09-01-2021

பத்திரிகை செய்தி:

வலது திசை விலகலில் இருந்து
கட்சியை மீட்டெடுப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே !

தமிழகத்தின் முன்னணி அரசியல் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும், புரட்சிகர மார்க்சிய லெனினிய குழுவாகிய, மாநில அமைப்புக் கமிட்டி, .பொ..(மாலெ), தமிழ்நாடு – (SOC – CPI (M-L), Tamilnadu) – ஆகிய எங்களது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் கடந்த அக்டோபர்-2019-ல் சில அமைப்புப் பிரச்சினைகளை எழுப்பினர். இது தொடர்பாக, அமைப்புக்குள் உட்கட்சி விவாதம் நடத்தி தீர்ப்பதற்குத் தலைமைக் குழு தயாராக இருந்தது.

அந்தச் சூழலில், எமது மக்கள் திரள் அமைப்புகளின் தலைமையில் கார்ப்பரேட்காவி பாசிசத்திற்கு எதிராக ஓர் எழுச்சிகரமான மாநாடு நடந்தேறிய மறுநாளே, அவ்விருவரும் மா...வின் மீது அவதூறுகளையும், இழிவான தாக்குதல்களையும், பல வடிகட்டிய பொய்களையும் வாரியிறைத்து, கட்சியில் இருந்து வெளியேறுவதாக எமது இணைய தளத்திலேயே விலகல் அறிக்கை (24.02.2020) வெளியிட்டு, அமைப்பின் மீது ஓர் அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இந்தத் தாக்குதல் எமக்கும் எமது தோழர்கள் மற்றும் அமைப்பின் ஆதரவாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. மாநாட்டின் வெற்றியைச் சீர்குலைத்தது.

இவ்விருவர் தொடுத்த திடீர்த் தாக்குதலைத் தொடர்ந்து, அமைப்புக்குள் இருந்த அக்கும்பலுக்கு ஆதரவான சிலரின் நெருக்கடி காரணமாகவும், மா...வில் மறைந்திருந்த ஒரு மா... உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினரின் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாகவும், அமைப்பில் இருந்து வெளியேறுவதாக பொதுவெளியில் அறிவித்த அவ்விருவர் மா... மீது வைத்திருந்த விமர்சனத்தை நாங்கள் ஏற்கவில்லை எனினும், அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து, மா... தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

மா...வில் இருந்து வெளியேறிய அவ்விருவரும் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டும், உட்கட்சி விவாதத்தை நடத்தி, புதிய மா...வைத் தேர்வு செய்வதற்கான பிளீனத்தை நடத்த ஓர் இடைக்காலக் கமிட்டி (.கா..) தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர், மா...-வில் மறைந்திருந்த ஓர் உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினர் ஆகியோர் இணைந்து மா...வில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து மேலும் நெருக்கடி கொடுத்தனர். மா...விற்கு எதிராக, பல்வேறு சதி நடவடிக்கைகள் மூலமாக அணிகளின் மத்தியில் அவதூறு பிரச்சாரங்களை செய்ததன் மூலமும், அமைப்பு முறைகளை மீறி பலவாறாக கோஷ்டிகளைக் கட்டியும், தலைமையைக் கைப்பற்ற இவர்கள் முயற்சித்தனர். இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்து, அமைப்பு பிளவுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சந்தர்ப்பவாதமாக அணுகி வந்த மா.., பின்னர் இ.கா.. மற்றும் மா...வில் மறைந்திருந்த துரோகக் கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றியது.

இதனைத் தொடர்ந்து, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பல், தங்களுக்கு விசுவாசமாக வளர்த்து வைத்திருந்த சிலரையும் இணைத்துக் கொண்டு, மா...வுடனும் மாவட்ட பொறுப்பாளர்களுடனும் முரண்பட்டிருந்த தோழர்களிடம் அவதூறு பிரச்சாரங்களை செய்து தங்களுடன் இணைத்துக் கொண்டு தாங்கள்தான் மா... என்று தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டனர். இதன் மூலம் மா...வைப் பிளவுபடுத்தியுள்ளனர். இதன் காரணமாக, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றிய போது, அணிகளில் கணிசமானோர் அவர்களின் பின்னால் சென்றுள்ளனர்.

