ந்திய துணைக் கண்டத்தில் பார்ப்பன சனாதன கும்பல் உருவாக்கிய வர்ணாஸ்ரம கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட பண்டைய நிலவுடைமை சமூக அமைப்பு, தொழில் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தி சாதிப் படிநிலை அமைப்பை உருவாக்கியது.

ஆண்டாண்டு காலமாக பொதுப்புத்தியில் உறைந்து போயுள்ள சாதி மேலாதிக்க கருத்துக்களால் தலித் மக்கள் படும் இன்னல்கள் முடிவே இல்லாமல் இன்றளவும் தொடர்கின்றன.

சாதிப் படிநிலை அமைப்பில் எல்லா சாதியை சேர்ந்தவர்களும், அருந்ததியர்களை அடக்கி, ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தீண்டாமை என்ற கொடுங்கோன்மையின் முதன்மைக் சின்னங்களாக காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள் தூய்மை தொழிலாளர்கள்.

துப்புறவு தொழிலை செய்து கொண்டிருக்கும் தூய்மை தொழிலாளர்கள், உடலியல் மற்றும் உளவியல் அடிப்படையில் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். ஆனால் சமூக அளவில், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கூட அருந்ததியர்களை மிகக் கேவலமாக பார்ப்பதும், நடத்துவதுமே இன்றைய அவலநிலையாக காட்சியளிக்கிறது.

படிக்க :
♦ டெல்லி போராட்டம் : துவங்கியது சங்கிகளின் வெறியாட்டம் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

நாடு விடுதலை பெற்று 74 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதும், மனிதன் மலத்தை மனிதன் சுமக்கும், இந்த அநீதியை ஒழிப்பதற்கு எந்த உருப்படியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

1993-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலர் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பறை தடைச் சட்டம் (The Employment of Manual Scavengers and Construction of dry latrines(prohibition)Act, 1993) கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இன்றுவரையில், எந்த ஒரு மனிதனும் தீண்ட மறுக்கும் மனித மலத்தை தலையிலும், தோளிலும் சுமக்கும் அவலம் நீடிக்கிறது.

தேசிய கணக்கெடுப்பின்படி 18 மாநிலங்களில் 48 ஆயிரத்து 345 தூய்மைப் பணியாளர்கள், வலுக்கட்டாயமாக இதில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 29 ஆயிரத்து 923 பேர் கையால் மலம் அள்ளும் பணியை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு அத்தொழிலை செய்து வருவதாகத் தெரிவிக்கிறது தி இந்து ஆங்கில இணையதளம். ஒவ்வொரு 5 நாட்களுக்கும் ஒரு மலக்குழி மரணம் நடைபெறுகிறது. கடந்த 2019-ல் மட்டும் 110 பேர் இதில் மரணமடைந்துள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் சாக்கடை சுத்தம் செய்வதில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளிகள் 340 பேர் இறந்துள்ளனர். “வெற்றி நடை போடும் தமிழகம்” மலக்குழி மரணங்களில் அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

துப்புரவுத் தொழில் அடிப்படையில் சிலர் நிரந்தர ஊழியர்கள், பலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், மிகப் பலர் பதிலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆகப் பெரும்பான்மையான துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வருவாயோ, சலுகையோ, வசதி வாய்ப்புகள் கிடையாது.

கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியை கந்து வட்டிக்காரன் பிடுங்கிக் கொள்கிறான். எஞ்சியதை அரசாங்கம் டாஸ்மாக் மூலமாகப் பிடுங்கிக் கொள்கிறது. மலக்குழி மரணங்களைத் தாண்டியும், தூய்மை பணியாளர்களின் இறப்பு என்பதும் இயற்கையானது அல்ல; மனிதநேயமற்ற அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பு. மாநகராட்சியில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை நீக்குவதற்காக இன்றளவும், முடை நாற்றமெடுக்கும் சாக்கடைக்குள் மனிதனை இறக்கிவிட்டு வாயிலும், மூக்கிலும் கழிவு நீர் உட்புகும் நிலையில் சுத்தம் செய்யும் இழிநிலையை உடனடியாக தடுத்து நிறுத்த மிகப் பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

1993-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தடைச் சட்டத்தை, அரசு நிறுவனங்களான நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள், ரயில்வேதுறை , மாநகராட்சி நிர்வாகம் ஆகிய எந்த அரசு இயந்திரங்களும் முடியளவுக்கும் மதிப்பதில்லை. மாறாக, மனித மலத்தை மனிதனே அள்ளும் மனித குல விரோத நடைமுறையை செயல்படுத்தி வருகின்றன. துப்புரவு பணியாளர்களின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

