நூல் அறிமுகம்  –  இறுதிப் பகுதி  :  அமெரிக்க மக்களின் வரலாறு

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1
படிக்க : நூல அறிமுகம் – பாகம் 2

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 3

1850-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பி பர்ஸ் ” நமது எல்லையை தொடர்ந்து விஸ்தரிப்பது தீய செயல் என்ற கோழைத்தனவாதங்கள் நம்மை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்திவிட அனுமதிக்கமாட்டேன். செயலற்று தேங்கி மந்தமாகிக் கிடக்கும் ஆசியாவின் உடலுக்கு உயிரோட்டமுள்ள அசைவுகள் ஏற்படுத்துவது அமெரிக்காவின் கடமையாகும்.” என்ற புதிய கோட்பாட்டை அறிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானது; இதன் விளைவாக அமெரிக்க முதலாளிகளுக்கு வெளிச் சந்தை உடனடியாக தேவைப்பட்டது. உள்நாட்டு நெருக்கடிகளை தணிய வைப்பதற்கு வெளிநாட்டுப் போர்கள் தேவைப்பட்டன.

இன்றளவும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆக்கிரமிப்புச் செய்யத் தயாராக இருக்கும் அமெரிக்க கொள்கைகளின் துவக்கத்தை வரலாற்று பூர்வமாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். பொதுவான முதலாளித்துவத்தின் இலாபவெறியை பின்வருமாறு எடுத்துரைக்கிறார் மார்க்ஸ்.

இயற்கை வெற்றிடத்தை வெறுப்பது போல் மூலதனம் லாபமின்மையை வெறுக்கிறது.லாபம் 10 சதம் கிடைக்கும் என்றால் அது எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யும். லாபம் 20% கிடைக்கும் என்றால் அதன் ஆர்வம் தூண்டப்படும். 50 சதம் கிடைக்குமென்றால் வலிய திமிராய் நடந்து கொள்ளும். நூறு சதம் லாபம் கிடைக்கும் என்றால் எல்லா மனித விழுமியங்களை துவம்சம் செய்ய அது தயாராகி விடும். 300 சதம் கிடைக்கும் என்றால் குறுகுறுப்பு இல்லாமல் எத்தகைய குற்றத்தையும் அது செய்யும். (மூலதனம் – முதல் பாகம் – காரல் மார்க்ஸ்)

இலாப வெறி தலைக்கேறிய நிலையில் அமெரிக்க முதலாளித்துவம் ஆக்கிரமிப்புப் போர்களைத் துவக்கியது.

படிக்க :
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !
♦ படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

புதிய எல்லையை நோக்கி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்கள்

புதிய எல்லையை நோக்கி என்ற முழக்கத்தின் கீழ் அர்ஜென்டினா, நிகராகுவா, ஜப்பான், உருகுவே, சீனா, அங்கோலா என்று அமெரிக்காவின் லாபவெறி படையெடுப்புப் பட்டியல் நீண்டுகொண்டே சொல்கிறது. பிலிப்பைன்ஸை அமெரிக்கா கைப்பற்றி தனது அடிமை நாடாக கொண்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படும் வளம் கொழிக்கும் பூமி அமெரிக்காவில் எங்கும் கிடையாது. நெல், காப்பி, கரும்பு, தேங்காய், புகையிலை, சணல் அபரிமிதமாக விளையும் செழிப்பான பூமி அது. உலகம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கு தேவையான மரச் சாமான்களை பிலிப்பைன்ஸ் அளிக்கமுடியும். இயற்கை வளங்களைச் சூறையாட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா அடுத்தடுத்து நிகழ்த்தியது.

பல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் இரு நகரங்கள் மீது முதன்முதலாக அணுகுண்டு வீசி மிகப்பெரும் மனித குல நாசத்தை செய்தது. மூலதனத்தின் வெறியாட்டம் இன்றளவும் அடங்கவில்லை. இந்த வெறியாட்டத்தை வரலாற்றில் ஒரு குட்டி நாடு திருப்பியடித்து அதிரச் செய்து.

அசாத்தியமான வெற்றி – வியட்நாம் போர்

உலக வரலாற்றில் மிகவும் செல்வந்த நாடு ஒரு சக்திவாய்ந்த தேசம்; ஒரு சிறிய நாட்டின் புரட்சிகர இயக்கத்தை ஒடுக்குவதற்காக 1964-1972 ஆண்டுகளில் அணுகுண்டை தவிர மற்ற அனைத்து வகை கொடூரமான ராணுவ முறைகளைக் கையாண்டும், அதிகபட்ச கொலைவெறியோடு படுகொலைகளை நடத்தியும் வியட்நாமை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனால் ஹோ சி மின் தலைமையின் கீழ் வியட்நாம் மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீரமும் கொண்ட போராட்டத்தின் முன்பு நிற்க முடியாமல் தோல்வியுற்று பின்வாங்கியது.

