கேள்வி : சீமான் பேச்சு பொய்யானதாய் இருக்கு, ஆனால் அவர் தொண்டர்கள் அப்படியே நம்புகின்றனர் என்ன காரணம்?

பால்ராஜ்

ன்புள்ள பால்ராஜ்,

ரஜினிக்கு தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, என்னென்ன நதிகள் ஓடுகின்றன, எந்தெந்த தொழில்கள் தமிழகத்தில் இருக்கின்றன, தமிழக மக்களின் வேலை வாய்ப்பு என்ன, விவசாயிகளின் பிரச்சினை என்ன, என்ன.. என்ன… என்பது கடுகளவு கூடத் தெரியாது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக ஆவேன், அதிசயம் அற்புதம் நடக்கும் என்கிறார்.

அவரது வீட்டுக்கு வெளியே 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றன. அவர் வெளியே வரும் போதெல்லாம் உளறும் ‘அரிய’ கருத்துக்கள், செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு வார மாலை நேர விவாதத்தை எடுத்துக் கொள்கின்றன. இதற்கு மேல் குறிப்பிடத்தகுந்த அளவில் மக்கள் ரஜினியை, “ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாத நல்ல மனுஷன்” என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை திராவிட இயக்கத்தின் தோல்வி, இரண்டு கட்சிகளுக்கு புதிய மாற்று, ஆன்மீக அரசியல் அது இது என பார்ப்பனிய ஊடகங்களும் – ‘அறிவாளிகளும்’ ரஜினியை பிராண்டிங் செய்கின்றனர்.

அதே போன்று கமல். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை நடு சென்டர் என்று… எல்லாவற்றிலும் உளறுவதே இவரது வாடிக்கை. இவருக்கும் நகர்ப்புறங்களில் மூன்று சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம், இத்தேர்தல் இரண்டு பெரிய கட்சிகள் நடத்தும் நாடகம் என்று ஏதோ தியாகம் செய்வது போல பிதற்றுகிறார் கமல்.

பாராளுமன்றத் தேர்தலில் ஊர் ஊராய் சுற்றி வந்து பேசியதில் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை எனும் போது உள்ளாட்சி தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சுற்ற ஒரு ‘கேரவன் சொகுசு’ நடிகர் தயாராக இருப்பாரா? அவரைப் பொறுத்தவரை ஜெயா போல நோகாமல் நொங்கெடுப்பதற்கு மட்டுமே தயார்.

விட்டால் ஐ.நா. சபை செயலராக அவரைத் தெரிவு செய்தால், அதற்கு தான் மட்டுமே தகுதியானவன் என்று அற்பத்தனமாக நம்புகிறவர் இந்த ‘நம்மவர்’. கமலையும் கூட “ஏதாச்சும் நல்லது செய்வார், ஊழல் செய்யாத உத்தமர்” என்று சிலர் நம்புகின்றனர். அதையும் பார்ப்பன ஊடகங்கள் – அறிஞர்கள் அடங்கிய வலைப்பின்னல் பாஜக-வின் நலன் கருதி பிரமோஷன் கொடுக்கின்றனர்.

படிக்க:
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

இப்படி இருக்கும் போது சீமானை அவரது தொண்டர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை. கமல், ரஜினி போல இல்லாமல் சீமான் எல்லாத் தேர்தல்களிலும் நிற்கிறார். ஊர் ஊராக சுற்றுகிறார். வந்தேறிகளை விரட்டி தமிழகத்தை காக்க நான் முதலமைச்சராக மாறவேண்டும் என்று முழங்குகிறார். கூடவே சப்பாத்தி முதல் வெள்ளைச் சீனி வரை எப்படி இந்திக்காரன் நம்மை கெடுத்து விட்டான் என்று உடல் நலம், மண் வளம், காட்டு வளம், மலை வளம், சூழல் வளம், பண்பாட்டு வளம் என்று ஒவ்வொரு வளத்திற்கும் பெரிய கதை, வரலாறு, புராணத்தை வைத்து அடித்து விடுகிறார். பேசும் போது கையை தூக்கியும், புஜங்களை உயர்த்தியும், கண்களை உருட்டியும், குரலை தெறிக்கச் செய்தும் பேசுகிறார். இவ்வளவு உழைப்பு போடுபவரை சாமானியர்கள் அந்த உழைப்பைப் பார்த்தாவது நம்பாமல் இருப்பார்களா என்ன?

