Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 644

முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்

27

மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் கொட்டத்தை அடக்கிய தொழிலாளர் வர்க்கம்

துரை மாவட்டம், யானை மலை ஒத்தக்கடை சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் நிறைந்த ஊர். எந்நேரமும் சம்மட்டி ஒலி கேட்டுக் கொண்டே ஒரு துணை நகரம் போலவே இயங்கி கொண்டிருக்கக்கூடிய இடம். ஒத்தக்கடையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியத் தொழிலாக ஊரின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழில். இங்குள்ள பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரமாக உயர்ந்து நிற்கின்றன எவர் சில்வர் பட்டறைகள்.

எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்
எவர்சில்வர் பாத்திர தொழிலாளர் (படம் : நன்றி தி ஹிந்து)
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-shine-for-workers-of-stainless-steel-utensil-manufacturing-units/article1141581.ece

நாடெங்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிறு தொழில்களும், விவசாயமும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளால் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த‌ எவர்சில்வர் தொழிலின் எதிர்காலமும் கேள்விக் குறியாகியிருக்கிறது.

பிளஸ்மா வெல்டிங்கை எதிர்த்து போராட்டம்

இந்நிலையில் தற்போது எவர்சில்வர் தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கும் எமனாக வந்து நிற்பது பிளாஸ்மா வெல்டிங் மிஷின். இந்த மிசின் மூலம் வெல்டர், டிங்கர் இல்லாமல் ஒரு நாளைக்கு 5,000 பீஸ்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். வெறும் 8 அல்லது 10 பிளாஸ்மா வெல்டிங் மிசின் மூலம் ஒத்தக்கடையில் இப்போது உற்பத்தியாகின்ற அளவு பீஸ்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால் வெல்டிங் டிங்கர் தொழிலாளர்கள் சுமார் 200-க்கு மேற்பட்டோர் உடனடியாக வேலை இழப்பார்கள். மீதமுள்ள தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள். இது கற்பனையல்ல, ஏற்கனவே “பிளாஸ்மா” வெல்டிங், அனுமதிக்கப்பட்ட மதுரையின் பிறபகுதிகளிலும் மற்றும் காரைக்குடி, கும்பகோணம் திருப்பூரிலும் மற்றும் ஒத்தக்கடையில் வேறு சில பிரிவுகளிலும் வெல்டிங், டிங்கர் தொழிலாளர்கள் வேலையிழந்து தொழிலை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் கும்பகோணம் பகுதி தொழிலாளர்கள் வட்ட பிளாஸ்மா வெல்டிங்கை எதிர்த்து விடாப்பிடியாக போராடி வருகின்றனர்.

வேலையை பறித்து வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் சில உற்பத்தியாளர்கள்

ஆலைகள் முதல் சாலைகள் வரை உணவுப் பொருட்கள் முதல் இயந்திரங்கள் வரை அனைத்தையையும் படைத்தளிப்பவர்கள் உழைப்பாளி மக்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை வறுமையில் தள்ளும் எதையும் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்ல முடியாது. அநாகரிகம், மூர்க்கம் நிறைந்த கொடும் மனம் படைத்தோரின் செயல் என்றுதான் அதை சொல்ல முடியும். மலம் அள்ளுவது, சாக்கடை வாருவது போன்ற தொழில்களில் நவீனத்தை கொண்டுவர துப்பில்லாத, விருப்பமில்லாத ஆட்சியாளர்கள்தான் இன்று வளர்ச்சி முன்னேற்றம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து விரட்டுகிறார்கள். சிறு தொழில்கள் அழிக்கப்படுகின்றன, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலைத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலையிருந்து விரட்டப்படுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.

ஒத்தக்கடையில் பிளாஸ்மா வெல்டிங்கை கொண்டுவந்து எவர்சில்வர் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டத் துடிக்கிறார்கள் சில உற்பத்தியாளர்கள். அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்து எவர்சில்வர் தொழிலாளர்களின் உழைப்பால் இன்று கோடீஸ்வரராகிவிட்ட, தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கு வந்த காதர் பாய் என்பவர் மிகவும் முக்கியமானவர். இவர் தனது மகன் மற்றும் சில எடுபிடிகளின் மூலம் பிளாஸ்மா வெல்டிங் மிசின் கொண்டு வந்து, பல ஆண்டுகள் தன்னிடம் உழைத்த தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தி விட்டார். ஒரு பக்கம் இன்னும் பல கோடிகளை சேர்க்க வேண்டும் என்கின்ற லாப வெறியில் காதர் பாய் எனில் இன்னொரு பக்கம் கேள்விக் குறியாக நிற்கும் பல நூறு தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும்.

காதர் பாய் முகத்தில் கறி

இந்நிலையில் ஒத்தக்கடை எவர்சில்வர் வெல்டர்‍‍, டிங்கர் சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள், ஒத்தக்கடையில் உறுதியான முடிவோடு பிளாஸ்மா வெல்டிங் மிசினை எதிர்த்து தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு அஞ்சி தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்க கூடிய பிளாஸ்மா வெல்டிங்கை ஒத்தக்கடையில் வைக்காமல் அதற்கு அருகில் உள்ள திருமோகூரில் குமார், கண்ணன் ஆகிய நபர்களோடு சேர்ந்து வைக்க முயற்சிக்கின்றனர். ராமு, கணேசன் ஆகியவர்களை துணையாக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் எங்களுக்கு பாதுகாப்பாக திருமோகூர் மக்கள் இருப்பார்கள் என்று சொல்லி திரிந்து கொண்டு பிளாஸ்மாவை வைத்து உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இந்த அநியாயத்தை எதிர்த்து போராடினால் ஊர்ப்பிரச்சினையை தூண்டிவிட காத்திருந்தார் காதர்பாய். இவரின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்களும் சங்கமும் காதர்பாயின் லாப நோக்கத்தையும் தொழிலாளர்களின் வாழ்நிலையையும், தொழிலாளர் பக்கம் உள்ள நியாயத்தையும் விளக்கி பிரசுரம் தயாரித்து திருமோகூரிலேயே வீடு வீடாக பொதுமக்களிடம் வினியோகித்தனர். திருமோகூர் மக்களும் தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ” நாங்கள் யாரும் காதர் பாயையும் அவருடைய ஆட்களையும் ஆதரிக்க மாட்டோம், நாங்கள் எல்லாரும் உங்களுடைய பக்கம்தான், நீங்கள் தைரியமாக போராட்டத்தை தொடருங்கள்” என்று கூறி காதர்பாய் மற்றும் அவரது அல்லக்கைகளின் மூஞ்சியில் கரியை பூசினார்கள். ஆனால் ஆத்திரம் தலைக்கேறிய காதர்பாயும் அவரது மகன் ஜாஹீரும் பிளாஸ்மாவை எப்படியும் கொண்டு வந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

இந்நிலையில் பிளாஸ்மா வெல்டிங் வருவதை கண்டித்து 3‍/7/14 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி வேண்டி ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மனு செய்தார்கள் சங்கத் தொழிலாளர்கள். விசயமறிந்த காதர்பாய் உடனே சங்கத்தின் சார்பாக போடப்பட்டிருந்த பிரசுரத்தை எடுத்துகொண்டு வந்து ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை சந்தித்து “சங்கத்தை சேர்ந்தவர்கள் எனது தொழிலுக்கு தடையாக இருப்பதோடு எனது கௌரவத்தை சீர்குலைத்து வருகிறார்கள் அதனால் இந்த ஆர்ப்பாட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார். அதோடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துள்ளார். அதற்கு விசுவாசமாய் “நீங்கள் போய் வாருங்கள் நான் கவனித்து கொள்கிறேன்” என நம்பிக்கையூட்டி காதர்பாயை அனுப்பி வைத்துள்ளார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

2/7/14 அன்று இரவே, “எவர்சில்வர் தொழிலில் பிளாஸ்மா என்கிற வெல்டிங்கை புகுத்தி பல குடும்பங்களை அழிக்கத்துடிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காதர்பாயை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என சங்க சுவரொட்டிகள் பளிச்சிட்டன. சுவரொட்டியை கண்டதும் காதர்பாய் வயிற்றில் புளியும், ஆய்வாளர் கிருஷ்ண்குமாருக்கு காதர்பாயின் பாக்கெட் மீதான விசுவாசமும் சுரந்தது.

3/7/14 அன்று காலை 10 மணி அளவில் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காவல் நிலையம் வந்தவுடன் இருப்புகொள்ளாமல் சங்க பொறுப்பாளர்களை போனில் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேச உடனே வருமாறு அழைத்தார். உடனே சங்கத்தின் தலைவர் வீரர் அலி, செயலர் மாரிமுத்து மேலும் சில தொழிலாளர்களும் காவல் நிலையத்திற்கு சென்றார்கள்.

ஆய்வாளரை சந்தித்ததும் அவர்களிடம் “பிளாஸ்மா வெல்டிங் என்று கூறிவிட்டு தனிநபரான காதர் பாயை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். இது சட்டப்படி தவறு” என்று மிரட்டும் தொனியில் பேசினார். எப்படியாவது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று “என்ன செய்ய போகிறீர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று திரும்ப திரும்பக் கேட்டுள்ளார் ஆய்வாளர்.

அதற்கு “பிளாஸ்மா வெல்டிங் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வாழ்வை அழிக்கிறது, அதைக் கொண்டு வருபவர் காதர்பாய் அதனால்தான் அவரையும் பற்றி பேசி வேண்டியுள்ளது” என்று சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது அல்லது கட்டப் பஞ்சாயத்து செய்து காதர்பாயின் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பது என்ற சீரிய லட்சியத்துடன் தீவிர முயற்சி செய்தார் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்.

தொழிலாளர்களோ ஆய்வாளரின் நோக்கத்தை புரிந்து கொண்டு பணிய மறுத்தார்கள். உடனே ஆத்திரம் தலைக்கேறிய ஆய்வாளர் எழுந்து கிறுக்கனைப்போல் காவல் நிலைய வாயிலில் ஒட்டப்பட்டிருந்த சங்க சுவரொட்டியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து “என்ன தைரியமிருந்தால் பேரு போட்டு ஒட்டுவீங்க, எல்லோரும் உள்ள தான் போகப்போறீங்க. யோவ் ஏட்டு! எல்லோர்ட்டயும் இருக்கிற செல்போனை புடுங்குய்யா” என்று சொல்லிக் கொண்டே தனது நோக்கத்திற்கு சங்க நிர்வாகிகள் மசியாததால் சங்கத்தலைவர் வீரர் அலியை அடிக்க கை ஓங்கியுள்ளார்.

உடனே “எதுக்கு சார் அடிக்க வர்றீங்க, நாங்க எங்க தரப்பு நியாயத்தை பேசப்போறோம், நீங்க கேசு போடணும்னா போட்டுகொள்ளுங்கள். நாங்கள் பார்த்துகொள்கிறோம்” என ஆய்வாளரை எதிர்த்துப் பேசியுள்ளார் வீரர் அலி. எதிர்கேள்வியை சகித்துகொள்ள முடியாமல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அருகில் நின்று கொண்டிருந்த சங்க தொழிலாளர்களை மூர்க்கத்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். ஆய்வாளரின் மூர்க்கத்தனமான இந்த தாக்குதலினால் சங்கத்தை சேர்ந்த படையப்பா செந்தில் என்ற தொழிலாளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

ஆய்வாளரை சங்க‌ தோழர்கள் சந்திக்க போயிருப்பதை அறிந்த சில தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்திருக்கிறார்கள். காவல் நிலையத்திற்குள் பேசவேண்டும் என அழைத்து சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் அடித்து உதைத்து ரவுடியை போல் ஆய்வாளர் நடந்து கொள்வதை தெரிந்து கொண்ட அத்தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் இணைச்செயலாளருமான வாஞ்சிநாதனுக்கு தொலைபேசியில் காவல் நிலையத்தில் நடக்கும் விசயங்களை தெரிவித்துள்ளனர்.

உடனே வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் அடாவடித்தனத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். இதனால் தொழிலாளர்கள் ஆத்திரம் கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.  எனவே, உடனே சங்க தோழர்களை வெளியே விடச்சொல்லியும், இதற்கு காரணமான கிருஷ்ணகுமார் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்துள்ளார்.

கண்காணிப்பாளரிடம் தன் மீது புகார் போனதை அறிந்ததும் பம்ம ஆரம்பித்தார் கிருஷ்ணகுமார். காவலர்களிடம் “யோவ் இவங்களோட செல் போனையெல்லாம் திருப்பிக் கொடுத்துடு” என்று ஆணையிட்டார். தொழிலாளர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சங்க தொழிலாளர்களை பார்த்து ” நீங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டீங்க, கொடுத்திட்டேன், இனியும் ஏதாவது உதவி வேண்டும், அனுமதி வேண்டும் என்றாலும் வாருங்கள், எந்த உதவி என்றாலும் செய்து தருகிறேன்” என நைச்சியமாக பேச ஆரம்பித்துள்ளார்.

சங்க தோழர்களிடம் “உங்க சங்கத்தின் சட்ட ஆலோசகர் யாரு?” எனக் கேட்டுள்ளார் கிருஷ்ணகுமார். தோழர்கள் வாஞ்சிநாதன் என்று சொல்ல, இன்று ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுவதும் வாஞ்சிநாதன் தான் என்பதை கேட்டு அறிந்து கொண்ட கிருஷ்ணகுமார் “வாஞ்சிநாதன் ஒரு கூட்டத்தில் என்னோட‌ சட்டையை கழட்ட வைப்பேன் என்று சொல்கிறார் . அதை கேட்டதும் எவ்வளவு மனது கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக நடக்கிறவன், என்னை இப்படி பேசலாமா?” என மாலை மாலையாக கண்ணீர் வடித்து அழுது தொழிலாளர்களிடம் சுய பச்சாதாபம் தேட நாடகம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

விசயம் என்னவெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று பு.ஜ.தொ.மு. தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தபோது கூட்டத்தன்று காலையில் தோழர்களிடம் வந்து “யாரைக் கேட்டுகூட்டம் நடத்துகிறீர்கள்” என பவுசாக கேட்டுள்ளார்.

தோழர்களோ, “தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றுவிட்டோம்” என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, “எனக்கு தெரியாமல் கூட்டம் நடத்துவீர்களா, உங்களை எல்லாம சுட்டுவிடுவேன்” என்று திமிர்த்தனத்துடன் பேச, “அனுமதி அளித்தவரிடம் போய் கேளுங்கள்” என்று பதிலளித்துவிட்டார்கள். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில்தான் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆய்வாளரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், “நாங்க நினைச்சா நீ காக்கி சட்டையே போட முடியாது, சட்டையை கழற்றிவிடுவோம்” என்று இவரை கண்டித்தும் பேசியது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் சங்க நிர்வாகிகளிடம் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

மீண்டும் பிரச்சினைக்கு வருவோம். காவல் நிலையத்திற்கு வெளியே நிற்கின்ற தொழிலாளர்கள் காவல்நிலையத்திற்குள் நடக்கின்ற அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அணிதிரள ஆரம்பித்துள்ளார்கள். சில நிமிடங்களில் 200-க்கும் மேலான தொழிலாளர்கள் திரண்டவுடன் நிலைமையை உணர்ந்துகொண்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஏற்கனவே தன் மீதுகண்காணிப்பாளரிடம் புகார் போய்விட்டது. தான் அடித்ததில் ஒரு தொழிலாளி (படையப்பா செந்தில்) பாதிக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் புரிந்துகொண்டு சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் வெளியில் செல்லலாம் எனச் சொல்லியுள்ளார். எதுவுமே நடக்காதது போல் பல்லைக் காட்டி இளித்து பேசி அனுப்பி வைத்துள்ளார் கிருஷ்ணகுமார்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த தொழிலாளர்கள், ஆய்வாளரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட படையப்பா செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் இராசாஜி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து பேரணியாக திரண்டுவந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கண்டன உரையாற்றினார். பின்னர் தொழிலாளர்கள் மொத்தமாக சென்று காவல்நலைய கண்காணிப்பாளரை சந்தித்து ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளை புகாராக அளித்தார்கள்.

தொழிலாளர்கள் அளித்த புகாரின் விளைவாக ஆய்வாளர் கிருஷ்ண்குமார் ஆயுதபடை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் ஒத்தக்கடையில் பணிபுரிந்த காலத்தில் எல்லா சமூக நல அமைப்பை சேர்ந்தவர்களையும் தான் சொல்லி கேட்காவிட்டால் காவல்நிலயத்திற்கு அழைத்து தாராளமாக அடிப்பார். கட்டப்பஞ்சாயத்து செய்து பச்சையாக ரவுடித்தனம் செய்வார். லஞ்ச லாவண்யங்களில் ஊறித்திளைத்து, மக்களின் பிரச்சினைகளை ஒட்டி சுவரொட்டி ஒட்டினால் கூட கூப்பிட்டு வைத்து மிரட்டுவார். சுருக்கமாக சொன்னால் சினிமா போலீசை போல் நடந்து கொள்வார். அப்படியெல்லாம் கொட்டமடித்த ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதும் ஒத்தகடையின் சகல பிரிவு மக்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டார்கள்.

கிருஷ்ணகுமாரின் தினவெடுத்த அடாவடித்தனங்களால் வெறுத்து போயிருந்த ஒத்தக்கடை பொதுமக்கள், தொழிலாளர்கள், சமூக நல அமைப்புகள் அனைவரும் வெல்டிங்‍‍‍,டிங்கர் சங்கத்தையும் சங்கத் தொழிலாளர்களையும் பாராட்டினார்கள்.

ஒற்றுமையாய், ஒரு அமைப்பாய் தொடர்ச்சியாக போராடினால் தொழிலாளிவர்க்கம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை சகல தரப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ளது, முத்தாய்ப்பாக படையப்பா செந்திலை தாக்கியதற்காக ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது தனிப்பட்ட வழக்கு நீதிமனற‌த்தில் தொடுக்க இருப்பதை கேள்விப்பட்ட ஆய்வாளர் கிருஷ்ணகுமார் “வழக்கு எதுவும் போட வேண்டாம். நாம் வெளியே பேசித்தீர்த்துக் கொள்வோம்” என்று ஒத்தக்கடையில் தற்போது பணியில் இருக்கும் துணை ஆய்வாளர் மூலம் சமாதானத் தூது அனுப்பியிருக்கிறார்.

தொழிலாளர்களோ முகத்தில் அறையும் வகையில் அதை மறுத்துவிட்டார்கள்.

அதன் பின் 10/7/2014 அன்று காதர்பாயை கண்டித்து தொழிலாளர்களின் நியாயத்தை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களும் மாற்று சங்க நிர்வாகிகளும் பொது மக்களும் திரளாக வந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளும் உரையாற்றினார்கள். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இது ஒத்தக்கடை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

ஒத்த‌க்கடை வாழ் உழைக்கும் மக்களின் நம்பிக்கையின் ஒலிக்கீற்றாய் புரட்சிகர இயக்கங்களும் அதன் தலைமையில் இயங்கும் சங்கங்களும் விளங்கி வருவதை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

தகவல்
மதுரை மாவட்ட எவர்சில்வர் வெல்டர்‍ டிங்கர் தொழிலாளர் சங்கம்

குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?

3

குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ? – 1  மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்

2004-ல் நடந்த கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. காலம் தாழ்த்தி வந்துள்ள இத்தீர்ப்பில் உயரதிகாரிகள் பலரை அரசே விடுவித்திருப்பதும், எந்த அதிகாரமும் இல்லாத எழுத்தர்கள், சமையல்காரர் போன்றோர்களுக்கு, பள்ளி தாளாளருக்கு இணையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதையும் பார்க்கையில் பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சற்றும் குறையாத வகையில் இழுத்தடிக்கப்பட்டுதான் இந்த தீர்ப்பே நமக்கு கிடைத்துள்ளது.

இந்த விபத்து நடந்த பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரைகளை எந்த தனியார் பள்ளியும் மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை என்பதுதான் கடந்த பத்தாண்டு கால அனுபவம். கட்டண நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட சிங்காரவேலர் கமிட்டியையும் தங்களது கால் தூசுக்கு சமமாக கூட எந்த தனியார் பள்ளி முதலாளிகளும் மதிக்கவில்லை. மக்களும் வேறு வழியேயில்லாத காரணத்தால் தனியார்மய மோகத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். “பொதுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தவும், தாய்மொழி வழிக் கல்விக்கு சாவுமணி அடிக்கவும், கல்வித் தந்தைகள் கண்மூடித்தனமாக மக்களை சுரண்டி கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் இந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் வலிய வந்து தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் குறைத்து விடாது” என்கிறார் மூத்த கல்வியாளர் திரு. எஸ்.எஸ். ராஜகோபாலன்.

இது குறித்து அவருடன் நடத்திய உரையாடலை கீழே தொகுத்து தருகிறோம்.

ss-rajagopalanகும்பகோணம் தீ விபத்தை ஒரு ஓலைக் கூரை பிரச்சினையாக திசை திருப்பிய அரசு, முதலில் இருந்தே வழக்கில் காலம் தாழ்த்தும் வேலையை செய்து வருகிறது. இப்படி வகுப்பறைக்கு அருகில் சமையற் கூடம் அமைக்க சமூக நலத்துறை ஒப்புதல் கொடுத்திருப்பதால் இதுவும் அரசின் பொறுப்புதான். இச்சம்பவத்திற்கு பிறகு சில அரசுப் பள்ளிகளுக்கு நான் சென்று பார்த்த போது கூரைகளை மட்டும் அகற்றியிருந்தார்கள். பதிலுக்கு எதனையும் கொண்டு மேலே மூடாத காரணத்தால் குழந்தைகள் வெயிலிலும், மழையிலும் துன்பப்படுவதுதான் எல்லா இடங்களிலும் நடைபெற்றது. “ஏன் கூரை போடவில்லை என்று கேட்டால், அரசாங்கம் தான் ஓலை கூரையை எடுக்கச் சொன்னார்கள். அவர்கள்தான் பதிலுக்கு எதைப் போட வேண்டுமோ அதைப் போட வேண்டும், நாங்கள் இதில் என்ன செய்ய முடியும்” என்றார்கள். ஏனென்றால் அது அரசுப்பள்ளி. இதுதான் நிலைமை.

விபத்து நடந்த பள்ளியில் அன்று ஆசிரியர்கள் குழுந்தைகளைப் பூட்டி வைத்து விட்டு கோவிலுக்கு போயிருக்கிறார்கள். பள்ளி நேரத்தில் ஆடி வெள்ளிக்காக ஆசிரியர்கள் சிவன் கோவிலுக்கு போனதை எப்படி அனுமதிக்கிறார்கள். இதில் இசுலாமியர்களுக்கு பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே விதிவிலக்கு தரப்பட்டிருப்பினும், அவர்கள் மதிய உணவு இடைவேளை போன்ற ஓய்வு நேரத்தில் தான் தொழுகைக்கு செல்கின்றனர். எனவே ஆசிரியர்கள் குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு சென்றது தவறு.

கீழ்தளம் தமிழ் வழி அரசு உதவி பெறும் மாணவர்களுக்கானது. அப்படி சொல்லித்தான் அரசிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கில மீடியம் படிப்பவர்கள் படி ஏற முடியாது என்று சொல்லி தமிழ் மீடியம் படிப்பவர்களை இரண்டாவது மாடிக்கு மேலே அனுப்பி இருக்கின்றனர். இது அப்பட்டமான விதிமீறல்

கும்பகோணம் பள்ளி தீவிபத்துஎழுத்தருக்கு தண்டனை என்பது ஏற்க முடியாது. அவருக்கு எந்தவித கருத்து சொல்லும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது. ஆனால் கல்வி இயக்குநரை அரசே வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இவர்தான் 126 ஆசிரியர் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து அதனால் சுப்ரீம் கோர்ட்டில் கண்டனம் பெற்றவர்; அவர் அந்த அனுமதி கொடுத்த நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை. அவரை வழக்கில் இருந்து விடுவித்தது மாபெரும் தவறு.

