Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 647

கோழிக் கழிவும் கட்டுப்படியாகாத சாம்பாரும் !

7

ட்டிறைச்சி தொழிலை உதாரணமாகக் கொண்டு அரசமைப்பும் பார்ப்பனியமும் எப்படி மக்களை அலைக்கழிக்கின்றன என்பது வினவின் பதிவொன்றில் விளக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற சூழலில் ஏழைகள் அசைவத்தையும் சைவத்தையும் எவ்விதம் அணுகுகிறார்கள் என்பதற்கு மேலும் சில அனுபவங்களை பரிசீலிப்பது, உணவு பழக்கத்தையும் தீர்மானிக்கின்ற வர்க்கப் பிரச்சனையை நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கோழிக் கழிவு
கோழி இரைப்பை, இருதயம், ஈரல்

ஆடு, கோழி என்று வரும் பொழுதே அதை வாங்கி உண்ண வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பாக இருப்பது சில்லறை என்று மேல்தட்டு வர்க்கத்தால் ஒதுக்கித் தள்ளப்படுகிற கழிவுகளே.

பொதுவாக மதுரை போன்ற நகரங்களில் கோழிக் கடையில் இரண்டு வரிசைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கும். ஒன்று கிலோ கணக்கில் கறிவாங்குபவர்கள். மற்றொரு தரப்பு சில்லறை வாங்க வருபவர்கள். இந்த சில்லறை என்ற வகையில் கோழியின் தோல் (கொழுப்பு என்று பலரும் வாங்குவதில்லை), கழுத்து (இதை உண்பது கவுரவ குறைச்சல் என்று சில சாதிகள் கருதுவதும் வழக்கம்), மண்ணீரல் வரும். மேற்கொண்டு, கோழித்தலை மற்றும் கால்கள் ஓசியாகவோ அல்லது பத்து இருபது ரூபாய்க்கோ வாங்குவார்கள். இதிலேயும் பணக்காரர்கள் இடைஞ்சலாக வருவார்கள். தங்களது நாய்க்குப் போட வேண்டுமென்று சிலபேர் முன்கூட்டியே சொல்லிவைப்பதும் உண்டு.

ஓட்டாண்டியாக இருக்கிற சில நடுத்தர வர்க்கமும் இதை நாய்க்கு வாங்குகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களுக்கு வாங்கிச் செல்வார்கள். கறி என்று இல்லாமல் ரேசன் அரிசிக்கும் இதே கூத்துதான். இரையாக கோழிக்கு போடுகிறேன் என்று கூறிவிட்டு இட்லி, தோசைக்குப் போட்டு தமது கவுரவத்தை காப்பாற்ற முயல்வார்கள். தாம் சுரண்டப்படுகிறோம் என்பதை வெளிக்காட்டாது போராட்டத்திலும் கலந்து கொள்ளாது ஏழைகளை ஏளனமாக பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மனோபாவத்திற்கு இது ஒரு சான்று. இன்னும் சிலர் வெறும் கோழிச் சில்லறை வாங்கினால் தம்மை குறைவாக மதிப்பிடுவர் என்று ஒப்புக்கு 200 கிராம் அல்லது கால்கிலோ என்று வாங்குவார்கள்.

கோழி பாதங்கள், தலை
சாதாரண முனியாண்டி விலாஸ் வகைகளிலான அசைவ ஓட்டல்களில் கூட சிக்கன் குழம்பில் கோழியின் கால்கள், தோல்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழகம் முழுவதிலுமுள்ள சாதாரண முனியாண்டி விலாஸ் வகைகளிலான அசைவ ஓட்டல்களில் கூட சிக்கன் குழம்பில் கோழியின் கால்கள், தோல்கள் இடம்பெற்றிருக்கும். வேலைக்கு போகும் தொழிலாளிகள் இதையே கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். இதற்கென்று தனி விலை கிடையாது. இன்னும் கோழி, ஆடுகளின் எலும்புகளை மட்டும் கடித்து சுவைக்கும் பழக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கின்றது. வெளிநாடுகளிலோ எலும்புக்கு அருகில் உள்ள சதைப்பகுதிவரை தின்று விட்டு தூக்கி எறிவார்கள். அவர்களுக்கு கழிவான எலும்பு இங்கே உழைக்கும் மக்களின் சுவையான பதார்த்தமாக கருதப்படுகிறது.

கைநிறைய சம்பாத்தியம் என்று சொல்கிற பொழுது கைநிறைய என்கிற வார்த்தை இன்னும் ஒரு ஆண்டையினிடத்திலே கையேந்தி நிற்கிற ஒரு உழைப்பாளியின் அவலத்தையே நினைவுறுத்துகிற பொழுது கால்கிலோ கறியும் ஒரு கிலோ சில்லறையும் வாங்குகிற ஓட்டாண்டியாக்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்திற்கும் வாழ்நிலைக்கும் எது காரணம்?

இதில் பார்ப்பனியம் மற்றொரு வகையில் புகுந்து விளையாடும். எப்படி என்றால் ‘தகப்பன் இருப்பவன் கோழித் தலையை திங்கக் கூடாது!’ என்று ஒரு வழக்கம். ஆனால் வயிறு என்று வருகிறபொழுது பெயருக்கு ஆதிக்கசாதி என்று வெளியில் காட்டிக்கொண்டு மறுபுறம் கதவைச் சாத்திக்கொண்டு தின்பது நடுத்தெருவிற்கு வந்த ஆதிக்கசாதிகளிடையே காணப்படுகிற வழமையான வழக்கம்.

பார்ப்பனியத்தின் மற்றொரு பரிமாணத்தையும் கவனிப்போம். பொதுவாக இந்துக்கள் வெள்ளி, செவ்வாய்களில் அசைவம் உண்ணமாட்டார்கள். ஒரு நடுத்தர வர்க்கத்திற்கு இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு சாம்பார் வைப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு மளிகைகடைகளுக்கு போகும் அவசியமில்லாத பலபேருக்கு துவரம்பருப்பின் விலை பாசிப்பருப்பின் விலையைக் காட்டிலும் மிக அதிகம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக சாம்பார் என்று வந்தால் ஏழைகளுக்கு பாசிப்பருப்புதான் கதி. இதுவும் ரேசன் அரிசியின் ஊறல் வீச்சத்திற்கு துப்புரவாக ஒத்து வராது. ரசம், புளிமண்டி என்று போக வேண்டும்.

கோழிக் கழிவு
பல மக்கள் வெள்ளி மற்றும் விரதநாட்கள், சபரி சீசன் நாட்களில் அசைவ விலை குறைவாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குவார்கள்

அது தவிர, பீன்ஸ், காலிபிளவர், கேரட், நூக்கல் போன்றவை இங்கிலிபீசு காய்களின் விலை எப்பொழுதும் அதிகம். அவற்றை வாங்கி குழம்பு வைப்பது கட்டுப்படியாகாது. மிஞ்சிப்போனால் கத்தரிக்காய் அல்லது கொத்தவரங்காய் அல்லது உருளைக்கிழங்கு மட்டுமே கையைக் கடிக்காமல் இருக்கிற காய்கள். ஆக வெள்ளி, செவ்வாய்களில் மட்டுமல்ல குழம்பு என்று வருகிற பொழுது உழைப்பாளிகளின் சாய்சில் சாம்பார் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் அதே சமயம், கதம்பம், கம்ப்யூட்டர் சாம்பிராணி வாங்குகிற காசுக்கு உடைந்த முட்டை நான்கு வாங்க முடியும். வாழ வேண்டும் என்கிற பொழுது நகர்ப்புற ஏழைவர்க்கம் வெள்ளி செவ்வாய்களில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மத நம்பிக்கைகளை கழற்றி வைத்தால்தான் ஓரளவு குடும்பத்தை ஓட்ட முடிகிறது.

இன்னும் பல மக்கள் வெள்ளி மற்றும் விரதநாட்கள், சபரி சீசன் நாட்களில் அசைவ விலை குறைவாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை மதநம்பிக்கைதான் விலை குறைப்பிற்கு உத்திரவாதம் தரும் ஒன்று.

ரமண மகரிசி சுட்ட அப்பளம் தின்று தியானத்தில் முக்தி அடைந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பது கிலோ சிமெண்டு மூட்டை தூக்குகிற சித்தாளுக்கு சுட்ட அப்பளத்தால் என்ன பலன் உண்டு? ஒருவருக்கு கலாச்சாரமாக கடப்பாடாக இருக்கிற உணவு, உழைக்கும் மக்களின் பலபிரிவினரை பிரதிபலிப்பதேயில்லை என்கிற பொழுது மதங்கள் யாருக்காக இருக்கின்றன? இதில் பல நேரங்களில் நடுத்தரவர்க்கம் தன்னை பக்தனாக காட்டிக்கொள்ள முடியாமல் பகல்வேசம் போடுகிறது என்பதுதான் நிதர்சனம்!

ஆட்டு நாக்கு
வறுத்த ஆட்டு நாக்கு

சரவணபவனில் ஐம்பது ரூபாய் கொடுத்து தோசை தின்னும் வர்க்கங்கள் நெல்பேட்டையில் சூத்தை கத்தரிக்காய்களை பொறுக்குகிற, உடைந்த தக்காளியை சல்லிசாக வாங்குகிற, முற்றிய வெண்டைக்காயில் வற்றல் போடுகிற ஓட்டாண்டி வர்க்கங்கள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறிவது பார்ப்பனியத்தின் சடங்கு சம்பிரதாய எல்லைகளைத்தான். அதனால் தான் கோழித்தலையை தகப்பன் இருந்தும் உண்கிறார்கள். உடைந்த முட்டையின் கருகிய மணம் சாம்பிராணியின் புகையையும் தாண்டி வெள்ளி, செவ்வாய்களில் மணக்கிறது.

ஆடு என்ற வருகிறபொழுது ஒரு கிலோ கறிக்கு கணிசமான ரூபாயை சம்பளத்தில் இருந்து எடுக்க வேண்டும். அது சாத்தியமல்ல என்பதால் இங்கும் ஆட்டின் பல உறுப்புகள் தான் ஏழைகளுக்கு அசைவம். ஆட்டுத்தொட்டியில் ஆட்டின் பல உறுப்புகள் விலைக்கு வைக்கப்பட்டிருக்கும். சான்றாக ஆட்டின் நாக்கு ஒன்று மட்டுமே இருநூறு கிராம் கறியை ஈடு செய்ய போதுமானது. பல நேரங்களில் நுரையீரலை மட்டும் வாங்கிச் செல்கிற குடும்பங்களும் உண்டு. இதைப் படிக்கிறவர் அசூசையாகவோ அல்லது முதன்முதலில் கேள்விப்படுபவராகவோ கூட இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் இந்துமதம், கலாச்சாரம், புனிதம் என்று கதைக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க.

இது ஒருபுறமிருக்க, பல ஆதிக்க சாதிகள் மூலநோய் குணமாகும் என்று கருணைக்கிழங்கு தின்பது ஒருபக்கம் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் (மதுரை கீழ்பாலத்தில் காணலாம்) பன்றிக்கறியும் வாங்கிப் போவர். ஆனால் பார்ப்பனியத்தை ஆழமாக கடைபிடிப்பவர்களும் இவர்களே. பார்ப்பனர்களை விட வைகுண்ட ஏகாதேசி விரதம், பிரதோசம் என்று பீக்கு முந்திய குசுவாக இருப்பார்கள்.

மேற்கண்ட உதாரணங்களில் நாம் பார்ப்பது வாழ்க்கை என்று வருகிற பொழுது இந்துக்களே பார்ப்பனியத்திற்கு எதிராகவும் அரசமைப்பிற்கு எதிராகவும் பல சமயங்களில் நிற்க வேண்டியிருக்கிறது என்பது தான்.

இறைச்சி உணவு
சுரண்டப்பபட்ட மக்கள் சூத்தைக் கத்தரிக்காய், உடைந்த தக்காளி, கோழிச் சில்லறை, ஆட்டு நாக்கு, சில்லி பீப் என்று பொழுதை ஓட்டுகின்றனர்.

இசுலாமியரையும் சேர்த்துக் கொள்வோம். பன்றிக்கறி அடிப்படைவாதத்தில் வருகிற பொழுது அதையும் தாண்டிய ஒன்று ஹலால் சம்பந்தப்பட்டது. ஓதி அறுக்கப்படாத கறி ஹராம் என்ற நிலையிலும் பிற கறிகள் மலிவாக கிடைக்கிற இடங்களில் இசுலாமியர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். பல இசுலாமியர்கள் பிற வீட்டின் விசேசங்களில் கிடாவெட்டு விருந்துகளிலும் கலந்து கொள்கிறார்கள். ஓட்டல்களிலும் உணவருந்துகிறார்கள். இன்றைக்கு இந்நிலைமை வெகுவாக மாறி வந்திருக்கிறது. மக்களைப் பிரித்தாள்வதில் பிஜேக்களும் ஆர் எஸ் எஸ்களும் பங்குபங்காளியாக உள்ளே புகுந்து வேலை செய்கிறார்கள். பள்ளிவாசல்களே இன்றைக்கு இருதரப்பாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கிறோம். இதில் ஹலால் மூலமாக இசுலாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மதஅடிப்படைவாதிகள் வெறியுடன் இருக்கிறார்கள். மத அடிப்படைவாதம் இவர்களிடத்தில்தான் இருக்கிறதே தவிர மக்களிடையே கிடையாது. பசுவை புனிதம் என்கிற அரசியலுக்குள் ஆர் எஸ் எஸ் இழுத்தும் தவ்ஹீத் போன்ற சக்திகள் இசுலாமியரை பிரித்தாள்வதையும் பெரு முயற்சியுடன் செய்கிறார்கள்.

தொகுப்பாக சைவம் அசைவ அரசியலில் அரங்கேற்றம் செய்யப்படுவது என்ன?

  1. உணவை வைத்து எங்கெல்லாம் இந்துத்துவத்தின் குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் சாதி மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. மேல்தட்டு வர்க்க ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி தின்பதில்லை என்று காட்டிக்கொள்கிற பொழுது மாட்டுக்கறி ஆதிக்கசாதி உட்பட ஏழை வர்க்கங்களுக்கு விலை மலிவான மாற்றாக இருக்கின்றது. இதில் தடை ஏற்படுத்தும் பொருட்டு பார்ப்பனியமே இன்றுவரை கோலோச்சுகிறது.
  2. ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்ட நடுத்தரவர்க்கம் மதத்தையும் கைவிடமுடியாமல் சைவமும் உண்ணமுடியாமல் அசைவமும் உண்ண முடியாமால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.

    சைவம் - அசைவம்
    ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்ட நடுத்தரவர்க்கம் மதத்தையும் கைவிடமுடியாமல் சைவமும் உண்ணமுடியாமல் அசைவமும் உண்ண முடியாமால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.
  3. சுரண்டப்பபட்ட மக்கள் அசைவத்திற்கு ஆட்டுத்தொடையோ சைவத்திற்கு கோபி மஞ்சூரியனோ அல்லாமல் சூத்தைக் கத்தரிக்காய், உடைந்த தக்காளி, கோழிச் சில்லறை, ஆட்டு நாக்கு, சில்லி பீப் என்று பொழுதை ஓட்டுகிற பொழுது வர்க்க பிரச்சனையே மேலோங்கி நிற்கிறது.  இங்கு மதமோ அரசோ மயிரளவு மதிப்பு கூட மக்களுக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை.
  4. இந்தியாவில் இந்து மதத்தின் பிற சாதிகள் இந்து எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கிற பொழுது இசுலாமியர்கள் இந்து எதேச்சதிகாரத்திற்கு மட்டுமல்ல இசுலாமிய அடிப்படைவாதத்திற்கும் எதிராக போராட வேண்டும் என்பதே பல்வேறு தருணங்கள் நிரூபிக்கின்றன.

தான் சார்ந்திருக்கிற மதம் தன் வாழ்நிலைக்கு தீர்வல்ல என்று ஒரு இந்துவோ இசுலாமியரோ பரிசீலிப்பாரேயானால் அவர்கள் புரட்சிகர இயக்கங்களோடு கைகைகோர்க்க வேண்டும். அதற்கு இந்து என்றோ இசுலாமியன் என்றோ சடங்கு சம்பிரதாயத்தின் பால் போற்றப்படும் அடையாளங்களுக்கு வேலையில்லை. ஏனெனில் இங்கு காசு இருப்பவனுக்குத்தான் மதமும் கலாச்சாரமும் இன்ன பிற கருமாந்திரங்களும். ஒன்றுமில்லாத நாம் நம்மை ஒரு பக்தனாக காட்டிக்கொள்வதும் மதத்தின் கீழ் இருத்திக் கொள்வதும் முழுக்க முழுக்க கையாலாகாத தனமாகும். பார்ப்பனியயமும் வஹாபிசமும் அடிப்படையில் வேறுவேறல்ல. முதலாளித்துவம் வளர்த்தெடுத்த களவாணிகள் இவர்கள். இதிலிருந்து நம்மை மீட்டெடுக்க, புடம் போட்டுக் கொள்ள வர்க்கப் போராட்டத்தில் இணைவதைத் தவிர வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?

– ஆய்வகன்

இந்தித் திணிப்பு : மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!

10

இந்தித் திணிப்பு: மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்! (தலையங்கம்)

ளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவுடனேயே இந்தித் திணிப்பு உள்ளிட்டு தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது மோடி அரசு. வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ள நிலையில், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் மற்றும் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிராக பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி, அலுவலர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தியில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மே 27 அன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைச் சரியாகப் பின்பற்றுவோருக்குப் பரிசுத்தொகையும் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்புதமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் அந்த சுற்றறிக்கை என்று பார்ப்பனக் கும்பலுக்கேயுரிய இரட்டை நாக்குடன் ஒரு பித்தலாட்ட விளக்கத்தை அளித்து தற்காலிகமாகப் பின்வாங்கிக் கொண்டது மோடி அரசு. எனினும் இது தற்காலிகமானதே. இந்திதான் தேசிய மொழி என்றும் மற்றவை பிராந்திய மொழிகள் என்றும் உள்துறை இணை அமைச்சரான கிரண் ரிஜிஜு திமிர்த்தனமாகப் பேசுவதும், மைய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பள்ளிப் பாடத் திட்டத்தில் வேதம் – உபநிடதங்களைச் சேர்க்க வேண்டுமென்று கூறியிருப்பதும், மைய அமைச்சர்களில் நான்கு பேர் சமஸ்கிருதத்தில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருப்பதும், இசுலாமியருக்கு எதிரான பகைமையைத் தூண்ட காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளை பாரதிய ஜனதா கிளப்புவதும் பார்ப்பன பாசிசக் கும்பலின் உண்மை முகத்தை அம்பலமாக்கியிருக்கின்றன.

இந்தித் திணிப்புக்கு எதிராக தாளமுத்து, நடராசன், சின்னசாமி உள்ளிட்டு 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர் துறந்து, மக்கள் இயக்கமாக வளர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கல்வெட்டாக நீடிக்கிறது என்ற போதிலும், தமிழ்வழிக் கல்வி அழிவுக்குத் தள்ளப்பட்டு தமிழகத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆங்கிலவழிக்கல்வியை அரசே ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மொழிப்பாடமாகக் கூடத் தமிழைக் கற்பிக்க முடியாது என்று மெட்ரிக் பள்ளிக் கொள்ளையர்கள் வழக்கு போடும் அளவுக்கு மொழிப்பற்று மங்கியிருக்கிறது. பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வைப்பது ஒரு பண்பாடாகப் பரவி வருகிறது. பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதைப் போராட்ட மரபு என்பது தமிழகத்தின் இளைய தலைமுறைக்குத் தெரியாத பழைய கதையாகிவிட்டது மட்டுமல்ல; அத்தகைய போராட்ட மரபுகள் குறித்த பெருமித உணர்வு மங்கி, சுயமரியாதையும் மொழிப்பற்றும் இல்லாத ஒரு பிழைப்புவாதம் இளம் தலைமுறையின் கலாச்சாரமாகப் பரவியிருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக, இனப்படுகொலைக் குற்றவாளி என்று உலகத்துக்கே தெரிந்த பாசிச மோடியை பல்லக்கிலேற்றி, பார்ப்பன பாசிசக் கும்பலுக்குத் தமிழக மக்கள் மத்தியில் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து அரியணையிலும் அமர்த்தியிருக்கிறார்கள் தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் முதலான பிழைப்புவாதிகள். தேசிய இன அடையாளங்களை அழித்து இந்து தேசியப் பண்பாட்டைப் பரப்புவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு இத்தகைய புறச்சூழல் பெரிதும் சாதகமாக அமைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் தமிழக மக்கள் இந்திக்கு ஆதரவாகப் போராடுவார்கள் என்று பா.ஜ.க.வின் இல.கணேசனால் தைரியமாகப் பேச முடிந்திருக்கிறது. நாம் எதிர்கொள்வது வெறும் இந்தித் திணிப்பு குறித்த பிரச்சினை அல்ல. தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவால்!
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்

227

வினவு அண்ணனுக்கு

வணக்கம்,

என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.

இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.

வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல,  எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில்  நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.

வன்னியர் சாதி கடை
வன்னியர் சாதிக் கடை

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேந்தவன். என் தாத்தாவோட பழைய காலம் மாறி இல்லைன்னாலும் நானும் ஜாதி பாகுபாட்டை அனுபவிச்சிருக்கிறேன். பள்ளி, ஊரு, கோவிலு எல்லா இடத்திலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது. முன்னெல்லாம் எங்க ஊரு பெரிய வீட்டுக்காரங்க எல்லாரையும் அடிப்பாங்களாம். அதை வாங்கிகிட்டு பேசாம அவங்க கிட்ட வேலை பாக்கனுமாம். கோவில் சப்பரம் வரும் தெருவில் செருப்பு போட்டு நடக்க கூடாதாம். இப்பல்லாம் அப்படியில்ல. இருந்தாலும் முழுசா போகலை.

என் வகுப்பு மாணவர்கள் என் கண்ணு முன்னாடியே பறப்பய, சேரி, சக்கிலின்னு அவங்களுக்குள்ள திட்டுறதுக்கு சகசமா பயன்படுத்துவாங்க.

ஜாதின்னு ஒண்ணு இல்லாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு பல தடவை கற்பனை செஞ்சு பார்த்திருக்கிறேன். கடவுள் ஏன் இப்படி படைச்சாருன்னு தெரியவில்லை. ஜாதியினால் எவ்வளவு பிரச்சனை. தர்மபுரியில் எங்க சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எத்தனை பேரு வீடுகள கொளுத்துனாங்க. தினமும் எங்கையாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாழ்த்தப்பட்டவர் ஜாதி கொடுமையால பாதிக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

தர்மபுரி பிரச்சனை நடந்த போது எனக்கு பல நாள் தூக்கமே வரவில்லை.  நாம் அங்கு போய் நம்ம மக்களுக்கு எதாவது உதவலாம்னு நினைச்சாலும் எப்படி போவது எங்கு தங்குவது ஒன்றும் தெரியாத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் ஊர் வி சி கட்சிகார்களிடம் கேட்டுபார்த்தேன். தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.

தர்மபுரியில் கலப்பு திருமணம் செஞ்சுவச்சதப் பத்தின உங்க கட்டுரைய பாத்தேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்க செய்தது மிகப்பெரிய பணி. எந்த ஊருல கலப்பு திருமணம் செய்ஞ்சால் கொலை செய்வேன்னு சொன்னார்களோ அந்த ஊரிலேயே கலப்பு திருமணம் செய்துவைத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்து உங்களை  வாழ்த்துகிறேன்.

