வி.பி. சிங் குறித்து புதிய புத்தகம்
ந்தியாவின் பிரதமராக மிகக் குறுகிய காலமே இருந்தாலும், நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் இந்தியாவின் ஏழாவது பிரதமரான விஸ்வநாத் பிரதாப் சிங்.
அலகாபாதில் தையா சமஸ்தானத்தில் பிறந்து அதைவிட பெரிய சமஸ்தானமான மண்டா சமஸ்தானத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதே வி.பி. சிங்கின் பரவலான சாதனையாக அறியப்பட்டாலும், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங்கிற்கு முன்பே துவக்கியவர். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் 1984 முதல் 1987வரை நிதியமைச்சராக இருந்தபோது ‘லைசன்ஸ் ராஜ்’ஐ உடைத்து, பொருளாதார சீர்திருத்தங்களைத் துவங்கியவர் வி.பி. சிங்தான்.
இந்தியாவின் ஏழாவது பிரதமர், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர், பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தத் துவங்கியவர், இந்திய அரசியலில் நேர்மையின் சின்னமாக விளங்கியவர் என வி.பி. சிங் பல வகைகளில் போற்றப்பட்டாலும் அவரைப் பற்றிய முழுமையான ஆங்கில நூல்கள் ஏதும் கிடையாது.
படிக்க :
உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்
டெக்ஸாமெத்தாசோன் : கொரோனா சிகிச்சையில் ஒரு முன்னேற்றம் !
G.S. Bhargava தொகுத்த Perestroika in India: V.P. Singh’s Prime Ministership என்ற ஒரே ஒரு புத்தகம் மட்டுமே பகுதியளவில் அவரது பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறது. இந்த நிலையில்தான் தேபாஷிஷ் முகர்ஜி எழுதிய The Disruptor: How Vishwanath Pratap Singh Shook India புத்தகம் வெளிவந்திருக்கிறது.
டிசம்பர் 5-ம் தேதிதான் புத்தகம் அதிகாரபூர்வமாக வெளியாகிறது என்றாலும் அமேசானில் இப்போதே விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்தில், இந்திய அரசியலில் வி.பி. சிங்கின் பாத்திரத்தை துல்லியமாக மதிப்பிட முயல்கிறார் தேபாஷிஷ். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வி.பி. சிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தாலும், இந்தியாவில் அவரது உருவம் பொறித்த தபால்தலைகூட கிடையாது. அவரது பெயரில் நகரங்களோ, பெரிய சாலைகளோ கிடையாது, குறிப்பிடத்தக்க வகையில் புத்தகங்களோ கிடையாது என வருந்துகிறார் அவர். புத்தகம் கிடையாது என்ற குறையைத் தீர்க்கவே இந்தப் புத்தகத்தை தான் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
வி.பி.சிங்கின் அரசியலால் பயனடைந்த லாலு பிரசாத் யாதவோ, முலாயம் சிங் யாதவை அவரது நினைவைப் போற்ற ஏதும் செய்யவில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வி.பி. சிங் பெயரில் தெருக்கள், சாலைகள் உண்டு! சமீபத்தில் அவரது பிறந்த நாள் வந்தபோது, வி.பி. சிங்கிற்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை சூர்யா சேவியர் எழுப்பியிருந்தார் என்ன நடக்கிறதென பார்க்கலாம்.
ஆனால், அதற்கு முன்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். பல அரிய புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.
000
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர்
குறுகிய காலமே இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். அவர் அமல்படுத்திய இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் யாரும் அவரை நினைவுகூர மாட்டார்கள். ஆனால், அதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் அவரை நினைவுகூர்வது அவசியம்.
போர் நடக்கும்போதோ, வேறு இக்கட்டான சூழல்களிலோ வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் தாய்நாடு அழைத்துவர அரசு பெருந்தொகையான பணத்தை வசூலித்து வருகிறது. ஆனால், 1990ல் வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்திலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டனர். அப்போது யாரிடமும் பணமும் வாங்கப்படவில்லை.
அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கின் மீடியா ஆலோசகராக இருந்த பிரேம் ஷங்கர் ஜா விரிவாக எழுதியிருக்கிறார்.
வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றிவந்தார்கள். அந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது.
இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என சதாம் ஹுசைன் வாக்குறுதி அளித்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் குவைத்திலிருந்தே இந்தியாவுக்கு அவர்களை அழைத்துவர வழியில்லை. ஆகவே இந்தியர்களை பஸ்ராவிலிருந்து 1120 கி.மீ தூரம் தரைவழியே அம்மான் வரை அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர சதாமிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அப்போது ஏர் இந்தியாவிடம் சில 747 ரக விமானங்களே இருந்தன. அவை அனைத்தையும் வர்த்தக சேவையிலிருந்து விலக்கி, இந்தப் பணியில் ஈடுபடுத்த பிரதமர் வி.பி. சிங் நினைக்கவில்லை. ஆகவே இந்தியன் ஏர்லைன்ஸ் அப்போதுதான் வாங்கியிருந்த ஏர்பஸ் ஏ 320-களை பயன்படுத்த முடிவுசெய்தார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் வாங்கியிருந்த இரண்டு ஏர்பஸ்களில் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. மீதமிருந்த ஒரு விமானம் வர்த்தக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தை இந்த சேவையில் இறக்கினார் வி.பி. சிங்.
அந்த விமானம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் 16-18 மணி நேரம் என்ற ரீதியில் தொடர்ந்து பறந்தது. மொத்தம் 488 தடவைகள். 1,11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இப்போதுவரை, உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய அளவில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.
இந்த நடவடிக்கையில் பில்லியன் டாலர்கள் வரை செலவானது. அப்போது அன்னியச் செலாவணியே இல்லாத காரணத்தால், 55 டன் தங்கத்தை அடகுவைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.
மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.
குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது 1990 ஆகஸ்ட் 2-ம் தேதி. அப்போது வி.பி. சிங் அரசு ஒரு மைனாரிட்டி அரசு. அவருக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, அத்வானி நடத்திவந்த ரத யாத்திரை அக்டோபர் 30-ம் தேதி முடிந்த பிறகு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ள பா.ஜ.க. முடிவெடுத்திருந்தது.
என்ன நல்லது செய்தாலும் இதில் எதுவும் மாறப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இருந்தபோதும் இந்தியர்களை மீட்பது இந்தியாவின் கடமை என அவர் நம்பினார். அந்த மீட்பு நடவடிக்கைக்கு மாட்டிக் கொண்டிருப்பவர்களிடம் பணம் கேட்பது என்ற கேள்வியே எழவில்லை.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு திடீரென அமல்படுத்தப்பட்டபோது, நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் நடந்தது குறித்து அரசு பேசாமல் இருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வி.பி. சிங் செய்ததன் பிரம்மாண்டம் புரியும்.
ஆனால், இப்படி வெளிநாடுகளில் சிக்கியிருவர்களை மட்டுமல்ல, ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையையும் மீட்டார் வி.பி. சிங்.
இந்திய அரசியலில் காணாமல் போயிருந்த தார்மீகம் சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பித்தவர் வி.பி. சிங். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ. 60 கோடி லஞ்சமாகப் பெற்றதாக ராஜீவை உலுக்கியெடுத்தார். இந்த விவகாரமே வி.பி. சிங்கிற்கு பிரதமர் பதவியைப் பிடித்துத் தந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது அவரது மற்றொரு சாதனை.
அவரது இந்த நடவடிக்கை வட இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்து. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதான் என்று நமக்கு சர்வ சாதாரணமாகத்தான் தோன்றுகிறது.
ஆனால், வட இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை. தமிழராக இருந்து வட இந்தியாவில் வாழ்ந்தாலும் இதே எண்ணம்தான் இருக்கும். அப்படியிருக்கையில் 80-களின் இறுதியில் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த அறிக்கையை ஏற்றார் வி.பி. சிங்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள்.
படிக்க :
குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?
நாட்டைத் துண்டுபோடும் நோக்கத்தோடு அத்வானி ரத யாத்திரையைத் நடத்தியபோது, அவரைக் கைது செய்து தடுத்து நிறுத்தினார் வி.பி. சிங். அதற்குப் பிறகு தன் ஆட்சி நிலைக்காது என்று தெரிந்தும் இதைச் செய்தார்.
நிதி அமைச்சராக இருந்தபோது தீருபாய் அம்பானியையும் அமிதாப் பச்சனையும் ஆட்டி வைத்தது, சம்பல் பகுதியில் நடந்த கொள்ளைகளுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நடவடிக்கைக்காக இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தது போன்றவை அவருடைய பிற குறிப்பிடத்தக்க செயல்கள்.
பொதுத் தேர்தலை தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார் வி.பி. சிங். இதில் தி.மு.க.வுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லையென்றாலும் அமைச்சரவையில் சேர வேண்டுமென வற்புறுத்தி, சேர்த்துக்கொண்டார் வி.பி. சிங்.
1996-ல் பிரதமர் பதவி தேடி வந்தபோது, அதை மறுத்தது மற்றொரு புத்திசாலித்தனமான, சரியான நடவடிக்கை. படுக்கையில் விழும்வரை பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வி.பி. சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் மக்கள் போராட்டங்களிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு தலைவனாகவே தன் கடைசி நாட்கள் வரை இருந்தார் வி.பி. சிங்.
முகநூலில் : K Muralidharan
disclaimer