ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனம் திறந்த மடல் !
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு,
வணக்கம்.. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம்
( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்கார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் தன் புகைப்படங்களையோ, பெயரையோ குறிப்பிட்டு செய்தி வெளியிடக்கூடாதென கோரிக்கை வைத்து தொடர்ந்த வழக்கு அது.
நீதிமன்றத்தில் முருகன் IPS தொடர்ந்த மனுவிற்கு Writ Petition எண் கொடுக்கப்படவில்லை. வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அந்த மனுவை நீதிமன்ற எண் -10-ல் விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு, மனுதாரர் என்னவெல்லாம் கேட்டிருந்தாரோ அதையே உத்தரவாக பிறப்பித்தது.
படிக்க :
போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
ஒருவேளை சட்டத்தில் அதற்கு இடமிருக்கலாம்.. நீதிபதிகளுக்கு அப்படி பிறப்பிக்க அதிகாரம் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம். அது சரி அல்லது தவறென்று நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு விநோதம் இருந்தது ! என்ன தெரியுமா ?
நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு 10-09-2018-ம் தேதியன்று இணைந்து பிறப்பித்த உத்தரவு, அது ஒன்று மட்டுமே..
அன்றைய தேதியில் நீதிமன்ற எண் -10-ல் பிறப்பிக்கப்பட்ட மீதி அனைத்து உத்தரவுகளையும் நீதியரசர் கல்யாண சுந்தரம் மட்டுமே பிறப்பித்திருந்தார்.
ஆச்சர்யமாக உள்ளது தானே..
அதெப்படி ஒரே நீதிமன்ற விசாரணை அமர்வில் ஒரே ஒரு மனுவுக்கு மட்டும் இரண்டு நீதிபதிகள் இணைந்து உத்தரவை பிறப்பித்தனர் என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. கொஞ்சம் ஆழமாக தேடிய பின்னர் தான் தெரியவந்தது.
10-09-2018 -ம் தேதியில் இருந்து -14-09-2018 வரை அதாவது நான்கு தினங்கள் நீதியரசர் ஹுலுவாடி ரமேஷ் விடுப்பு என்று தெரியவந்தது. அதாவது விடுமுறையில் இருந்தார். ஆனாலும்,, அவரது பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த ஒரு மனுவிற்கு.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மனுதாரர் முருகன் IPS மீது CBCID வழக்கு பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே முருகன் IPS மீது CBCID வழக்கை பதிவு செய்து விட்டது. அதிகாரம் மிக்க மனிதர்கள் நீதித்துறையில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை இந்த சம்பவம் உருவாக்க வாய்ப்பிருக்கிறது தானே !?
ஆம்.. அந்த எண்ணத்தை சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கியது. 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக இருந்த செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சந்திப்பில் நான்கு நீதியரசர்களும் கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை. தலைமை நீதிபதியுடன் பேசித் தீர்வு காண நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து விட்டன என சொல்லி எழுந்து செல்கிறார்கள்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் குரியன் ஜோசப், செல்லமேஷ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோக்கூர்
அப்படி அவர்கள் கூறிவிட்டு சென்ற 9 மாதங்களுக்கு பிறகு தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து, நீதித்துறை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பேராபத்து, தயவு செய்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என மக்களை நோக்கி கைகூப்பிய பிறகு என்ன செய்வது ?
பின்னர், ஏதோ ஒரு வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் விடுமுறையில் இருந்தபடியே உத்தரவு பிறப்பித்த விஷயம் வெளியில் வந்து விட்டது. அதன் பிறகு, கொலிஜியம் கவனத்திற்கு சென்றதாக கருதுகிறேன். சில நாட்களில் அவரை மத்திய பிரதேச நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து விட்டது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் எத்தனையோ சிறப்பான நல்ல தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர்.
மிகுந்த வருத்தத்துடன் எழுதுகிறேன். சமீப காலத்தில் 160 ஆண்டு காலம் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிஜேபி என்ற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு, விருப்பத்திற்கு ஏற்றவாறு சாதகமான தீர்ப்புக்களை வழங்குகிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்று மக்களிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் வார்த்தைகளின் படி, நேர்மையான இந்திய குடிமகன் என்ற உரிமையிலும் உங்களுக்கு சிலவற்றை தெரியப்படுத்தும் கடமை எனக்கிருக்கிறது.
