டானிஷ்கின் இதர விளம்பரங்களைப் போலவே, முஸ்லீம் மாமியார் – இந்து மருமகள் குறித்த விளம்பரம் மிகவும் அழகானது. இதனை நீக்கியதன் மூலம் இது முற்றிலும் விஷமம் நிறைந்த புனைக்கதை, இவ்வகையான உறவுமுறை நிஜவாழ்க்கையில் நீடித்து நிற்கமுடியாது என நம்மை நம்பச் செய்திருக்கிறது. ஆனால் இவ்வகையான உறவுமுறை நீடிக்கிறது என்பதற்கு, நான் தான் நிகழ் உலக ஆதாரம். ஆம் டானிஷ்க் விளம்பரத்தில் காட்டப்படும் அந்த பிறக்காத குழந்தை நான்தான்.

1971-ம் வருடம் என்னுடைய பெற்றோர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட போது “லவ் ஜிகாத்” என்ற வார்த்தையை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவிலுள்ள யுவக் கிராந்தி தள் என்ற சோசலிச மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள். இந்த அமைப்பு தொழிலாளர்கள் மீதான சுரண்டல், சாதி ஒடுக்குமுறை, பழங்குடி மலைவாழ் மக்களை விளிம்புநிலைக்குத் தள்ளுவது ஆகிய பிரச்சினைகளுக்கு எதிராக போராடி வந்தது. இந்த அமைப்பில் சேரும்போது எனது தாயாருக்கு வயது 18. பச்சை நிற கண்கள், புன்னகைமாறா முகம் கொண்ட சதைப்பற்றுள்ள அழகான பெண் அவர். அவரை சுற்றியுள்ள ஆண்கள் பெரும்பாலும் அவரைவிட வயதில் கூடியவர்கள் – கிராமப்புற, ஏழை, தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம் என பலத்தரப்பட்ட பின்னணியில் இருந்து வந்திருப்பவர்கள். எனது தாயாரை பார்த்த கனமே அனைவரும் அவரை மணக்க விரும்புவர். சொல்லப்போனால், எனது தாயாரின் குடும்ப பின்னணியை கண்டு அஞ்சும் ஆண்கள் பலரின் காதல் முன்மொழிதலை எனது தந்தைதான் தாயிடம் கொண்டு வருவாராம். பலரும் அறிந்த, புகழ் – செல்வம் பெற்ற மார்க்சிய காந்திய அறிஞர் நளினி பண்டிட்டின் மகள் தான் எனது தாயார். அந்த காலத்திலேயே தாதரில் மிகப் பெரிய வீடு, கார்கள், தொலைப்பேசி வைத்திருந்தவர்கள்.

எனது தாயாரின் உற்ற தோழரும் கொங்கனி இஸ்லாமிய இனத்தை சேர்ந்தவருமான எனது தந்தையை திருமணம் செய்ய முடிவு செய்தபோது இருதரப்புக் குடும்பத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. என் தாயாருக்கு பரிச்சியமான வயதான பெண் ஒருவர் தாதர் வீதியில் அவரை நிறுத்தி, “நீ ஒரு முஸ்லீமை திருமணம் செய்துக்கொள்ளபோகிறாயா? அவர்கள் முத்தலாக் முறையை பின்பற்றுகிறவர்கள். ஜாக்கிரதையாக இரு” என்று எச்சரித்திருக்கிறார். எனது தந்தையின் மூத்த சகோதரரிடம் ஒருவர், “எதற்கு இவன் ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான்?” என கேட்டாராம். இப்படி கேட்டதும் அவர் அதிர்ந்துப்போனார். மூத்த சகோதரர் வேறு யாரும் இல்லை, முஸ்லீம் சீர்த்திருத்தவாதி ஹமீத் தல்வாய். ‘இந்த திருமணத்தை நாம் பெரியளவில் கொண்டாடுவோம், அப்போதுதான் அனைவருக்கும் இப்படியொரு திருமணம் நடைபெறுகிறதென தெரியும்’ என அதிக எண்ணிக்கையில் திருமண அழைப்பிதழை அச்சிட்டு பலரை அழைத்தார் அவர்.