இந்த சம்பவத்திற்கு பிறகும் கூட உதவி பெறும் பள்ளியின் வளாகத்திலேயே மெட்ரிக் பள்ளிகளையும் இயங்க அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு கட்டிடங்களில் தான் இயங்க வேண்டும் என்கிறது சட்டம். பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலம் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்பது தனியார் பள்ளி முதலாளிகளின் தொடர்ச்சியான தலையீட்டினால் இப்போது அறுபது சென்டு என்ற நிலைமைக்கு வந்து விட்டது. பள்ளி வளாகத்தில் பிற பள்ளிகளோ அல்லது வணிக நிறுவனங்களோ இருக்க கூடாது என்பது சட்டம். இதனை எல்லாம் தடுத்து நிறுத்தும் விதமாக செயல்பட்டிருக்க வேண்டியவர்களான அரசோ கல்வித்துறையோ இந்த விபத்திற்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்கப்படவில்லை. என்பதுதான் ஏமாற்றத்திற்குரியது.

இதுதவிர பல விபத்துக்கள் பள்ளிகளுக்குள் நடக்கின்றன. தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தைகள் இறந்து போவது, மூடியில்லாத, சுவரில்லாத கிணற்றில் தவறி இறந்து போவது என பள்ளி வளாகத்திற்குள் விபத்துக்கள் நிறையவே நடக்கிறது. அதில் ஆக மோசமானது குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். பாலியல் தொந்திரவு செய்யும் ஆசிரியர்களை இட மாற்றுதல் மட்டும் செய்கிறார்கள். மாறுதலாகிப் போய் செல்லும் இடத்திலும் அவர் அதே தவறை செய்வார். இது ஒரு குற்ற நடவடிக்கை. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை மனநோய் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி தற்போது இருக்கும் இடம் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தம் என்பதால் தமிழக அரசு அந்த இடத்தை 99 வருசத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஒரு குடியிருப்பு உருவாகையில் பூங்கா, பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியன கட்டாயம் அப்பகுதியில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கான இடம் முறையாக முன்னரே ஒதுக்கப்படுகிறது. அப்படி அரசால் பள்ளிக் கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உருவான பள்ளி தான் பத்மா சேஷாத்ரி பள்ளி. இப்படி ஒதுக்கப்படும் நிலத்தில் பள்ளி நடத்துவதற்கான விண்ணப்பம் கோரும் அரசு விளம்பரம் நீதிமன்ற கண்துடைப்புக்காக மட்டுமே வெளியாகும். இது யாருக்கும் தெரியாத அளவில்தான் பெரும்பாலும் பத்திரிகைகளில் ஒரு ஓரமாக வெளியாகும். அப்படி உருவான பத்மா சேஷாத்ரி பள்ளிதான் கல்விக் கொள்ளையில் முன்னணியில் நிற்கிறது.

கல்வி தனியார்மயம் என்பது மெட்ரிகுலேசனை கொண்டு வந்த எம்ஜியார் காலத்தில் இருந்து துவங்குகிறது. ஆனால் அவர் இன்று விமர்சனத்திற்கப்பாற்பட்டவர் என ஆகி விட்டதால் கருணாநிதி உள்ளிட்ட யாரும் இதைப் பற்றி பேச மறுக்கிறாரகள். தனியார்மயம் என்பது பொதுத்துறையை கழுத்தை நெறிப்பது, தனியாரை அனுமதிப்பது என்ற இருமுனைகளில் செயல்படுகிறது. அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்ற கோயபல்சு பிரச்சாரம் தனியாரால் முன்னெடுக்கப்படுகையில், கல்வித்துறை செயலரும், அமைச்சரும் மவுனம் சாதிக்கிறார்கள். “எனது பள்ளி தரமானது, என்னிடம்தான் தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்வது அவர்கள் கடமையில்லையா?

சமச்சீர் கல்வி மாநாடு
2011 சமச்சீர் கல்வி மாநாட்டில் மாணவர்கள் (கோப்புப் படம்)

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களை சேர்ப்பது என்பது ஒருவகையில் பார்த்தால் கல்வி மறுப்பு சட்டம் தான். இந்த விசயத்தில் நமது இடதுசாரிகளே கொஞ்சம் திசை விலகி விடுகிறார்கள். 25% ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு என்பது நல்ல திட்டமில்லையா என்கிறார்கள். இதில் சில என்ஜிஓக்களும் உடன் நிற்கிறார்கள். உண்மையில் நாம் செய்ய வேண்டியது இந்த இட ஒதுக்கீட்டில் தனியாரில் ஏழை மாணவர்களை சேர்ப்பதல்ல, மாறாக அரசு பள்ளியின் தரமுயர்த்தப்பட போராடுவது, மாணவர்களை அங்கு சேர்க்க வைக்க போராடுவது என்பதுதான். இதை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ராஜூ வந்துதான் செய்ய வேண்டுமா. இதனை செய்ய வேண்டியவர்கள் அரசு கல்வித்துறை அதிகாரிகள் இல்லையா?

1970 வரை உள்ளாட்சி அமைப்புகள்தான் பள்ளிகளை நடத்தின. அவை அரசு உதவி பெறும் பள்ளிகள்தான். ஆசிரியர் பயிற்சிக் கூடத்துடன் இணைந்திருக்கும் மாதிரி அரசு பள்ளிகள், இசுலாமிய பெண்களுக்கான மூன்று பள்ளிகள் என மொத்தம் இருபது பள்ளிகளை மட்டும்தான் ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசு நிர்வகித்து வந்தது. பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே நேரடியாக நிர்வகிக்க எடுத்துக் கொண்டது. நாற்பதாயிரம் பள்ளிகளை இணைத்து நிர்வாகத்தை அரசு மேற்கொள்வது என்பது எளிதல்ல. முன்னர் உள்ளாட்சி பள்ளியாக இருக்கையில் நமது பள்ளி என்று மக்கள் இப்பள்ளிகளைப் பார்த்தார்கள். இப்போது அரசு பள்ளியாகி விட்டதால் அரசு பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டார்கள். அடுத்து எம்.ஜி.ஆர் செய்த தவறு ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக்கியது. இதனை மாற்றி இப்பள்ளிகளை மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட அனுமதி தர வேண்டும்.

இப்போது நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு பித்தலாட்டம் தான். ஆசிரியருக்கு ஒரு விசயத்தை குழந்தைகளுக்கு விளக்குமளவுக்கு மொழியறிவு எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான தகுதி. இப்போது ஏன் இவ்வளவு மாணவர்கள் தேர்வு பெறவில்லை என்ற கேள்வியை யாராவது சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்கிறார்களா? 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்த இடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள். எப்படி பொறியியல் கல்லூரிகள் அதிகரித்த பிறகு அந்த கல்வியின் தரம் கீழே விழுந்ததோ அதே போன்ற நிலைமைதான் இன்று ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் எதிலும் இணைந்த மாதிரி பள்ளிகள் கிடையாது. துறை போகிய ஆசிரிய பயிற்சி நிலையங்கள் என்று எதுவும் இல்லை. இதில் உருவாகும் அரைவேக்காட்டு ஆசிரியர்களால், இத்தேர்வுக்கு தயாராக்கும் நுழைவுத்தேர்வு ஆயத்த கைடுகளை போடும் நிறுவனங்கள், தனிப்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தான் பயன்பெறுகின்றன. இதனால் இதற்கு வழியில்லாத ஏழை மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.

2012 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
2012 கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

பொதுக்கூட்டம், எழுதுவதை தாண்டி நேரடியாக மக்களிடம் சென்று இந்த கல்வி தனியார்மயம் பற்றி நாம் பேச வேண்டும். பாப்புலிஸ்டு திட்டங்கள்தான் பாசிசத்தின் வருகைக்கான முன்திட்டமிடல் என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது இடதுசாரிகளின் கடமை. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உப்புக்கு அதன் பிறகு வந்த பிரதமர்கள் நேரு துவங்கி இந்திரா வரை யாரும் வரி போடவில்லை. இப்போது வரி போட்டு விட்டதுடன் அரசே அதனை மக்களிடம் விற்கவும் துவங்கி விட்டார்கள். குடிநீரை அரசு மலிவு விலைக்கு விற்க துவங்கி விட்டது. அது பாதுகாக்கப்பட்டதா என்பது வேறு விசயம்.

இட ஒதுக்கீடு செய்வதோடு அரசின் கடமை முடிந்து விடவில்லை. இட ஒதுக்கீடு இல்லாமல் முழுமையாக பயன்பெற வேண்டிய நிலைமைக்கு தரமான கல்வியை துவக்க பள்ளியில் இருந்தே அதனை தருவதற்கு முயற்சிக்க வேண்டாமா? மதிப்பெண்களை குறைவாக நிர்ணயித்த காரணத்தால் படிப்பில் சேர்ந்த எத்தனை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முறையாக அதனை முடித்தார்கள். நிறைய பேர் பாதியிலேயே படிப்பை கைவிட்டனர். அல்லது பதினைந்து அரியரோடு வெளியே வந்தனர்.

நமது நம்பிக்கை மாநில அரசை விட மத்திய அரசு உசத்தி என்று இருப்பதால் அதனைத்தான் நாம் மிகவும் மதிப்போம். தமிழ்நாட்டு போலீசை விட சிபிஐ உசத்தி என்பதுதான் நமது நம்பிக்கை. ஆனால் அங்குதான் ஊழல் அதிகம் என்று நமக்கு தெரியாது. அது போல முன்னர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த பாலகுருசாமி பொறியியல் கல்லூரிகளின் மதிப்பெண் பட்டியலை வெளியிட சொன்னார். யாரும் அதனை சட்டை செய்யவில்லை. தற்போது நீதிமன்ற உத்திரவுக்கு பிறகு ஏஜசிடிஈ வந்துதான் தரவாரியாக கல்லூரிகளது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் எல்லோரது லட்சணமும் வெளி வந்து விட்டது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளிகளில் முதல்வராவதோ அல்லது தனியாக மெட்ரிக் பள்ளிகளை ஆரம்பிப்பதோ கூடாது என்று அவர்கள் ஓய்வுபெறும் விழாவில் நான் பேசுவேன். எதாவது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும் என்றுதான் சொல்கிறேன். நான் சொல்வதை யாரும் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.

நாமக்கல் தனியார் பள்ளிகளை துவங்கியவர்கள் அனைவருமே அரசு ஆசிரியர்கள்தான். திருச்செங்கோடு பள்ளியை துவங்கியவர் சங்ககிரி பள்ளியின் தலைமையாசிரியர். அவரைத்தான் பாடத் திட்டக் குழுவிலும் அரசு போட்டது. அவர் பள்ளியில் இருந்து ஆண்டுக்கு நாற்பது பேராவது அரசு மருத்துவ கல்லூரிக்கு போய் விடுகிறார்கள். பாடத் திட்டத்திற்கான ஒரு கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. நேரில் விசாரித்து பார்த்தால் தனக்கு தகவல் இல்லை என கூசாமல் பொய் சொல்லியிருந்தார். இதனை கூரியர் சர்வீஸ் மூலம் சரிபார்த்துதான் சொல்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே கடைசி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நான்கு செல்பேசிகளை வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்க அவற்றை அணைத்து விட வேண்டும் அல்லது வெளியில் சென்று பேசுமாறு கூறினேன். இயக்குநர்களுக்கு மதிய உணவை இறைச்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார்.

இந்த அரசு இயக்குநர்கள் அரசு பயணியர் விடுதிகளில் தங்குவதற்கு பதிலாக ஐந்து நட்சத்திர விடுதிகளில்தான் பெரும்பாலும் தங்குகின்றனர். சமச்சீர் கல்வி விசயத்திலேயே அங்கு இருந்த இயக்குநர்களிலேயே தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநர் ஒருவரை தவிர மற்ற அனைவருமே மெட்ரிக் பள்ளிகளின் ஆட்கள்தான். ஆனால் நமக்கு இவர்கள் கண்ணுக்கு தெரிவது இல்லை. அம்பானி போன்றவர்கள் தெரிவதில்லை. நமக்கு சிறிய அளவில் திருடுபவர்கள் தான் கண்ணில் தெரிகிறார்கள்.

(தொடரும்)

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

4

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 2

மது உடலின் இயக்கத்துக்கு ஆக்சிஜன் (பிராணவாயு அல்லது உயிர்வளி) மிக அவசியம் என்பது எல்லோரும் அறிந்த உடற்கூறியல் சார்ந்த அடிப்படை உண்மை. நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து உடலின் இயக்கத்துக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வேலையை நுரையீரல் செய்கிறது.

சுவாச மண்டலம்
மூச்சு மண்டலம்

மூக்கின் வழியே நாம் சுவாசிக்கும் காற்றானது, மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்குச் செல்கிறது. நுரையீரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவது போல் பிரிகின்றன. இது மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கப்படுகிறது.

முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளை இந்தக் குழல்கள் சென்றடையும். இந்த சின்னச் சின்ன பலூன் அமைப்புகள் காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கப்படுகின்றன. மூக்கின் வழியே உள்நுழையும் காற்று மூச்சு மரம் வழியே பயணித்து இறுதியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்கிறது.

இவ்வாறு காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்ந்த உயிர்வளி தான் நமது உடலில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கியமான வேலையைச் செய்கிறது. இது எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் மெல்லிய இரத்தக் குழாய்களின் வழியே பயணித்து இதயத்தின் வலது வெண்டிரிக்கிளை அடையும். அங்கிருந்து தமனி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமனியும், வலது கிளை, இடது கிளை என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் அக்கம் பக்கமாக தமனிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமனிக் கிளைகள் நுண்துளை ரத்தக்குழாய்கள் (Capillaries) எனப்படுகின்றன.

மூச்சு விடுதல்
மூச்சு விடுதலின் போது ரத்தத்திலிருந்து கரியமில வாயு பிரிக்கப்பட்டு, உயிர்வளி சேர்க்கப்படுதல்.

காற்று நுண்ணறை மற்றும் நுண்துளை ரத்தக் குழாய்கள் இவற்றின் சுவர்கள் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். நுண்ணறைக்குள் உயிர்வளி (ஆக்ஸிஜன்) நிறைந்த காற்றும் நுண்துளை ரத்தக் குழாய்களுக்குள் உயிர்வளி குறைந்த கரியமில வாயு (கார்பன் டைஆக்சைட்) நிறைந்த ரத்தமும் இருக்கும். இந்த நிலையில் காற்று நுண்ணறை – நுண்துளை ரத்தக் குழாய் சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறை காற்றில் அடர்த்தியாக இருக்கும் உயிர்வளி (ஆக்ஸிஜன்) நுண்துழை குழாய் இரத்தத்துக்குள் பாயும். நுண்துழை குழாய் ரத்தத்தில் அடர்த்தியாக இருக்கும் கரியமில வாயு (கார்பன்டை ஆக்ஸைடு) நுண்ணறை காற்றுக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange of gases). இப்படித்தான் நமது உடலில் ஓடும் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

நாம் உயிரோடு இருக்க இந்த வேலை ஒழுங்காக நடக்க வேண்டும். இந்த வேலை ஒழுங்காக நடக்க நாம் போதுமான உயிர்வளி (ஆக்சிஜன்) நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டும். ஒருவேளை நாம் சுவாசிக்கும் காற்றில் நிறைய மாசு கலந்திருந்தால் என்னவாகும்? ஒருவேளை அந்த மாசுக்கள் உலோகத் துணுக்குகளாக அமைந்து விட்டால் என்னவாகும்?

அவ்வாறு தொடர்ந்து உலோகத் துணுக்கு அல்லது தூசுகளைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரலில் சிறு சிறு பள்ளங்கள் ஏற்படும். அந்நோயின் பெயர் ந்யூமகொனியோசிஸ் (pneumoconiosis). தமிழில் அதை தூசுவளிநோய் என்று சொல்லலாம்.

ந்யூமோகோனியோசிஸ்
ஆரோக்கியமான நுரையீரலும், நியூமோகோனியாசிஸால் பாதிக்கப்பட்ட நுரையீரலும்

ந்யூமகொனியோசிஸ் என்பது ஒரு பொதுப்பெயர். பாதிப்பு ஏற்படுத்தும் தூசு வகை அல்லது உலோகத் துணுக்கின் வகைக்கு ஏற்ப இந்நோய் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கரி தூசுகளால் உண்டாகும் நோயை கருப்பு நுரையீரல் நோய் (Black lung disease) அல்லது ஆந்த்ராகோசிஸ் என்று அழைக்கிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் தூசு மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை ஆஸ்பெஸ்டாசிஸ் என்றும், பாக்சைட் தூசு மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை பாக்சைட் ஃபைபரோசிஸ் என்றும், இரும்புத் துகள் மூலம் உண்டாகும் நுரையீரல் நோயை சிடரோசிஸ் என்றும் பருத்தி தூசு முலம் உண்டாகும் நுரையீரல் நோயை பைசினோசிஸ் என்றும் அழைக்கிறார்கள்.

தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உண்டாகும் ந்யூமகொனியோசிஸ் நோயின் பெயர் சிலிகோசிஸ் – அதாவது சிலிக்கான் (மணல்) துகளை தொடர்ந்து சுவாசிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.

கோலார் தங்க வயல் உலகின் ஆழமான வெகு சில சுரங்கங்களில் ஒன்று. தக்காண பீட பூமியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் கோலாரின் நிலத்தடியானது கண்ட மேல்தட்டினால் (continental crust) ஆன கடும் பாறைகளைக் கொண்டதாகும். இப்பாறைகளைத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். அப்பாறைகளைக் குறித்த தொழிலாளர்களின் எதார்த்தமான வருணனை மெய்யிலும் மெய்யானதாகும் – ஏனெனில், கோலார் தங்க வயலின் சுரங்கப் பாதைகளில் எதிர்படும் பாறைகள் மலைகளை ஒத்த கனபரிமாணம் கொண்டவை.

ஆக, கோலாரில் சுரங்கம் தோண்டிச் செல்வதை நீங்கள் ஏதோ கிணறு தோண்டும் வேலைக்கு ஒப்பானதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. இது வெறும் மண்ணைக் கிண்டிச் செல்லும் சில்லறைச் சமாச்சாரம் இல்லை. பாறைகள் கனம் குறைந்த இடங்களில் துளையிட வேண்டும்; கனம் மிகுந்த பகுதிகளிலோ வெடிவைத்துத் தகர்த்து முன்னேற வேண்டும். அவ்வாறு வெடிவைத்துப் பிளப்பது தங்க வயலின் அன்றாட நிகழ்வு- இதற்காக துளையிடுபவர் (Driller) மற்றும் வெடிப்பவர் (Blaster) என்கிற தனித்தனி வேலைப் பிரிவுகளே இயங்குகின்றன.

சிலிக்கோசிஸ் பாதித்த நுரையீரல்
சிலிக்கோசிஸ் பாதித்த நுரையீரல்

கோலார் சுரங்கத்தின் அதிகபட்ச ஆழம் சுமார் 12,000 அடி – அதிகபட்ச வெப்பம் 160 டிகிரி பாரன்ஹீட். இந்த ஆழத்தில் இயற்கையாகவே நிலவும் வெப்பமும், சூழலின் இறுக்கமும் அழுத்தமும் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களின் நுரையீரலை இயல்பாக வேலை செய்ய அனுமதிக்காது. மேலும் அந்த ஆழத்தில் இயற்கையிலேயே உயிர்வளியின் (பிராணவாயு / ஆக்சிஜன்) அளவும் குறைவானதாகவே இருக்கும். ஒரு பிரம்மாண்டமான பிரஷர் குக்கருக்குள் தொழிலாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள் – அந்த சூழலில் தான் பாறைகளைப் பிளக்க டைனமைட்டுகளை வெடிக்க விடுவார்கள்.

வெடிமருந்தின் சிதறல் உண்டாக்கும் புகை மண்டலமும் வெடித்துத் தகர்க்கப்பட்ட பாறைகளில் உறைந்திருக்கும் மணல் (சிலிக்கான் துகள்) நிறைந்த தூசு மண்டலமும் சுரங்க டனலின் வால் பகுதியெங்கும் மண்டிக் கிடக்கும். தொழிலாளர்கள் அந்த தூசு மண்டலங்களின் ஊடாகச் சென்று தான் தங்கப் படிமங்கள் உறைந்த பாறைத் துண்டுகளைச் சேகரித்தாக வேண்டும். அமிலக் குட்டையில் முங்கி முத்தெடுக்கும் வேலை அது.

மூச்சுக் குழாய்களின் வழியே நுரையீரலுக்குள் நுழையும் மணல் (சிலிக்கான்) தூசுகள் நுரையீரலின் உட்புறத் திசுக்களின் மேல் சத்தமின்றி ஒட்டிக் கொள்ளும். நாட்கள் செல்லச் செல்ல மணல் (சிலிக்கான்) தூசு தான் அமர்ந்திருக்கும் நுரையீரல் திசுவின் மேல் சிறிய பள்ளங்களை உண்டாக்கும். இந்தப் பள்ளங்கள் மெல்ல மெல்ல அகன்று பெரிதாகிக் கொண்டேயிருக்கும். மணல் தூசுகளால் நுரையீரலில் ஏற்படும் பள்ளங்களை தொழிலாளர்கள் ‘துளைகள்’ என்கிறார்கள்.

கோலார் தங்க வயலுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இந்தியாவில் முதன் முறையாக மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1902-ம் வருடம்; அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் கோலார் தங்க வயல். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு அடுத்து ஆசியாவிலேயே இரண்டாவதாக மின்சாரம் அறிமுகம் செய்யப்பட்ட நகரம் கோலார் தங்க வயல். அதே போல், இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது கோலார் தங்க வயலுக்காகத் தான். இந்த வரிசையில் உலகில் முதன் முறையாக மணல் துகளால் உண்டாகும் ந்யூமகொனோசிஸ் நோய் கண்டறியப்பட்டதும் கோலார் தங்க வயலில் தான்.

சுரங்க மருத்துவமனை
சுரங்க மருத்துவமனை (அன்று)

1880ம்-ஆண்டு ஆங்கிலேய ஜான் டெய்லர் கம்பெனியால் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சுரங்கப் பணிகள் துவங்கியவுடனே முன்பை விட அதிக தங்கம் வெள்ளை முதலாளிகளுக்கும் சிலிக்கோசிஸ் நோய் இந்தியத் தொழிலாளர்களுக்கும் பரிசாக கிடைத்தது. நோய்க்கு ஆளாகி தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்த போதும் சுமார் அறுபதாண்டு காலம் வரை – அதாவது 1940-ம் ஆண்டு வரை இந்த உண்மைகள் வெளியுலகை அடையாதவாறு பார்த்துக் கொண்டது சுரங்கத்தின் வெள்ளை நிர்வாகம்.

1940-ம் ஆண்டு இயற்றப்பட்ட மைசூர் சிலிகோசிஸ் சட்டம் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தியது. கிடைத்த நிவாரணம் பற்றி சில தொழிலாளர்களிடம் நாங்கள் விசாரித்தோம்.

“அது இன்னா சார்.. ஒரு தொளைக்கு ஆயிரம் ரூவா நட்ட ஈடா குடுப்பான்”

“வெறும் ஆயிரம் ரூபா தானா?”

”ஆமா சார்… வருசா வருசம் பி.ஜி.எம்.எல் ஆஸ்பத்திரில ஸ்கேன் செஞ்சி டாக்டர் ரிப்போர்ட் எழுதுவாரு… அம்பது தொளைக்கு மேல போச்சின்னா கைல சுளையா அம்பதாயிரம் கெடைக்கும்… அப்புறம் கம்பெனி குடுத்த குவாட்டர்ஸ் வீட்டையும் வச்சிக்கிலாம்.. அதோட வியாரெஸ் குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவான்..” (கம்பெனி கொடுத்த “வீடு” எனப்படும் அந்த கொடூரம் குறித்து பின்னர் வரும் பாகத்தில் விரிவாக சொல்கிறோம்).

