டந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் வைரஸ் தொற்று சிகிச்சைக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பியது மனித உரிமை மீறல் எனவும் அவருடைய குடும்பம் நீதிமன்றம் சென்றது. பல முறை அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச கரிசனத்தோடுகூட சிகிச்சை கோரும் மனுவை நீதிமன்றம் அணுகவில்லை. வழக்கு விசாரணைக்கு வருவதே இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் பழங்குடியின செயல்பாட்டாளர் 83 வயதான ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னால் ஒரு கோப்பை நீரைக்கூட நடுக்கம் இல்லாமல் பிடித்து, குடிக்க முடியாது எனக் கூறி, நீரை உறிஞ்சி குடிக்க ஸ்டிரா பயன்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றம் சென்றார். கொடூர குற்றங்கள் புரிந்தோருக்கும் மனித உரிமை உள்ளதாகக்கூறும் ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றம், குற்றச்சாட்டின் கைதான பழங்குடிகளுக்காக உழைத்த, சமூகத்தில் மதிப்பிற்குரிய ஒரு மனிதருக்கு ஸ்டிரா வழங்கும் வழக்கைக்கூட விசாரிக்க முனையவில்லை. 20 நாட்களுக்கு அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வயோதிக செயல்பாட்டாளர்களைக் கண்டு இந்த பாசிச அரசு ஏன் அச்சம் கொள்கிறது? இதன் மூலம் அரசு உணர்த்தவிரும்பும் செய்தி என்ன என்பதைக் கூறுகிறது ஜே என் யூ பல்கலைககழக பேராசிரியர் அஜய் குடவர்த்தி எழுதிய இந்தக் கட்டுரை.

======

படிக்க :
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

காத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவர் ஒரு பலவீனமான மனிதராகவும்  ஏமாற்றமடைந்தவராகவும் இருந்தார்; மேலும் தேசிய அரசியலில் இருந்து விலகியிருந்தார்.  78 வயதில்,  தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைப் பற்றி அயராது பேசியவருக்கு வன்முறை மூலமாக மரணம் நிகழ்ந்தது பரிதாபத்திற்குரியது.  ஆனால் இப்போது அது மட்டுமே நிகழவில்லை என்பது தெரிகிறது; ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை எதிரொலிக்கும் தொடர் நிகழ்வுகளை இப்போது நாம் காண்கிறோம்.

இது கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் கல்புர்கி ஆகியோரின் கொலைகளுடன் தொடங்கியது – அவர்கள் அனைவருமே தங்களுடைய 70 வயதுகளில் இருந்தனர். சமீபத்தில் 80 வயதுகளில் உள்ள வரவர ராவ் மற்றும் இப்போது ஸ்டான் சுவாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள வலதுசாரிகளின் அமைதியான ஆனால் தெளிவான வயதுவாதம், அவர்கள் வாழ்க்கையையும் நிஹிலிசத்தையும் (அறமற்ற தன்மையையும்) பாதிக்கப்படக்கூடியவர்களாக கருதத்தக்கவர்களின்  மீதான வெறுப்பையும் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான முக்கிய தடயங்களை வைத்திருக்கிறது. 80 -89 வயது வரையானவர்களின் மீதான தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கைதுகள் விளக்குவது என்ன, அவர்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

வேட்டையாடும் அரசு

மூத்த, வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட செயல்பாட்டாளர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், அது என்ன தோற்றத்தை உருவாக்குகிறது என்பதற்கு கலவையான காரணிகள் இருப்பதாகத் தெரிகிறது. இது இரக்கமற்ற தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் உடனடியாக  வெளிக்காட்டுகிறது. ஒரு காலத்தில் சக்திவாய்ந்த மேடைப் பேச்சாளராக அறியப்பட்ட வரவர ராவ் சரியான சொற்களைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்; யானையைப் போன்ற நினைவுத்திறன் கொண்டவர், தனது சொந்த குடும்பத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கிறார்.

மன அழுத்தத்தால் தூண்டப்படும் அனைத்து அறிகுறிகளும் வயோதிகத்துடன் வருகின்றன. ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக பிணை வழங்காமல் மறுப்பதும் அவரை மீண்டும் சிறையிலேயே வைத்திருப்பதற்கான சூழ்ச்சிகளும் “கதையை” முடிப்பதற்கான போர் என்பதைப் புரிந்து கொள்வதற்கான செய்தியாகும்.

இது ஒரு வேட்டையாடும் கலாச்சாரத்தை குறிக்கிறது, அங்கு ஒருவர் வெற்றியாளராகவோ அல்லது முறியடிக்கப்பட்டவராகவோ இருக்கலாம். மூத்தவர்களைக் குறிவைப்பது என்பது வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் காப்பாற்றப்படாவிட்டால் மீதமுள்ளவர்கள் தப்பிக்க முடியாது என்ற இறுதித் தீர்ப்பு நாள் (பேரழிவு நாள் – Doomsday) குறித்த உணர்வைக் கொடுப்பதாகும்.

