டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியை, “வன்முறையாக” சித்தரித்து அவர்களை ஜனநாயக விரோதிகளாகவும், தேசியக் கொடியை மதிக்காத ‘தேச துரோகிகளாகவும்’ காட்டியதன் மூலம் விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் ஆதரவை சீர்குலைக்க முயற்சித்தது. அதையே முகாந்திரமாக வைத்துக் கொண்டு தற்போது, சங்க பரிவாரக் கிரிமினல்கள் விவசாயிகள் அமைதியாகப் போராடும் இடத்தில் மோதலுக்காக திட்டமிட்டுக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் முதல், டெல்லி சிங்கு, திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராடும் இடங்களில் தகராறு செய்யும் நோக்கத்தோடே சங்க பரிவாரக் கிரிமினல் கும்பல்கள் களமிறக்கிவிடப்பட்டுள்ளன.

இன்று மதியம் சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் நுழைந்த இந்து சேனா எனும் சங்க பரிவாரக் கும்பல், அங்கிருக்கும் விவசாயிகளின் கூடாரங்களை அகற்றத் துவங்கியது. அதனை ஒட்டி விவசாயிகளுக்கும் சங்க பரிவாரக் கும்பலுக்கும் மோதல் துவங்கியிருக்கிறது.

படிக்க :
♦ வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

போலீசின் கட்டுப்பாட்டை மீறி விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் தண்ணீர் லாரி கூட உள்ளே நுழைய முடியாத நிலையில் ஒரு பெரும் கும்பல் உள்ளே அனுமதிக்கப்பட்டிருப்பது என்பது போலீசின் ஒப்புதலின்றி நடந்திருப்பதற்குச் சாத்தியமில்லை.

இன்று மதியம் சுமார் 1.45 மணிக்கு சிங்கு எல்லையிலுள்ள விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் இந்து சேனா கும்பல் நுழைந்துள்ளது. உள்ளூர் மக்கள் என்று தங்களை காட்டிக் கொண்ட இந்து சேனாவின் கொண்டையை பத்திரிகைகளும் ஊடகங்களும் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

முதலில் கையில் ஆயுதங்களின்றி நுழைந்த இந்து சேனா கும்பல், இரண்டாவது சுற்றில் ஆயுதங்களோடு நுழைந்து விவசாயிகளைத் தாக்கியுள்ளது. இந்தக் கும்பல் உள்ளே நுழைவதை அனுமதித்த போலீசு கிரிமினல் கும்பலும் தடியடி நடத்தி விவசாயிகளைத் தாக்கியிருக்கிறது. திக்ரி எல்லையிலும் முழுக்க முழுக்க படைகளைக் குவித்துள்ளது மோடி அரசு.

மேலும், காசியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று இரவு. காசியாபாத் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. காசியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் ஷங்கர் பாண்டே போராடும் விவசாயிகளிடம் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அல்லது அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்றும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.

காசியாபாத் எல்லையில் விவசாயிகள் தங்கியுள்ள இடத்தில் நேற்று இரவே பலமுறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில்  நூற்றுக்கணக்கான போலீசு துணை இராணுவப் படைகளை குவித்து வருகிறது யோகி அரசு. அதோடு விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் எழுதிய, சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுத்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
♦ தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

இது ஒருபுறமிருக்க, காசியாபாத்தின் காசிப்பூர் எல்லையில் இருந்து விவசாயிகளை விரட்டியடிக்க   யோகி அரசும், மோடி அரசும் செய்து வரும் சதியை அம்பலப்படுத்தி, அனைத்து உத்தரப் பிரதேச விவசாயிகளும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் திகாயத் விடுத்த அறைகூவலை அடுத்து, உத்தரப் பிரதேச விவசாயிகள் நேற்று இரவே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காசிப்பூர் எல்லைக்கு விரைந்துள்ளனர். மேலும் பலரும் தற்போது வரை காசிப்பூருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் .

மேலும், பாஜக கிரிமினல் கும்பல் இதற்கு முன்னர் கலவரம் நடத்திய முசாபர் நகரில் உழவர்களின் மகா பஞ்சயத்து கூட்டப்பட்டு, அங்கிருக்கும் விவசாயிகள் அனைவரும் திகாயத்தின் அறைகூவலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் யாரை இதுவரை தமது அடியாள் படையாக பயன்படுத்தி வந்ததோ அதே மக்கள் இன்று விவசாயிகள் எனும் வர்க்கமாய் ஒன்று திரண்டு  பாஜக கும்பலை எதிர்த்து நிற்கின்றனர்.

இந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாமல் இப்போராட்டக் களத்தில் இருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். விவசாயிகளை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தி அவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு.

அதற்காகவே வன்முறைக் கும்பல்களை களத்தில் இறக்கிவிட்டு, போலீசு காட்டுமிராண்டிக் கும்பலையும் முடுக்கி விட்டுள்ளது. விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுக்கக் காத்திருக்கும் சங்கப் பரிவாரக் கும்பலுக்கும், மோடி அரசுக்கும் எதிராக அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதோடு, இந்த வெறியாட்டத்தை பின் நின்று இயக்கிவரும் கார்ப்பரேட் முதலாளிகளை புறக்கணிப்பதுதான் மூன்று வேளாண் மசோதாக்களையும் பின்வாங்கச் செய்வதற்கான ஒரே வழிமுறை


கர்ணன்

செய்தி ஆதாரம்
: The Wire, Business-standard

2 மறுமொழிகள்

  1. தெளிவுபடுத்தும் ஆக்கம். திகாயத்/தானே? அவர் வடமாநிலங்களின் மக்கள் செல்வாக்கு மிக்க பிரபல விவசாயிகள் சங்கத் தலைவர்.

Leave a Reply to Thamilkanal R R பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க