”உங்க சர்வீஸ் முடியும் போது எத்தனை துளை இருந்தது?”

“எனக்கு எப்படியும் நூறுக்கு மேல இருந்திருக்கும்….”

“அப்ப.. உங்களுக்கும் அம்பதாயிரமும் வீடும் கிடைச்சிருக்குமே?”

”அய்யே… இல்ல சார். ரிப்போர்ட் படி எனக்கு நுப்பது தான்”

“என்ன சொல்றீங்க, குழப்பமா இருக்கே?”

கோலார் தொழிலாளர்களின் நினைவாக
கோலார் தொழிலாளர்களின் நினைவாக

“அதாவது சார்.. நிறைய துளை இருக்குன்னு ரிப்போர்ட்ல எழுதினா நிறைய நட்ட ஈடு குடுக்கனும்.. அதே மாதிரி அம்பது துளைக்கு மேல போச்சின்னா லேபரு கைல சுளையா அம்பதாயிரம் கொடுத்து வீட்டுக்கும் அனுப்பனும்… அதனால ரிப்போர்ட்ல எப்பவும் கொறைச்சி தான் கணக்கு காட்டுவானுக. இப்ப அம்பது துளை ஒரு ஆளுக்கு இருக்குன்னு ரிப்போர்ட்ல குடுத்துட்டான்னா எப்படியும் நூத்தம்பது இருநூறு துளையாவது இருக்குன்னு அர்த்தம்.. இப்ப புரிஞ்சதா?”

“ஓ… சரி… அப்ப நிரையீரல்ல இருநூறு துளை ஒரு ஆளுக்கு இருந்தா அவரோட கதி?”

“என்னா ஒரு அஞ்சி வருசத்துக்கு வண்டி ஓடும்.. அப்பால இருமியே சாக வேண்டியது தான்…”

கோலார் தங்க வயல் தொழிலாளிகள் அனேகமாக எல்லோருக்கும் சிலிக்கோசிஸ் பாதிப்பு வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. சிலிக்கோசிஸ் பாதிப்புக்கு உள்ளான நுரையீரலில் எப்போதும் சளி மண்டிக் கொண்டிருக்கும். இயல்பாக சுவாசிக்க முடியாது. இருமிக் கொண்டே இருக்க இருக்க வேண்டும். ஒவ்வொரு இருமலும் குரல்வளையின் வழியே குடலை உருவியெடுப்பதற்கு ஒப்பான அனுபவமாக இருக்கும்.

ஒவ்வொரு தொழிலாளியும் காலை எழுந்ததும் இருமி இருமி கோழையை வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால் சுரங்கம் என்கிற அந்த பிரஷர் குக்கருக்குள் அவர்களால் சளி மண்டிய நுரையீரலைச் சுமந்து கொண்டு வேலை செய்ய முடியாது. விதிவிலக்கின்றி எல்லா தொழிலாளர்களும் பீடி புகைக்கும் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பீடியின் காரமான நிக்கோடின் புகை சளியை இளக்கி வெளியேற்றுவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலையில் ஆலைச் சங்கு ஊதும் அதிகாலை வேளையில் குடியிருப்புகளில் இறுமல் சப்தம் கேட்கத் துவங்கும். ஒவ்வொரு முறை அடிவயிற்றை எக்கி பலமாக இறுமும் போதும் கோழையோடு சேர்ந்து புண்பட்ட நுரையீரலில் இருந்து இரத்தத் திவலைகளும் கலந்து வழவழப்பான சிவப்புத் திரவமாக வெளியேறும்.

”அந்த மாதிரி நேரத்துல எங்க புள்ளைங்கள கிட்ட விட மாட்டோம் சார்…”

”ஏன்?”

“பயந்துடுவாங்க சார்.. பொண்டாட்டிங்க வீட்டுக்கு உள்ற குந்திக்கினு கண்ல தண்ணி வுட்னு தேம்பிக்கினு இருப்பாங்க. என்னா செய்யிறது பொழப்பு சார். இந்த சுரங்கம் தான் சார் எங்க வயித்தை ரொப்பினுச்சி. வெளியே சும்மா இருந்து பட்டினில சாவறதுக்கு உள்ளே போனா துட்டாவது கெடைக்கும்.. துண்ணுட்டு சாவறது எத்தினியோ மேல் இல்லையா சார்..”

“…..”

கேஜிஎப் போக்குவரத்து துறை
கேஜிஎப் போக்குவரத்து துறை

”எப்படியாவது சுரங்கத்த திரும்ப தொறக்கனும் . தெனைக்கும் பிச்சகாரங்க மாதிரி பெங்களூருக்கும் மாலூருக்கும் ஓடினு இருக்கோம்.. இது எங்க சுரங்கம் சார்.. நீ பாட்டுக்கு தொழிலாளி அப்டி கஸ்டப்பட்டான் இப்டி கஸ்டப்பட்டான்னு எழுதி கெவருமெண்டு தொறக்காம போயிடப் போறான்… பாத்து எழுது சார்..”

அவர் கண்கள் கலங்கி விட்டது. எம்மைத் தாண்டி எங்கோ வெறித்தவாறே உதடுகளில் வலிந்து வரவழைக்கப்பட்ட செயற்கையான சிரிப்போடு பேசிக் கொண்டே இருந்தார்… அந்த தொழிலாளியின் பெயர் ஜெயக்குமார். பெங்களூருவில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். பெற்றது இரண்டும் பெண் பிள்ளைகள் என்றார். மூத்த மகளை கல்லூரியில் சேர்த்துள்ளார். கல்லூரிக் கட்டணத்திற்காக காசு புரட்ட கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக டூட்டி பார்த்து விட்டு அன்று தான் சம்பளக் காசோடும் இரத்தச் சிவப்பான கண்களோடும் ஊர் திரும்பியிருந்தார். நாங்கள் சென்று திரும்பி இத்தனை நாட்களுக்கு பின்னரும் ஜெயக்குமாரின் முகத்தை எங்களால் மறக்கவே முடியவில்லை.

பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பி தோலைப் பொசுக்கும் என்று தெரிந்தே யாராவது அதைப் பற்றுவார்களா? ஆனால் அது தான் வேலை என்றால்? அப்படித்தான் வயிற்றை நிரப்ப முடியுமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கோலார் தங்க வயலின் தொழிலாளர்கள் தகதகக்கும் அந்தக் கம்பியை மார்போடு ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

கோலார் தங்க வயலின் முன்னாள் தொழிலாளர்கள் எல்லோருக்கும் சுரங்கத்தின் பாடுகள் தெரியும். சொல்லப் போனால் நாம் புரிந்து கொள்வதை விட, அவர்களுக்கே மேம்பட்ட புரிதல் உள்ளது. அது அவர்களின் சொந்த வாழ்க்கை நடத்திக் கற்பித்த பாடம். சிலிகோசிஸ் நோய் பற்றி மருத்துவர்களுக்கு இணையாக விளக்குகிறார்கள். சிலிக்கோசிஸ் பாதிப்புகளைக் குறித்தோ சுரங்க வேலையின் அபாயம் குறித்தோ அவர்கள் சொன்னதில் நூறில் ஒரு சதவீதத்தையாவது எமது எழுத்தினால் மறு உருவாக்கம் செய்ய முடியாது.

கேஜிஎப் மின் துறை
கேஜிஎப் மின் துறை

என்றாலும் அவர்களுக்கு அவர்களது சுரங்கம் திரும்பவும் வேண்டுமாய் இருக்கிறது. ஏன்? அவர்களே சொல்லிக் கொள்வது போல் அவர்கள் சாகசப் பிரியர்களாக இருப்பதினாலா?

நீங்கள் கோலாரின் நண்டு சிண்டுகளிடம் பேசினால் கூட தங்களது தைரியத்தைக் குறித்தும் இயற்கையை அச்சமின்றி எதிர்த்து வெல்லும் தீரம் குறித்தும் உயிரைத் துச்சமாக மதிக்கும் வீரம் குறித்தும் பெருமிதத்தோடு விவரிப்பார்கள். ஆனால், உண்மையை சில நேரங்களில் வாய்வார்த்தைகளில் இருந்து மட்டுமல்ல, அதனையும் கடந்த சமூக எதார்த்தத்திலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கோலார் தங்க வயலின் மக்கள் தொகையில் எண்பதுக்கும் அதிகமான சதவீதம் தமிழர்கள். தமிழர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தலித்துகள். கோலார் தங்க வயலில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுரங்கப் பணிகளைத் துவக்கிய ஜான் டெய்லர் முதலில் இங்கிலாந்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க முயன்று தோற்றுள்ளார். பின் அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களான ஊரிகான் மற்றும் மாரிக்குப்பத்திலிருந்து தொழிலாளர்களை வேலைகளுக்கு நிர்பந்தமாக வரவழைத்துள்ளார்.

சுரங்கத்தின் ஆழம் ஆயிரம் அடிகளைக் கடந்தது. 1880-களில் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சொற்ப வசதிகள் கூட இருக்கவில்லை. உள்ளே செல்லும் தொழிலாளர்கள் மூச்சுத் திணறிச் சாவது நிச்சயம் என்கிற நிலைமையில் உள்ளூர் தொழிலாளர்கள் பின்வாங்கினர். அதன் பின்னர் தொழிலாளர்களை வரவழைக்க ஜான் டெய்லர் கங்காணிகளின் வடிவில் அற்புதமான தீர்வு ஒன்றைக் கண்டார்.

கங்காணிகள் எனப்படுவோர் அன்றைய வட ஆற்காடு, தருமபுரி, சித்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆதி திராவிடர் வகுப்புகளைச் சேர்ந்த அப்பாவி ஏழைகளை ஆசை காட்டி கோலார் தங்க வயலுக்கு வரவழைத்தனர். ஏறக்குறைய கொத்தடிமைகளின் நிலையில், எந்த உரிமையும் இன்றி சுரங்கத்தில் வேலை பார்க்க அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். செத்து விழுந்த தொழிலாளிகளைப் புதைக்க சுடுகாடு கூட அன்றைக்கு இருக்கவில்லை. பிணத்தை ஊருக்கு எடுத்துச் சென்று புதைக்க போக்குவரத்து வசதிகளும் இல்லை.

1930-ம் ஆண்டு தங்க வயலில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளில் முக்கியமானது தொழிலாளர்களுக்கான சுடுகாடு அமைத்துத் தரக் கோரியது தான். சுமார் ஐம்பதாண்டு காலம் – இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக – சுரங்க விபத்துகளில் மாண்டு போன தொழிலாளர்களின் பிணங்களை கைவிடப்பட்ட சுரங்கங்களில் வீசியெறியப் பணித்துள்ளனர் நிர்வாகத்தில் இருந்த வெள்ளை அதிகாரிகள்.

உங்கள் கழுத்தில், கையில், கைவிரல்களில் மின்னும் தங்கம் பூலோக நரகத்திலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்கிற உண்மை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் – ஆனால், அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அனுபவத்திலிருந்தே நன்றாகத் தெரியும். எனில், அந்த மக்கள் இப்படி ஒரு நரகத்தை ஏன் விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள்?

ஏனெனில், வெளியே சமூகத்தில் அன்றைக்கு நிலவிய சாதிக் கொடுமையின் வீரியம் தான் அம்மக்களைப் பிடித்து எரியும் எண்ணெய் கொப்பறைக்கு இணையான கோலாரின் சுரங்கங்களுக்குள் தள்ளியது. இன்றைக்கு நாம் (தர்மபுரி) இளவரசனின் காலத்தில் இருக்கிறோம். இன்றைக்கு சுமார் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஆதிதிராவிட வகுப்பில் பிறந்த ஒருவர் அனுபவித்திருக்க கூடிய கொடுமைகளை நம்மால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

அன்றைய வட தமிழகத்து தலித்துகள் கங்காணிகளிடம் விரும்பியோ விரும்பாமலோ ஏமாறத் தேவையான சகல விதமான சமூக காரணிகளும் இருந்தன. ஆண்டாண்டு காலமாய், செத்த மாட்டை உரிக்கவும், சாவுக்கு சொல்லியனுப்பவும் பணிக்கப்பட்டு ஒட்டு மொத்த சாதிப் படிநிலையின் கடைக்கோடியில் அழுந்திக் கிடந்த அவர்கள் கேடுகெட்ட அந்த நிலையிலிருந்து வெளியேறக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். அப்படிக் கிடைத்த வாய்ப்பும் அவர்களின் உயிரையே விலையாகக் கேட்டது.

இன்றைக்கு ஆண்ட பரம்பரை வீரம் பேசும்  ஆதிக்க சாதிகளின் வீரமெல்லாம் வெறும் வாய் சொற்கள் தான். சுமார் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நிர்கதியாய் கோலார் தங்க வயலில் வந்து விழுந்த தலித்துகளின் வீரமோ ஒப்புவமையற்ற தனித்துவமானது. மரணம் நிச்சயம் என்ற நிலையில் ஆலைச் சங்கு கேட்டதும் துண்டை உதறித் தோளில் போட்டுக் கிளம்பிய தொழிலாளிகளைச் சொல்வதா, இல்லை பூமிக்குள் புதைய கணவனை அனுப்பி விட்டு பிள்ளைகளோடு காத்திருந்த அவரது மனைவியைச் சொல்வதா…?

வீரம் என்பதற்கான புதிய இலக்கணத்தை தொழிலாளர் வர்க்கமாக படைத்துக் கொடுத்துள்ளனர் தங்க வயல் மக்கள். வீரம் என்பது சக மனிதர்களைக் கொல்லத் துணிவதும் கொன்றழிப்பதும் அல்ல, படைத்து உருவாக்குவதும் அதற்காக உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருப்பதுமே வீரம் என்பதை தங்கள் வாழ்க்கையால் இந்த பூமி இருக்கும் மட்டும் அழிக்க முடியாத எழுத்துக்களில் எழுதிச் சென்றுள்ளனர் வீழ்ந்து போன தொழிலாளிகள்.

தங்க வயலின் தலித்துகள் கடந்த நூற்றாண்டு காலமாக தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இயற்கையின் உக்கிரத்தோடு மோதி வென்றார்கள்; அல்லது வீழ்ந்து வீரமரணம் அடைந்தார்கள். தங்கள் உற்றாரின், ரத்த சொந்தங்களின் மரணங்கள் கூட அவர்கள் நெஞ்சைக் கலக்கவில்லை.. பிணங்கள் வரிசை கட்டி சுரங்கத்தின் கீழிருந்து மேலே வந்த போதும் எஞ்சியவர்கள் மீண்டும் மீண்டும் சுரங்கத்தின் ஆழம் நோக்கிச் சென்றார்கள். சுமார் நூற்றி முப்பது ஆண்டுகள் இயற்கையின் கோபாவேசத்தின் முன் அடிபயணியாமல் நெஞ்சு நிமிர்த்தி நின்ற அந்த வீரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் தொழிற்சங்க துரோகிகளாலும் ஆளும் வர்க்க எதிரிகளாலும் முதுகில் குத்தி வீழ்த்தப்பட்டது.

உழைப்பைக் கவிதை என்பார்கள். கவிதையை விட அழகானதொன்றை மொழியால் படைத்துக் காட்ட முடியாது எனில் தவிக்கும் நுரையீரல் காற்றுப் பைகளோடு, உடலின் மேற்தோலை பொசுக்கும் வெப்பத்தில், தலைக்கு மேல் இடிந்து விழக் காத்திருக்கும் பூமியின் கீழ் மரணத்தோடு விளையாடியவாறே தங்க வயல் தொழிலாளர்கள் காட்டிய உழைப்பை என்னவென்பது…? மொழி தோற்றுப் போகும் இடத்தில் மண்வெட்டியை ஆவேசத்தோடு உயர்த்தினர் அந்தத் தொழிலாளிகள்.

மின்னும் அந்த தங்க ஆரத்தை உங்கள் கழுத்துகளில் பூட்டி நீங்கள் மகிழ வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கவில்லை. பார்ப்பனிய சாதியடுக்கின் கீழ்தட்டில் நெறிபட்டு ஆதிக்க சாதித் திமிரில் வதைபட்டு வரலாற்றுப் புறக்கணிப்பில் ஓய்ந்து போன அவர்கள் கடைசியில் தொழிலாளர் வர்க்கமாக நிமிர்ந்தார்கள். சாதி அளித்த இழிவை வர்க்கமாகத் துடைத்தெறிந்தார்கள். ஆயிரம் பொருளாதாரச் சுரண்டல்கள் இருந்தாலும், சுரங்கம் அந்த மக்களின் சமூக இழிவைத் துடைக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தது என்பதை மறுக்கவே முடியாது.

அந்த நன்றியை தொழிலாளர்கள் இத்தனை தலைமுறைகளுக்குப் பின் இன்றும் மறக்கவில்லை. தங்கள் முன்னோர்களின் பாடுகளை கதைகளாக நினைவில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் வரலாற்று இழிவைத் துடைக்க உதவிய அந்தச் சுரங்கம் என்றாவது மீண்டும் திறக்காதா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

சுரங்கம் மீண்டும் திறக்குமா? அது மூடப்பட்டதன் பின்னணி தான் என்ன? கோலார் தங்க வயலின் வரலாறு என்ன? அடுத்து வரும் பாகங்களில் பார்க்கலாம்.

(தொடரும்)
கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
_________________________________________________
–    வினவு செய்தியாளர்கள், கோலாரிலிருந்து…
படங்கள் : இணையத்திலிருந்து

ரத்தம் வழியும் யுத்த பூமி ! – இரா. ஜவஹர்

134

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”

– என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.

கொல்லப்படும் பொதுமக்கள்

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள்.  “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.

அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.

எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?

“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.

ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.

எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.

எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”

–    என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.

சுருங்கி வரும் பாலஸ்தீனம்

[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்]

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.

“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.

அப்போது பாலஸ்தீன மக்கள்தொகையில் 92 சதவிகிதம் பேர் பாலஸ்தீனியர்கள், 8 சதவிகிதம் பேர்தான் யூதர்களும், மற்ற இனத்தவர்களும்.

இந்த நிலையில் குறுக்கிட்டது முதல் உலகப்போர்.

போரில் அராபியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மெக்காவின் ஷெரீஃபுக்கு பிரிட்டன் ஒரு வாக்குறுதி அளித்தது. “மேற்கே மத்தியதரைக்கடல் முதல் கிழக்கே பாரசீக வளைகுடா வரை உள்ள பெரும் நிலப்பகுதிகளில் அரபு மக்கள் தங்களது ‘அகன்ற அரபு தேசத்தை’ அமைத்துக்கொள்ள பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

மறுபுறம் இதற்கு நேர் மாறாக, யூதர்களின் ஆதரவைப் பெற யூதர்களுக்கும் பிரிட்டன் ரகசியமாக வாக்குறுதி அளித்தது. “யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை பாலஸ்தீனத்தில் அமைக்க பிரிட்டன் ஏற்பாடு செய்யும்.”

இரட்டை வேடம் ? அல்ல ! மூன்று வேடம். மூன்றாவது வேடம் :

பிரான்ஸுக்கும் பிரிட்டன் வாக்குறுதி அளித்தது. “போரில் துருக்கிப் பேரரசு முறியடிக்கப்பட்டதும் அதன் ஆதிக்கத்தில் உள்ள பாலஸ்தீனம் உட்பட அனைத்து நாடுகளையும் பிரான்ஸும் பிரிட்டனும் பங்கு போட்டுக்கொள்ளலாம்.”

போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.

அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.

இதையடுத்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தனி நாடு அமைக்க அனுமதி கோரி ஐ.நா.சபையில் பிரிட்டனின் ஆதரவோடு யூதர்கள் மனுச் செய்தார்கள். இதை ஏற்று பாலஸ்தீனத்தைத் துண்டுபோடும் தீர்மானத்தை ஐ.நா.சபை நிறைவேற்றியது.

“பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒரு பகுதியில் யூத இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். மறுபகுதியில் அரபு இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறுக்கிடும் சாலைகள், பகுதிகள் – ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும். பாலஸ்தீனத்தில் உள்ள புனித நகரான (முஸ்லீம்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் புனித நகரமான) ஜெருசலேம், ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும்” என்று கூறிய அந்தத் தீர்மானம் ஐ.நா.சபையின் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் 1947 நவம்பர் 29-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்தியா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

யூதர்கள் தங்களுக்கு கிடைத்த பகுதிக்கு ‘இஸ்ரேல்’ என்று பெயர் சூட்டி, 1948 மே 14-ல் சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அரபு மக்கள் இதை ஏற்க மறுத்தார்கள்.

அன்று தொடங்கியது அரபு – இஸ்ரேல் யுத்தம்.

பாலஸ்தீன எதிர்ப்பு

1948, 1956, 1967, 1973 ஆகிய ஆண்டுகளில் கடும் யுத்தம் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் முழு உதவியுடன் போரிட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.

பின்னர் 1978-ம் ஆண்டில் எகிப்தும் இஸ்ரேலும் சமரசம் செய்து கொண்டதன் அடிப்படையில் எகிப்தின் சினாய் பகுதியை இஸ்ரேல் திருப்பிக் கொடுத்துவிட்டது. இதற்கிடையில் பாலஸ்தீனத்தை விட்டு லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து பரிதவித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 70 லட்சம். சுமார் 40 லட்சம் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா.சபை ‘ஆயிரத்தெட்டு’ தீர்மானங்கள் போட்டது. தீர்மானங்கள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருந்தன.

இந்தச் சூழ்நிலையில் 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’. 1969-ல் யாசர் அராபத் இதன் தலைவரான பின்பு பிரமாண்டமான போராட்டங்கள் நடந்தன. ஆயுதம் தாங்கிய போராட்டமாகவும், ஆயுதமற்ற போராட்டமாகவும் பாலஸ்தீனத்திலும், வெளிநாடுகளிலும் வகைவகையான போராட்டங்கள் நடந்தன.

இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன.

ஆனால், “பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத இயக்கம். அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது இஸ்ரேல் ! அதற்கு ஆதரவளித்தன அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற சில ஆதரவு நாடுகளும்.

மறுபுறம், “இஸ்ரேல் அரசு ஒரு சட்டவிரோத அரசு. அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று அறிவித்துச் செயல்பட்டது பாலஸ்தீன விடுதலை இயக்கம்.

இரண்டும் நடக்கவில்லை. மாறாக, பாலஸ்தீனியர்களும், மற்ற அராபியர்களும், இஸ்ரேலியர்களும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.

இதற்கிடையில் இஸ்ரேல் அரசுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தப் பல முயற்சிகள் நடந்தன. கடைசியில் 1993-ம் ஆண்டில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. முதல் முறையாக இஸ்ரேல் நாட்டையும், அரசையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. அதேபோல் பாலஸ்தீன விடுதலை அமைப்பையும், பாலஸ்தீனத்தில் சுயாட்சி அதிகார அமைப்பையும் இஸ்ரேல் அரசு அங்கீகரித்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கால வரம்புடன் கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இதற்கு இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் இஸ்ரேலியத் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலஸ்தீனத்தில்  ஹமாஸ் என்னும் அமைப்பு செல்வாக்குப் பெற்றது. இப்போது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டிலும், காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………

இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வழக்கம் போல ஐ.நா. சபைப் பொதுச் செயலாளரும், மற்ற பலரும் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு 15, ஜூலை, 2014 அன்று இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. “ இரு தரப்பும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். 1967, ஜூன், 4 அன்று இருந்த எல்லைப் பகுதிகளைக் கொண்ட, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் ……….. “ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.*

இதுதான் சாத்தியமான சரியான தீர்வு. இதை நோக்கியே உலக ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

–    இரா.ஜவஹர்

* 1967 நவம்பர் 22ல் இயற்றப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவின்சில் தீர்மானம்(எண் 242) அடிப்படையிலான இரு நாட்டுத் தீர்வு – வினவு

வினவு ஏழாம் ஆண்டு சிறப்புக் கட்டுரையாக பாலஸ்தீனம் பற்றி மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

சமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்

4

ந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் இந்து மதவெறி பண்பாட்டுத் தாக்குதலின் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் “தற்போது மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டுள்ளது, அடுத்த முறை மற்ற மொழிகளுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு கூறியிருக்கிறது.

