தமிழக ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் முறை மாற்றம் தொடர்பான அரசாணையினதும், அதன் மீளப் பெறுகையினதும் பின்னனி : வி..குகநாதன்

மிழ்நாடு அரசானது தமிழக ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது (எழுத்து + ஒலிப்பு) என்பது தொடர்பாக,  1018 ஊர்களின் ஆங்கிலத்திலான பெயர்களை மாற்றி ஒரு அரசாணையினை வெளியிட்டிருந்தது.  இது தொடர்பாகப் பல வாதங்கள் சார்பாகவும், எதிராகவும் முன் வைக்கப்பட்டுமிருந்தன.

இதில் சிலர் தமிழிற்கேற்பவே ஆங்கிலத்திலும் ஊர்களின் பெயர்கள் இருப்பதுதானே முறை. எழும்பூரினை ஆங்கிலத்தில் ‘எக்மோர்’ (EGMORE)  என எழுதியமையால், பின்னர், தமிழிலேயே ‘எக்மோர்’ என்ற பயன்பாடுதானே நிலைத்து விட்டது எனச் சொல்கின்றார்கள். எனவே ஆங்கிலத்திலும் எழும்பூர் (EZHUMBOOR) என எழுதுவதே முறை என்கின்றார்கள். இது சரியான வாதம்தான்.

இன்னொரு சாரார் ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கேற்பவே ஒலிக்கும், எனவே இந்த மாற்றம் ஒரு தேவையற்ற செயல் என்கின்றார்கள். அவர்களின் வாதத்திற்கேற்ப அரசும் சில தேவையற்ற மிகைத் திருத்தங்களையும் செய்துள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.

எடுத்துக்காட்டாக, ‘ஊர்’ என்று முடியும் பல ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் ‘ur’ என இதுகாறும் பயன்படுத்துப்பட்டு வந்தவை இப்போது ‘oor’ என எழுதப்பட வேண்டும் என மாற்றியமையினைக்  கூறலாம். அதே போன்று மதுரையின் ஆங்கில வடிவத்தினை (Madurai > Mathurai ) மாற்றும் போது, அது உலகளாவிய ‘மதுரை’ பற்றிய ஆங்கில வழியிலான ஆய்வுகள், தேடல்கள் என்பனவற்றில் ஏற்படுத்தப் போகும்  தாக்கங்கள் பற்றிய கேள்வியினையும் எழுப்புகின்றது.

அதே போன்று சில தமிழ் ஒலிப்புகளை ஆங்கிலத்தில் தமிழிற்கேற்ப மாற்றும் போது ஒரே வழிமுறையினைப் பின்பற்றவில்லை என்ற குறைபாடும் உள்ளது. இவையெல்லாவற்றையும் விட ஆங்கிலத்தில் எழுதும் முறையினை மாற்றுவதற்கு முன்னர் தமிழிலேயே ஊர்ப் பெயர்களில் காணப்படும் இரு முதன்மையான குறைகளையல்லவா அகற்ற வேண்டும்; எனவே அவற்றினை முதலில் பார்ப்போம்.

சமற்கிரத மயமாக்கப்பட்ட தமிழக ஊர்களின் பெயர்கள் :

ஈழத்தில் போர் மூலமும், திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் எண்ணற்ற தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களமாக்கப்பட்டமை தெரிந்ததே (எ.கா- மணலாறு> வெலிஒயா).  தமிழ் நாட்டிலோ எந்த வித போர்களுமின்றிப் பல ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் சமற்கிரத மயமாக்கப்பட்டமை, பலரிற்குத் தெரிந்திருக்காது. அவ்வாறு தமிழ்ப் பெயரினைத் தொலைத்த ஊர்கள் சிலவற்றின் ஒரு பட்டியலினைப் பார்ப்போம்.

தமிழ்  >>> சமற்கிரதம்

புளியங்காடு >> திண்டிவனம்
மயிலாடுதுறை >>  மாயவரம்
குரங்காடுதுறை >> கபிஸ்தலம்
முகவை >> ராமநாதபுரம்
முது குன்றம் >> விருத்தாச்சலம்
அழிவிலி >> அவினாசி (அ-வினாசி)
வில்முனை (விற்கோடி)  >>  தனுஷ்கோடி
சிற்றம்பலம் >> சிதம்பரம்
மரைக்காடு >> வேதாரண்யம்.

மேலுள்ள பட்டியல் நீண்டு செல்லும். இங்குள்ள தமிழ்ப் பெயர்களைப் பாருங்கள். அவை இயற்கையுடன் இயைந்து, அப் பகுதிகளில் காணப்பட்ட விலங்குகள், மரங்கள் என்பவற்றின் பெயரோடு காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அந்த ஊரின் பழைய வரலாற்றினைக் குறிப்பன. இவற்றினை வட மொழியாக்கி, அவற்றின் தொன்மையும் கெடுக்கப்படுகின்றன. இந்தச் சிதைப்பு நுட்பமாகவே நடைபெற்றது.

