மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்

சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை உணர்வு தான் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு; இதுதான் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு.  இவற்றை வரித்துக் கொண்டு  பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம் சுற்றி வளைக்கும் பாசிச படையை வீழ்த்துவோம்!

சுற்றி வளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு!
துவளாது போராடு!

மே1 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்

துரையில் 15.03.2023 அன்று  பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிரான இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தவும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம்,புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி  ஆகிய தோழமை அமைப்புகள் முன்னெடுத்து மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் (SKM), மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி, தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், குத்தகை விவசாயிகள் சங்கம், பெண்கள் கூட்டமைப்பு  ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் கலந்துகொண்டு தங்களுடைய ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்  வைத்து மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு தோழர்.ரவி தலைமை தாங்கினார்.

தலைமை உரையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் எப்படி தமிழ்நாட்டிலும் குறிப்பாக மதுரையிலும் வளர்ந்து வருகிறார்கள் என்பதையும் அவர்கள் மக்களை கடும் பிற்போக்கிற்கு ஆழ்த்தி மக்களின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் விடுதலைப் போராட்ட மரபையும் ஒழித்துக் கட்ட எப்படி  வேலை செய்கிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து மக்களிடம் செல்ல வேண்டிய தேவையை முன் வைத்தார்.

அடுத்ததாக உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் எப்படி மாநில உரிமைகளை பறிக்கிறது? எப்படி இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேலை செய்கிறது?கல்வி உரிமையை ஒழித்துக் கட்டும் வேலைகளையும், நீதிமன்றங்கள் பாசிச மயமாக்கப்படுவதையும், இணையதளங்களை கட்டுப்படுத்த கொண்டுவரப்படும் சட்டங்களையும், காடுகள், மலைகள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படும் சட்டங்கள் பற்றியும்  விளக்கினார். மேலும் எப்படி தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. இதேபோல் கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்களும் எப்படி எதிர்த்து நிற்கிறார்கள் இந்த எதிர்ப்புகளை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் எப்படி ஒழித்துக்கட்ட வேலை செய்கிறது என்பதைப் பற்றியும், இந்த பிரச்சனைகளை மக்கள் மத்தியில்

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி

கொண்டு போய் அம்பலப்படுத்தி மக்களை உணர்வூட்ட வேண்டிய தேவையும் வலியுறுத்தி ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மாநாட்டிற்கு ஆதரவையும் மாநாடு வெற்றிகரமாக நடக்க இணைந்து மக்களிடம் வேலை செய்வதையும் முன்வைத்து  பேசினார்.

அடுத்ததாக பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் பேசும் போது டெல்லி விவசாயிகள்  எதிரியை புரிந்து வைத்திருந்தார்கள் அதனால்தான் அப்படிப்பட்ட வீரியமான போராட்டத்தை முன் எடுத்தார்கள்  என்பதையும், தமிழ்நாட்டை உறவாடிக் கெடுக்கும் யுத்தியை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் எப்படி செய்கிறது என்பது பற்றியும்  பேசினார் இந்த பாசிசத்தை வீழ்த்தும் மாபெரும் பணியை நாம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிராக யார் நிகழ்வு நடத்தினாலும் அதில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும் அதுவே மக்கள் எழுச்சி உருவாக்கி பாசிசத்தை வீழ்த்தும் என முன்வைத்து பேசினார்.

இதன்பிறகு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

முதலில் பேசிய ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானம் அவர்கள் பேசும்போது மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து பணி செய்த அனுபவத்தையும் டெல்லி விவசாயிகள் போராட்ட அனுபவத்தையும் விளக்கமாக பேசினார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பயங்கரவாத கும்பலை வீழ்த்த நாம் இன்னமும் கூட்டமைப்புகளை வலுப்படுத்துவோம்,மாநாட்டின் வேலைகளில் கலந்து கொண்டு  மாநாட்டை வெற்றி பெற செய்வோம் என உற்சாகத்துடன் பேசினார்.

அடுத்ததாக மாநாட்டை வரவேற்று பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேக் அவர்கள் பேசும்போது பல்வேறு இளம் தலைமுறையினர் மாணவர்கள் போதை சீரழிவு கலாச்சாரத்தில் சிக்கி நாசமாகின்றனர் அவர்களை இந்த போராட்ட பாதைக்கு அழைத்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசி முடித்தார்.

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!