நித்தியானந்தா 2009 கண்காட்சியில்
2009-ம ஆண்டு முதல் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் துவக்க விழாவில் கர்ம யோகி நித்தியானந்தா

இதே சமயத்தில் உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நீங்க இந்து மதத்தை எதிர்த்து  எழுதும் போது பலமுறை திட்டியிருக்கிறேன். சில கமெண்டுகளும் கோபத்துல போட்டுள்ளேன். நான் படிச்சது இந்து பள்ளிகூடம். எனக்கு சாமி நம்பிக்கையும், தேசபக்தியும் அதிகம். அந்த பள்ளிகூடத்துல ஜாதி வித்தியாசம் இல்லாம எல்லாரும் பாரதமாதா புதல்வர்கள்ன்னு சொல்லுவாங்க அது எனக்கு பிடிக்கும்.  அதனால, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான இந்து இயக்கங்கள் தான் நம் நாட்டிற்கு தேவைன்னு நினைச்சேன். சென்னை வந்ததுக்கு பின்னாடிதான் உங்க தளத்தை படிக்க ஆரம்பிச்சேன். உங்க கட்டுரைங்கள்ள இந்து மதத்த திட்டுற கட்டுரைகள் எனக்கு பிடிக்காது. சாதிப் பிரச்சினை சம்பந்தமா எங்க மக்கள ஆதரிச்சு நீங்க எழுதுறது எனக்கு பிடிக்கும்.

இப்போது வேலை தேடி சென்னை வந்து,  எங்க ஊரு நண்பர்கள் கூட தங்கி இருக்கேன். சென்னை வந்த பிறகுதான் பல விசயங்கள் தெரிய வருது. ஊர் அண்ணன்கள் சிலர் அவங்க வீட்டுக்கு கூட தெரியாம  புத்த மதத்துக்கு மாறியிருக்காங்க. அவங்க நிறைய சொல்லுவாங்க. அம்பேத்கர் இந்து மதம் மோசம்னு சொன்னதா சொல்லுவாங்க. அவங்க தான் உங்க வெப்சைட்டை குடுத்து படிக்க சொன்னாங்க.

நான் அவுங்க கிட்ட விவேகானந்தர் சாதி இல்லைனு சொல்லியிருக்கார் என்று பேசுவேன். இந்திய வல்லரசா வரணுமுனா மோடி தான் பிரதமரா வரணும்னு வாதாடுவேன்.

இருந்தாலும், அவங்க கேக்குற கேள்விங்களுக்கும் உங்க சைட்ல நீங்க எழுதற வாதங்களுக்கும் என்னால பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் நமக்குத்தான் விசயம் தெரியலியே தவிர, நிச்சயமா இதுக்கெல்லாம் சரியான பதில் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.

போன வாரம் திருவான்மியூரில இந்து ஆன்மீக சேவை கண்காட்சி  ஒன்று நடந்தது. உங்களுக்கு பதிலடி கொடுக்க ஏதும் புக் கிடைக்குமான்னுதான் கண்காட்சியை பார்க்கவே நான் போனேன்.  அங்க  நீங்களும், ரூம் நண்பர்களும் சொல்றதுதான் உண்மைங்கிறத நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

ரெட்டி இளைஞர் சங்கக் கடை
ரெட்டி இளைஞர் சங்கக் கடை

கண்காட்சிக்கு உள்ளே போனால் 2வது ஸ்டாலே வீர வன்னியர் ஸ்டால் என்று போட்டிருந்தார்கள். வன்னியர் தான் அரச பரம்பரை ன்னு சொல்லி அது சம்பந்தமான் புத்தகங்கள், வீடியொ எல்லாம் வைத்திருந்தார்கள். நாங்கள் தான் அரச பரம்பரை என்று அவங்க சொல்லும் போதே மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு அடிமையாக இருந்தாங்கன்னு தானே சொல்ல வாராங்க. அதை பாத்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. நாம எல்லாரும் இந்துக்கள் என்று உண்மையில் நினைத்திருந்தால் இப்படி ஒரு ஸ்டாலை போட்டிருப்பார்களா? தர்மபுரியில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்து முடிந்து ஜாதி வெறி பரவிவரும் நிலையில் இந்து இயக்கம் நடத்தும் ஒரு கண்காட்சியில் சாதிவெறியை எப்படி அனுமதிச்சாங்கன்னு கோவம் வந்துச்சு.

கொஞ்சம் தள்ளி போனால் அகமுடையார் ஸ்டால், விஸ்வகர்மா ஸ்டாலுனு ஜாதிக்கு ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள்.  ஜாதியும் இந்து மதமும் வேறு வேறு கிடையாது. ஜாதிதான் இந்துமதம் என்று ரூம் நண்பர் அடிக்கடி சொல்வார். அப்படி கிடையாது, இந்து மதத்தில் ஜாதி இல்லை. இடையில் வந்தவர்கள் தான் உருவாக்கி இருக்காங்க. இந்து இயக்கங்களும் ஜாதி இல்லைன்னுதான் பேசுறாங்கன்னு அவங்களோட சண்டைபோட்டிருக்கிறேன். இப்படி அது எல்லாம் பொய்யாகும்னு நான் நினைக்கவேயில்லை.

இந்து இயக்கங்கள் ஜாதியை  ஆதரிக்கிறத நேரிலேயே பார்த்த பிறகு  நான் இந்து இயக்ககங்களுக்கு ஆதரவா இருந்ததை நெனச்சி அவமானமா இருந்தது.

கண்காட்சி ஸ்டால்களை சில பெண்கள் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தங்க. அவங்ககிட்ட பேசிப் பார்த்தேன். அவங்களும் எல்லாரும் தாழ்த்தப்பட்ட சாதிதான்னு தெரிஞ்சது. கண்காட்சியின் மற்ற வேலைகளை இந்து இயக்க தொண்டர்கள் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால் சுத்தம் செய்யும் வேலைக்கு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்துறாங்கன்னு பாத்தபோது ஆத்திரமா வந்தது.

அரவிந்தன் நீலகண்டன்
அம்பேத்கர் படம் வைத்த கடையில் அரவிந்தன் நீலகண்டன்

நான் உங்களையும், ரூம் நண்பர்களையும் மூக்குடைக்க வேண்டும் என்றுதான் கண்காட்சிக்கு போனேன். ஆனால் நானே மூக்குடைபட்டு போனேன்.

அப்போ எந்த ஜாதியின் பேரும் இல்லாமல் அம்பேத்கர் படம் வைத்திருந்த ஒரு ஸ்டாலைப் பார்த்தேன்.  மனதுக்கு ஆறுதலா இருந்தது. நான் மூக்குடைபட்டதை யாரிடமும் கூறக்கூடாது என்று தான் கோவமாக நினைத்தேன். ஆனால் அங்கிருந்த அம்பேத்கர் படங்களும், ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பழகிய விதம் காரணமாக, என்னையறியாமல் அவரிடம் என் ஆதங்கத்தை கொட்டி பேசினேன். நாமெல்லாம் இந்துக்களாக, இந்தியர்களாக இருக்கும் போது சாதி பெருமை பேசுபவர்களை அழைத்து ஸ்டால் போட்டிருக்காங்க, சுத்தம் செய்யும் பணிக்கு இந்து இயக்க வாலண்டியர்கள் இல்லையா? என்று கேட்டேன்.  அதற்கு அவர் கூறிய பதில் தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்தது. அவருடைய நிலைமை என்னைவிட பரிதாபமாக இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அவர் அம்பேத்கர் படத்தை ஸ்டாலில் போடுவதாக சொன்னாராம். கண்காட்சி நடத்துறவங்க  வேணுமினே ஒதுக்குபுறமா, ஒரு மறைவான இடத்தை கொடுத்து இங்கு போடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.  அவரது மற்றொரு ஸ்டாலுக்கு பான்பராக் பாக்கெட் சைசில் சின்ன இடம்தான் தருவோம்னு சொல்லி இடம் ஒதுக்கிட்டாங்கன்னார். சென்னையை சேர்ந்த பிராமணர்கள் தான் இந்தக் கண்காட்சிய நடத்துறாங்கன்னு அவர் சொன்னார். பாத்தீங்கன்னா அவரும் சாதாரண ஆளு கிடையாது, பல புத்தகங்களை எழுதுன எழுத்தாளர்.  (எனக்கும் சில புத்தகங்களை அன்பளிப்பா கொடுத்தார்). அவருக்கே இந்த நிலைன்னா வேற எதைப்பத்தி பேசி என்ன ஆகப் போகுது?

அந்த ஸ்டாலில் அம்பேத்கர் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள்.   “ சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும். பாகிஸ்தான் முசூலீம்கள் கிட்ட இருந்து இந்துக்களை பாதுகாக்க மகர் ரெஜிமென்டை ஏற்படுத்தணும்” இது மாதிரி நான் இதுவரைக்கும் கேள்விப்படாத அம்பேத்கர் பொன்மொழிகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதெல்லாம் சொன்னால் ரூம் நண்பர்கள் ஒத்துக்கமாட்டார்களேன்னு அவரிடம் “இது அம்பேத்கரின் எழுத்துக்களில் எந்த தொகுதியில் வருது” என்று கேட்டேன். அதுக்கு அவர் “இந்த பொன்மொழிகள் தொகுதியில் இல்லை, அம்பேத்கார் பத்தி வேறு எழுத்தாளர் எழுதினதில் இருந்து போட்டிருக்கோம்”னு சொன்னார். இந்த புக்கை வைத்துதான் அம்பேத்கர் தொகுதிகளை வெளியிட்டிருக்காங்கன்னும் சொன்னார். அதனால அம்பேத்கர் தொகுதியிலும் இது இருக்கும் ஆனா எந்த தொகுதினுதான் ஞாபகமில்லைன்னு சொன்னார். ஒரு சின்ன புக்குல இருந்து இவ்வளவு தொகுதிங்க எப்படி வந்திச்சின்னு எனக்கு ஆச்சரியம். அந்த சாரோ எந்த தொகுதின்னு இமெயிலில் அனுப்புறேன்னு சொன்னார். மெயில் வந்தவுடன் உங்களுக்கு வெவரத்தை அனுப்புகிறேன்.

யாதவ மகாசபை
“வீரமணி யாதவ சாதிக்காரர் ” என்று சொல்லும் அரவிந்தன் நீலகண்டனின் ஆன்மீக கண்காட்சியில் உள்ள ஒரு ‘இந்து’ ஸ்டால்!

அப்புறம் அவருகிட்ட ஜாதி சங்க ஸ்டால் பத்தி கேட்டேன். தப்புதான்னு வருத்தப்பட்டாரு. கையோட வெங்கடேசன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் சாருகிட்ட அழைச்சுகிட்டுப் போனார். இவரு கேக்குற கேள்விங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்றீங்கன்னு அவர் கிட்டே கேட்டார்.  அவருகிட்டயும் “நாம இந்துவா இருக்கும்போது இப்பிடி ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புதானே, கூட்டி பெருக்கும் வேலைங்களுக்கு மட்டும் உங்ககிட்ட வாலன்டியருங்க இல்லையா”ன்னு கேட்டேன்.

அவரோ “நாங்கள் தேவேந்திர குல வேளாலர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறோமேன்னு சொல்லி இன்னொரு குண்ட தூக்கி போட்டார். ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புன்னு சொல்வாருன்னு பாத்தா, “வேணும்னா பறையன்னு சொல்லி நீயும் ஒரு ஸ்டால் போட்டுக்கோ” ன்னு சொல்றாமாரி இருந்தது அவருடைய பதில்.

இதை தவறுன்னு இவங்க கருதலயேன்னு வருத்தமாவும், கோபமாவும் இருந்தது. இவ்வளவு நாள் என்ன இந்துவா நினைச்சதுக்கு இது ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது. நீ இந்து இல்லை பறையன், அதை ஏத்துக் கொண்டு நீயும் ஸ்டால் போட்டுக் கொள்ளலாம்ங்கிற மாறி இருந்துச்சு அவரது பதில். கூனி குறுகி போனேன். அடுத்து என்ன பேசுவதுன்னு எனக்கு தெரியல. நாம் இத்தனை நாள் நண்பர்களாக நினைச்சவங்க நம்மை எட்டி உதைப்பது போல இருந்தது.

இல்லை சார், நாம இந்துக்களா இருக்கும் போது ஏன் ஜாதி பெயரை பயன்படுத்தனும்? நீங்க அம்பேத்கர் பெயரை போட்டு பறையருன்னு போட்டாலும் அது தப்புதானேன்னு வாதிட்டேன். இதுக்கு வெங்கடேசன் சாரு ஒன்னும் பதில் சொல்லல. நான் தெளிவா பேசுறதா அரவிந்தன் சார்தான் சொன்னார். கூட்டுறதுக்கு கான்ட்ராக்டு விட்டதால ஒன்னும் செய்ய முடியலேன்னு வெங்கடேசன் சாரு சொன்னாரு. எனக்கு அந்த பதிலிலும் திருப்தி இல்லை.

ரூம் நண்பர்களும் வினவும் சொல்றது மாதிரி  இந்து மதமே இப்படித்தானா? இல்லை இந்து இயக்கங்கள் தான்  இப்படியா? எனக்குள்ள பல கேள்விகள் தோணிச்சு.

மாட்டிறைச்சி
தலித்துகளின் மாட்டிறைச்சிக்கு அரவிந்தன் நீலகண்டனின் ஆசீர்வாதங்கள்

அரவிந்தன் சாரை தவிர அங்கு எனக்கு ஆறுதலா யாரும் இல்லை. ரூம் நண்பர்கள் புத்த மதத்திற்கு மாறுமாறு கூறியது சரின்னுதான் பட்டது. முதல்ல அரவிந்தன் சாரை பாத்த போது அம்பேத்கர் மதம் மாறியது பத்தி கேட்டேன். அதுக்கு அவரு அம்பேத்கர் வேறு அந்நிய மதத்துக்கு மாறலை. புத்தமத மாற்றம் என்பது ஒரு ரூமிலிருது இன்னொரு ரூமுக்கு மாறுவது. ஆனா வீடு ஒன்னுதான். இப்படித்தான் அம்பேத்கர் கூட சொல்லியிருக்காருனு சொன்னார்.

அது இப்ப ஞாபகத்துக்கு வந்து அவருகிட்டயே கேட்டேன். “இப்ப நீங்க புத்த மதத்துக்கு மாறுவது சரியான தீர்வல்ல”ன்னு அவர் கூறினார். ஏன் இப்ப மாறி பேசுறாருன்னு எனக்கு குழப்பம் வந்தது.

உடனே சார் ஒரு பேப்பரை எடுத்து ஒரு மேப் வரைஞ்சு காமிச்சார். அதுல கட்டம் கட்டமா போட்டு இது எஸ்சி அதுக்கு மேல எம்பிசி பிறகு பிசி, எப்சின்னு  போட்டு சைடுல முஸ்லீம்னு போட்டு இவங்க எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்கள தாக்குறாங்கன்னு சொன்னாரு. தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குறதுக்கு ஜாதி இந்துக்களை தூண்டுறது மேல இருக்குற பிராமணர்கள் மாதிரியான எஃப்சின்னு விளக்குனார். இதை வாய்ப்பா பயன்படுத்தி எஸ்சி மக்களுக்கு எதிரா முஸ்லீம்கள் செயல்படுறாங்கன்னும் சொன்னார்.

அதுக்கு நான் சொன்னேன், சார், முஸ்லீமகள் நம்ம மக்களுக்கு எதிராக  இருக்கிறதா தெரியல. முஸ்லீம்கள் நம்மள எங்கயும் அடிக்கல. ஜாதி இந்துக்கள்னு சொல்றவங்க தான் தர்மபுரி மாறி பல இடங்கள்ள அடிக்கிறாங்க. முஸ்லிம் மதத்துக்கு மாறிய என் நண்பனைப் பற்றி சொல்லி வேணுண்ணா அவன்கிட்ட பேசுறீங்களான்னு கேட்டேன். அவன அவங்க மதத்துக்காரங்க சமமா மதிக்கிறாங்க. மசூதியில எல்லா இடத்துக்கும் அவன் போக முடியுது.

அதே நேரத்தில நான் காதலிக்கிற பி.சி சாதி பெண்ணை கலியாணம் செய்வதில் எனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதை சொல்லி முசுலீம் ஆட்களிடம் அப்படி இல்லையேன்னு கேட்டேன்.

இத அமைதியா கேட்ட அரவிந்தன் சார், டெல்லி ஜும்மா பள்ளிவாசலிலும், மெக்கா, மெதினாவிலயும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க தான் இமாம் ஆக முடியும். அங்கேயும் சாதி இருக்குன்னு விளக்கினார்.

பா.ராகவன்
சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் தேர் வடக்கயிறு பூணூலை அணிந்த அசல் ஹிந்து பா ராகவன், அரவிந்தன் நீலகண்டனின் ஆழி பெரிது நூலை வெளியிடுகிறார்.

நான் சொன்னேன்,  “நான் சென்னையத் தாண்டி டெல்லி, மெக்காவுக்கெல்லாம் போறதுக்கு சான்சே இல்ல. அந்த இடங்கள்ள எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்ல. எங்க ஊரு பள்ளிவாசல்ல என்ன மதிச்சா அது போதும். எங்க ஊரு பக்கத்துல இருக்கும் ஆத்தங்கரை தர்கா பள்ளிவாசலுக்கு யாரு போனாலும் நல்லாவே மதிப்பாங்க. அந்த மதிப்பு வள்ளியூர் முருகன் கோவில்ல கூட கெடைக்காது சார்” ன்னு சொன்னேன்.

அதே நேரத்தில, நம்ம பண்பாட்ட விட்டு கொடுக்காம நான் புத்த மதத்துக்குத்தான் மாறப் போறேன்னு சொன்னேன். அதுக்கு அரவிந்தன் சாரு, “தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்துக்கு மாறி என்ன பயன்? இடைநிலை ஜாதிங்களும் உங்களோட மாறுனாத்தான் ஜாதிப்பாகுபாடு இருக்காது. அப்படி மாறதா இருந்தாலும் காசுக்கு ஆசைப்பட்டு முஸ்லீம், கிறிஸ்டீனுக்குத்தான் மாறுவாங்க. புத்தமதத்துக்கு யாரும் மாறமாட்டாங்க”ன்னு பேசுனார்.

இதக் கேட்டதும் எனக்கு சுரீர்னு கோவம் வந்துச்சு. சில வருசங்களுக்கு முன்னடி என்னோட சித்தப்பா கிரிஸ்டியனாக மாறினார். அவரு பேரு முதல்ல ஈஸ்வரன் இப்போது யோவானாகியிருக்கார். சார் நீங்க சொல்றது எங்களை கொச்சைப்படுத்துற மாறி இருக்கிறது என்று சொல்லி என் சித்தப்பா கதையை சொன்னேன். அவருதான் எங்கள் குடும்பத்துல முதல்ல படிச்சு ஆளானவரு. அரசு வேலையில் இருக்கிறார். நாங்க எவ்வளவு தான் சொல்லியும் எங்க ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமா இருக்காரு. ஏன்னா அவர் வந்தா இங்க யாரும் மதிக்க மாட்டார்கள். அவர் சொல்றது உண்மைதான். ஒரு பியூன் கூட மதிக்கமாட்டார். இதுக்குத்தான் சாதியை மறைச்சு  வெளியூருல வேலைசெய்கிறார்னு சொன்னேன்.  மேற்கொண்டு அரவிந்தன் சாரு ஒன்னும் சொல்லல.

அதற்கப்பறம் பெரியார் பத்தி பேசுனோம்.

அம்பேத்கர் படத்தை நீங்க போட்டிருக்கீங்க. உண்மைக்குமே சந்தோசமா இருக்கு. ஆனா அம்பேத்கரை நம்மளவிட பெரியார் இயக்கங்களும், வினவு தளம், கீற்றுல தான் அதிகமாக போடுறாங்கன்னு கேட்டேன்.

அதெல்லாம் ஏமாத்துற வேலை. ஈ.வெ.ரா -வை பெரியார்னு அழைக்கிறதும், பாபாசாகேப் அம்பேத்கரை வெறுமனே அம்பேத்கர்னு அழைப்பதும் திராவிட இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் செய்யுராங்க. நம்மளயும் ஏமாத்துராங்க. அதனால் ஈ.வெ,ரா ன்னு மட்டும் சொல்லுங்க என்றார். கீழ்வெண்மணியில் நம்மாள்களை கொன்ற போது பெரியார் அதை கண்டிக்கல தெரியுமான்னு சொல்லி ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்டவங்களுக்கு எதிரானவர்னு பேசினார்.

சாதிகளின் சங்கமம்
சாதிகளின் சங்கமம் இந்து ஆன்மீகம்

“பெரியாரையும் அம்பேத்கரையும் இணைச்சி பேசுறதே முதலில் தப்பு. நீங்க அம்பேத்கரையும், காஞ்சி சங்கராச்சாரியாரையும் சேத்து பேச முடியுமா? சங்கராச்சாரியார் ஒரு முட்டாள். அம்பேத்கர்தான் அறிவாளி. பல பட்டங்கள் பெற்றவர். இவங்களை இணை வெச்சி பேசமுடியுமா? அதுமாறி தான் ஈ.வெ.ராவும் அம்பேத்கரும். இவங்க ரெண்டுபேரையும் இணைச்சி பேசுறதே தப்பு”

“வீரமணி யாதவ சாதிக்காரர் பெரியார் திடலில் யாதவர்களுக்கு தான் முன்னுரிமை தெரியுமா? வினவு ஆசிரியர்குழுவில் எத்தனை தலித்துங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதை நடத்தற மாதையன் ஒரு ஐயர்னு உங்களுக்குத் தெரியுமா”ன்னு கேட்டார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனால் நம்மாள்களை போல அவுங்க ஜாதி பெருமையை வெளிப்படையா இங்க மாறி ஸ்டால் போட்டு சொல்லலியே”ன்னு சொன்னேன்.

“நாம என்ன தான் தி.க வை திட்டினாலும் கோவில் நுழைவு, அனைத்து சாதி அர்ச்சகர் என எல்லாத்துக்கும் திராவிட கட்சிங்கதான் முன்னணியில் இருக்கிறார்கள். கருணாநிதி தான் சட்டம் கொண்டுவந்தாரு”ன்னு சொன்னேன். உடனே அரவிந்தன் சார் குறுக்க பேசினார்.

“நம் வரலாறே நமக்கு தெரியவில்லை. இவங்கதான் எல்லாம் செஞ்சாங்கன்னா எம்.சி.ராஜா யாரு?, சகஜானந்தா யாரு? குஜராத்துல மோடிஜி அமைதியா பெரிய கோவிலுங்கள்ள கூட எல்லா ஜாதிக்காரங்களையும் அர்ச்சகரராக்கிட்டார் தெரியுமா” ன்னார்.

சகஜானந்தா யார்னு எனக்கு தெரியல. அவரிடம் கேட்டேன். தில்லை சிதம்பரம் கோவிலில் மடம் கட்டி அனைவருக்கும் கல்வி கொடுத்தவராம் அவரு தில்லைன்னு சொன்னதும் அங்கு கூட மனித உரிமை மையம்தான் கோவிலுக்குள்ள தமிழுக்காக போராடுனாங்கன்னு சொன்னேன்.

பிறகு மீண்டும் மத மாறுவது பத்தி பேசினோம்.

“நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு கோவிலை கட்டினார்கள். அதை எளிதாக அடுத்தவர்கள் கையில் விட்டுவிட்டு போகலாமா. உள்ளிருந்து கொண்டே போராட வேண்டும். இந்த கண்காட்சியில் அனைவரும் பாத்து பயப்படும் ஸ்டால் எது தெரியுமா இந்த ஸ்டால் தான். ஏன்னா நான் சாதியில்லைன்னு சொல்கிறேன். அதுவும் அவங்க விரும்பும் சாவர்க்கர் போன்ற இந்து இயக்க தலைவர்கள் சொன்னதை வைத்து சொல்றேன். ஈ.வெ.ரா மாதிரி வேறு யாரும் சொன்னதா சொன்னா அவங்க கவலைப்படமாட்டாங்க. உங்க சாவர்க்கர்தான்பா சொல்லியிருக்காருன்னு எடுத்து சொல்றேன்” என்றார்.

