குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து, “பாசிஸ்டுகளின் கைக்கூலி சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்! எதிரிகள் நம்மை கண்டு பயப்படுவது போல மக்களும் நம்மை கண்டு பயப்பட வேண்டும்! பிபின் ராவத் பொன் மொழிகள் என்று தலைப்பிட்டு மீம் வடிவிலான படத்தை முக நூலில் பதிவிட்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் சிவராஜ பூபதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர், நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இரண்டு வழக்கறிஞர்களின் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு, 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இரு சமூகப் பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டுவது, பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதுதான் இந்தப் பிரிவுகளின் உள்ளடக்கம்.
படிக்க :
பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஷரத்து 19(1)(a) உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504, 505(2) குறிப்பிடும் கூறுகளுக்குள் வழக்குப் பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்து பொருந்தாது என்றும் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவராஜ பூபதியால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
06-01-2022 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பதிவுக்கு வருத்தம் தெரிவிக்க நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு வழக்கு 21-01-2022ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
“இராணுவத்தை கண்டு மக்கள் பயப்பட வேண்டும்”, காஷ்மீரில் இராணுவ ஜீப்பின் முன்னர் இளைஞரை கட்டி வைத்து வீதிகளில் அழைத்து சென்ற இராணுவத்தின் அடாவடியை ஆதரித்து பேசியது, காஷ்மீர் மக்கள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பேசியது, (அப்பொழுதுதான் ராணுவத்தால் திருப்பி சுட முடியும் என்ற கருத்தில்) , CAA சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பேசியது என்று மக்களுக்கு எதிராவே பேசிவந்துள்ளார் பிபின் ராவத்.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வந்த ஒருவர் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பேசி வந்த இராணுவ அதிகாரி. அவர் உயிர் இழந்துவிட்டதாலேயே, அவர் உயிரோடு இருந்த காலங்களில் அவர் தெரிவித்த மக்கள் விரோத கருத்துக்கள் புனிதத்தன்மை பெற்றுவிடுமா?
அவர் உயிரிழந்ததும் அவரை புனிதராக சித்தரித்து பிரச்சாரம் செய்யப்படுவதை,
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்துவரும் காஷ்மீர் மக்ககளின் நிலையிலிருந்தும், CAA சட்டத்தால், அகதிகளாக மாற்றப்படுவோம் என்ற அடிப்படையில் போராடும் மக்களின் நிலையிருந்தும் சிந்திக்கும்
நாட்டுப்பற்றாளர்களால் எப்படி அமைதியாக இருந்து ரசிக்க முடியும்? என்பதையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை மனுதாரருக்கு உறுதி செய்யும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த பதிவில் மன்னிப்பு கேட்கும் அளவு தவறான கருத்து இல்லை என்பதாலும் மன்னிப்பு கேட்க இயலாது என்ற நிலைப்பாடு, மனுதாரருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரபு ராஜதுரை அவர்களால் நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மாரிதாசின் மீது பதியப்பட்ட வழக்கை இரத்து செய்த உத்தரவு இந்த வழக்கிற்கும் அப்படியே பொருந்தும் என்றும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்கள், உயிரிழந்த ஒருவரை பற்றி விமர்சித்திருப்பது அடிப்படை நாகரிகமற்ற செயல் என்றும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் இதை பாதுகாக்காது, ஆனால் வழக்கு பதியப்பட்ட சட்டப்பிரிவுகள் குறிப்பிடும் வரையறைக்குள் இந்த பதிவு வராது என்று தெரிவித்தார்.
மாரிதாஸ் வழக்கை விசாரிக்கும் போது “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா” என்ற மாரிதாஸின் கருத்தையோ மாரிதாசையோ இவ்வாறு விமர்சித்து இதே நீதிபதி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததாக எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. மேலும் மாரிதாசின் பதிவு அரசியலமைப்பு சட்டம் ஷரத்து19(1)(a) குறிப்பிட்டுள்ள வரையறைக்கு உட்பட்டது என்று மாரிதாஸ் வழக்கில் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புகார் கொடுத்த பாஜக மாவட்ட தலைவர் சார்பாக முன்நிலையான வழக்கறிஞர் தனது வாதத்தில், சிவராஜபூபதி போல் பலர் வழக்கறிஞர் என்பதை கேடயமாக பயன்படுத்தி ‘பாரத் நேசனுக்கு’ எதிராக செயல்படுகிறார்கள். இவரைப் பற்றி விசாரித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துகிறேன் என்று நீதிபதியிடம் கூறினார். பாஜகவினரை பொறுத்தவரை நாட்டுப்பற்று என்பது இந்து மத சனாதன தர்மத்தின் மீதான பற்று மட்டுமேயொழிய இந்து மக்கள் மீதான பற்று கூடக் கிடையாது.
வ.உ.சி. உருவம் பதிந்த வாகனத்தை குடியரசு தின அணி வகுப்பிலிருந்து நீக்கியவர்கள் நமது தேசப்பற்றை பற்றி விசாரித்து கண்டறியப் போகிறார்களாம்.
படிக்க :
சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்
ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
நாட்டு விடுதலைக்காக போராடிய வ.உ.சி.யும் வழக்கறிஞர் என்பதும், வெள்ளையனுக்கு போட்டியாக அவர்களது தொழிலை அழிக்க நினைத்து தனது சுதேசி கப்பல் கம்பெனிக்காக தன் சொத்து முழுவதையும் இழந்தது தான் தேசப்பற்று என்பது – இந்திய அரசுக்கு சொந்தமான உள்நாட்டு நிறுவனங்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு எழுதிக்கொடுக்கும் மோடியின் பக்தர்களுக்கு எப்படி தெரியும்!, இரண்டில் எது தேசப்பற்று என்று?
இறுதியாக இந்த முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு பதியப்பட்ட செய்தி அறிந்தது முதல் மண்டியிடாமல் வழக்கு இரத்தானது வரை தோழர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், சக வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வழக்கை எதிர்கொள்ள துணை நின்றது, மேன்மேலும் களத்தில் பணியாற்ற நமக்கு மிகுந்த உற்சாகமூட்டுவதாகவும், காவி-கார்பரேட் மயமான அரசையும், பாசிச பாஜகவையும் களத்தில் எதிர் கொள்வதில் நாங்கள் தனித்து இல்லை என்பதை உணர்த்துவதற்கான மற்றுமொரு தருணமாகவும், சரியான அரசியல் திசையில், அமைப்பாக செயல்படுவதாலேயே இது சாத்தியமாயிற்று என்பதை உணர்த்தும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.