அடுத்ததாக பேசிய தமிழ் தேச மக்கள் முன்னணியின் மாவட்ட குழு தோழர் தெய்வம்மா கிராமங்கள் நகரங்கள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்வது பற்றியும் சாதி சங்கங்களில் ஊடுருவி வேலை செய்வது பற்றியும் இதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களையும் நாம் தொடர்ந்து மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக கருத்து தெரிவித்த எஸ்.டி.பி.ஐ (SDPI)  கட்சியின் மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் அவர்கள் சுதந்திரத்திற்காக போராடியதை விட நான்கு மடங்கு அதிகமாக பாசிசத்திற்கு எதிராக போராட வேண்டியுள்ளது. நாம் சோர்வுடையாமல் தொடர்ந்து விடாமல் போராட வேண்டும். கூட்டம் நடத்துவது என்று மட்டும் நாம் இல்லாமல் களத்தில் அதிகமாக இறங்க வேண்டும் அப்படி இடைவிடாமல் தொடர்ச்சியாக போராடினால் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். நாட்டைக் காக்க லட்சியத்துடன் களம் இறங்குவோம் என்பதை வலியுறுத்தி பாசிசத்திற்கு எதிரான இந்த மாநாட்டை  வரவேற்று பேசி முடித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் அவர்கள் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் விசமத்தனங்களை அம்பலப்படுத்தினார். சனாதானத்திற்கு எதிரான தங்கள் செயல்பாட்டையும் அதற்காக களத்தில் எப்போதும் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியும் மாநாட்டிற்கு எங்கள் தலைவரையும் அழையுங்கள் சனாதனத்திற்கு எதிராக எங்கும் களத்தில் பேச தயாராக உள்ளோம் என்பதைப் பேசி மாநாட்டிற்காக பல்வேறு பகுதிகளில் அங்குள்ள தலைவர்களை வைத்து  மக்களைத் திரட்டி கூட்டங்கள் நடத்துவோம் மாநாட்டிற்கு வரச் சொல்லி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம்  என வரவேற்று இன்னும் ஒன்றிணைந்து களத்திற்கு செல்வோம் என்பதை வலியுறுத்தினார்.

அடுத்ததாக பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முன்னாள் செயலர் தோழர் கதிரவன் அவர்கள் பேசும் போது மே 1ல் அமைப்பு முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களையும் நினைவு கூர்ந்தார். ஏகாதிபத்திய அடிமைத்தனத்திலிருந்து போதை கலாச்சாரத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் களத்தில் இறக்க வேண்டும்  என்பதை பேசினார்.

அடுத்ததாக பேசிய பெண்கள் கூட்டமைப்பு தோழர் நிவேதா அவர்கள் இந்தக் கூட்டம் இந்தத் தருணத்தில் மிகவும் சரியானது என்பதையும் நாம் கிராமங்கள் தோறும் செல்ல வேண்டும்; பெயரளவிற்கு இல்லாமல் களத்தில் செயல்பட வேண்டும் என்பதை முன் வைத்தார் ஒன்றிணைந்து மாநாட்டை வெற்றி பெற செய்வோம் என வரவேற்று பேசினார்.

அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட நிதிச் செயலாளர் நீதி வேந்தன் அவர்கள் மாநாட்டிற்கு வாழ்த்து சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும் சிறுபான்மையினரையும் அடக்கி ஒடுக்கும் சுரண்டிக் கொளுக்கும் இந்த பாசிச கும்பலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் அதற்கு தமிழ் புலிகள் துணை நிற்போம் என பேசி முடித்தார்.

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | சுவரொட்டி – 1

அடுத்ததாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோழர் ரவிவர்மா பேசும்போது மக்கள் மத்தியில் பாசிசத்திற்கு எதிராக நாம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பேசினார் பாசிசத்தை வீழ்த்துவதன் அவசியத்தையும் தேவையையும் வலியுறுத்தி பேசினார்.

குத்தகை விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பகத்சிங் அவர்கள் பேசும்போது தெருவில் இறங்கி தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். நம்முடைய ஒவ்வொரு நிமிடத்தையும் பாசிசத்தை வீழ்த்துவதற்கு பயன்படுத்துவோம் அனைவரும் களத்தில் இறங்குவோம். அனைவரும் இணைந்து மாநாட்டை வெற்றி பெற செய்வோம்  என்பதை உறுதியாக பேசினார்.

இறுதியாக பேசிய வழக்கறிஞர் நரேஷ் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களுக்கும் அவர்களின் துன்ப துயரங்களுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் என்பதை அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துச் சொல்ல வேண்டும் அதற்கு மக்களிடம் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

மக்கள் அதிகாரத்தின் மண்டல பொருளாளர் தோழர் சிவகாமு நன்றி உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை ஒழித்துக் கட்ட ஒன்றிணைய வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாசிசத்தை வீழ்த்தும் இந்த மாபெரும் கடமையை செய்து முடிப்போம் என ஆணித்தரமாக பேசி முடித்தார்.

ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் களத்தில் இறங்க வேண்டியும் ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் செல்வோம் என்பதையும் உத்தரவாதப்படுத்தியுள்ளனர். இந்த சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை உணர்வு தான் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு; இதுதான் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு.  இவற்றை வரித்துக் கொண்டு  பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம் சுற்றி வளைக்கும் பாசிச படையை வீழ்த்துவோம்!

தகவல்,
மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு,
மதுரை மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க