ஜெய்பீம் படம் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் “கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை” என்றும் “இப்படியெல்லாம் கொடுமைகள் நடக்கிறதா? .. தாங்க முடியவில்லை, தூங்க முடியவில்லை” என்றும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போலீசின் உண்மையான முகத்தை, அரச பயங்கரவாதத்தை திரையில் அம்பலப்படுத்தியிருக்கிறது என்றும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

உழைத்து உண்ணும் மக்களின் உணர்வுகள் இப்படி இருக்க, அன்புமணி ராமதாசின் எண்ணம் வேறு மாதிரியாக ஓடியிருக்கிறது. படம் வெளியாகி ஒருவாரம் கழித்து திடீர்  ‘ஞானோதயம்’ ஏற்பட்டிருக்கிறது. அது, சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளாகவும், அடுத்த படம் தியேட்டருக்கு வருவது சிரமம் என்ற மிரட்டலாகவும் வெளிப்பட்டிருக்கிறது.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களுக்காக கம்யூனிஸ்ட்டுகளும் வீதியில் இறங்கி தைரியமாக போராடுகிறார்கள் என்பதை திரையில் காட்டுவதே, அன்புமணிக்கு வயிற்றில் அமிலத்தை ஊற்றியதைப் போன்ற எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

இரண்டாவதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்துகொண்டு  10.5% இட ஒதுக்கீட்டு நாடக அரசியலை அரங்கேற்றியது பாமக.  அந்த இடஒதுக்கீட்டு ஆணை கண் துடைப்புக்காக பல ஓட்டைகளோடு தான் கொண்டுவரப்பட்டது என்பது சமீபத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் அம்பலமானது. இந்த ஓட்டைகள் பாமக தொண்டர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கண்ணீரோடு தமது வெற்றியை தந்தையிடம் பகிரும் “வீடியோ சூட்” காட்சிகளை வெளியிட்ட அன்புமணிக்குத் தெரியாமல் இருந்திருக்காது.

இப்போது அம்பலமான பின்னர், துவண்டுபோன வன்னிய சொந்தங்களை எப்படி தட்டி எழுப்புவது என்று தெரியாமல் இருந்த அன்புமணிக்கு வராது வந்த மாமணியாய் ஜெய்பீம் திரைப்பட விவகாரம் கையில் கிடைத்துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிதான், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் வரும் அக்கினிச் சட்டி படத்தை வைத்து சாதிவெறிக்கு தூபம் போடும் அன்புமணி ராமதாஸின் வன்னிய சாதி வெறியூட்டும் நடவடிக்கை.

படிக்க :

♦ நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !

♦ மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

இந்தப் படத்திற்கு, குறிப்பாக அந்தக் காட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளிபடுத்தியிருப்பவர்கள் எல்லாம் யார் என்று பாருங்கள்! இந்த விசயத்தில் பாமக – பாஜக மற்றும் அவர்களைச் சார்ந்த உதிரிகள் தான் கூட்டணிபோட்டு எதிர்க்கின்றனர். இப்படத்தில் காட்டப்படும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், அரசின் அடக்குமுறை, அதற்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் ஆகியவற்றை மடைமாற்றம் செய்யும் வகையில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளனர். வன்னிய சாதி வெறியூட்டும் விதமாக பாமக, வன்னியர் சங்க தலைவர்கள் முதல் பாஜகவின் எச்ச ராஜா வரை அறிக்கை விட்டுவருகின்றனர்.

படத்தில் அக்கினிச் சட்டி காலண்டர் காட்சியை படக்குழுவினர் மாற்றிய பின்னரும் ஏற்கெனவே புண்பட்ட வன்னியர்களின் மனதிற்கு ‘மருந்து தடவ’ ரூ. 5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டுள்ளது வன்னியர் சங்கம். ஒருவேளை ஐந்து கோடி ரூபாய் நட்ட ஈடு பெற்றால், புண்பட்ட வன்னியர்களை எப்படி இனம்கண்டு அந்தத் தொகையை பிரித்துக் கொடுக்குமோ தெரியவில்லை.

சந்தானம் உள்ளிட்ட பலரும் பிற சமூக மக்களை தாழ்த்திக் காட்டி படம் எடுப்பது தவறு என வகுப்பு எடுக்கிறார்கள். இந்த யோக்கியர்கள் யாரும் திரௌபதி படத்தையோ ருத்ரதாண்டவம் படத்தையோ கண்டித்து வாய் திறக்கவில்லை. முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது வன்மத்தைக் கக்கும் படத்தை எடுத்த இயக்குனர் மோகன்.ஜி-க்கு பாராட்டு மழையைப் பொழிந்தனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட ‘சமூகக் காவலர்கள்’.