‘உற்பத்தியில் ஈடுபடாத உடல்களுக்கு’ இடமும் பொறுமையும் கிட்டத்தட்ட இல்லாத வலுவான தேசம் என்கிற கருத்தாக்கத்தையும் இது எதிரொலிப்பதாகத் தெரிகிறது. யூதர்களை மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளாக இருந்த வெள்ளையின ஜெர்மன் குழந்தைகளையும் குறிவைத்து விசவாயு அறைகளில் அடைத்த நாசி ஆட்சியின் நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது. இது சந்தை மற்றும் தேசத்தின் ஒரு வகையான ‘திறன்வாதத்தைக்’ குறிக்கிறது. ஒருவர் ‘பயன்பாட்டில்’ இல்லாவிட்டால், உற்பத்தி செய்யாவிட்டால், அவர்களை தூக்கியெறிவது அறமற்ற செயலல்ல என்பதை சொல்கிறது.

முன்னேற்றத்தை நோக்கும் இளம் மற்றும்  திறன் கொண்ட தேசத்திற்கு எதிராக இது நிற்பதாக தோற்ற அளவில் தெரிகிறது. இயல்பாகவே மூத்த மற்றும் வயதானவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதிப்புகள் மற்றும் சித்தாந்தங்கள் காலாவதியானவை மற்றும் பொருத்தமற்றவை என்பதையும் சித்திரமாக இது குறிக்கிறது. சுருங்கி வரும் உடல்கள், மறைந்துபோகும் யோசனைகள் மற்றும் தலைகீழான மதிப்பு அமைப்பு குறித்த குறியிடப்பட்ட செய்தியை தெரிவிப்பதற்கான வார்ப்புருக்களாக மாறியுள்ளன.

ஸ்டான் சுவாமியின் சமீபத்திய வீடியோ உடல் பிரச்சினைகளைப் பற்றி புகார் அளித்தாலும், பழங்குடியினருக்காக போராடுவதில் அவர் நின்ற மதிப்பீடுகளுக்கு உறுதியுடன் இருப்பதும், பயமற்ற அர்ப்பணிப்பின் செய்தியை அனுப்பக்கூடும். ஆனால் அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதையும் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடவும் நிகழ்ந்தவற்றை அசை போடவும் தவிர்க்க முடியாததற்கு காத்திருக்கவும் வேண்டிய நேரத்தில் அவர்கள் தங்களை நீட்டிக்கிறார்கள் என்பதையும் இது குறிக்கலாம்.

இந்து தத்துவத்தில், இது உலக நோக்கங்களை கைவிடுவதைக் குறிக்கும் வனப்பிரஸ்தா மற்றும் சன்யாசாவை நோக்கிச் செல்லும் வயதைக் குறிக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடி குகையில் தியானிப்பதையும், தேர்தல் முடிவுகளுக்கு இடையில் தனிமையில் நடந்து செல்வதையும், மாநில அல்லது மத்திய அரசாங்கங்களில் நிர்வாக பதவிகளை வகிக்க 75 வயது அதிகபட்ச வயது என அறிவிப்பதோடு தொடர்புடையதாகும். அவர் வயதான தலைவர்களை புதிதாகத் உருவாக்கப்பட்ட மார்கதர்ஷக் மண்டலுக்கு (வழிகாட்டும் குழு) மாற்றினார்.

இந்து வாழ்க்கை முறையின் கலாச்சார குறியீடுகளின்படி, மூத்தவர்களை வெளியேற்றுதல் சமூகத்தில் குறைந்த எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கும் என வலதுசாரிகள் நம்புகிறார்கள். இது அதிக பயம் மற்றும் குறைந்த எதிர்ப்பிற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் உண்மையிலேயே எஞ்சியுள்ளன, சமூகம் மன்னிக்கும், மேலும் மிகைப்படுத்தல்களை இன்னும் எளிதாக மறந்துவிடக்கூடும் என்ற கணக்கீட்டுப் பட்டகத்தின் மூலம் இது காணப்படுகிறது.

அரசியல் அறமற்ற தன்மை

இளைஞர்களின் கைதுகள் சமுதாயத்தை தூண்டும் ஒரு எதிர்ப்பைக் கொண்டுவருகின்றன. மூத்தவர்களை சிறையில் அடைப்பது, வாழ்க்கையின் பொருளையும் நோக்கத்தையும் நம்மைப் சிந்தித்துப் பார்க்கச் செய்கிறது. நாம் அதை குறைவாகவே செயலுடன் தொடர்புபடுத்துகிறோம்.