செய்தி (தினகரன்)- சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சமஸ்கிருத வாரம் தடை மனுபடம் : ஓவியர் முகிலன்

மோடி அரசின் சமஸ்கிருத வாரம்!                                                                    
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே,

  • இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியக் கருத்தைத்
    திணிக்கும் சதியே சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம்!
  •  சமஸ்கிருதத்துக்கு கொண்டாட்டமாம் ஒருவாரம்
    தூக்கி எறி அதை மோடி அரசோடு (குப்பை) ஓரம்!
  • என்றோ செத்துப்போன
    சமசுகிருதம் என்ற வட மொழியை
    மக்கள் பேசுவதில்லை, எழுதுவதில்லை, பாடுவதில்லை.
    போற்றுவது இன்னமும்
    ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனர் மட்டுமே –
    பார்ப்பனீயம் சமஸ்கிருதம் இரண்டையும்
    ஒன்றாய்த் தூக்கியெறிவோம்!
  • செத்த பிணத்துக்கு அலங்காரம் செய்வதுண்டோ
    செத்த வடமொழிக்குச் சிங்காரம் செய்யலாமோ!
    வடமொழி – இந்தி மோடியின் கூப்பாடு!
    கல்வியில் இந்துமதவெறி மோடியின் ஏற்பாடு
    இந்த பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம்!
  • நம் தமிழுக்கு எதிர் சமஸ்கிருத சூழ்ச்சியா
    நம் மக்களுக்கு எதிர் இந்தி ஆட்சியா
    வடமொழி – இந்திக்கு கொண்டாட்டமா
    இவைகளை கூண்டோடு தூக்கியெறிவோம்!
  • இந்தித்திணிப்பு, சமஸ்கிருத மீட்பு,
    வரலாற்று திரிப்பு என்ற
    மோடி அரசின் பார்ப்பன பாசிச
    நடவடிக்கைக்களை முறியடிப்போம்!
  • அன்று இந்தித் திணிப்புக்கு எதிராக
    ஆகஸ்டு 07 முதல் 13 வரை
    சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடிப்போம்!
    பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!
  • இந்தி – சமஸ்கிருத திணிப்பை
    கல்வி நிலையங்களில் இருந்து ஒழித்துக்கட்ட
    கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து
    மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப் போராடுவோம்!
  • சி.பி.எஸ்.சி பள்ளிகளில்
    சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!
    மோடி அரசின் உத்தரவை திரும்பப்பெற வைப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

6.8.2014, காலை 11 மணி
பத்மசேஷாத்ரி சி.பி.எஸ்.சி பள்ளி
ஹபிபுல்லா சாலை (நடிகர்சங்க கட்டிடடம் அருகில் ), தி.நகர், சென்னை.

மக்கள் கலை இலக்கியக்கழகம்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
சென்னை 9445112675

வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

21

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2

ஹிந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்று  முதல் அரங்கை பார்த்ததுமே ‘ஆன்மீக’ பரவசம் மெய்சிலிர்க்க வைத்தது.

vanniyar-varalatru-aivu-maiyamநத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்தி, சொத்துக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறியர்களின் அரங்கம் தான் முதல் அரங்கம். இந்துமதவெறி வேறா, வன்னிய சாதிவெறி வேறா என்று எண்ணிக்கொண்டே அரங்கில் நின்று கொண்டிருந்தவர் அந்த அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததை கவனித்தோம்.

அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த வன்னிய குல ஷத்திரியர்களின் ஆண்ட பரம்பரை கதையை பெருமை பொங்க கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறிய அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த ஆண்டபரம்பரையினர் நத்தம் காலனியில் எப்படி குக்கர் விசிலைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்தனர் என்பதை விளக்குவதற்கும் ஒரு தனி ஸ்டாலை போட்டிருந்தால் இந்து ஆன்மீக சேவை நடைமுறையில் செய்து வரும் சேவை குறித்த பிராடிகல் கிளாசாகா இருந்திருக்கும்.

ஆண்டபரம்பரை பெருமை பீற்றிக்கொள்ளும் இந்த ஷத்திரியர்கள் எத்தகைய பார்ப்பன அடிமைகள் என்பதையும் அவரே உணர்த்தினார். “சிதம்பரம் கோவிலே பிச்சாவரம் ஜமீனோட சொத்து தாங்க ! இப்போ அவங்க செல்வாக்கா இல்லைங்கிறதனால தீட்ஷிதர்கள் சொல்பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்க, மத்தபடி தமிழில் பாடுற போராட்டத்தை எல்லாம் மனித உரிமை பாதுகாப்பு மையம்ங்கிற அமைப்பு தான் பன்னாங்க. தீட்சிதர்களும் தமிழில் பாடக்கூடாதுன்னு சொல்லலை, மேடையில ஏறக்கூடாது, உள்ள போகக்கூடாது, குறிப்பிட்ட நேரத்துல பாடக்கூடாதுன்னு தான் சொல்றாங்க. மற்றபடி அங்கே வேற எந்த பிரச்சனையும் இல்லைங்க” என்று சற்று நேரத்திற்கு முன்பு ஆண்ட பரம்பரை பெருமை பேசிய ஷத்திரிய வாய், பார்ப்பன அடிமைத்தனத்தை விதந்தோதியது. இத்தகைய சரணடைதலைத்தான் ஆர்.எஸ்.எஸ்-ம் எதிர்பார்க்கிறது.

nagarathar-nattukottaiஇந்து மதம் என்றாலே சாதி தான் என்றார் அம்பேத்கர். அதை வாசல்படியிலேயே நிரூபித்திருக்கிறார்கள், அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். சரி சாக்கடை என்றால் நாறத்தானே செய்யும் என்று அடுத்த அரங்கிற்கு நகர்ந்தோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களுக்கும் இந்த ஆன்மீக கண்காட்சியில் அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சாதி சங்க அரங்கிலும் அந்தந்த சாதியில் பிறந்த கட்டபஞ்சாயத்து ரவுடி முதல் சினிமா வாய்ப்பிற்காக கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருப்பவர் வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் அத்தனை பேரின் படங்களையும் தேடிப்பிடித்து ஸ்டால் முழுவதும் ஒட்டி வைத்துக்கொண்டு இவரு எங்க ஆளு என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தனர். இந்த சாதி சங்கங்களின் அரங்குகளில் எல்லாம் சொந்த சாதிக்குள் வரன் பார்க்கும் வேலை தான் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

ஹிந்து ஆன்மீக கண்காட்சியின் பத்திரிகை தொடர்பாளர், “பல்வேறு இந்து அமைப்புகள் 260 கடைகளை போட்டார்கள்.” என்று கூறியிருக்கிறார். அந்த இந்து அமைப்புக்கள் சாதி சங்கங்கள்தான் என்பதும், சாதிக்குள் வரன் தேடிக் கொடுப்பதுதான் இந்து அமைப்புக்களின் ஆன்மீக சேவைகள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

tambrasஇந்து ஆன்மீகம் என்கிற பெயரில் சாதியை மேலும் இறுக வைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்திருக்கும் ஏற்பாடுதான் இந்த கண்காட்சி.

ஒரு ஸ்டாலில் ஒரு மாமியும் மாமாவும் அமர்ந்திருந்தனர். நாம் அருகில் சென்றதும் எழுந்து “வாங்கோ வாங்கோ.. ஐயரா ஐயங்காரா” என்றார் மாமி, அப்போது தான் அது தாம்ப்ராஸ் ஸ்டால் என்று தெரிந்தது. “எதுவும் இல்லை” என்றோம். “அப்படின்னா கிளம்புங்கோ” என்பதை போல எழுந்து நின்ற மாமி உட்கார்ந்தார். வேற்றாள் என்று கண்டு கொண்டதும் அவாள்கள் நம்மை ஒதுக்குவதை எவ்வளவு நாசுக்காக செய்தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய முனைவர் பட்டபடிப்பிற்கு உரியது.

melmaruvathur-1அடுத்து மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சூத்திர   கம்பெனி   வந்தது. பார்ப்பனர்கள் யாரும் இந்த திசைபக்கம் திரும்பகூட இல்லை. இந்து ஒற்றுமைக்கு இது ஒன்றும் சாஸ்திர விரோதமில்லையே? இஸ்திரி பெட்டிகள், சக்கர நாற்காலிகள், தையல் எந்திரங்கள், அண்டா வழங்குதல் என்று நடிகர்கள் பாணியில் நலிந்த இந்துக்களுக்காக சில உதவிகளை செய்து அதை வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர் ஓம் பராசக்தி குழுவினர். ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஊழலிலிருந்து பாதுகாப்பாக தப்பிப்பதற்கு செவ்வாடை அம்மா கம்பெனிக்கு இந்த அவாள் சேர்க்கை உதவலாம்.

தமிழ்நாடு ரெட்டி நலசங்கம் என்ற கடைக்கு முன் ஒரு வயதான பெரியவர் நின்றிருந்தார். “என்ன சார், இந்து ஆன்மீக கண்காட்சின்னு போட்டுட்டு இந்துக்களை இப்படி சாதி, சாதியா பிரிச்சு வைக்கும் வேலையை செய்றீங்களே, சரியா ” என்று கேட்டோம்.

reddy-nala-sangam-3“அய்யய்யோ, அப்படி எல்லாம் இல்லைங்க, நாங்களும் இந்துக்கள்தான், முஸ்லீம் மாதிரி இல்லை. ரெட்டி குலத்துக்கு சேவை செய்கிறோம். ஒவ்வொரு சாதிக்காரரும் அவங்கவங்க கம்யூனிட்டிக்கு உதவணும். நாங்க ஏழை ரெட்டி சாதி மாணவர்களுக்கு உதவி செய்கிறோம். வேறு சாதி ஏழை மாணவர் யாராவது வந்து கேட்டா, அவங்க சாதி சங்கத்தில கேட்கும்படி சொல்வோம்” என்றவர், கொஞ்சம் யோசித்து, “சில சமயம் தெரிஞ்சவங்கன்னு மத்த சாதிக்காரங்களுக்கும் உதவி செஞ்சிருக்கோம்” என்றார்.

“இப்ப பாருங்க, பக்கத்து ஸ்டால் ரெட்டி இளைஞர் சங்கத்தில உட்கார்ந்திருப்பது ஒரு நாயுடு பையன்தான். வேலைக்கு ஆளு கெடைக்கறதே கஷ்டமா இருக்கு. அதான் நாயுடு பையனா இருந்தாலும், நம்ம ஸ்டால்ல உட்காரச் சொன்னோம்” என்றார். பக்கத்து ஸ்டாலில் வேறு வேலை கிடைக்காத அந்த பையன் ரெட்டி சாதி பெருமையை பரப்பிக் கொண்டிருந்தான்.

இவை தவிர கம்மநாயுடு எழுச்சிப் பேரவை, ஹிந்து நாடார் மகமைகள், நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, வெள்ளாளர், பிள்ளைமார், செங்குந்தர், முதலியார், சேனைத்தலைவர் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை ஸ்டால்களும் போடப்பட்டிருந்தன.

youth-for-dharmaநலிந்து வரும் இந்து தருமத்தை பாதுகாக்க சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரம்பித்த “தர்ம ரக்ஷண சமிதி” அமைப்பின் இளைஞர் பிரிவு கடையில் அந்த அமைப்பின் நடவடிக்கைகளை நம்மிடம் விளக்கியவர், விவேகானந்தா பள்ளியில் படித்து சின்ன வயதிலேயே இந்து தருமத்தை பாதுகாக்க உறுதி பூண்டாராம். இப்போது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இந்து ஆன்மீக தொண்டு ஆற்றுகிறாராம்.

மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆன்மீக ஆறுதல் கொடுப்பதைப் பற்றிச் சொன்னார். “கிருத்துவர்கள் பைபிளோடு, பன், பால் என்று கொண்டு போய் கொடுத்து ஜெபம் செய்கிறார்கள். அதன் மூலம் மதம் மாற்ற முயற்சிக்கிறார்கள். அதை முறியடிப்பதற்கு நாங்கள் இந்து ஆன்மீகத்தை நோயாளிகளுக்கு கொண்டு செல்கிறோம்” என்றார். அவர் எழும்பூர் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஆன்மீக செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை காட்டினார். “அதோ அந்தப் பக்கம் நிற்பதுதான் கிருத்துவ மதமாற்றி. நாங்க போனதிலிருந்து அவங்க மதமாற்ற முயற்சி தடைபட்டிருக்கிறது” என்றார்.

yadhava-maha-sabha“நீங்களும் நோயாளிகளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு போவீங்களா” என்றால் “அதெல்லாம் இல்லை. அவங்க மன ஆறுதலுக்கான ஆன்மீகம் மட்டும்தான் கொடுப்போம்” என்றார்.

அடுத்ததாக தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் மத்தியில் இந்து மதத்துக்கு உயிர் கொடுக்கிறோம் என்று ஒரு புகைப்படத்தைக் காட்டினார். “அவங்களுக்கு பணமோ, பொருளோ வேண்டியதில்லை. நம்மோட அங்கீகாரம்தான் வேணும். நாங்க போனதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அந்தப் பகுதியில் ஒரு சில குடும்பங்க மதம் மாறிட்டாங்க. நாங்க போன பிறகு மத்தவங்க நிச்சயமா மதம் மாற மாட்டோம்னு சொல்லிட்டாங்க. திரும்பவும் வரச் சொல்லியிருக்காங்க. நம்ம இந்து பண்பாட்டை அவங்க மறந்துடக் கூடாது” என்றார்.

“தருமபுரியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஒருவன் வேறு சாதி பெண்ணை காதலித்து திரும்ணம் செய்ததற்காக அந்த மக்களின் வீடுகளை எல்லாம் அடித்து உடைத்தார்களே, அதற்கு எதிராக உங்கள் இளைஞர் இயக்கத்தினர் ஏதாவது செய்தீர்களா” என்று கேட்டால், “அதிலெல்லாம் நாம தலையிடக் கூடாது சார். அதெல்லாம் அரசியல். அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அரசியல்வாதிங்கதான் சாதிகளுக்குள்ள சண்டை ஏற்படுத்துகிறார்கள்”

vellalara-senkunthar-mudhaliyar“அப்போ சாதிகள் இருக்கணும்னு சொல்றீங்களா” என்று கேட்டதும், அதிர்ச்சியடைந்தவராக, “அப்போ சாதி ஒழியணும்னு நீங்க நினைக்கிறீங்களா, வருணாசிரம தருமத்தையே வேண்டாம்னு சொல்றீங்களா” என்று கோபப்பட்டார்.

பெரியார் பிறந்த தமிழகத்தில் இப்படி ஒரு கண்காட்சி நடத்தப்பட்டிருப்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மிகப்பெரிய அவமானமாகும். இந்து ஆன்மீக கண்காட்சி என்கிற பெயரில் பார்ப்பன சனாதன தர்மத்தையும், சாதி அமைப்பையும் நியாயப்படுத்துகிறார்கள், சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டி விடுகிறார்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி சங்கங்களையும் ஊக்குவிக்கிறார்கள்.

இந்த விழாவின் கடைசி நாளில் விழா ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவரான குருமூர்த்தி ஜாதி  அமைப்புகள், ஆன்மிக தோற்றம், சமுதாய உருவாக்கத்தில் பங்களிப்பு, பொருளாதார ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக சமூக மூலதனம், ஜாதி  பற்றிய தவறான கோட்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தி பல்வேறு சாதி அமைப்பினரை பேச வைத்திருக்கிறார்.

nadar-peravaiஇந்த கண்காட்சி தமிழகத்தில் ஓரளவு அடித்து வெளுக்கப்பட்ட சாதி உணர்வையும், சாதி அமைப்புகளையும் வளர்க்கின்ற முயற்சியாகும், இது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச கும்பலை தமிழகத்தில் வளர்த்து விடுவதற்கான புதிய சதி.வட இந்தியா போன்று குறிப்பாக உத்திரபிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை தூண்டிவிட்டு குளிர் காய்ந்த இந்துமதவெறியர்கள் இங்கே ஆதிக்க சாதிகளை அரவணைத்து திராவிட இயக்கங்களின் செல்வாக்கை குறிப்பாக பெரியாரின் கருத்தை அழிக்க நினைக்கிறார்கள். நேரடியான இந்து ஆதிக்க சாதி வெறிதான் இந்துமதவெறியர்களின் பலம் என்பது பல மாநிலங்களில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

முற்போக்கான தமிழகத்தை பிற்போக்கான குஜராத்தாகவும் மாற்றுவதற்கான திட்டம். இதற்கு அரசு நிறுவனங்களே உடந்தையாக இருப்பது மற்றொரு அபாயம். இந்த கண்காட்சியில் இந்திய தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆகியவையும் பங்கேற்றிருக்கின்றன.

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் நடத்தப்பட்டிருப்பது இந்து ஆன்மீக கண்காட்சி என்கிற பெயரில் மிகப்பெரியதொரு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவாகும். பார்ப்பன பயங்கரவாதத்தைவிதைக்கும் இந்த காண்காட்சிதான் உண்மையில் சமூக இணக்கத்தை சீர்குலைத்து சாதிவெறியைத் தூண்டி அதையே இந்துமதவெறியாக மாற்றுவதற்கு துடிக்கிறது.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014 அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

1

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே

(2002 குஜராத் முஸ்லீம் இனப்படுகொலையைத் தொடர்ந்து 2003 பிப்ரவரி மாதம் மக்கள் கலை இலக்கியக்  கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகளால்  நடத்தப்பட்ட பார்ப்பன பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட உரை.)

“ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்ற தலைப்பில் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே  ஆழமான தன் உரையை எளிமையான எடுத்துக்காட்டுகள் மூலம் அளித்திருக்கிறார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. கீழே அவரது உரையின் சுருக்கம் :

ஆனந்த் தெல்தும்டே
ஆனந்த் தெல்தும்டே

காதிபத்திய உலகமயமாக்கம் ஒரு புறமும், பார்ப்பன பயங்கரவாதம் மறுபுறமும் ஆக இருமுனைத்தாக்குதல் நம் மீது தொடுக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்றன.

உலகமயமாக்கத்திற்கு எதிரான இத்தகைய இயக்கங்கள் வரவேற்கத்தக்கவையே. எனினும் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இத்தகைய எதிர்ப்பியக்கத்தை நடத்துவதால் அவற்றுக்கிடையே இந்த எதிர்ப்பியக்கத்தின் திசைவழி குறித்துத் தெளிவின்மை நிலவுகிறது. இந்த அமைப்புகள் நடத்தும் இயக்கங்கள் அரசு சாரா நிறுவனங்களின் (தன்னார்வக் குழுக்களின்) ஏற்பாடுகளே என்பதைக் கவனிக்கும்போது ஐயம் மேலிடுகிறது. மாற்று உலகை அமைப்பது என்ற அவர்களின் கோட்பாடு ஏகாதிபத்தியவாதிகளின் உதவியோடுதான் செயல்படுத்தப்படும் போலும்! உலகமயமாக்கம் என்பது முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம்தான் என்பதிலும் இது தவிர்க்க இயலாமல் சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் என்பதிலும் நம்பிக்கை உடைய சக்திகள் தன்னார்வக் குழுக்களின் நடவடிக்கைகளால் திருப்தி அடைந்து விட முடியாது.

இந்தியாவில் நிலைமை பாரதூரமாக உள்ளது. உலகமயமாக்கத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்ச்சியான வெறியாட்டங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். உலகமயமாக்கத்தை விட அபாயகரமானது இந்துத்துவமே என்று ஒருசாரார் கருதுகின்றனர். இதற்கு மாறாக உலகமயமாக்கமே பேராபத்து விளைவிக்கக் கூடியது என்று கருதுவோரும் உள்ளர்.

உதாரணமாக, இந்துத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்து வரும் மதச்சிறுபான்மையினர் உலகமயமாக்கத்தை அவ்வளவாக எதிர்ப்பதில்லை. தனியார்மயத்தின் விளைவாக இடஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பறிகொடுத்து வரும் தலித்துக்கள் உலகமயமாக்கத்தை எதிர்த்த போதிலும் இந்துத்துவ எதிர்ப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதைவிட மோசமானது என்னவெனில், தலித்துக்கள் சங்கப் பரிவாரங்களின் கவர்ச்சிவாத அரசியலுக்கு இரையாகி இந்துத்துவத்தின் காலாட்படையாக மாறி வருவதுதான். பழங்குடியினர் பலரும் மீண்டும் இந்துக்களாக மதம் மாறி வருகின்றனர். உலகமயமாக்கம் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அவர்கள் உலகமயமாக்கத்தை எதிர்க்க முன்வந்த போதிலும் இந்துத்துவத்தை எதிர்க்க முன்வரவில்லை என்பது கவனத்துக்குரியது. இதுபோல் உலகமயமாக்கத்தின் விளைவாகத் தங்களின் கல்வியைப் பறிகொடுத்து வரும் மாணவர்களும் இந்துத்துவத்தின் அபாயம் பற்றிச் சரிவர உணரவில்லை. மறுபுறத்தில், இந்துத்துவ எதிர்ப்பில் முனைப்பு காட்டி வரும் பல மதச்சார்பற்ற சக்திகள் உலகமயமாக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

உலகமயமாக்கமும் இந்துத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே. இதைப் புரிந்து கொள்ளாத தெளிவின்மை மக்கள் திரள் இயக்கங்களைக் கட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தி ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக முடியும். உலகமயமாக்கமும் இந்துத்துவமும் மட்டுமல்ல, பாசிசமும் இவற்றோடு நெருக்கமான தொடர்பு உடையதாகும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் அடிப்படைத் தத்துவம் நவீன தாராளவாதம் ஆகும். இந்துத்துவமோ சங்கப்பரிவாரங்களின் அரசியல் – பண்பாட்டுச் செயல் திட்டம் ஆகும். உலகமயமாக்கம், இந்துத்துவம் இவ்விரண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகமே பாசிசம் ஆகும்.

தனிநபரின் அதீத ‘சுதந்திரம்’ என்பதுதான் நவீனதாராளவாதத்தின் அடிப்படைக் கோட்பாடு, இக்கோட்பாடு எத்தகைய கூட்டுச் செயல்பாட்டையும் கூட்டத் தன்மையையும் அடியோடு நிராகரிக்கிறது; இவ்விதத்தில் இது கம்யூனிசத்துடன் முரண்படுகிறது; இவற்றை எல்லாம் அகற்றிவிட்டு அதனிடத்தில் நபர்களுக்கு இடையிலான போட்டி மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கிறது; மானுட முன்னேற்றத்தின் தாரக மந்திரம் இப்போட்டி மனப்பான்மையே என்று கூச்சலிடுகிறது.

மோடி - அம்பானி
உலகமயமாக்கம் தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது.

நவீன தாராள வாதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கத்தில் ஏழை எளியோர் அதிகாரமற்றோர்க்கு இடமே கிடையாது; ‘திறமை’யற்றோர்க்கும் அங்கு இடம் கிடையாது. சந்தைச் செயல்பாடுகளில் சாமர்த்தியம் காட்டத் தெரியாமல் இருப்பதுதான் திறமையின்மையாகும். நவீன தாராளவாதம் சமத்துவத்தை அடியோடு எதிர்க்கிறது; சுதந்திரமான தொழில் முனைவோரின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிறது. தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது. இக்கோட்பாட்டின்படி, சமத்துவமின்மைதான் மனிதக் குழு முன்னேற்றத்தின் உந்து சக்தி; அதுபோலவே, சகோதரத்துவத்தையும் இது நிராகரிக்கிறது.