அமைப்பில் இருந்து வெளியேறியதாக பொதுவெளியில் அறிவித்திருந்த இருவரும், இந்தப் பிளவுவாத கும்பல்களின் சூத்திரதாரிகளாக பின்னணியில் இருந்து இயக்கி வந்துள்ளனர். மொத்தத்தில், இந்தக் கும்பல், தாராளவாத சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடி நிலைக்குச் சென்று, கேடுகெட்டு, சீரழிந்து போய், அமைப்பை பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது; பாட்டாளி வர்க்கக் கட்சியை ஒரு தாராளவாத பிரச்சார அரங்கமாக மாற்ற முயற்சித்துள்ளது.

இந்நிலையில், கட்சி பிளவுபட்டதற்கான காரணங்களான அமைப்பின் அகநிலையில் இருந்த தவறுகளைப் பரிசீலித்து புதிய தலைமையைத் தேர்வு செய்யும் பொருட்டு எமது அமைப்பின் 10-வது பிளீனம் ஜனவரி 01 முதல் 03-ம் தேதி வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பிளீனம் மனந்திறந்த வகையில் பிரச்சினைகளை விரிவாகவும் ஆழமாகவும் பரிசீலித்தது.

கட்சியில் நிலவும் அகநிலைத் தவறுகளின் பொதுத்தன்மையைத் தொகுத்துப் பார்த்து, அமைப்பு வலது திசைவிலகல் அடைந்திருப்பதுதான் பிளவிற்குக் காரணம் என்பதைப் இப்பிளீனம் உணர்ந்தது. அந்த வகையில் வலது திசை விலகலை கீழ்க்கண்ட வகையில் வரையறுத்துள்ளது.

1992-க்குப் பின்னர், எமது அமைப்பினுடைய பொதுத்திசை வழியின் முக்கிய அம்சமான போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற மூல முழக்கங்களைக் கைவிட்டு, செயல்தந்திர அரசியலை மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும் ஒரு தன்னெழுச்சி அரசியல் வழியை மா... நடைமுறைப்படுத்தியது. தொடக்கத்தில் சில கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் பாதை, 1997-இல் மேலும் திசை திரும்பி, வெறும் பிரச்சாரங்களை மையப்படுத்தியதாக மாறியது.

2015-இல் முன்வைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம், அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்க அரசியலின் ஒருசில கூறுகளை உள்ளடக்கியதாகவும், சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன்வைக்காமலும் அமைந்திருந்தது. இது கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வு குன்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

மேலும், அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்து வரத்தொடங்கியது.

கடந்த 25 ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட இந்தத் தன்னெழுச்சி வகைப்பட்ட பிரச்சார வேலைப்பாணியாலும், செயல்தந்திரத்தை முன்னெடுத்துச் சென்றதில் நடந்த மேற்கண்ட தவறுகள் காரணமாகவும், எமது மக்கள்திரள் அரங்கின் பிரபலத் தலைவர்களும், குட்டி முதலாளித்துவப் படிப்பாளிப் பிரிவினரும் கட்சி அமைப்பு முறைகளை மீறிய, கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட தனிச்சிறப்பான சலுகைகள் பெறும் நிலை உருவானது.

இவர்களைக் கையாளும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகள் வளர்ந்து மாநில அமைப்புக் கமிட்டியை விசாரிக்கும் விசாரணைக்குழு அமைத்தல், மாநில அமைப்புக் கமிட்டியைக் கண்காணிக்கும் கமிட்டி என்று பொருள்படும்படியான ‘ஆலோசனைக்குழு’ அமைத்தல் போன்ற கலைப்புவாத அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டுவரும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்வதாக ஏற்றுக் கொண்டிருந்த மா..., கடந்த 8 ஆண்டுகளாக, மூன்றுமுறை அவகாசம் கேட்டும் ஆய்வை முடிக்காததாலும், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய செயல்தந்திர அரசியலை வகுத்து முன்வைப்பதாகச் சொல்லி, அதுவும் நிறைவேறாமல் இருந்ததாலும், முன்னணியாளர்கள் மத்தியில் அதிருப்தியும் சோர்வும் நிலவியது.

