டந்த ஜூலை மாதம் ஐ.ஐ.டி-யில்  மாணவர்கள் – பேராசிரியர்கள் மத்தியில்  சாதிய பாகுபாடுகள் நிலவுவதை அம்பலப்படுத்தியதோடு, அதனை தடுத்து நிறுத்தும்படி ஐ.ஐ.டி இயக்குநருக்கு கடிதம் எழுதிய அனுப்பி நடவடிக்கை எடுக்கும் படியும் உதவி பேராசிரியர் விபின் பி.வீடில் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும் இக்கொடுமைக்கு மத்தியில் தொடர்ந்து பணி புரிய விருப்பம் இல்லை என்பதையும் தனது ராஜினாமா கடிதம் மூலம் ஐ,ஐ,டி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் விட்டார்.
இது இன்று நேற்று நிகழ்வல்ல. ஐ.ஐ.டி-யின் ஆரம்ப காலம் முதல் மாணவர்கள் – பேராசிரியர்கள் மீது சாதியக் கொடுமை திணிக்கப்பட்டு வருகிறது. உதவி பேரா. விபின் பி.வீடில் போன்றவர்கள் இதுபோன்ற சாதிய மதக் கொடுமைகளை எதிர்த்து போராடியவர்களும் உண்டு. போராடி எந்த பயனும் இல்லாத நிலையில் இராஜினாமா செய்வதவர்களும் உண்டு.
படிக்க :
ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
சென்னை ஐஐடி : சூரஜ்ஜை தாக்கிய மணீஷுக்கு தண்டனை இல்லை !
மாணவர்களிலும், சாதிய – மதக் கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்களும்  கொடுமை தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களும், மர்மமான முறையில் கொல்லப்பட்டவர்களும் உண்டு.
பேரா MS. உன்னி கிருஷ்ணன்
குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக அவாளின், ஆதிக்கச் சாதியின், சாதிய – மதக் கொடுமையால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் விலகிய மாணவர்களும், பணியில் தொடர முடியாமல் விலகிய பேராசிரியகளும் உண்டு. பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
இவர்கள் இறந்துள்ளனர் என்பதை விட கொலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்று சொல்வதே சரி. தன்னைச் சுற்றியுள்ள மாணவர்கள் – பேராசிரியர்களிடமிருந்து வெளிப்படும் சாதிய – மதக் கொடுமைகளின் அழுத்தத்தால், இழிவான நடவடிக்கையால் பாதிக்கப்படும் போது தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதாவது, வெளியிலிருந்து நிர்பந்தமாகத் திணிக்கப்பட்டவைதான் இந்தத் தற்கொலைகள்.
கேரள மாணவி பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி வளாகத்திலேயே, தன் சாவுக்கு யார் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கேரள மாணவி பாத்திமா லத்தீப்
துவக்கத்தில், மாணவர்கள் சேர்க்கைக்கான படிவங்கள் கூட சாதி வாரியாக (சாதிப் பிரிவுக்கு ஒரு வண்ணம் என்ற வகையில்) வகைப்படுத்தி இருந்தது. பெரும் போராட்டத்திற்கு பின்பு இது நிறுத்தப்பட்டது. உணவுக் கூடங்களிலும் சைவம் – அசைவம் எனப் பிரிக்கப்பட்டிருக்கும்.
இக்கொடுமைகள் பேராசியர்களையும் விட்டு வைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வசந்தா காந்தசாமி அவர்களுக்கு பேராசிரியர் தகுதிக்குரிய குடியிருப்பு வழங்கப்படவில்லை. தகுதியிருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை. பின்பு நீதிமன்றம் சென்றுதான் பதவி உயர்வு பெறும் சூழல் இருந்தது. ஐ.ஐ.டி.-யில் சமூக நீதிக்காகவும் போராடியுள்ளார். 2006-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதியின் ஊற்றுக் கண்ணாக, அக்கிரஹாரமாக, பார்ப்பனர்களின் ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர- பஞ்சமர்களுக்கு கொட்டடியாக விளங்கும் ஐ.ஐ.டி.-யில் நடக்கும் கொடுமைகளை ஆதிக்கத்தில் உள்ள பார்ப்பர்னர்களே தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து பிரச்சனையை விசாரித்து ‘முடிப்பார்கள்’. இதன்மூலம் உண்மை என்ன என்பதை வெளியில் தெரியவிடாமல், கசியாமல் ஐ.ஐ.டி நிர்வாகத்திற்குள்ளேயே அமுக்கி விடுகிறார்கள். பல சமயங்களில் நடக்கும் கொடுமைகள் தவிர்க்கவியலாமல் இவர்களையும் மீறி வெளியில் வருவதும் உண்டு.
உதவி பேராசிரியர் விபின் பி.வீடில்
சமீபத்தில் வெளிப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவைதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார் உதவி பேராசிரியர் விபின் பி.வீடில். அதாவது இக்குழுவில் உள்ள பேரா. ஜோத்ரி மாயா திரிபாதி என்பவர் சாதிய பாகுபாடு காட்டுபவர் என்ற அடிப்படையில் இவரை இக்குழுவிலிருந்து நீக்கவும், துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து இடை நீக்கம் செய்யும் படியும் ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.ஐ.டி. நிர்வாகத்திடம் வலியுறுத்தியதோடு “பேரா. ஜோத்ரி மாயா திரிபாதி சமூகவியல் – மானுடவியல் துறையில் எனக்கு எதிரான சாதிய பாகுப்பாட்டுக்கு காரணமாக இருந்தவர். மேலும் மானிடவியல் துறையின் தலைவராகவே நீடிப்பதால் விசாரணை முறையாக நடக்கவில்லை. அத்துடன் பதவி உயர்வு மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியைப் பெறும் துறையின் தலைவருக்கான அதிகாரம் பெற்றவராகவும் இருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி விசாரணையை தவறான முறையில் கொண்டு செல்கிறார். சாட்சிகளையும் கலைக்கிறார்” என்பதை தனது கடித்ததில் குறிப்பிட்டுள்ளதோடு, நேர்மையான முறையில் விசாரணை நடக்கவும், சாதிய பாகுபாடு மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்யும் படியும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதிய கடிதத்தில் வலியுருத்தியுள்ளார்.