இந்துயிசத்தின் அடிப்படையாகவும் தனிநபர்வாதமே இருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியின் அடிப்பையில்தான் அவனுகுரிய சாதி அந்தஸ்தை இந்த உலகில் அடைகிறான். தன்னுடைய சாதிக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்வதன் மூலம்தான் அடுத்த பிறவியில் ஒரு மனிதன் உயர் சாதியில் பிறக்கும் வாய்ப்பைப் பெறுகிறான் என்கிறது இந்துயிசம்.

கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி அதைத்தாண்டியும் இந்துத்துவம், நவீன தாராளவாதம் ஆகிய இரண்டுக்குமான ஒப்புமைகள் பரவிக் கிடக்கின்றன. சான்றாக, இவை இரண்டும் சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானவை. சமத்துவமின்மை (அசமத்துவம்) என்பதுதான் இயற்கையானது என்று இவை இரண்டுமே கருதுகின்றன.

நவீன தாராளவாதம் வழங்கும் சுதந்திரம் காசுக்கு வாங்கப்படும் ஒரு பண்டமாகும். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான எதையும் – உணவு, உடை, உறைவிடம் உட்பட எதையும் பணத்தைக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். உங்களிடம் பணம் இல்லையென்றால் உங்களுக்குச் சுதந்திரம் இல்லை. எனவே நவீன தாராள வாதம் வழங்கும் சுதந்திரம் பணத்தில் உள்ளது. அது பணம் படைத்தவர்களின் சுதந்திரம் ஆகும்.

சங்கரமடம்
இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு இந்துத்துவம் போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது.

“இந்துயிசம் சுதந்திரம் என்பதையே அறியாதது” என்று கருதுவது சரியல்ல. இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு அது போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது. இவர்களுக்குச் சேவை செய்யப் பிறந்த சூத்திரர்களுக்கு இந்தச் சுதந்திரம் இல்லை. பஞ்சமர்களோடு ஒப்பிடும் வகையில் சூத்திரர்களும் சுதந்திரத்தைக் கோரமுடியும். வர்க்கங்கள் தம் சிறப்புத் தன்மையை இழந்து சாதிகளாக உருமாறிய பின் சுதந்திரம் வாங்கத்தக்கதாகி விட்டன.

அநேகமாக எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இந்துத்துவத்திற்கும் புதிய தாராள வாதத்திற்குமிடையில் வியக்கத்தக்க ஒத்த தன்மைகள் இருப்பதை நாம் காண்கிறோம்.

இவ்வாறு இந்துத்துவம் என்பது உலகமயமாக்கத்தின் வெறும் பின்தொடர்ச்சி அல்ல; அதன் பண்பு ரீதியான பிரதிபலிப்பும் ஆகும். அரசு மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் பாசிசமயமாகி வருவது உலகமயமாக்கத்தின் பின்விளைவு மட்டுமின்றி இந்துத்துவப் பரவலின் இயல்பான விளைவும் ஆகும். ஏனெனில், இந்துத்துவம் தன் பிறப்பிலேயே ஒரு பாசிச ரகம்.

பாசிசப் பண்பு என்பது இந்துத்துவத்தின் பிறவி அடையாளம். மராட்டியத்தில் பூனாவில் பார்ப்பன மன்னர்களான பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியத்தின் பார்ப்பனச் சக்திகள் ஒன்று திரண்டு இழந்த ஆட்சியைப் பெறுவதற்கு முயன்றனர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பூனா பார்ப்பனர்களின் கலகம் உண்மையில் இந்த வகையைச் சேர்ந்ததுதான். காலனிய எதிர்ப்புப் புரட்சிகரப் போராட்டங்களாக இவற்றைப் பார்ப்பனர்கள் வர்ணித்தபோதிலும், சாராம்சத்தில், அது பழமைவாதப் பிற்போக்கு வகையிலானதே. தங்களுக்கேற்ற ஒரு வலதுசாரிப் பழமைவாதப் புரட்சியைத் தேடிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் முசோலினியின் பாசிசத்தில் புகலிடம் தேடினர்.

சங்கப் பரிவாரங்களின் முழக்கமான “ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி” என்பது “ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே தலைவர்” என்ற நாஜி முழக்கத்தின் எதிரொலியே.

1947-க்குப் பிறகு பல்வேறு வெகுஜன அமைப்புக்களைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளை நிறுவியது. கம்யூனிச எதிர்ப்பை லட்சியமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உள்நாட்டு ‘எதிரிகளா’ன முசுலீம்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்ந்துவிட்டது. சிறுபான்மையினரைப் பற்றி வதந்திகளைப் பரப்பி வெகுஜனங்களிடம் வெறியைக் கிளப்பியது. ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கையாண்ட அதே தந்திரத்தை இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கையாண்டது. ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது. மேலும் ஆப்கானிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய தொலைதூர நாடுகளையும் உள்ளடக்கிய அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் மேலாதிக்க விஸ்தரிப்பு வெறியை ஏற்படுத்துகிறது.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது – சங்கப் பரிவாரங்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்துத்துவம் என்ற போதிலும், அது அவர்களோடு முடங்கி விடவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. இன்று அது இந்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

பார்ப்பன பயங்கரவாதம்
பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும்

இந்திரா காந்தி இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆன காலந்தொட்டே இந்துத்துவம், ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகத் திகழ ஆரம்பித்தது என்பதும், ராஜீவ்காந்தியின் பதவிக்காலத்தில் இது குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்பட்டது என்பதும் கவனத்துக்குரியது. இதே காலகட்டத்தில் தான் தாராளமயச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நரசிம்மராவ் ஆட்சியின்போது உலகமயமாக்கம் திணிக்கப்பட்டபோதே இந்துத்துவச் சக்திகளின் ஏறுமுகமும் தென்படத் தொடங்கியது. பாரதீய ஜனதாக் கட்சி அல்லது காங்கிரசின் மிதவாத, தீவிரவாத, இந்துத்துவ ரகங்களுக்கு இடையில் உண்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை. திராவிடப் பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாடிய போதிலும், ஜெயலலிதா தமது பார்ப்பனியத்தை பாரதீய ஜனதாவுடன் ஐக்கியப்படுத்துகிறார்; கலைஞரோ பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கண்டுள்ளார்.

இவற்றில் எல்லாம் இருந்து கிடைக்கும் படிப்பினை என்ன? இந்துத்துவத்தையும் உலகமயமாக்கத்தையும் எதிர்ப்பது என்பதன் பொருள் என்னவெனில், தேர்தல் அரசியலில் இதற்கான தீர்வு இல்லை என்று உணர்வதே ஆகும். தீர்வு, மக்கள் திரள் போராட்டங்களில் இருக்கிறது – பாசிசச் சக்திகளுக்கெதிரான தெருச்சண்டையில் இருக்கிறது.

பாசிச இந்துத்துவத்தை உலகமயமாக்கலில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது. எனவே, ஒன்றுக்கு எதிரான போராட்டம் என்பது மற்றொன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இருந்தே தீரவேண்டும். எனவே, இவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் அரசியல் ரீதியானவை மட்டுமின்றி கலாச்சார ரீதியானவை என்பதாகவும் அமைய வேண்டும். உள்ளூர் அளவில் மட்டுமின்றி உலகுதழுவியதாகவும் அமைய வேண்டும். பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
____________________________

சிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை

3

செய்தி (தினத்தந்தி) : செருப்பை சுமக்க வைத்த குற்றவாளிக்கு ஓராண்டு ஜெயில் 

மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார்.”

dalith-vankodumai-cartoon

படம் : ஓவியர் முகிலன்

குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக

1

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

பத்திரிகை செய்தி

குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை!

த்தாண்டுகால இழுத்தடிப்பிற்கு பின், குடந்தை தனியார் பள்ளி தீ விபத்து வழக்கு 30.07.2014 அன்று முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த 94 குழந்தைகளைக் காவு கொண்டு, தமிழக மக்களை உலுக்கிய இந்த கொடிய கொலை வழக்கு பிற எல்லா வழக்குகளையும் போலவே முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 25 பேரில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன், மாவட்டத் தலைமைக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோரை தமிழக அரசே வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. இவர்களை விடுவித்திப்பதிலிருந்தே இந்த வழக்கில் தமிழக அரசு யார் பக்கம் என்பதை அறியலாம்.

மறுக்கப்பட்ட நீதிவர்கள் போக ஒருவர் இறந்துவிட, மீதமுள்ள 21 பேரில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என 11 பேரை விடுவித்த நீதிமன்றம் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறையும் கட்டிட உறுதிக்குச் சான்றளித்த பொறியாளருக்கு இரண்டாண்டுகள், ஏனைய எட்டு பேருக்கும் ஐந்தாண்டுகள் வீதமும், தண்டனை வழங்கி புலவர் பழனிச்சாமிக்கு ரூ 51 லட்சம் உட்பட மொத்தம் ரூ 52.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று பேசாதவர்கள் இல்லை. பணபலமும், அதிகார பலமும் கொண்டவர்களை காப்பாற்ற எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் வழக்கை இழுத்தடிக்க நமது நீதிமன்றங்கள் தயங்குவது இல்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைவிட துலக்கமான வேறு உதாரணம் தேவையில்லை. விரைவாக தீர்ப்பு வழங்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட விரைவு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு பின் அவசியப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டும் வழக்கு முன்னேற்றமில்லாததால் மாவட்ட நீதிமன்றத்திற்க்கு 2012-ல் மாற்றப்பட்டு இரண்டாண்டு விசாரணைக்குப் பின் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 94 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த வழக்கை நடத்தக்கூடாது என்பதில் அரசு காட்டிய அக்கறையையே இத்தாமதம் காட்டுகிறது.

குற்றத்தில் பள்ளியின் தாளாளர் சரஸ்வதி (நிறுவனர் பழனிச்சாமியின் மனைவி), தலைமை ஆசிரியை சாந்தா லட்சுமி (பழனிச்சாமியின் வளர்ப்பு மகள்) ஆகிய இருவரின் பங்கையும், சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய இருவரின் பங்கையும் சமமாகக் கருதி அனைவருக்கும் ஐந்தாண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் உரிமையாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அதிக தண்டனை கொடுப்பதை தவிர்க்கும் முகமாகவே இந்த ‘சமத்துவ’ பார்வை இங்கே முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல் கல்வித்துறை எழுத்தர்கள் சிவப்பிரகாசம், துரைராஜ், துணைநிலை அலுவலர்கள் தாண்டவன், பாலாஜி ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையளித்த நீதிமன்றம் நகராட்சி ஆணையர், நகரத்திட்டமிடல் அலுவலர், கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆகிய முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது. விபத்து நடந்தால் கீழ்மட்டத்தில் சிலரைத் தண்டித்துவிட்டு லஞ்ச ஊழலில் பெரும்பங்கைச் சுருட்டுகின்ற உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாகத்தான் நமது சட்டங்களே இயற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் எந்தவித மீறலும் இல்லை என ஜெயலலிதாவால் அறிவிக்க முடிகிறது.

பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இறந்து போனதால் மக்களுடைய கோபத்தை தணிப்பதற்குத்தான் இந்த தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்தப் படுகொலைக்கு காரணமான தனியார் கல்விக்கொள்ளை என்பது கடந்த பத்து ஆண்டுகளில் இன்னும் பன்மடங்கு தீவிரமடைந்திருக்கிறது. அரசு அதற்குத் துணை நிற்கிறது.

தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளையோ, குடந்தை தீ விபத்தையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் அளித்த பரிந்துரைகளையோ கூட இந்தப் பத்தாண்டுகளில் ஒரு தனியார் பள்ளி கூட மதித்து நடைமுறைப்படுத்தவில்லை. அது மட்டுமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என அரசை மிரட்டவும் செய்கின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு பள்ளி மீது கூட வழக்கில்லை, தண்டனையில்லை. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை எந்த பள்ளியும் வசூலிப்பதில்லை. தாம் நிர்ணயித்திருக்கும் கொள்ளைக் கட்டணத்தைத்தான் பகிரங்கமாக வசூலிக்கிறார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை.. இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் மொத்த கல்வி செலவையும் அரசு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்வதற்கு மேல் நீதி மன்றம் சிந்திக்க விரும்பவில்லை.

நாடு முழுவதும் அன்றாடம் நம் குழந்தைகளின் பேருந்து பயணத்திலிருந்து, வகுப்பறைக் கொடுமைகள், பாலியல் தொல்லைகள், கொலைகள், தற்கொலைகள் என அனைத்திற்கும் மூல முதற்காரணம் தனியார் மயக் கல்வியும், கொள்ளையுமே. இந்தத் தனியார் மயத்தை ஊக்குவித்து வளர்க்கும் அரசும், அதிகார வர்க்கமுமே முதல் குற்றவாளிகள். இவர்களை நீதிமன்றங்கள் ஒரு போதும் தண்டிக்காது. நீதிமன்றங்களும் குற்றவாளிகளின் கூட்டாளிகளே என்பதைத்தான் இத்தீர்ப்பிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

ஜான் கெர்ரி: பாஸ்டன் பிராமணர்கள் X புதுதில்லி பார்ப்பனர்கள்

10

ரண்டு நாட்களாகவே நாளிதழ்களை திறந்தால் சண்டமாருதம் வீசுகிறது. “இந்தியாவிற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை மோடியும் அவரது அமைச்சர்களும் வறுத்து எடுத்து விடுவார்கள்” என்று அனைத்து பத்திரிகைகளும் கிட்டத்தட்ட ஒரே குரலில் எழுதி வருகின்றன. காமடிக்கென்றே விதிக்கப்பட்ட கைப்புள்ளையை ஆக்சன் ஹீரோவாக காட்ட கொஞ்ச நஞ்சம் லாஜிக்காவது வேண்டுமே என்ற கவலை கூட நடுப்பக்க கருத்து கந்தசாமிகளுக்கு இல்லை. தேசபக்தியில் கூடவா லாஜிக் பார்ப்பது என்றொரு லாஜிக்கை அவர்கள் முன்வைக்கலாம்.

ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜ்
மோடி அரசு ‘விசுவரூப’மெடுக்க காரணங்களா இல்லை?

“அமெரிக்கா, இந்தியாவிடமிருந்து பெற விரும்பும் சலுகைகளை மோடி அரசு சும்மா கொடுத்து விடப் போவதில்லை; மோடி அரசு, மன்மோகன் சிங் அரசு போல இல்லை; மிகவும் கடுமையாக பேரம் பேசுவார்கள்”, என்பது ஊடகங்களின் ஏகோபித்த ஏகாந்த கருத்தாக இருக்கிறது.

“உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு”  என்கிறது ஒரு தினமணி செய்தித் தலைப்பு, “ஜான் கெர்ரி இந்திய பயணம், இந்தியாவை சமரசப்படுத்தும் அமெரிக்க முயற்சி வெற்றி பெறுமா?” என்கிறது தினகரன். Indo-US dialogue: Sushma Swaraj talks tough with John Kerry on spying, gives some friendly advice என்றது எகனாமிக் டைம்ஸ்.

‘மோடி, பா.ஜ.க மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் மனதை நோகடித்த அமெரிக்கா சரியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறது’ என்று ரூ 47-க்குள் காலம் தள்ளும் (வறுமைக் கோட்டுக்கு கீழ்) 27 கோடி இந்தியர்களின் விதியைத் தீர்மானிப்பதோடு, அந்த விதியிலிருந்து தப்பி விட்ட எஞ்சிய இந்தியர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். வீடியோ கேம் வர்க்கமென்றாலும் சண்டை சண்டை தானே?

மோடி அரசு ‘விசுவரூப’மெடுக்க காரணங்களா இல்லை?

முதலாவதாக 2005-ம் ஆண்டு மோடி அமெரிக்கா போக திட்டமிட்ட போது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தது வரை குஜராத் மாநிலத்தை அமெரிக்க தூதரகம் அரசியல் ரீதியாக புறக்கணித்து வந்திருக்கிறது. இந்த சோகத்தை பாஜக மறப்பது கடினம்.

இரண்டாவதாக, பா.ஜ.க உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து மோடி அரசு கடுப்பில் உள்ளது. இதை தடுக்க முடியாது என்றாலும் கடுப்பு கடுப்பு தானே?

மூன்றாவதாக, கடந்த டிசம்பர் மாதம் இந்திய தூதரக அலுவலர் தேவயானி கோப்ரகடேவை கைது செய்தது குறித்து இந்திய உணர்வுகள் புண்பட்டிருக்கின்றன. இந்த புண்படலில் பாஜக மட்டுமல்ல காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் என்று அநேக தேசபக்தி மனங்கள் வாடியது உண்மை.

இந்த அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு சும்மா இருந்து விடுமா இந்திய அரசு? இருதரப்பு, சர்வதேச உறவுகளில் அமெரிக்காவின் அழுத்தங்களை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டாமா இந்தியா? என்று ஊடகங்கள் கைப்புள்ளையை கம்புடன் அடிக்க அழைக்கின்றன.

வளரும் நாடுகள் உணவு மானியம் அளிப்பது பற்றிய ஒப்பந்தம் ஏற்படாமல், சுங்க நடைமுறைகளை தளர்த்துவதற்கான உலக வர்த்தகக் கழக உடன்பாட்டில் கையெழுத்திட மாட்டேன் என்று இந்தியா உறுதிபட கூறியிருப்பதோடு, இதன் மூலம் சுமார் $1 லட்சம் கோடி (ரூ 60 லட்சம் கோடி) மதிப்பிலான உலக வர்த்தகத்தையே இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கிறதாம்.

மேலும், “அணு சக்தி, மருந்துத் துறை, சில்லறை வணிகம், நிதித் துறை, ஆயுத உற்பத்தி போன்ற துறைகளில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப இந்தியா தனது சட்டங்களையும் நடைமுறைகளையும் வளைக்க தயாராக இல்லை” என்று எழுதுகிறார் தி ஹிந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்.

சுஷ்மா - கெர்ரி
“இந்திய – அமெரிக்கஇரு தரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது.”

“2013-ம் ஆண்டு அமெரிக்க உளவு நடவடிக்கைகள் பற்றி எட்வர்ட் ஸ்னோடன் தகவல்களை வெளியிட்ட போது மன்மோகன் சிங் எதிர்வினை மிகவும் மென்மையாக இருந்தது, நரேந்திர மோடி அரசிடம் அத்தகைய புரிதலை அமெரிக்கா எதிர்பார்க்க முடியாது” என்கிறார் அவர்.

“இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள அமெரிக்க முன்னேற்றத்துக்கான மையத்தில் ஜான் கெர்ரி உரையாற்றும் போது இந்தியாவுடனான உறவை தவிர்க்க முடியாத கூட்டுறவு என்று பல முறை குறிப்பிட்டாலும், அது இந்தியாவுடனான உறவை சீர்செய்ய எப்படி உதவும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார் சித்தார்த் வரதராஜன்.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், இந்திய – அமெரிக்கஇரு தரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்கும், உலகின் மிக வலிமையான ஜனநாயகத்துக்கும் இடையேயான இந்த உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுதான் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் தேவை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

கெர்ரி தன் பங்குக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கருடன் இணைந்து இந்திய அமெரிக்க உறவு குறித்து ஒரு தலையங்கக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது, இந்தியாவில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது, எரிசக்தித் துறை போன்றவற்றில் அமெரிக்கா இந்தியாவுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று விவரித்திருக்கிறார். குச்சி ஐசுக்கு உருகாதா குழந்தையும் இல்லை. இந்திய சந்தையை விரும்பாத ஒரு மேற்குலக நாடும் இல்லை.

உறவில் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து இரு தரப்புக்கும் நலன் பயக்கும் உறவை வளர்த்து செல்வதற்கு தனது தனிப்பட்ட திறமைகளையும், மோடி மற்றும் சுஷ்மா சுவராஜுடனான் தனிப்பட்ட நல்லிணக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கெர்ரி கூறியிருக்கிறார். கட்டதுரையின் கடமை உணர்வில் உண்மை இல்லாமல் இல்லை.

ஜான் கெர்ரிக்கும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.கவுக்கும் இடையே தனிப்பட்ட நல்லிணக்கம் உருவாக்க பல பொது அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சுஷ்மா சுவராஜ்
கெர்ரிக்கும் இந்துத்துவ பரிவாரத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் இவ்வளவு இருக்க, அவருக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் அரசியல் ரீதியாக சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஜான் கெர்ரி போஸ்டன் பிராமின்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்க மேட்டுக் குடி குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். அவரது அம்மா வழி தாத்தா, 19-ம் நூற்றாண்டில் சீனாவுடன் வணிகம் செய்து பெரும் பணம் ஈட்டியவர். அவரது கொள்ளுத் தாத்தா ஸ்காட்லாந்திலிருந்து முதன்முதலில் அமெரிக்காவில் குடியேறிய போது பாதிரியாராக (பூசாரி) வேலை செய்வதற்கு உரிமம் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் பார்ப்பன-பனியா கட்சியுடன் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்வது சிரமமாகவா இருக்கப் போகிறது? ஒரு இந்திய பார்ப்பன நபரை ஒரு அமெரிக்க ராஜதந்திரி பிராமணன் விரும்பாமலா இருப்பான்?

கெர்ரிக்கு பாரம்பரிய குடும்பப் பெருமை மட்டும் இருக்கவில்லை. அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மிகப்பெரிய பணக்காரர் கெர்ரிதான். அவரது தாயின் குடும்பமான ஃபோர்ப்ஸ் குடும்ப உறுப்பினர்களின் 4 அறக்கட்டளைகள் கெர்ரியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதுவும் போதாது என்று பா.ஜ.கவின் மனதுக்கு அணுக்கமான மத விஷயத்திலும் கெர்ரி ஒத்து போகிறார். கெர்ரி ஒரு தீவிர கத்தோலிக்கர். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது பிரச்சாரங்களில் ஜெப மாலை, பிரார்த்தனை புத்தகம், பயணத்துக்கான பைபிள், தேவதையான செயின்ட் கிறிஸ்டபர் மெடல் ஆகியவற்றை ஏந்தியபடியே சென்றிருக்கிறார். மோடியோ வாரணாசியில்  காவி எழுச்சியில்தான் எம்பியே ஆனார்.

கெர்ரிக்கும் இந்துத்துவ பரிவாரத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் இவ்வளவு இருக்க,  அவருக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் அரசியல் ரீதியாக சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஜான் கெர்ரி, 2004 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அப்போதைய அதிபர் இளைய புஷ் என்ற இம்சை அரசனிடம் தோல்வியடைந்தவர். சுஷ்மா சுவராஜூம் அத்வானி-வாஜ்பாய்க்கு பிறகு தான் பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று முட்டி மோதி இந்தியாவின் இம்சை அரசன் மோடியிடம் தோல்வியடைந்தவர். இருவருமே தமக்கு வாய்க்காத பதவியில் தமது கட்சிக்காரர் உட்கார்ந்திருக்க, அவர்களது வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்படுகின்றனர்.