இது அறமற்ற உணர்வைக் கொண்டுவருகிறது; மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மை மற்றும் துன்பத்தின் பயனற்ற தன்மையை நமக்கு நினைவூட்டுகிறது. “முக்தி பவன்” திரைப்படத்தில் நமக்கு நினைவூட்டுவது போல மற்ற உலக சந்தோசங்களுக்கான நேரத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது. உண்மையில், மத தத்துவத்தின் பெரும்பகுதிகளில், மரணம் என்பது மோட்சம், இது வெற்று உடலுக்கான ஒரு வகையான விடுதலையாகும், மேலும் இது வருத்தப்பட வேண்டிய ஒன்றல்ல, மிகக் குறைவான எதிர்ப்புக்குரியது.

படிக்க :
♦ பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
♦ கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !

பாதிக்கப்படக் கூடியதன்மையின் ஆழமான உணர்வோடு கூடிய தனிமையின் உணர்வையும் வயோதிகம் நமக்கு நினைவூட்டுகிறது. ஒருவரின் பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் கூட்டு நலனின் மகிழ்ச்சி குறித்து திட்டமிட நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், வீரமான செயல்பாட்டுக்கான விலை, உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல வயதான உடலுக்கான அடிப்படைத் தேவைகளையும் இழக்கக்கூடும் என்பதை திட்டமிடுவதன் அவசியத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இது உள்ளார்ந்த பாதுகாப்பின்மையை உருவாக்கும் உளவியலில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கக் கூடும்; மறைந்திருக்கும் மற்றும் இருள்கொண்ட நமது தன்மை குடிகொண்டிருக்கும் தளங்களை வலதுசாரிகள் கவனத்தோடு குறிவைக்கிறார்கள்.

இனவாத கலவரத்தின் போது விஷம் கலந்த பால் விற்கப்படுவதாக வதந்திகள் எவ்வாறு பரவுகின்றன என்பதை உளவியல் பகுப்பாளர் சுதிர் கக்கர் குறிப்பிடுகிறார். பால் ஒரு ஆதிகால தாய்வழி பாதுகாப்பின் அடையாளத்தைக் குறிக்கிறது. இது மறைந்திருக்கும் அச்சங்கள் மற்றும் பாதுகாப்பின்மை மற்றும் வன்முறைக்கான ஆதிகால உள்ளுணர்வைத் தூண்டும். மூத்தோர்களையும் வயதானவர்களையும் கொல்வதன் மூலமும் கைது செய்வதன் மூலமும்,  தனது சொந்த சமுதாயத்தின் மீது ஒரு உளவியல் போரை வலதுசாரிகள் இலக்காக கொண்டிருக்கிறார்கள்.

ஷாகின் பாகில் கூடிய தாதிக்களை அடையாளப்படுத்தும் பில்கிஸ் பானோ புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுவதற்கும் ஈர்க்கப்படுவதற்கும் இது ஒரு சக்திவாய்ந்த முரணாக உள்ளது. அவருடைய வயது, மகிழ்ச்சி அன்பு மற்றும் குறும்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது. இது மதம் மற்றும் இடத்தின் சமூக எல்லைகளை மீறுகிறது. டைம் பத்திரிகை 2020-ம் ஆண்டின் 100 ‘மிகவும் செல்வாக்கு மிக்க’ நபர்களின் பட்டியலில் அவரும் உள்ளார்.

வாழ்க்கை இயங்கியல் வழியாக நகர்கிறது, தற்போதைய ஆட்சி வயதின் அடிப்பகுதியைப் பார்க்கும்போது, ஷாகின் பாகின் மூத்தோர்கள் மார்க் ட்வைன் ஒருமுறை பிரபலமாக கூறியதை நமக்கு நினைவூட்டுகிறார்கள்: ‘வயது என்பது ஒரு விசயத்தை குறித்த மனதின் பிரச்சினையே. நீங்கள் கவலைப்படாவிட்டால், அது ஒரு பொருட்டல்ல. ‘ வயது வாழ்க்கையின் இலகுவான பக்கத்தைக் கொண்டு வருகிறது, மேலும் வாழ்க்கையை சந்தேகத்துடன் எடுத்துக் கொள்வதையும், ஒருவரின் உடனடி நலனிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக நிற்பதையும் நினைவூட்டுகிறது. இரட்சிப்பு மற்றும் சுதந்திரத்தின் இந்த வயதான வீரர்களின் வாழ்க்கையை கொண்டாடுவதோடு, தற்போதைய இழிந்த காட்சிகளை கூட்டு எதிர்ப்பு தலைகீழாகப் புரட்டிப் போட வேண்டும்.

அஜய் குடவர்த்தி

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: The Wire