உலகின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. குண்டுவெடிப்பின் போது ஒரு சிறுமி கதறிக் கொண்டு ஓடிவரும் புகைப்படம், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் ஆத்திரத்தை அமெரிக்காவிற்கு எதிராகக் கிளப்பியது. மேலும் வியட்நாம் மக்களின் உறுதியான எதிர்ப்புப் போரில் அமெரிக்க வீரர்கள் எக்கச்சக்கமாகப் பலியாகினர். இதன் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் ஏகாதிபத்தியவாதிகள் இதுவரை கண்டிராத யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். தங்களது சொந்த மண்ணிலே அமெரிக்க மேலாதிக்க வாதிகள் இத்தகைய எதிர்ப்புகளை சந்தித்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டு அதன் கோர முகத்தை அகில உலகம் கண்டு காரி உமிழ்ந்தது. இந்த வரலாற்று விவரங்கள் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனநாயகத்தின் துரோகத்தை பற்றி மக்களுக்கு யார் சொல்வார்கள் ? “ (Who will tell the people? Betrayal of American Democracy) என்ற நூலில் இது குறித்து வில்லியம் கிரயேடர் விரிவாக விளக்கியுள்ளார். சோவியத்து பூச்சாண்டியை காட்டி பயங்கரமான மிதமிஞ்சிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு ஏராளமான பணத்தை பாதுகாப்புத்துறைக்கு பாய விட்டது. அமெரிக்க வாழ்வில் இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆயுத ஏவுகணைகள் உடன் உருவாக்க 150 கோடி டாலர் செலவிடப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்த 150 கோடி டாலரை வைத்துக்கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு 5 ஆண்டுகால நோய்த்தடுப்பு திட்டத்திற்கு செலவு செய்திருந்தால் 50 லட்சம் மரணங்களை தடுத்திருக்க முடியும்.

ஈராக் மக்களின் அழுகுரல்

அமெரிக்கா வளைகுடா நாட்டின் எண்ணெய் வயல்களை, எண்ணெய் வர்த்தகத்தை கையகப்படுத்துவதற்காக அடாவடியாக ஈராக்கின் மீது போர் தொடுத்த வரலாற்று சூழ்நிலை இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் வீழ்ச்சியின் துவக்கமாக ஈராக் மக்களின் அழுகுரல் உலகமெங்கும் உரக்கக் கேட்கிறது. யுத்தத்திற்கு எதிராக மாணவர்கள், மனிதநேயம் உள்ள அமெரிக்க மக்கள் யுத்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல்கள், இந்த நூலின் வாயிலாக நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

“தேசபக்தி – பின்னே ஒளிந்திருக்கும் வர்க்க நலன் “

தேசபக்தி – தேச நலன் என்ற போர்வைக்குள் எவ்வாறு வர்க்க நலன் ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுகிறார். “யுத்தம் தொடுக்க வெகுசிலர் முடிவெடுக்கின்றனர். அந்த யுத்தத்தின் விளைவாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்படுதல் அல்லது ஊனமுறுதலில் எதேனும் தேசநலன் இருக்கிறதா? யாருடைய நலனுக்காக இதைச் செய்கிறோம்? என குடிமக்கள் கேட்கக் கூடாதா? வரலாற்றை கற்க தொடங்கியதும் என்னை ஒரு விஷயம் கடுமையாக பாதித்தது. விசுவாசம், உறுதி மொழிகள் மூலமும் தேசிய கீதங்கள் இசைத்தல், தேசிய கொடிகளை அசைத்தல் மூலமும், வாய்ச்சவடால் உரைகள் மூலமும் குழந்தைப் பருவத்திலேயே புதிய உத்வேகம் ஆழமாகப் பதிய வைக்கப்படுவது என்னை மிகவும் பாதித்தது. நமது மனங்களில் இருந்து எல்லைகளைத் துடைத்து எறிந்துவிட்டால் உலகமெங்கிலும் இருக்கும் குழந்தைகள் நமது குழந்தைகள் போன்றவர்களே!”