இப்போது இந்தியா வந்திருக்கும் ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜுடன் இந்திய -அமெரிக்க நல்லுறவு குறித்து, ராணுவ உறவு, பாதுகாப்பு, எரிசக்தி போன்ற விவகாரங்கள் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில் “இந்தியர்களை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து பேசினீர்களா” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது, “இது தொடர்பாக இந்திய மக்கள் மிகவும் மனம் புண்பட்டு போயிருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு  நாடுகள் என்றால், நண்பர்களை எப்படி ஒட்டுக் கேட்கலாம்” என்று கண்டித்ததாக சுஷ்மா சுவராஜ் சொல்லியிருக்கிறார். கெர்ரியோ “எந்த உளவுத் துறையும் தமது உளவு நடவடிக்கைகளை வெளியில் பேசுவதில்லை. ஒபாமா, இது குறித்து வெளிப்படையாகவும், திறந்த மனதோடும் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்” என்று சொல்லி,  ‘உங்களுக்கெல்லாம் இந்த பதில் போதும்’ என்று கேள்வியை தட்டிக் கழித்து விட்டார். அல்லது கெர்ரி பதிலுக்கு நிதின் கட்காரியை ஒட்டுக்கேட்டது யாரு என்று புன்சிரிப்புடன் கேட்டிருந்தால் அம்மையார் சுஷ்மாவுக்கு ரொம்பவும் தர்மசங்கடமாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்கர்களிடம் ஒரு டேபிள் மேனர்ஸ் இல்லாமல் இல்லை.

என்.டி.டி.வியில் பிரணாய் ராய்க்கு அளித்த பேட்டியில், “மோடிக்கு விசா மறுத்தது முந்தைய அரசு, இப்போது நாங்கள் வேறு அரசு” என்று முந்தைய காங்கிரசு அரசு மீது பழி போடும் பா.ஜ.க கட்சியின் உத்தியையே அவிழ்த்து விட்டார்,கெர்ரி. அப்படியானால், “முந்தைய அரசு செய்தது தவறு என்று சொல்கிறீர்களா” என்று கேட்டதும், “நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை, எதிர்கால உறவைத்தான் கட்டமைக்க விரும்புகிறேன்” என்று சொல்லி விஷயத்தை முடித்துக் கட்டினார். இல்லை பேசித்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திருந்தால் கடந்த காலத்தில் அது தேவையாக இருக்கலாம், நிகழ்காலத்தில் அது தேவையற்றதாக இருக்கலாமென தேவை-அளிப்பு குறித்த பொருளாதார விதியின் மூலம கெர்ரி பட்டையை கிளப்பலாம்.

ஜான் கெர்ரி - என்.டி.டி.வியில்
“மோடிக்கு விசா மறுத்தது முந்தைய அரசு, இப்போது நாங்கள் வேறு அரசு”

தனக்கு அமெரிக்க அரசு விசா தராததை எல்லாம் மோடி மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். இல்லை மனதில் வைத்திருந்தால்தான் என்ன என்று யாரும் கேட்டால் மோடியிடம் மட்டுமல்ல யாரிடமும் பதில் இல்லை. எதிர்த்துப் பேச முடியாத ஆளிடம் கோபத்தை காட்டும் முறை வேறுதானே? பிரச்சார கூட்டங்களில் திட்டித் தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அதானியின் நலனுக்காக தனது பதவி ஏற்பு விழாவுக்கே அழைத்து விருந்து வைத்த, பெருந்தன்மையாளர் அவர். இப்போது ஒரு டாடா அல்லது அம்பானியின் நலனுக்காக, குஜராத் மற்றும் இந்துத்துவ சைவ உணவு பாரம்பரியத்தை கைவிட்டு அமெரிக்காவுக்கு கறி விருந்து கூட வைக்கத் தயாராகத்தான் இருப்பார். அதில் மாட்டுக்கறியும் கண்டிப்பாக உண்டு. தரகு முதலாளிகளின் கமிஷனும், கோமாதாவின் புனிதமும் வேறு வேறு அல்ல என்பது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய சித்தாந்தம்தானே?

மோடி அடுத்த மாதம் அமெரிக்கா போய் அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ளார். அதற்குள் அமெரிக்காவின் கோரிக்கைகள் அனைத்தும் மோடி அரசால் வெளிப்படையாகவும், திரைமறைவிலும் நிறைவேற்றி வைக்கப்படும் என்பதற்கான தடயங்கள் இப்போது மட்டுமல்ல பா.ஜ.கவின் மரபணுவிலேயே இருக்கின்றன.

இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகம் நிர்ப்பந்தித்து வந்த வர்த்தக சுதந்திரத்துக்கு முழு அங்கீகாரம் அளித்து கட்டுப்பாடற்ற இறக்குமதிக்கு அனுமதி அளித்தது. இறக்குமதிகள் மீதான உபரிவரி நீக்கம், இறக்குமதி வரியை 20%-க்கு மிகாமல் கட்டுப்பாடு, சுங்கத் தீர்வை குறைப்பு மூலம் அன்னிய இறக்குமதிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.

சிறுதொழில் பட்டியலில் இருந்த காலணிகள், விளையாட்டுப் பொம்மைகள் உள்ளிட்ட 14 தொழில்களை அப்பட்டியலிலிருந்து நீக்கி பாட்டா, அடிடாஸ், ரீபோக், நிக் முதலான அந்நிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது.

பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய முறை கலைக்கப்பட்டது. யூரியா மீதான விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்படுதல், சர்க்கரையில் ஊக பேரம் புகுத்தப்படுதல். 49% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் 100% வரை முதலீடு என்று அன்னிய நிறுவனங்களுக்கு இந்தியாவை திறந்து விட்டவர்கள் பா.ஜ.கவினர்.

அன்று பா.ஜ.க அரசு போட்ட அடித்தளத்தை அவர்களை விட பணிவாக முன்னெடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் ஐ.எம்.எஃப் ஊழியர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவுடன் இந்தியாவை மேலும் மேலும் அடிமைப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசால் தொடங்கப்பட்ட இந்திய அமெரிக்க நல்லுறவுக்கான வருடாந்திர பேச்சுவார்த்தை பரஸ்பர நலனுக்கான ராணுவ ஒத்துழைப்பு, ஆற்றல்- சுற்றுச் சூழல் மாறுபடுதல், கல்வி வளர்ச்சி, பொருளாதாரம்-வர்த்தகம், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய 5 தூண்கள் மீது கவனம் செலுத்துகிறது. அந்த வரிசையின் 5-வது சுற்றுதான் இப்போது கெர்ரி, சுஷ்மா இடையே நடந்திருக்கிறது. ஆக இந்த சந்திப்பே பழைய அஜெண்டாவின் தொடர்ச்சி என்றால் இப்போதைய மனக்குறைகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

இவற்றின் விளைவாக 2000-த்திற்குப்  பிறகு இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 5 மடங்கு அதிகரித்து $9,600 கோடியை தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்திய முதலீடு $30 கோடியிலிருந்து $900 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் அமெரிக்க முதலீடு $240 கோடியிலிருந்து $2,800 கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் செயல்படும் முதல் 15 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10 அமெரிக்க நிறுவனங்கள். 6 அமெரிக்க நிறுவனங்கள் $200-$300 கோடி வருமானத்தை ஈட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து $1000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியிருக்கிறது. அமெரிக்கா ரசியாவை முந்தி இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்யும் நாடுகளில் முதல் இடம் பிடித்துள்ளது.

தனக்கு விசா தர மறுத்ததற்காக மோடியும் அமெரிக்காவை ஒதுக்கி விடவில்லை. தனது இமேஜ் சந்தைப்படுத்தலுக்கு ஆப்கோ வேர்ல்ட் வைடு என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தார். குஜராத் முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தி அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது. குஜராத்தில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்க அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு $1 பில்லியன் செலவழிக்கிறது. அதை தனது மண்டல உற்பத்தி மையமாக மாற்றவிருக்கிறது.

எனவே மோடி தனது கட்சிக்காரர்களுக்கும் இந்திய மக்களுக்கும் வேண்டுமானால் டெரரிஸ்டாக இருக்கலாம், அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு உள்ளூர் புரோக்கர்தான். என்றாலும் புரோக்கர்களுக்கு கோபம் வரும் என்பதையோ, வீரம் உண்டு என்பதையோ நாம் மறுக்க வேண்டியதில்லையே!

–    செழியன்

மேலும் படிக்க

இசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

1

க்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் ஜூலை 31, 2014 அன்று தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அவை குறித்து வரப்பெற்ற சில செய்திகளை கீழே தருகிறோம்.

சென்னை

றுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர் தற்போது குண்டுகளைப் பொழிந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை கொன்று அவர்களின் வாழ்விடங்களை தரைமட்டமாக்கி இருக்கிறது. இப்போரினை அமெரிக்கா பின்நின்று இயக்குவதை கண்டித்தும் இந்தியா இசுரேலுடன் கூடிக்குலாவுவதை அம்பலப்படுத்தியும் ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்காக நாம் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாலை நான்கு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற புஜதொமுவின் மாநில இணைச் செயலர் தோழர்.இரா.ஜெயராமன் “அறுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போர் பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மூன்று முறை மிகப்பெரிய தாக்குதலை இசுரேல் மேற்கொண்டிருக்கிறது. தற்போது 23 நாட்களாக நீடித்து வரும் போரில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டு இருக்கின்றனர். வாழ வழி இன்றி பள்ளிக்கூடத்தில் தஞ்சம் அடைந்த மக்களின் மீது கூட தாக்குதல் நடத்தி தன் யூதவெறியினை ஆக்கிரமிப்பு போரின் மூலம் இசுரேல் பறைசாற்றியிருக்கிறது என்றால் அது வெறும் இசுரேல் மட்டும் தனியாக நடத்தும் போர் அல்ல.

உலகத்திலேயே மிகவும் யோக்கியனாக தன்னைக் காட்டிக்கொண்டு ரசியா உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குகிறது என்று நியாயம் பேசும் அமெரிக்கா அதற்கு பின்னால் நின்று வழி நடத்துகிறது என்பது தான் உண்மை. இந்தியாவோ தற்போது இசுரேலை கண்டிப்பதற்கான நேரமில்லை என்று யூத இனவெறி இசுரேலுக்கு தோள் கொடுக்கின்றது. இந்த அயோக்கியத்தனத்தை நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர்.த.கணேசன்  “மொத்த உலகையே சூறையாடிவரும் உலக பயங்கரவாதியான அமெரிக்கா பின்நின்று இயக்கும் பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் போரினை இந்தியா தோள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது என்ற அநியாயத்தினை கண்டிப்பதற்கு கூட நமக்கு உரிமை இல்லாமல் போலீசைக் குவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் கேட்கக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் இந்த இந்திய அரசில் எங்கே இருக்கிறது சனநாயகம்? ” என்ற கேள்வியோடு தொடர்ந்தார்.

“பாலஸ்தீனத்தின் மீது இசுரேல் தாக்குதல் என்றுதான் ஊடகங்களும் கூறுகின்றன. இது தாக்குதல் அல்ல, ஆக்கிரமிப்புப் போர் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்தின் ஆரம்பங்களில் இசுரேல் என்ற தேசம் ஒன்றே இல்லை. ஆனால் இன்று நாடாக மாற்றப்பட்டு அது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவில் வந்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள். தஞ்சம் பிழைக்க வந்தவர்களை பாலஸ்தீன மக்கள் அரவணைத்தார்கள். ஆனால் யார் தங்களை அரவணைத்தார்களோ எந்த மண் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த மண்ணையே கைப்பற்றிக் கொண்டார்கள் யூத வெறியர்கள். அப்படி பாலஸ்தீனத்தின் சில நகரங்களை கைப்பற்றிக்கொண்டு 1940-களின் பின்பகுதியில் இசுரேல் என்ற தனி நாட்டை அறிவித்தார்கள். அந்த இசுரேல் என்ற நாட்டை முதலில் அங்கீகரித்தது அமெரிக்கா. காரணம் மத்திய கிழக்காசியப்பகுதியில் தன்னுடைய பேட்டை ரவுடியாக இசுரேலை வளர்த்து அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிறுவுவதுதான்.

அதன் விளைவு பாலஸ்தீனம் என்ற பரந்து விரிந்த தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி காசாமுனை, மேற்கு கடற்கரை என்ற இரு பகுதிகளாக சுருக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறிய பகுதியையும் கைப்பற்றி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் மீதான இசுரேலின் போர் நடக்கிறது.

இசுரேலுக்கு நண்பனாக இருந்து இந்தப்போரினை ஆதரிக்கும் இந்திய அரசு தான் ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிக்க ராணுவத்தையும் ஆயுதத்தையும் ராஜபட்சேவுக்கு அளித்தது. அதே இந்திய அரசுதான் வட கிழக்கில் , காசுமீரில் இன விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களை தாக்கி அழிக்கின்றது. ஈராக்கிலும் ஆப்கானிலும் சொந்த நாட்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கொன்றொழிக்கும் அமெரிக்காவின் பின்புலத்தில் இருந்து கொண்டு தான் இசுரேல் ஹமாஸ் இயக்கத்தினரை தீவிரவாதிகள் என்று கூறி அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது. இந்த அமெரிக்காவையும் இசுரேலையும் ஆதரிக்கும் இந்தியாவோ இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடுகின்ற ,தேசிய இன உரிமைக்காக போராடுகின்ற மக்களையும் அமைப்புக்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து தாக்குதலைத் தொடுக்கின்றது. இந்த அமெரிக்கா – இசுரேல் – இந்தியாவின் கள்ளக்கூட்டினை எதிர்க்காமல் சொந்த நாட்டின் விடுதலையைப்பற்றிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.

எனவே ஒடுக்கப்படுகின்ற ஒரு நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக பாட்டாளிவர்க்கம் என்ற வகையிலும் ஒடுக்கப்படும் தேசம் என்ற வகையிலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் நாம் போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்கள் தான் இசுரேலுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு மரண அடியைக் கொடுக்கும்.” என்று தனது உரையினை தோழர். கணேசன் நிறைவு செய்தார்.

இசுரேலை கண்டிக்கும் வகையிலும் பாலஸ்தீனத்தின் மீதான போரை பின்நின்று வழி நடத்தும் அமெரிக்காவையும் இசுரேலுக்கு நண்பனாக செயல்படும் இந்தியாவையும் அம்பலப்படுத்தும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களின் எண்ணிக்கையை விட போலீசை அதிகமாகக் குவித்து தான் இசுரேலின் நண்பன் தான் என்பதை ஆர்ப்பாட்டம் முடியும் வரை நிரூபித்துக்கொண்டு இருந்தது தமிழக அரசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

மதுரை

துரையில் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மாலை 6 மணியளவில் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

யூத மதவெறி இசுரேலின் கொலைமுகத்தை திரைகிழித்தும், அமெரிக்காவின் ஆசியுடன் நடைபெறும் இந்த கோர தாண்டவத்தை ஆதரிக்கும் அமெரிக்க அடிவருடி மோடி அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தியும் புஜதொமு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர். நாகராஜன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை செயலர் தோழர்.லயனல் அந்தோனி ராஜ் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர் .

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை .

தருமபுரி

ருமபுரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சார்பாக தந்தி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக 2 நாட்கள் பேருந்து பிரச்சாரமும், சுவரொட்டி பிரச்சாரமும் செய்யப்பட்டது.

போரை நிறுத்து போரை நிறுத்து
பாலஸ்தீன குழந்தைகளை
பாலஸ்தீன பெண்களை
கொன்று குவிக்கும் இஸ்ரேலின்
ஆக்கிரமிப்பு யுத்தத்தை
உடனே நிறுத்து உடனே நிறுத்து

என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

வி.வி.மு தோழர் மாயாண்டி தலைமை உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகி ராமன் தனது உரையில், “அமெரிக்கா தனது மேலாதிக்க நலனுக்காகவே இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே இந்தியாவின் எதிர்ப்பும் ஆதரவும் அவ்வப்போது மாறுகிறது. ஐ.நா என்பதும் அதன் சர்வதேச மனித உரிமை சட்டம் என்பதும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவும் கருவியாகவே உள்ளது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல,  இன அழிப்புப்போர்” என்று குறிப்பிட்டார்.

அடுத்து பு.ஜ.தொ.முவின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக உலெகெங்கும் கண்டனங்கள் அதிகரித்து வரும் போது இந்தியா மவுனம் காக்கிறது. நரேந்திர மோடி கக்கூஸ் உட்கார்ந்ததை தவிர்த்து அவரது அனைத்து அசைவுகளையும் புகழ்ந்து வெளியிட்ட பத்திரிகைகள் அவரது தற்போதைய மவுனம் குறித்து எழுத மறுக்கின்றன” என்று அம்பலப்படுத்தி பேசினார்.

பு.மா.இ.மு தோழர் ராஜா பேசுகையில், “ஹமாஸ் இயக்கம்தான் இந்த போருக்கு காரணம் என்பது பித்தலாட்டமானது. இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு. இஸ்ரேல் அரசிடம் இராணுவ தளவாடங்கள் பெறும் இந்தியா இதை எதிர்க்காது” என்று குறிப்பிட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கோத்தகிரி

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 9 மணிக்கு கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலைமை : ஆனந்த்ராஜ்உரை : பாலன்
நன்றியுரை : ராஜா

திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி காசா தாக்குதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இவண்
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

கோவை

மூலதனம் நடத்தும் போர்

“பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து..!” எனும் முழக்கத்துடன் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 31-07-2014 அன்று மாலை ஐந்து மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகஇக மாவட்டச் செயலர் தோழர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கோவைத் தொழிலாளர் வர்க்கம் ஆவேசமாக முழக்கம் எழுப்பி தனது சர்வதேசிய உணர்வை வெளிப்படுத்தியது.

உள்ளூர் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க இவர்கள் உலகப் பிரச்சினைக்கு போராட கிளம்பி விட்டார்கள் எனும் விமர்சனத்துக்கு பதிலளித்து பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி கண்டன உரையாற்றுகையில்,

“உலகப் பிரச்சினைகளுக்கு போராடாத எவனும் உள்ளூர் பிரச்சினைக்கும் போராட மாட்டான். வெறுமென கேள்வி மட்டும் எழுப்பி விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பான். இவர்களை புறம் தள்ளி நாம் போராட்டப் பாதையில் நடைபோட வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப நாம் தமிழர்கள் எனும் அடிப்படையிலும், இந்தியர்கள் எனும் நிலையிலும், மனிதர்கள் எனும் உணர்விலும், கம்யூனிஸ்டுகள் எனும் பெருமிதத்திலும், நமக்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்த பட்ச வர்க்க உணர்வையே நாம் வெளிப்படுத்த வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான போர் என்பது மூலதனம் தனது லாப வெறிக்காக நடத்தும் போர். இதுதான் இறுதியானது. இதர காரணங்கள் இரண்டாம் பட்சமே.

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கு லாபம் இல்லை என்றால் தொழிலை நடத்தாது. குறைவான லாபத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.

20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.

50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது.

100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.

300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.

தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும் என்று மூலதனம் நூலில் தோழர்.மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட அடிப்படையில் தான் பாலஸ்தீனப் போர் நடக்கிறது. பாலஸ்தீனத்தில் கிடைக்க உள்ள எண்ணெய் வளத்தையும் எரிவாயு வளத்தையும் கொள்ளையடிக்க சர்வதேச மூலதனம் நடத்தும் இந்த போரை பாட்டாளி வர்க்கமாக நாம் எதிர்க்க வேண்டும். முறியடிக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக பு ஜ தொ மு மாவட்டத் தலைவர் தோழர் இராஜன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
கோவை

விழுப்புரம்

“பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 31.07.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், இரயில் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விழுப்புரம்

நூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி

11

“அமெரிக்கா: ஜனநாயகக் கட்டுக்கதையும் கொள்ளையடிக்கும் வங்கிகளின் ஆட்சியும்” – ரிச்சர்ட் பேக்கர் என்பவர் எழுதிய நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழாக்கம் நிழல்வண்ணன்.

நூலின் சில கருத்துக்களை பார்ப்போம்.

ரிச்சர்ட் பேக்கர்
ரிச்சர்ட் பேக்கர்

வங்கி என்றால் என்ன? “ஒரு வங்கியை தோற்றுவிப்பதை விட ஒரு வங்கியில் கொள்ளையடிப்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல” எனும் பெட்ரோல்ட் பிரெக்ட்டின் மேற்கோளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் எழுத்தாளர்.

2008 பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 42 இலட்சம்  கோடி ரூபாயை வங்கிகளை மீட்பதற்கு செலவிட்டது. இந்த பணத்தை அந்த வங்கிகள் என்ன செய்தார்கள் என்று கேட்ட போதெல்லாம் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று வங்கி முதலாளிகள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கிய பணத்தை இந்த வங்கிகள் தமது அதிகார வர்க்கத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றன. 5000 பேருக்கு தலா பத்து இலட்சம் டாலர் ஊக்க ஊதியம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது ஏதோ முதலாளிகளின் செருக்கா என்றால் இல்லை. அவர்கள்தான் அமெரிக்க அரசை கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க வங்கிகளின் மொத்த சொத்துக்களில் 60 சதவீதம் பத்து பெரிய வங்கிகளிடம் இருக்கிறது. நிதிச்சாதனங்களின் (derivatives) வர்த்தக மதிப்புகளில் 95% ஐந்து வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 5 பெரிய வங்கிகள் தலா 1000 கோடி டாலர்களுக்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கின்றன.

“அந்தக் காலகட்டத்தின் போது பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், வால் ஸ்ட்ரீட்டுக்கும், வங்கியாளர்களுக்கும் ஒரு உயர்ந்த வகை அடியாளாகத் தான் எனது பெரும்பாலான நேரங்களைக் கழித்தேன். சுருக்கமாகச் சொன்னால், நான் முதலாளித்துவத்திற்கு ஒரு எடுபிடியாகவும் அடியாளாகவும் இருந்தேன்” என்கிறார் 1935-ல் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ஸ்மெட்லி பட்லர். எனில் இன்றைக்கு அதன் பரிமாணத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்? இதன் பொருட்டே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 900-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்று இருக்கின்றன.

ஆங்கில நூல்
ஆங்கில நூலின் அட்டை

இப்படி நிதியாதிக்க கும்பல்களின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 187 லட்சம் காலி குடியிருப்புகள் இருந்தன. அந்த ஆண்டில் மட்டும் 38 லட்சம் வீடுகள் கடனுக்காக கைப்பற்றப்பட்டன. இவை மீண்டும் சந்தைக்கு வருகின்றன. காலி குடியிருப்புகளின் எண்ணிக்கையோ மீண்டும் அதிகரிக்கின்றன. எனில் காலி செய்த மக்கள் எங்கே எப்படி வாழ்வார்கள்? இதுதான் அமெரிக்கா. இதுதான முதலாளித்துவம்.

“அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கச் செய்த நிதி நெருக்கடித் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், பெரிய நிதி நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் வால்ஸ்ட்ரீட் நிர்வாகி ஒருவர் மீது கூட, ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை என்பது பொது மக்களையும், வால்ட் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது” என சி பி எஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. ஆனால் இது குற்றமாக ஊடகங்களுக்கோ, கட்சிகளுக்கோ தோன்றவில்லை. இதுவும்தான் அமெரிக்கா. அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முதலாளித்துவத்தின் சேவைக்காகவே அல்லும் பகலும் செயல்படுகின்றன.

2008 வீட்டுக்கடன் குமிழ் நெருக்கடியை முன்வைத்து அமெரிக்க சமூகம், பொருளாதாரத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தினை அளிக்கிறது இச்சிறு நூல். சோசலிசமே மாற்று என்பது ஏதோ ஒரு கொள்கை மட்டுமல்ல முதலாளித்துவத்தின் அழிவிலிருந்து பிறந்தே ஆக வேண்டிய மாமருந்து என்பதையும் நிறுவுகிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.

