நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மனித வளத்துறையில் பொது மேலாளராக உள்ள திருவாளர் விக்ரமன் தனது பதவியைப் பயன்படுத்தி இந்த கொரோனா காலத்தில் மிகப் பெரிய ஊழலை நடத்தியிருப்பது நெய்வேலி தொழிலாளர்கள் மத்தியிலும், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள 348 பொதுத்துறை நிறுவனங்களில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள என்.எல்.சி., இன்று இது போன்ற ஊழல் நிறைந்த அதிகார வர்க்க முதலாளித்துவத்தால் மெல்ல மெல்ல அழிந்து கொண்டுள்ளது. 1956 முதல் பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் என்.எல்.சி. ஓர் ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தியும், அன்றாடம் 3640 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திறந்த வெளி நிலக்கரி சுரங்கமான இதன் சொத்து மதிப்பு 27,509.38 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் தொடங்கிய போது ‘உள்ளே சென்றால் பிணம், வெளியில் வந்தால் பணம்!’ என்று அறிவிக்கப்பட்டு சில ஆயிரம் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியது.

இன்று 12,675 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும், ஏறக்குறைய பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இந்த பொதுத்துறை நிறுவனம் தொடங்கி 64 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இரத்த வேர்வையில் இன்று நவரத்தினங்களுள் ஒன்றாக உருவாகியுள்ளது.

ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் வளர்ச்சி, அதில் உழைக்கும் தொழிலாளர்களின் ஈடுபாட்டான உழைப்பால் உருவாகிறது என்பதை இந்த நிறுவனம் நெய்வேலி லிக்நைட் கார்ப்பரேசனாக இருந்து அதன் கிளைகளை தூத்துக்குடி, பர்க்சிங்சார்-ராஜஸ்தான், மற்றும் உபி, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் உற்பத்தியைத் துவங்கியும், உற்பத்தியை விரிவுபடுத்தவும் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் என்.எல்.சி இண்டியா-வாக வளர்ந்துள்ளதில் இருந்து நாம் அறியலாம்.

தொழிலாளர்களின் ஈடுஇணையற்ற உழைப்பைப் புரிந்து கொள்ள 1962 – ல் துவக்கப்பட்ட முதல் அனல் மின் நிலையத்தின் ஆயுட் காலம் மற்றும் செயல்படும் திறன் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதிலிருந்து அறியலாம். 1992ல் இதன் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னரும் 92 முதல் 99 வரை 7 ஆண்டுகள் முதல் அனல் மின் நிலையத்தை நவீனப்படுத்தி அதன் உற்பத்தித் திறனையும் அதன் ஆயுட் காலத்தையும் மேலும் 15 ஆண்டுகள் நீடித்தனர். பாய்லர் உற்பத்தியில் உலகிலேயே புகழ் பெற்ற மற்றொரு பொதுத் துறை நிறுவனமான பெல்-லின் துணையுடன் இந்த முதல் அனல் மின் நிலையம் 600 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தருகிறது.

படிக்க:
ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !
♦ என்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன !

2020 முதல் காலாண்டில் தனது வளர்ச்சியின் மூலம் நிலக்கரி உற்பத்தியில் 2,574.65 கோடி மற்றும் மின்னுற்பத்தியில் 9133.28 கோடி என வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான ஓராண்டு உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சி 13.58% ஆகும். இதற்கப்பாற்பட்டு என்.எல்.சி.யில் பணி புரியும் பொறியாளர்கள், தொழிலாளர் குடும்பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான பொறியாளர்கள், இளம் விஞ்ஞானிகள், விளையாட்டு வீர்ர்கள் உருவாகியுள்ளனர். தனியார் என்பதுதான் திறனானது, பொதுத் துறை என்றால் மட்டமானது என்ற இந்திய மேல்தட்டு வர்க்கத்தின் பொதுப் புத்தியை செருப்பால் அடித்தது போல மேற்கண்ட பல துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது.

மேலும் இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்களின் வேலை வாய்ப்பிற்கும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. மேலும் என்.எல்.சி தனது சோசியல் ரெஸ்பான்சிபிளிட்டி என்ற பொறுப்பில் சுற்று வட்டார கிராம மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக பள்ளி, கல்லூரிகளை இயக்கி வருகிறது. இத்தகைய சாதனைகள் பல கொண்ட இந்த பொதுத்துறை நிறுவனத்தை தற்போது இரு பெரும் அபாயங்கள் சூழ்ந்துள்ளது.