மனித மலத்தை அள்ளி சுத்தப்படுத்தி, நாடு நகரங்களை கூட்டி சுத்தம் செய்து , பிணங்களை அப்புறப்படுத்தி, புதைத்து எரித்தும், நாட்டை கொடுமையான நோய்களிலிருந்து வருமுன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். இந்தத் தொழிலை செய்வதால் அவர்களது மனம் படும்பாட்டை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

துப்புரவு தொழிலாளர்கள் மனநிறைவாக உணவு உண்ணவும் முடியாது. தமது பணியில் கண்ட அசுத்தங்களும், அருவருப்பும் இவர்கள் மனக்கண் முன்னால் நிற்கும். கொடிய தொற்று நோய்களுக்கு ஆளாகி இவர்கள் குறைந்த வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார்கள். உடலும் மனமும் சோர்ந்து விட்ட நிலையில்  குடும்ப பராமரிப்பையும் சரிவர செய்ய முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த அவலமான வாழ்வு, பெரும்பாலான தொழிலாளர்களை குடிகாரர்களாக மாற்றிவிடுகிறது.

படிக்க :
♦ கடலூரில் மூன்று துப்புரவுத் தொழிலாளிகளைக் கொன்ற அரசு !
♦ சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !

தூய்மைப் பணியாளர்களின் பிரச்சனை பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, சாதி இந்துக்களின் மத்தியில் காலம் காலமாக பொதுப்புத்தியில் உறைந்து போயுள்ள உளவியல், சமூக அழுக்கு சார்ந்த பிரச்சினை அது. மலத்தையும், சாக்கடையையும் அகற்றி தூய்மைப்படுத்துவது தாழ்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்களது தலையெழுத்து என்ற எண்ணப் போக்கு சமூகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நாங்கள் எங்கே போக நாகரீகம் தேடி? என்பதுதான் தூய்மைப் பணியாளர்களின் வினா. மீளமுடியாத அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரவே முடியாதா என்ற விரக்தி நிறைந்த அவர்களது கேள்விகள் நம் முன்னே நிற்கிறது. எத்தனை தலைமுறைகளை இப்படியே விட்டுச் செல்வது?

துப்புரவு பணியாளர்களை பொருத்தவரை பணிப் பாதுகாப்பு பணிநிரந்தரம் என்பதெல்லாம் வெறும் கனவுதான். இந்த உழைக்கும் மக்கள் வாழ்வுரிமைக்குப் போராட ஆங்காங்கே சங்கங்கள் இருந்தாலும், இந்திய அளவில் பெருமளவிலான ஒருங்கிணைந்த போராட்டங்கள் நடத்தும் வகையிலான சங்கங்கள் எதுவும் இதுவரை இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்.

துப்புரவு பணியாளர்களின் இழிவுகளை துடைத்தெறிந்து, அவர்களது பணிப் பாதுகாப்பை நிலைநாட்டவும், உறுதி செய்யப்பட்ட உரிமைகளை வென்றெடுக்கவும், மலத்தில் புதைந்த மனித மாண்பை மீட்டெடுக்கவும், களம் காண வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் உள்ளது. விளிம்பு நிலை மனிதர்களின் விழியாக, எளிய மக்களின் குரலாக, விதியை நினைத்து விரக்தியில் வாழும் நம் சக மனிதர்களை நம்பிக்கையோடு அமைப்பாகத் திரட்டி, சகிக்க முடியாத இந்த சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம் !

இரணியன்

2 மறுமொழிகள்

  1. விண்வெளிக்கு பல ராக்கெட்டுகள் அனுப்பும் இந்தியாவில் மலம் அகற்றுவதற்கு நவீன கருவியோ ரோபோவோ இல்லை என்பதற்கு அடிப்படை இந்திய சாதி அமைப்பு தான் என்பதையும் இனைத்து சொல்லலாம்.அந்த கண்டுபிடிப்புகள் என்ன அவ்வளவு கஷ்டமா?

  2. கருவறையில் உரிமை கேட்கும் நாம் அதைவிட பன்மடங்கு பெரிய கொடூரமான கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல வாழ்வை முடிவுக்கு கொண்டுவாராமல் இருக்கிறோம். இந்தியாவின் பிரச்சனைகளின் உச்சமானது கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலம். அதை இடதுசாரிகள் கூட முதன்மை பிரச்சினையாகக் கொள்ளவில்லை எனும் தோழர் மதிமாறனின் விமர்சனம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என கருதுகிறேன். இதை வினவு தோழர்கள் கையில் எடுத்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. தோழர் திவ்யபாரதியின் “கக்கூஸ்” டாக்குமென்டரி படம் மனதை உலுக்குகிறது. தோழர் திருமாவளவன் இதுபற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அனைவரும் சேர்ந்து இயங்குவோம். இந்த அவலத்தை விரைவில் துடைத்தெறிவோம்..!

Leave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க