டந்த வாரத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து ஒப்பித்த அவதூறு பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது.

ரஜினி பேசிய அவதூறு பேச்சுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து அந்த சமயத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் தோழர் சுப. வீரபாண்டியன்.

தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளும் கட்சிகளும் ரஜினிகாந்தின் இந்த ‘ஒப்பித்தலுக்கு’ கடும் கண்டனங்கள் தெரிவித்தன. ரஜினிகாந்தின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடந்து ஜனவரி 22 அன்று ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப் போவதாக திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்தது.

“குருமூர்த்தி டயலாக்கை மனப்பாடம் செய்து துக்ளக் மேடையில் பேசியதற்கெல்லாம் போரா ? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது”  என பீதியடைந்த “போயஸ் 420” குடும்பம் உடனடியாக போலீசு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டு முன் போலீசும் குவிக்கப்பட்டிருக்கிறது.

எந்த மாநிலத்தில் எப்படியோ, தமிழகத்தைப் பொருத்தவரையில் அரசியலில் பெயர் சொல்லும் அளவிற்கு தலைவர்களாக இருந்தவர்கள் அனைவரும் தமிழகத்தின் வரலாறு, அரசியல், கலாச்சாரம் ஆகியவை குறித்த குறைந்தபட்ச அறிவாவது கொண்டவர்களாகத்தான்  இருந்திருக்கிறார்கள்.

தற்போது பெரியாரின் 1971 சேலம் ஊர்வலம் பற்றிப் பேசியிருக்கும் ரஜினிகாந்தின் யோக்கியதை என்ன தெரியுமா?

எழுவர் விடுதலை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “யார் அந்த ஏழு பேர்?” என்று கேட்டவர்தான் இந்த துக்ளக் படித்த ‘அறிவாளி’ ரஜினிகாந்த். பத்திரிகையாளர்கள் மீண்டும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் என்று குறிப்பிட்டு கேட்டபோதும், “அதெல்லாம் எனக்குத் தெரியலைங்க..” என்று சொல்லி தப்பித்து ஓடுவிட்டார். இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களே காறி உமிழும் அளவிற்கு அம்பலப்பட்டது.

அன்றும் இரண்டுநாள் கழித்து பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்து, எழுவர் விடுதலையைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும், மொட்டையாக ஏழுபேர் என்று கேட்டதால்தான் தன்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை என்றும் கூறி சமாளித்தார் ரஜினிகாந்த்.

படிக்க :
ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
♦ பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

தூத்துக்குடியில் மக்கள் துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்டு, தமது சொந்தங்களை இழந்து துடித்துக் கொண்டிருக்கையில், சங்கி கும்பலின் அட்வைசின் பேரில் தூத்துக்குடியில் அதாவது அப்போதுதான் இழவு விழுந்த வீட்டில் போய் ‘மாஸ்’ காட்டுவதற்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் தனது ரசிகக் குஞ்சுகளையும் வரவழைத்து, மன்னிக்கவும் ரசிகக் கிழடுகளையும் வரவழைத்து அவர்கள் புடைசூழ துக்கம் விசாரிக்கச் சென்றார். சென்ற இடத்தில் ஒரு “ஆண்டி இந்தியன்” யார் சார் நீங்க எனக் கேட்க, நமது 70 வயது கிழவரும், “நான் தாம்பா ரஜினிகாந்த்” என அறிமுகம் செய்து கொள்ள #நான்_தான்பா_ரஜினிகாந்த் எனும் டேக் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தூத்துக்குடியில் பற்றியெரிந்த நெருப்பிலிருந்து தப்பித்தால் போதுமென தெறித்து ஓடிவந்த ரஜினிகாந்திடம், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் வாயைக் கிளற, தனது சுயரூபத்தைக் காட்டினார் ரஜினிகாந்த். போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டதோடு, போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் ஆதரித்தார்.

இவையெல்லாம் தெரிந்த சம்பவங்கள்தான் என்றாலும், வரலாற்று ரீதியில், யார் இந்த ரஜினிகாந்த் – அவருடைய சமூக அறிவு ‘ஹைகோர்ட்’ எந்த அளவிற்கு இருக்கிறது எனத் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த ரீ-கேப் (Recap).

நமது ‘துக்ளக் அறிவாளி’ ரஜினிகாந்தின் வரலாற்று அறிவும் சமூக அறிவும் குறித்து ஆண்மை லேகிய ஆடிட்டருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

இரண்டு நிமிடம் கூட மீடியாக்களை எதிர்கொள்ள முடியாத ‘தலைவர்’. கேப்சனில் மட்டும் குறைச்சல் இல்லை.

அன்னாரின் வழிகாட்டலின் பேரில் இன்று (21-01-2020) பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். 2017-ல் எழுதப்பட்ட  அவுட்லுக் பத்திரிகையில் (அவுட்லுக் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதே 1995-ம் ஆண்டுதான்) எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை பெரிய ஆதாரமாகக் காட்டி, தான் சொன்னது சரிதான் என்றும், தான் மன்னிப்புக் கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

”அவுட்லுக்”கில் வந்தது எல்லாம் ஆதாரம் என்றால், 1980-களில் ரஜினிகாந்தின் யோக்கியதைப் பற்றியும் எம்ஜியாருக்கும் அவருக்கும் ராமாபுரம் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற டீலிங் குறித்தும் அன்றைய தினசரி பத்திரிகைகளிலேயே தகவல்கள் பல கொட்டிக் கிடக்கின்றன. அதை வைத்து ரஜினியின் தேர்தல் பிரச்சார அறிக்கை தயார் செய்யலாமா ?

இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மிரண்டு போய் இருக்கிறார் என்பதை இந்த பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்தே தெரிகிறது. அன்று மேடையில் பேசியபோது தானே நேரே இருந்து பார்த்தது போல சுவாரசியமாகப் பேசிவிட்டு, இன்றைய பேட்டியில் “இந்த பத்திரிகையில வந்ததை வச்சித்தான் நான் பேசிருக்கேன்” என்று முதல் ஜகா வங்கியுள்ளார் ரஜினி.

அடுத்ததாக, பல்வேறு தரப்பினரும், அந்த சமயத்தில் களத்தில் இருந்த பல பத்திரிகையாளர்களும் நீங்கள் கூறியது பொய் எனக் கூறி சில ஆதாரங்களைக் கூறியிருக்கிறார்களே என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “ நான் பார்த்ததை நான் சொல்றேன்; அவங்க பார்த்ததை அவங்க சொல்றாங்க” என்று இரண்டாவது ஜகா வாங்கியுள்ளார்.

“அவர்கள் பொய் சொல்கிறார்கள். நான் சொன்னதுதான் உண்மை” என அடித்துக் கூறுவதில், நமது ”வேங்கையன் மகனுக்கு” என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

படிக்க :
ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !
♦ எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

அடுத்து ஒரு நிருபர் மீண்டும் தி.வி.க. முன்வைக்கும் வாதங்களைக் கூறி விளக்கம் கேட்கிறார். நமது ஆன்மிக அரசியல்வாதிக்கு முகம் இருண்டுவிட்டது. சொல்லிக் கொடுக்கப்பட்டதைத் தாண்டி ஆதாரம், விளக்கம் என்று கேட்டால், பாவம் அவரும் எத்தனை முறைதான் ஒரே பல்லவியைப் பாடி சமாளிப்பது? “இது மறுக்கக் கூடிய சம்பவம் இல்லை. மறக்கவேண்டிய சம்பவம்” என ஒரு பஞ்ச் டயலாக் அடித்துவிட்டு மலையேறிவிட்டார்.

எதை மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்கிறார். 1971- சம்பவத்தையா ? அல்லது பெரியாரை அவதூறாகத் தான் பேசிய சம்பவத்தையா ?

தான் பெரியாரை அவதூறாகப் பேசியது மறக்கப்பட வேண்டும் எனக் கேட்டாரெனில் நேர்மையாக மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போகலாம். அல்லது 1971-இல் பெரியார் நடத்திய பேரணி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்றால், நமக்கு முன்னே ஒரே ஒரு கேள்விதான் நிற்கிறது.

“அப்புறம் என்ன ‘ஹைகோர்ட்டுக்கு’ அன்னைக்கு துக்ளக் விழாவுல 1971- சம்பவத்தைப் பத்தி பேசுனீரு?” என்பதுதான் அது.

இப்படி அரசியலுக்கு வரவிருக்கும் ஒருவர், முக்கியமான ஒரு விசயத்தில் அவதூறு பேசிவிட்டு, அதற்கு பட்டும்படாமல் விளக்கமளித்தால் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கை என்னவாகும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நமக்கு அதற்கு விடை தெரியவில்லை எனினும், ஒன்று மட்டும் பிரகாசமாகத் தெரிகிறது. நமது ‘ஆண்மை லேகிய’ அரசியல் புரோக்கர் குருமூர்த்தி, ஏற்கெனவே தமிழகத்தில் பம்மி பவிசாக ஆட்சி நடத்திவரும் இரண்டு அதிமுக அடிமைகளைப் பரிசோதித்து, “இம்பொடெண்ட்” (ஆண்மையற்றவர்கள்) என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார். தற்போது குருமூர்த்தியிடம் சிக்கியிருக்கும் ரஜினிகாந்த் என்ற இந்த மூன்றாவது அடிமை, சாதாரண நிருபர்கள் சந்திப்புக்கே பம்மி ஜகா வாங்கி ஓடிப் போவது தொடர்ந்தால், கூடிய சீக்கிரத்தில் அவருக்கும் “இம்பொடெண்ட்” பட்டம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

ரஜினிகாந்தின் விசிலடிச்சான்கிழட்டு ரசிகர்களும், சங்கிகளும், “#மன்னிப்பு_கேட்க_முடியாது” என சமூக வலைத்தளங்களில் இன்று ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.

ஒருவேளை ரஜினிகாந்த், தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை பிரச்சினையான மறுநாளே சொந்த மூளையில் சிந்தித்து தைரியமாகப் பேசியிருந்தால், எச். ராஜாவுக்குக் கொடுத்த ‘மரியாதை’யாவது கொடுக்கலாம்.

மன்னிப்பு கேட்க முடியாது என்ற தனது வாதத்திற்கு நேர்மையாக பதில் கூட அளிக்க முடியாத ஒரு அடிமையை – மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மட்டும் மனப்பாடம் செய்து பேசும் ஒரு அடிமையை –சுயமாக முதுகெலும்பில்லாத இந்தப் புழுவை – எப்படித்தான் திரையில் ஹீரோவாகக் கொண்டாட முடிகிறதோ இந்த ரசிகக் குஞ்சுமணிகளால்?


நந்தன்