என்ன, ரஜினி, கமல் போன்று ஊடக ஆதரவோ, பார்ப்பனிய அறிஞர்களின் ஆசியோ சீமானுக்கு இல்லை. அதே நேரம் முற்றிலும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த குறிப்பாக தி.மு.க.விற்கு எதிராக சீமானை கொம்பு சீவி விட இவர்கள் ஆதரிக்கின்றனர். நாம் தமிழர் தம்பிகளோ தமிழனம் ஆண்ட இனமாக ஆட்சியில் இல்லை என்பதே அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் என்று நம்புகின்றனர். அவர்களில் பலர் சீமானைப் போலவே பேசுகின்றனர். உடல் மொழியிலும் காட்டுகின்றனர்.

மக்களில் அரசியலற்றவர்கள், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கேற்ப அரசியல் பேசுபவர்கள், முன்னணியாக அடிப்படை அரசியலை புரிந்து கொள்பவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கின்றனர். தோராயமாக இதில் முதல் வகையினர் 70%, இரண்டாவது வகையினர் 20%, மூன்றாவது வகையினர் 10% இருக்கக் கூடும். முதல் வகையினர்தான் சினிமாவில் ஏழைகளின் தோழனாக மேக்கப் போட்ட ராமாவரம் தோட்டத்து எம்ஜிஆரை சாகும் வரை முதலமைச்சராக அழகு பார்த்தார்கள். அதே போன்று ஜெயாவையும் மதித்தார்கள். தனது காலத்தில் அனைத்து தொழிலாளர் போராட்டத்தையும் ஒடுக்கி, அமைச்சர்கள் ஆதரவாளர்கள் பலரை இன்றைய சுயநிதிக் கல்லூரி நடத்துமளவு புறம்போக்கு நிலங்களை அள்ளிக் கொடுத்து ஒரு கோமாளி பாசிஸ்டைப் போன்று நடந்து கொண்ட எம்ஜிஆரை இந்த ஊர் நம்பும் போது ரஜினியை ஏன் நம்பாது?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் முன்னர் கண்ட பத்துசதவீத மக்களின் அரசியல் வெகுமக்களின் பேசுபொருளாக இருந்தது. ஆனால் அதன் ஆயுள் குறைவு. அதனால்தான் அத்திவரதர் எனும் ஒரு புரட்டு, புராண லீலையிலும் இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்களை அரசியலற்ற வகையினராக இருக்கச் செய்வதில் இங்கிருக்கும் ஊடகங்கள், சினிமா, சீரியல்கள், இவைகளுக்கான நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள், தன்னார்வக் குழுக்கள், நடுத்தர வர்க்க அறிஞர்கள் போன்று பல காரணங்கள் இருக்கின்றன.

இவையே அதிமுக, பாஜக, ரஜினி, கமல் போன்ற கட்சிகளுக்கு பலம். அரசியலற்ற முறையில் அரசியல் பேசுவது, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, பாபர் மசூதி தீர்ப்பு போன்றவற்றை ஆதரித்துக் கொண்டே தம்மை தேசபக்தர்கள் என்று நம்பச் சொல்வது போன்றவற்றை செய்கிறார்கள். திமுக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஓரளவு அரசியல் பேசினாலும் அரசியலற்ற மக்களை பிரச்சாரம் செய்து மாற்றுவதற்கு பதில் சில நேரங்களில் அவர்களும் அதிமுக-பாஜகவோடு போட்டி போடுகிறார்கள். (அயோத்தி தீர்ப்பை வரவேற்றது ஒரு சான்று.)

படிக்க:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இந்தச் சூழ்நிலையில் இந்திய அளவிலான பொருளாதார நெருக்கடி தமிழகத்தையும் பாதித்திருக்கிறது. எட்டுமணிநேரம் ஆட்டோ ஒட்டிய ஓட்டுநர் தற்போது பதினைந்து மணி நேரம் ஓட்டினால்தான் வீட்டிற்கு படியளக்க முடிகிறது. ஐ.டி துறையிலோ வேலை நீக்கம் என்பது கணினி திரைக்கு வெளியே எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு தொழிலாளியோ, ஒரு ஐ.டி ஊழியரோ தெலுங்கர்கள்தான் தமிழக வேலை வாய்ப்பை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் பேசினால் அதை நம்புவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இத்தகைய இனவாதம் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றாலும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தொட்டத்தறியத்தக்க எதிரிகளை காட்டினால் நம்புகின்றனர். எனவே சீமான் தனது இனவாத அரசியலை மேலும் மேலும் உணர்ச்சிகரமாக முன்வைக்க முன்வைக்க அது சிறிதளவான மக்களை பற்றுவதும், தொண்டர்கள் அதை தீவிரமான இலட்சியவாதமாக ஏற்பதும் நடக்கிறது.

விஜயகாந்த அரசியலுக்கு வந்த போது அவரும் இரண்டு திராவிட கட்சிகளை திட்டி ஊர் ஊராக சுற்றி வந்தார். தனித்து போட்டியிட்டார். எட்டு அல்லது பத்து சதவீத வாக்குகளைக் கைப்பற்றினார். அப்போது அரசியல் அரங்கில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்து பின்னர் கூட்டணியில் சேர்ந்தார். எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார். பின்னர் தனது தனித்துவத்தை இழந்து சென்ற தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை அனைத்து கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்பலப்பட்டு போனார்.

