தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு – 5-ன் (National Family Health Survey-5) ஒரு பகுதியாக, 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களுக்கான சுகாதார புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் என மொத்தமாகச் சேர்த்து மொத்தம் 22-இல் 13 மாநிலங்களில் குழந்தைகளுக்கான நீடித்த ஊட்டச்சத்து குறைபாடும் (stunting), 12 மாநிலங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும் 16 மாநிலங்களில் குறைவான எடை (underweight) பிரச்சினையும் அதிகரித்துள்ளன.

பெரும்பாலான மாநிலங்களில் குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்களிடையே இரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதை ஆய்வின் முதல் பகுதி கூறுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகே இரண்டாம் கட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு தொடங்கியிருப்பதால் சிக்கலின் பரிமாணம் இன்னும் கடுமையான அளவில் அதிகமாகவே இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையினாலும், ஏழை எளிய மக்களின் கூலி உயராமல், வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட நிலைமையில், தேவையான ஊட்டச்சத்தை பெரும்பாலான மக்களால் பெற முடியவில்லை என்பதைyஏ NFHS-5 முடிவுகள் காட்டுகின்றன. இதைதான் 2017-18-ல் வெளியான என்எஸ்ஓ (NSO) நுகர்வு செலவு அறிக்கையும் கூறியது. ஆனால் அந்த விவரங்களில் தரம் இல்லை என்று கூறி மோடி அரசாங்கம் அறிக்கையை நிராகரித்தது இங்கே கவனத்திற்குரியது.

படிக்க :
♦ ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !
♦ ’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்

அண்மையில், ஜீன் ட்ரீஸ், ஆஷிஷ் குப்தா உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. பொருளாதார மந்தநிலை குழந்தைகளின் உடல்நலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இப்படியான நெருக்கடியான காலத்தில், சிக்கல்களை குறைப்பதற்கு அரசாங்கம் என்னென்ன வழிமுறைகளை கையாண்டது, தன்னுடைய திட்டங்களை எப்படி பயன்படுத்தியது என்று பார்த்தால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது போல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலைமையையும், உடல் நலத்தையும் மென்மேலும் சீரழித்துள்ளது.

மோடியின் ஆரவாரமான போஷன் அபியான் :

ஜீன் ட்ரீஸ்

ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை 2030-க்குள் நீடித்த வளர்ச்சியடைய சில குறிக்கோள்களை முன்மொழிந்துள்ளது. உலகில் பல்வேறு நாடுகள் அந்த குறிக்கோள்களை செயல்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை ஏட்டளவில் அறிவித்திருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக, 2018-ல் , ‘ஊட்டச்சத்து குறைபாடில்லாத இந்தியாவை” உருவாக்குவதாய் கூறிக்கொண்டு – ஆரவாரமாக தொடங்கிய தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ”போஷன் அபியான் (Poshan Abhiyaan)” என்று மோடி பெயர் சூட்டினார். ஆனால் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கு இந்த திட்டம் ஒன்றும் செய்யவில்லை. வெற்று முழக்கத்தைத் தவிர இவற்றை செயல்படுத்துவதில் உள்ள கட்டமைப்பு சிக்கல்கள் அப்படியே தொடருகின்றன.

சான்றாக, 2017-18க்கும் 2019-20க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட 4,286 கோடி ரூபாயில் வெறுமனே 1,576 கோடி மட்டுமே 2019, டிசம்பர் வரை செலவிடப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளின் (Integrated Child Development Services) கீழ் 30 விழுக்காடு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்பதையும் இங்கே ஒப்பு நோக்கத் தேவையாக இருக்கிறது.

நிதி குறைப்பாட்டினால் சாகடிக்கப்படும் நலத்திட்டங்கள்:

இந்த 5 ஆண்டு காலக்கட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் சுகாதார மேம்பாட்டு சேவையில் (ICDS) எந்த முன்னேற்றமும் இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மோசமான உள்கட்டமைப்பு, நிதி பற்றாக்குறையினால், கூடுதல் ஊட்டச்சத்து திட்டத்தில் (Supplementary Nutrition Programme) ஏற்பட்டுள்ள தரக்குறைபாடு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்த ஊதியம், கூடுதல் அங்கன்வாடி ஊழியர்கள் தேவை, அங்கன்வாடி மையங்களை குழந்தைகள் காப்பகங்களாக (creches) மாற்றுவதன் மூலம் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் பால் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட ICDS-ல் உள்ள பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து பலரும் எழுப்பியே வந்துள்ளனர்.

அதே நேரத்தில், ICDS-ற்கான நிதியாதரமும் தொடர்ந்து பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. 2019-20 நிதி ஆண்டிற்கு இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் துணை ஊட்டச்சத்து திட்டத்திற்காக வெறுமனே 44 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டள்ளது. மேலும், 2017 மார்ச் மாதம் மற்றும் 2019 ஜூன் மாதத்திற்கும் இடையில், பாதிக்கும் குறைவான குழந்தைகளுக்கே இத்திட்டம் சென்றடைந்திருக்கிறது.

படிக்க :
♦ டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

2005-06 லிருந்து 205-16 வரையில் ஊட்டச்சத்து குறைபாடு 48 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக குறைந்தது. ஒப்பீட்டளவில் சிறிய மாற்றமாக இது இருந்தாலும், கடைசி 5 ஆண்டுகள் இந்த வளர்ச்சி சறுக்கியிருக்கிறது.

மொத்தமாக பார்க்கும் போது, கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய குடும்பங்களின் ஊட்டச்சத்து பறறாக்குறை அதிகரித்திருப்பதுடன், ஏழைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது கண்கூடு. கழிப்பறை வசதி , நோய் தடுப்பு மருந்து போடுதல், பெண்களுக்கான வங்கிக் கணக்கு போன்ற சிலவற்றில் முன்னேற்றம் இருப்பது போலத் தோன்றினாலும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான செயல்பாடுகளின் சறுக்கல்கள் இந்த முன்னேற்றத்தையும் சேர்த்தே பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன.

ஒருபுறம் ஏழை-பணக்காரன் வேறுபாடு கடுமையாக அதிகரிப்பது மறுபுறம் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படையான திட்டங்களுக்கான நிதியாதாரத்தை வெட்டுவது. ஒருபுறம் “நீடித்த வளர்ச்சி 2030”-க்காக சில திட்டங்களுக்கு பெயர் இடுவது மறுபுறம் அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது. ஒருபுறம் உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்பது மறுபுறம் கால் வயிற்றுக்கஞ்சிக்காவது வழிகோலும் உழவுத்தொழிலை தனியார் பெருமுதலைகளுக்கு வளைத்து விடுவது – இதெல்லாம் சாமானியர்களின் வாழ்க்கையை உயர்த்தவா? இல்லை கார்ப்பரேட்டுகளின் வாழ்க்கையை உயர்த்தவா? என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.

சுரேஷ்
நன்றி : The Wire