மக்கள் கலை இலக்கியக்கழகம்தமிழ்நாடு


நாள் : 16. 07. 2020

பத்திரிக்கைச் செய்தி

ந்தியாவில் தமிழகத்தின் தனித்துவத்திற்கான  முக்கிய கூறுகளில் ஒன்று பகுத்தறிவுச் சிந்தனை. திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என நீண்ட பகுத்தறிவு வரலாறு தமிழகத்திற்கு உள்ளது. அதேபோல் இந்து மதவெறிக்கு பலியாகாத மாநிலமும் தமிழகமே. இந்தத் தனிச் சிறப்பை ஒழித்து வட மாநிலங்களைப் போல  தமிழகத்தையும்  பார்ப்பன அடிமைக் கூட்டமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ்  – பிஜேபி கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக போலீசு  கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் வலைக்காட்சியைச் சேர்ந்த செந்தில் வாசன் சுரேந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்திருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பேசியதாகவும் முருகக் கடவுளையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி விட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ்  – பிஜேபி கும்பலும், அவர்களின் அடியாட்களும் போட்ட கூச்சலுக்கு பயந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது எடப்பாடி அரசு.

இந்த கைது நடவடிக்கை பகுத்தறிவு சிந்தனைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானதாகும். இதனை மக்கள் கலை இலக்கியக் கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

படிக்க:
பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு

இந்திய அரசியல் சட்டத்தின் 51 ஏ உறுப்பானது அறிவியல் உணர்ச்சி, மனிதாபிமானம், எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஊக்கம், சீர் திருத்தம் போன்றவற்றை வளர்ப்பது  ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படைக்   கடமையாகும் என்று வலியுறுத்துகிறது. அதேபோல் இந்தியாவின் வளமான பன்முகப் பண்பாட்டை மதித்துப்  பாதுகாப்பதையும் கடமை என வலியுறுத்துகிறது. எனவே சாதி மத கலாச்சாரத்தின் பெயரால் நிலவும் எல்லா பிற்போக்குத் தனங்களையும் சிந்தனைகளையும் எதிர்ப்பதும் தகர்ப்பதும் ஒரு பண்பட்ட குடிமகனின் கடமையாகும்.

எனவே, இந்த கைது நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு, குறிப்பாக மதசார்பின்மைக்கு எதிரானது. தமிழக அரசு வெளிப்படையாகவே இந்துமதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. எடப்பாடியின் கட்சிக் கொடியிலிருக்கும் முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்கள் முழுநாத்திகர். அவர் எழுதிய கம்பரசம் என்ற நூல் கம்பராமாயணத்தில் உள்ள ஆபாசங்களை தோலுரித்துப் புகழ் பெற்றது. தந்தை பெரியார் அச்சமின்றி நடத்திய கடவுள் மறுப்பு, பகுத்தறிவு பிரச்சாரம்தான்  தமிழ் மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியது.

திராவிடக் கட்சிகளை எதிர்ப்பது என்ற பெயரில் திராவிட சிந்தனைகளான பகுத்தறிவு, மனுதர்ம – வேத மறுப்பு, மனிதநேயம், மதசார்பின்மை  போன்ற அடிப்படைகளை ஒழித்து பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறி பிடித்து அலைகிறது ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி கும்பல். இதற்கு மாரிதாஸ் போன்ற கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களை களத்தில் இறக்கியிருக்கிறது.

இக்கும்பல் தொலைக்காட்சி நெறியாளர்கள் பலரையும் கூட தனிப்பட்ட விதத்தில் தாக்குகிறது. கொரோனாவை காரணம் காட்டி திருவள்ளுவர், பெரியார், மதச்சார்பின்மை போன்ற  கருத்துக்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து நீக்குகிறது. ஆகவே, சங்கப் பரிவாரக் கும்பலின் தமிழர் விரோத, மக்கள் விரோத செயல்களை மக்கள் களத்தில் இறங்கித்தான் முறியடிக்க வேண்டும். எடப்பாடி அரசு செந்தில் வாசன், சுரேந்திரன் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தோழமையுடன்,
தோழர் காளியப்பன்,
மாநில இணைச்செயலாளர்,

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.