24-01-2018-ம் தேதியன்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஷயம் சர்ச்சையானது. தமிழகத்தில் இருக்கும் “நாம் தமிழர்” என்ற கட்சியின் நிர்வாகிகள் காஞ்சி மடத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மடத்தின் மேலாளர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் மனு தாக்கல் செய்கிறார்.
நீதியரசர் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் 06-12-2021- ம் தேதியன்று உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது. அதில்..
தமிழக அரசின் குறிப்பாணை எண். 3584/70-4 தேதி 23.11.1970 -ன் படி உள்ளாட்சி அமைப்புக்கள், அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினார்.
தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கம் பாடல் தானே தவிர, பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார். சன்யாசிகள் குறித்து மிக உயர்வான கருத்துகளையும் கூட அந்த உத்தரவில் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் பதிவு செய்திருந்தார்.
நீதிபதி ஸ்வாமிநாதன்
ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நான்கு தினங்களில் அதாவது
06-12-2021- ம் தேதியன்று எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.. 10-12-21-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கப்படும் தருணத்தில் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது.
இந்த விஷயம் பார்ப்பதற்கு கொஞ்சம் லேசானது போல தெரியலாம். ஆனால்,,
நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஒரு விதமான மோதல் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறேன்.
மதுரையில் இருக்கும் மாரிதாஸ் என்ற நபர் Maridhas Answers என்ற Youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருடைய ஒரே நோக்கம் இலக்கு எல்லாம் திமுக என்ற கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடு வீழ்த்துவது மட்டுமே. ஆட்சியில் இருந்தாலும்-இல்லாவிட்டாலும் திமுகவை மட்டுமே திட்டி வீடியோ போடுவார். அரசியல் ரீதியாக அவரது வீடியோக்கள் பிஜேபிக்கு ஆதரவானவை. அது அவரது நிலைப்பாடு. தவறொன்றும் இல்லை.
ஆனால்,, கடந்த 2021-டிசம்பர் மாதம் 10-ம் தேதி குன்னூரில் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிறது.
அது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவொன்றை போடுகிறார். அது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
போலீசார் கைது செய்கின்றனர்.
கொரோனா தொற்றின் முதலாம் அலை பரவல் தொடங்கியபோது தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் தான் பரவலுக்கு காரணம் என்று அவர் பேசிய வீடியோ குறித்து கொடுக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுகிறார். மாரிதாஸின் கைதை கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் செயல், என தமிழக பிஜேபியினர் பெரும் அரசியல் யுத்தத்தையே நடத்தி வந்தனர். பிஜேபியின் பல தேசியத்தலைவர்கள் கூட மாரிதாஸின் கைதை கண்டித்தனர். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
சம்பந்தப்பட்ட நபர் முழுக்க முழுக்க பிஜேபியின் அரசியலுக்கு உதவக்கூடியவர்.
ஆனால், விஷயம் அதுவல்ல.. தன் மீது போடப்பட்ட FIR – களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் இரண்டு மனுவும் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பே விசாரணைக்கு வந்தது. மனு தாக்கல் செய்த சில தினங்களில் பதிவு செய்யப்பட்ட FIR –களை ரத்து செய்ய வேண்டுமென்று உத்தரவை பிறப்பிக்கிறது நீதிமன்றம். அந்த உத்தரவு சட்டப்படியே கூட பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
மாரிதாஸ்
காவல்துறையால் பொய்யாக போடப்பட்ட FIR-ஐ ரத்து செய்யக்கோரி,,, உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபர்கள் தாக்கல் செய்யும் எல்லா மனுக்களின் மீதும் மதுரை உயர்நீதிமன்ற கிளை இவ்வளவு வேகமாக உத்தரவு பிறப்பித்துள்ளதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
சாமானியர்களுக்கும் இவ்வளவு விரைவாக நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதே நேரம், நீதிபதியின் தீர்ப்புக்கு எந்த விதமான உள்நோக்கமும் நான் கற்பிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் தீவிர அரசியல் செய்து வரும் பாஜக தங்களுடைய ஆதரவாளர்களை கண்ணின் இமைபோல பாதுகாக்க நினைக்கிறது.
அந்த கட்சி அரசியலுக்காக கையிலெடுக்கும் விஷயங்கள் எப்படி நடக்க வேண்டுமென நினைக்கிறதோ அது மதுரை உயர்நீதிமன்ற கிளை மூலமாக நடக்கிறது. அப்படியொரு தோற்றம் ஆழமாக உருவாகிறது என்பதை தலைமை நீதிபதியான தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென நினைக்கிறேன்.