அவரது ஆரம்பகால அரசியலில் அப்போது வந்து சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்துடன் சுற்றுப்பயணம் சென்ற போது, ஆங்காங்கே திரண்டு நிற்கும் மக்களைப் பார்த்து எம்ஜஆருக்கு பிறகு இப்படி எல்லா இடங்களிலும் பெருங்கூட்டம் கூடி நிற்பது உங்களுக்குத்தான் என்று விஜயகாந்திடமே சொன்னாராம். (ஆனந்த விகடனில் வந்த செய்தி) அப்போது விஜயகாந்த் என்ன ஒரு மிதப்பில் இருந்திருப்பார்? இப்போது அவர் அனாதை  போல அரசியலில் ஓரங்கட்டுப்பட்டு விட்டதையும் அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இன்றைக்கு ரஜினிக்கு என்ன தெரியும் – தெரியாதோ, அதேதான் விஜயகாந்திற்கு அன்று தெரியும் – தெரியாது. திரைப்படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி, நேர்மையான போலீஸ்காரனாக போராடி, நேர்மையான அதிகாரியாக பணியாற்றி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் மக்கள் போராளியாக… இப்படியாக நடித்து உருவான விஜயகாந்தின் இமேஜை மக்கள் அப்போது நம்பினார்கள். அதாவது அரசியலற்ற பிரிவினரான அந்த 70% மக்களில் சிலர் இவர் நல்லவர், வல்லவர், நாட்டிற்கு ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாதவர் என்று வாக்களித்தார்கள்.

வாக்கு வங்கி அரசியல் முற்றிலும் அம்பலப்பட்டுப் போன நிலையில் இருக்கும்  பழைய பெருச்சாளிகளை மக்கள் முற்றிலும் நம்ப முடியாமல் வேறு வழியின்றி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இதில் புதிய முதலைகள் வரும் போது அவர்களுக்கும் கொஞ்சம் வாக்களிப்போம் என்று யோசிக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் சீமானின் அரசியல் வாழ்க்கை துவங்குகிறது. அதே நேரம் அவர் முன்வைக்கும் மாற்று அரசியலின் அடிப்படை இனவாதத்தில் இருந்தாலும் அந்த மாற்று திட்டங்களை இன்றைய அரசியல் அமைப்பின் தோல்வியைக் கண்டு நொந்து போன சிலர் ஏற்கவும் செய்கின்றனர். ஏனெனில் இன்றைய அரசியல் கட்டமைப்பையும் அதன் தோல்வியையும் ஒரு சமூக அமைப்பு என்றில்லாமல் சில தனிநபர்கள் – கட்சிகளின் தோல்வி என அவர்கள் அரசியலற்ற முறையில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !
♦ வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

ஜெயா, கருணாநிதி மறைவிற்கு பிறகு தான் ஒரு ரவுண்டு வரலாம் என்று மனப்பால் குடித்த சீமானுக்கு இன்று கமல், ரஜினி என்று இரண்டு பால்பவுடர் பால்கள் வெறுப்பேற்றுகின்றன. எனவே சீமானை இன்னும் எத்தனை நாளைக்கு அவரது தொண்டர்கள் நம்புவார்கள் என்பதும் கூட மனப்பால்தான்.

அரசியலற்ற மக்களின் பெரும்பான்மையை வைத்து நாம் சோர்ந்து போகலாமா? தேவையில்லை. இன்றைக்கு இணையத்தில் அரசியலற்ற பிரிவினரை விட அரசியலை குறிப்பாக பேசும் முற்போக்கு பிரிவினர் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் கோபேக் மோடி என்ற முழக்கம் இங்கே இணையத்தில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இணையத்தில் இருக்கும் இந்த முற்போக்கு விழிப்புணர்வு மெய்யுலகிலும் பரவவேண்டும். பரவும். அப்போது ரஜினி, கமல், விஜயகாந்துகளுக்கு இடமில்லை என்பதோடு உணர்ச்சிகரமாக இனவாத அரசியலை முன்வைக்கும் சீமானும் திண்டாட வேண்டியிருக்கும்.

அதாவது அரசியல்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பிற்போக்காய் அனைத்தையும் நம்பும் தொண்டர் கூட்டம் கிடைப்பது கடினம். ஆனால் வரும் தேர்தலில் இத்தகைய சிரமங்கள் ஏதுமின்றி அவர் ஒரு ஓரமாய் பேசும் நிலைமையே இப்போதைய அரசியல் சூழலின் யதார்த்தம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்