நூல்: அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்.
ஆசிரியர்: ரிச்சர்ட் பேக்கர்
தமிழாக்கம்: நிழல்வண்ணன்.
பக்கம்: 48, விலை: ரூ.25
முதல்பதிப்பு – டிசம்பர், 2013

வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,

தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367

ONGC-ஐ எதிர்த்து வலங்கைமானில் வி.வி.மு பொதுக்கூட்டம்

0
  • டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கவரும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்!
  • காவிரி மேலாண்மை வாரியத்தையும,ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியாக அமைத்திடு!
  • விளை நிலங்களை மலடாக்கி, மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ONGC-ன் எண்ணெய் எரிவாயுத் துரப்பண பணிகளை கைவிடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்டா மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை விவசாயிகள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருகிறது. மீத்தேன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக கடந்த மே 1-ம் தேதி கிரேட் எஸ்டர்ன் எனர்ஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதன் தொடர்ச்சியாக, “கீழிருந்து கட்டி எழுப்பப்படும் மக்கள்திரள் எழுச்சிகளின் மூலம் கார்ப்பரேட் பகற்கொள்ளையர்களை விரட்டியடிப்போம்” என்கிற முழக்கங்களை முன்வைத்துடெல்டா பகுதி முழுவதும் வட்டார அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழுக்களை கட்டியமைத்து வருகிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் சார்பாக கடந்த 19.07.2014 அன்று மாலை 06.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் பிற பகுதிகளில் ஓரளவிற்காவது மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வந்த சூழலில் வலங்கைமான் பகுதியில் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏறத்தாழ இல்லை என்று கூறுமளவுக்குத்தான் இருந்தது. இந்நிலையில் மீத்தேன் எடுப்புத்திட்டத்தின் பின் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையும், அதற்கு ஆதரவாக அரசும் சதித்தனமான முறையில் காவிரி நீரை தரமறுத்து, டெல்டாவை காய வைத்து பன்னாட்டு-உள்நாட்டு தரகுமுதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை அம்பலப்படுத்தி விவசாயிகளை இதற்கெதிராக செயல்படத்தூண்டும் வகையில் போராட்டக்குழுவில் இணைத்து கிராமந்தோறும் கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. எறும்பு ஊரக்கல்லும் தேயும் என்பதைப்போல விடாப்பிடியாக எமது அடுத்தடுத்த முயற்சிகளின் காரணமாக கிராமக்குழுக்களை ஒருங்கிணைத்து வலங்கைமான் ஒன்றியக்குழுவும் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வலங்கைமான் ஒன்றியம் முழுவதிலுமுள்ள கிராமங்களில் சுவரெழுத்துப்பிரச்சாரங்கள், நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள்,ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விவசாயிகளை உணர்வூட்டினர் எமது தோழர்கள். கிராமம் கிராமமாக மெகாபோன் மூலமாக பொதுக்கூட்டத்தை ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த பெரு விவசாயிகளும்,நிலவுடைமையாளர்களும் தோழர்களின் இடைவிடாத உணர்வுபூர்வமான முயற்சிகளை அங்கீகரித்து தம்மையும் போராட்டக்குழுவில் இணைத்துக்கொண்டனர். நாற்று நடுமிடம், களைபறிப்பு, நூறுநாள் வேலை நடைபெறும் இடம், தேநீர்கடை எனப் பார்க்குமிடமெல்லாம் தோழர்களின் அரசியல் பேச்சுக்களால் பட்டித்தொட்டி எல்லாம் மீத்தேன் திட்ட எதிர்ப்புணர்வை விசிறியெழச் செய்தோம்.

வலங்கைமான் ஒன்றியத்தில் அனுமதி கேட்டவுடன் உள்ளுர் போலீசார் உடனடியாக கொடுத்துவிட்டனர். 30 அல்லது 40 பேர் மட்டுமே வருவார்கள் என்று கருதி பாதுகாப்புக்குக் கூட போலீசாரை அனுப்பிவைக்கவில்லை. உளவுப்பிரிவுப் போலீசார் மட்டும் 4 பேர் வந்திருந்தனர். ஆனால், பொதுக்கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் சாரைசாரையாக விவசாயிகள் டாடா ஏஸ், டிராக்டர் உள்ளிட்ட வண்டிகளில் வந்து குவிந்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொண்டனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழுவின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர்.கு.ம.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.ரமேஷ் முன்னிலை வகித்தார். வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர் திரு.சின்னத்துரை பேசும்போது, “ONGC-க்கு எதிராக நீங்கள் மட்டும்தான் தீவிரமாக எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறீர்கள். அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு உங்கள் தலைமைக்கு என்னவேண்டுமோ அதை நாங்கள் செய்துகொடுக்கிறோம்” என்று ONGC தரப்பிலிருந்து பேரம் பேச ஆட்கள் வீடு தேடி வந்ததையும், “விவசாயத்திற்கும் மக்களுக்கும் துரோகம் செய்து என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது, நீங்கள் நினைப்பதைப் போன்ற இயக்கம் இதுவல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல் பேசி திருப்பி அனுப்பியதை பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தினார்.

டெல்டா மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர்.மாரிமுத்து , கம்பம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர்.காளியப்பன் பேசுகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் என தனியார் வியாபாரிகளின் விற்பனை ஏஜெண்டு போல அரசு செயல்படுவதை எள்ளி நகையாடினார். விவசாயத்தை அழித்துத்தான் வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இத்திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களின் அடியாள்படையாக உள்ள இந்த மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரானதாகவும் இருப்பதால் டெல்டா பகுதி விவசாயிகள் இதனை எதிர்த்து வாழ்வா சாவா போராட்டத்தை நடத்த வேண்டும் என்று உணர்வூட்டிப் பேசியதை விவசாயிகள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரித்தனர்.

அடுத்து நடந்த கலைக்குழுவினரின் எழுச்சிகரமான பாடல்களும் கலைநிகழ்ச்சியும் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. துவக்கம் முதல் இறுதிவரை கூட்டம் கலையாமல் இருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பல விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக நிதியுதவியை ரூ.1000, ரூ.2000 என மேடையேறி வழங்கி தம் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பொதுக்கூட்டத்தைப் பார்த்த அப்பகுதி வணிகர் ஒருவர், “மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கூட 200 பேர்தான் வந்திருந்தனர். அதுவும் பிரியாணி, சரக்கு வாங்கித்தந்து தான் அழைத்து வந்தனர். ஆனால்,உங்கள் பொதுக்கூட்டத்திற்கு காசு எதுவும் கொடுக்காமலேயே எப்படி இவ்வளவு பேரைத் திரட்டினீர்கள்” என்று ஆச்சரியமாக கேட்டு பாராட்டினார்.

கார்ப்பரேட் முதலாளிகளை விரட்டியடிக்க விவசாயிகளை அணிதிரட்டும் எமது முயற்சியில் மிக சிறப்பானதொரு நிகழ்வாக இப்பொதுக்கூட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர் மாவட்டம்.
தொலைபேசி 7502607819

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் – நேர்காணல்

6

சினிமா நேர்காணல் – 3

நாங்கள் சென்றபோது துணைவியார் உதவியுடன் வெங்கல்ராவ் மொட்டை போட்டுக் கொண்டிருந்தார். இந்த மொட்டையும் சமீபத்திய நகைச்சுவை வேடங்களில் அவருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்தான். ஆனால் சினிமா உலகில் இந்த அங்கீகாரம் என்ன வாழ்க்கையை வழங்க முடியும்?நேர்காணலை படியுங்கள்!

வினவு:– சினிமாவுக்கு வந்து சேர்ந்த வரலாறை விளக்குங்களேன்!

வெங்கல்ராவ்:– எங்க ஊரு விஜயவாடா பக்கத்துல நாட்டுப்புறம் சார். அதோட பேரு புனாதிபாடு. விவசாயம் தான் தொழில். அதிலயும் கூலி வேல தான். எங்களுக்கு நெலமெல்லாம் அதிகமில்ல. ஜமீன்தார் நெலத்துல தான் வேல அதிகம் செய்வாங்க. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாரு. நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு, அக்கா ஒருத்தரு. அம்மாவால எங்களுக்கு சோறு போட முடியல. காலைல அம்பது இட்லிக்கு நானு எங்கடா போறதுன்னு சொல்வாங்க. ஐதராபாத்தில் ஒரு பத்து வருசம் போராடி பாத்துட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன்.

அப்போ சினிமா அங்கே எடுக்காங்க, இங்கே எடுக்காங்க, அங்கே போனா சோறு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். அதற்கு யாரை பாக்கணும்னு தெரியாது. அதுக்காக ரொம்ப ட்ரை பண்ணினேன் சார். அப்ப எனக்கு தமிழே வராது. முப்பத்தெட்டு வயசுலதான் மெட்ராஸ் வந்தேன்.

டிக்கட், ரிசர்வேசன் என எதுவமே இல்லாம ஒத்தக் காலில் நின்னுட்டே ட்ரெயின்ல இங்க வந்து பைட்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, இந்தி, இங்கிலீசுன்னு நடிச்சு ஒரு நல்ல ஃபைட்டரா மாறிட்டேன். தர்மேந்திரா சார், அமிதாப்பச்சன் சார், அப்புறம் தர்மேந்திரா சாரோட பையன், ரஜினி சார், கமல் சார், அப்புறம் விஜயகாந்த் சார், கார்த்திக், சத்யராஜ் சார், தெலுங்கில என்.டி.ராமாராவ், நாகேஸ்வராராவ், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என எல்லோரிடமும் ஃபைட் பண்ணியிருக்கேன் சார்.

35 வருசமா ஃபைட் பண்ணியதில் முட்டி, இடுப்பெல்லாம் ஒரே வலி. அதுனால இனிமே முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். வடிவேலு ஐயாகிட்ட போயி ‘’ஐயா இத்தன வருசமா இத்தினி லேங்குவேஜ்ல பைட் பண்றேன். ட்ரெயின், குதிரை, மேல கீழ எல்லாம் ஃபாலிங் பண்ணி உடம்பெல்லாம் போச்சு. உங்க கூட காமெடிக்கு வாரேன்யா’’ன்னு கேட்டேன். அவரும் சரிப்பா வான்னு எனக்கு நெறய காமெடி கொடுத்தாரு.

“தலைநகரம்”-ங்குற படத்துல ஜெயில்ல ‘ரா ரா சரசக்க ரா ரா’ன்னு ஒரு சின்ன பிட்டு கொடுத்தாரு. ஏபிசிடி-ங்கிற படத்துல மூக்குல பஞ்சு வச்சிட்டு பஸ்ஸூல பிணமா நடிக்கணும். அத வெச்சு எம் மவன் சம்பாதிப்பாங்கிறதுதான் சீன். இது டில்லி, பம்பாய்னு எங்கெங்கோ போய் பேமசாக்கியிருச்சு. கந்தசாமி படத்துல தலையில வச்ச கைய எடுத்தா அப்படியே கடிக்கிற மாதிரி ஒரு சீன் கொடுத்தாரு. அப்படி அவரு கொடுத்த வாய்ப்புலதான் நான் இன்னைக்கு சோறு சாப்பிடுறேன்.

ஃபைட்டர் சங்கம் இல்லன்னா நான் இல்ல. ஃபைட் மாஸ்டர்களுக்கு நான் செல்லப்பிள்ள மாதிரி. வெங்கல்ராவுக்கு வயசு சாஸ்தினு காமெடி பைட் மட்டும் தருவாங்க.

சினிமா முன்ன மாதிரி இல்ல சார். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் இருந்த காலம் மாதிரி இப்போ இல்ல. அப்போ நூறு பேருக்கு ஒரு படத்துல வேல இருக்கும். இப்போ அஞ்சு பேருக்குத்தான் வேல. இப்போ சினிமாவ நம்பி யாரும் சோறு சாப்பிட முடியாது. பசங்களுக்கு பீசு கட்ட முடியல. வாடகை கட்ட முடியல. சினிமாக்காரர்ல நூத்துக்கு எழுபத்தி ஐந்து பேருக்கு சொந்த வீடே கிடையாது சார். தெலுங்கு தெலுங்குக்கு போயிருச்சு, மலையாளம் மலையாளத்துக்கு போயிருச்சு, கன்னடம் கன்னடத்துக்கு போயிருச்சு, இந்தி, இங்கிலீசெல்லாம் இங்கிருந்து போயிருச்சு. தமிழ்நாடு ஒன்ன வச்சு எல்லோரும் சாப்பிட முடியல ஐயா.

இந்த சினிமா தொழிலுக்கு வந்ததே தப்புன்னு இப்போதான் தெரியுது. வேற தொழிலும் தெரியாது. வாய்ப்பு வரும், நேரம் வரும்ணு எதிர்பார்த்து எதிர்பார்த்து எல்லாருக்கும் வயசானதுதான் மிச்சமுங்க. எம்.ஜி.ஆர். ஐயா மாதிரி, சிவாஜி ஐயா மாதிரி, ரஜினி சார் மாதிரி, கமலஹாசன் சார் மாதிரி வாய்ப்பு எல்லாருக்கும் வருமா. சினிமாவுல யாருக்கோதான் அதிர்ஷ்டம் வரும்.

வினவு:– உடன் பிறந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?

வெங்கல்ராவ்:– அக்கா, மாமா எல்லாம் இறந்துட்டாங்க. அவங்க பசங்க இருக்காங்க. மத்தவங்க எல்லாம் விவசாயம்தான் பண்ணுறாங்க. நான் சினிமாவுக்கு வந்து முப்பது வருசமானாலும் யாரையும் இங்க கூட்டி வரவில்லை.

வெங்கல்ராவ் வினவு:– சண்டைக் காட்சிகளில் நீங்க ஏதாவது ஆபத்தான சம்பவங்களை சந்திச்சிருக்கீங்களா?

வெங்கல்ராவ்:– நாலைந்து வாட்டி உயிரு போயிட்டு வந்திச்சு சார். ஆபவாணன் இயக்கத்துல விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்த செந்தூரப்பூவே படம் தேனியில ஷூட்டிங்க்.

ட்ரெயின் வந்து போன பிறகு மட்டும் படப்பிடிப்பு நடக்கும். பதினைந்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற்றது. ஃபாலிங் பண்ணும்போது, ட்ரெயினை தாண்டி குதிக்கிறதுன்னு எல்லோருக்குமே நிறைய அடிபட்டது. எனக்கு குதிக்கையில் மாரிலயும், கழுத்து பின்னாடியும் அடிபட்டது. அப்பிடி பத்து பதினைஞ்சு வாட்டி அடிபட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் தரப்புல மாத்திரை கீத்திரை தருவாங்க. சின்ன கம்பெனியா இருந்தால் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வரைக்கும் ஆசுபத்திரில செலவு பண்ண முடியாது, பெரிய கம்பெனின்னா கொஞ்சம் பார்ப்பாங்பக. அதற்கப்புறம் படப்பிடிப்புக்கு வரும் வரைக்கும் மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் வரை குடும்பத்துக்கு தருவாங்க.

நான் எந்த கம்பெனியிலும் வாங்கியதில்லை. அப்படியே அடிபட்டாலும் முரடன் போல ஜம்முனு வந்திடுவேன். நிறைய பேரு காரு, பைக்ல ஜம்ப் பண்ணி ஸ்பாட்லயே இறந்து போயிருக்காங்க.

ரொம்ப முன்னால ராமராஜன் சார் படம்னு நினைக்கிறேன். மாஸ்டர் ஆர்.எஸ்.பாபு சாரோட மச்சானுக்கே கண்ணாடியை உடைக்கையில் பின்புறமாக ஒரு அரையடிக்கு கண்ணாடி பீஸ் இடுப்புக்கு மேலே குத்திக் கொண்டது. ஒரு பக்கம் கையும், காலும் வரவேயில்லை. இவர் பேரும் பாபுதான். ஒரு பத்து வருசம் எந்த வேலைக்கும் போக முடியல. ஆர்.எஸ்.பாபு சார்தான் உதவி செய்தார். கடைசியில அவரு திரும்பவும் வந்து பெரிய பைட்டரா மாறிட்டாரு. இப்போ அவரு பையன் கூட பைட்டராயிட்டாரு.

லோகுன்னு பல்ராம் தம்பி இறந்திருக்கான். ஓசூர்ல ஒரு பைக் ஜம்பர் இறந்திருக்கான். யார் யாரு என்னென்ன படத்துல இறந்தாங்கனு எனக்கு கரெக்டா தெரியாது. பத்து பதினைந்து வருடமாக நான் இந்த பைட்டுக்கெல்லாம் போகவில்லை. காமெடி சீனுக்கு வந்துட்டேன். ஆனால் பைட்டருங்க நிறைய பேருக்கு கை, கால் அடிபட்டு தொழிலுக்கு வர முடியாம போனத பாத்திருக்கேன். அவங்க பேமிலி படுற கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியும்

வினவு:– அப்படியானால் எதிர்காலத்துக்கு என்னதான் பண்ணுவார்கள்?

வெங்கல்ராவ்:– அட நீ வேற சார். பைட்டருக்கு கவர்ன்மெண்ட் இன்சூரன்சே இல்லங்குறான். நீ பாட்டுக்கு கப்பல் மேல இருந்தெல்லாம் குதிப்பே. அதுக்கெல்லாம் இன்சூரன்சு தர முடியாதுன்னுட்டான். யூனியன்ல தலைவருங்க நிறைய யோசனையெல்லாம் பண்ணுறாங்க. ஆனாலும் முடியாது சார்.

வினவு:– முப்பது ஆண்டு சினிமா வேலையில வாழ்க்கைய எப்படி சமாளிக்கிறீர்கள்?

வெங்கல்ராவ்:– சாப்பிட போக, பசங்களுக்கு பீசு கட்ட, கல்யாணம் கட்டிக் கொடுக்கவும் சரியா போச்சு சார். வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். (அவர் வீடு ஒரு பத்துக்கு பத்து அறையும், ஒரு ஆள் கூட நுழைய முடியாத சமையல் அறையும் மட்டும்தான். பொது குளியலறைதான். இதற்கு மாதம் நான்காயிரம் ரூபாய் வாடகை). சினிமாவுல கார்ல போனா ஒரு சம்பளம், பைக்ல போனா ஒரு சம்பளம். நான் இப்போதான் சைக்கிள்ல போக ஆரம்பிச்சிருக்கேன். இதுதான் விசயம். நான் ஊருக்கு போனா நீ சினிமாவுல இருக்க, நல்லா காசு வரும், ஏன்டா பிச்சக்காரன் மாதிரி இருக்கனு கேக்குறாங்க.

வினவு:– சண்டை வேலை பாத்த போது எத்தனை நாள் வேலை? என்ன வருமானம் கிடைக்கும்?

வெங்கல்ராவ்:– ஐந்தாறு நாள்தான் வேல கெடைக்கும். மத்த நாட்களெல்லாம் சும்மாதான் இருக்க வேண்டும். அப்போ இரண்டு நாளைக்கு முந்நூற்று ஐம்பதிலிருந்து நானூறு வரை கிடைக்கும். இப்போ அது கொஞ்சம் உயர்ந்து ஆயிரத்து ஐநூறு ஆகியிருக்கிறது.

வினவு:– உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

வெங்கல்ராவ்:– ஒரு பையன் இறந்து விட்டான். ஒரே பொண்ணு. ஆந்திராவில் கட்டிக் கொடுத்து விட்டேன். பத்தாவது வரைக்கும் படிக்க வைத்தேன். ஒரு பேரன், பேத்தி. அவங்க படிப்புக்கும் அப்பப்ப ஏதாச்சும் உதவி பண்ணுவேன்.

வினவு:– ஊரில் நிலம் ஏதாவது வாங்கிப் போட்டிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்: – ஒண்ணும் வாங்கல. எனக்கு மட்டுமில்ல, சினிமாவுல நெறய பேருக்கு ஒண்ணுமேயில்ல. வடிவேலு சாரோட இருக்கதால வெளியில இருந்து பாத்தா எனக்கு வீடு, காரெல்லாம் இருக்கும்ணு நீங்க நெனைக்கலாம். அதெல்லாம் உண்ம கிடையாது.

ஆனா இந்த தொழில்ல இருக்குற பல பேரு பக்கத்து வீட்ல நூறு இருநூறு கடன் வாங்கியாவது பொழுத பெருமையா கழிப்பாங்க. பைக் வச்சிருப்பான் பெட்ரோல் போட துட்டிருக்காது. கையில காதுல செயின் போட்டிருப்பான் சாப்பாட்டுக்கு வழியிருக்காது. இது அப்படிப்பட்ட தொழில் சார்.

வினவு:– உங்களை தமிழ்நாட்டில் தெலுங்குக்காரன் என்று வித்தியாசம் பார்க்கிறார்களா?

வெங்கல்ராவ்: – அந்த மாதிரி பார்ப்பதில்லை. திறமை இருந்தால் வாய்ப்பு தருவார்கள். அரசியல்வாதிகள் பற்றி எனக்குத் தெரியாது. சினிமா தொழிலில் மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். நமது பைட்டர் யூனியனில் ஆயிரம் பேர் மலையாளி, இந்திக்காரர், தெலுங்குக்காரர் என பலவிதமாக இருக்கிறார்கள். இவரு இந்திக்காரரு, இவரு மலையாளத்துக்காரரு, இவரு கன்னடத்துக்காரருங்குற டிஃப்ரென்சு இங்கே கிடையாது. ‘உன்னால குதிரை ஓட்ட முடியுமா?’ ‘ம் பண்றேன்யா’ என்றால் ‘சரி வா’, ‘உன்னால ஹீரோக்கு டூப் போட்டு ஜம்ப் பண்ண முடியுமா’ ‘ம் சரிய்யா’ என்றால் ‘சரி வா’ என்பார்கள். கப்பலில் இருந்து குதிக்க யார் தயாரோ அவங்கள கூப்பிடுவாங்க. நீச்சல் தெரியாதுன்னா போ ன்னுடுவாங்க. காஸ்ட் டிஃப்ரன்சு பாக்க மாட்டாங்க.

வினவு:– குதிரைச் சண்டை போடுவீர்களா? இப்போது உங்களை சண்டைக் காட்சிகளுக்கு கூப்பிடுகிறார்களா?

வெங்கல்ராவ்: – குதிரை சண்டை போடுவேன். யானை சண்டை போடுவேன். ட்ரெயின் ஓட்டுவேன். கேப்டன் பிரபாகரன் படம் மாதிரி பல படங்களில் குதிரை ஓட்டியிருக்கிறேன். ‘வா மாமா, ஒரு காமெடி பைட் இருக்கு’ என்று கூப்பிடுவார்கள். ஆனால் இப்போல்லாம் சின்ன பசங்க வந்துட்டாங்க. சும்மா அடிச்சா கில்லி மாதிரி போய் விழணும். நம்மாள முடியாது. வயசாயிட்டுது. நாம ஃபைட்டுக்கு போயி சரியா பண்ணலேன்னா யாரும் நம்மள கேவலமா நெனச்சுறக் கூடாதுன்னு பயமா இருக்கு. அதான் போறதில்ல.

வினவு:– காமெடி சண்டை என்றால் என்ன? சம்பள வித்தியாசம் இருக்குமா?

வெங்கல்ராவ்: – காமெடி சண்டை என்றால் ஹீரோ நம்மள அப்படி திரும்பி பார்க்குறப்போ நம்ம திருப்பி அடிக்காம ‘ஐயா சாமி, என்ன விட்டுரு. எனக்கொன்னும் தெரியாது’ன்னு சொல்லி கையெடுத்துக் கும்பிட்டு பயந்து போனது போல நடிக்கணும். ஆபத்து இல்லாத சண்டை. சம்பள வித்தியாசம் கிடையாது.

வினவு:– சண்டையில் இருந்து காமெடி பாத்திரங்களுக்கு மாறி எவ்வளவு காலம் ஆகிறது.? இதில் சம்பளம் அதிகமா?

