நேற்று (ஜனவரி 26 அன்று) நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்(!). அதற்கு ஓரிருநாள் முன்பாக பிரேசிலின் பழங்குடி மக்கள் குறித்து இனவெறி கக்கும் கருத்துக்களை முன்வைத்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். பிரேசிலில் வஞ்சிக்கப்படும் மக்களை குறித்து மோசமாக விளிப்பது என்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

கடந்த பத்தாண்டுகளாக அவர் பல்வேறு விசமத்தனமான கருத்துக்களை கூறி வருகிறார். நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் தன்னுடைய சரியான பங்காளியை தான் அழைத்து வந்திருக்கிறார் போலும். போல்சொனாரொவின் முதன்மையான 10 கருத்து முத்துக்கள்,

1) மனிதர்களாகி வரும் பிரேசிலிய பழங்குடி மக்கள்:

பிரேசிலின் “பழங்குடியினர் மாற்றமடைந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் நம்மை போலவே வேகமாக மனிதர்களாகி வருகிறார்கள்” என்று இனவெறி கக்கும் வார்த்தைகளை முகநூலில் பகிர்ந்திருந்தார் போல்சொனாரோ.

“எப்போதுமே பழங்குடி மக்கள் மற்றவர்களை போலவே மனிதர்கள் தாம். போல்சொனரோ தான் தன்னை மனிதருக்கும் குறைவாக வெளிப்படுத்திக்கொள்கிறார்” என்று பிரேசிலை சேர்ந்த ஊடகவியலாளர் லியோனார்டோ சாகாமோட்டோ (Leonardo Sakamoto) கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

2) மக்களை கொடுமைப்படுத்துவது நல்லது:

அரச பயங்கரவாதத்தையும் கொடுமைகளையும் ஆதரிப்பவர் பிரேசில் ஜனாதிபதி. “பிரேசிலிய சிறைச்சாலைகள் அருமையான இடங்கள் … அவை மக்கள் தங்கள் பாவங்களுக்கான விலையை கொடுக்கும் இடங்கள், சொகுசான வாழ்க்கை வாழ முடியாது” என்று அவர் 2014-ல் கூறினார். “நான் சித்திரவதை செய்வதற்கு ஆதரவானவன் என்பது உங்களுக்கு தெரியும். மக்களும் ஆதரவாக உள்ளனர்” என்று 1999-ல் குரூரமாக கருத்திட்டுள்ளார்.

3) அரசு மக்களை கொல்ல வேண்டும்:

இராணுவ சர்வாதிகாரம் பிரேசிலுக்கு நல்லது என்று போல்சனாரோ கருதுகிறார், மேலும் போதுமான மக்களைக் கொல்லாததுதான் அது செய்த ஒரே தவறு என்கிறார். “சில அப்பாவிகள் இறந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை; ஒவ்வொரு போரிலும் அப்பாவி மக்கள் இறக்கின்றனர். என்னுடன் 30,000 பேர் சேர்ந்து இறந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்… சர்வாதிகாரம் இன்னும் அதிக மக்களைக் கொன்றிருந்தால் நாட்டின் நிலைமை இன்று சிறப்பாக இருக்கும்.” என்கிறார்.

படிக்க:
♦ காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி

4) மக்களாட்சியை விட உள்நாட்டுப் போர் சிறந்தது:

ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், மக்களாட்சி மீதான தனது வெறுப்பை பல சமயங்களில் பிரேசில் ஜனாதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளார். சர்வாதிகாரத்தைக் கொண்டாடும் போதும், போதுமான மக்களைக் கொல்லவில்லை என்பதற்காக அதைத் கண்டிக்கும் அதே வேலையில் பிரேசிலுக்கு உள்நாட்டுப் போர் தேவை என்றும் போல்சனாரோ கூறினார்.

“வாக்களிப்பதன் மூலம் நீங்கள் இந்த நாட்டில் எதையும் மாற்ற மாட்டீர்கள், இல்லையா? ஒன்றுமில்லை! உண்மையில் எதுவும் இல்லை! கெடுவாய்ப்பாக, நாங்கள் இங்கே ஒரு உள்நாட்டுப் போரைத் தொடங்கும் நாளில் மட்டுமே நீங்கள் மாற்றுவீர்கள்.”