இந்திய வரலாற்று கழக தலைவர்
பண்டைய சாதிமுறை சரியாகத்தான் இயங்கியது – இந்திய வரலாற்று கழக தலைவர்
“ஆனா, துரதிர்ஷ்டவசமாக சூத்திரர்களும் தலித்துகளும் மார்க்சிய வரலாற்றை படிக்க ஆரம்பித்தனர்”

சில நிமிடங்கள் என்னை புத்தகம் படிக்க சொல்லிட்டு வெளியே போனார். திரும்பி வந்து “ நான் ஆர்.எஸ்.எஸ் காரங்கட்ட சொல்லிவிட்டேன். நீங்க கொங்கு கவுண்டர்களையும் வன்னியர்களையும் இந்து இயக்கத்துக்குள் கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல தலித்துகளை வெளியே தள்ளிகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிட்டு வந்தேன்” என்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவருங்க கிட்ட நெருக்கமான பழக்கம் இருக்கும் போல.

நாங்க பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். தஞ்சாவூர் இல்லேன்னா கும்பகோணத்துக்காரர்னு நினைக்கிறேன் அவர மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்னு அறிமுகம் செஞ்சார். அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் நான் வேண்டாம்னு சொல்லியும் எனக்கு ரசனா ஜூஸ் வாங்கி கொடுத்தார்.  “அம்பேத்கர் மேற்கோள்களை தமிழில் மொழிபெயர்த்து அதை விளக்குவதற்கு ஆட்களும் தருவதாகவும் அதை பள்ளிக்கூடங்களில் காட்சிக்கு வைக்க உதவி வேண்டும்”னும் அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அரவிந்தன் சார்.

பள்ளி மாணவர்களிடம் பேசும் அரவிந்தன் நீலகண்டன்

சிந்து நதி பாகிஸ்தானிடம் பறிபோனதற்கு இந்து வீரர்கள் வாங்கிய லஞ்சமே காரணமாம்!

வினவு அவர்களுக்கு,

இந்த கண்காட்சிக்கு ஏன்டா போனோம்னு ஆகிவிட்டது. போகாமல் இருந்திருந்தால் இந்து மதமும் இயக்கங்களும் சரியானவை என்று  கற்பனையிலாவது நிம்மதியா இருந்திருப்பேன். போனபிறகு ஜீரணிக்கவே முடியலை.

என்னை போல இன்னும் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து இயக்கங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு  சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.

“நம் சகோதரன் மனநோயால் பாதிக்கப்பட்டால் அப்படி விட்டுவிடுவோமா, அதனால் இடைநிலை ஜாதியினரை மாத்தணும். அதுக்கு மதத்தை கைவிடக் கூடாதுங்கிறது” தான் அவரோட கருத்து.

அவங்களை மாத்தி நமக்கு என்ன ஆகப்போகுது?  நமக்கு வேண்டியது தன்மானம். அது மதம் மாறினால்  கிடைக்கும்னா ஏன் மாறக்கூடாதுங்கிறது என்கருத்து.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள ஒருத்தர் தலித் சேம்பர் காமர்ஸ் ஆரம்பிச்சிருக்காருன்னும், அதுல தலித்துக்கள் பொருளாதார வலிமை உள்ளவங்களாகி அதுக்கு பின்னாடே நாமே இது மாதிறி பல கண்காட்சிகங்கள நடத்தலாம்னு அரவிந்தன் சார் சொன்னார்.

திரும்பும் போது “ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன். நீங்க சொன்ன விசயங்கள் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு” என்று அரவிந்தன் சார் வருத்தப்பட்டு சொன்னார்.

“உங்களுக்கே பான்பராக் பாக்கெட் அளவுக்கு தான் இடம் கொடுக்குறாங்க. பேசாம நீங்களும் என்னோடு மதம் மாறுங்க”ன்னு நான் சொன்னேன். அவர் மறுத்துட்டார். அரவிந்தன் சார் மாதிரி உள்ளவங்க எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் மறுக்கிறாங்கன்னு தெரியல.

அங்கிருந்து வந்தததுக்கு பிறகு எனக்கு குழப்பமாவே இருக்கு. நீங்க இந்து மதத்தை திட்டறீங்க. ஆனால் தருமபுரியிலேயே கலப்பு திருமணம் செஞ்சு வக்கிறீங்க. ஒரு வகையில இதுதான் இந்து ஒற்றுமையை உண்டாக்குற காரியம். ஆனால், இந்து ஒற்றுமைன்னு பேசுறவங்க சாதிக்கு ஒரு ஸ்டால் போடுறாங்க. சாதியை மறந்து ஒன்றுபட வைக்கிற உங்களைத் திட்டுறாங்க.

ஒரே குழப்பமா இருக்கு. இதை உங்களிடம் பகிர  வேண்டும் போல தோன்றியது. அதுக்குத்தான் இந்த நீண்ட லெட்டரை இமெயில்ல அனுப்புறேன்.

இப்படிக்கு
மனோஜ்குமார்

buffalo-lion

பின்குறிப்பு:

கடந்த திங்கட்கிழமை இந்த இளைஞர் தொலைபேசியில் எம்மைத் தொடர்பு கொண்டு மேற்கண்ட விசயங்களை சுருக்கமாக கூறினார். அவரது ஆன்மீகக் கண்காட்சி அனுபவத்தை முழுமையாக எழுதித்தருமாறு கோரினோம். அவரும் நான்கைந்து நாட்களுக்கு பிறகு எழுதி அனுப்பியிருக்கிறார். தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் அதிகார மட்டங்களை ஒரு மனிதன் புரிந்து கொள்வதும் கேள்வி கேட்பதும் எப்படி எதார்த்தமாக நடக்கிறது என்பதற்கு இந்த இளைஞனின் அனுபவம் ஒரு சான்று. இதுவே இந்தக் கடிதத்தின் வலிமை.

அவரது கடிதத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகள், பொருள் குறித்து பொருத்தமான பழைய கட்டுரைகளுக்கான இணைப்பை சேர்த்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் பற்றிய வினவின் கருத்து வாசகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்த கண்காட்சி குறித்து தனியே எழுதுகிறோம்.

மனோஜ்குமாரின் அனுபவம் குறித்த வாசகர்களின் கருத்து என்ன? மேற்படி கண்காட்சிக்கு யாராவது சென்றீர்களா, உங்கள் அனுபவம் என்ன? எழுதுங்கள்.

–    வினவு

சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !

2

பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் தரகு முதலாளிகளுக்குத் தெளிவானதொரு வாக்குறுதியை வழங்கியிருந்தது. குழப்பங்களுக்கு இடமில்லாத வகையிலும், திட்டங்களுக்கான அனுமதியை விரைந்து வழங்கும் வகையிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் வடிவமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “எனது அமைச்சகம் முட்டுக்கட்டை போடும் வேலையைச் செய்யாது” என்று இதனை மேலும் தெளிவுபடுத்தினார்.

பாரதீப் போஸ்கோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தென்கொரியாவைச் சேர்ந்த ஏகபோக நிறுவனமான போஸ்கோவின் இரும்பாலைத் திட்டத்திற்கு எதிராக ஒரிசாவின் பாரதீப் துறைமுக நகரில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கோரி யாரும் நேரில் வரத்தேவையில்லை என்றும், பெருந்திட்டங்களுக்கான அனுமதிக்கு “ஆன்லைன்” மூலம் விண்ணப்பித்தால் போதுமானது என்றும் அறிவித்தார் ஜவடேகர்.

“பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளை அகற்ற வேண்டும்” என்பது மோடியின் பத்துக் கட்டளைகளில் ஒன்றல்லவா? இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் தடைகளில் முக்கியமானது சுற்றுச்சூழல் அமைச்சகம் என்பது மோடியின் கருத்து.

மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்படி முட்டுக்கட்டை ஏதும் போட்டுவிடவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக, அரசே நிலப்பறிப்பில் இறங்கி விவசாயிகள், பழங்குடியினரை விரட்டியடித்தது. ஒவ்வொரு ‘வளர்ச்சி’த் திட்டத்தாலும் அழிவை நோக்கித் தள்ளப்பட்ட மக்கள் போராடினர். மக்களுடைய எதிர்ப்பின் காரணமாகத்தான், சில திட்டங்களுக்கு அனுமதி மறுக்கலவேண்டிய கட்டாயமும், பிரிட்டிஷ் ஆட்சி இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்த வேண்டிய கட்டாயமும் மன்மோகன் அரசுக்கு ஏற்பட்டது.

இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், காங்கிரசு ஆட்சியின் கீழ் 6 இலட்சம் ஹெக்டேர் காடுகள் சுரங்கங்களுக்காகவும், பிற தொழில்களுக்காகவும் அழிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 7,90,000 ஹெக்டேர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறியிருக்கின்றன. சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டித் தாமதமாக்குகிறார் என்று தரகு முதலாளிகளால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உடனே அகற்றப்பட்டு, வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே ரூ 75 ஆயிரம் கோடி போஸ்கோ திட்டம் உள்ளிட்ட ரூ 2.4 இலட்சம் கோடி பெறுமானமுள்ள திட்டங்களுக்கு விதிகளைப் புறக்கணித்து அனுமதி தந்தார். மன்மோகன் சிங்கோ, ரூ 500 கோடி வரையிலான திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்றும் ரூ 1000 கோடி வரையிலான திட்டங்களுக்கு மாநில அரசுகளே அனுமதியளிக்கலாம் என்றும், கட்டிடங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்றும் அடுக்கடுக்கான உத்தரவுகளை 2012-13-ம் ஆண்டுகளில் பிறப்பித்தார்.

வேதாந்தா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக ஒரிசாவில் நியாம்கிரி பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இவையும் போதாதென்று கருதிய தரகு முதலாளிகள் மன்மோகன் அரசு செய்யலின்மையில் விழுந்து விட்டதாகச் சாடினர். தாங்கள் விரும்பிய வளங்களை விரும்பிய வண்ணம் சூறையாடுவதற்கு எந்தவிதமான சட்டத்தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கோரிக்கை. முதலாளி வர்க்கத்தின் இந்தக் கோரிக்கையைத்தான் பாரதிய ஜனதா தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே வழிமொழிந்திருந்தது.

சுற்றுச்சூழல் சட்டங்கள், மத்திய, மாநில அமைச்சகங்கள், இவ்வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் இதற்கென தனி ஆயம் ஆகியவையெல்லாம் இருக்கின்ற சூழலிலேயே, உலகின் மிகவும் மாசடைந்த 20 நகரங்களில் 13 இந்தியாவில்தான் இருக்கின்றன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவு நீர்க் கால்வாகளாகியிருக்கின்றன. நீர்வளம் அற்றுப்போனதால், 60 பேருக்கு ஒன்று என்ற கணக்கில் நாடு முழுவதும் 2.1 கோடி ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அழிவின் பொருளாதார மதிப்பு இந்தியாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 5.7% என்று மதிப்பிடுகிறது உலகவங்கி. மோடி அரசு சாதிக்க விரும்பும் வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் இந்த அழிவின் வீதம்தான் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச்சூழல் பகுதியும், 58 ஆறுகள் உற்பத்தியாகும் இடமும், இந்தியாவின் நுரையீரல் என்று கூறத்தக்க 1,64,280 சதுர கி.மீ. வனப்பகுதியுமான மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 75% கடந்த 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. மழைப்பொழிவின்மை, தண்ணீர்ப் பஞ்சம் உள்ளிட்ட மிகப்பெரும் பேரழிவை இது தோற்றுவித்திருப்பதால், இந்த வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட காட்கில் குழு, 64% வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டுமென சிபாரிசு செய்தது. அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு குறைந்த பட்சம் 37% வனப்பகுதியையாவது அவ்வாறு அறிவிக்கவேண்டுமெனக் கூறியது. ஆனால், கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையே தொழில் வளர்ச்சிக்கு எதிரானது என்றும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் அதனை ரத்து செய்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுரங்கத்தொழிலுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அறிவித்தார்.

நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்க நிறுவனங்கள், சாலைகள் மற்றும் துறைமுகக் கட்டுமானப் பணி நிறுவனங்கள், தனியார் மின் நிலையங்கள் போன்றவற்றின் உரிமையாளர்களான தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் சுற்றுச்சூழல் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது. சூழல் விதிகளை மீறுவதற்கான கள்ளச்சாவியை மன்மோகன்சிங் முதலாளிகளின் கையில் கொடுத்தார் என்ற போதிலும் அவர்கள் திருப்தி அடைந்திடவில்லை. ‘கதவையும் பிடுங்கி எறிய வேண்டும்’ என்பதே அவர்கள் கோரிக்கை.

இதனை குஜராத்தில் செய்து காட்டிய மோடி, தனது உத்தியை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்துகிறார். வனங்கள் என்பதற்கான வரையறை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதென தரகு முதலாளிகள் கருதுவதால் காடுகளுக்கான வரையறையையே திருத்துகிறது மோடி அரசு. காடுகளை மதிப்பிடுவதற்கு 6 அளவுகோல்களைத் தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் பயன்படுத்துகிறது. காட்டின் தன்மை, அதன் உயிரியல் வளம், வன விலங்குகள், காட்டின் அடர்த்தி, நிலத்தின் தன்மை, அதன் நீர்வள மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான், வனப்பகுதியில் சுரங்கத்தொழிலை அனுமதிப்பது அல்லது மறுப்பது என்பதை அரசு செய்கிறது. இந்த 6 அளவுகோல்களிலிருந்து காட்டின் அடர்த்தி மற்றும் அதன் உயிரியல் வளம் என்ற இரு அளவுகோல்களையும் நீக்கி விட்டு, மீதமுள்ள நான்கு அளவுகோல்கள் அடிப்படையில் வனப்பகுதியை வரையறுப்பதற்கான விதிகளை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, காட்டின் மொத்தப் பரப்பையும் கணக்கிடாமல், நாடு முழுவதையும் ஒரு சதுர கி.மீ கொண்ட சதுரங்களாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றையும் காடா இல்லையா என்று மதிப்பிடலாம் என புதிய வரையறை உருவாக்கப்படுகிறது. இதன்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை ‘காடு அல்ல’ என வகைப்படுத்தி, அதனை ‘வளர்ச்சி’த் திட்டத்துக்கு வழங்கிவிட முடியும்.

ஒருபுறம் சுற்றுச்சூழல் விதிகளின் மீது மோடி அரசு தாக்குதல் தொடுக்க, இன்னொருபுறம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘வளர்ச்சி’க்கு இடையூறாக உள்ள போராடும் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகளையும் ஒடுக்க ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாகக் கூறுகிறார். ஜனநாயகத்தை வழங்குகிறோம் என்ற பெயரில், இராக்கின் எண்ணெய் வளத்தைச் சூறையாடுவதற்காகப் படையெடுத்த அமெரிக்காவுக்கும், வளர்ச்சியை வழங்குகிறோம் என்று கூறிக்கொண்டு இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்காக உள்நாட்டு மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி அரசுக்கும் என்ன வேறுபாடு?

– அன்பு
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

பாதிக்கப்பட்டோர் மன்னிக்கட்டும், பாவிகள் பாவம் செய்யட்டும்

3

பாதிரிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. போப்பாண்டவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களும் அதற்கான ஆதாரங்களும் வாடிகனிலேயே இருக்கின்றன. மனிதன் தனக்கான துணையை தேடுவதும், பாலியல் நாட்டமும் இயல்பானது மற்றும் தவிர்க்க இயலாதது என அறிவியல் சொல்கிறது. பாதிரியாருக்கு படிக்கும் ஆட்களில் பாதிபேர் இடையிலேயே இறையியல் படிப்பை விட்டு ஓடுகிறார்கள், காரணம் குடும்ப வாழ்வின் மீதான நாட்டம். ஏராளமான விடயங்களில் திருச்சபை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இன்னமும் ஏன் திருச்சபைகள் பிரம்மச்சர்யத்தை வலியுறுத்துகின்றன? திருமணத்தை நீங்கள் அனுமதிக்கும்பட்சத்தில் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுக்களை ஓரளவு தவிர்க்கலாமில்லையா?

கத்தோலிக்க ஒழுக்க அறம்
கத்தோலிக்க ஒழுக்க அறம் (படம் : நன்றி cartoonmovement.com )

மேலேயுள்ள நீண்ட கேள்வியை சில மாதங்களுக்கு முன்னால் சந்தித்த பாதிரியார் ஒருவரிடம் கேட்டேன். அவர் ஐரோப்பிய நாடுகளில் படித்தவர், மூன்று கண்டங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். அதற்கு இப்படி சுருக்கமாக பதில் சொன்னார், “பிரம்மச்சர்யத்தை கட்டாயமாக்கினால் பாலியல் குற்றங்கள் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனை சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால் திருமணத்தை அனுமதித்தால் தேவாலயங்கள் பாதிரிகளின் தனியுடமையாகும் வாய்ப்பு அதிகம். இது சபையின் அடித்தளத்தையே குலைத்துவிடும். ஆகவே பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் எனும் நடைமுறையே திருச்சபையின் நன்மைக்கு உகந்தது (இதே கேள்வியை வேறொரு கத்தோலிக்க நண்பரிடம் கேட்ட நிமிடத்திலேயே நட்புக்கு ஃபத்வா போட்டுவிட்டு போய்விட்டார்.)

ஒப்பீட்டளவில் மேற்சொன்ன பாதிரியாரின் பதில் நேர்மையானது. இந்த பதிலின் வாயிலாக நாம் சில உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும். முதலாவது, கிருஸ்துவ இறை பணியாளர்கள் மத்தியில் உள்ள பாலியல் குற்றங்களை வாடிகன் நன்கறிந்திருக்கிறது, அதனை தெரிந்தேதான் அனுமதிக்கிறது. இரண்டாவதாக அறிவியல், யதார்த்தம் என்பதைத் தாண்டி தேவாலயம் எனும் சொத்தைப் பாதுகாப்பதன் மூலமே தங்கள் மதத்தை பாதுகாக்க இயலும் என திருச்சபை நிர்வாகம் கருதுகிறது. அந்த சொத்தைப் பாதுகாப்பிற்காக தமது பக்தர்கள் பாதிக்கப்படுவதையும் சபை கண்டுகொள்ளாது.

கோவணத்தை இறுக்கி கட்டினால்தான் கருவூலத்தை பத்திரமாக காப்பாற்ற முடியும் என்று தேவனும், திருச்சபையும் கூடிப்பேசியோ இல்லை பார்த்து பட்டோ இப்படி முடிவு செய்திருக்கலாம். ஆனால் ஃபைனான்சைக் காப்பாற்ற செக்சுக்கு தடை எனும் இந்த முடிவை, “செக்சுக்கு மட்டும் அனுமதி, ஃபேமிலிக்கு இல்லை” என்று மாற்றினால் திருச்சபை மானம் மீளுமா? உடனே குடும்பம் இல்லாமல் பாலியல் உறவு எப்படி சாத்தியமென்றால் நம்மைப் போன்ற ‘ஒழுக்கவாதிகளிடம்’ பதில் இல்லை. போகட்டும் துறைசார் வல்லுநர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே ஐயா?

சுதந்திரப் பாலுறவு பேசும் பின் நவீனத்துவ பிதாமகன்கள் பலர் அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை பேச மேடையில்லாமல் தவிக்கிறார்களே, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாமே?  ஆனால் ஒன்று, சொத்துடைமை குறித்த உறவுகள்தான் இந்த உலகின் பண்பாட்டு கட்டமைப்பை உருவாக்குகிறது என்று கம்யூனிஸ்டுகள் சொல்வதற்கு இப்படி ஒரு ‘சான்று’ காட்டுவது கொஞ்சம் ‘சரியில்லை’ என்றாலும் பரிசீலியுங்கள்.

சென்ற வாரத்தில் போப் பிரான்சிஸ் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆறு சிறார்களை சந்தித்திருக்கிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் லா ரிபப்ளிகா எனும் இத்தாலிய தினசரி பத்திரிக்கைக்கு தந்த நேர்காணலில் ”இரண்டு சதவிகித பாதிரிகள் சிறார்களோடு உறவு கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்” என குறிப்பிட்டிருக்கிறார் (இது பிஷப்புகளையும் கார்டினல்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கை, ஆனால் இத்தகைய அத்துமீறல் செய்யும் நபர்கள் மீதான நடவடிக்கை பற்றி பிரான்சிஸ் எதையும் குறிப்பிடவில்லை). இதற்கு முன்பும் ஒருமுறை ஏழை பணக்கார பாகுபாடு கடுமையாக அதிகரிப்பதை கண்டிக்கும் விதமாக பிரான்சிஸ் பேசியிருக்கிறார். அவரை கம்யூனிஸ்ட் போப் என சில ஊடகங்கள் வர்ணித்த கதையும் நடந்தது. போப் பிரான்சிஸின் இத்தகைய நடவடிக்கைகள் பார்க்கையில் வாடிகன் ஒரு புரட்சிகரமான மாற்றத்துக்கு தயாராவதைப்போல தோன்றலாம்.

போப் - பாலியல்

ஆனால் மதங்களின் வரலாறு இது அவர்களின் உயிர் பிழைக்கும் உபாயம் என்பதற்கான நிரூபணங்களைக் கொண்டிருக்கிறது. கிருஸ்துவத்தின் சமீபத்தைய ‘கலகப்’பிரிவான பெந்தகொஸ்தே 1930-களில் அமெரிக்காவில் உருவான பொருளாதார பெருமந்தத்தின்போது உருவாக்கப்பட்டது.

ராயல் கத்தோலிக்கப் பிரிவில் திருச்சபை எனும் மத நிறுவனம் வலுவானது மற்றும் அதிமுக்கியமானது, அங்கே இயேசுகூட இரண்டாம்பட்சமே. இன்னொரு பிரிவான சி.எஸ்.ஐ அத்தனை இறுக்கமான திருச்சபையை கொண்டதல்ல, ஆனால் அங்கும் சர்ச்சின் கட்டுப்பாடு என்பது உண்டு. 1930 பொருளாதார நெருக்கடியின்போது இவ்விரண்டு பிரிவுகள் போதுமானதாக இல்லை.

அப்போது உலகில் மிகவேகமாக வேர்விட்ட கம்யூனிசத்தின் பக்கம் மக்கள் சென்றுவிடாமல் தடுக்க இன்னும் எளிமையான கட்டுப்பாடுகளற்ற ஒரு பிரிவு தேவைப்பட்டது. அதற்காக இறக்கிவிடப்பட்டதுதான் நாம் இப்போது அல்லேலூயா கோஷ்டி என குறிப்பிடும் பெந்தகோஸ்தே பிரிவினர். 1930 நெருக்கடியின் போது அமெரிக்காவில் ஒருபுறம் கோதுமையை கடலில் கொட்டிய முதலாளிகள் மறுபுறம் கஞ்சித் தொட்டிகளை திறந்த கையோடு, ஆமென் ஆசிர்வாதத்திற்கு பெந்தகோஸ்தேக்களை பயன்படுத்தினர். ஆத்திரம் அடைந்த மக்களை டாஸ்மாக் இல்லாமலே போதையேற்றி சாந்தி கொடுப்பதில் பெந்தகோஸ்தேக்கள் வல்லவர்கள். இதனாலேயே இந்த ‘கலகப்’பிரிவு மீது பாரம்பரிய திருச்சபைகள் கடும் வெறுப்பில் உள்ளன.

அல்லேலுயாவில் தேவாலயத்துக்கோ, பிரார்த்தனைக்கோ எவ்விதமான வரையறையும் கிடையாது. நீங்கள் திருச்சபையை நிராகரிக்கிறீர்களா, பரவாயில்லை அங்கே பிரார்த்தனையை தொடரலாம் (ஆர்.சியில் அது சாத்தியமில்லை). நீங்கள் பைபிளை குப்பை என்கிறீர்களா, அதனாலொன்றும் தோஷமில்லை, நீ கடவுளை நம்பு, பைபிள் வெறும் கருவிதான் என்பார்கள். இதில் சர்ச் ஆரம்பிப்பது பெட்டிக்கடை ஆரம்பிப்பதைவிட சுலபம். நீங்கள் விரும்பும் வகையிலான எல்லா ஆப்ஷன்களும் இங்கே கிடைக்கும் ஆனால் நீ கடவுளை கைவிட்டுவிடாதே என்பதுதான் கிருஸ்துவம் தனது உட்பிரிவுகள் மூலம் சொல்லும் செய்தி.

