இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
முதலாவது மாநாட்டின் 51-வது ஆண்டு நிறைவு !!

திரிபுவாதத்திற்கு எதிரான போராட்ட மரபை
தொடர்ந்து உயர்த்திப் பிடிப்போம் !

1970-ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் கொல்கத்தா – கார்டன் ரீச் பகுதியின் ரயில்வே காலனியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் அந்த மாநாடு  (பேராயம்) நடந்து கொண்டிருந்தது. அது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாடு.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 7-வது மாநாடு மார்க்சிஸ்ட் (CPM) கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் நவீன திரிவுவாதத்தைத் திரைகிழித்த நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து, உண்மையான புரட்சிகரக் கட்சியாக உதயமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), அதன் தொடர்ச்சியாக இந்த முதலாவது மாநாட்டை – அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாட்டை நடத்தியது.

படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

போலீசு அடக்குமுறை நிலவிய அன்றைய சூழலில் கம்யூனிசப் புரட்சியாளர்களான நக்சல்பாரிகள், போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரகசியமாக அணிதிரண்டு அந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் கீழ்த்தளப் பகுதியில் ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ 50 கட்சித் தோழர்கள் கூடி, போலியான ஒரு திருமண விழாவை நடத்திக் கொண்டிருக்க, மேல்மாடியில் கட்சியின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அது வெளியே கசியாதவண்ணம், கீழே ஒலிபெருக்கியில் திருமண விழாவையொட்டிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து 52 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போலீசு அடக்குமுறைச் சூழலின் காரணமாக 35 கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மே.வங்கம், ஆந்திரா, பீகார், பஞ்சாப், உ.பி, தமிழ்நாடு, ஒரிசா, காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 தோழர்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தோழர் சாரு மசும்தார் பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார். மத்தியக் கமிட்டியில் இருந்து 9 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு அமைக்க முடிவாகியது. தோழர்கள் சுஷிதல்ராய் சவுத்திரி, சரோஜ் தத்தா, சுரேன் போஸ் (இவர்கள் அனைவரும் மே.வங்கத்தைச் சேர்ந்தவர்கள்), சத்யநாராயண் சிங் (பீகார்), சிவகுமார் மிஸ்ரா (உ.பி), ஆர்.பி.ஷராப் (காஷ்மீர்), தோழர் அப்பு (தமிழ்நாடு) ஆகிய 7 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, மற்ற இரண்டு இடங்களும் இம்மாநாட்டில் பங்கேற்க இயலாத ஆந்திரத்தைச் சேர்ந்த தோழர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

★★★

நக்சல்பாரி – இந்தச் சொல் இன்றும்கூட நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையதளத்தில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நக்சல்பாரி –- மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் 53 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி இருந்தது. ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது.

“உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து, 1967-ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி விவசாயிகள் இந்தியப் புரட்சிக்கான போர்ப் பிரகடனத்தைச் செய்தார்கள். அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

இந்திய நாடாளுமன்ற அரசியலில் 1967-ஆம் ஆண்டு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சரானார். கூட்டணி அமைச்சரவையில் போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார். நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெற்று வாக்குறுதிகளை வாரி வழங்கினர், போலி கம்யூனிஸ்டுகள்.

மார்ச்–18, 1967-இல் சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதலும் விநியோகம் செய்யும் அதிகாரமும் விவசாயிகள் கமிட்டிகளுக்கே அளிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய வேண்டுமெனில், நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி வட்டச் செயலர் ஜங்கல் சந்தாலும், அன்றைய ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அறைகூவலை எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

சாரு மஜூம்தார்

‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலகக் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்களான சாரு மஜும்தார், கனு சன்யால், சுஷிதல் ராய் சவுத்திரி போன்ற தோழர்கள் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். ‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு, புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் அமைப்புகளையும் – இயக்கங்களையும் கட்டியமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல்வாதத் துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால், இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மூட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். எனவே, மாநாட்டு அறைகூவலை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டிகளும் தற்காப்புக்காக ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்களும் அமைக்கப்பட்டன.

மே மாதத்தில் நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வில்லும், அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் போலீசு நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக்கூட முடியாது என்ற நிலைமை 1967 மே மாதத்தில் உருவானது.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். பின்வாங்கிய போலீசு, 25-ஆம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரைச் சுட்டுக் கொன்றது; விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பைத் தோற்றுவித்தது. கட்சித் தலைமையானது, இறந்து போனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது. ஆனால், ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை இந்த முதலைக் கண்ணீரால் தடுக்க முடியவில்லை.