படிக்க :
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
♦ போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

என்னுடைய பாட்டியின் கதைப்படி, திருமணத்திற்கு எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்ற கணக்குக்கே இடமில்லை. மண்டபம் சிறியதுதான்; குழப்பங்களோ ஏராளம். மூவாயிரம் கொக்கும் சர்பத் பரிமாறப்பட்டது. எனது பெற்றோர்கள் நிறைய நபர்களின் கைகளை குலுக்க வேண்டியிருந்தது. சிரித்து சிரித்து கன்னங்களும் குலுக்கி குலுக்கி கைகளும் வலித்ததுதான் மிச்சம். நண்பர்கள் சிலர் எனது தாயாரிடம், “அடேயப்பா, எத்தனை குழப்பங்கள் நிறைந்தது உனது திருமணம். நாம் பிரச்சினையின்றி தப்பித்தது அதிர்ஸ்டம்தான்.” என்றிருக்கிறார்கள். மிர்ஜோலி கிராமத்திலும் திருமணம் கொண்டாடப்பட்டது. அங்கு தல்வாய் குடும்பத்தினர் மும்பையில் இருந்து கார்களில் வந்த பண்டிட் குடும்பத்தினர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தனர்.

கட்டுரையாளர் சமீனா தல்வாய்

எனது தாயாரின் மாமியார் வீட்டில் டானிஷ்க் பாணியில் அப்படியொன்றும் தங்க நகைகள் இல்லை. உண்மையில், எனது தாயார் முதன்முதலில் அவர்கள் கிராமத்திற்கு சென்றபோது வெள்ளி காதணிகளால் கவரப்பட்டார். “ஆனால் வெள்ளி பானைகளுக்கும் தட்டுகளுக்கும்தான் உபயோகிப்பார்கள்” என சரஸ்வத் சமூகத்தின் தீபாவளி விருந்தினை நினைத்துக் கொண்டார். வர்க்க இடைவெளி இப்படிதான் இருந்தது. ‘முடிந்ததை கொடுங்கள்; தேவைக்கேற்றதை எடுத்துகொள்ளுங்கள்” என்ற சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் குடும்பத்தை எனது தாய் நிர்வகித்தார். எனது தந்தை பழங்குடியினர் கூட்டங்கள், பேரணிகளுக்கு செல்வது என முழுநேர சமூக ஆர்வலராக இருந்தார். கிராமத்திலுள்ள அவரது ஏழை சகோதர, சகோதரிகளுக்கு மும்பை கல்லூரியில் விரிவுரையாளராக வேலைப்பார்த்து எனது தாயார்தான் படிக்கவைத்தார். உறவினர்களின் கல்வி செலவுகளுக்கு பணம் அனுப்புவது, உறவினர்களை உடல்நலம் சரியில்லாத போது  சிகிச்சைக்கு வருகையிலும், திருமணங்களுக்கான பொருட்களை வாங்க வருகையிலும் மும்பையிலுள்ள எங்களது வீட்டிற்கு வரவழைத்து அழைத்துச் செல்வார். எங்களது குடும்பத்தின் நீட்சியையும் நிர்வகிக்கும் குலத்தலைவியானார்.

டானிஷ்க் விளம்பரத்தை ட்ரோல் செய்பவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள், திண்ணமான மிளிரும் கண்களுடைய மருமகள்தான் அந்த இஸ்லாமிய குடும்பத்தில் ஒன்றிணைந்திருக்கிறார், ஒரு பெண்ணால் மட்டுமே இது சாத்தியம். இது லவ் ஜிகாத் அல்ல; முஸ்லீம்களின் வீடு திரும்புதல். ஆனால் இதனை ட்ரோல் செய்பவர்கள் வெறும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல அவர்கள் பெண்கள் எதிர்ப்பாளர்கள். (முசுலீம் குடும்பத்தில்) ஒரு (இந்து) பெண்ணை திருமணம் செய்துகொடுப்பது ஒரு தோல்வி என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த விளம்பரத்தில் வரும் முஸ்லீம் குடும்பத்தினர் ஒரு இந்து சடங்கினை நடத்துகிறார்கள் என்ற உண்மையை அவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். என்னுடைய குடும்பத்தினரின் ஈத் மற்றும் தீபாவளியை இருதரப்பு உறவினர்களுடனும் இணைந்து கொண்டாடுவார்கள். எல்லோரும் சாப்பிட விரும்புவார்கள், வண்ணங்களுடன் மகிழ்வார்கள், பண்டிகையின் போது புத்தாடை அணிவார்கள். இதில் விரும்பக்கூடாதது எது?