மதத்தை விட்டு மக்கள் வெளியேறிவிடாமல் இருக்க மதம் எத்தகைய சமரசத்துக்கும் இறங்கிவரும். எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆடு, மாடு, குதிரை என சகல ஜந்துக்களையும் வளைத்து வளைத்து சாப்பிட்ட ஆரிய மதம் (சமகால வழக்கின்படி இந்து மதம்) பவுத்த மற்றும் சமண மதங்களோடு போட்டிபோட இயலாமலும் கால்நடைகளை பறிகொடுத்த மக்கள் குழுக்களின் கலகங்களினாலும் புலாலுண்ணாமை எனும் கொள்கையை சுவீகரித்துக் கொண்டது அல்லது  சுவீகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. புலாலுண்ணாமையை வலியுறுத்திய புத்தமதம் சீனா போன்ற நாடுகளில் அதனை கைவிட்டுவிட்டது, அங்கே சாப்பாட்டில் ஒதுக்கப்படும் ஜீவராசி என்று அனேகமாக ஏதுமில்லை.

கடவுளாலும் கட்டுப்பாடுகளாலும் இனி தாழ்த்தப்பட்ட மக்களை பிடித்துவைக்க முடியாதோ எனும் சந்தேகம் வந்தபிறகு சங்கராச்சாரி சேரிகளில் உள்ள கோயில்களுக்கு பயணம் போகிறார் (ஆனால் யாரும் தொட்டுவிடாதபடி கால்கள் போர்வைகொண்டு மூடப்பட்டது, குளிச்சிட்டு கோயிலுக்கு வாங்கோ எனும் எகத்தாள அருள்வாக்கு தரப்பட்டது). உலகெங்கிலும் இஸ்லாமிய மதத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் தர்கா எனும் சமாதி வழிபாடு தமிழக இசுலாமியர்களிடையேயும் இருக்கிறது. அதனை தவ்ஹீத் ஜமாத் போன்ற வகாபியிச மதவாதிகள் எதிர்க்கிறார்கள்.

முன்பு நிலப்பிரபுத்துவம் மதங்களுக்கு சோறூட்டி வளர்த்தது, அதற்கு பதிலாக மக்களிடமிருந்து நிலபிரபுக்களை மதம் முடிந்த மட்டும் காப்பாற்றியது. இப்போது நிலப்பிரபுக்களின் இடத்தை பெருமுதலாளிகள் நிரப்புகிறார்கள். மக்களைப் பிரித்து வைப்பதன் வாயிலாக செல்வந்தர்களை பாதுகாப்பாக வைப்பதுதான் மதத்தின் பணி. அதனால்தான் எல்லா மதங்களும் பெண்களை இரண்டாந்தர மனிதர்களாக அல்லது அதனினும் கீழாக நடத்துகின்றன. அதன்வாயிலாக மக்கள் பலத்தை சரிபாதியாக குறைக்க இயலும். பெண்கள் பங்கேற்பற்ற சமூகம் ஒரு மலட்டு சமூகமாக, முட்டாள் சமூகமாகவே இருக்கும். பெண்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்தியா மற்றும் அரபு தேசங்கள் அதற்கான வாழும் உதாரணங்கள்.

சிலுவைப்போரில் தொடங்கி இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பா தொலைத்த ஆண்கள் எண்ணிக்கை கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அதிகம். அதனால் சமூகத்தில் ஆண்களது பங்கு பல நூற்றாண்டுகளுக்கு மோசமாகி அங்கே பெண்களது சமூகப்பங்கேற்பு என்பது தவிர்க்க இயலாததானது. இன்று ஒப்பீட்டளவில் ஐரோப்பிய சமூகம் முன்னேறியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமென்று சமூக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் என்றால் என்னவென்றே அறியாத பழங்குடி மக்கள் குழுக்கள் பல பாலியல் சமத்துவ பண்பாட்டில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இடத்துக்கு தக்கவாறு பல்வேறு வழிகளில் மதம் மக்களை பிரித்து வைக்கிறது.

பிரார்த்தனை என்பதே கையாலாகாத்தனத்தின் நாசூக்கான வெளிப்பாடுதான். அதனால்தான் ஒரு கடவுளை நம்பி ஏமாறும் ஒரு இந்து அந்த கடவுளின் இருப்பை சந்தேகிக்காமல் இன்னொரு கடவுளை தேடுகிறான். எல்லா முக்கியமான செயலுக்கு முன்பும் ”எனக்காக பிரார்த்தனை செய்” என ஆகப்பெரும்பாலான கிருஸ்துவர்கள் தங்கள் நலன்விரும்பிகளிடம் கோரிக்கை வைக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பான இசுலாமியர்களின் நிலைத்தகவல்களைப் பாருங்கள், அனேகமாக அவை இஸ்ரேலை இறைவன் தண்டிப்பான் என்பதாகவே இருக்கும்.

நாகரீகமடைந்த மனிதனை காட்டுமிராண்டியாக்கும் வல்லமை மதத்துக்கும் பணத்துக்கும் மட்டுமே உண்டு (மிக அரிதாக உருவாகும் ஆண்ட்டி-சோஷியல் எனும் மனநல குறைபாடு கொண்டவர்கள் காட்டுமிராண்டியாக நடந்து கொள்வார்கள்). உலகில் அதிக கொலைகளுக்கு காரணமாக மதம் மட்டுமே இருந்திருக்கிறது, இருக்கிறது. கடவுளும் மதமும் முற்றிலுமாக மக்களுக்கு விரோதமானவை. போப்பாண்டவரின் மன்னிப்பைப் போன்ற பாசாங்குகளால் அதனை மாற்றிவிட இயலாது. குற்றத்துக்கான பரிகாரமும் குற்றவாளிக்கான தண்டனையும் தரப்படாமல் கேட்கப்படும் வெறும் மன்னிப்பானது பாதிக்கப்படும் நபர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு அநீதி. அதனை வாடிகன் தொடர்ந்து செய்யும்.

ஆகவே மதத்துக்குள் புரட்சி செய்து அதன் அநியாயங்களைக் களைவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால் புரட்சி செய்து மதத்தைக் களைவது நிச்சயம் சாத்தியம்.

–    வில்லவன்.

ஏழாம் ஆண்டில் வினவு !

120

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” – குறள் (647)

2008-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் வினவு தளம் ஒரு தனிநபர் வலைப்பூவாய் துவங்கியது. ஆறாண்டுகளுக்கு பிறகு அந்த பூச்செடி ஒரு பெரும் கூட்டுறவு பூந்தோட்ட பண்ணையாக வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது. துவங்கிய நாளின் முந்தைய நாள் மாலை என்ன பெயர் வைக்கலாம் என்று சில தோழர்கள் ஆளுக்கொரு தமிழ் இலக்கிய நூல்களை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த குறளை விவாதித்தது நினைவுக்கு வருகிறது. இன்று ஏழாம் ஆண்டு துவக்கத்தில் அந்தக் குறளின் பொருளை இன்னும் விரிவாக விளங்கிக் கொண்டோம் என்று சொல்லலாமா?

டி.பி.ஐ முற்றுகை
சென்னை பள்ளிக் கல்வி இயக்குனரகம், புமாஇமு முற்றுகையில் ஒரு இளம் தோழர்.

தான் கண்டடைந்த முடிவுகளை எதிரியும் ஏற்கும் வண்ணம் அஞ்சாமல் பேராற்றலுடன் எடுத்துரைப்பவனை எவராலும் வெல்ல முடியாது என்பது இந்தக் குறளின் பொருள்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளை எமது தோழர்கள் பேருந்து, ரயில்களில் தனியாக நின்று கொண்டு பிரச்சாரம் செய்து விற்பனை செய்யும் போது மக்கள் வரவேற்பதோ, இல்லை ஒரு பிரமிப்புடன் பார்ப்பதோ இந்தக் குறளுக்கு பொருந்தி வரும் என்றார் ஒரு தோழர். உண்மைதான்.

இதழ் விற்பனைக்கு போகும் தோழர்கள் ஓரிருவர் கொண்ட அணியாக தனியாகத்தான் போகின்றனர். வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அதிமுக, ஆர்.எஸ்.எஸ் அடாவடி துவங்கி பல்வேறு அரசியல் கருத்து மாறுபாடுகள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் எமது பத்திரிகைகளை போராடி விற்பது ஒரு சவால். ஒருக்கால் சண்டை சச்சரவு வரும் போது கூடியிருக்கும் மக்களின் துணை கொண்டே அதை எதிர் கொள்ள வேண்டும். ஃபோனைப் போட்டு ஆளனுப்பு எனும் ‘பாதுகாப்பு’ நடைமுறைகளெல்லாம் இங்கே கிடையாது. அல்லது சாத்தியமில்லை சரியுமில்லை. அநேகமாக எல்லா தோழர்களும் இந்த எதிர் நீச்சலில் போராடி பயிற்சி பெறுவர். குறிப்பிட்ட காலத்தில் மறுகரையை அடையும் ஆற்றல் பெறும் போது அவரால் ஏனைய பணிகள் எதையும் முனைப்புடனும், போராட்ட உறுதியுடனும் செய்ய முடியும்.

எதிரெதிர் அரசியல் கருத்துக்களால் சூழப்பட்ட மக்களிடையே நீந்துவது ஒரு கலை. குறிப்பிட்ட காலத்தில் தனியாக நீந்தும் ஒருவர், தோழமைக் கரங்கள் பலவற்றை பெறும் போது மட்டுமே அந்த நீச்சல், சமூகத்தின் உயிர் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை பெறுகிறது. சிலர் இப்படிக் கருதிக் கொள்கிறார்கள் “உங்களுக்கு இருபெரும் பத்திரிகைகள் இருக்கின்றன, தமிழகம் முழுவதும் வரவேற்பு பெற்ற கலைக்குழு உள்ளது, பிரபலமான இணைய தளமெல்லாம் வைத்திருக்கையில் பிரச்சாரம் சுலபம்தானே?”.

ஆனால் இவையெல்லாம் ஏதோ எங்களுக்கு மட்டும் ‘இறைவன்’ அருளியதா என்ன? அல்லது எங்களது முன்னோர்கள் இதற்கான ஏற்பாடுகளை உயில் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்களா? அவ்வளவு வசதியா எங்களுக்கிருக்கிறது?

ரசியப் புரட்சியோ, சீனப்புரட்சியோ இல்லை நக்சல்பாரி எழுச்சியோ நால்வகைப் படைகளுடன், நால்வகை ஜனநாயகத் தூண்களின் ஏற்பாட்டுடன் நடக்கவில்லை. சரியாகச் சொன்னால் பூஜ்ஜியத்திலிருந்தே எதிர்ப்பை ஆரம்பித்தன. அதுதான் விதிக்கப்பட்ட யதார்த்தம். அந்த விதியை உடைத்து பூஜ்ஜியத்தின் முன் மக்களை அணிசேர்த்து எண்ணிக்கையில் விரிந்து ஆரம்பத்தில் படிப்படியாகவும் இடையில் சீறியும் இறுதியில் புரட்சி எனும் அதிகாரம் பறிக்கப்படுகிறது. நிலையான இராணுவத்தை நிலைகுலைய வைக்கவே கொரில்லா யுத்தம். ஆளும் வர்க்க ஊடகங்களை எதிர் கொள்ள துண்டுப் பிரசுரம். கலை விற்பன்னர்களின் வலையிலிருந்து மக்களை மீட்க தெருவோரத்தில் பறை. கார்ப்பரேட் தொலைக்காட்சிகளின் கருத்துருவாக்கத்தை கட்டுடைக்க மக்களிடையே நேரடியாக விற்கப்படும் பத்திரிகைகள். இணையத்தில் வினவு.

appleநவீன ஆர்க்கெஸ்ட்ராவுடன், முதல் வரிசைக் கலைஞர்களுடன், ஆஸ்கார் விருது வாங்கிய ஒரு இசையமைப்பாளரின் ‘வந்தே மாதரத்தை’ எதிர் கொள்ள என்ன செய்வது? ஆதிக்க சாதிகளின் ஊரில் கூட்ட அழைப்பிற்கும், மரண அறிவித்தலுக்கும் தண்டோரா போடும் சேரிமகனின் பறையே போதும்! இனி அது அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் மக்களின் பறை. “வெட்டரிவாளை எடடா, ரத்தம் கொதிக்குதடா, இந்த சட்டமும் சர்க்காரும் தடுத்தால் வெட்டி எறிந்திடடா” என்ற பாடலை கூடியிருக்கும் மக்களிடையே போர்க்குணத்துடன் பாடும் போது எதிர்கால சமூகப் பேரிசையின் நாதத்தை சிறு துளியாவது உணர்த்த முடியாதா என்ன?

ஒரு கம்யூனைப் போன்று எளிய முறையில் கூட்டு வாழ்க்கை வாழும் எமது கலைக்குழுத் தோழர்கள் இப்படித்தான் தமிழகமெங்கும் புரட்சியின் இசையை வெறும் பறையால் பாடி வருகின்றனர். தோழர்களோ, தொடர்புகளோ இல்லாத கிராமங்கள் பலவற்றுக்கும் அவர்கள் செல்கிறார்கள். கையிலிருக்கும் பறை, நெஞ்சிலிருக்கும் கோபத்தை அரசியல் பார்வையுடன் பாடுகிறார்கள், பேசுகிறார்கள். அதுவே அறியாத ஊர்களில் தொடர்புகளை தருகின்றது. தங்குமிடம், உணவு கொடுத்து மக்கள் ஆதரிக்கிறார்கள்.

கன்னியாகுமரி கடலோர கிராமங்களா, ஆர்.எஸ்.எஸ் அச்சுறுத்தும் நாகர்கோவில் பேருந்து நிலையமா, வைகுண்டராஜன் அடியாட்படை நிரம்பிய தூத்துக்குடி மணற்திட்டு கிராமங்களா, ஆதிக்க சாதிவெறி ஆத்திரத்துடன் காத்திருக்கும் ஊர்களா, இல்லை கருத்துரிமைக்கு சமாதி கட்டிவிட்டு அடக்குமுறையுடன் ஆட்டம் போடும் கோவை, தருமபுரி மாவட்டங்களா அனைத்திலும் எண்ணிறந்த தோழர்கள் தங்கி எப்போதும் பிரச்சாரம் செய்கின்றனர்.

அடிதடி, கைது, சிறை இல்லாமல் இந்த போராட்டம் சாத்தியமில்லை. வினவில் ஆண்டு விழாவிற்காக எழுதும் இந்நேரம் மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் தோழர் ஒருவர் காலையில் அளிக்கப்படும் பருப்பில்லா சுத்தமான வெண் பொங்கலை அருந்தி முடித்திருப்பார். வர்க்கப் போராட்டத்தின் உறுதி சிறையிலும் தொடர்கிறது. கரூரிலே ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ரவுடி கும்பலை எதிர்த்து போராடியதில் தோழர் செல்வராசு உயிரிழந்தார். தஞ்சையிலே சாராய ரவுடியை எதிர்த்து நின்றமைக்காக ஒரு தோழர் உயிரிழந்திருக்கிறார். இன்னும் பல தோழர்கள் அப்படி தியாகம் செய்தும், வாழ்க்கையை இழந்தும் இந்த போராட்டப்பாதையை செந்நீரால் கழுவிக் கொண்டே இருக்கிறார்கள். புரட்சி நிறைவேறும் வரை இது முடிவற்ற பயணம். தொடர் தியாகங்களை கேட்கும் பலிதானம்.

தாது மணல் கொள்ளை
தாது மணல் கொள்ளைக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் மற்றுமொரு இளம் தோழர்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஒரு மாணவனின் மர்மமான மரணத்தை தட்டிக் கேட்ட ‘குற்றத்திற்காக’ காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலென்ன்? இறந்து போன அந்த மாணவனுக்கு நீதி கேட்டு சிறையிலும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சிறையில் வேறு போராட்ட முறைகள் சாத்தியமில்லை.

ஒரு போலீசின் அடாவடியை எதிர்த்த ‘குற்றத்திற்காக’ சென்னை புமாஇமு-வின் இளந் தோழர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். ஜேப்பியார் கல்லூரியில் சங்கம் கட்டி தொழிலாளிகளின் சுயமரியாதைக்காக போராடிய தோழர் வெற்றிவேல் செழியன் வழக்கு போட்டு எதிர்த்தமைக்காக சிறை செல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் பல தோழர்கள் அப்படி நடைமுறை போராட்டத்திற்காக வருடத்தின் சில நாட்களையாவது கம்பிகளுக்கு பின்னே கழிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுகள் பலவானாலும் வழக்குகளுக்காக வாய்தாவின் பெயரில் அலைக்கழிய வேண்டியிருக்கிறது.

அரசியல் வாழ்வில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் இதன் பாதிப்பை எதிர் கொள்ள வேண்டும். வேலையிழப்பு, பொருளாதார பிரச்சினைகள், குடும்பத்தினர் எதிர்ப்பு அனைத்தும் ஒரு சேர படையெடுக்கும். எனினும் உழைக்கும் வர்க்கத்தின் இழப்பிற்கு அஞ்சா உறுதியுடன் தோழர்கள் அதை சந்தித்து வெல்கிறார்கள்.

இந்த போராட்டத்தை எப்படி வெல்வது என்பது ஒரு தேர்ந்த உயர்கல்வி படிப்பின் தெளிவான பாடத்திட்டம் போன்றதல்ல. ஆராய்ச்சி மாணவர்களுக்கு முதலாளித்துவ கல்வியின் தேர்ச்சியுடன் வழிகாட்ட முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் இருக்கிறார்கள். மனித குலம் சேகரித்து பாதுகாக்கும் துறைசார் அறிவுத்துறையின் பிரம்மாண்ட நூலகம் அவர்களுக்கிருக்கிறது. அவர்களை முனைப்புடன் இயங்க வைக்க எதிர்கால கார்ப்பரேட் கனவு இல்ல வாழ்க்கை காத்திருக்கிறது.

எங்களுக்கோ மார்க்சியத்தை கற்றுக்கொடுத்து, மக்களிடையே நீந்த பயிற்சி அளித்து வழிகாட்டவும், எப்போதும் துணையோடும் தோழமையோடும் போராட்ட வலியை பகிர்ந்து கொள்ளவும், மருந்து போடவும், தவறுகளை திருத்துவதற்கும் அனுபவமிக்க தோழர்கள் இருக்கிறார்கள், மார்க்சிய லெனினிய தத்துவத்தில் புடம்போடப்பட்ட புரட்சிகர அமைப்பு இருக்கிறது. எனினும் இங்கே இழப்புக்களை எதிர் கொண்டு தொடர்ந்து சாகும் வரை ஒரு கம்யூனிஸ்ட்டாக நீடிப்பது என்பதற்கு ஒரு தனிமனிதனாகவும் இறுதிவரை போரட வேண்டியிருக்கிறது. அது ஒவ்வொரு தோழரும் தனது புரட்சிப் பயணம் குறித்து எழுதிக் கடக்கும் ஒரு கவிதை போலவும் சொல்லலாம். கலைகளில் இசை சூக்குமமானது என்றால் புரட்சியின் இசையோ சூக்குமங்களின் தலைவன்.

சென்னை சேத்துப்பட்டில் ஒரு தோழர், அங்கே ஆதிக்கம் செய்து தற்போது அடங்கியிருக்கும் ரவுடி தங்கையாவை எதிர் கொண்டு போராடிய வழக்கின் வாய்தாவிற்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்று வருகிறார். வாய்தாவுக்காக விடுப்பு எடுத்தாக வேண்டும். அமைப்பு வேலைகளுக்காகவும் அவ்வப்போது விடுப்பு எடுத்தாக வேண்டும். இதற்காக அவரை பணியலமர்த்தியிருக்கும் முதலாளியோடு வரும் பிரச்சினையை எப்படி எதிர் கொள்வது?

மாவோ
குழந்தைகளுடன் மாவோ

ஒரு தோழர் எலக்ட்ரிசியனாக மாத வேலை பார்த்தவர், வேலைகளுக்காக விடுமுறை போடவேண்டி வருகிறது என்று அதைத் துறந்து தினக்கூலியாக சென்று வருகிறார். இயக்க வேலைகள் வந்தால் வேலைக்கு விடுமுறை. வருமானத்திற்கும் விடுமுறை. வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றும் ஒருதோழர் சுமை தூக்கும் தொழிலாளி. அமைப்பு வேலைகளுக்காக ஒரு ஷிப்ட்டு தூக்கியவர், விடுமுறை எடுத்து கொண்டு இயக்க பணியாற்ற வேண்டும் என்பதற்காக சமயத்தில் இரண்டு ஷிப்ட்டுகளும் தூக்குகிறார். தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றும் தோழர் ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவரது குடும்பம்தான் லாவணிக் கலைஞர் டேப் காதரை பராமரித்து வருகிறது.

அதே நேரம், போராட்டப் பாதையிலே சோர்வுற்று தளர்வுற்று விலகலாமா என்று விரக்தியுறும் தருணங்கள் கண்டிப்பாக வரும். ஒரு வகையில் நாங்களெல்லாம் “வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வந்த சாவுக்கிராக்கிகள்”தான். ‘தலையில் நாங்களே தண்ணீர் தெளித்துக் கொண்டவர்கள்தான்’. அப்படி ஒரு சிலர் தடுக்கி விழும் போதெல்லாம் கம்யூனிசத்தை கட்டோடு சொந்த லாபம் கருதி வெறுக்கும் இரவல் சிந்தனை அறிஞர் பெருமக்கள் பேருவுகை கொள்கிறார்கள். “நான் அப்பவே சொன்னேன், கேட்டாயா?” என்று ஓடி வருகிறார்கள். எதற்கு? தூக்கிவிடுவதற்கா? இல்லை துரத்தி விடுவதற்கா?

இங்கே தூக்கிவிடுதல் தன்னிலிருக்கும் காரியவாதத்தினை பரப்புவதும், துரத்திவிடுதல் போராடும் சக்திகளின் உயிர்த்துடிப்பை அணைப்பதுமாய் வினையாற்றுகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் தமது தியாகத்தை கணக்கில் கொள்ளாதது போலவே, தோல்விகளையும் அவை எண்ணிக்கையில் அதிகமிருந்தாலும் கண்டு துவண்டு விடுவதில்லை. விழுந்து கீழே பார்க்கும் போது சுயநலம் காத்திருந்து பழிவாங்குவது போலவே சற்று முயற்சி செய்து கடினமாக இருந்தாலும் கொஞ்சம் மேலே பார்த்தால் தோள் கொடுக்க வரும் தோழமைக் கரங்களைப் பற்றி காயத்தை வடியச் செய்து பயணத்தை தொடரலாம், தொடர்கிறோம். இதற்கு மேல் சூக்குமமான புரட்சியின் பெருங்கவிதையை, மனித குலத்தின் மாபெரும் சிம்பொனி இசையை எப்படி விளக்குவது? தெரியவில்லை.

லெனின்
விவசாயிகளுடன் லெனின்

சொலல்வல்லனுக்கு சோர்வு கிடையாது. சொல் வல்லாண்மை இழக்கும் போது காத்திருக்கும் சோர்வு முதலை வாயாய் இறுக்கமாக கவ்விக் கொள்கிறது. ஆனால் சொல் வலிமை என்பதே இத்தகைய போராட்டத்தினூடாகவே பிறக்கிறதே அன்றி அது குறிப்பிட்ட காலத்தில் பட்டப்படிப்பு முடித்து பெறும் சான்றிதழ் அல்ல. ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே இறந்தும் கொண்டிருக்கிறான் என்றால் அது உயிரியல் இயக்கத்தின் இயங்கியலை விளக்குவது போலவே கம்யூனிஸ்டு என்ற பதமே எதிர்மறையான புறநிலையை எதிர்கொண்டு அகநிலையை செதுக்கும் ஒரு போராட்டக் கலை. அந்தக் கலையின் விளைவே புரட்சி.