இதேவேளையில், 1993-க்குப் பிறகான மாநில அமைப்புக் கமிட்டிகள், உரிய காலத்தில் பிளீனத்தை நடத்தாமல் அதிகமான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது, ஆண்டறிக்கைகளை முன்வைத்து, தன்னைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இருந்தது, பிளீனங்களில் நடைமுறைக்கு சாத்தியமற்ற சில முக்கியமான தீர்வுகளை முன்வைத்ததால், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது போன்ற காரணங்களால் அணிகளின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.

அதேவேளையில், அமைப்பை வழிநடத்திச் செல்வதில் அதிகாரத்துவ, அனுபவவாத, குறுங்குழுவாதத் தவறுகள் மற்றும் இவற்றின் காரணமாக, அணிகளுக்கும் தலைமைக்குமான இடைவெளி மிக அதிகமாக வளர்ந்திருந்தது என்பதை இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது.

மேலும், அமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளுவதில் மா..க இழைத்துள்ள பல தவறுகள் பக்குவமின்மை என்ற வகையைச் சேர்ந்தவை என்பதையும், அமைப்பின் பல்வேறு மட்டங்களில் பக்குவமின்மை வளர்ந்துள்ளதையும் இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இவையும் மா... மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

அமைப்பு விரிவடைந்த அளவுக்குப் போதுமான, தகுதியான இரண்டாம் தலைவர்கள் அனைத்து அரங்குகளிலும் இல்லாததாலும், குறிப்பாக, கீழ்மட்ட அணிகளைச் சோதித்து வழிகாட்டி இயக்கும் வேலையறிக்கை பரிசீலனை முறையை மா... படிப்படியாகக் கைவிட்டிருந்ததாலும், அமைப்பின் கீழ்மட்டங்களில் பல்வேறு தாராளவாத, சந்தர்ப்பவாத, குட்டி முதலாளித்துவக் கலாச்சாரம் பரவியிருந்தது.

மேற்கண்ட இந்தச் சூழலைத்தான் வலது திசைவிலகல் என்று பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த வலது திசைவிலகலைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டுதான், ஒரு தாராளவாதக் கட்சியாக அமைப்பை மாற்றுவதற்கு இந்தச் சதிகார கும்பல் முயற்சித்து, கட்சியைப் பிளவுப்படுத்தியுள்ளது என்பதை பிளீனம் உணர்ந்துள்ளது.

இதே வேளையில், மா... .பொ.. (மாலெ), தமிழ்நாடு ஆகிய எங்களது அமைப்பு, இந்த வலது சந்தர்ப்பவாத தாராளவாத சீர்குலைவுவாத கலைப்புவாத சக்திகளுக்கு கடுகளவும் அடிபணிந்து செல்லாத, புரட்சிகர அடிப்படைக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்ததால்தான் கலைப்புவாதத்திற்குப் பலியாகாமல் கட்சி ஐக்கியத்தைக் கட்டிக்காத்து பிளீனத்தை நடத்தியுள்ளது.

குறிப்பாக, மாநில அமைப்புக் கமிட்டியாகிய எங்களது அமைப்பு, நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிறது; மார்க்சியலெனினியமாசேதுங் சிந்தனை என்னும் சித்தாந்த அடிப்படையை உயர்த்திப் பிடிக்கிறது; எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான லெனினியக் கட்சி அமைப்பு முறையை உயர்த்திப் பிடிக்கிறது; இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கான திட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது; நாடாளுமன்ற சமரசப் பாதையை நிராகரித்து புரட்சியை நடத்துவதற்கான மக்கள்திரள் வழியை உயர்த்திப் பிடிக்கிறது ஆகிய அடிப்படை அம்சங்களில் ஊன்றி நின்றதால்தான், இந்தச் சதிகார கும்பலால் கட்சியின் தலைமையை முழுமையாகக் கைப்பற்ற இயலவில்லை என்றும், அதனால்தான் இச்சீர்குலைவு கும்பல் கட்சியைப் பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் இறங்கியது என்றும் உணர்கிறோம்.

இந்தச் சூழலில், 25 ஆண்டுகளாக நிகழ்ந்த வலது திசை விலகலுக்குப் பொறுப்பேற்று அணிகளிடம் மா... சுயவிமர்சனமாக முன்வந்துள்ளது. குறிப்பாக, மா... செயலரின் தவறுகள் இந்த திசைவிலகலில் முக்கியப் பங்காற்றியதையும் இந்தப் பிளீனம் விமர்சனமாக முன்வைத்தது. வலது திசைவிலகலின் பல்வேறு கூறுகளைக் கூர்மையாக, விரிவாக, ஆழமாகப் பரீசிலித்து அணிகள் மத்தியில் தன்னையும் மொத்த அமைப்பையும் விரிவான சுயபரிசீலனைக்கு மா... உட்படுத்தியது.

