எல்.கே.அத்வானியின் தலைமையில் நாடு முழுவதையும் மனித ரத்தத்தால் நனைத்த ஒரு ரதயாத்திரையை நடத்தி ஆட்சியை பிடித்த பாஜக போன்ற ஒரு கட்சி, விவசாயிகளின் அமைதியான டிராக்டர் பேரணி டெல்லியில் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியதை குற்றங்கூற முடியுமா?. அந்தப் பேரணியிலிருந்த சில உதிரிப் பிரிவினர் போலீசுடன் மோதியதும், செங்கோட்டை பகுதியில் நுழைந்ததும் உண்மைதான். அதே நேரத்தில், தேசிய கொடி எந்த இடத்திலும் யாராலும் கீழே இறக்கப்படவில்லை என்பதும், தேசியக் கொடிக் கம்பத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு கம்பத்தில்தான் விவசாயிகள் கொடி ஏற்றப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ரத யாத்திரையைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டவென்று  வெறித்தனமான ழுழக்கங்களுடன் கிளம்பிய கும்பல் (ஆர்.எஸ்.எஸ்., வி.இ.பரிஷத், பஜ்ரங் தள்….) பாபர் மசூதியை இடித்துத்  தரைமட்டமாக்கியது. இந்த இரண்டு யாத்திரைகளிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பரிசீலித்தால் எந்த யாத்திரை நாட்டுக்கு அதிக சேதத்தை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

படிக்க :
♦ மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

பாபரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட டிச. 6 1992-க்குப் பின்னர் நாடு முழுக்க பரவிய கலவரத்திற்கும் அதனால் கிட்டத்தட்ட 2000 பேர் கொல்லப்பட்டதற்கும் நேரடிக் காரணம் ரத யாத்திரையும், அது சென்ற வழியெங்கும் பரப்பிய வெறுப்புணர்வும்தான். அயோத்தியில் பாதுகாப்பு படைகளுக்கும் கரசேவகர்கள் என்ற பெயரில் இருந்த வி.இ.ப- வினருக்கும் முன்று நாட்கள் நீடித்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. பாபர் மசூதி தரை மட்டமாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி நடந்த அன்று அயோத்தியில் பஜனை செய்கிறோம் என்ற பெயரில்  கிட்டத்தட்ட 1,50,000 பேர் கூடியிருந்தனர்.

பாஜகவின் உயர்மட்டத்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரும் அந்த வரலாற்று இழிநிகழ்வின் சாட்சிகளாக இருந்தனர். அங்குதான் உமாபாரதியின் புகழ்பெற்ற “இன்னும் ஒரே தள்ளு மசூதியை கீழே தள்ளு” என்று முழக்கம்  கரசேவகர்களை வெறியூட்டியது.1998-1999 வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபோது அத்வானி துணை பிரதமராகவும் மற்ற இருவரும் அமைச்சர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.

26-01-2021-ல் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரே ஒருவர் மட்டுமே இறந்து போனார். 300 காவலர்கள் போராட்டக்காரர்களின் கல்வீச்சிலும் விவசாயிகளின் தடியடியாலும் காயமுற்றதாக அரசு தரப்பு செய்திகள் இருக்கின்றன. அன்றைக்கு டெல்லியில் 5000 டிராக்டர்களும் 1.5லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்களும் விவசாயிகளும் கூடியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் நடந்திருக்கும் சேதத்தின் மதிப்பு தெரியாவிட்டாலும் ரதயாத்திரையை விட மிக மிக குறைந்தபட்சமானதாக இருப்பதை பார்க்கலாம். உணரலாம்.

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியோடு பாஜக நடத்திய ரதயாத்திரையை ஒப்பிட்டுப் பாருங்கள்.

டிராக்டர் பேரணி நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? சுமார் 65 நாட்கள் அரியானா, உ.பி-ஐ ஒட்டிய டெல்லி எல்லைப் புறங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் அடுத்த கட்டமாகும். இந்தப் போராட்டம் எதற்காக? செப்படம்பர் 2020-ல் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலைக்கு சாவுமணி அடிப்பதோடு விவசாய தொழிலை முழுதுமாக கார்ப்பரேட் கைகளில் ஓப்படைக்கும் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டமாகும்.

விவசாயிகள் இந்தப் பிரச்சினையை இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக பார்த்தனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டும் கடுங்குளிர் தாங்கமுடியாமலும் சரியான மருத்துவ வசதி கிடைக்காமலும் சுமார் 70 பேர் இறந்து போனார்கள். மோடியும் அவரது அரசும் போராட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளக்கூட  அக்கறையில்லாமல் ஒரு எதிரியை அணுகும் முறையில் விவசாயிகளை அணுகியது.

அத்வானி நடத்திய ரதயாத்திரை எந்தவித மக்களின் பிரச்னைகளை முன்வைத்தோ பொருளாதார காரணங்களுக்காகவோ அல்லது நாட்டில் நிலவிய பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பசி, பட்டினிச் சாவுகள் குறித்த எதிர்ப்புணர்வோடோ நடத்தப்பட்டது அல்ல. அந்த யாத்திரை முழுதும் இவை சம்பந்தமான முழக்கங்கள் எங்கும் காணப்படவில்லை. காவிக்கொடிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன.

பின்னர் எதற்கு ரதயாத்திரை? வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு வேலைகளில் ஓபிசி மக்களுக்கு 27 சத இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் தங்களுக்கான ஓட்டு வங்கி சிதறிப் போய்விடுமோ என்ற பதட்டத்தில் இந்து ஓட்டு வங்கியை நிலை நிறுத்திக்கொள்ளும் ஒற்றை நோக்கத்துடன் நடத்தப்பட்டதே ரத யாத்திரையாகும்.