ஒன்று, இந்தியா சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட 1947க்குப் பிறகு அப்போதைய பிரதமராக இருந்த நேரு காலத்தில் கனரகத் தொழில்களின் வளர்ச்சி தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற நோக்கத்துடன் பொதுத் துறைகள் உருவாக்கப்பட்டது. குறிப்பாக 1956 – 60 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலும் மற்றும் அரசின் தொழிற் கொள்கை 1956ன் படியும் மத்திய அரசே நேரடி பொறுப்பெடுத்துக் கொண்டு பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. 1951 ல் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே பொதுத்துறையாக இருந்தது தற்போது 348 நிறுவனங்கள் பொதுத்துறையாக உள்ளன.

1990 களில் நமது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளின்படி லாபமீட்டும் பொதுத் துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பது என்ற நாசகாரத் திட்டத்தின்படி என்.எல்.சி. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. முதல் படியாக ஜீரோ யூனிட்டை அமெரிக்க தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கியது. தொடர்ந்து சுரங்க மேல்மண் நீக்கம் உள்ளிட்டு அனைத்தையும் தனியார்களுக்கு வழங்கியது. இப்போது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் மின் தேவையை சுயசார்பாக நின்று ஈடுகொடுத்து வரும் நெய்வேலியை அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் விருந்து வைக்க முடிவெடுத்து வாரிக் கொடுக்க முடிவு செய்திருப்பது தேசத் துரோகமாகும்.

ஒரு ஆண்டிற்கு 1500 கோடி முதல் 2000 கோடி வரை லாபமீட்டிக் கொடுக்கிறது என்.எல்.சி.. 2025ல் நாளொன்றுக்கு 20,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள நிலக்கரி மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்வதன் மூலமும், தானே நேரடியாக மின்னுற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதன் ஊடாகவும் தனது இலக்கை அடைய செயல்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி தென்னகத்தின் மின் தேவையை ஈடுசெய்து வளர்ந்து வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பதை தடுத்து நிறுத்த பெரும் கிளர்ச்சியில் இறங்க வேண்டியுள்ளது..

1934ல் தனது நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக முயற்சித்தபோது நிலக்கரி கிடைப்பதை அறிந்த ஜம்புலிங்க முதலியார் பிரிட்டன் அரசிடம், மண்ணியல் ஆய்வாளர்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்து தனது சொந்த நிலம் 630 ஏக்கரை அப்போதிருந்த சென்னை மாகாண அரசிற்கு தானமாகக் கொடுத்தார். காலனியாதிக்கத்திலும் நாட்டிற்குப் பயன்படட்டும் என்று தனது நிலத்தை தேசப்பற்றுடன் ஜம்புலிங்க முதலியார் எழுதிக் கொடுத்தார். ஆனால் ‘சுதந்திர இந்தியா’வில் பிரதமரான மோடியோ சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வாரிக் கொடுக்கிறார். இந்த லட்சணத்தில் சுயசார்பு பொருளாதாரம் என்று வேறு கதையளக்கிறார். மோடி கும்பல் கார்ப்பரேட்டுகளுக்கு என்.எல்.சியை வாரிக் கொடுப்பதை அனுமதிக்கப் போகிறோமா? நிச்சயம் கூடாது.

இரண்டாவதாக, தற்போது 28வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ராகேஷ் குமார் காலம் வரை இதற்கு முன்பு நெய்வேலி அதிபர்களாக பணி புரிந்தவர்கள், பொது மேலாளர்களாகப் பணி புரிந்தவர்கள் மற்றும் பல பொறுப்புகளிலிருந்த உயர் அதிகாரிகள் பலரும் ’பொன்முட்டையிடும் வாத்தான’ பொதுத்துறை  என்.எல்.சி.யை அறுத்து கறியை சுவைப்பதற்கு வெறியுடன் அலைந்தனர். அந்தப் பட்டியலில் திருவாளர் விக்கிரமனும் தற்போது இடம் பிடித்துள்ளார்.

ஒரு பருந்துப் பார்வையில் இந்த வரலாற்றை சற்று பார்ப்போம்!

1956 முதல் 2010 வரை பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பலரும் ஊழல் பெருச்சாளிகளாக இருந்து தொடர்ந்து என்.எல்.சியை நட்டத்தில் இயக்கி வந்தனர். ஜெர்மன், இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளில் இருந்தும் ரசியாவில் இருந்தும் காலாவதியாகிப் போன சுரங்க அகழ்வு கருவிகளை வாங்கி தொழிலாளர்களை பலி கொடுத்தனர்.

2010ல் என்.எல்.சி. உயர் அதிகாரியான திருவாளர் கிருபானந்தன் சென்னையில் உள்ள நெய்வேலி ஹவுஸ்-ஐ மேன்மைப்படுத்துவதில் ஈடுபட்ட சிவில் காண்ட்ராக்டரிடம் ரூ 50,000 லஞ்சம் கேட்டு கையும் களவுமாகப் பிடிபட்டார். அப்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.32 லட்சம் பணமாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது என வழக்கு பதியப்பட்டு 8 ஆண்டுகள் வழக்கு நடந்தது. அதன் பிறகு உயர் நீதி மன்ற நீதிபதி நீலகண்ட பிரசாத் மூலம் திருவாளர் கிருபானந்தம் தனது வருவாய்க்கு அதிகமாக ரூ.39.48 லட்சம் சொத்து சேர்த்துள்ளார் என நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனையும், 25,000 அபராதமும் விதிக்கப்பட்டார். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும்.

2011ல் அப்போதைய அதிபரான அன்சாரி மீது AICCTU செல்வராஜ் என்ற தொழிலாளி இரண்டாம் சுரங்க பணிகளுக்காக கன்வேயர் மற்றும் கன்வேயருக்கான சாதனங்கள் வாங்கியதில் 10,000 கோடி ஊழல் செய்ததாக சென்னை உயர் நீதி மன்றத்-தில் வழக்கு பதிவு செய்தார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அப்போதைய நீதிபதி யூசுப் அலி அன்சாரியின் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் நெய்வேலியில் சிபிஐ புகுந்து பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது ஊழலுக்கு பல சான்றாதாரங்கள் கிடைத்தது. ஆனாலும் அவர் மீது வழக்கு பதியப்படாமல் காப்பாற்றப்பட்டார்.

அதன் பிறகு என்.எல்.சி. அதிபராக பொறுப்பேற்ற பூபதி பல கோடி ஊழல் செய்தார் என்று பணிக்காலத்திலேயே பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.  அது போலவே பைனான்சியல் டைரக்டராக இருந்த திருவாளர் நரசிம்மன் காலத்தில் பலகோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார். 1999ல் என்.எல்.சி அதிபராக இருந்தவர் மீதும் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை பதிவு செய்துள்ளது

2009ல் ஏ.ஐ.டி.யூ.சி யின் கடலூர் மாவட்ட செயலரான சேகர் சி.பி.ஐ க்கு அனுப்பிய புகார் மனுவில் அப்போது நடந்த பொறியாளர் பயிற்சி ட்ரெயினிங் பணியிடங்களுக்கு தேர்வுக்கான வினாத்தாள்களை அப்போது பொறுப்பில் இருந்த பொது மேலாளர்கள் மற்றும் பொறியாளர் சந்திரபாபு உள்ளிட்டோர் விற்று காசு பார்த்தனர். ஒரு வினாத்தாளுக்கு ரூ. 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை போட்டியில் பங்கெடுத்த மாணவர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர். இது பற்றி சேகர் பொதுக்கூட்டம் ஒன்றில் அம்பலப்படுத்தி பேசினார். இந்த ஊழல் அம்பலமானவுடன் அப்போதைய ஜீ.ஈ.டி தேர்வே ரத்து செய்யப்பட்டது.