அஜய் முகர்ஜி

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை!” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்!” என்ற முழக்கங்களால் கொல்கத்தா நகரச் சுவர்களை அதிர வைத்தனர், கொல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள். ‘மார்க்சிஸ்டு’ கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” (நக்சல்பாரி கிருஷாக் சங்கராம் சகாயக் சமிதி) ஒன்றைக் கட்டி ஜூன் 27-ஆம் தேதியன்று சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் அப்போதைய மாநிலக்குழு உறுப்பினரான சுஷிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ, நாடெங்கும் ‘மார்க்சிஸ்டு’ கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது. நக்சல்பாரிகளையும் அதன் ஆதரவாளர்களையும் குறுங்குழுவாதிகள், வறட்டுவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமின்றி, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம்கூட போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால், அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முதல் காலடி” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ஆம் தேதி ஒலிபரப்பில் சித்தரித்த சோசலிச சீனத்தின் பீகிங் வானொலி, ‘மார்க்சிஸ்டு’களின் ஐக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

1967 ஜூலையில், நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கட்டியமைக்கத் தீர்மானித்தது.

இதற்கிடையே கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒரு அரசியல் – சித்தாந்தப் பத்திரிகையை நடத்தி, அதன் மூலம் புரட்சிகர வழியைப் பிரச்சாரம் செய்வதெனத் தீர்மானித்தனர். ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் வங்காள மொழி வார இதழான ”தேஷ் ஹிதாஷி”யின் ஆசிரியராக இருந்த சுஷிதல்ராய் சவுத்ரி, கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். அவரையும் சுனிதி குமார் கோஷ்-ஐயும் ஆசிரியர்களாகக் கொண்டு 1967 நவம்பர் 11 அன்று “லிபரேஷன்” என்ற ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது. வங்க மொழியில் “தேசப் பிரதி” என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. லிபரேஷன் இதழ் 2,500 பிரதிகளும், தேசப் பிரதி 40,000 பிரதிகளும் விற்பனையாகின. இவ்விரு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களை அரசியல் – சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநில கமிட்டிகளின் பெரும்பான்மையான தோழர்கள் வெளியேறினர். “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்!” என்ற அறைகூவல் எங்கும் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஒரிசா – எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்சிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

1967 நவம்பர் 12, 13 தேதிகளில் நாடு முழுவதுமுள்ள கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூடி, ஒருங்கிணைப்புக் குழுவை – ஒரு தற்காலிகக் கமிட்டியைக் கட்டியமைத்தனர். புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தனர்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

இந்த கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவானது, மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை வழிகாட்டும் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்வது, கம்யூனிசப் புரட்சியாளர்களை இந்தச் சித்தாந்த அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது, திரிபுவாதத்திற்கு எதிராக சமரசமற்றப் போராட்டத்தை நடத்துவது, புரட்சிகர போராட்டங்களை – குறிப்பாக நக்சல்பாரி பாணியிலான விவசாயிகளது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது – அத்தகைய போராட்டங்களுக்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கான கட்சித் திட்டத்தையும் செயல்தந்திர வழியையும் தயாரிப்பது – ஆகியவற்றைத் தனது கடமைகளாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து 1968 மே மாதத்தில் அதன் இரண்டாவது கூட்டம் – அதாவது, நக்சல்பாரி எழுச்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரானது, அனைத்து இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு (AICCCR)  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோழர் சுஷிதல்ராய் சவுத்திரி அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் கமிட்டியானது, நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தெழும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்றும் தனது முதல் பிரகடனத்தில் தீர்மானித்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழிநடத்துவதும் நமது கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்றுபட வேண்டும். மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்” என்ற அறைகூவலை அது விடுத்தது.

இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலைப் புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது – போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

இதற்கிடையே நக்சல்பாரி வழியிலான போராட்டங்கள் காட்டுத் தீயாக 1968-இல் பரவத் தொடங்கின. குறிப்பாக, சிறீகாகுளம் போராட்டம் மிகப் பெரிய எழுச்சியாக வளர்ந்தது. இந்நிலைமையில் அ.இ.க.பு.ஒ. குழுவானது பிப்ரவரி 8, 1969 அன்று கூடியது. அது, ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை தீர்மானமாக நிறைவேற்றியது.