பிளீனத்தின் கூட்டத்தில் பல சுற்றுக்கள் நடந்த வாதப்பிரதிவாதங்களில், கட்சியின் அணிகள் ஜனநாயக பூர்வமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர், தலைமையில் தவறுகளைக் கூர்மையாக விமர்சித்தனர். கலைப்புவாதத்திற்கு பலியாகி, அது தவறு என்று உணர்ந்து பின்னர் மா...வின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணிகளில் சிலர் தங்களது சுயவிமர்சனம் ஏற்றனர்.

தங்களது பகுதிகளில் இக்கலைப்புவாதிகளை அண்டாமல் சில மாவட்டப் பகுதி தோழர்கள் அமைப்பைக் கட்டிக்காத்துள்ளனர். சில மாவட்டப் பகுதிகளில் வழிகாட்டி இயக்குவதற்கான பொறுப்பாளர்கள் இல்லாத நிலையிலும், சில அணிகள் தமது சொந்த அனுபவத்தின் ஊடாகப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, சீர்குலைவுவாதிகளை முறியடித்து, மா...வின் தலைமையை உறுதிப்படுத்தியுள்ளதை இந்தப் பிளீனம் அங்கீகரித்து அத்தோழர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தத்தில், கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தாலும், சதிகாரக் கும்பல் வெளியேற்றப்பட்டது ஒரு நல்நிகழ்வே என்றும், இதன் மூலம் வேண்டாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு கட்சியானது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இப்பிளீனம் உறுதிபடத் தீர்மானித்துள்ளது. கட்சியின் பிளவுக்கான காரணம் வலது திசைவிலகல் என்று அடையாளம் கண்டிருப்பதும், அதனைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறைகளை இந்தப் பிளீனம் முன்வைத்திருப்பதும், மொத்த அமைப்பிற்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

கட்சியில் ஏற்பட்டுள்ள வலது திசைவிலகலை முறியடித்து எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டியமைப்பது, போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற பொதுத் திசைவழியின் மூல முழக்கத்தை உறுதியாக அமல்படுத்துவது; கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது, கட்சியை மக்களுடன் இணைப்பது; கட்சியின் அனைத்து மட்டங்களிலும் மார்க்சிய லெனினிய சித்தாந்த மட்டத்தை உயர்த்துவது; இந்திய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் குறித்த ஆய்வினை முடிப்பது ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியும் அக்கறையும் கொண்ட ஒரு புதிய மாநில அமைப்புக் கமிட்டியை இந்தப் பிளீனம் தேர்வு செய்தது.

மா.., .பொ..(மாலெ), தமிழ்நாடு ஆகிய எமது அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவை முறியடித்து, கட்சி ஐக்கியத்தைப் பாதுகாத்து, வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுக்கும் வகையில் நடந்து முடிந்துள்ள இந்தப் பிளீனம், எமது அமைப்புக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள புரட்சிகர மாலெ இயக்க வரலாற்றிலும் முக்கியமான திருப்பு முனையாகும். திரிபுவாத, சந்தர்ப்பவாத, கலைப்புவாத, பிளவுவாத, சதிகார, எதிர்ப்புரட்சி கும்பல்களை புதைகுழிக்குத் தள்ளும் மரண அடியாகும்!

♠ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுப்போம் !
♠ கலைப்புவாதம் – பிளவுவாதம் – சீர்குலைவுவாதம் தாராளவாதம் சந்தர்ப்பவாதம் அதிகாரத்துவம் சமரசவாதம் அனுபவவாதம் குறுங்குழுவாதத்தை முறியடிப்போம் !
புரட்சிகர மக்கள்திரள் வழியில் கட்சியின் திசைவழியை உறுதி செய்வோம்
!
எஃகுறுதிமிக்க போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்போம்
!
மார்க்சிய
லெனினியமாசேதுங் சிந்தனையையும், நக்சல்பாரி பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம் !

