நாட்டு மக்கள் மீது இந்திய ஆட்சியாளர்கள் நடத்தும் பொருளாதார யுத்தம் !
நேஷனல் மானிடேசன் பைப் லைன் (National monetization pipe) என்ற திட்டத்தின் பெயரில் தேசத்தின் சொத்துக்களை இந்திய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு.
1950-ல் கலப்பு பொருளாதாரம் என்ற பெயரில் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து அரசுக்கு வழிகாட்ட திட்ட கமிஷன் நிறுவப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி இந்திய ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்தவுடன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தளிக்க நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு பாஜக-வால் உருவாக்கப்பட்டது.
நிதி ஆயோக் பரிந்துரையின்பேரில் தற்போது இந்திய நாட்டின் கேந்திரமான செல்வ வளங்களை தனியாருக்கு தாரை வார்க்க முனைப்புடன் களமிறங்கியுள்ளது மோடி அரசு. நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.
இந்திய துணை கண்டத்தின் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பால் உதிரத்தால்; தேசபக்த அறிவுத் துறையின் மிகப்பெரிய பங்களிப்பால்; இந்திய மக்களின் வரிப்பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கேந்திரமான கட்டமைப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் ஒன்றிய ஆட்சியாளர்கள்.
படிக்க :
“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !
167 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்திய ரயில்வே துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க உள்ளனர். ரயில்வே இருப்புப் பாதைகள் 1,15,000 கிலோமீட்டர் தனியார் கரங்களுக்கு செல்ல இருக்கிறது. காடுகளை சீர்செய்து மலைகளை குடைந்து இந்திய ரயில்வே துறைக்கான இருப்புப் பாதைகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக உருவாக்கிட இரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறது இந்திய தொழிலாளி வர்க்கம். ரயில்வேக்கு சொந்தமான 4.75 ஹக்டேர் நிலங்களும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடங்காத அகோரப் பசிக்கு இரையாகப்போகிறது.
இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்த்து ரூ.1.5 லட்சம் கோடி பணம் திரட்ட முடிவு செய்துள்ளனர். ரயில்வே பயணக் கட்டணம் பல மடங்கு உயர இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த ரயில் பயணம் இனி எட்டாக்கனியாகி விடப்போகிறது. மும்பையிலிருந்து அகமதாபாத் ஏசி கட்டணம் ரூ.1,289-யை ரயில்வே துறை வாங்குகிறது, அதே தூரத்திற்கு தனியார் தேஜஸ் ரயில் கட்டணம் ரூ.2,389 வசூலிக்கப்படுகிறது. தனியார் மயத்தினால் ஏற்படப் போகும் விளைவுகளுக்கான ஒரு உதாரணம் இது.
நூற்றுக்கணக்கான ரயில்வே நிலையங்களை முற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளார்கள். 50 ரயில்வே நிலையங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்க கால இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் கார்ப்பரேட் வசம் செல்லவிருக்கின்றன. அதன் மூலம் ரூ.1,60,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைக்க உள்ளனர். ரூ.1.6 லட்சம் கோடி மதிப்புள்ள 26,700 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கேந்திரமான தரைவழிப் போக்குவரத்தை தாரை வார்க்க உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையில் சுங்கக் கட்டணம் 200 விழுக்காடு உயர்ந்துள்ளது. டோல் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை நடந்து வருகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மாபெரும் தரைவழி வழித்தடங்களை உருவாக்கி அளப்பரிய சாதனை படைத்தது தொழிலாளர் வர்க்கம்.
“நீரோடை நிலம் கிழிக்க,
நெடு மரங்கள் நிறைந்து பெரும் காடாக,
பெரு விலங்கு நேரோடி வாழ்ந்திருக்க,
பருக்கைக் கல்லின் நெடும் குன்றில் பிலஞ்சேர,
பாம்பு கூட்டம் போராடும் பாழ் நிலத்தை,
அந்நாளில் புதுக்கியவர் யார்”
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இந்திய உழைக்கும் மக்கள் பச்சை இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்த மாபெரும் வழித்தடங்களை கார்ப்பரேட் கொள்ளையர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு, பரிமாற்றம், சுங்கத் செயல்பாட்டு பரிமாற்றம், பராமரிப்பு மற்றும் மேம்பாடு போன்ற அனைத்து வருவாய் உரிமைகளையும் தனியாருக்கு கொடுக்க உள்ளனர்.