அ.இ.க.பு.ஒ. குழுவின் விரிவாக்கப்பட்ட கூட்டம் 1969 ஏப்ரல் 19 முதல் 22 வரை நடந்தது. அதில், தோழர் லெனினுடைய 100-வது பிறந்த நாளில் இந்தியாவில் ஒரு புரட்சிகர கட்சியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யைத் தொடங்குவது என முடிவாகியது. நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது. கட்சியின் அமைப்பு விதிகளை வரையறுப்பது, கட்சியின் முதலாவது மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, இதற்கென ஒரு ஒருங்கிணைப்புக் குழு கட்டியமைக்கப்பட்டது.

1969 மே தினத்தன்று, கொல்கத்தாவில் ஷாஹித் மினார் மைதானத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் மேநாள் ஊர்வலமும், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் கனு சன்யால், இந்தியாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக மா-லெ கட்சி தொடங்கப்பட்டுள்ளதை பிரகடனப்படுத்தினார்.

1969, ஜூலை 12-ஆம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது போலீசு படையெடுத்தது. ஜங்கல் சந்தாலும் முன்னணி போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 1969-இன் மத்தியில், துணை ராணுவப் படைகளை ஏவி போராட்டப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியதோடு, மா-லெ கட்சியின் தலைவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவதைத் தொடங்கியது. இதனால், கட்சியானது முழுவதுமாக தலைமறைவாகியது. ஏப்ரல் 1970-இல் லிபரேஷன், தேசப் பிரதி அச்சகங்களில் போலீசாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவை முடக்கப்பட்டதால், அப்பத்திரிகைகள் இரகசியமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. தலைவர்கள் மட்டுமின்றி, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டு அனைவரும் போலீசாரால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர், அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில்தான் இ.பொ.க. (மா-லெ) யின் முதலாவது மாநாடு, அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 8-வது மாநாடு நடந்தது. அம்மாநாட்டுக்குப் பின், அரசின் அடக்குமுறையால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தியாகிகளானார்கள். மற்றவர்கள் சிறையிடப்பட்டு மரணமடைந்தார்கள்; அல்லது இயற்கை விதிகளின்படி, மரணமடைந்தார்கள்.

நக்சல்பாரி எழுச்சியும் கட்சியும் நசுக்கப்பட்டாலும், அதன் அரசியலும் சித்தாந்தமும் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு, அசாம், காஷ்மீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. ‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகள், முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினர். நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் நாடெங்கும் பரவின. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக பழங்குடியின மக்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராமப்புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ள முயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக, துணை இராணுவமும் போலீசுப் படையின் அடக்குமுறையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு – வயல்வெளிகளிலும், கொல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் உடல்களை விசிறியடித்து, பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் இயல்பான நடைமுறையாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்திலும் இதேநிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்திரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டமாக நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அது, வெட்ட வெட்டத் துளிர்க்கும், வளரும். அது, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இன்று, இந்திய நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பே நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது. இன்று, ஓட்டுக்கட்சிக் கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறாக உள்ளன. ஆனால், “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. நாடெங்கும் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியலே கிரிமினல்மயமாகிவிட்டது. இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும், மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டதாக உள்ளது.

நக்சல்பாரி என்ற சொல் இனியும் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. இப்போது நக்சல்பாரி என்ற சொல், ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது. நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது. உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக நக்சல்பாரிப் பாதை திகழ்கிறது.

இந்த மே மாதத்தில், கட்சியின் 8-வது மாநாடு நடந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி மறைந்து போய்விட்டன. ஆனால் 51 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நக்சல்பாரி இயக்கம் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)-யை புரட்சியாளர்கள் உருவாக்கினார்கள். இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், விரைவிலேயே இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட கட்சியாக வளர்ந்து தனது 9-வது மாநாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

போர்க்குணம், புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம், எல்லா வகையான அடக்குமுறைகளையும் துச்சமாக மதிக்கும் எஃகுறுதி, முழுமையான அர்ப்பணிப்பு, எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் எதிர்த்து முறியடிப்பதில் இடையறாத போராட்டம் – ஆகிய உயரிய பண்புகளை நக்சல்பாரி இயக்கம் தோற்றுவித்துள்ளது. சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் புரட்சிகர குழுக்களை ஐக்கியப்படுத்தி, நாடு தழுவிய கட்சியாக வளர்த்தெடுப்பதென்பது புரட்சியாளர்களின் அவசர, அவசியமான கடமையாக உள்ளது. இம்மகத்தான கடமையை நிறைவேற்ற, எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல சூளுரை ஏற்போம்!

தங்கம்