*****

எமது தொழிற்சங்க அரங்கின் பொதுச்செயலாளராக இருந்தவரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த எமது விளக்கம் மற்றும் சுயவிமர்சனம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

எமது தொழிற்சங்க அரங்கின் செயலாளராக இருந்த சுப.தங்கராசு என்பவர், பெல் நிறுவனத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தரும் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த வீட்டுமனை வாங்கும் விசயத்தில் அவர் ஊழல் செய்வதாக கடந்த அக்டோபர்-2019-ல் கட்சித் தலைமைக்கு புகார் வந்தது. புகார் கிடைக்கப்பெற்ற உடனே, தொழிற்சங்க தலைமைக்குழு மூலமாக இது குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்தோம். அவர்களும் விசாரணைக்குழு அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையும் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையில் ஊழல் மட்டுமல்லாமல் அனாதீன நிலத்தை வாங்கியதும் தெரிய வந்தது.

மா...வில் இருந்து இருவர் வெளியேறியிருந்த சூழலில், அது தொடர்பான வேலைகள், மக்கள் திரள் அரங்கின் மாநாட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஊழல் பிரச்சினை தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை மீது மா..க கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. புறநிலையாக பல்வேறு காரணங்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் இந்த அலட்சியம் நடந்தது.

இந்த நிலையில், 2020 ஜூலை 29-31 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்த ஊழல் குறித்த செய்தி வெளியானது. சமூக ஊடகங்களிலும் நூறு கோடி ஊழல் என்றும், இன்னும் பலவாறாக அவதூறாகவும் பலரும் எழுதினர். இதன் பின்னர், தொழிற்சங்கத் தலைமைக் குழுவானது தங்கராசுவை உடனடியாக இடைநீக்கம் செய்தது. முறைப்படியான நடவடிக்கைகளுக்குப் பின்னர், தங்கராசு தொழிற்சங்க அமைப்பில் இருந்தும் கட்சி அமைப்பில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.

தங்கராசு விவகாரத்தில் மா... முறையாகச் சோதித்தறியாமல் பாரிய தவறிழைத்துள்ளதை உணர்ந்து சுயவிமர்சனம் ஏற்றது. குறிப்பாக, அவரை நேரடியாக இயக்கிய மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் மா... செயலர் ஆகிய இருவரும், இப்பிரச்சனையில் சொசைட்டி அலுவலகம் மற்றும் வசதிகளை அமைப்பு ரீதியாக உபயோகப்படுத்திய பயன்பாட்டுவாதம், தங்கராசு உடனான சமரசமான சகவாழ்வில் இருந்த குட்டி முதலாளித்துவத் தன்மை, முறையாக சோதித்தறியாதது, தனிச்சலுகை அளித்து அவரை நடத்தியது போன்றவற்றை சுயவிமர்சனமாக ஏற்றதை கடந்த 2021 ஜனவரி 1-3 தேதிகளில் நடந்த எமது அமைப்பின் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டது.

மேலும், தங்கராசு மீது ஊழல் புகார் வந்தவுடன், விசாரணைக்குழு அமைப்பதில் மா.அ.க விரைந்து செயல்பட்டதை பிளீனம் அங்கீகரிக்கும் அதே வேளையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததற்கான சுயவிமர்சனத்தை பிளீனத்தின் ஆகப் பெரும்பான்மை ஏற்கவில்லை.

ஓர் மா..க உறுப்பினர் மற்றும் மா...வின் செயலர் ஆகிய இருவரையும் இந்த மா...வின் பொறுப்புக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் மா...வில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புதிய மா...வுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது என்றும், இத்தவறு நிகழ்ந்த காலத்தில் பொறுப்பில் இருந்த மற்ற மூன்று மா... தோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், இந்தப் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த ஊழல் பிரச்சினையானது, கட்சியின் வலது திசை விலகலின் ஓர் அங்கமாகவே உருவாகி, வளர்ந்து, வெளிப்பட்டுள்ளது என இந்தப் பிளீனம் பரிசீலித்து உணர்கிறது.

எமது அமைப்பில் 30-40 ஆண்டுக் காலமாகப் பணிபுரிந்து தலைமைக் குழுவிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு, அற்ப அமைப்புப் பிரச்சினைகளை முன்வைத்து அமைப்பிலிருந்து விலகுவதாக பொதுவெளியில் அறிவித்துவிட்டு ஓடிப்போன இரண்டு மா... உறுப்பினர்களும், மா...விலியே மறைந்திருந்து மா... வுக்கு நெருக்கடி கொடுத்துவிட்டு ஓடிப் போயுள்ள மேலும் இரண்டு மா... உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையை நன்கு அறிந்தவர்கள்தான்.