இது நடப்பு நுகர்வு கலாச்சார வாழ்வில் தன்னை பறிகொடுத்த மனங்களுக்கு, ஏதோ வாழ்க்கையில் ஏராளமானவற்றை இழந்து விடுவோமோ என்றொரு பதற்றத்தை தோற்றுவிக்கலாம். இல்லை, இதுதான் இந்த உலகிலேயே மாபெரும் மகிழ்ச்சிக்குரியது. அதனால்தான் “போராட்டமே மகிழ்ச்சி” என்றார் பேராசான் மார்க்ஸ். ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து பார்க்காத வரை இந்த பெரு மகிழ்ச்சியின் சிறு துளியைக் கூட வேறு எவரும் பருகிவிட முடியாது. இதை ஒரு மதவாதியின் மூடுண்ட, கற்பிக்கப்பட்ட நம்பிக்கையின் மகிழ்ச்சியாகவோ அல்லது ஒரு ஆன்மீகவாதியின் புறத்தை மறுக்கும் சுயத்தின் கற்பிக்கப்பட்ட யோகநிலையாகவோ புரிந்து கொள்ளக் கூடாது. கம்யூனிஸ்டின் மகிழ்ச்சி தன்னை தீர்மானித்து இயக்கும் சமூகத்தை புரிந்து கொண்டு சமூக மனிதனில் தன்னைக் காணும் தனிமனிதனின் பண்பட்ட நிலையோடு தொடர்புடையது. அதன் உணர்ச்சி புரட்சியின் பாதையால் பெருகுகிறது. அதன் உறவை சுட்டும் சொல் தோழமை.

அந்த புரட்சியின் பாதையில் தோழர்களை சேர்ப்பதற்கே நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆளும் வர்க்க அமைப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறோம். அதில் எங்கும் எப்போதும் சொல்லிலும் செயலிலும் சமரசம் செய்துகொள்வதில்லை. அதே நேரம் அதை மக்கள் ஏற்க வேண்டுமென்பதையும் மறப்பதில்லை. இரண்டும் வேறு வேறு அல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு நகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “ஆயுதந் தாங்கிய புரட்சியின் மூலம் இந்த அரசமைப்பு தூக்கி எறியப்படவேண்டும்” என்று பேசியதால் தோழர்கள் மருதையன், காலஞ்சென்ற தோழர் சீனிவாசன் உள்ளிட்டு சில தோழர்கள் மீது தேசத் துரோக சட்டப்பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டது. தோழர்கள் வாய்தா வாய்தாவாக சென்று கொண்டிருந்தனர். “இந்த சமூக அமைப்பை மாற்றி மக்களின் ஆயுதந் தாங்கிய புரட்சி மூலமே அரசு அதிகாரத்தை கைப்பற்ற முடியும்” என்பது கம்யூனிஸ்டுகளின் பாலபாடம். ‘அப்படி பேசவில்லை என்று நீதிமன்றத்தில் கூறுங்கள்’ என்றார் நமது தோழர்களின் வழக்கறிஞர். இவ்வளவுக்கும் அவர் பொதுவுடமை சார்ந்த, இன்றும் ஆதரிக்கும் ஒரு முன்னுதாரணமான சமூகநேயமிக்க வழக்கறிஞர்தான். அப்படி பேசியிருந்தால் வழக்கு விரைவில் முடிந்திருக்கும்தான். ஆனால் அது சரியா? இல்லையென்றால் வேறு வழி? கண் முன்னே உங்களது இளமை, வாழ்வில் துணையேற்று உடன் வரும் துணைவி, கால்களை பாசத்துடன் கட்டிப்பிடிக்கும் மகள்…. என்ன செய்வீர்கள்?

டி.பி.ஐ முற்றுகை
பள்ளிக் கல்வி இயக்குனரக முற்றுகை புமாஇமு போராட்டத்தில் போலீசால் இழுக்கப்படும் தோழர்.

எனினும் தோழர்கள் வழக்கறிஞரிடம் சற்று தயக்கத்துடன், ”அப்படி பேச முடியாது, இது எங்களது அடிப்படைக் கொள்கை, அந்த அடிப்படையிலேயே வழக்கை எதிர்கொள்வோம், வேறு வழியில்லை” என்றார்கள். சட்டத்தை ஆழமாக அறிந்த அந்த வழக்கறிஞர் தோழரும், அதை ஏற்றுக் கொண்டார். காரணம் அந்த விழுமியத்தின் உண்மையை வலிமையை அவரும் அறிந்தவர்தானே! அதே நேரம் தோழர்களை விடுவிக்கவும் வேண்டும். இப்போது சொல் வன்மை தோழர்களிடமிருந்து வழக்கறிஞர் தோழரிடமும் சென்றது.

“துப்பாக்கி குழாயிலிருந்து அதிகாரம் பிறக்கிறது” என்று சொன்ன மாவோ மற்றும் “ஆளும் வர்க்க அரசை தூக்கி எறிய வேண்டும்” என்று சொன்ன மார்க்சிய ஆசான்களின் நூல்கள் இந்த நாட்டில் தடை செய்யப்படாத போது அந்த கொள்கைகளை பேசுவது மட்டும் எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞர். பிறகென்ன சட்டம் தடுமாறி வேறு வழியின்றி தோழர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதே நேரம் இந்த பேச்சு செயலுக்கு வரும் போது வழக்கு போடவேண்டிய தேவை அரசுக்கு இருக்காது.

அதே போல கருவறை நுழைவு போராட்டத்தில் திருவரங்கம் அரங்கநாதனை தொட்டு எழுப்பிய தோழர்கள் மீதும் சில ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது. சட்டப்படி கருவறையில் மற்றவர் நுழைவது குற்றமே. இதை பேசியிருந்தால் கூட, கருத்துரிமை என்று வாதிடலாம். மாறாக நடைமுறையில் சட்டமே மீறப்பட்டுவிட்டது. என்றாலும் நீதிமன்ற மேடைகளில் தோழர்கள் அனைவரும், “நுழைவது குற்றம் என்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்தோம்” என்றே முழங்கினார்கள். தண்டனை நிச்சயம் என்றாலும் இறுதித் தீர்ப்பு வரும் ஒரு மாதத்திற்கு முன்னே திருச்சி மாவட்டம் முழுவதும் தோழர்கள் பிரச்சாரத் தீயை பரப்பினர்.

இந்த சமூக சூழலை நீதிமன்ற நீதியரசர்களும் கவனித்துத்தானே ஆக வேண்டும். உச்சநீதிமன்றம் போல சு சாமிகள் செல்வாக்கு செலுத்த இது ஒன்றும் புதுதில்லியல்லவே. பெரியாரின் சுயமரியாதை மண்ணில் நடக்கும் போராட்டம். இறுதியில் நீதிமன்றம் என்னன்னவோ விளக்கம் கொடுத்து தோழர்களை விடுதலை செய்தது. என்றாலும் சட்டமும், நீதிமன்றமும் ஒரு சில தருணங்கள் தவிர்த்துப் பார்த்தால் நம்மை தண்டிக்கவே காத்து நிற்கும். அதன் வெளிப்பாடுதான் இங்கே எமது தோழர்கள் சிறையில் இருப்பது போலவே இந்தியாவெங்கும் ஒடுக்கப்படும் மக்களும் போராடும் இயக்கங்களின் போராளிகளும் சிறைகளில் முடக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதே நீதிமன்றங்களை வரம்பிற்குட்பட்டாவது மக்கள் போராட்டத்தால் நிர்ப்பந்திக்கவும் முடியும். உங்களுக்கு தேவை சொல் வன்மையும், சோர்வின்மையும்.

வர்க்க போராட்டம்இளவரசன் மரணத்தின் போது, “ஏனய்யா பாமகவை குறிப்பாக அடையாளம் காட்ட பயப்படுகிறீர்கள்” என்று கேட்ட போது “எப்படியும் இளவரசனை நீங்களும் காப்பாற்ற முடியவில்லையே, அதற்கு குற்ற உணர்வு கொள்ளுங்கள்” என்று ஒரு அறிஞர் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு குற்றத்தை எம்மிடம் திருப்பினார். அதாவது இளவரசனுக்கு 24 x7 தனியார் பாதுகாப்போ இல்லை இயக்கங்களின் பாதுகாப்போ கொடுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமாம். எனில் ஈழத்தின் சிங்களப்படையிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாம் ஒரு தமிழ்ப்படையை அனுப்ப வேண்டும். பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்கு உலகப்படையை அனுப்ப வேண்டும் என்றாகிறது.

அப்படி ஒரு நிலைமை இல்லாத போது, சாத்தியமில்லாத போது என்ன செய்வது என்று முடங்குவதை விட என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்திருக்க வேண்டும் என்பதல்லவா முக்கியம். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவெங்கும் சிறுமான்மையாகத்தான் வாழ்கிறார்கள். பெரும்பான்மை ஆதிக்கசாதி மக்களிடம் தொடர் போராட்டம் நடத்தாமல் நீங்கள் என்னதான் செக்யூரிட்டி போட்டாலும் அது சாத்தியமில்லை. உழைக்கும் வன்னியர்களிடமிருந்து பாமவை, வன்னியர் சங்கத்தை பிரிக்கும் வேலை முழுமையடைந்தால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு பாதுகாப்பு. அதை விடுத்து பாமக என்றால் பயம் பயம் என்று ஓடினால் அதுதான் தலித் மக்களுக்கு ஆபத்து.

தமிழகத்திலேயே ஆதிக்க சாதிவெறி கோலேச்சும் ஊர்களில், மாவட்டங்களில் அதை நேருக்கு நேர் எதிர் கொண்டு பிரச்சாரம் செய்வது எங்களது தோழர்கள் மட்டும்தான். அப்படித்தான் இளவரசன் பிரச்சினையில் வட தமிழகம் முழுவதும் வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் தோழர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இங்கும் தேன்தடவிய பழத்தை விழுங்கும் நயமாக இது நடக்கவில்லை. பல இடங்களில் மூர்க்கமான கருத்து மோதல். ஆதரவாக இருந்தவர்களில் ஒரு சிலர் கூட கோவித்துக் கொண்டு அமைதியானார்கள். சில இடங்களில் தோழர்களை தாக்க வன்னியர் சங்கம் திட்டம் போட்டது. இறுதியில் எது வென்றது?

பல ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்னிய மக்களே குறிப்பிட்ட அளவில் கலந்து கொண்டார்கள். இறுதியில் எந்த சாதி மறுப்பு மணத்திற்காக தலித் மக்களின் ஊர்களை எரித்தார்களோ அதே தருமபுரியில் அதே சாதிகளைக் கொண்டு ஊரறிய திருமணத்தை நடத்தி கொண்டாடவில்லையா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, பாதுகாப்பான முறைகளில், பாதுகாப்பான வார்த்தைகளில் அரசியல் பேசும் நண்பர்கள் தமது சுயகவுரவத்தை களைந்துவிட்டு இதை பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

‘இந்த உலகை ஒரு சதவீதம் கொண்ட மனிதர்கள்தான் வழிநடத்த வேண்டும்’ என்று முதலாளித்துவ உலகம் சொல்கிறது. ‘அந்த ஒரு சதவீத எண்ணிக்கையைக் கொண்ட அறிஞர்களின் உள்ளொளி சிந்தனை திறத்தால்தான் இந்த உலகம் புரட்டிப் போடப்படுகிறது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். அமெரிக்காவில் “நாங்கள்தான் 99%, 1% நபர்களுக்கான முதலாளித்துவ உலகை தகர்ப்போம்” என்று வால்வீதி போராட்டத்தில் மக்கள் முழங்கினார்கள். இங்கோ “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” என்ற முழக்கத்தைக் கொண்ட மகஇகவில் செருப்பு தைக்கும் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளி, தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள் அன்றாடம் வீதிகள் தோறும் முழங்கியோ பாடியோ, பேசியோ வருகின்றனர்.

மார்க்ஸ் - எங்கெல்ஸ்ஜெயமோகனது உலகில் கோவை வட்டார கொங்கு தமிழ் கௌரவ சீமான்களும், என்ஆர்ஐ அம்பி கனவான்களும் கொலுப்பொம்மைகளாய் மணம் வீச, இங்கோ அடித்தட்டு மக்களும், தொழிலாளிகளும் நாற்றமெடுக்கும் இந்த சமூக அமைப்பை புதைக்க வேண்டுமென்ற தீரத்துடன் வேர்க்க விறுவிறுக்க, காயம் பரபரக்க துடிக்கின்றனர். ஆனால் இந்த தோழர்களைத்தான் அவர் சீனாவில் காசுபெற்று இயங்கிவரும் கூலிப்படை என்று எழுதி சுய இன்பம் அடைந்து கொள்கிறார். இதை அவருக்கு ஒரு உயர் போலீசு அதிகாரி கூறினாராம். ஆதாரமாய் சீனத்தலைவருடன் மோடி கைகுலுக்கும் புகைப்படத்தையும் கூறலாம்.

மோடி வருகை குறித்து நாங்கள் நடத்திய கூட்டங்கள் முதல் இணைய பிரச்சாரம் வரை பெரும்பான்மையாக கலந்து கொண்ட மக்கள் திரளில் “இந்துக்கள்தான்” அதிகம். இணையத்தில் நாங்கள் கோரிய மோடி எதிர்ப்பு பிரச்சார இயக்கத்திற்கு அதிகம் நன்கொடை வழங்கியவர்களிலும் “இந்துக்களே” அதிகம். இதை இசுலாமிய மதவாதத்தில் சிக்கியிருக்கும் அப்பாவிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனினும் டிஎன்டிஜே காமடி டைம் கட்டுரை மூலமாக பல இசுலாமிய நண்பர்கள் உணர்வுப்பூர்வமாகவும், அரசியல் ரீதியிலும் எம்மை ஆதரித்தார்கள். அதை தனியே விரிவாக எழுதுகிறோம். இவர்கள் அனைவரும் ஏதோ நாங்கள் இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்பதால் மட்டும் ஆதரிக்கவில்லை. ஒருவேளை அது துவக்கமாக இருக்கலாம். முக்கியமாக முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே என்று பாரிய அளவில் வினவு கட்டுரைகளை படித்து முடிவெடுத்திருக்கிறார்கள். வளைகுடாவில் பணியாற்றும் நண்பர்கள் சிலர் விரைவில் தமிழகம் வந்து எம்முடன் களப்பணியாற்றுகிறோம் என்றே உணர்வு பொங்க உறுதி கூறியிருக்கிறார்கள். இந்த ஏழாம் ஆண்டில் இதை விட மகிழ்ச்சிக்குறியது எது? வினவு படிக்க கூடாது என்று என்னதான் டிஎன்டிஜே உத்திரவு போட்டாலும் அது நிறைவேறாது. மக்கள் விடுதலையையும், மார்க்சியத்தையும் எந்த பிற்போக்கு சக்தியும் வெல்ல முடியாது. இது உணர்வும் உணர்ச்சியும் கலந்த மாபெரும் சமூக அறிவியல்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
– குறள் 645

இந்த சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதால் அதை நாங்கள் மார்க்சியம் என்கிறோம். போராட்டமாய் தொடர்கிறோம். வினவாய் உங்களை சந்திக்கிறோம்.

இது வினவின் ஏழாம் ஆண்டு. வாருங்கள் கரம் கோர்ப்போம்!

நன்கொடை தாருங்கள்

வாசகர்கள், பதிவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்!

குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !

12
குமுதம் ரஜினி அட்டை
இதுதாம்லே நாட்டாமை கெட்டப்புல ரஜினியோட வெடிகுண்டு கவர் ஸ்டோரி!

ஜால்ராகிராமத்துல மோடி அலை, உபியில நக்மா வலை, கூட்டணி எப்போன்னா கேப்டன் சிலை, மோடிக்கு வைகோ போட்ட மாலை, கூட்டணியில்லாத கலைஞர் நிலை, சிபிஎம், தாபாவை சீப்பா அம்மா விரட்டுன கலை…….. இதெல்லாம் ஞாபகம் இருக்காடே? ஒத்தக்கடை மச்சான் பாட்டுக்கு போட்டியா ஒத்த விரலை காட்டி ஓட்டு போட்டேன்னு பீத்திக்கிட்டீல்லா? ஒன்னை மலிவா பட்டி பாத்து ஓட்டுப்போட அனுப்பன பத்திரிகைக்காரனுவ அதுல ஜூவிக்காரன்லேர்ந்து, சூம் பண்ற டீவிக்காரன் வரை இப்பிடித்தாம்லே எலக்சன் நியூஸ்ன்னு அடிச்சு வுட்டானுவ!

ராதா வூட்ல பாதாம் அல்வா, சிம்ரன் காருல சிங்கப்பூர் குல்லா, சமந்தா பேக்குல சீனத்து கல்லுன்னு ஒன்னோட பொது அறிவ வளர்க்குற ஊடக விளக்கமாறுங்க, சினிமா கிசகிசுவ வெச்சுத்தாம்டே கல்லா கட்டுதானுவ. பெறவு இதே லேகியத்தை அரசியல் செய்திலயும் போட்டுத் தாளிச்சு உன்னோட மூளையில மொக்கை வைரசை புகுத்தி அல்லாரையும் இம்ச பண்ணுதான். கலைஞர் வூட்டுக்கு வந்த மர்மக்கார், அம்மா கேட்டுக்கு வந்த செவப்பு சூட்கேஸ், கேப்டன் காருக்கு வந்த பாரின் ஃபுல்லுன்னு இவனுவ எழுதுத நியூசக் கேட்டா அந்த செய்தி தேவதையே ப்ராந்து புடிச்சு தூக்கு மாட்டுவா!

ஐயர் கடையில கும்பகோணம் டிகாஷன் காப்பிக்கு ஒன் நாக்கு பழகுன மாறி குமுதம், விகடன் லேகிய மசாலாவுக்கு ஒன் மூளையும் பழகிடுச்சுடே!

இன்னைக்கு காத்தால பக்கத்து தெருவுல, கொல்லம் சேட்டன் கடையில ஆமை வடை துன்னு, தேத்தண்ணி குடிச்சப்ப பக்கத்து பெட்டிக்கடை தாத்தா கடையில குமுதம் போஸ்டர் பாத்தம்டே!

“மாறு வேட ரஜினி, சாலை ஓர கிழவி” எக்போளோசிவ் ன்னு டைட்டில போட்டு பின்னாடி ரஜினி, நம்ம சோதா சரத்துகுமார் நாட்டாமை கெட்டப்புல நிக்காறு. சரிப்பா அப்பிடி என்ன குண்டபோட்டுருக்கான்னு 15 ரூபாய தண்டம் கட்டி வாங்கிப் பாத்தா………………..

பெறவு என்ன, வந்த வெப்றாளத்துக்கு ஆபிசுல மட்டம் போட்டு இத எழுதுதம்டே. வினவு தோழக்கமாறுகிட்ட சொல்லி உடனே போட்டாத்தான் எம் மனசு ஆறும்னு சிபாரிசெல்லாம் பண்ணித்தாம்டே இத நீ படிக்க. இல்லேன்னாலும் நீ என்ன படிச்சு புண்ணியம்டே, விடு, கழுதைக்கும் தன் குட்டி பிளாட்டினம் குட்டி, மேல படி!

ரஜினி அமெரிக்கா போய் மொட்ட போட்ட கதை, இமயத்தக்கு போய் தாடி வளத்த கதைன்னு அப்பைக்கப்ப எடுத்து வுடுவாம்னு தெரியும்னாலும், இந்த தபா இன்னா எழுதிக்கீறான்னு ஒரு கொதியில மதிகெட்டு வாங்குனேன்.

ரஜினி குடியிருக்க ஏசி போட்ட போயஸ் தோட்ட வீடுன்னா, அவர் ஈசி சேருல குந்தி கனாக்கான கேளம்பாக்கம் பண்ணை வீடாம். வாடகை குடித்தனத்துல மீட்டர் ரீடிங்கிற்கு ஐஞ்சு ரூபாயான்னு சண்டை போடுற காலத்துல, நம்ம நடுத்தர வர்க்க தம்பிமாறுங்க கடனை கிடனை வாங்கி மவுலிவாக்கத்துல பறி கொடுத்த நேரத்துல நாம பண்ணைய பாத்தமா, போயஸை நினைச்சமா!

அந்த பண்ணை வூட்டுல ரஜினி செஞ்ச சாதனையத்தாம்டே குமுதம் காரன் “உள்ளம் உருகுதய்யான்னு” டிஎம்எஸ் குரல்ல டூரிங் டாக்கிஸ் ரிக்கார்டாட்டம் இழுத்து பாடுதான்.

அந்த பண்ணை வீட்டுல ஒரு தபா ரஜினி வந்தப்போ, அவரை மீட் பண்ண ஒரு சாதாப் பய வந்தானாம். வந்தவன் அண்ணே தெருவுல ஒரு ஆயா சூப்பரா வடை சுடும்ணே, நாக்குல தண்ணி கொட்டும்னே சொல்ல, சரி போய்த்தான் சாப்புடுவோம்னு ரஜினி சொன்னாராம். அதக்கேட்டு அந்தப்பய ஜெர்க்காகி, தல நீங்க வட துன்ன வந்தா, ட்ராபிக்குல ஜாம் சேரும்னு சொன்னானாம்.

உடனே சூப்பர் ஸ்டார் உள்ள போய் வெளிய வரச்சே ஓல்டுகெட்டுப்பல தாத்தா மாதிரி வந்தாராம். இந்த மாறுவேடத்துல பழைய அம்பாசிடர் காரை எடுத்துக்கிணு, அந்த சாதாப்பயலையும் கூட்டிக்கிணு வடை துன்ன போனாராம். பெறவு கதையில ஒரு ட்விஸ்ட்டு. பாதி தூரம் போனப்போ சைடுல ஒரு கிழவு குந்திக்கிணு இருந்தாங்களாம். உடனே தல சடர்ன் பிரேக்க போட்டு ஜம்ப் பண்ணி, கிழிவியண்ட, மைடியர் மாம், வாட் ஹேப்பண்ட் டு யூன்னாராம். அதுக்கு அந்த கியவி என்பாடு எனக்கு ஒன் சோலியப் பாத்துத்துக்கிட்டு போப்பான்னுச்சாம்.

ஆனா நானு ஃபீலான்னது ஃபீலானதுதான்ன்னு நம்ம தல சாதிச்சு கிழவியம்மா கதையைக் கேட்டுச்சாம். கதன்னதும் வாயப் பெளக்காதடே! பெருசா ஒண்ணுமில்ல,ராணி, தேவி மேறி குடும்ப பத்திரிகைங்கள்ள தீபாவளி சிறப்பு ஸ்டோரின்னு வருமுல்லா அதாம்டே! கிழவிக்கு ஆத்துக்காரரு இல்லேன்னு ஆனதுக்கு பெறவு, பெத்த பசங்க ரெண்டு பேரும் கைவிட்டுட்டாங்களாம், வேற வழியில்லாம ரோட்டுல உக்காந்துக்கிறேன், கதையக் கேட்டாச்சுல்லா, இடத்த காலி பண்ணுண்ணு அந்த அம்மா சொல்லிச்சாம்.

அம்மா ரெண்டு நாளா பட்டினின்னு விசாரிச்சு கேட்ட உடனே, காரை ஷூமேக்கரு வேகத்துல நாலடி தள்ளி இருந்த பக்கத்து கடைக்கு போய் ரெண்டு மோரிஸ் பழம், நாலு ட்ரூ பிஸ்கெட்டு பாக்கெட்டு வாங்கி கொடுத்துட்டு, அம்மா சீக்கிரம் உனக்கு நல்ல சேதி வரும் ரெடியார இருன்னு தல போயிருச்சாம்.

குமுதம் ரஜினி அட்டை
இதுதாம்லே நாட்டாமை கெட்டப்புல ரஜினியோட வெடிகுண்டு கவர் ஸ்டோரி!