பேரா. ஜோத்ரி மாயா திரிபாதி
இது நிர்வாக முறைக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கலாம். ஆனால், நடைமுறைக்கு ஒத்து வராது. ஏனெனில் மோடி தலைமையில் வீற்றிருக்கும் கல்வி அமைச்சர் உட்பட அனைவருமே வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் RSS பயிற்சிக் கூடத்தில் தேர்ச்சி பெற்று வந்தவர்கள்தான். சங்க பரிவாரக் கும்பல் தலித்துகளை, முஸ்லீம்களை இழிவுப்படுத்துவதோடு, பெண்களை உடமையாகப் பார்க்கும் கண்ணோட்டம் கொண்டவர்களாகவும் இருப்பவர்கள். பார்ப்பன – சங்க பரிவாரக் கும்பல் நடத்திய பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகளே இதற்கு சாட்சி.
“உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் திறமை மிக்கவர்களை உருவாக்க முடியாது. இதன்மூலம் தேசிய நலன் பாதிக்கும். சமூக பேரழிவு வரும்” என்று ஒரு பிரிவு மக்களின் அறிவுத் திறனை ஒட்டு மொத்தமாக இழிவுப்படுத்துவதும், இக்காவிக் கும்பலிடம் சென்று, நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைப்பது, முறையிடுவது என்பது கசாப்புக் கடைக்காரனிடம் ஆடுகள் உயிர் பிச்சைக் கேட்பதற்கு சமம்.
ஐ.ஐ.டி-யில் நடக்கும் சாதி மதக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் 23 ஐ.ஐ.டி-கள் உள்ளன. இதில் சிறப்பானவை என்ற வகையில் சென்னை உட்பட 7 ஐ.ஐ.டி-கள் உள்ளன. இவற்றுக்கு மட்டும் மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.564 கோடி செலவு செய்யப்படுகிறது. இதில் பயனடைபவர்கள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க நகர்ப் புற – மேட்டுக்குடி – மத்திய தர வர்க்கம்தானே தவிர, கிராமப்புற – நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அல்ல. இவர்களுக்கு செலவழிக்க மக்கள் வரிப்பணம். படித்து விட்டு இவர்கள் பணிபுரிவதோ அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்.
சென்னை ஐஐடி
கிராமப்புற – நகர்புற ஏழை எளிய மாணவர்கள், நீட்டைப் போல ஐ,ஐ.டி-களின் நுழைவுத் தேர்வுக்கு தேர்ச்சி பெற பல லட்சம் செலவு செய்ய வேண்டியுள்ளதோடு அதற்கான அடிப்படைகளை உருவாக்க அரசுப் பள்ளிகளும் தவறுகின்றன.
அரசு பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் போட்டு, அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வியை தரமிக்கதாக மாற்ற அரசு எவ்வித நிதியும் ஒதுக்குவதில்லை. இதனால் ஏழை மாணவர்களின் ஐ.ஐ.டி. கனவு நனவாவதுமில்லை; எட்டாக்கனியாகி விடுகிறது. இதே நிலை இன்று நீட்-டிலும் நீடிப்பதால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்புகளும் கனவாகி வருகின்றது. இனி கலை – அறிவியல் படிப்புகளுக்கும், பொறியியல் படிப்புக்கும் இந்த நிலை நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
படிக்க :
Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்
சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !
இனியும் இவர்களிடம் கோரிக்கை வைப்பதோ, முறையிடுவதோ வேலைக்கு ஆகாது. உயர்கல்வி நிறுவனங்களின் நடைமுறையிலும் சாதிய மதக் கொடுமைக்கும், அவாளின் ஆதிக்க சாதிகளின் ஆதிக்கத்திற்கும் எதிராக வீதிப் போராட்டங்களைத் தொடங்க வேண்டும். ஏழை எளிய மக்கள், சூத்திர-பஞ்சம மக்கள் உயர் கல்வியை எட்டவிடாமல் தடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிச சதியை முறியடிக்கவும், இவைகளின் குறியீடாக விளங்கவும் ஐ.ஐ.டி. கொடுமைக்கும் – நீட் தேர்வு என்ற அயோக்கியத்திற்கும் எதிராகவும் APSC-IITM, பு.மா.இ.மு., தி.க, பெ.தி.க போன்ற அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை போராட்டங்களைப் போல பொது வெளியில் தொடர்ந்து இடைவிடாமல் நடத்தி அரசிற்கு நிர்பந்தத்தை உருவாக்குவதன் மூலமே உயர்கல்வி கனவை நனவாக்கவும், உயர்கல்வி நிறுவனங்களின் அனைத்து வகை கொடுமைகளைத் தடுக்கவும் முடியும்.
இவ்வகைப் போராட்டகளில் உயர்கல்வி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் பெரும் திரளாக பங்கேற்பதன் மூலமே ஆதிக்கவாதிகளின் ஆணிவேரை அசைக்க முடியும்.

கதிரவன்