மின்சாரமும் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 42,300 கிலோமீட்டர் மின் வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளனர். நீர்மின் உற்பத்தி, ஆறு ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி, காற்றாலை என அனைத்து மின் உற்பத்திகளையும், மின் வினியோகக் கட்டமைப்பையும் விற்று பணமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்திய தொலைத்தொடர்பு சந்தை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் ஏகபோகமாக மாற்றப்பட்டு வருகிறது. ஜியோ நிறுவனத்தின் வர்த்தக கழுத்தறுப்புப் போட்டியை எதிர்கொள்ள இயலாமல் ஐடியா – வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வெளியேறி வருகின்றனர். அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் புத்தாக்கம் செய்வதற்காக அமைச்சரவை கூடி எடுத்த முடிவை கூட மோடி அரசு நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. 4G அலைக்கற்றை மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சேவை வழங்க தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சொந்தமான 67,000 செல்போன் டவர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ளது. தேசிய பணமாக்கும் திட்டத்தின் மூலம் இந்த செல்போன் கோபுரங்களை, ஏகபோகமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஜியோ நிறுவனத்திற்கு தாரைவார்க்க முயற்சித்து வருகின்றனர். நாடெங்கும் 7 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் கொண்ட வலைப்பின்னல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் உள்ளது. இந்த ஆப்டிகல் பைபர் வலைப்பின்னலை தனியார் நிறுவனங்களுக்கு  தாரை வார்க்க முடிவு செய்துள்ளனர்.
அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஒழித்துக் கட்டி அதன் சொத்துக்களை ஜியோ நிறுவனம் கைப்பற்றிவிட்டால், இந்திய தொலைத்தொடர்புச் சந்தை முகேஷ் அம்பானியின் ஏகபோகமாக மாறிவிடும். பிற நிறுவனங்களை முடக்குவது முதல் அனைத்துவிதமான தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டு ஏகபோகமாக ஜியோ உருவானால், கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி பெரும்பான்மை மக்களை சுரண்டி கொழுக்கும். தனிநபர் சுதந்திரம் – தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். ரயில்வே துறைக்கு இணையாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கேந்திரமான இடங்களில் உள்ள நிலங்கள், கட்டிடங்களை அடிமாட்டு விலைக்கு தனியார்வசம் ஒப்படைக்க உள்ளனர்.
விளையாட்டு மைதானங்களை கூட விட்டு வைக்கவில்லை மோடி அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை தனியார் வசம் கொடுப்பதன் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய புகழ்பெற்ற விளையாட்டு மைதானங்கள் அரங்கங்கள் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடியம் தனியார் கரங்களுக்கு மாற இருக்கிறது.
அடுத்ததாக, கடல்வழி போக்குவரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டு உள்ளனர். நாடெங்கிலும் உள்ள முப்பத்தியோரு துறைமுகங்களும் கார்ப்பரேட் வசம் செல்ல இருக்கிறது. நிலக்கரி சுரங்கங்களை தாரைவார்த்து ரூ.30,000 கோடி திரட்டும் திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. 25 விமான நிலையங்கள் 160 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்டவற்றை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளனர்.
மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த அனைத்து சேவைகளையும் வணிக மயமாக்குவது, கேந்திரமான அனைத்து தொழில் வளங்களையும் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என்ற ஒன்றிய மோடி அரசின் இந்த முடிவால் இந்திய நாட்டில் வாழ்கின்ற கோடான கோடி ஏழை எளிய மக்கள் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம், ரயில் கட்டணம், போக்குவரத்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட உள்ளது. கேந்திரமான கட்டமைப்புகள் சிதைக்கப்படுவதன் விளைவாய் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க உள்ளது.
அம்பானிக்கு, அதானிக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எது நல்லதோ அதுதான் இந்த நாட்டுக்கு நல்லது என்கின்ற அடிப்படையில் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு இத்தகைய வளர்ச்சியினால் எள் முனை அளவு கூட பயனில்லை; மாறாக வறுமையின் கோரப்பிடியில் மக்களை தள்ளி இருக்கிறது.
கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் பொருளாதார வளர்ச்சியானது வேலை வழங்காத வளர்ச்சி மட்டுமல்ல வேலையை பறித்துக் கொள்ளும் வளர்ச்சியாகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் தேசிய பணமாக்கும் திட்டத்தில் 66 விழுக்காடு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சொத்துக்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு சொந்தமானது. பாரதிய ஜனதா கட்சிக்கும், மோடிக்கும் சொந்தமில்லை என்று மோடி அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கிறார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நாட்டின் உள்கட்டமைப்பு சொத்துகளை விற்றும், தனியாருக்கு வருவாய் உரிமைகளை கொடுப்பதன் வாயிலாகவும் எதிர்வரும் 4 ஆண்டுகளில் ரூ 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் கூறுகிறார்.
தேசிய பணமாக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன ?
நாட்டின் கேந்திரமான துறைகளை, உள்கட்டமைப்புகளை தனியாருக்கு ஒப்படைப்பதன் மூலமாக கிடைக்கப்போவதாக சொல்லப்படும் 6 லட்சம் கோடி நிதியை, நாடு முழுவதும் உள்ள உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்த போகிறார்களாம்.
பொதுத்துறை அமைப்புகளை சிதைத்து; கட்டுமான துறைகளை சீரழித்து; தனியார்களிடம் விற்று; நீண்டகால குத்தகைக்கு விடுவதன் மூலமாக நிதி திரட்டபோவதாகவும்; அதைக்கொண்டு தனியாரிடம் கை மாறிய பிறகு அதே கட்டுமானத்தை சீர்செய்ய அந்த நிதியை பயன்படுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்கள்.
நாட்டு மக்களின் காதில் பூ சுற்றுகிறார் மோடி. அனைத்து உற்பத்தித் துறைகளையும் சீரழித்துவிட்டு எஞ்சியுள்ள சேவை துறைகளையும் தனியாருக்கு ஒப்படைக்க உள்ளனர். விட்டால் அரசு நிர்வாகம் முழுவதையும் 25 ஆண்டு கால குத்தகைக்கு கார்ப்பரேட் வசம் ஒப்படைத்தாலும் ஒப்படைப்பார் மோடி !
நாங்கள் மலைகளைத் தகர்தோம்;
பெரும் கற்களை உடைத்தோம்;
எங்கள் குருதியை சாந்தாக்கி;
பல திட்டங்களை கட்டினோம்;
இந்த உழைப்பு யாருடையது;
இதன் பலன்கள் யாருடையது;
என்று முதலாளித்துவ சுரண்டல் கொடுமையை அனல் கக்கும் தன் கவிதை வரிகளால் வினா எழுப்பினார் ஆந்திர புரட்சிக் கவிஞர் செரபண்ட ராஜ்.
படிக்க :
இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !
கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள், நாட்டு மக்களின் சேமிப்புக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. இவற்றை விற்பதன் மூலம், சொல்லிக் கொள்ளப்படும் நாட்டின் இறையாண்மையை செல்லாக்காசாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இந்திய நாட்டை மறுகாலனியாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளின் விளைவாய் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்த, சிலி, கிரீஸ் போன்ற பல்வேறு நாடுகள் திவாலாகி உள்ளன.
கோடான கோடி இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழவுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் கூர்மையடையப் போகிறது. கார்ப்பரேட்  பாசிச கும்பலின் சுரண்டல் தீவிரமடைய உள்ளன. கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பல் இந்துத்துவ பாசிச கும்பலின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார யுத்தத்தை தொடுத்துள்ளது. கார்ப்பரேட் கும்பலின் வாளும் கேடயமுமாய் இந்துத்துவ பாசிச கும்பல் உள்ளது.
நாட்டை இந்துராஷ்டிரத்தின் கீழ், ஏகாதிபத்தியங்களுக்கு மறுகாலனியாக மாற்றும் பாசிசக் கும்பலின் திட்டத்தை தடுத்து நிறுத்த, மீண்டும் ஒரு விடுதலைப் போரை துவக்க வேண்டியுள்ளது. கொடுமைகள் தாமே அழிவதில்லை. சமூக மாற்றத்திற்கான திசைவழியில் செல்வதன் மூலமே நாட்டை நாசமாக்கும் இந்த திட்டத்தை முறியடிக்க முடியும்.
கார்ப்பரேட் காவி பாசிச கும்பலின் ஆதிக்கத்தை உடைக்க, சாதி, மத சங்கிலிகளை தகர்த்தெரிந்து வர்க்கரீதியாக ஒன்றுதிரண்டு போராடுவதில்தான் உண்மையான மக்கள் வெற்றி கருக்கொண்டுள்ளது. புதிய வரலாறு படைக்க வேண்டிய மகத்தான பணி நம்முன் உள்ளது !!

இரணியன்