அப்பால பண்ணைக்கு போன தல, பக்கத்துல ஒரு ஆசிரமத்துல சொல்லி அம்மாவ கூட்டிக்கிணு போய் பாத்துக்கண்ணு ஆர்டர் போட, அடுத்த செகண்டு ஆசிரமத்து ஏசி காரு அந்த சாதா பயலோட கிழவிய தூக்கிக்கிணு போச்சாம். அப்பத்தாம் அந்த சாதா சொல்லி வந்தது ரஜினின்னு அந்த கிழவிக்கு தெரிஞ்சிச்சாம். மதுரை கிழவிக்காக சிவபெருமான் புட்டுக்கு மண்ண சொமந்த மேறி, சென்னைக் கிழவிக்காக ரஜினி போன் பண்ணி உதவிக்கீறாரு….இதுதாம்டே மெயின் ஸ்டோரி.

இந்த மேட்டர இத்தோட வுட்டா கவர் ஸ்டோரி கெத்து பத்தாதுன்னு, இன்னொரு குட்டி கதையும் சேத்தருக்கான். பண்ணை வூட்டு பக்கத்துல வாழுர ஒருத்தரு மழைக்காலத்துல கஷ்டப்பட்டப்போ சினிமா கேரியருல சாப்பாடு கொடுத்தாராம் ரஜினி. பெறவு அந்த வூட்டுக்கு போய் ஒரு பாப்பாவுக்கு பேபி டார்ல் கொடுத்துக்கிணு, 1000 ரூபாயும் வச்சுக்கோன்னு சொல்லிட்டு வந்தாராம். கிளைமாக்சா, கேளம்பாக்கம் பண்ணை வூட்ல வேலை செய்யுற ஆளுங்களுக்கு, பக்கத்துலயே ரஜினி அவென்யூன்னு கட்டி அடுத்த மாதம் தொறக்க போராறாம். வேலை செய்யுற இடத்துலயே சர்வர் மொதலு, வீட்டு வேலக்காரங்க வரைக்கும் தங்கவச்சா ஆருக்குடே ஆதாயம்?

சரி கூட்டிக் கழிச்சு பாரு, இதுல இன்னா கருணை, எவ்வளவு காசு? கிழவிக்கு ரெண்டு மோரிஸ் பழம் தலா 5 ரூபா, நாலு ட்ரூ 20, பெறவு ஆசிரமத்து காரனுக்கு போன் செலவு 2 ரூபா, பக்கத்து மனிதருக்கு கேரியர் சாப்பாடு 100 ரூபா, பேபி டார்லு 300ரூபா, இனாம் 1000 மொத்தம் 1432 ரூபா செலவு பண்ணிக்கிறாரு தல. இதுக்கு, தான தரும புஜ பல பராக்கிரம கர்ண, அதியமான்னு இந்த உலகத்துலேயே அள்ளிக் கொடுத்த வள்ளல்ங்கிற எபக்டுக்கு காட்டுதாம்லே! அங்கதான் நீ ஆன்னு பாத்துக்கிட்டு ஃபீலாவுத!

ஏலே நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சிய எடுத்துக்கடே, அவரு காலையில எந்திரிச்சு அழுக்கு கைலியோட சேட்டன் கடைக்கு போய் கையில தினத்தந்தி, வாயில காபின்னு குடிச்சிட்டு ஒரு பிஸ்கெட் பாக்கெட்ட வாங்கி தெருவோர பைரவக்கமாருங்கள கூட்டி பிச்சு போடுத அழகு இருக்கே, அத நம்ம மருது ஐயாதாம்டே ஆர்ட்டா வரையணும்! மாசம் 200ரூபான்னா, வருசத்துக்கு 2,400 ரூபாக்கு நம்ம அண்ணன் பிஸ்கெட் வாங்கி போட்டுருக்காருடே, இப்படி உழைக்கிற ஜனங்க உலகம் பூரா உதவிக்கிட்டுத்தாம்லே இருக்காக, அதையெல்லாம் தினத்தந்தியில விளம்பரமா போட்டா பத்திரிகைக்கு பேப்பரும் அடிக்கதுக்கு மையும் பத்தாதுடே!

போயஸ் தோட்டத்துல ஒரு பணக்கார பாய் போய் வாடகைக்கு வீடு கேட்டா எந்த பணக்காரனும் வூடு கொடுக்க மாட்டான். ஆனா நம்ம சேத்துப்பட்டுல ஏழை பாய்மாருங்க எப்ப வந்தாலும் வீடு ரெடியா இருக்கும்லா! சரி அவங்கள விடு, திருநங்கை அக்காமாரெல்லாம் எங்க சேத்துப்பட்டு மேறி ஏழைங்க இடத்துலதான் பிரச்சினை இல்லாம இருக்காக, மக்களும் பழகுதாக.

மவுலிவாக்கத்துல இடிஞ்சு வுழுந்தப்போ எவனாவது ஆக்சன் ஹீரோவாட்டம் சம்மர்சால்ட்டு அடிச்சு வந்து காப்பாத்துனான்? அவனுகதாம்டே டிவியில ரியல் எஸ்டேட் வெளம்பரத்துல நடிச்சு சம்பாதிச்சிக்கிணு, நம்மள கொல்லுதான்! போலிசு, தீயணைப்பு படை, தொழிலாளின்னு ராப்பகலா நின்னு காப்பாத்துனது எங்கடே கவர் ஸ்டோரியா வந்துருக்கு?

ரஜினிக்கு சொத்து எப்படி வந்துச்சுன்னு கேட்டா அவரு உழைச்சு சம்பாதிச்சாருன்னு சொல்லுவ. கோச்சடையான்ல அவருக்காக டூப் போட்டு உழைச்ச அந்த டீவி தம்பிக்கு 5, இல்லேன்னா பத்து ஆயிரத்த கொடுத்துக்கிணு, ரஜனி வாய்சுக்குணு கோடியில கொடுத்துட்டு, இதாம் உழைச்சா இலட்சணமான்னு அந்த கேளம்பாக்கத்து கிழவிட்ட கேட்டா காறித் துப்பாது?

இல்லை பாட்சாவா முத்துவா எந்தப்படம் எப்படி ஓடிச்சுன்னு கேளு? ரஜினிக்கு பத்து கோடி சம்பளம்னா, விநியோகஸ்தரு, தியேட்டரு ஓனரு எல்லாம் எக்குத்தப்பா படத்த வாங்கி பத்து நாளைக்கு அவனே பிளாக்குல ஒன்னுக்கு பத்தா வித்தாம்டே காசு. அதுதாம்டே சம்பளம்ணு ரஜினிக்கு போய்ச் சேருது! ஏலேய் பஸ்ல அடிச்சா பிக்பாக்கட்டு, பிளாக்குல அடிச்சா அது உழைப்பாடே?

இப்படி இருக்கையில அஜித் மட்டன் பிரியாணி போட்டாரு, விஜய் கப் ஐஸ் கிரீம் கொடுத்தாருன்னு மாசத்துக்கு ரெண்டு மூணு எழுதிப் போடுதான், வேலவெட்டி இல்லாத ஊடகக்காரனுவ. இதையே பெறந்த நாளைக்கு ரெண்டு சைக்கிள், நாலு அயர்னிங், நாப்பது நோட்டு புக்குன்னு அல்லா நடிகருங்களும் கொடுத்துக்கிணு உடனே கோட்டையில கொடி, பியூச்சருல முதலமைச்சருன்னு காசு கொடுத்து கோசம் பொட வைக்கான். இல்லேன்னா கேப்டன் மாறி தண்ணி வண்டிங்கள்லாம் இப்படி ஒரு கச்சி கூட்டணின்னு கெத்தா வரமுடியுமாலே?

மனிதாபிமானம்னு என்ன கிலோன்னு இவெங்களுக்கு தெரியுமாய்யா?

குமுதம் ரஜினி அட்டை. 2
கோச்சடையான் படத்துல நடிச்சது அந்த லொள்ளு சபா தம்பிங்கிறது எத்தன பேருக்குடே தெரியும்?

வடக்கு சென்னைக்கு சிபிஎம், மத்திய சென்னைக்கு ஆம்ஆத்மி, தெற்கு சென்னைக்கு தாமரைன்னு ஓட்டுப் போடுவேன்னு சொன்ன பத்ரி சேஷாத்ரிகிட்ட, அண்ணே ஒரே தொகுதியல இவங்க மூணு பேரும் நின்னா யாருக்கு ஓட்டுன்னு கேட்டா, இல.கணேசன் வாளுக்குத்தான் போடுவேன், அதுல குயப்பமே கிடையாதுன்னு சொன்னாரு பாரு! இவருகிட்ட சிபிஎம் வாசுகி அம்மா ஓட்டு கேட்டு ஆதரவு கேட்டுச்சுன்னா கார்ல் மார்க்ஸ் கல்லறையில இருந்து பறந்து வந்து அடிக்க மாட்டாரா?

அத வுடு, நம்ம பத்ரி அண்ணன் பெட்ரோல் காசையும், புகை மாசையும் மிச்சப்படுத்த ஹெல்மெட் போட்டு சைக்கிள்ள ஆபிசு வாராராம். அதுல பாத்துக்க, வேர்வையில அந்த சாயம் போன கிழக்கு டீஷர்ட்டு அழுக்காவுதுன்னு இன்னொரு சட்டைய எடுத்துக்கிணு வாராறாம். இந்த ராசா, காரு வச்சுருக்கிற கனவாங்க்கிட்ட பொது போக்குவரத்த யூஸ் பண்ணுங்கோன்னு அட்வைசு பண்ணுதாரு. சரிய்யா, வாடகை வூட்ல இருக்கிறவனையே லோன் வாங்கி காரை திணிச்சு அதையும் தெருவுல நிக்க வைச்சு, ட்ராபிக்குல அல்லா காருலயும் ஒருத்தன்தான் போறான்னா இதுக்கு என்ன தீர்வு?

காருக்கு அதிக வரிபோடு, காருக்காரன் போடுத பெட்ரோலுக்கு விலைய உயத்து, பொது போக்குவரத்துக்கு மானியம் கொடுன்னு சொன்னா அது ஞாயமான பேச்சு? ஆனா நம்ம அண்ணேன் மார்கெட் சுதந்திரத்துல கை வைச்சா மெலடின்னாலும் அறம் பாடியே எரிக்க மாட்டாரு?

நம்ம உலக எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணாச்சி வெள்ளையானைன்னு ஒரு தலித் நாவல் எழுதி களைச்சுப் போய் மேலவளவுக்கோ இல்ல திண்ணியம், பாப்பாபட்டி, கீறிப்பட்டிக்கோ போய் ரெஸ்ட் எடுப்பாருன்னு பாத்தா அவரும் நேரா மகாபலிபுரம் பண்ணை வூட்ல உலகநாயகன் கமலஹாசன் கொடுத்த ஃபாரின் சரக்கு பார்ட்டிக்கு போயிட்டு வந்ததோட நிக்காம அத உருகி உருகி ஒரு போற்றி பதிவே போட்டுருக்காருல்லா? குறிப்பா அந்த அக்கா பேரு என்ன…ஆங்……ஆண்டிரியா எல்லாம் வந்துச்சுன்னு பேரு டீடைலோடு எழுதிக்கிறாரு. சினிமாக்காரன் பார்ட்டியில என்னடே உள்ளொளி தரிசனம் வாழுது!

நாவல படிச்சு உருகுன ஒரு பய கூட இந்த கேவலத்தை கண்டுக்கிடலயே? ஏலேய், உள்ளொளியில தலித்துக்காக உருகுனவரு, வெளியில கமல் கூப்பிட்டப்பவே, தல நானு சாதா, இந்த மேறி ஸ்பெசலெல்லாம் கூடாதுன்னு மறுத்துருக்கணும்லா? மக்கா, புளியம்பட்டி ஏழை வூட்ல அழுதுக்கிணே ஃபீல் பண்ணி கஞ்சி குடிச்சேன்னு எழுதுறவன், உடனே மதுரை, மும்பைன்னு போய் பிளைட்ட பிடிச்சு நியூயார்க் வெஸ்ட்லின் ஹோட்டல்ல ஆயிரம் டாலர் விலைக்கு அதாம்டே 60,000 ரூபாயில பாகலை (இந்த உலகின் அதிக விலையுள்ள தின்பண்டங்களின் ஒன்று) துன்னேன்னு ஒரு அனுபவப் பதிவ எழுதனா கிழிச்சு உப்புக் கண்டம் போடமாட்ட?

ரஜினி 1432 ரூபாக்கி தானம் பண்ணாருன்னு குமுதத்துல ஃபீல் பண்ணி எழுதுன கடற்கரையும் உலக இலக்கியம் படிச்ச ஆளுதாம்டே! இந்தக் கடற்கரை இல்லேன்னா வேறோ எதோ குட்டைக்கரை இருந்தாக்கூட குமுதம்காரன் அதத்தான் எழுதுவான். ஆனா உலக இலக்கியம், ஈரான் படம்னு பவுசு காமிக்கிறவன்தான் குட்டக்கரைங்கெள விட பில்டப்ப டன்கணக்குல கூட்டி கிறுக்குதாம்லா?

ஏலேய் என்னப் பெத்த மக்கா, அம்மணமா போனாக்கூட குத்தமில்ல ராசா, குமுதத்த படிச்சேன்னு வச்சுக்கோ மூளையில்லாத முண்டமாத்தான் திரியணும்டே, பெறவு உன் இஷ்டம்!

–    காளமேகம் அண்ணாச்சி

 

ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !

3

“நல்ல காலம் வரப் போகுது, நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடியால் நல்ல காலம் வரப் போகுது” என பா.ஜ.க.வும் அக்கட்சியின் கூலிப்படையாக வேலை செய்துவரும் ஊடகங்களும் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே குறி சொல்லி வந்தன. “பேச வாய் திறந்த பிள்ளை எப்பம்மா தாலியறுப்பே” என்று கேட்ட கதையாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் பிறந்திருக்கிறது அந்த நல்ல காலம். டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு – என அடுத்தடுத்து மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கும் மோடியின் ‘நல்லாட்சியை’ வேறெப்படிக் கூற முடியும்?

காவி கல்லுளிமங்கன்

டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தைப் படிப்படியாக வெட்டி, அதன் விலையை சர்வதேச ‘தரத்திற்கு’ உயர்த்துவது என்ற அடிப்படையில்தான் டீசலின் விலையை மாதமொன்றுக்கு 50 காசு உயர்த்தும் முடிவை முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு எடுத்தது. அதே முடிவின்படிதான் மோடி அரசும், தான் பதவியேற்ற 35 நாட்களுக்குள்ளாக டீசல் விலையை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது.

கசப்பு மருந்துஇயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்கு – நான்கு டாலரிலிருந்து எட்டு டாலராக உயர்த்திக் கொள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் முடிவை முந்தைய காங்கிரசு அரசு எடுத்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த முடிவை அமலுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்தியிருக்கிறது, மோடி அரசு.

காங்கிரசு கூட்டணி அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியபொழுது, “நாட்டு மக்கள் மீது பெரிய சுமை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் முடிந்த 24 மணி நேரத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதேயே இது காட்டுகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பெரிய அவமதிப்பு ஆகும். மக்கள் ஒருபோதும் இதை மன்னிக்க மாட்டார்கள்” என நாக்கைச் சுழற்றி காங்கிரசை விளாசித்தள்ளினார் நரேந்திர மோடி. இப்பொழுது மோடி அரசு அதே காங்கிரசு பாணி கயவாளித்தனத்தோடு, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவும், நாடாளுமன்றத்துக்குத் தெரியாமலும் ரயில் கட்டண உயர்வுகளை அறிவித்திருக்கிறது. மேலும், முந்தைய காங்கிரசு அரசு எடுத்த முடிவின்படிதான் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக ஒரு தன்னிலை விளக்கத்தையும் அளித்திருக்கிறது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு அப்பால், வெங்காயம், உருளைக்கிழங்கு, சர்க்கரை உள்ளிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் தேர்தலுக்கு முந்தைய மாதங்களைக் காட்டிலும் அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயு உருளை மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியங்களையும் படிப்படியாக வெட்டி, அவற்றின் விலைகளையும் மாதந்தோறும் உயர்த்தவும் மோடி அரசு திட்டமிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

முந்தைய காங்கிரசு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை மாற்றத் துடிக்கும் மோடி அரசு, முந்தைய காங்கிரசு கூட்டணி அரசால் உருவாக்கப்பட்டிருந்த அமைச்சரவைக் குழுக்கள் அனைத்தையும் கலைத்த மோடி அரசு, அதன் மக்கள் விரோதக் கொள்கைகளை மட்டும் காங்கிரசை விடத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபொழுது, அதனை மக்கள் விரோதச் செயல் எனக் கண்டித்த மோடி அண்ட் கம்பெனி இப்பொழுது கட்டண உயர்வுகளை நாட்டின் நலன் கருதிக் கொடுக்கப்படும் கசப்பு மருந்தாக நியாயப்படுத்துகிறது.

கொல்கத்தா ஆர்ப்பாட்டம்
ரயில் கட்டண உயர்வினைக் கண்டித்து கொல்கத்தா நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

நாட்டை மறுகாலனியாக்கிவரும் தனியார்மய-தாராளமயக் கொள்கையை மன்மோகன் சிங்கைக் காட்டிலும் தீவிரமாகவும் வெறித்தனமாகவும் மோடி அமல்படுத்துவார் என்பதை நாம் தொடர்ந்து கூறி வந்திருக்கிறோம். விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பறிமுதல் செய்யப்படும் நிலத்திற்குச் சற்றுக் கூடுதலாக நட்டஈடு வழங்கும்படியான சட்டத்தை முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கொண்டுவந்ததென்றால், கூடுதலாக நட்டஈடு வழங்கத் தேவையில்லை என நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயலுகிறது, மோடி அரசு. முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளை வாரிக் கொடுத்தது என்றால், மோடி அரசோ கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினர் மீது விதிக்கப்படும் வரிகளை ரத்துசெய்ய முயற்சிக்கிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பின் தேதியிட்டு வரி விதிக்கும் சட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்றும் அறிவிக்கிறது.

மன்மோகன் சிங்கிற்கும் மோடிக்கும் இடையேயான வேறுபாடுகள் இவை போன்றவைதானேயொழிய, விலைவாசியைக் குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மோடியின் கையில் ஏதோ மந்திரக்கோல் இருப்பதைப்போல கார்ப்பரேட் ஊடகங்களும், பார்ப்பன பாசிஸ்டுகளும் பில்ட்-அப் கொடுத்தவை அனைத்தும் வடிகட்டிய பொய்கள்.

இந்த உண்மை ஓரங்கட்டப்பட்டு, “மோடி காலையில் எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிடுகிறார். அதிகாரிகளையும் வர வைத்திருக்கிறார். கேள்வி கேட்டு வேலை வாங்குகிறார். முதல் 100 நாட்களிலேயே சாதிக்க வேண்டியவை குறித்த திட்டமொன்றை வைத்திருக்கிறார். அமைச்சர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்” என்றவாறான மோடியின் சில்லறைத்தனமான, விளம்பரம் தேடும் நடவடிக்கைகளையே முந்தைய ஆட்சியாளர்களுக்கும் மோடிக்கும் இடையிலான மாபெரும் வேறுபாடாக ஊடகங்களும் பார்ப்பன பாசிச கும்பலும் காட்டி வருகின்றன.

***

“விலைவாசியைக் குறைப்பேன்” என்று மட்டுமா மோடி சவடால் அடித்தார்? அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகத்திற்கு வந்தபோதெல்லாம் தமிழக மீனவர்களின் இரட்சகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். மோடி பிரதமரானால் ராஜபக்சே வாலைச் சுருட்டிக் கொள்வார் எனத் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்கள்.

01-c-1இந்தச் சவடால்கள் அனைத்தும் மோடி பிரதமரான மறுநிமிடமே பல்லிளித்துவிட்டன. கடந்த ஒன்றரை மாதத்திற்குள்ளாக ஏறத்தாழ 200 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் 38-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி தனது பதவியேற்பு வைபவத்திற்கு ராஜபக்சேயை அழைத்தபொழுது, “நாம் இலங்கையைப் புறக்கணிப்பதாலோ ராஜபக்சேவுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாலோ யாருக்கென்ன இலாபம்? இலங்கை மீது போர் தொடுக்கவா போகிறோம்? நமது மீனவர்களின் பிரச்சினையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர்களது உரிமையைப் பெறுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அதிபர் ராஜபக்சேவைப் புறக்கணிப்பதல்ல” எனத் தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டது பா.ஜ.க. இதைத்தானே காங்கிரசும் இத்தனை காலமாக கூறிவந்தது?

மன்மோகன் சிங் – எம்.கே.நாராயணன் – சிவசங்கர் மேனன் இருந்த இடத்தில் இப்பொழுது நரேந்திர மோடி – சுஷ்மா சுவராஜ் – அஜீத் தோவல் என்ற கூட்டணி உள்ளது. ஆட்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது ஒருபுறமிருக்க, இப்புதிய கூட்டணி பழைய கூட்டணியைக் காட்டிலும் தனிப்பட்ட விதத்திலும் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது.

மீனவர் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தீவிரமடைந்து வருவதைக் கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

உண்மை இவ்வாறிருக்க, பொங்கும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு டெல்லிக்குக் காவடி எடுக்கும் நாடகத்தை நடத்தினார் வைகோ. மோடியின் இயற்கையான கூட்டாளியான ஜெயா, ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு காரணம் தவறான ஆலோசனைதான் என்று அறிக்கைவிட்டார்.

அரசு அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் இந்தியை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிக்கையை வெளியிட்டுவிட்டு, முந்தைய காங்கிரசு அரசுதான் முதலில் வெளியிட்டதாகக் கைகாட்டி வெட்கங்கெட்ட முறையில் தப்பித்துக் கொள்ள முனைகிறது, பா.ஜ.க. காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களிலோ காங்கிரசைப் போலவே பா.ஜ.க.வும் கபட வேடதாரி என்பது ஏற்கெனவே அம்பலமான உண்மை. இருந்தபோதிலும், மோடி வந்து விட்டால் அவர் கர்நாடக, கேரள அரசுகளைப் பணிய வைத்து விடுவார் என்பது போலச் சவடால் அடித்தார்களே, இந்த முழு மூடர்களுக்கு தங்களை ஒரு கட்சித் தலைவன் என்று அழைத்துக் கொள்ளும் தகுதி இருக்கிறதா?

தமிழகத்தில் நரேந்திர மோடியைச் சொக்கத் தங்கமாக அறிமுகப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் தமிழருவி மணியன். “இந்தியர் என்றுதான் மோடி பேசி வருகிறார். இந்து என்று அவர் பேசினால் நாங்கள் அவரது பக்கத்தில் இருக்க மாட்டோம்” எனச் சூளுரைத்து வந்தார், அவர். ஆனால், பா.ஜ.க.வோ தனது தேர்தல் அறிக்கையிலேயே, அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதையும்; காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்குவதையும்; பொது சிவில் சட்டம் கொண்டுவருவதையும் தனது திட்டங்களாக அறிவித்து, அவரின் மூக்கை மட்டுமில்லாமல், மோடியை வளர்ச்சியின் நாயகனாக நம்பிக் கொண்டிருந்தவர்களின் மூக்கையும் சேர்த்து உடைத்தது.

ராமர் கோவில் கட்டுவதற்கான தூண்கள், கதவுகளை வடிவமைக்கும் பணிகள் அயோத்தியில் நடந்துவந்ததை நிறுத்தி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ்., மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே மீண்டும் அதனைத் தொடங்கிவிட்டது. “கோவில் கட்டுவதைவிட கக்கூஸ் கட்டுவதுதான் முக்கியமானது” எனச் சவடால் அடித்துவந்த மோடி அயோத்தியில் கக்கூசைத்தான் கட்டப்போகிறாரா? “அரசியல் சாசனப் பிரிவு 370 குறித்தும், பொது சிவில் சட்டம் குறித்தும் பொது விவாதத்திற்கு வரத் தயாரா?” எனக் கேட்டு முண்டா தட்டுகிறார்கள் மோடியின் அமைச்சர்கள்.