திரௌபதி படத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை அடையாளபடுத்தும் குறியிடுகளை தெளிவாக வைத்திருந்தார், அப்படத்தின் இயக்குனர். தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு ஜீன்ஸ் பேண்டும், மோட்டார் பைக்கும், ஐபோனும் கொடுத்து, “போய் உயர்சாதிப் பெண்களை காதலித்து சொத்தை பிடுங்குங்கள்” என்று அவர் தூண்டிவிடுவதாக காட்சிகள் இருந்தன. திரெளபதி படம் வந்தபோது அதன் இயக்குநர் மோகனிடம் இதைப் பற்றி கேட்கும் போது, “ஏன் சின்ன சின்ன குறியிடுகளை பார்க்கிறீர்கள்? படம் என்ன சொல்லவருகிறது என்று பாருங்கள்” என்று நியாயம் பேசினார்.

அடுத்தது இந்துமதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக ருத்ரதாண்டவத்தை கொண்டுவந்தார் அதே இயக்குநர். இந்து மதத்திற்குள் இருப்பதாலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைபடுத்தப் படுவதையோ அல்லது இதே வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளற்று ஒடுக்கப்படுவதையோ இந்த இயக்குநர் கேள்விகேட்க விரும்பவில்லை.

இதே படத்தில் கஞ்சா விற்கும் இளைஞனை பட்டியலினத்தைச் சேர்ந்தவராகக் காட்டியிருந்தார். அந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு ஹெச்.ராஜா, அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள்தான் அழைக்கப்பட்டிருந்தனர். அன்புமணியும் பாராட்டி உச்சிமுகர்ந்தார். வெளிப்படையாக இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதுதான் என்பதை காட்டி வன்னியர்களை கூட்டம் கூட்டமாக படம் பார்க்கவைத்தார்கள் என்பது கண்முன்னால் நடந்த விசயம்.

‘அக்னி குண்டத்திற்கும்’ ‘குரு’ என்ற பெயருக்கும் வியாபார உரிமை பெற்றிருப்பதை போல ‘அது ஏன் ஜெய்பீம் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது ?’ என்று கேள்வி கேட்கிறார்கள். இனி ஒவ்வொரு படத்திலும் காட்சியும் பெயரும் அமைப்பதற்கு முன்னர், இத்தகைய சாதியாதிக்க கும்பல்களிடம் வேறு உத்தரவு பெறவேண்டுமா என்ன?

ஜெய்பீம் விவகாரம் குறித்து அன்புமணி பேசியது குறித்து நடத்தப்பட்ட, முரசரங்க விவாதத்தில் பிஸ்மி ஒரே ஒரு கேள்வி சரியாக கேட்டார். ‘இதைப்பற்றி பேச அன்புமணி ராமதாசுக்கு யோக்கியதை இருக்கிறதா?’ என்று. அவ்வளவுதான், வெறிபிடித்ததைப் போல கத்த தொடங்கினார் வன்னியர் சங்க வழக்கறிஞர் பாலு.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தை சாதிவெறியூட்டி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பல்வேறு கலவரத்தை நடத்தி, பலரது வாழ்வாதாரத்தை அழித்து, இருதரப்பிலும் பல நூறு மக்களின் உயிரைப் பறித்த பாமக ராமதாஸ், அன்புமணி போன்ற சாதி வெறியர்களுக்கு ஜெய்பீம் போன்ற படங்களை குறை சொல்ல யோக்கியதை இல்லை.

படிக்க :

♦ சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !

♦ இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !

வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே, ஜெய்பீம் படம் வன்னியர் சாதி மக்களை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களை சூறையாட உங்களுக்கு கண்சாடை காட்டும் அன்புமணியிடமும், நேரடியாக உங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வன்னியர் சங்கத்தினரிடமும் சில கேள்விகளைக் கேளுங்கள். வாய்ப்பு இல்லையென்றால், உங்களுக்குள்ளாவது கேட்டுக் கொள்ளுங்கள்!

வன்னிய சமூகத்துக்கான 10.5% இட ஒதுக்கீடு மசோதாவை டம்மியாக எடப்பாடி உருவாக்கிய போதே அதனை அம்பலப்படுத்தி கூட்டணியை உடைத்து வன்னிய சொந்தங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப ராமதாஸும் அவரது புத்திரரும் மறந்தது ஏன் ?

நீட்தேர்வின் மூலம் வன்னியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவராகும் கனவுகளை கலைத்துப் போட்ட அதிமுக, பாஜக கும்பலோடு கூட்டணி வைத்து உங்களது கனவைக் கலைத்த கும்பலுக்கு துணை நின்றது ஏன் ?

இப்படி வன்னிய சமூகத்தினரின் எத்தனையோ வாழ்வாதார பிரச்னைகளுக்கு தனது குரலை மெலிதாகக் கூட எழுப்ப விரும்பாத, ராமதாசும் அன்புமணியும், அச்சமூகத்தின் உழைக்கும் மக்களை தியேட்டர்களைக் கொளுத்தி சிறைக்குச் செல்ல மட்டும் அழைக்கிறார்கள், தங்களது வாரிசுகளை செல்வச் செழிப்பாக மேற்படிப்பு படிக்க வைத்துக்கொண்டே…

மணிவேல்