வெங்கல்ராவ்:– ஆறு வருசம் ஆச்சு. நான் முப்பத்தைந்து வருசமா சினிமாவில் இருக்கேன். ஆனா இந்த ஆறு வருசத்துலதான் தமிழ்நாட்டுக்கே தெரியுமளவுக்கு மாறி விட்டேன். சம்பளம் ரொம்ப கம்மி சார். சில பேர் மூவாயிரம் தர்றான், சில பேரு நாலாயிரம் தர்றான். சூட்டிங் இப்போ கம்மி. ரெண்டு மாசமா வாய்ப்பே இல்லை.

வினவு:– சினிமாவுக்கு புதிதாக வர விரும்புபவர்களை நீங்கள் வரவேற்பீர்களா?

வெங்கல்ராவ் 3வெங்கல்ராவ்:– என்னோட சொந்தக்கார பசங்களையெல்லாம் நான் கூட்டிட்டு வரல. காரணம் நானே சொந்தமாக ஒரு வீடோ காரோ வாங்க முடியவில்லை. பசங்களுக்கோ, மனைவிக்கோ ஒரு நெய்ச்சோறு போடக் கூட வழியில்லாத நீயெல்லாம் ஏன் இருக்கேனு கேக்குறாங்க. ஃபைட் சீனெல்லாம் நடிக்க கூட்டியாந்து அவங்களுக்கு கை கால் போச்சுன்னா அவங்க அப்பா அம்மாவுக்கு யார் பதில் சொல்றது. சினிமால டான்சு, பைட், கேமராமேன் என எல்லாத்துலயும் நுழையுறதுக்கு இந்த மெட்றாசுல வந்து நெறய பேரு கஷ்டப்படுறாங்க. ஆனா அதுல நூத்துக்கு பத்து பேரு தான் ஜெயிக்கிறாங்க. மீதி தொன்னூறு பேரும் படுற கஷ்டத்த கொஞ்சம் யோசித்துப் பாருங்க

வினவு:– விலைவாசி உயர்வுக்கேற்ப உங்களுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதா? கேட்டால் உயர்த்தித் தருகிறார்களா?

வெங்கல்ராவ்:– பெரிய ஆர்ட்டிஸ்ட் கேட்டா தருவாங்க சார். நமக்கெல்லாம் தருவாங்களா? ஒரு பத்து நாள் சூட்டிங் இருக்கு வாறியான்னு கேப்பாங்க. நாமும் ஒரு முப்பதாயிரம் வருகிறதே என்று போவோம். போனால் இரண்டு நாட்களுக்குதான் வாயப்பு தருவார்கள். இப்போ அறுபது லட்சத்தில் கூட படமெடுக்கிறார்கள். அதுல என்ன சார் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். முன்னாடியெல்லாம் பெரிய ராஜ தர்பார், குதிரை அது இதுன்னு நூறு பேராவது நடிப்போம். இப்போ அதெல்லாம் இல்லாததால பத்து பேருக்குதான் சாப்பாடு கிடைக்குது.

எனக்கு சம்பளத்த கூட்டித் தரச் சொல்லி எல்லோரும் சொல்ல மாட்டார்கள். வடிவேலு சார் ஒரு மூவாயிரம், ஐயாயிரம் போட்டுத் தரச் சொல்லி கம்பெனில சொல்வார்தான். ஆனால் எப்போதும் அப்படி தர முடியாதுதானே. பத்து பேரு என்னப் போல இருப்பாங்க இல்லையா. இது சினிமா சார்.

வினவு:– எதிர்காலத்தை பற்றி என்ன திட்டம்?

வெங்கல்ராவ்:– இங்கே வரும்போது போட்டுக்கொண்டு வந்த அதே பேண்டு சட்டையோட திரும்பிப் போக வேண்டியதிருக்குமோ என்று நைட்டெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பைட்டராக முடியல, ஒரு பெரிய நடிகராக முடியல. அப்படியே காலம் ஓடிப் போச்சு. நானே நகைய அடகு வச்சுதான் வாடகைய கட்டியிருக்கேன். அடுத்து வாய்ப்பு வந்தால் நகைய மீட்டு வருவேன். இப்படித்தான் காலம் போகுது. ஒரு நோய் நொடி வந்து படுத்தா என்ன செய்யணும்னு கூடத் தெரியல. சினிமா இப்போ தூங்குது சார். முன்னாடி காலைல ஆறு மணிக்கு ரெடியாகி யாரு கூப்பிடுவாங்கனு போனை எதிர்பார்ப்பேன். அஞ்சு மணிக்கெல்லாம் டாண்ணு அலாரம் அடிக்காமலே எழுந்து யார் கூப்பிடுவாங்கனு எதிர்பார்த்த நான் இப்போல்லாம் பதினோரு மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணிக்குதான் யூனியன் ஆபிசுக்கு போறேன்.

பல பேரு வேல இருந்தாதான வருவாங்க. பஸ் கண்டக்டர், ஏர்போர்ட் வேல, கப்பல்ல வேலன்னு போயிடுறாங்க. மூட்டை தூக்குவது, குப்பை லாரி ஓட்டுவது, கார்ப்பரேசனில் வேலைக்கு போவது எனப் பலர் போய் விட்டார்கள். ரிப்பேரான வண்டிகளை சரிசெய்து அந்தந்த ஊர்களில் விட்டுவருவது என பல வேலைகளுக்கும் செல்கின்றனர். சினிமாவை நம்பி இப்போ அவர்கள் இல்லை

வினவு:– நீங்கள் அப்படி வெளி வேலைக்கு இதுவரை போகவில்லையா?

வெங்கல்ராவ்:– நான் இதையே நம்பியிருப்பதால வேற எந்த வேலைக்கும் போகல. என்னப் போல நெறைய பேர் வாய்ப்பு வரும் என்று தூங்கிக் கொண்டுதான் பொழுதைப் போக்குறோம்.

வினவு:– உங்களுக்கு பிடித்த கட்சி எது? தலைவர் யார்?

வெங்கல்ராவ்: – சினிமாக்காரனாக இருந்துகொண்டு நான் இதைச் சொன்னால் எதிர்க்கட்சிக் காரனுக்கு நான் பிடிக்காதவனாகி விடுவேன். அதனால் அது வேண்டாம். சினிமாவில் இருந்துகொண்டு அரசியல் பேசக் கூடாது. ஆனால் எனக்கு பிடித்த கட்சி, தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால்தானே நான் ஓட்டுப் போடுகிறேன். நான் யாருக்கு போட்டேன் என்று ஆண்டவனுக்கு தெரியும். கட்சியை பற்றி நான் பேசி விட்டு தமிழ்நாட்டில் நான் இருக்க முடியாது. தெலுங்கைப் பற்றியும் கேட்காதீர்கள். சென்னையிலேயே பாதி தெலுங்கு பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

வினவு:– உங்களுக்கு படிக்க தெரியுமா?

வெங்கல்ராவ்:– எனக்கு தெலுங்கு கூட படிக்க, எழுத தெரியாது. எங்க அம்மா, அப்பா கொடுத்த உடம்பை கொண்டு அப்போ என்னால நூறு கிலோ அரிசி மூட்டைய தூக்க முடியும். அத வச்சுதான் பைட்டரா வந்தேன். இப்போ பத்து வருசமா இங்க தொழிலு நல்லா இல்ல. இருந்தாலும் தமிழ் சினிமா போட்ட சோற்றைத்தான் இப்போதும் சாப்பிடுகிறேன்.

வினவு:– எழுதப் படிக்க தெரியவில்லை என்றால் ஏமாற்றி விட மாட்டார்களா?

வெங்கல்ராவ்:– நான் என்ன பத்து லட்சமா சம்பளம் வாங்குறேன். இரண்டு சீனுக்கு போனால் நாலாயிரம் நாலாயிரம் ஆக எட்டாயிரம் வாங்கப் போறேன். நம்ம சம்பளம் என்ன மளிகைக்கடை சாமான்கள் போல நீளமா என்ன, ஏமாறுவதற்கு? இதுக்கு படிப்பு தேவையில்லை

வினவு:– உங்களது அனுபவத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பத்து தலைமுறை கதாநாயகர்களை பார்த்து விட்டீர்கள். அவர்களெல்லாம் கோடிகளில் சம்பாதித்துக் கொண்டு போகின்றபோது,  இங்கு வந்தபோது போட்டிருந்த ஆடையோடு நாற்பது ஆண்டுகள் கழித்தும் திரும்ப வேண்டியிருக்குமோ என்று இருக்கும் உங்களது நிலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

வெங்கல்ராவ்:– அந்தக் காலத்திலேயே பெரிய திமிங்கல நடிகர்களிடம் போய் நிலம், வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி பணம் கேட்டு கைகட்டி நிற்கவில்லை. இப்போதும் இருக்கும் நடிகர்களிடமும் போய் கைகட்டி நிற்கப் போவதில்லை. இன்னைக்கு ஒரு பத்தாயிரம் ரூபா வாங்கிட்டா நாளைக்கு நம்ம பாத்து அவன் பணம் கேக்குறான்டானு கேவலமா பேசிருவாங்க. அதுனாலதான் நான் யாருட்டயும் பணம் வாங்கினதில்ல. அப்படியே பணம் சம்பாதித்தவங்க யாரும் என்ன கூப்பிட்டு ‘இந்தாடா இருபது வருசம் கஷ்டப்பட்டுட்டே. இந்தா ஒரு ரெண்டு மூணு செண்டு நெலம் வாங்கிக்கோ’னு சொல்லி பணமும் கொடுக்கல. எப்படி அவரு கொடுப்பாரு. பணமில்லையா. அவரு புள்ளங்களுக்கு வீடு, தோட்டம் வாங்குவாரு.

வினவு:– நீங்க நடிக்க வந்த பிறகு வில்லனாகவோ, அல்லது ஒரு பெரிய நடிகராகவோ முயற்சி செய்யவில்லையா?

வெங்கல்ராவ்:– முதல்ல பைட்டரா வந்துதான் இப்போ நடிகராயிருக்கேன். படிக்கட்டுல மேல போறப்ப ஸ்லிப்பாகி கீழே வர்றேனே தவிர மேல போகல. முயற்சி பண்ணாம இருந்தா இங்க இருக்க முடியுமா ஐயா

வினவு:– உங்களுக்கு என்ன வயது?

வெங்கல்ராவ்:– அறுபத்தி ஐந்துக்கு மேலே இருக்கும். என் மனைவிக்கு அறுபத்தி இரண்டு வயசாகுது. கவர்ன்மெண்ட் தரும் முதியோர் பென்சன் எங்களுக்கு தர மாட்டேங்குறாங்க. நான் யார் யாரையெல்லாமோ பிடிச்சு கவுன்சிலர பிடிச்சு பென்சனுக்கு எழுதிப் போட்டேன். இந்த ஏரியால எல்லோருக்கும் வந்துச்சு. எனக்கும் என் சம்சாரத்துக்கும் மாத்திரம் வரல. ஐந்தாறு வருசமா முயற்சி பண்றேன். கேட்டா என்னோட பிறந்த தேதி கேக்குறாங்க. எங்க அப்பா அம்மாக்கே அது தெரியுமானு எனக்கு தெரியாதே.

வினவு:– குடும்பத்தோடு தியேட்டருக்கு போயிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்:– போனதில்லை சார். நான் நடிச்ச படத்தயே அங்க போயி பாக்கவா. பீச்சுக்கு, கோவிலுக்கு எல்லாம் போனதில்லை. என் சம்சாரம் மட்டும் சர்ச்சுக்கு போகும். அவங்க ஏசுநாதரை கும்பிடுவாங்க.

வினவு:– நீங்க சினிமாவில் சம்பாதிக்க முடியாமல் இருப்பதை பற்றி உங்கள் மனைவிக்கு எந்த குறையும் இல்லையா?

வெங்கல்ராவ்:– ‘இத்தன வருசமா இருக்கே, பைட்டரா இருந்தே, இப்போ நடிகராயிட்டே. நமக்கு வீடு இல்ல வாசல் இல்லே’னு அந்த அம்மா சண்ட போடும். நான் காதுலயே போட்டுக்க மாட்டேன். சும்மா படுத்துக்குவேன். ‘எதுக்கு நீ இங்க வந்தே?’ என்று என்னிடம் கேட்பார்கள். ‘நாம அங்கயே இருந்திருக்கலாமே!’ என்பார்கள். எனக்கு அம்மா கொடுத்த ஒன்னரை ஏக்கரில் எல்லாத்தையும் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு வித்திட்டேன். ‘இப்போ அது இருந்தா ஆறு கோடி ரூபா. நாம தலைமுறை தலைமுறையா உக்காந்து சாப்பிடலாமே’னு சண்டை போடும். ‘அட போமா’ ன்னுடுவேன். ‘நீ சினிமால இருக்க. சம்பாதிக்கே. ஒரு கோவில் பீச்சுன்னு கூட்டிட்டு போக வேணாமா’ ன்னு கேட்டா, ‘பீச்சுல்ல தண்ணியிருக்கும், மண்ணு இருக்கும், உட்கார முடியாது, நான் பாத்திருக்கேன்’ ன்னு சொல்வேன். ‘நீ பாத்திருக்கே நா பாக்க வேணாமா’ என்பார். வயசாகிப் போச்சு, இப்போ போயி எங்க போறது. வேளாங்கண்ணிக்கு போனால் அந்த அம்மனை பாத்துட்டு வருவேன். ஆந்திராவில் ஒரு ஏசுநாதர் கோவிலுக்கும் போய் விட்டுதான் வருவேன்.

இந்த மாதிரி கோவில், ஓட்டல் போன்றவற்றுக்கு வெளியே போவதற்கு அந்த வயதிலேயே எனக்கு விருப்பம் இல்லை. எந்த பண்டம் வேண்டுமானாலும் வீட்டிலேயே பண்ண சொல்லி சாப்பிட்டுக் கொள்வேன். பணமும், நேரமும் மெட்ராசுக்கு வந்தபோதே சில சமயம் இருந்தும் ஓட்டலுக்கெல்லாம் குடும்பத்தோடு போனதில்லை.

வினவு: – குதிரை தாவிக் குதித்தலில் சில சமயம் குதிரைகளே செத்துப் போய் விடுமே. நீங்கள் அதெல்லாம் பண்ணியிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்: – நான் ஐந்தாறு தடவை பண்ணியிருக்கிறேன். அதிகமாக பண்ணியதில்லை. குதிரை ரோப் அதன் காலில் சிக்குவதற்குள் நாம் கரெக்டாக டைம் பார்த்து குதித்தாக வேண்டும். சிலர் அதில் கீழே சிக்கி எலும்பு நொறுங்கிப் போகும். அதன் பிறகு அந்த குடும்பத்தை பெண்கள் தான் வேலை செய்து காப்பாற்ற வேண்டும். ஃபாலிங் பண்ணும்போது கால் குத்துமா தலை குத்துமானு தெரியாது சார். ‘தில்’லில்தான் பொழப்பு ஓடும்.

வினவு:– நீங்க நடித்த படங்களின் பெயர் சொல்ல முடியுமா?

வெங்கல்ராவ்: – நான் பைட் பண்ண படமெல்லாம் சொல்லத் தெரியாது. தலைநகரம், கந்தசாமியில் காமெடி, ஏபிசிடி யில் மூக்கில் பஞ்சு வைத்துள்ள காமெடி, இங்கிலீசுக்காரன் படமொன்றில் சத்யராஜ் கதாநாயகன் ஆக நடித்த படத்தில் பிச்சைக்காரன் பாத்திரம், சீனா தானா படத்தில் தலையில் கையை எடுத்து விட்டால் கடிப்பேன், எம்டன் மகன் படத்தில் சுடுகாட்டு சீனில், சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் வடிவேல் சாரை லஞ்சம் கேட்டதற்கு கும்முவது போன்ற சீனில் என நிறைய நடித்திருக்கிறேன்.

வடிவேல் சார் என் தெய்வம். நான் ஆந்திரா போகலாமா என நினைத்த நேரத்தில் எனக்கு அவர் வாய்ப்புகளை கொடுத்தார். அரிசியை வாங்கலாம், பருப்பை வாங்கலாம், அதிர்ஷ்டத்தை வாங்க முடியாது சார். எனக்கும் நேரம் வந்தால் ‘அந்த மொட்டக் காமெடியன் நல்லா நடிக்கிறா’னு தமிழ் நாடே சொல்லும் சார். அதைத் தான் நான் இப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வினவு:– இதற்கு மேல் சினிமாவில் வாய்ப்பே இல்லை என்று ஆகி விட்டால் என்ன செய்வீர்கள்.?

வெங்கல்ராவ்: –என்ன செய்ய முடியும். என்னைப் போல நெறய பேரு ஊருக்கு போயி சேந்துட்டாங்க. பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு சோறு போட முடியாம தண்ணியடிச்சு தண்ணியடிச்சு என்னோட பிரண்டுகளே பல பேரு சுடுகாட்டுக்குதான் சேந்திட்டாங்க சார்.

____________________________________

வெங்கல்ராவ்பின்குறிப்பு – வெங்கல்ராவ் என்ற இந்த மூத்த கலைஞரிடம்,  எதைப் பற்றி கேட்டாலும் அவரது கருத்தும் கவலையும் மற்ற தொழிலாளிகளுக்கும் சேர்த்தே வருகிறது. இத்தனை தூரம் சினிமா எதார்த்தங்களை சந்தித்திருந்தாலும் அவரிடம் இனியும் சினிமாவில் ஜெயிப்போம் எனும் நம்பிக்கை ஒரு அவலமான அதிருஷ்டமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நடப்பது சூதாட்டம், இந்த சூதாட்டத்தில் நாம் ஒரு ஜோக்கர் கூட கிடையாது என்று தெரிந்த பிறகும் வெங்கல்ராவ் போன்றவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையில்தான் வாடகை கட்ட மனைவியின் காதில் கழுத்தில் இருந்த்தை கழற்றி அடகுக்கடையை நோக்கி செல்கிறார் ராவ். வழியில் பார்க்கும் கவுன்சிலர் முதல் சின்னப் பையன்கள் வரைக்கும் வணக்கம் வைக்கிறார். மாடிப்படிகளில் ஏற முடியாத அளவுக்கு அவரது மூட்டுக்கள் பலமிழந்து போய் விட்டன என்ற போதும் இப்போதும் உழைத்துதான் பிழைக்க வேண்டிய நிலைமை. ஆனாலும் கைகட்டி நிற்க மாட்டேன் என்ற சுயமரியாதை அவருக்குள் நிற்கிறது. வேலையை சரியா செய்யவில்லை என யாரும் எள்ளி நகையாடி விடக் கூடாது என் குறியாக இருக்கிறார்.

இன்னொரு புறம் இனி இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு எங்கே போவது என்ற கேள்வியும் அச்சுறுத்துகிறது. சினிமாவில் பெரிய வாய்ப்பில்லை, வெளியேயும் வாழ்க்கையில்லை. இப்படித்தான் பல ஆயிரம் சினிமா உலக மாந்தர்கள் எந்த வரலாறும் இல்லாமல் அழிக்கப்படுகிறார்கள். வெங்கல்ராவ் அழகானவர் என்றாலும் வெள்ளித்திரையின் பின்னே இருக்கும் வாழ்க்கை அத்தனை அழகானதல்ல.

___________________________________

– நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு

5

இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா

டந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனான தமது பிழைப்புவாத கூட்டணியை நியாயப்படுத்த, குஜராத்தில் 2,000-க்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப் படுகொலை செய்த சங்க பரிவாரத்தின் தளபதி ‘நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால், ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை தண்டிக்க நடவடிக்கை எடுப்பார்’ என்று மோசடி செய்தனர் மதிமுகவின் வைகோவும், பா.ம.கவின் ராமதாசும். அதன் மூலம் மக்கள் விரோதியான பாஜகவுக்கு அங்கீகாரம் தேடித் தரும் பணியில் தமிழ் மக்களின் துரோகிகளாக ஆனாலும் பரவாயில்லை என்று அலைந்தனர்.

மோடியோ வெற்றி பெற்ற பிறகு தனது பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்து சிறப்பித்தது முதல், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்க மறுப்பது, ஐநா குழுவுக்கு அனுமதி மறுப்பு என்று இலங்கை அரசுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றி வருகிறார். “இலங்கையுடனான வர்த்தக, தொழில் உறவுகளை மேம்படுத்தி, அந்நாட்டை இந்தியாவின் செல்வாக்குக்குள் கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம்” என்று பா.ஜ.க பேச்சாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய தரகு முதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு இலங்கையில் ஏற்பாடு செய்து தருவதே தமது நோக்கம் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின், காங்கிரசுக் கட்சியின் கொள்கைதான் தமது கொள்கை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு மாதம் இலங்கை அரசு நடத்தவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சேஷாத்ரி சாரியும், சுப்பிரமணிய சாமியும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். சேஷாத்ரி சாரி “வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் வைகோ, “இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.” என்றும் “தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும்“ என்றும், “இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது.” என்றும், “இந்திய அரசின் சார்பில் அவர்கள் தெரிவித்த கருத்து, தாய்த் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.” என்றும் கூறியிருக்கிறார். ராமதாசோ, “இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது” என்கிறார்.

இந்த இரண்டு பித்தலாட்ட பேர்வழிகளுக்கும் சேஷாத்ரி சாரியும், சுப்பிரமணியசாமியும் பா.ஜ.கவில் இருப்பது தேர்தலுக்கு முன் தெரியாதது போலவும், இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர்கள் பேசுவதும், செயல்படுவதும் மோடி அரசுக்கு தெரியாமல் நடப்பது போலவும், தாம் பா.ஜ.கவிடம் திறமையாக பேசி, புத்திமதி சொல்லி அரசின் கொள்கையை மாற்றி விடப் போவதாகவும் மோசடி செய்கின்றனர்.

பா.ஜ.கவைச் சேர்ந்த பேராசிரியர் அழகப்பன் மறைவு குறித்து, “பாரதீய ஜனதா கட்சியின் அறிவுச் சிந்தனையாளர்கள் குழுமத்தின் ஆலோசகராகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் அழகப்பன் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானேன்” என்றும் “ஈழத்தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கட்சியில் எந்தத் தயக்கமும் இன்றித் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த ஒரு அறிவாளியை, சிந்தனையாளரை இழந்து தவிக்கின்றோம்.” என்றும் வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்து பா.ஜ.கவின் இலங்கை குறித்த கொள்கையை கண்டிக்கும் அவரது போலித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாஜக தயவில் சமூக நீதி பேசி பிழைக்கும் வைகோவும், ஆதிக்க சாதிவெறியில் குளிர் காய நினைக்கும் ராமதாசும் இன்னமும் தமிழர், ஈழம் என்று உச்சரிப்பது தமிழினத்துக்கே அவமானம். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பேர்வழிகளே வைகோ ஒரு காமடி பீசு அவர் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று பகிரங்கமாக பேசுகின்றனர். இதெல்லாம் தேவைதான வைகோ என்று திருச்சி வேலுச்சாமி போன்ற காங்கிரசு நபர்களே கேலி செய்கின்றனர். பாஜகவோ ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல, தமிழக மீனவர்களுக்கும் எதிராகத்தான் அன்றாடம் செயல்பட்டு வருகிறது.

சுப்ரமணிய சாமியோ  பாஜகவின் கொள்கையாளர் குழாமில் அமர்ந்து கொண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை என்று சொல்வது தவறு, அது பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சப்புக் கொட்டியவாறு எள்ளல் செய்கிறார். இருந்தும் பல்வேறு தமிழனக் குழுக்கள் வைகோவையும், ராமதாசையும் போராளிகளாக மேடை ஏற்றி அழகு பார்க்கின்றனர்.

ஏற்கனவே இந்தியாவுக்கான இலங்கைத் தூதர், வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தது நல்லது, அவரை திருத்தி விடுவார்கள் என்று கூறியிருந்தார். உண்மைதான், வைகோ மட்டுமல்ல ராமதாசும் திருந்தி விட்டார்.

மேலும் படிக்க