எடுத்துக் காட்டாக ‘மரைக்காடு’ என்ற ஊரினைப் பார்ப்போம். மரை விலங்குகள் நிறைந்திருந்த முல்லை (திணை) நிலமாகக் காணப்பட்ட ஊர் என்பதால் அப் பெயர் பெற்றிருந்தது.  அதில் ‘மரை’ என்ற சொல்லினை ‘மறை’ என முதலில் சிதைத்தார்கள் (மறைக்காடு). பின்பு ‘மறை’ என்றால் ‘வேதம்’ எனவே ‘வேதாரண்யம்’ என மாற்றி விட்டார்கள்.  ஆங்கிலத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முன்னர் இவ்வாறு எமது மொழியிலேயே காணப்படும் பிழைகளையல்லவா முதலில் திருத்த வேண்டும்.

படிக்க:
ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ சர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்

சமற்கிரதமாக்கப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படும் போது எல்லாம், ஒரு சாரார் அது தமது சமய நம்பிக்கைகளில் கை வைப்பதாகக் கதை விடுவார்கள். அவர்களின் வாதம் சரியா என ஒரு முறை பார்த்து விடுவோம்.  இப் பட்டியலிலுள்ள சிதம்பரமாக்கப்பட்ட ‘சிற்றம்பலம்’ என்ற ஊர்ப் பெயரினையே எடுத்துக் கொள்வோம். சிதம்பரத்தைச் ‘சிற்றம்பலம்’ என அழைத்தால், சமய நம்பிக்கை குடி மூழ்கி விடுமா எனவும் பார்ப்போம். பின்வரும் இரு தேவாரப் பாடல் வசனங்களைப் பாருங்கள்.

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி“.

அன்னம் பாலிக்கும்தில்லைச் சிற்றம்பலம்‘.

பார்த்தீர்களா! தேவாரத்திலேயே ‘சிற்றம்பலம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் காட்டும் ‘சமயப் பூச்சாண்டி’ எல்லாம் வெறும் ஏமாற்று வேலை. எனவே இவ்வாறு வட மொழியாக்கப் பட்டுள்ள ஊர்ப் பெயர்களை மீட்டெடுக்க வேண்டும். அரசாணைகளிற்காகப் போராடுவது ஒரு முறை, நாமே எமது நாளாந்தப் பயன்பாட்டிற்கு அத் தமிழ்ப் பெயர்களைக் கொண்டு வருவது இன்னொரு முறையாகும்.

தமிழ் ஊர்ப் பெயர்களின் சிதைப்பு/ திரிபு :

ஒரு தொகுதி ஊர்களின் பெயர்கள் வட மொழியாக்கப்பட்டது ஒரு புறம் என்றால், இன்னொரு தொகுதி ஊர்களின் பெயர்கள் சிதைக்கப்பட்டது அல்லது  திரிபடைந்தது மறுபுறம்.  அவ்வாறான சில மாற்றங்களைப் பார்ப்போம்.

பொழிலாட்சி >> பொள்ளாச்சி
வானவன் மதுரை >> மானாமதுரை
செவ்வேங்கை >> சிவ கங்கை
இடைப்பாடி >> எடப்பாடி
ஆர்க்காடு >> ஆற்காடு

இப் பட்டியலும் இவ்வாறு நீண்டு செல்லும்.  பெயர் தானே, திரிந்த நிலையிலிருந்தால் என்ன எனக் கேட்கலாம். இங்குள்ள பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னேயும் தொல் வரலாறு இருக்கின்றது . ஐந் திணைகளை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் தொல் தமிழ் மரபு இருக்கின்றது. இவற்றினை நாம் இழத்தலாகாது.  ஆர்க்காடு என்ற பெயரினையே எடுத்துக் கொள்வோம்.  தொல் காப்பியமே குறிப்பிடும் பெயர் இது.

போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” (தொல்காப்பியம் 3-63)

தொல் காப்பியம் மட்டுமா? இதோ ஒரு சங்க இலக்கியப் பாடல்.

படுமணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்!”

{ நற்.227}

சங்க காலப் பாடல் மட்டுமல்லாமல் , ஆர்க்காடு என்ற பெயரினைத் தாங்கிய ஒரு சங்க காலப் புலவரேயுண்டு –  ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார் .  ’ஆர்’ மரங்கள் நிரம்பிய காடு என்ற வகையில் பெயர் பெற்ற ஆர்க்காடு எனும் பெயரினை ‘ஆற்காடு’ எனச் சிதைய விடலாமா? அவ்வாறு சிதைய விட்டால், பின்பு அது ‘ஷடாரண்யம்’ என்ற வடமொழிப் பெயரில்தான் போய் முடியும்.

அது போன்றே ‘இடைப்பாடி’ என்ற ஊர்ப் பெயரே மருவி ‘எடப்பாடி’ ஆயிற்று.  பழந் தமிழ் மரபில் ‘பாடி’ என்ற விகுதியினைக் கொண்டு முல்லை நிலத்திலுள்ள ஊர்களிற்குப் பெயரிடல் மரபாகும்.