நீதித்துறை நியமனங்கள்
மோடி அரசு, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியத்தை (இடது) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மறுத்துள்ளதற்கும், முகுல் ரோத்தகியை அரசு தலைமை வழக்குரைஞராக நியமித்துள்ளதற்கும் பின்னணியில் அதன் இந்துத்துவா திட்டம் உள்ளது.

பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனாலோ, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் அளவிற்கு நாடாளுமன்ற பலம் பா.ஜ.க.விற்கு இல்லை என்பதனாலோ பார்ப்பன பாசிச அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமது இந்துத்துவா திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மோடி கும்பல் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என்பதற்கு இப்பொழுதே சில அறிகுறிகள் கிடைத்துள்ளன.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் வழக்குரைஞராக இருந்தவருமான கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்ட நால்வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மோடி அரசிடம் அளித்திருந்தது. இந்தப் பரிந்துரையில் கோபால் சுப்பிரமணியத்தைத் தவிர, மற்ற மூவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது, மோடி அரசு. குஜராத்தில் நடந்த சோராபுதீன், பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் உச்ச நீதிமன்ற நண்பனாக நியமிக்கப்பட்டிருந்த கோபால் சுப்பிரமணியம், இப்போலி மோதல் படுகொலையில் குஜராத் அரசு மற்றும் அதன் துணை உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் பங்கைப் பல்வேறு ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி, அவ்வழக்கில் அமித் ஷாவைக் குற்றவாளியாகச் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார். இதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் முகமாவே கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை நிராகரித்திருக்கிறது, மோடி அரசு.

அதே சமயம், தனது நோக்கத்தை மூடிமறைத்துக் கொள்வதற்காக, 2ஜி ஊழல் வழக்கில் அரசு சார்பில் வழக்காடி வந்த கோபால் சுப்பிரமணியம், சி.பி.ஐ. அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஒரு வதந்தியை உளவுத்துறை மூலம் திட்டமிட்டே கசியவிட்டிருக்கிறது, மோடி அரசு. இதற்கு சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த அவதூறைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கோபால் சுப்பிரமணியம், தனது பெயரை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையில் மோடி அரசின் கயமைத்தனத்தை எதிர்த்து நிற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபால் சுப்பிரமணியத்தைப் பழிதீர்த்துக் கொண்ட மோடி-அமித் ஷா கும்பல், குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலை வழக்குகளில் குஜராத் அரசு சார்பாக வாதாடி வந்த முகுல் ரோத்தகியை மைய அரசின் தலைமை வழக்குரைஞராக நியமித்திருக்கிறது. முகுல் ரோத்தகி 2ஜி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாகவும், இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தும் வழக்கில் ரிலையன்ஸ் சார்பாகவும், இத்தாலி நாட்டு கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களைக் கொன்ற வழக்கில் இத்தாலியின் சார்பாகவும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி - கசப்பு மருந்து

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, சோராபுதீன், பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளை விசாரித்துவரும் சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜே.டி.உத்பத், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சாக்குபோக்குச் சொல்லி தப்பித்து வந்ததைக் கண்டித்ததோடு, ஜூலை 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு வெளிவந்த மறுவாரமே நீதிபதி உத்பத் மர்மமான முறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

குஜராத்தில் நடந்துள்ள பல்வேறு போலி போலிமோதல் கொலைகளில் அமித் ஷாவிற்குப் பங்குண்டு என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மோடிக்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணை போலீசாரைக் கொண்டு உளவு பார்த்த விவகாரத்திலும் அமித் ஷாவிற்குப் பங்குண்டு. இப்படிபட்ட கிரிமினல் பின்னணி கொண்டவரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் வளர்ப்புப் பிராணியுமான அமித் ஷா-வை பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவற்றையெல்லாம் மோடி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி மேலெழுந்தவாரியாகச் செய்யவில்லை. இவை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பார்ப்பன பாசிசத் திட்டங்கள். மோடி அரசு அளிக்கும் கசப்பு மருந்துகளால் ஆத்திரம் கொள்ளும் மக்களின் வெறுப்பை, இந்து-முசுலீம் மோதலாக மடை மாற்றி விடுவதற்கும் இது பயன்படும்.

தேர்தலுக்கு முன்பாக மழைக்காலத் தவளையைப் போல நிறுத்தாமல் கத்திக் கொணடிருந்த மோடி, இப்பொழுது தனது அரசின் சர்ச்சைக்குரிய எந்த நடவடிக்கை குறித்தும் பேசமறுக்கிறார். மற்றவர்களும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். மன்மோகன் சிங்கை மவுனமோகன் சிங் என்று முன்னர் கேலி செய்த மோடி, மன்மோகனை விஞ்சும் விதத்தில் அதேபாணியில் காவி கல்லுளிமங்கனாக வலம் வருகிறார்.

மோடி பிரதமரானால், அவரது தலைமையின் கீழ் அமையும் அரசு மன்மோகன் சிங்கைவிடத் தீவிரமான ஏகாதிபத்தியங்களின் எடுபிடியாக, ராஜபக்சேயைப் பாதுகாப்பதில் காங்கிரசின் மறுஅவதாரமாக, ஆர்.எஸ்.எஸ். – இன் இந்துத்துவா திட்டங்களைப் பையப்பைய நகர்த்திச் செல்லும் தொண்டனாகத்தான் நடந்துகொள்ளும் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. இது எதிர்பாராதது என்று கூறுபவர்கள், அடிமுட்டாளாக இருக்க வேண்டும்; அல்லது தேர்ந்த பிழைப்புவாதிகளாக இருக்க வேண்டும்.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !

2

செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் மர்ம மரணம் – போராட்ட அறிக்கை

டலூர் மாவட்டத்தில் கடந்த 140 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் மாணவர்களை ஆடுமாடுகளைப் போல நடத்தும் கொத்தடிமைக் கூடாரமாக மாறிவருகிறது. இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்கள் சிலர் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துள்ளனர். செங்காடு போஸ், மோழாண்டிக்குப்பம் மாணவன், எறையூர் ஆல்வின் ஜோஸ், குறிஞ்சிப்பாடி பரதன் இப்போது சிறுதொண்டமாதேவி ராம்குமார் என மாணவர்கள் மரணம் தொடர்பான எந்த வழக்கிலும் ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை. ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும் சாதி அமைப்பினரும் கல்லூரி நிர்வாகத்தை பாதுகாக்க சமரசம் செய்து கொண்டு தமது பிழைப்பு வாதத்தை நிலைநிறுத்தி வருகின்றன.

ராம்குமார்
ராம்குமார்

மாணவர் ராம்குமார் இந்த கல்லூரியில் பி.எஸ்சி வேதியல் பிரிவு இறுதியாண்டு படித்து வந்தார் . கடந்த 9.07.14 அன்று இரவு பத்து மணி அளவில் மாணவர் திருட்டுத்தனமாக செல்போனில் பேசியதாகவும் அதனை கண்டுபிடித்ததும் வார்டனுக்கு பயந்து ஓடி மாடியிலிருந்து விழுந்து விட்டதாகவும் கூறி அந்த மாணவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அங்கு மருத்துவர் சோதித்து இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

ஆனால் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்காமல் சிகிச்சை தருவதாக நாடகம் நடத்த வசதியாக உடலை கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்து விட்டார்கள். தொடர்ந்து ரமணா திரைப்படத்தில் வருவதை போல கல்லூரி நிர்வாகம் நாடகத்தை துவக்கியது.

ராம்குமாரை புதுச்சேரியில் உள்ள (PIMS) தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சையில் இருப்பதாக பெற்றோர்களிடம் இரவு பன்னிரண்டு மணிக்கு தகவல் கூறியிருக்கிறார்கள். அங்கு வந்த பெற்றோர்களிடம் மருத்துவ செலவாக ரூ 30,000 வரை வாங்கி இருக்கிறார்கள்.

மறுநாள் 10.07.14 அன்று காலை 8.48 மணிக்கு இறந்து விட்டதாக கூறி 10.35 மணிக்கு பிணவறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 11.00 மணி அளவில் கல்லூரி நிர்வாகம் ராம்குமார் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக செய்தி ஊடகத்துக்கு பொய் தகவல் கூறியிருக்கிறார்கள்.

இந்த கல்லூரியில் தொடர்ந்து மர்மமான முறையில் நடக்கும் விடுதி மாணவர்கள் மரணங்களை விசாரிக்கக் கோரி  போராடிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் செய்தியை கேள்விப்பட்டவுடன் மாணவர்கள் பிரதிநிதியாக கல்லூரிக்கு சென்றுள்ளனர்.

பெற்றோர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கு பிறகே காவல் துறையினர் விடுதிக்கு மோப்பநாய்களுடன் வந்து சோதனை செய்தனர். அந்த போலீசு நாய் பல இடங்களுக்கு சென்று இறுதியில் ஒரு அறையின் வாசல் முன்பு படுத்துவிட்டது. அந்த அறை மூடி வைக்கப்பட்டிருந்தது. தடயவியல் நிபுணர்கள் பல மாதிரிகளை எடுத்தனர். மாடிப் படிகளில் ரத்தக் கறைகள் இருந்தன. அதையும் சேகரித்து கொண்டார்கள்.

இறுதியாக அந்த அறையை திறக்கக் கோரினோம், நிர்வாகம் மறுத்தது. ஆனால் ஊர் மக்கள் அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அந்த அறை முழுவதும் ரத்தக் கறைகள் இருந்தன. பிறகு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது.

புமாஇமு தோழர்கள் பெற்றோர்கள் சார்பாக வந்த ஊர்மக்களிடம் கல்லூரி நிர்வாகிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை மாணவரின் உடலை வாங்க வேண்டாம் என்று கூறினர். இந்த கல்லூரியில் நடக்கும் அக்கிரமங்களுக்கு இனியாவது முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

“கல்லூரி நிர்வாகத்தையும், விடுதி வார்டனையும் கைது செய்ய வேண்டும். கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்” என்று முழக்கத்தை வைத்து சுவரொட்டி தயாரிக்கப்பட்டு கடலூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.

அன்று இரவு இறந்த மாணவர் வசிக்கும் கிராமத்துக்கு ஏற்கனவே அந்த பள்ளி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களையும் அழைத்து சென்று, “மாணவர் மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளது, கொலையாகவும் இருக்கலாம், உண்மை என்ன விசாரணை மூலமே தெரியவரும்” என்று விளக்கி பேசப்பட்டது. கல்லூரி நிர்வாகி மீதும் விடுதி வார்டன் மீதும் உரிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் உடலை வாங்க வேண்டாம் என்று பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

தோழர்கள் எடுத்த புகைப்படங்களை கொடுத்து ஊரில் உள்ள மற்ற கட்சிக் காரர்களுடனும் உறவினர்களிடமும் பிரச்சாரம் செய்யப்பட்டது. உறவினர்களும் பெண்களும் பெண்கள், “நாளை கட்டாயம் வருகிறேம்” என்று கூறினார்கள். ஊரில் உள்ள பெரியோர்களும்  உறவினர்களும் நாளை தேசிய நெடுஞசாலையில் சாலை மறியல் செய்யப்போவதாக முடிவு செய்தார்கள்.

“சாலை மறியல் நடத்துவதன் மூலம் மக்கள் ஆதரவை பெறமுடியாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் . இல்லையன்றால் நம்மை தடியடி நடத்தி கலைத்து விடுவார்கள். நமக்கு நீதி கிடைக்காது” என்று மக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்  “செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் ரொம்ப பெரியது. அவர்களுடன் மோதி எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார். “யாரோ ஒருவர் பேச்சை கேட்டு போகிறீர்கள்” என்று திசை திருப்பப் பார்த்தார். ஆனால் பெற்றோர்கள் அவரை பொருட்படுத்தவில்லை. மறுநாள் காலை மக்கள் அனைவரும், தோழர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் சென்றனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட ஊர் மக்களும் 60 கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  • கல்லூரி மாணவன் ராம்குமார் மர்மமரணத்திற்கு காரணமாக இருந்த விடுதி வார்டன் டோம்னிக் சேவியர், மற்றும் கல்லூரி தாளாளர் பீட்டர் ராஜேந்திரம் இருவரையும் கைது செய்ய வேண்டும்.
  • தொடர் மர்ம மரணங்களுக்கு முறையான ஒரு நீதி விசாரணை நடத்தவேண்டும்.
  • இந்த கல்லூரியை அரசுடைமையாக்க வேண்டும்

என்று முழக்கமிட்டனர்.

காலை 11 மணிக்கு தொடக்கிய ஆர்ப்பாட்டம் ஒருமணி நேரத்துக்கு பிறகு முற்றுகையாக மாற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் இருவரும் வெளியூருக்கு சென்றுவிட்டதாக கூறியதை அடுத்து சம்பவம் நடந்த கல்லூரியை முற்றுகை இடுவது என்று மக்கள் புமாஇமு தோழர்களும் பேரணியாக சென்றனர். சிறிது தூரம் சென்ற பின்பு காவல் துறையினர் தடுப்பு அரண் வைத்து தடுக்க முயற்சித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆனால் மக்கள் குறிப்பாக பெண்கள் அந்த அரணையும் உடைத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறினர்.

கல்லூரி வளாகத்து நுழைவாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசை குவித்து மக்களை தடுத்து நிறுத்தினர். அந்த வாயில் முன்பாக அமர்ந்து தோழர்கள் எழுச்சிமிகு முழக்கமிட்டனர்.

இதை அறிந்த மாவட்ட துணை ஆட்சியர் சர்மிளா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதனை எதிர் பார்த்து காத்திருந்த ஓட்டு கட்சி பிரமுகர்கள் உடனே பேச்சு வார்த்தைக்கு சென்றுவிட்டனர். ஆனால் புமாஇமு தோழர்கள் பேச்சுவார்த்தையை மக்கள் மத்தியில் செய்யவேண்டும் என்று கூறினர்.

மாணவனின் பெற்றோர்கள் நம்முடன் அமர்ந்து முழக்கத்தை தொடர்ந்தனர். அதில் ஒரு பெண்மணி “பெற்றோர்களை  பாக்காம மத்தவங்கள தனியா அழைச்சு பேரம் பேசரானுவ. இவ்வளவு நேரமா இங்க வெயில்ல உக்காந்து இருக்கோம். அந்த கலக்டர் ஏசியில உக்காந்துக்கிட்டு என்ன புடுங்குறான்” என்றும் ஆவேசமாக கூறினார். மாணவரின் பெற்றோரை பார்த்து, “உம் புள்ளை இறந்துட்டான். இதுக்குமேல இப்படி ஒரு அக்கிரமம்,  உன்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது” என்று உழைக்கும் மக்களுக்குரிய போர்க்குணத்துடன் பேசினார்.

போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் எஸ்.எஃப்.ஐ (சி.பி.எம் மாணவர் அமைப்பு) மாவட்ட செயலாளர் அரசன் இடையில் வந்து நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் போட்டுவிட்டு, நீதி விசாரணை வேண்டும் என்று கூறிவிட்டு,  “மாணவர்களின் ஜனநாயக உரிமையை தடுக்கக் கூடாது. பிராக்டிக்கல்,  இன்டெர்னல் மார்க் என்று மாணவர்களை நிர்வாகம் மிரட்டக் கூடாது” என்றும், ” போலிசு மாணவர்களை படம் எடுப்பது ஜனநாயக மீறல், நிர்வாகத்தை தண்டிக்க வேண்டும்” என்று நைச்சியமாகபேசினார்.

அவரது உரைக்கு பிறகு மாணவர்கள் கலைய தொடங்கிவிட்டனர். பிறகு எஸ்.எஃப்.ஐ அரசன் நமது தோழர் ஒருவரிடம்,  “ஏன் இன்னும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்” என கேட்டார்.  “விடுதி வார்டனை இன்னும் கைது செய்யவில்லை” என்று கூறியதும், வார்டனை கைது செய்துவிட்டார்கள், இடத்தை காலி செய்யுங்கள் என்று அவசரமாக பேசினார். “எஃப்.ஐ.ஆர் எங்கே” என்று கேட்டதும் பதில் பேசாமல் ஓடிவிட்டார். போராட்டத்தை சீர்குலைக்க, மாணவர்களை பிரிக்க முயற்சி செய்யும் போலிக் கம்யூனிஸ்டுகளின் உண்மை முகம் வெளுக்க துவங்கியது

போராட்டத்தில் உறுதியாக இருந்த பெண்கள் மற்றும் பெற்றோர்களை வைத்துக்கொண்டு வாடகை பாத்திரம் வைத்து சமைத்து சாப்பிட்டு விட்டு போராட்டத்தை தொடரலாம் என்று முடிவெடுத்தனர்.

இதற்காக பாத்திரத்தை ஏற்பாடு செய்தபோது ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட போலிசு கும்பல் பாத்திரத்தை எடுத்து வீசி எறிந்து புமாஇமு தோழர்களை கொலைவெறியோடு தடியால் அடித்து தாக்கி போலிசு வாகனத்தில் ஏற்றினர். பிறகு தடியடி நடத்தி அங்கு இருந்த மாணவர்களையும் ஊர்மக்களையும் கலைத்தனர். புமாஇமு தோழர்களை வேனில் ஏற்றி அடித்துக் கொண்டே சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், “போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்” என்று கூறினார்.

கல்வி தனியார் மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் புமாஇமு தோழர்களை ஒடுக்குவதற்கு தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த போலிசுக் கும்பலுக்கு இந்த போராட்டத்தின் மூலம் தோழர்களை சிறையில் அடைக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பெண் தோழர்கள் உட்பட ஆறு தோழர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பொய்வழக்கு போட்டுள்ளனர்.

மகனை இழந்த வயதான பெற்றோர் கைதான தோழர்கள் சென்ற பிறகும் உறுதியை இழக்கவில்லை.  வெளியில் இருக்கும் தோழர்கள், வழக்கறிஞர்கள் உதவியுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை இறந்த மகனின் உடலை வாங்க போவதில்லை என்று உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதற்கு இடையே தோழர்களை கைது செய்து போலிசு நிலையத்தில் வைத்திருந்த போது தடியடியால் சிதறுண்ட ஊர் மக்கள் போலிஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டு, “தோழர்களை விடுதலை செய்” என்று முழக்கமிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி, நியாயம் கிடைக்க சமூக அக்கறையோடு போராடிய பு.மா.இ.மு தோழர்கள் நீதிபதியின் முன்பு நிறுத்தப்பட்ட போது, தோழர்கள் தங்கள் மீது போலிசு நடத்திய கொலைவெறி தாக்குதலை நீதிபதியிடம் விவரித்தனர். ஆனால், நீதிபதி காவல்துறை மீதே புகார் கூறுகிறீர்களா என்று எரிந்து விழுந்து காவல் துறை கேட்ட ‘நீதி’யை வழங்கினார். தாக்கப்பட்ட மாணவர்கள் கடலூர் மாவட்ட பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கிருந்த மருத்துவர் தோழர்களை தொட்டும் பார்க்காமல், முகத்தையும் பார்க்காமல் சீட்டு எழுதிக் கொடுத்தார். பிறகு தோழர்களை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

அரசு, அரசாங்கம், போலிசு, நீதிமன்றம், ஊடகம், அரசியல் கட்சிகள் அனைவரும் தனியார் பள்ளி கல்லூரி கல்வி வியாபாரிகளின் மாஃபியாக்களின் அடியாள் படையாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்க வேண்டும், அரசு கல்வித் துறை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று போராடி வரும் பு.மா.இ.மு செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பள்ளியில் சென்ற ஆண்டு நடந்த மர்மமரணத்தைக் கண்டித்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகிறது. எந்த அடக்குமுறைக்கும் புமாஇமு அஞ்சாமல், மாணவர்களை அணிதிரட்டி தொடர்ந்து போராடும்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்.

னித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில், செந்தில் குமார் ஆகியோர்  கடலூர் மத்திய சிறையில் தோழர்களை சந்தித்தனர். பு.மா.இ.மு. தோழர்கள் உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றனர்.

திங்கள் (ஜூலை 14, 2014) அன்று மீண்டும் பார்க்க முயற்சித்த போது போராட்டத்தில் இருப்பவர்களை சந்திக்க அனுமதிக்க முடியாது என சிறை விதிகளை காரணம் காட்டி எழுத்து பூர்வமாக மறுத்து விட்டார் சிறை துறை கண்காணிப்பாளர்.

சிறையிலிருந்து தோழர்கள் எமக்கு அனுப்பிய மனுவை அனுப்புகிறோம்.

[மனுவை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

மஉபாமை போஸ்டர்

தகவல் மனித உரிமை பாது காப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.

சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை

2

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – 2

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – முதல் பகுதியைப் படிக்க அழுத்தவும்

ரலாறு நெடுக ஒன்றைக் கண்டு வந்திருக்கிறோம். மிகச் சிறுபான்மையினரான ஆளும் வர்க்கத்தினர் தமது அதிகாரம், ஆதாயம், செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசு நிறுவனங்களையும் சமூக அமைப்புகளையும் சார்ந்து நிற்கின்றனர். குறிப்பாக, கடந்த காலத்தில் காலனிய நாடுகளில் சுரண்டப்படும் மக்களைக் கட்டுப்படுத்தவும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் ஆத்திரத்தை மத, சமூக முரண்பாடுகள், மோதல்களின் பக்கம் திசைதிருப்பிவிடுவதற்காக ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தினர் உள்நாட்டு, வெளிநாட்டு மத நிறுவனங்களுக்கு நிதி மற்றும் ஆதரவளித்து வந்தனர்.

மோடி அரசு அதிகாரிகள்
(இடமிருந்து) மோடி அரசில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் இயக்குநர் அஜித் தோவால்; மோடியின் முதன்மைச் செயலராகியுள்ள அந்த ஃபவுண்டேசனின் உறுப்பினர் நிர்பேந்திர மிஸ்ரா; கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அதனின் நிர்வாகக்குழு உறுப்பினர் பி.கே.மிஸ்ரா

இந்நிறுவனங்கள் தம்மைப் பொதுவில் சேவை-தொண்டு அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டாலும், தமது மத அடையாளங்களையும் மத மாற்ற நோக்கங்களையும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்காக ஊழியம்-உளவு வேலை செய்ய்வதையும் மறைத்துக் கொள்ளவில்லை. ஆன்மீக-மதபோதனைகளோடு, உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்றவைகளை இலவசமாக வழங்கி மக்களை ஈர்த்தார்கள். காலனிய நாடுகளில் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய அடக்குமுறை, சுரண்டல், சமனற்ற சமூக உறவுகள் காரணமாக இந்த வகை சேவை-தொண்டு அமைப்புகள் செல்வாக்குப் பெற்றன.

ஆனால், காலனிய விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் இந்நாடுகளில் வலுப்பெற்ற பிறகு இந்த வகை சேவை-தொண்டு அமைப்புகள் மீது மக்களுக்குச் சந்தேகங்கள் தோன்றி, அவற்றின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. சீனா, கியூபா புரட்சிகளின் வெற்றி, ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளில் காலனிய எதிர்ப்பு இயக்கங்களின் எழுச்சிகள், குறிப்பாக, வியத்நாம் – லாவோஸ் – கம்போடியாவில் விடுதலைப் போர்களில் பாய்ச்சல் ஆகியவை காரணமாக தனது நேரடி ஆதிக்கத்தை இழக்கும் நாடுகளில் (முன்னாள் காலனிய நாடுகள், சோவியத் ஆதரவு நாடுகள்) ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து தலையீடு செய்ய்வதற்கும், சமூக ஆதரவு-அடித்தளத்தைப் பெறுவதற்கும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்காக ஊழியம்-உளவு வேலை செய்ய்வதற்கும் வசதியாக புதிய வகை சேவை-தொண்டு அமைப்புகளாக அரசுசாரா தொண்டு நிறுவனங்களைத் (NGO) திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டனர்.

விவேகானந்தா ஃபவுண்டேஷன்
பிரதமர் அலுவலகத்திற்கு ஆள் சேர்ப்பு மையமாக மாறியுள்ள தில்லியிலுள்ள விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் தலைமை அலுவலகம்.

