privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் !

பீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் !

பீமா கொரேகான் வழக்கில் சிறையில் வாடும் செயல்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை ஆராயும்படி, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-

‘அர்பன் நக்ஸல்கள்’ என்கிற காவிகள் புனைந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 18 மாதங்களாக சிறைவாசம்  அனுபவித்துக்கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரி தனது கூட்டணி முதலமைச்சரிடம் தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனஞ்செய் முண்டே, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறையில் வாடும் செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை ஆராயும்படி முதலமைச்சரை கேட்டுள்ளார். பீமா கொரேகான் வழக்கில் கைதாகியுள்ளவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மராத்தியில் எழுதப்பட்ட  அந்தக் கடிதத்தில், “பாஜக அரசு பல செயல்பாட்டாளர்களை இந்த வழக்கில் பொய்யாக இணைத்துள்ளது. இவர்களில் சிலர் ஏற்கனவே சிறைகளில் இருக்கிறார்கள். மற்றவர்கள் தினமும் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜக எப்போதுமே தனிப்பட்ட நபர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது” என்கிற முண்டே,

“ அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்கள் வேண்டுமென்றே தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற நேரங்களில், பாஜக அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அவசியமாகும்” என கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கம்வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா, ஃபட்னாவிஸ் அரசாங்கம் விசாரணையை கையாண்ட விதம் குறித்து விமர்சித்திருந்தது. சேனாவின் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில், புனே காவல்துறையினர் கைது செய்வதற்கு சொன்ன காரணத்தை கேலி செய்திருந்தது.

“வெவ்வேறு நோக்கங்களுக்காக “காவல்துறையைப் பயன்படுத்துதல்” என்பது அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் புதியதல்ல என்றாலும், தற்போதைய சந்தர்ப்பத்தில், “உண்மை எவ்வளவு விரைவாக வெளிப்படுகிறதோ, அவ்வளவு சிறந்தது” என நாளிதழின் செப்டம்பர் 2018 தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

கடிகார சுற்றுப்படி சுதீர் தவால், சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவத், சோமா சென், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாஜ், வரவர ராவ் மற்றும் வெர்னன் கொன்சால்வேஸ்.

கைது செய்யப்பட்டவர்களில் எழுத்தாளரும் மும்பையைச் சேர்ந்த தலித் உரிமை ஆர்வலருமான சுரேந்திர காட்லிங், உபா நிபுணரும் நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞருமான மகேஷ் ரவுத், கட்சிரோலியில் இருந்து இடப்பெயர்ச்சி பிரச்சினைகள் குறித்த இளம் செயல்பாட்டாளர்ர் ஷோமா சென், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை தலைவர் ரோனா வில்சன், டெல்லியைச் சேர்ந்த கைதிகளின் உரிமை குறித்த செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவர ராவ் மற்றும் வெர்னான் கோன்சால்வ்ஸ். முதல் ஐந்து பேர் ஜூன் 6  அன்று கைது செய்யப்பட்டனர், மற்றவர்களின் கைதுகள் அதைத் தொடர்ந்து நடந்தன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலரின் வழக்கறிஞர் நிஹால்சிங் ரத்தோட், இந்த குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்ய ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதை வரவேற்றார்.

படிக்க:
பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?
♦ தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்

“முழு வழக்கும் புனையப்பட்டது. முதல் நாள் முதல் ஆதாரங்களை இவர்களாகவே உருவாக்கினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை குறித்த விவரங்களை காவல்துறை இதுவரை வழங்கவில்லை. காவல்துறையினர் கைதானவர்களின் கணினிகளிலிருந்து மீட்டு வந்ததாகக் கூறும் மின்னணு ஆதாரங்களின் பிரதிபலிப்பைக் கோரி பல விண்ணப்பங்களை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் எதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.” என்றார் அவர்.

பீமா கோரேகானில் நடந்த வன்முறையின் முக்கிய குற்றவாளிகள் என ஒரு சில ஆர்வலர்கள் பெயரிடப்பட்டிருந்தாலும், மாநில காவல்துறையினர் தலித் உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக, குறிப்பாக அரசியல் ரீதியாக உறுதிமிக்கவர்களுக்கு எதிராக ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியது. மேலும் அவர்கள் மீது வன்முறை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. தாக்குதலுக்குப் பின்னர் பல நூறு பேர் கைது செய்யப்பட்டு இறுதியில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், வாக்குறுதி மதிக்கப்படவில்லை. பல செயல்பாட்டாளர்களுக்கு சட்ட அறிவிப்பானைகள் தொடர்ந்து  அனுப்பப்பட்டன. மாநிலத்தில் உள்ள தலித் சமூகம் எப்போது கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வந்தது.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனஞ்செய் முண்டே, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே-வுக்கு எழுதியுள்ள கடிதம். நன்றி : த வயர்.

இதுகுறித்து கவனப்படுத்தி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மற்றொரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரகாஷ் கஜ்பியே, இந்த வழக்குகளை ஆராய்ந்து மாநிலத்தில் தலித் இளைஞர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு தாக்கரேவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். “ஃபட்னாவிஸ் அரசாங்கம் உள்ளூர் போலீசை பயன்படுத்தி, பல தலித் செயல்பாட்டாளர்களை மட்டுமல்லாது, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளையும் வழக்குகளில் சிக்கவைத்தது” என பிரகாஷ் எழுதியுள்ளார்.

ஜிதேந்திர அவாத் உள்ளிட்ட பல தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இந்த விசயத்தில் அரசாங்கத்தின் கவனத்தை நாடியுள்ளனர். டிசம்பர் 6-ம் தேதி டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் நினைவு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, பெரிய அளவிலான பகுஜன்கள் மும்பை சிவாஜி பூங்காவில் கூட உள்ளனர். அப்போது, அரசாங்கத்திலிருந்து தலித் சமூகத்துக்கு ஆதரவான  அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“இந்த வழக்குகளை மறுஆய்வு செய்வதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. ஃபட்னாவிஸ் அரசாங்கத்தின் கீழ் பல செயல்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள்  அரசாங்கத்தில் அது மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சிக்கிறோம்” என ஒரு மூத்த தலைவர் தி வயருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘இந்துத்துவத்தை ஒருபோதும் விடமாட்டோம்’ என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக அறிவித்துள்ளபோதும், தனது அரசை காப்பாற்றிக் கொள்ளவாவது புனையப்பட்ட வழக்குகளை கைவிடுவார் என எதிர்ப்பார்க்கலாம். ஆனால் பாஜக என்னும் விசப் பாம்பு அவ்வளவு சாதாரணமாக அதற்கு அனுமதிக்குமா என்ன ?


கலைமதி
நன்றி : தி வயர்.