5. பழங்குடி மக்கள் “அழிக்கப்பட்டிருக்க வேண்டும்”:

தனக்கு பிடிக்காதவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக போல்சொனாரோ விரும்புகிறார். “பழங்குடி மக்களை கொன்றழித்த அமெரிக்கர்களை போல பிரேசிலிய குதிரைப்படை திறமையாக செயல்படவில்லை” என்று 1998-ல் பழங்குடி குழுக்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.

6) அழகில்லா பெண்ணை வல்லுறவு செய்யமாட்டேன்:

2014-ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மரியா டூ ரொசாரியோவுடன் (Maria do Rosario) வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மரியா அசிங்கமானவர் என்றும் தூய்மையற்றவர் என்பதால் அவரை ஒருபோதும் பாலியல் வல்லுறவு செய்யமாட்டேன் என்று மோசமாக போல்சனாரோ விளித்தார். “ஏனென்றால் நீ அதற்கு தகுதியற்றவள்… தூய்மையற்றவள்” என்றார். பிரேசில் இராணுவ சர்வாதிகாரத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி ரொசாரியோ பேசிக்கொண்டிருந்த போது இந்த பதில் அவருக்கு கிடைத்தது.

போல்சனாரோ தனது வார்த்தைகளுக்கு ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. பின்னர் செய்தித்தாள் நேர்காணலில், ”ரொசாரியோ வல்லுறவுக்கு தகுதியற்ற அளவிற்கு அவள் மிகவும் அசிங்கமானவள். ” என்றார்.

7) மகன் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் “விபத்தில் சாக வேண்டும்”:

அடுதததாக நங்கை, நம்பி, ஈரர், திருனர் ( LGBTQIA) உள்ளிட்ட வெவ்வேறு பாலின இயல்புகள் கொண்ட சமூகம் போல்சனாரோவின் தாக்குதலுக்கு ஆளானது. 2011-ம் ஆண்டில், “ஒரு ஓரினச்சேர்க்கை வழக்கம் கொண்ட மகனை நேசிக்க இயலாது … பெரிய மீசை வைத்த மனிதனாக அவனை காட்டுவதை விட விபத்தில் அவன் இறப்பதையே விரும்புகிறேன்” என்று கூறினார்.

8) அரசு பணத்தை பாலியல் தேவைக்கு பயன்படுத்தியது:

ஒரு காங்கிரஸ் உறுப்பினராக தனக்கு கிடைத்த வீட்டு கொடுப்பனவை (housing allowance) பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தினேன் என்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார். “அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால், பாலியல் இச்சைக்கு பணத்தை பயன்படுத்தினேன்” என்று அவர் 2018-ல் ஒரு பேட்டியில் கூறினார்.

9) அடிமைகளின் சந்ததியினர் குண்டாக இருப்பதால் அவர்களுக்கு “ஒன்றும் செய்யாதீர்கள்”:

ஏப்ரல் 2017 உரையில், அடிமைத்தனத்திலிருந்து தப்பிப்பிழைத்த ஆப்பிரிக்க மக்களின் சந்ததியினர் ஏற்படுத்திக்கொண்ட ஒரு குடியேற்றத்தை (quilombo)பற்றி பேசினார். “நான் ஒரு குடியிருப்பை பார்வையிட்டேன். அங்கு ஆப்பிரிக்க – வம்சாவளியினரின் குறைந்தபட்ச எடையே ஏழு அரோபாக்களை அல்லது 90 கிலோ (ஸ்பைன் மற்றும் போர்த்துகல்லின் எடை அளவீடு ) இருந்தது. அவர்கள் ஒன்றும் செய்வதில்லை! அவர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு கூட தகுதி படைத்தவர்கள் அல்ல.”

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
♦ பறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் !

10) ஆண்கள் அளவிற்கு பெண்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடாது:

மகப்பேறு விடுப்பு போன்ற “சொகுசான தொழிலாளர் உரிமைகள்” கிடைத்ததிலிருந்து ஆண்களைப் போலவே பெண்கள் சம்பளம் பெறுவது நியாயமற்றது என்று 2016-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் போல்சனாரோ கூறினார். “ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே சம்பளத்துடன், ஒரு பெண்ணைப் பணியமர்த்த மாட்டேன்” என்று அவர் கூறினார்.

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி :  தி வயர்.