ந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாகை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான தோழர் சித்தமல்லி கோ. முருகையன் அவர்களின் நினைவுதினம், (படுகொலை செய்யப்பட்ட நாள் 06.01.1979) ஜனவரி 6. அன்றைய நாளில் பொதுவாக ஆண்டுதோறும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களால், மக்களால், இதர முற்போக்கு அமைப்புகளால் நினைவுக்கூரப்பட்டு வருகிறது.
ஆனால் சில ஆண்டுகளாக இவரை அவர் பிறந்த சாதியுடன் அடையாளப்படுத்தி, ‘தங்களுடைய’ தலைவராக மாற்றும் முயற்சியை புற்றீசல் போல் கிளம்பிவரும் பல்வேறு இயக்கங்கள் செய்து வருகின்றன. இதைப்போன்றே வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25-ன் மீது சாதிய சாயம் பூசும் பணியும் சில ஆண்டுகளாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற ‘பண்டிகை’ தினங்களில் அதிகமான ‘சாதிய மோதல்கள்’ சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணமுள்ளன. இத்தகைய சாதிய மோதல்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களான “பள்ளர் – பறையர்” மக்களிடையே ஏற்படுவதுதான் புதிய நிலைமையாக உள்ளது. ஒரே கிராமம், ஒரே தெருவில் இருப்பவர்கள், குடும்ப உறவுகளை இயல்பாக பேணுபவர்கள் மத்தியில் தற்போது பல்வேறு பிரிவினைகள் வளர்ந்து வருகிறது.
படிக்க :
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
♦ தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !
தெருகளில் சாதிய அடையாளமிடுவது, மின்கம்பங்கள், பொதுச் சுவர்களில் சாதிய அடையாளங்கள் இடுவது, கைகளில் கயிறுகளை கட்டிக்கொள்வது, நெற்றியில் அத்தகைய வண்ணத்தில் திலகமிட்டுக்கொள்வது, சாதிய பெயர்களை இட்டுக்கொள்வது போன்றவை மிகத் துரிதமாக, குறிப்பாக இளைஞர் மாணவர் மத்தியில் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.
காவி பாசிசம் இஸ்லாமிய எதிர்ப்பு, பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள், கிறித்துவ மக்களுக்கு, பெரியாரின் திராவிடக் கொள்கை மற்றும் முற்போக்கு கம்யூனிச கொள்கைக்கு எதிராகதான் வளர்ந்து வருகிறது என்றுமட்டும் கருதுகிறோம் என்றால் பாசிசத்தைப் பற்றி மிகவும் குறைவாக புரிந்து வைத்துள்ளோம் என்பதாகும். ஜெர்மனியில், இத்தாலியில் அன்றைக்கு கம்யூனிச – சோசலிச கருத்துகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்ததால், “தங்களது லட்சியம் சோசலிசம்” என்ற முழக்கத்தில் பாசிசம் வளர்ந்தது. டெல்டாவின் சிறப்பு தன்மைக்கு ஏற்ப, “பொதுவுடைமை, வர்க்கப் போராட்டம், பாட்டாளி மக்கள் தோழன்” என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டே, களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் “தமதாக்கி” கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.
இத்தகைய இயக்கங்களின் ‘திடீர்’ உருவாக்கம், “யாரோ” திட்டமிட்டு வளர்த்துவிடுகிறார்கள் என்று பொத்தம் பொதுவாக நாம் முத்திரை குத்த விரும்பவில்லை. (எனினும் பாஜகவின் அமித்ஷா சாதிய சங்கங்களை வளர்த்துவிடுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்) தன்னெழுச்சியாகக் கூட வளர்ந்து வரலாம். நாடு முழுக்க பிற்போக்கு அனைத்து மட்டங்களிலும் கை ஓங்கி இருக்கும் காலத்தில் பல்வேறு விதமான பிற்போக்குகளும், வீரியமாக வளர்ச்சியடைவே செய்யும்.