கடந்த 2022 ஜனவரி மாதம் 19-ம் தேதி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி,விஷமருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில் இருக்கும் மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி அவர். 163 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி அது.
அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது முத்துவேல் என்பரால் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. அதன் பிறகு மாணவி லாவண்யாவின் இறப்பிற்கு காரணம் மதமாற்ற நிர்பந்தமே என தமிழக பிஜேபினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இறந்த மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 21-01-22 ம் தேதியன்று மனு ஒன்றை தாக்கல் செய்கிறார். அவசர வழக்காக அன்றே மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதன் பிறகு, அந்த வழக்கில் ( Crl OP(MD)No.1344 of 2022) 31-01-22-ம் தேதியன்று நீதிபதி.ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 34 பக்க தீர்ப்பொன்றை பிறப்பிக்கிறார்.
மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே தயவு செய்து அந்த தீர்ப்பை நீங்கள் படிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் மனு ஜோசப் என்பவர் கற்பனையாக எழுதிய Serious Men என்ற புத்தகத்தை மையமாக வைத்து Sudhir Mishra என்பவர் நவாஸுதீன் சித்திக்கை ஹீரோவாக வைத்து படமொன்றை இயக்கி உள்ளார். netflix-OTT தளத்தில் அந்த படம் வெளியாகியிருக்கிறது.
அந்த திரைப்படத்தில் வரும் 2 நிமிடம் மட்டுமே வரும் காட்சியில் உள்ள வசனங்களை எல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கு முன்பாக, அய்யன் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நவாஸுதீன் சித்திக், தன்னுடைய தாத்தா குளத்தில் தண்ணீர் எடுத்து குடித்தற்காக சிலர் எலும்பை உடைத்துவிட்டதாகவும், அதனால் தன்னுடைய தாத்தா சாகும் வரை கூன் விழுந்த நிலையிலேயே வாழ்ந்ததாக மிகுந்த கோபத்துடன் கூறுவார்.
தலைமையாசிரியர் அறையில் பேசப்படும் காட்சிகளை மட்டும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதால் இதையும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. தனக்கு தேவையான விஷயங்களை மட்டும் குறிப்பெடுத்து வழக்கறிஞர்கள் பேசலாம்.
பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசலாம். ஆனால்.. நீதிமன்றமே பேசக்கூடாது அல்லவா!
கற்பனையான கதையில் கதாபாத்திரங்கள் உரையாடுவதை எல்லாம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளதால், அந்த கதாபாத்திரம் பேசிய மற்ற எல்லா விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமையில்லையா ?
அதே போல மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தின் வசனங்கள். 1990- ம் ஆண்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாணக்யா என்ற தொடர் குறித்து கூட தீர்ப்பில் எழுதியுள்ளார்.
மிகுந்த பணிவுடன் கூறுகிறேன். நீதிபதி குறிப்பிட்டுள்ள திரைப்படங்கள் ஆவணப்படங்கள் அல்ல. அவை ஒரு பொழுதுபோக்கு அம்சம் நிரம்பிய திரைப்படங்கள்.
ஆனால்.. திரைப்படத்தில் வரும் காட்சிகளை, வசனங்களை எல்லாம் உண்மை என்று நீதிமன்றங்கள் எப்போது நம்பத் தொடங்கின என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கூடவே அந்த தீர்ப்பில், சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவில் கூறப்படும் விஷயம் குறித்து விசாரிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
உண்மையில் அந்த வீடியோவே சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கும் முக்கிய காரணம். அதனால் உங்களுக்கு இந்த ஒரு சம்பவத்தையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
2017, ஏப்ரல் 1-ம் தேதி ஹரியானா மாநிலம் மேவட் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெஹ்லு கான் தனது இரண்டு மகன்களான இர்ஷாத், ஆரிஃப் ஆகியோருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த அசுமத் கான் என்பவரோடு சேர்ந்து தங்களது பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க இராஜஸ்தான் சென்றார். அப்போது விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொடூரமாக தாக்குதலுக்கு ஆளான முதியவர் பெஹ்லு கான் அடுத்த இரண்டு தினங்களில் இறந்து விடுகிறார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கை இராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. 9 பேர் அந்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் சிறுவர்கள். கடந்த 14.08.2019 தேதியன்று ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட 6 நபர்களையும் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுவித்துவிட்டது.
