ஸ்புட்னிக்-வி (SPUTNIK – V) கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ரஷ்யா கண்டறிந்துள்ள தடுப்பூசி இந்தியாவில் அவசர காலப் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை நிபுணர்கள் நிறைந்த பரிந்துரைக்குழு பரிந்துரைத்துள்ளது. கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் வர இருக்கிறது.

உலகின் முதல் செயற்கைக் கோளை 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி விண்ணிற்கு ஏவி சாதனைப் படைத்தன சோவியத் ரஷ்ய ஒன்றிய நாடுகள். செயற்கைக் கோளின் பெயர் (ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை செலுத்த உதவிய விண்கலத்துக்குப் பெயர்) ஸ்புட்னிக். இந்தப் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகவும் உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி என்ற அடைமொழியுடன் “ஸ்புட்னிக்-V” 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று களமிறக்கப்பட்டது.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

எந்த மருத்துவ அறிவியல் ஏடுகளிலும் ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் நேரடியாக இவ்வாறு அறிவித்ததை அறிவியல் உலகம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகளை ( INTERIM ANALYSIS OF PHASE III CLINICAL TRIAL) வெளியிட்டால் அன்று இதைப் பற்றி பேசலாம் என்றே நான் நினைத்திருந்தேன். நான் நினைத்த அந்த நன்னாளும் வந்துவிட்டது.

லான்சட் எனும் பிரபலமான மருத்துவ இதழ், ஸ்புட்னிக் V தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகளை அலசி ஆராய்ந்து தனது இதழில் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் சாராம்சம் இதோ உங்களுக்காக…

Gam- Covid- Vac என்றும் ஸ்புட்னிக்-வி என்றும் அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலயா மருந்து கண்டறியும் நிறுவனமும் ரஷ்ய அரசின் நேரடி நிதி முதலீடும் (RUSSIAN DIRECT INVESTMENT FUND) இணைந்து உருவாக்கியுள்ளன. தடுப்பூசியின் “வெக்ட்டார்” (VECTOR) தொழில்நுட்பம் மனிதர்களிடையே தொற்றை ஏற்படுத்தாத அடினோ வைரஸ்களின் மரபணுக்களை நீக்கி விட்டு அவற்றுக்குள் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை உருவாக்கும் மரபணுக்களைப் புதைத்து உருவாக்கப்படுகின்றது.

இங்கு அடினோ வைரஸ் என்பது கொரோனா வைரஸின் மரபணுவை உடலுக்குள் செலுத்தப் பயன்படும் வாகனமாக மட்டுமே செயல்படும். உடலுக்குள் செலுத்தப்பட்டதும் அடினோ வைரஸ் உடைந்து உள்ளே இருக்கும் கொரோனா வைரஸ் மரபணு – ஸ்பைக் புரதங்களை உண்டாக்கும். அவற்றுக்கு எதிராக நமது உடல் அபரிமிதமான எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். கோவிஷீல்டு தடுப்பூசியும் இதே தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய வெக்டார் தடுப்பூசிகள் தடுப்பூசிகளிடம் இருந்து மாறுபடும் இடம்.

யாதெனில், இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாக போடப்படும் முதல் தவணையில் அடினோ 26 என்ற வகை வெக்ட்டார் செலுத்தப்படும். இரண்டாம் தவணையில் அடினோ 5 என்ற வகை வெக்ட்டார் செலுத்தப்படும் இதன் மூலம் மிக அதிகமான எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 20,000 நபர்களுக்கு மேல் பங்குபெறும் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகள் இதோ தடுப்பூசி பெறாத குழுவில் இருந்த 4902 பேரில் 62 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்ற குழுவில் இருந்த 14964 நபர்களுள் 16 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் கூடிய கோவிட் நோய் தடுக்கும் விகிதம் – 91.6% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் வழங்கப்பட்டு 18 நாட்களில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தீவிர கோவிட் நோய் தடுக்கும் திறன் 100% என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியில் ஸ்பெசாலிட்டியாக நான் காண்பது இந்த ஆய்வில் 60+ வயதுடையோர் 2144 பேர் பங்குபெற்றனர். அவர்களிடையே கோவிட் நோய் தடுக்கும் திறன் 91.8 % என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பான செய்தி. ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 25% பேர் பல தொற்றா நோய்களைக் கொண்டவர்கள் என்பதும் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. தடுப்பூசி பெற்றவர்களுள் சீரியசான பக்கவிளைவுகள் தோன்றவில்லை. தடுப்பூசி பெற்ற குழுவில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் அந்த மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த நபர்களுக்கு பல தொற்றா நோய்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி தற்போது அர்ஜென்டினா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளடக்கிய பதினைந்து நாடுகளில் ஏற்கனவே ஆய்விலும் மக்களுக்கு புழக்கத்திலும் உள்ளது.

படிக்க :
♦ பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ரஷ்யாவில் சில கோடி மக்களுக்கு மேல் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் 1600 பேர் கொண்டு மருத்துவ ஆய்வு நடந்து இதன் பாதுகாப்புத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து SUBJECT EXPERT COMMITTEE இந்த தடுப்பூசியை அவசர கால முன் அனுமதி வழங்க பரிந்துரைத்து விட்டது.

விரைவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும். நமது நாட்டின் குளிர் சங்கிலித்தொடரில் எளிதாக இந்த தடுப்பூசியைப் பராமரிக்க முடியும் என்பதாலும் 90%-க்கு மேல் 60+ வயதுடையோரிலும் நோயைத் தடுக்கும் என்பதால் கொரோனாவுக்கு எதிரானப் போரில் சிறப்பான அஸ்திரமாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.

disclaimer

2 மறுமொழிகள்

  1. அது ஸ்புட்னிக் ஐந்து அல்ல, ஸ்புட்னிக் வி.
    வேக்சின் என்பதன் சுருக்கம்.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க