புறவம் புறம்பணை புறவணி முல்லை, அந்நிலத்து ஊர்ப் பெயர் பாடி யென்ப”  -பிங்கல நிகண்டு. 43

மலைக்கும் பள்ளத்திற்குமிடையே இருந்தமையால்  இடைப்பாடி/ இடையர் பாடி என அழைக்கப்பட்டது. அதுவே மருவி எடப்பாடி ஆயிற்று. படத்தில் 1962 ம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் காமராயர் திறந்து வைத்த கல்வெட்டிலேயே ‘இடைப்பாடி’ என எழுதப்பட்டிருப்பதனைக் காணலாம். எனவே இப் பெயரினை மாற்றும் போது; தமிழக முதல்வரின் பெயரினையும் மாற்ற வேண்டிவரும், ஏனெனில் இந்த ஊரின் பெயரே முதல்வரின் பெயரின் முன்னொட்டுமாகும்.

மேலே பார்த்தவாறு தமிழிலுள்ள வடமொழிப் பெயர்களை நீக்கிய பின்பும், சிதைந்துள்ள தமிழ்ப் பெயர்களைச் சரிப்படுத்திய பின்னருமே; அவற்றினை ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதுவது என மாற்ற வேண்டும். ‘DHARUMAPURI’ இனை ‘THARUMAPURI’  என மாற்றுவதைக் காட்டிலும் ‘தருமபுரி’ என்பதனை ‘தகடூர்’ என மாற்றுவதே முதன்மையானதாகும்.

அரசாணையின் பின்னனி :

மேற் கூறிய காரணங்களாலேயே அரசின் அரசாணைக்கு, மொழிப் பற்றல்லாது, வேறு நோக்கமிருக்குமோ எனச் சிந்திக்க வைக்கின்றது. குறிப்பாக கோவிட் 19 (கொரோனா) நோயினைக் கையாள்வதிலுள்ள பின்னடைவுகள் பற்றிய பார்வையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது. மேலும் வடமொழியினை விடுத்து ஆங்கிலத்தில் மாற்றங்கள் செய்வது, அதுவும் தேவையற்ற சில மிகைத் திருத்தங்களைச் செய்வது, ஏற்கனவே வட இந்தியாவில் இந்துத்துவா வாதிகளால் கட்டமைக்கப்பட்டு வரும் ஆங்கில மொழி மீதான ஒரு வெறுப்புணர்வின் நீட்சியோ என்றும் எண்ண வைக்கின்றது.

படிக்க:
பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

அரசாணை மீளப் பெறுகையின் பின்னனி :

இவ்வாறான பின்புலத்தில் வாதங்கள் சென்று கொண்டிருந்த போதே, தமிழக அரசு குறித்த அரசாணையினைத் திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து அமைச்சர் மாபா பின்வருமாறு கூறியுள்ளார். “தமிழில் இருந்து ஆங்கிலத்தில் ஒலிமாற்றம் செய்வது குறித்த நிபுணர்களின் கருத்துகளை ஆராய்ந்து வருகிறோம். இரண்டு, மூன்று நாட்களில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம். தமிழ்ப் பெயர்களுக்கான ஆங்கில பெயர்களைத் தொகுத்தளித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டு விட்டது. எல்லோருடைய கருத்துகளையும் பெற்று புதிய அரசாணை வெளியிடப்படும்”.   இந்தப் பின்வாங்குதலும், ஒன்றில் இப்போது மக்களின் கவனத்தை மீண்டுமொரு முறை திசை திருப்பும் முயற்சியாகவிருக்கலாம்; அல்லது இன்னொரு காரணமும் இருக்கலாம்.

அதாவது அரசின் பெயர் மாற்ற நடைமுறையின் போது அமைச்சரின் கவனத்தைப் பெறாமலேயே , இரு ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றம் பெற்றுள்ளன. சிறீரங்கம்  என ஆங்கிலத்தில் இதுவரை இருந்து வந்த முறை , திருவரங்கம் என மாறியுள்ளது.

SRIRANGAM >>  THIRUVARANGAM    {784th change}

அதே போன்று `சிறீவைகுண்டம்` என்ற பெயரும் திருவைகுண்டம் என மாற்றப்பட்டிருந்தது.

SRIVAIKUNDAM >> THIRUVAIKUNDAM  {379TH change}.

இவ்விரு பெயர்களும்  (மாறறப்பட்ட திருவரங்கம், திருவைகுண்டம்) சரியானதே.  இங்கு சிக்கல் என்னவென்றால், அமைச்ரிற்குத்  தமிழ் மொழி மீதான பற்றினை விட சமற்கிரதப் பற்றே அதிகமாகும். அவரே சொல்லியுள்ளார் ‘சமற்கிரதப் பெயர்கள் எதுவும் மாற்றப்படாது’ என.  இவரின் கவனத்தினைப் பெறாமலேயே இவ்விரு மாற்றப் பரிந்துரைகளும் மாவட்ட ஆட்சியாளர்களால்  முன் வைக்கப்பட்டுவிட்டன. இதனையே அமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தகைய காரணங்களாலேயே இந்தப் பின்வாங்கல். புதிய அரசாணை வரும்போது, இவ்விரு ஊர்ப் பெயர்களையும் பார்க்கும் போது,  உண்மை தெரிய வரும்.

வி.இ.  குகநாதன்

disclaimer