எனது தந்தை முஸ்லீம் என்றாலும் என் தாய் இன்னும் இந்துதான். மத சடங்குகளில் பங்கேற்பதில்லை என்றாலும், இருவருமே கலாச்சார விழாக்களில் பங்கேற்பார்கள். ஆரம்ப நாட்களில், முதிய உறவினர்கள் சிலர் எனது தாயை இஸ்லாமிய மதத்திற்கு மாறச்சொன்னார்கள், அப்போதுதான் அவர் ஜன்னத்துக்கு (சொர்க்கம்) போக முடியும் என்று கூறியிருக்கிறார்கள். எனது தாயோ சிரித்து கொண்டே, “ஆனால் நான் ஒரு பொருள்முதல்வாதி. இங்கேயே இப்போதே எனது வாழ்க்கையில் எப்படி பயனடைவேன் என்று சொல்லுங்கள்” என்று பதிலளித்திருக்கிறார். சொல்லப்போனால், திருமணமான சில மாதங்களுக்கு பிறகு எனது தாய் அவரை அடையாளப்படுத்திக் கொள்ள பெரிய சிவப்புநிற பொட்டை வைத்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். எனது தாயார் பொருளாதார பேராசிரியை, மாணவர்களை போலவே அவர் இளமையாக இருப்பார், பொட்டு மற்றும் சேலை, பேராசிரியையாக கறாராக இருக்க அவருக்கு உதவியது. அவர் தனது புரட்சிகர வேலைகளை தொடர்ந்தார், எங்களையும் மாற்று அமைப்பு விழுமியங்களுடன் வளர்த்தார்.

படிக்க :
♦ பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !
♦ டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

வகுப்புவாதம் பெருகிய இச்சூழலில் தனது குழந்தைகள் இதை எவ்வாறு எதிர் கொள்வார்கள்? என அவநம்பிக்கை இருந்தது.  ரஷ்யப் புத்தகங்கள், பல இனம் கலந்த குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மூலம் எங்களுக்கு உலகத்தை வழங்கியதன் மூலம் இதனை எதிர்கொள்ள அவர்கள் கடுமையாக முயன்றனர். இருந்தும் அவர்களால் கலவரம், விரோதம் மற்றும் பாதிப்பிலிருந்து எங்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இதுதான் எங்களுக்கு பலத்தை அளித்தது. நாங்கள் பல வெளிநாடுகளுக்கு சென்றோம், அன்பான பல நல்உள்ளங்களைக் கண்டறிந்தோம், புத்தகங்களையும், நல்ல படிப்பையும் அனுபவித்தோடு எங்கள் குடும்பத்தின் கலப்போடு இணைந்தோம்.

எனது சகோதரர் (சீனாவின்) ஹைனான் மாகாணத்தைச் சேர்ந்த சீன பெண்ணை திருமணம் செய்துகொண்டார் நானோ ஒரு தெலுங்கானா ரெட்டியை மணந்தேன். நான் நாகலாந்திலுள்ள மொன் பகுதியிலிருந்து ஒரு மகளை தத்தெடுத்தேன். இப்போது எங்களது அனைத்துக் குழந்தைகளும் பொதுப் பூங்கா ஒன்றில் – பாதி சீனச் சிறுவன், மராத்தி-தெலுங்கு பெண் மற்றும் ஒரு குட்டி நாகா போராளிச் சிறுமி என –  கலந்து விளையாடுவதைக் கண்டு, மக்கள் எங்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். எங்கள் குடும்பம் ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு, மாண்டரின் (வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதியில் பேசப்படும் மொழி) மற்றும் கொங்கனி பேசுகிறோம்.

ஒருமையான ஒரேவகைப்பட்டதான கற்பனைகளைக் கொண்ட “சாதாரண” மக்கள் எங்களிடம் “இது எப்படி?” என்றோ “இது …” என கேட்க வரும்போது நாங்கள் வெறுமனே புன்னகைப்போம்.

டானிஷ்க் விளம்பரத்தை ட்ரோல் செய்தவர்களுக்கு எங்கள் வாழ்க்கைதான் பதில். நாங்கள் நீடிக்கிறோம். கலப்பு இனம் வாழ்வது மட்டுமல்ல செழித்து வளர்கிறது. மற்றும் உங்களை மிகவும் சலிப்புற்றவராக தோற்றமளிக்கச் செய்கிறது.

சமீனா தல்வாய்
தமிழாக்கம் : ஷர்மி

மூலக் கட்டுரை: இந்தியன் எக்ஸ்பிரஸ்