மிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நீட் தேர்வை  நடத்த விட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

மே 23, 2021 அன்று சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, நீட் தேர்வு, ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

படிக்க :
♦ கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி || கருத்துப்படம்
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல் 12-ம் வகுப்பு இறுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதிப்பட தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா? என்னும் கேள்வியும் நம் முன்னெழுகிறது. அப்படி செய்வதற்கு சட்டப்படியான வாய்ப்புகள் இருந்தாலும், இதற்கு முன்னர் அடிமை எடப்பாடியின் ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழக அரசு எடுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நிகழ்ந்தவற்றை திரும்பிப் பார்த்தால் இதில் உள்ள சிக்கல் தெளிவாகத் தெரியவரும்.

நீட் தமிழகத்திற்குள் திணிக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகளுல் சில,

  1. 2017 பிப்ரவரியில் அரசாங்க மருத்துவ கல்லூரிகளுக்கு (both UG and PG) நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு 6 மாதம் வரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. நிர்மலா சீதாராமனோ மசோதா எங்கே போனது எனத் தெரியவில்லை. தொலைந்து விட்டது என்று கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட போது அந்த மசோதா, குடியரசுத் தலைவரின் அலுவகத்துக்கே வரவில்லை என்பது தெரிய வந்தது. தமிழக அரசானது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, மத்திய அரசு சார்பில் அந்த மசோதா ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இப்படி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவானது மத்திய அரசால் 2 வருடமாக கண்டுகொள்ளாமல் வைக்கப்பட்டு 2019-ல் ரத்து செய்யப்பட்டது.
  1. 2017-ம் ஆண்டு, தமிழக அரசு, நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என்று ஒரு அவசர சட்டத்தையும் நிறைவேற்றியது. தமிழக அரசு கொண்டு வரும் நீட் தொடர்பான அவசரச் சட்டத்தை அனுமதித்தால் பிற மாநிலங்களுக்கும் நீட் தேர்விற்கு விலக்குக் கோரும் அபாயம் உள்ளது என தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 22, ஆகஸ்ட் 2017 அன்று தெரிவித்தது.இதனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  1. 2017-ம் ஆண்டு ஜீன் 22-ம் தேதி அன்று தமிழக அரசு ஒரு ஆணை வெளியிட்டது. அதன்படி தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற சமச்சீர் கல்வியில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 10 பேரின் சார்பில் அவர்களது பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.இரவிந்திரபாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜுலை 14, 2017 அன்று உத்தரவு பிறப்பித்தார். கூறிய காரணம் இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவே வழங்க முடியும் என்றும் மாநிலப்பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு வழங்க முடியாது என்றும் கூறினார்.

இப்படி, அன்றைய அடிமை எடப்பாடி அரசு, போராடும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நிர்பந்தத்தின் காரணமாக எடுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவை ஒன்றிணைந்து குழித்தோண்டி புதைத்தன. அப்போதைய அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசோ, நீட்டுக்கு எதிராக போராடுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே நீட்டை அமல்படுத்த பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட்டது.

மாணவி அனிதா மரணத்தைத் தொடர்ந்து நீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்ற சூழலில், தவிர்க்கவியலாமல் அடிமை அதிமுக (வெறும் கண் துடைப்புக்குத் தான்) உட்பட அனைத்துக் கட்சியிகளும் நீட்டை எதிர்த்துக் களமிறங்கின.

ஜீலை 27,2017 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலி போரட்டத்தை  தி.மு.க அறிவித்தது. மாணவர்கள் போராட்டம் கொந்தளித்த நிலைமையிலும் கூட வெறு அடையாளப் போராட்டங்களைத் தான் திமுக உள்ளிட்ட மிகப்பெரிய கட்சியே அறிவித்தது. இலட்சக்கணக்கான தொண்டர்களை கொண்டிருப்பதாக கூறும் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசாங்கத்தையே முடக்கிப்போடும் வகையிலான போராட்டத்தை நடத்தவில்லை.

நாம் சிந்திக்க வேண்டியது அனிதா இறந்த போது தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தது மாணவர்கள் போராட்டமா? அல்லது தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன்னெடுத்த அடையாளப் போராட்டமா என்பதைத் தான்.

உண்மையை உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால் தமிழகம் முழுவதும் மாணவர்களின் விடாப்பிடியான போராட்டம் தான் தமிழக அரசிற்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்தது. தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளை தங்களது கட்சிப் பிரமுகர்களாக வைத்திருக்கும் ஓட்டுக் கட்சிகள், தானாக முன் வந்து நீட்டை எதிர்ப்பார்களா என்ன ?

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபுறம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளும், மறுபுறம் பார்ப்பன வருணாசிரமக் கட்டுமானத்தை அமல்படுத்தும் இந்து ராஷ்டிரக் கொள்கைகளும் ஒன்றாக இணைந்து கார்ப்பரேட் – காவி பாசிசம் அமல்படுத்தப்படுகிறது.

அதன் அங்கம் தான் ஆன்லைன் கல்வி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை எல்லாம். ஆகையால் இதனை ஒருபோதும் ரத்து செய்ய பாஜக அனுமதிக்காது. அதன் ஊதுகுழலாக இருக்கும் நீதித் துறையும் வழக்கை காயப் போட்டு, மாணவர்களின் கழுத்தை கச்சிதமாக அறுக்கும் சூட்சுமம் தெரிந்து செயல்படும்.

எனவே தற்போதைய தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அவசர சட்டம் கொண்டு வந்தாலும் மத்திய அரசின் ஒப்புதல், கவர்னர் ஒப்புதல்,  ஜனாதிபதி ஒப்புதல் என இழுத்தடித்து அதனை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு சாத்தியமற்றதாக பாஜக மாற்றிவிடும் என்பது உறுதி.

இதற்கு ஒரே தீர்வு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களின் எழுச்சி நடந்தால் மட்டுமே மக்கள் போராட்டத்தின் நெருக்கடியில் மத்திய அரசும், நீதிமன்றமும் பணிந்து வர வாய்ப்புள்ளது.

அப்படி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல, தமிழகத்தை மாணவர்களின் போராட்டக் களமாக மாற மு.க.ஸ்டாலின் அனுமதித்து, தமிழ்நாடு மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்டுத் தருவார் என்று எண்ணுவதெல்லாம் பகல்கனவுதான்.

படிக்க :
♦ நீட் தேர்வு சோதனை : கருத்துப்படம்
♦ அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்

ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு பிரச்சனைகளில் மக்களின் போராட்டங்களுக்கு மத்திய அரசு எப்படி அடிபணிந்ததோ, அப்படிப்பட்ட மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்புவதன் மூலம் தான் நீட் தேர்வையும் ரத்து செய்ய முடியும். மாநில உரிமையையும் மீட்க முடியும். அது மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியால்தான் முடியும் !


அமீர்