எனினும் இவ்வாறு சாதிரீதியாக அடையாளப்படுத்தப்படுவது, மக்களை திரட்டுவது, இயல்பிலேயே பார்ப்பனியத்திற்கு சேவை செய்வதாகவும், உழைக்கும் மக்கள் நலனுக்கு எதிராகவும், இவ்வளவு ஏன் இவர்கள் பிரதிநிதித்துவ படுத்துவதாக கருதிக்கொள்ளும் “பள்ளர்” அல்லது “தேவந்திர குல வேளாளர்” மக்களுக்கு எதிராகவும்தான் முடியும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கியொடுக்கியதே பார்ப்பனிய இந்து மதம். இந்த மதத்தின் உயிரே அதன் வர்ணாஸ்ரம தர்மத்தில் உள்ளது. அத்தகைய சித்தாந்தமும், வர்க்க ரீதியான அடக்குமுறையும் பின்னிப்பிணைந்துதான் மக்களை இத்தனையாண்டு காலங்கள் அடக்கியொடுக்கி அடிமையாக வைத்திருந்தது. இதைத்தான் வெண்மணியில் கருகிய தியாகிகள் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
சமூகமே புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகள் முற்றாக ஒழிக்கப்படும் என்றாலும், குறைந்தபட்சம் கம்யூனிச இயக்கங்கள், அவற்றின் தலைமையிலான போராட்டங்கள், பெரியார், திராவிட இயக்கத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டங்கள் மக்களை சாதிய அடக்குமுறைகளில் இருந்து சீர்திருத்த வகையிலாவது ஒருபடி முன்னேற்றி சென்றது. ஆனால் இன்று அத்தகைய முற்போக்கு விழுமியங்களை, மக்களின் ஐக்கியத்தை உடைத்து மக்களுக்கு இடையே மோதல்கள், பிரிவினைகளை ஏற்படுத்துவதாகவே தற்போது வளர்ந்துவரும் இயக்கங்கள் நமக்கு முன்னறிந்து கூறுகின்றன. அந்த வகையில் இத்தகைய முன்னெடுப்புகள் “பள்ளர்” மக்களுக்கு நேர் எதிராக, அவர்களை மேலும் மேலும் பார்பனியத்தின் அடிமைத்தனத்தில் அம்மக்களை தள்ளுவதில்தான் முடியும் என்பது திண்ணம்.
அதே சமயத்தில் காவி பாசிசம் வளர்ந்து மக்களை பிளவுபடுத்தி அடக்கியொடுக்குவதை நாம் எதிர்க்கும்போது, பாசிசத்தின் வர்க்கச்சார்பை கவனத்தில் எடுத்தக்கொள்ளாமல் இருப்போமேயானால் சரியான வகையில் எதிர்வினையாற்றாமல் ஊசலாட்டத்தில் விழுவதாகத்தான் முடியும். காவி பாசிசம் இயல்பிலேயே பிற்போக்குத்தனமான, குறிப்பாக பனியா – பார்சி – சிந்தி – மார்வாரி கார்ப்பரேட் கும்பல், மக்களையும் இயற்கையையும் சூறையாட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
டெல்டாவில் அதானிக்கு பல இடங்களில் அரசு எண்ணெய் எடுக்க அனுமதி கொடுத்துள்ளது. டெல்டாவில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் வாயு எடுப்பு திட்டங்களை முழு வீச்சில் நிறைவேற்ற மக்கள் ஒற்றுமையாக போராடுவது தடையாக உள்ளது. அத்தகைய மக்களிள் தங்களுக்குள் சாதிரீதியாக, மத ரீதியாக பிரிந்து மோதிக்கொள்வது கார்ப்பரேட் திட்டங்கள் நடைமுறைப்படுத்த மிகவும் தேவையாக உள்ளது.