உயர்சாதியினருக்கு இந்த ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருந்தாலும் ஓபிசி பிரிவினரை எதிரிகளாக பார்க்கமுடியாத நிலையில் இந்து ஓட்டு வங்கியை நிலைநிறுத்த முஸ்லீம்களை எதிரிகளாக்க திட்டமிட்டுக் களமிறங்கியது. இந்த ரதயாத்திரை நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தோடும் மதப் பிரிவினரிடையே பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டும் வகையிலும் முஸ்லீம் மன்னர், ‘ராமர் பிறந்த இடத்தில்’ கோவிலை இடித்து மசூதி கட்டி விட்டதாகவும் அது ‘தேசிய அவமானம்’ என்ற பிரச்சாரங்கள் மூலமும் ரதயாத்திரை சென்ற வழியெங்கும் பாஜக தலைவர்களால் வெறியூட்டப்பட்டது.

ரதயாத்திரையின் இறுதிநோக்கமென்பது, பாபரின் படைத்தளபதியால் கட்டப்பட்ட, முகலாய அதிகாரத்தின் அடையாளமாக இருக்கும் பாபர் மசூதியைத் தரை மட்டமாக்குவதாகவே இருந்தது. இந்த ரதயாத்திரை முழுவதும் மதரீதியானதாக, வெளிப்படையாக சிறுபான்மை மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அவர்களை இழிவுபடுத்துவது மற்றும் தாக்குவது என்ற வகையிலும்தான் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

ஆனால் விவசாயிகள் போராட்டமோ ஒரு மதசார்பற்ற உழைக்கும் மக்களின் போராட்டமாகவே கடைசிவரை இருந்த்து. பேரணியில் இணைந்தவர்கள் சிலர் ‘நிசான் சாகிப்’ கொடியை ஏற்றிவிட்டதாலேயே இதை சிங் இனத்தவரின் போராட்டமாக சுருக்கி விடமுடியாது. இது அனைத்து விவசாயிகளின், உழைக்கும் மக்களின் போராட்டமாகவே கடைசிவரை நீடித்தது.

எந்த நிகழ்வென்றாலும் அடையாளத்தை தேடி அர்த்தம் கற்பிக்கும் பாஜக தங்களை எதிர்த்த போராட்டங்களை இந்துக்களுக்கு எதிரானது என்றும் ‘தேசவிரோத செயல்’ என்றும் முத்திரை குத்தி மடைமாற்றம் செய்து மக்களை ஏமாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகாவத் “இந்துக்கள் எப்போதும் தேசவிரோதிகளாகமாட்டார்கள்” என்று கூறியிருப்பது தேசவிரோத சிந்தனையெல்லாம் சிறுபான்மையினருக்கே உரியது என்ற கருத்தை வலிய இந்து மக்களிடம் திணித்து மதவெறியை ஊட்டி வெறுப்புணர்வை  வளர்க்கத்தான்.

விவசாயிகள் போராட்டம், நாட்டின் ஒட்டு மொத்த விவசாயத்தை நாசமாக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அதிகாரத் தோரணையில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் சட்டங்களை எதேச்சதிகாரமான முறையில் போட்டு எவ்வித விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் ஒரு அரசுக்கு எதிரான போராட்டமுமாகும்.

விவசாயிகளின் போராட்டமும் டிராக்டர் பேரணியும் நம்முன் ஒரு சமூக பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் ரத யாத்திரையோ அப்பாவி இந்துக்களிடம் மதவெறியை ஊட்டியது. மதம் சார்ந்த பிரச்சினைகள் மக்களை எப்படியிருந்தாலும் எதிரெதிராக பிளவுபடுத்தி நிறுத்திவிடும் என்பதைத்தான் நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

ஆனால் சமூக பிரச்னைகளோ மக்களை சாதி மதம் கடந்து ஓரணியில் நிற்க வைப்பவையாகும். இந்த அரசோ ஹிந்துத்வாவை அடிப்படையாக கொண்டது.எனவே பிரச்சினை என்று வந்தாலே அடையாள அரசியலைக் கொண்டு இந்துக்களுக்கும் மற்றவர்களுக்குமானதாக மாற்றி சமூக நோக்கத்தை சாகடித்து நீதி பற்றி கவலைப்படாமல் செயல்படும் அரசாக இருக்கிறது.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

மாரச் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மார்ச் 2020-ல் தொழிலாளர்கள் பிழைப்பு வாழ்வாதாரம் இழந்து தங்கள் வீட்டிற்கு ஆயிரக்கணக்கான மைல்களை நடந்தே கடந்து சென்றபோது போலீசாலும் அரசாங்கத்தாலும் சொல்லொணா துயரங்களை அடைந்தனர். மோடி அரசின் செயல்பாடு எந்தளவு மனித்தன்மையற்று இருந்த்து என்பதை நாம் ஒவ்வொருவரும் அப்போது உணர்ந்தோம்.

விவசாயிகள் போராட்டம், கடினமான பாதையில் பயணிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சியில், ஜனநாயகம் சொல்லளவில் கூட இல்லை என்பதையும் தேர்தல் வாக்குறுதிகள் என்பது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க ஒரு தந்திரம் மட்டுமே என்பதையும்,  உண்மையில் ஆட்சியாளர்களின் நோக்கம் ஒரு இந்துத்துவா பாசிசத்தை அரங்கேற்றுவதுதான் என்பதையும் விவசாயிகளின் போராட்டப் பாதை தெள்ளத்தெளிவாக மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


மூலக் கட்டுரை : ரவி ஜோஷி
தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : The Wire