிட்டார். சட்டத்திற்கு புறம்பான வழியில் வஞ்சகமான முறையில்தான் மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது நீதிமன்றத்தில் அம்பலமானது. சுரேந்திரன் தரப்பில் எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறியது, கல்லூரி நிர்வாகம். இதனைத் தொடர்ந்துதான், மாணவர் சுரேந்திரனை கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 21-10-2019 அன்று உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

நீதிமன்ற உத்தரவோடு, மூன்று வழக்குரைஞர்களை அழைத்துக்கொண்டு அரசு கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரனை சந்தித்தார் சுரேந்திரன். நீதிமன்ற உத்தரவின்படி சுரேந்திரன் வரலாற்றுத்துறையில் முதுகலைப்படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டார். பல்வேறு தடைகளை உடைத்து மீண்டும் கல்லூரியில் இணைந்த செயலை பாராட்டி, ஜனநாயக சிந்தனைகொண்ட பேராசிரியர்கள் பலரும் கை  கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

”தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கிப் போவதால் பலன் ஏதுமில்லை. மாணவர்கள் சமூக பொறுப்புணர்வோடு பொதுப்பிரச்சினைகளுக்காக போராட முன் வர வேண்டும். கல்லூரி படிப்பைத் தாண்டி, தம்மை சுற்றி நிகழும் அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்று தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. மாணவர்களை அமைப்பாக அணிதிரட்டி அரசியல்படுத்தப்படுவதையும் அதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராட முன்வருவதையும்தான் கல்லூரி நிர்வாகம் பிரச்சினையாக பார்க்கிறது.

கல்லூரி நிர்வாகம் என்றில்லை பொதுவிலேயே, ”மது போதைக்கும், டிக்டாக், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் போதைக்கும் வேண்டுமானால், மாணவர்கள் ஆட்படலாம்.” ஆனால், ”போராட்டம் அது இது என்று போய்விடக்கூடாது; பின்னர், போலீசு கேசாகி அரசு வேலை உள்ளிட்டு எதிர்கால வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்” என்று பூச்சாண்டி காட்டப்படுவதுண்டு.

இந்தப் பூச்சாண்டிகளுக்கு பலியாகாமல், தனிப்பட்ட இழப்புகளை எண்ணி பின்வாங்காமல், போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.


தகவல்;
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கரூர். 9629886351.

3 மறுமொழிகள்

  1. “போராடும் உரிமைக்காக,
    போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தோழர் சுரேந்திரன்”.
    அஞ்சாமல், அயராமல் போராடி வெற்றி பெற்றிருக்கும் தோழர் சுரேந்தருக்கும்,
    அவருக்கு உதவியாக நின்ற வழக்கறிஞர்களுக்கும்,
    புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்களுக்கும்,
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  2. கல்லூரி படிக்கும் இடம் போராடும் இடம் அல்ல… இந்த பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகள் (கம்யூனிஸ்ட்கள்) பேச்சுக்களை கேட்டு உங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ளாமல் இனியாவுது நன்றாக படித்து முன்னேறும் வழியை பார்க்கவும்.

    போராட்டங்களை தூண்டி விடுபவர்களுக்கு பாக்கிஸ்தான் மாத சம்பளம் கொடுத்து கொண்டு இருக்கிறது, இந்த தேசவிரோதிகள் பாகிஸ்தானிடம் பணம் வாங்கி கொண்டு அப்பாவிகளின் கல்வியில் தலையிட்டு அவர்களின் வாழ்வை அழிக்கிறார்கள். இழப்பு பாக்கிஸ்தான் கைக்கூலிகளுக்கு அல்ல, சாதாரண மாணவர்கள் தான் வாழ்வை இழக்கிறார்கள்.

    புறக்கணிப்போம் கம்யூனிஸ்ட்களை

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க