இத்தகைய சூழலில், தற்போதைய முன்னெடுப்புகளை ஒருவர் திட்டமிட்ட செய்கிறாரா அல்லது தன்னெழுச்சியாக புரியாமல் செய்கிறாரா என்பதல்ல பிரச்சினை. இயல்பாகவே இச்செயல்கள் கார்ப்பரேட் நலனுக்கு உகந்தது. தற்போது டெல்டாவில் விவசாயம் கிட்டதட்ட கார்ப்பரேட் நலனிற்கு ஏற்ப மாற்றப்படுவதன் விளைவாக, பல்வேறு வேலைவாய்ப்புகள் இழந்து திருப்பூர், சென்னை, கேரளா, வெளிநாடுகளுக்கு விசிறியடிக்கப்படும் நிலையில், அம்மண்ணை விட்டு மொத்தமாக விரட்டியடிக்கும் நிலைக்கு கார்ப்பரேட்டுகள் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாகப்பட்டிணம் அருகே இருக்கின்ற நரிமணம் என்ற இடத்தில் சி.பி.சி.எல். எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை இயங்கிகொண்டிருப்பது நாம் அறிந்ததே. தற்போது அவ்வாலையை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள மக்களையும், விளைநிலங்களையும் அப்புறப்படுத்துவதற்கு முயன்றது. மக்கள், விவசாய சங்கங்களின் போராட்டங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திடீரென ‘விழித்துக்கொண்ட’ தமிழக அரசும் “தமிழகத்தில் பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை வாபஸ்” பெறுவதாக அறிவித்தது.
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இத்திட்டம் கூடிய விரைவில் மக்கள் எதிர்பின்றி நிறைவேறுவதற்கு, மக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களுக்குள் மோதிக்கொள்வது மிகவும் அவசியமானது. அத்தகைய திருப்பணியை இத்தகைய இயக்கங்கள் முன்னெடுக்கவே வாய்ப்பிருக்கிறது.
படிக்க :
நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்
டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட திமுக அரசு, தற்போது தமது பெயரளவிலான எதிர்ப்பையும் காற்றில் பறக்கவிட்டுவருகிறது. ஏதோ தம்மிடம் மாற்று பொருளாதாரத் திட்டம் இருப்பதாக காட்டிக்கொண்டது. பொருளாதார நிபுணர்கள் ஜெயரஞ்சன், ரகுராம் ராஜன் போன்றவர்களை தமது கொள்கை வகுப்பாளர்களாக, ஆலோசகர்களாக நியமித்துக்கோண்டது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வண்டி ‘செல்ப்’ எடுக்கவில்லை. ஆகவே கார்ப்பரேட் நலனையே துரிதப்படுத்தி வருகிறது. ஆகவே சாதிய, மத, இன விரோதங்களை மறைமுகமாகவே வளர்த்துவிடும் அல்லது வேடிக்கைப் பார்க்கும் என்பதுதான் எதார்த்தமாக உள்ளது.
ஓருபக்கம் பாசிச சக்திகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்ட போதும், இன்னொரு பக்கம் அதன் எதிர்வினையும் இருக்கவே செய்கின்றன. தஞ்சை டெல்டா கம்யூனிச வர்க்க உணர்வு பாரம்பரியத்தை உள்ளடக்கியது. தற்போது வரை கார்ப்பரேட் மீத்தேன் திட்டங்களை தடுத்தே வைத்துள்ளனர். டெல்டா இஸ்லாமியர்களும் நிறைந்துள்ள பகுதியாகும். CAA எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் தீவிரமாக இம்மண்ணில் நடந்தது. அத்தகைய இஸ்லாமிய மக்கள் போராட்டங்களுக்கு இதர போராட்ட பாரம்பரியம் கொண்ட மக்கள் தங்களது ஆதரவை நல்கினர். இத்தகைய நேர்மறைக்கூறுகளும், தேசம் முழக்க அதிகரித்துவரும் “பணவீக்கம்”, அதிகமான வேலையிழப்புகள், ஆளும் வர்க்கங்கள் மேலும் மேலும் நெருக்கடியில் சிக்கிக்கொள்வது மிகவிரைவில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே உணர முடிகிறது.
இத்தகைய சூழலை நாம் எத்தகைய சோர்வு, ஓய்வு உளைச்சல் இன்றி புரட்சியை நோக்கி வளர்த்தெடுக்கவே வேண்டும். முற்போக்கு, ஜனநாயக, கம்யூனிச சக்திகளான நம்மிடமிருக்கும் கத்துக்குட்டித்தனங்களை இனியும் காரணம் காட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதையே புறநிலை நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது.
கந்தசாமி