அதோடு நிற்கவில்லை. இந்த தேசத்தையே அதிர வைத்த அந்த வீடியோவை எல்லாம் ஆதாரமாக கருத முடியாதென்றும் கூறி விட்டது. ஆனால், தமிழகத்தில் அதே விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முத்துவேல் என்பவர் எடுத்த ஒரு வீடியோவை மட்டுமே ஆதாரமாக வைத்து நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று நம்புகிறோம். எல்லோரும் பேசுகிறோம். உண்மை வேறோ என்று நினைக்கத்தோன்றுகிறது. நாம் எல்லோருமே ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றக்கூடியவர்களே. ஏதோ ஒரு கட்சியின் கொள்கை, சித்தாந்தம் பிடித்தோ, அல்லது அந்த கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டோ அதன் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.
நீதிபதியாக பதவி வகிப்போர் கூட வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். நீதிபதிகளுக்கு கூட அரசியல் நிலைப்பாடு இருக்கலாம். அது தவறொன்றும் இல்லை. ஆனால், அவர்களின் தீர்ப்பு அரசியல் கட்சிகள் செய்யும் ஆதாய அரசியலுக்கு உதவிகரமாக இருந்துவிடக்கூடாதென நினைக்கிறேன்.
படிக்க :
யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி
மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !
லாவண்யா என்ற சிறுமியின் மரணம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ள உத்தரவு, பிஜேபி என்ற அரசியல் கட்சி தன்னுடைய ஆதாயத்திற்காக கையிலெடுத்த விவகாரத்திற்கு உதவி செய்வதற்காகவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவோ என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அதனால் மீண்டும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அந்த உத்தரவை நீங்கள் படிக்க வேண்டும்.
இந்தியாவில்,, திரைப்பட வசனங்களை எல்லாம் உதாரணமாகக் காட்டி இதற்கு முன்பு இப்படி ஒரு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை மாண்புமிகு தலைமை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் நீதிமன்றங்களால் மேற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்டால் ஆபத்தானதாக மாறிவிடும் என மிகவும் அச்சப்படுகிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக கூறியதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “Justice for the Judge” புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் தொடர்பாக பல தொலைக்காட்சிகளுக்கு அவர் பேட்டி கொடுத்தார். நீதிபதிகள் மீதான சில விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, நீதிபதிகளும் மனிதர்கள் தான்-தேவ தூதர்கள் அல்ல என்று பதில் கொடுத்தார். உண்மைதானே அது..
நீதிபதிகளுக்கும் சில அரசியல் நிலைப்பாடு இருக்கலாம். அரசியல் கட்சிக்கு ஆதரவானவர்களாக கூட இருக்கலாம். தவறே அல்ல. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இந்திய நீதித்துறை செயல்படுகிறதென வெளிப்படையாகவே விமர்சனங்கள் இருப்பதை நீங்களும் அறிவீர்கள்.
பதவியில் இருந்த போதே 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மறைமுகமாக அதை மக்கள் முன்பு வெளிப்படுத்திவிட்டனர். ஒருவேளை நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாகவோ, தவறாகவோ நடக்கிறார்கள் என்றால், அவர்களை தண்டிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
சட்டத்தை வடிவமைத்தவர்களும் அப்படியான வாய்ப்புக்களை உருவாக்கவில்லை. கடந்த 60 தினங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் சில உத்தரவுகள் பகிரங்கமாகவே அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ற உத்தரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கும் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனுக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடக்கிறதோ என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் நிலவும் இந்த போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தவறான முன்னுதாரணமாகவும் மாறிவிடக்கூடாது. அந்த அக்கறையின் அடிப்படையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன். இதை நீங்கள் மனுவாகவும் கூட கருதலாம்.
அதிகாரம் மிக்கவர்கள், செல்வாக்கானவர்களால் நீதிமன்றத்தில் தங்களுக்கு ஏற்றவாறு காரியத்தை சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்ற நீதித்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருக்க, பிஜேபி என்ற கட்சி அரசியலுக்காக கையிலெடுக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு, அதன் நிர்வாகிகள் விரும்புவது போல நீதிமன்றம் மூலமாக உத்தரவுகளை பெறுகிறதோ என்ற பிம்பம் ஏற்படுவது நல்லதல்ல என்பதை மிகுந்த கவனத்தோடு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
அது ஒரு குடிமகனாக என்னுடைய கடமை என்றும் கருதுகிறேன். மனிதர்கள் எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் நீதிபதிகள் கொஞ்சமாவது
விதி விலக்கானவர்களாக இருக்க வேண்டியது அவசியமில்லையா ?
B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்
முகநூலில் : Aravind Akshan
disclaimer