தங்கராசுவை முறையாக சோதித்தறியாமல் தாராளவாதமாக மா... நடந்துகொண்ட தவறில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது. ஆனால், தற்போது மா...மீது கேடாக அவதூறு பிரச்சாரம் செய்து தங்களை உத்தமர்களைப் போல காட்டிக் கொள்ளும் நயவஞ்சக கபட வேடதாரிகளாக இந்தக் கும்பலை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்று இந்தப் பிளீனம் அறைகூவல் விடுக்கிறது. தங்கராசுவுடன் சமரசமாக நடந்து கொண்டு கலைப்புவாத நடவடிக்கைகளால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறரையும் இந்தப் பிளீனம் வன்மையாக க் கண்டிக்கிறது.

இவர்கள் தவிர்த்த, இப்பிரச்சினையில் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடைய இப்பிரச்சினை குறித்து கண்டிக்காத பிற தோழர்கள் மீதும் பிளீனம் தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது. இந்த ஊழல் பிரச்சனையில் படிப்பினையாக, பிரபலமான முன்னணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைக் காட்டுவது, பயன்பாட்டுவாதம், தாராளவாதம், முறையாக சோதித்தறியாதது ஆகியவற்றுக்கெதிராக தோழர்கள் அனைவரும் அமைப்பு முழுவதும் விழிப்புணர்வுடன் இருந்து போராட வேண்டும். அமைப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நெறிமுறை மற்றும் கண்ணோட்டத்தில் ஊன்றி நின்று குறிப்பாக தலைமையாக செயல்படக்கூடிய தோழர்கள் செயல்பட வேண்டும் என்று பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக முடிவு செய்கிறது.

மா...வின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாக, சதிகாரகலைப்புவாதக் கும்பலின் அவதூறுகளுக்கு பலியாகியுள்ள, புரட்சியை நேசிக்கின்ற தோழர்களே!

கட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற சதியை அம்பலப்படுத்தியுள்ளோம். சதிகாரர்கள், கலைப்புவாதிகள், சீர்குலைவுவாதிகள் ஆகியோரின் தன்மையை வெளிக் கொணர்ந்துள்ளோம். தற்போது அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு கட்சி வலது திசைவிலகல் அடைந்திருப்பது அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என்று உணர்ந்துள்ளோம். இதில் இருந்து அமைப்பை மீட்டு சரியான மாலெ அடிப்படையிலான நமது மக்கள்திரள் வழியில் அமைப்பை நிலைநிறுத்த இந்தப் பிளீனம் உறுதி பூண்டுள்ளது. தவறுகளை அடையாளம் கண்டு சுயவிமர்சனத்துடன் திருத்திக் கொள்வதற்கான வழியைக் கண்டடைந்துள்ளது.

எனவே, நமது புரட்சிகரக் கட்சியின் அடிப்படையை, பாரம்பரியத்தினை உயர்த்திப் பிடித்து முன்னேறுவதற்கு, சீர்குலைவுவாதிகள் கலைப்புவாதிகளைப் புறக்கணித்துவிட்டு, மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வாருங்கள் என இந்தப் பிளீனத்தின் மூலமாக அழைக்கிறோம்!

எமது அமைப்புக்குப் பலவகையிலும் உதவி வந்துள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளே, எமது அமைப்பை நேசிக்கும் உழைக்கும் மக்களே,

எமது அமைப்பின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய சதிகாரர்கள் பிளவுவாதிகளை எமது அமைப்பிலிருந்து வெளியேற்றி, சரியான திசையில் நாங்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். எனவே, உங்களிடம் நிலவிய குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் கைவிட்டு எப்போதும் போல எங்களுக்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்! புரட்சியைச் சாதிக்கும் மகத்தான கடமையை நிறைவேற்ற எல்லா வகையிலும் எமக்கு உதவியாக நின்று தோள் கொடுப்பீர்கள் என்றும் நாங்கள் திடமாக நம்புகிறோம்!

புரட்சிகர வாழ்த்துகள்!