படிக்க :
♦ பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்

“ஒரு விரிந்த சிந்தனையை மேற்கொண்டு சிந்திக்கத் துவங்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கத் துவங்கினால், வியட்னாமில் ‘நாபாம்’ குண்டுகளை வீச மாட்டோம்; ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட மாட்டோம். எங்கும் யுத்தங்களை தொடங்க மாட்டோம். ஏனென்றால் யுத்தங்கள், நமது காலத்தின் யுத்தங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாகவே இருக்கின்றன” என்று அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிரான தனது மனிதநேயக் குரலை இந்நூலாசிரியர் அழுத்தமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பொய்களும் – புரட்டுகளும் – பேராசையும் – மமதையும் – அறியாமையும் – உணர்ச்சியற்ற குணமும் – சுயநலமும் – குரூரமும் – பழிவாங்குதலும் – அநீதியும் – லஞ்ச லாவண்யமும் – சுரண்டலும் நிரம்பிய காவியம் ஆகிவிட்டது அமெரிக்காவின் வரலாறு. அமெரிக்க செல்வச் செழிப்பு, வலிமை ஆகியவற்றுடன் மனித உணர்ச்சியற்ற தன்மை; சுயநலம் ஆகியவை இணைந்து இருப்பதுதான் மனிதகுல அனுபவத்தின் மிகப்பெரும் பேரழிவு ஆயுதம் (Weapon of Mass Destruction) என்பதை அமெரிக்கா அனுபவத்தின் மூலம் மனித குலம் கற்றுக் கொண்டுள்ளது.( புஷ்பா எம் பார்க்கவா இந்து நாளிதழ் 26-6-03)

அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி, “அடாவடி அரசுகள் உலக விவகாரங்களில் வன்முறையின் ஆளுமை” (Noam Chomsky – Rougue states-Rule of force in World affairs) என்ற விரிவான நூலை வெளியிட்டார். லட்சக்கணக்கான பழங்குடி மக்களை கொலை செய்தது; அவர்களது நிலங்களை திருடியது. லட்சோப லட்ச கருப்பின மக்களை ஆப்பிரிக்காவில் பிடித்துவந்து அடிமையாகி; ஈவிரக்கமில்லாமல் அவர்களது உழைப்பைச் சுரண்டியது; இனப்படுகொலை செய்தது. மனிதநேயமற்ற கொடூரங்கள் இவையே அமெரிக்காவின் அடித்தளம் என்பதை நோம் சோம்ஸ்கி இந்நூலில் நிறுவியுள்ளார். “அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கதிரவன் அஸ்தமித்து விடும். நிச்சயம் இது நடந்தே தீரும்; நோம் சோம்ஸ்கியின் இந்தநூல் நீடித்து நிலைக்கும்” என எழுத்தாளர் அருந்ததிராய் உறுதிபடக் கூறுகிறார்.

அமெரிக்காவைப் பற்றி இதுவரை வெளிவந்த நூல்களிலே முற்றிலும் மாறுபட்டதாக “அமெரிக்க மக்களின் வரலாறு” என்ற இந்த நூல் திகழ்கிறது. அமெரிக்க மக்களின் –  அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் – அமெரிக்க ஜனநாயக சக்திகளின் – போர்க்குணமிக்க போராட்ட மரபை புதிய கோணத்தில் இந்த நூல் நமக்கு விளக்குகிறது. சிறந்த வரலாற்று அறிஞரும் பேராசிரியருமான ஹாவார்ட் ஜின் அமெரிக்கா பற்றிய ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்கியுள்ளார்.

“ஆழ்ந்த தூக்கத்திற்கு பின் எழும்
சிங்கங்களை போல் எழுங்கள்!
வெல்லப்பட முடியாத எண்ணிக்கையில் எழுங்கள்!
உங்கள் விலங்குகளை தரையில் அடித்து பனித்துளி போல் உடையுங்கள்!
நீங்கள் தூங்கும்போது விலங்கிடப்பட்டவர்கள்!
நீங்கள் பலர்; அவர்களோ வெகு சிலர்.”

என்ற கவிஞர் ஷெல்லியின் கவிதை வரிகளோடு இந்த நூலை நிறைவு செய்துள்ளார் ஹாவாட் ஜின்.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசை எதிர்த்த போராட்டப் பேரலை அமெரிக்க மண்ணில் விரைவில் உருவாகும். அமெரிக்க உழைக்கும் மக்கள் சமத்துவ விடியலுக்கான போராட்ட திசைவழியில் வெற்றி பெறுவார்கள். இந்த சிறப்பான நூலை சிந்தன் புக்ஸ் நிறுவனத்தார் தமிழில் வெளியிட்டுள்ளனர்; இந்த அற்புதமான நூலை மொழியாக்கம் செய்த மாதவ் உள்ளிட்ட குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தியாவில் சமூக மாற்றத்திற்காக போராடும் சமத்துவ போராளிகள்; ஜனநாயக சக்திகள் இந்த நூலை படித்துப் பயன்பெற வேண்டும். மொழிபெயர்ப்பில் சில குறைகள் இருந்தாலும் இந்த நூல் நிகழ் காலத்தின் தேவைகளில் ஒன்றாகும்.

(முற்றும்)

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer