ர்வரோக நிவாரணியான மாட்டுச்சாணத்திலிருந்து கதிர்வீச்சைக் குறைக்கும் சிப்பை கண்டுபிடித்திருக்கிறதாம் மத்திய அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்.

இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் வல்லபாய் கத்ரியா, “இது ஒரு கதிர்வீச்சு சிப். அதை உங்கள் மொபைலில் வைத்திருக்கலாம். இந்த சிப்பை உங்கள் மொபைலில் வைத்திருந்தால், அது கதிர்வீச்சைக் கணிசமாகக் குறைக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். நீங்கள் நோயைத் தவிர்க்க விரும்பினால், இதைப் பயன்படுத்த வேண்டும்” என கூறியிருக்கிறார்.

ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்பின் தலைவராக இதை அறிமுகப்படுத்தினாலும் இதை தயாரிக்கும்  ‘ஸ்ரீஜி கவுசாலா’ என்ற நிறுவனம் இவருடைய சொந்த ஊரான ராஜ்கோட்-ஐச் சேர்ந்தது. குஜராத்தின் மாட்டுக்கொட்டகையில் தயாரிக்கப்பட்ட இந்த சிப்பின் விலை, ரூ. 50 முதல் ரூ. 100 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.

படிக்க :
♦ விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் ! | கலி. பூங்குன்றன்
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

மாட்டுச் சாண தயாரிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘காமதேனு தீபாவளி அபியான்’ திட்டம் குறித்த நாடு தழுவிய பிரச்சாரத்தின்போது இந்த சிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அப்போது இதுகுறித்து பேசிய வல்லபாய் கதிரியா, “மாட்டுச் சாணம் அனைவரையும் பாதுகாக்கும். இது கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த கதிர்வீச்சு எதிர்ப்பு சிப் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்” என்று கூறினார்.

கத்ரியா முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். தன்னுடைய இணையதளத்தில் தன்னை பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எனக் கூறிக்கொள்வதாக த வயர் சுட்டிக்காட்டியுள்ளது. செல்போனில் இருந்து ஆபத்தை விளைவிக்கும் கதிர்வீச்சு வெளிவருவதற்கான ஆதாரம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் மாட்டுச்சாணிக்கு கதிர்வீச்சை தடுக்கும்/கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதற்கு அறிவியல்பூர்மான ஆதாரம் இல்லை என்பதையும் மாட்டுச்சாண விஞ்ஞானிகள் கண்டுகொள்வதில்லை.

இந்த சிப்’புகள் வரி செலுத்தும் மக்களின் பணத்திலிருந்து தயாரிக்கப்பட்டதா? சிப்’புக்கு கதிர்வீச்சை எதிர்க்கும் பண்பிருக்கிறது என்பது அரசாங்க ஆய்வகத்தில் சோதித்து அறியப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு கத்ரியாவின் பதிலில், ‘இதற்கு சான்றிதழ் பெறப்படவில்லை. இவற்றை எந்த ஆய்வகத்திலும் சோதனைக்கு உட்படுத்தலாம். ஒரு கல்லூரியில்கூட இதை சோதிக்க முடியும்’ என புலமைகாட்டியுள்ளார்.

மாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவோம் எனக்கூறிக்கொண்டு 2019-ம் ஆண்டு ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தொடங்கப்பட்டது . இந்த நிலையில், தற்போது பண்டிகை காலம் என்பதால் மாட்டுச் சாணம் சார்ந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக மாட்டுச்சாண ஆதரவு ஊடகங்கள் வியக்கின்றன.

படிக்க :
♦ தவறுகளை ஒப்புக்கொள்ளும் போல்ஷ்விக் உறுதி வேண்டும்! | தோழர் ஸ்டாலின்
♦ சீர்குலைவுவாதிகளோடு தொடர்புடையவர்களைக் கையாளுவது எப்படி ? || தோழர் ஸ்டாலின்

மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் வகையில் மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மண் விளக்குகள், மெழுகுவர்த்திகள், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் எனவே, இந்த தீபாவளிக்கு சீனத் தயாரிப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிரதமர் மோடியின் சுதேசி இயக்கம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையில் மாட்டுச் சாண தயாரிப்புகளைப் பயன்படுத்துமாறு வல்லபாய் கதிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் ஊடகங்கள் எழுதியுள்ளன.

வேளாண்சட்டங்களை போட்டு, ஒட்டுமொத்தமாக விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு எழுதி வைத்துவிட்டு,சுதேசி இயக்கம், மேக் இன் இந்தியா திட்டம் என கதை விடுவதற்கெல்லாம் தனிச் சிறப்பான மனநிலை வேண்டும். வாழ்வளிக்கும் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் அள்ளிக்கொண்டு போக, உழைக்கும் மக்களாகிய நாம் மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்த வைப்பது தான் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரம் !

கலைமதி
நன்றி: த வயர்
.