இந்த வரிசையில் டவுன்சிப் நிர்வாகத்தில் இருந்த ஓ.சிங்கார தியாகராசன், பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து கொண்டு தொழிலாளிகள், அதிகாரிகளுக்கு சின்னச்சின்ன நோய்களுக்கு கூட பிரதாப் ரெட்டியின் அப்பல்லோ, வெங்கையா நாயுடுவின் குளோபல், சாராய உடையாரின் ராமச்சந்திரா போன்ற நட்சத்திர மருத்துவமனைகளுக்கு அனுப்பி காசு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதே போல, தரமற்ற பாய்லர் உதிரி பாகங்களை வாங்குவதன் மூலம் இந்த கொரோனா காலத்தில் இரண்டு முறை பாய்லர் வெடித்துச் சிதறி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொது திருவாளர் விக்ரமன் மீது தனக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு பங்களாவில் விதிகளை மீறி அழகு படுத்துவதற்கென்று ரூ.70 லட்சத்தை செலவிட்டுள்ளதாகவும், தான் தங்கியிருக்கும் காலத்தில் ஒரு முறை மட்டுமே வீட்டின் திரைச் சீலைகளை மாற்றுவதற்கு நிறுவனத்தின் சட்ட விதிகள் அறிவுறுத்தியுள்ள போதிலும் அதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு திரைச் சீலைகள் வாங்கி ஊதாரித்தனமாக நிறுவனத்தின் பணத்தை செலவிட்டுள்ளதாகவும் மேலும் பல புகார்களும் வந்துள்ளன. ஜப்பானுக்கு சொந்த முறையில் பயணம் செல்வதாக கணக்கு காட்டிவிட்டு அங்கிருந்து தனது மாமன், மச்சான், உறவுகள் மற்றும் சகபாடிகளிடம் மணிக்கணக்கில் பேசியதற்கான தொலைபேசித் தொகை லட்சக்கணக்கான ரூபாயை என்.எல்.சி தலையில் கட்டியுள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக பல்வேறு பணி நியமனங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு நியமனத்திற்கும் பத்து லட்சம் முதல் 40 லட்சம் வரை கல்லா கட்டி வருகிறார். குறிப்பாக தலைமை மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பதவிகளுக்கு உரிய தகுதி உடையவர்களை என்.எல்.சி. அல்லது அதற்கு இணையான பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இவர் கேட்கின்ற அளவிற்கு பணத்தைக் கொட்ட முடியாத இந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பதிலாக பணம் கொழிக்கும் அரசு சாராத நிறுவனங்களிலிருந்து பெரும் தொகை வாங்கிக் கொண்டு இப்பணிகளில் அமர்த்தியுள்ளார். இச்செய்திகள் சமூக வலை தளங்களிலும் இந்து போன்ற தினசரிகளிலும் ஜூனியர் விகடனிலும் வந்து நாறுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2019 ஆம் ஆண்டு விஜிலன்ஸ் விழிப்புணர்வு வார கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போதைய காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்தின் ஐ.ஜி யான தேன்மொழி ’ஊழல் என்பது வேறு ஒன்றுமல்ல. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சமூக விழுமியங்கள், மதிப்பீடுகளும் மற்றும் உளவியல் பண்புகளும் கறைபட்டு கரைந்து போவதுதான். இது சமூகம் ஆரோக்கியமாக இருப்பதை ஒழித்து விடுகிறது‘ என்று பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த விக்ரமன் நமுட்டு சிரிப்புடன் அதனை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுடன் அப்போது விஜிலன்சு வெளியிட்ட “லிக்னைட் அய்” இதழில் ‘நமது நாட்டின் ஒவ்வோரு குடிமகனும் ஊழலுக்கு எதிரான போரில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வலிமை மிக்க, ஊழலற்ற, சுதந்திர இந்தியாவைக் கட்டியமைக்க உதவ வேண்டும்’ என்று வேறு திருவாய் மலர்ந்திருந்தார்.

பொதுவாக பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களை கண்டு பிடிப்பதென்பது கள்ளக் காதலுக்கு சாட்சியத்தை கண்டு பிடிப்பதைப் போல சிக்கலானது. மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் அவரவர் தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ப ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதால் ஒருவரையொருவர் விட்டுக் கொடுப்பதில்லை. குறிப்பாக என்.எல்.சி போன்ற நிறுவனங்களில் ஊழல் மற்றும் நன்னடத்தை, வதந்திகள், அவதூறுகள் போன்றவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விஜிலன்ஸ் துறையே பலமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே ஆதாரங்களைக் கோப்புகளிலும், வங்கிக் கணக்கிலும், வீடுகளிலும் தேடுவதைக் காட்டிலும் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் உறவுகள், நண்பர்கள், ரகசிய பினாமிகள் போன்றவர்களிடம் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உயர்ந்துள்ள சொத்து மதிப்புகளைப் புலனறிந்து கையும் களவுமாகப் பிடிப்பதே தீர்வாக இருக்கும். ஆனால் அது இந்த கட்டமைப்பிற்குள் சாத்தியமா என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. தொழிலாளர்களின் அளப்பரிய தியாகத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வினாலும் மகா ரத்னா அந்தஸ்த்துக்கு முன்னேறிவரும் வேளையில் தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளும், ஊழல் முறைகேடுகளால் உயர் அதிகாரிகளான அதிகார வர்க்க முதலாளிகளும் கொழுத்து திரிவதை ஒருபோதும்  அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது அடுத்த தலைமுறைக்கும் நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

ராம்கி