அவற்றுக்குப் புதிய சித்தாந்த விளக்கத்தையும் நடைமுறை வழிகாட்டுதல்களையும் ஏகாதிபத்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முன்வைத்தார்கள். ஆன்மீக-மத போதனைகளைவிட மக்கள் தமது உடனடி, அன்றாடப் பொருளாயதத் தேவைகளையே முக்கியமானவையாகக் கருதுகின்றனர். அதனாலேயே அவற்றுக்கான போராட்டங்களில் மக்களை இடதுசாரி இயக்கங்களால் திரட்ட முடிகிறது. ஆகவே, இடதுசாரி இயக்கங்களிடமிருந்து மக்களையும் அதன் முன்னணியாளர்களையும் ஈர்ப்பதற்காக அவர்களின் உடனடி, அன்றாடப் பொருளாயதத் தேவைகளுக்கான சீர்திருத்தங்களைக் கோரும் போராட்டங்களைக் கையிலெடுக்க வேண்டும். பழையவகை சேவை – தொண்டு அமைப்புகள் மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தன; அதாவது, இலவசமாக வழங்கின. அதற்கு மாறாக, மக்கள் தமது தேவைகளைத் தாமே போராடிப் பெறுவதற்கு அவர்களை அமைப்பாக்கி, வழிநடத்தும் புதிய வகை சேவை-தொண்டு அமைப்புகளாக அரசுசாரா தொண்டு நிறுவனங்களை (NGOs) உருவாக்கிக் கொண்டனர். அதேசமயம், அவை அரசியலற்றதாகவும் கம்யூனிஸ்டுகளையும், வன்முறைப் புரட்சிப் போராட்டங்களையும் விலக்கி வைப்பதாகவும் இருக்கவேண்டும் என்று வரையறுத்துக் கொண்டனர். (ஆதாரம்: Paulo Freire: Paeday of the Oppressed; Peruvian priest Gustavo Gutierrez : Liberation Theology; WSF reports; பிற….)

இத்தகைய சித்தாந்தம், கொள்கைகள் அடிப்படையில் நிறுவப்பட்ட புதிய வகை சேவை-தொண்டு அமைப்புகள் கடந்த 50,60 ஆண்டுகளாக மக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அரசியல், சித்தாந்தபூர்வமான பிரமைகளைத் தோற்றுவிப்பதற்காகவும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளுபவை புற்றீசல்களைப் போன்று பல்கிப் பெருகிப் போயுள்ளன.

கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுருவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களைச் சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை பெருநிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசைதிருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழல், சமூக முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர்.

10-c-1

பல்வேறு பிரிவு மக்களுடைய நியாயமான தேவைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும், வாழ்வியல் உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் நீதிக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் சமூக உரிமைகளுக்காகவும் பாடுபடப் போவதாகக் கூறிக்கொண்டு அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) அமைக்கப்படுகின்றன. ஆனால், அந்நிறுவனங்கள் கையிலெடுக்கும் பல பிரச்சினைகளை அதிகரித்த அளவில் நிறைவேற்ற முடியாமல் தோற்றுப் போகின்றன. அப்படி அவற்றை முழுமையாக நிறைவேற்றித் தருவது அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் நோக்கமுமல்ல. அதற்காக இறுதிவரை போராடி வெற்றி பெறுவதற்கான வழிமுறையும் அவற்றிடம் இல்லை. அவற்றுக்காக இறுதிவரை போராடுவது அரசுசாராத் தொண்டு நிறுவனங்களின் எல்லாவகையிலான புரவலர்களான ஏகாதிபத்திய எஜமானர்களுக்குத் துரோகமிழைப்பதாகும். இதனால் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் கையிலெடுக்கும் பல பிரச்சனைகளைத் தொங்கலில் விடுவதும் இடையிலேயே கைகழுவி விடுவதும் அதிகமாகி வருகின்றன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டாலர்கள் பணம் புரளும் பல லட்சம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், அவற்றில் நமது நாட்டில் மட்டும் பல பத்தாயிரம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவை மிகப்பெரும்பாலும் ஐரோப்பிய-அமெரிக்க-ஜப்பானிய அரசு மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையாக ஆண்டுதோறும் பெறுபவை. பெரிய அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லாம், கொள்ளை இலாபமடிக்கும் ஏகபோக கார்ப்பரேட் தொழில் கழகங்களின் தலைமை நிர்வாகிகளுக்குச் சமமான ஊதியம், சொகுசுக் கார், அடுக்குமாடி பங்களாக்கள் முதலான வசதிகளும் பெறுகிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச மாநாடுகளுக்கு விமானங்களில் பறக்கிறார்கள்; பன்னாட்டு கார்ப்பரேட், நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் தோளோடுதோள் உரசிக் கொண்டு உலகின் பல நாட்டு அரசுகளின் கொள்கை முடிவுகளை விவாதிக்கிறார்கள், அவற்றுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இந்தக் கொள்கை முடிவுகள் பெரும்பாலும் அந்நாடுகளின் ஏழை-எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரானவையாக இருக்கின்றன. இந்த நிலையில், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) ஒரு பரிணாமத்தை அடைந்தன. பல்வேறு பிரிவு மக்களுடைய அடையாள அரசியல் சார்ந்த பகுதிக் கோரிக்கைகள், வாழ்வியல் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற சமூகச் சீர்திருத்தங்களுக்கான செய்யல்திட்டங்களை முதன்மையாகக் கொண்டிருந்தன. பொதுவில் அரசியல், அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்களிடையே நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பிழைப்புவாத நோக்கிலான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் திரட்டி வந்தனர்.

விவேக் தோப்ரா நூல் வெளியீடு
விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் பொருளாதார ஆய்வு மைய துணைத்தலைவர் விவேக் தேப்ராவை இணை ஆசிரியராகக் கொண்ட “இந்தியாவை மீண்டும் தடகளத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துவது” என்ற நூலை வெளியிடும் மோடி.

ஆனால், இவை அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஏகாதிபத்திய எஜமானர்களுடைய பன்னாட்டு அரசியல் நலன்களுக்குப் போதுமானவையாக இல்லை. அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கிய குடிமைச் சமூகங்கள் (Civil Society Organizations) என்ற புதிய மேடைகளை உலகின் பல நாடுகளிலும் அவர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் கடந்த காலத்தில் தாம் அறிவித்துக் கொண்ட அரசியல் வரம்புகளைத் தாண்டி, தற்போது நிறுவப்பட்டுள்ள அரசுகளுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கவும், அரசு அமைப்புக்குள்ளாகவே நுழைந்து அதன் கொள்கை வகுப்பு -அமலாக்க அமைப்புகளில் பங்கேற்கவும் குடிமைச் சமூகங்கள் என்ற அரசியல்-அமைப்புக் கருவியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்த அடிப்படையில், இந்த நோக்கில், இந்தப் பின்னணியில் தோற்றமெடுத்ததுதான் ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் கொள்கைப் பிரகடனங்களும்” நடைமுறைகளும் இக்கருத்துக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

சொல்லப்போனால், குடிமைச் சமூகங்கள் (Civil Societies) எனும் அரசியல்-அமைப்புக் கருவி முற்றிலும் புதியதான கண்டுபிடிப்பு அல்ல. சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலான முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்துவதற்கான அரசியல்-அமைப்புக் கருவிகளாக மேலை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்தியவைதாம். முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்ற கேள்வி உலகமெங்குமுள்ள முற்போக்காளர்கள் பலரிடம் இன்னும் நீங்காத கேள்வியாகவே நீடிக்கிறது. ஆனால், இக்கேள்விக்கான பதில்கள் இன்றைய இணையத் தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்று போலந்தில் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) நிறுவிக் கொள்வதற்கான அனுமதி 1989-ன் மத்தியில் முழு நடைமுறைக்கு வந்தது. ஆனால், பழைய கட்டமைப்புக்குள்ளாகவே அதன் இறுதிக் கட்டத்தில் அங்கே குடிமைச் சமூகங்கள் மிக விரைவான வளர்ச்சி காணத் தொடங்கி விட்டன.” (http://www.cbos.pl/PL/wydarzenia/04_konferencja/Civil%20society%20in%20Poland.pdf)

சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலான முன்னாள் சோசலிச நாடுகளில் மட்டுமல்ல, ஜனநாயமில்லாத நாடுகளில்” ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்துவதற்கும் அல்லது இந்தியா போன்ற வளரும் ஜனநாயக நாடுகளில்” (தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வராத நாடுகளை ஏகாதிபத்தியங்கள் இப்படித்தான் அழைக்கின்றன) ஆட்சி மாற்றங்களை அரங்கேற்றுவதற்கும் அரசுசாராத் தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூகங்களை அரசியல் – அமைப்புக் கருவிகளாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன.

10-c-2குறை வளர்ச்சியுள்ள நாடுகளில் ஆட்சி மாற்றம் (Regime Change) என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் போர்த் தந்திரத்தில் குடிமைச் சமூகங்கள் முக்கிய அரசியல் -அமைப்புக் கருவிகளாக உள்ளன. குறிப்பாக, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கம் நோக்கிலான மறுகாலனியாக்கம் என்கிற அரசியல் கொள்கையும் திணிக்கப்பட்ட பிறகு இந்நாடுகளில் அரசின் சமூக, அரசியல், பொருளாதாரப் பாத்திரம் குறித்து புதிய விளக்கங்களும் வரையறைகளும் அளிக்கப்படுகின்றன.

பொதுவில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு முதலான சில விவகாரங்கள் தவிர சமூகம், மதம், கல்வி-மருத்துவம், பண்பாடு போன்றவற்றிலோ, குறிப்பாக மக்கள் நலன், திட்டமிடுதல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதார விவகாரங்களிலோ அரசு தலையீடு செய்ய்யக்கூடாது; இந்த விவகாரங்களைச் சந்தையும் சமூகமும் மூலதன நிர்வாகிகளும் (அதாவது கார்ப்பரேட் முதலாளிகளும்) கவனித்துக் கொள்வார்கள்; சாரமாகச் சொல்வதானால், கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டு தொழிற் கழகங்களின் நலன்களுக்கேற்ப செய்யல்படும் எலும்புக் கூடு போன்ற அரசு அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும்; இந்த வரம்பைத் தாண்டி அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவது குடிமைச் சமூகத்தின் பொருளாதார-தொழில் உரிமைகளை மறுப்பதும் எதேச்சதிகாரமும் ஆகும். – இவைதாம் அரசின் கடமைகள், பணிகள், வரம்புகள் குறித்த ஏகாதிபத்திய கைக்கூலிகளது பிரச்சாரம்.

அரசியல் கட்சிகளின், தலைவர்களின் இலஞ்ச- ஊழல், அதிகார முறைகேடுகள், நம்பிக்கைத் துரோகங்கள், கிரிமினல் குற்றங்கள் முதலான சீரழிவுகள், அவர்களுக்கெதிரான மக்கள் வெறுப்பு ஆகியன மேற்படி பிரச்சாரத்துக்குச் சாதகமாக அமைகின்றன. இவ்வாறு அரசும், அரசியல் தலைவர்களும் இழிவுற்று, சிறுமைப்பட்டுப் போகும் நிலையில், நாட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் சிந்தனை குழாம்கள்- குடிமைச் சமூகங்களின் பங்குபாத்திரம் முன்தள்ளப்படுவதையும் முக்கியத்துவம் பெறுவதையும் புரிந்து கொள்ள முடியும்.

சிந்தனைக் குழாம் உச்சிமாநாடு
சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) என்ற அமைப்பும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2013 ஜூன் 12-14 தேதிகளில் நடத்திய ஆசிய சிந்தனைக் குழாம் உச்சி மாநாடு.

கடந்த ஏப்ரல்(2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம்” என்ற கட்டுரையில் சிந்தனைக் குழாம்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் ஆகிய இரு புதிய விசயங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். அதில் கீழ்க்கண்ட கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூகம், மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் “கொள்கை” முடிவெடுக்கவும், “திட்டங்கள்” வகுக்கவும் பொறுப்பேற்கும் மந்திரிகளில் ஏறக்குறைய எவருக்குமே அந்தத் “தகுதி” கிடையாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த காலியிடத்தை நிரப்பவும் இந்த உண்மையை இப்போது அப்பட்டமாகவே ஒப்புக்கொள்ளவும் வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது. சிந்தனைக் குழாம்கள் (‘‘திங்க் டாங்க்ஸ்’’) என்ற பெயரில் தொழில்முறை கொள்கை ஆய்வாளர்கள்-ஆலோசகர்களைக் கொண்ட அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு சிந்தனைக் குழாம் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பது சமூகக் கொள்கைகள், அரசு நிர்வாகம், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்ய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும் சேவை நிறுவனங்கள் ஆகும்.

ரக்ஷாக் ஃபவுண்டேசன், விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன், இந்தியன் கவுன்சில் ஆன் குளோபல் ரிலேஷன்ஸ் போன்றவை இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் சில. மொத்தம் 269 சிந்தனைக் குழாம்களைக் கொண்டுள்ள நமது நாடு, அவற்றின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக்கழகக் கல்வி, உணவுப் பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாகச் சீர்திருத்தங்கள், அவற்றைக் கனினிமயமாக்கம்-நவீனமயமாக்கம் செய்ய்தல் – இப்படிப் பன்முகப் பணிகளில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

இந்தப் பன்முகப் பணிகளில் சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செய்யல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்ய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கைளையும், திட்டங்களையும் அரசை ஏற்கச் செய்யும் அழுத்தம் கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது – என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

சிந்தனைக் குழாம்கள், குடிமைச் சமூகங்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் முதலான இவையெதுவும் பலரும் நம்புவதுபோல தனிநபர் முன்முயற்சியால் தன்னியல்பாக உருவானவை அல்ல. பன்னாட்டு தொழிற்கழகங்கள், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற நிறுவனங்கள், ஏகாதிபத்திய அரசுகளின் அரசியல், இராணுவ-உளவு, சமூக, கல்வி-பண்பாட்டு ஆய்வு நிறுவனங்களால் திட்டமிட்டு உருவாக்கி, நெறிப்படுத்தி, இயக்கப்படுபவை.

அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் உள்ள அயலுறவுக் கொள்கை ஆய்வகத்தில் 1989-ம் ஆண்டு “சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்” (TTCSP) அமைக்கப்பட்டது; அது, 2008-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்துக்கு மாற்றப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளாகச் சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது. சர்வதேச அளவிலான கொள்கை-ஆய்வு, கொள்கை-திட்டங்கள் வகுப்பு மற்றும் ஆலோசனை நிறுவனங்களையும் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய சமூக அமைப்புகளையும் கொண்ட ஒரு வலைப்பின்னல் உலகம் முழுவதும் கட்டமைக்கப்படுகிறது. அவை உலகின் பற்பல நாடுகளின் அரசுகளோடு நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.

இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் ஒன்றாக பு.ஜ. இதழ் குறிப்பிட்டிருந்த “விவேகானந்தா இன்டர் நேஷனல் ஃபவுண்டேசன்” இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி நிர்வாகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. “தில்லியிலுள்ள ‘சிந்தனைக் குழாம்’ புதுப் பிரதமர் அலுவலகத்துக்கான ஆள்சேர்ப்பு மையமாகத் தற்செயலாக உருவாகியிருக்கிறது” என்ற தலைப்பிட்டு கடந்த ஜூன் 17-ந்தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு செய்தியொன்று வெளியிட்டிருக்கிறது. அதில்,

தலைநகரின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளது, “விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன்”. தொடங்கி ஐந்தாண்டுகளான இந்த சிந்தனைக் குழாம் புதுப் பிரதமர் அலுவலகத்துக்கான ஆள்சேர்ப்பு மையமாகத் தற்செயலாக உருவாகியிருக்கிறது. விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனுடைய இயக்குநரான அஜித் தோவால் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகியுள்ள அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனுடைய உறுப்பினர் நிரிப்பேந்திர மிஸ்ராவும், கூடுதல் முதன்மைச் செய்யலராக அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மூத்த இணையர் பி.கே. மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மோடி கடந்த வாரம் பிரதமரான பிறகு வெளியிட்ட முதல் நூல் “இந்தியாவை மீண்டும் தடகளத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துவது”; இது விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனுடைய பொருளாதார ஆய்வு மையத்தின் துறைத்தலைவர் (டீன்) விவேக் தேப்ராயை இணை ஆசிரியராகக் கொண்டது. ஃபவுண்டேசனுடைய அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துறைத்தலைவர் (டீன்) வி.கே. சரஸ்வத் (இராணுவத்தின் ஆயுதத் தளவாட ஆய்வக முன்னாள் பொது இயக்குநர்) மோடி அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர். சிதம்பரத்திற்குப் பதிலாக நியமனம் பெறுவார்.

“விவேக் தேப்ராயினுடைய நூலை வெளியிட்ட மோடி, சிறந்த கொள்கை கட்டுமானங்களை உருவாக்குவதற்காக அறிவுஜீவிகளது சிந்தனைக் குழாம்களைக் கணிசமான அளவு செழுமைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

(இந்த விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன் என்ற சிந்தனைக் குழாம், விவேகானந்தா கேந்திரம் ஆகியன ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு பிரிவு அமைப்பினால் தொடங்கி நடத்தப்படுவது. இந்த விவேகானந்தா கேந்திரத்தின் தோற்றம் குறித்த விவரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜனநாயகத்தில் எழுதி தனி வெளியீடாகவும் கொண்டு வந்திருக்கிறோம்.)

விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன் தன்னைக் கட்சி சார்பற்ற அமைப்பென்று சொல்லிக்கொண்டாலும் அது காங்கிரசு கூட்டணிக்கு எதிரான இயக்கங்கள் நடத்திய சக்திகளை அணிதிரட்டுவதற்கு மேடை அமைத்துத் தருவதில் ஒரு முக்கிய பங்காற்றிக் கொடுத்துள்ளது. யோகாகுரு ராமதேவ் தலைமையில் ஒரு ஊழல் எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது என்ற முடிவு விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனில்தான் எடுக்கப்பட்டது என்று 2012 ஆகஸ்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு எழுதியது. அதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தலைவர் கோவிந்தாச்சார்யாவின் ராஷ்ட்ரீய சுவபிமான் அந்தோலன் என்ற அமைப்போடு விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன் இணைந்து ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான ஒரு கருத்தரங்கம் நடத்தியது. ராமதேவ், அரவிந்த் கெஜரிவால், கிரண் பேடி ஆகியோர் அதில் பங்கேற்றனர். அக்கருத்தரங்கின் முடிவில் ராமதேவைப் புரவலராகவும் கோவிந்தாச்சார்யாவை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு “ஊழல் எதிப்பு முன்னணி” அமைக்கப்பட்டது. அஜித் தோவாலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் தலைவர் எஸ். குருமூர்த்தியும் அதன் உறுப்பினர்களாயிருந்தனர். (ஆதாரம்: ஜூன் 17-ந்தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சிந்தனைக் குழாம்கள் – குடிமைச் சமூகங்கள் நமது நாட்டில் எந்த அளவு, எவ்வாறு வேரூன்றியுள்ளன என்பது இதிலிருந்து தெளிவாகும் என்று நம்புகிறோம்.

– தொடரும்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

பட்ஜெட் 2014 – பாமரனுக்கு ஆப்பு முதலாளிக்கு சோப்பு

45

ன்மோகன் சிங் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? மன்மோகன் சிங் ஆட்சி தாங்க முடியாத கொடூரமாக இருந்தது, மோடி ஆட்சி கொடூரமாக தாங்க முடியாததாக இருக்கிறது.

அருண் ஜெட்லி - நிர்மலா சீத்தாராமன்
பட்ஜெட் நாளன்று நிதி அமைச்சர் ஜெட்லியும், நிர்மலா சீத்தாராமனும் துறை அதிகாரிகளுடன் படத்துக்கு நிற்கின்றனர். (படம் : நன்றி deccanchronicle.com)

காலையில் மளிகைக் கடைக்குப் போய் “ஒரு ரெண்டு ரூபாய்க்கு பச்சை மிளகா கொடுங்க”ன்னு கேட்டால், “ரெண்டு ரூபாய்க்கா?” என்று கொஞ்சம் சங்கடப்பட்டார் கடைக்கார அம்மா.

“ஏன், விலை அதிகமா, சரி ஒரு ஏழெட்டு வர்ற மாதிரி போதும்”-என்று கேட்டால், “இல்ல 50 கிராமே 4 ரூபாய்” என்று 2 ரூபாய்க்கு 4 பச்சை மிளகாய் கொடுத்தார். அதாவது ஒரு மிளகாய் 50 காசுகள். கால் கிலோ தக்காளி 15 ரூபாய். “நேத்து பெட்டி 500 ரூபா வித்த தக்காளி இன்னைக்கு 750 ரூபாய்க்கு விக்குது, என்ன செய்றது” என்றார் கடைக்காரர்.

‘மோடி வந்ததும் விலைவாசி எல்லாம் கொறையும், பதுக்கல்காரர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிப் போவாங்கன்னு சொன்னாங்களே, இப்ப நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே?’ என்று கேட்டால், “எல்லாத்துக்கும் மோடி வர முடியுமா? அவரு வந்தா தக்காளி விளைவிக்க முடியும்? அவரு வந்தா பச்சை மொளகா கொண்டு வர முடியும்? அதுவும் ஆட்சிக்கு வந்து 2 மாசம் கூட ஆகல” என்று மோடி ரசிகர்கள் மிரட்டுகிறார்கள். இதே நபர்கள்தான் தேர்தலுக்கு முன்னாடி “மன்மோகன் சிங்குதான் குற்றவாளி, அவரோட ஆட்சியை ஒழிச்சுக் கட்டி, மோடி வந்துட்டா நம்ம பிரச்சனை எல்லாம் ஒரே ராத்திரியில சரியாயிரும்”னு மோடி லேகியத்தை விற்றுக் கொண்டிருந்தவர்கள்.

சரி, தக்காளி, பச்சை மிளகாய் விலையை விட்டு விட்டு, அடுத்த 5 வருடங்களில் விலைவாசியை குறைக்க, வேலை வாய்ப்புகளை பெருக்க மோடி அரசு என்ன திட்டம் போட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள மோடி அரசின் வரவு செலவு நிதிநிலை அறிக்கை பற்றி பார்ப்போம். தமிழ் இந்து நாளிதழில் இராம. சீனுவாசன், பாஜக அரசின் பட்ஜெட், ‘செலவைக் குறைத்து (மானியங்கள் வெட்டு), வரவை அதிகரிப்பதன் மூலம் (முதலாளிகளுக்கு வரிக் குறைப்பு, பொதுமக்களுக்கு வரி உயர்வு) நிதி பற்றாக்குறையை குறைத்திருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.

வரி வருவாயில் பெரும்பகுதி சேவை வரி உயர்வின் மூலம் பெற திட்டமிட்டுள்ளது மோடி அரசு. சேவை வரி வருவாய் இந்த ஆண்டு 30% உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நேரடி வரிகளான கார்ப்பரேட் வரி, பணக்காரர்களின் தனிநபர் வருமான வரி இவற்றை உயர்த்தாமல், ஏழைகளை அதிக அளவில் பாதிக்கும் வரி வருமானம் அதிகரிக்கப்படவிருக்கிறது. 2008-09 ஆண்டில் ரூ 4.14 லட்சம் கோடியாக இருந்த முதலாளிகளுக்கான வரிச் சலுகை நடப்பு ஆண்டில் ரூ 5.72 லட்சம் கோடியாக உயரவிருக்கிறது. சென்ற ஆண்டு இது ரூ 5.66 லட்சம் கோடியாக இருந்திருக்கிறது.

மக்களுக்கு மானியமும், முதலாளிகளுக்கு வரிவிலக்கும்
மக்களுக்கு மானியமும், முதலாளிகளுக்கு வரிவிலக்கும் (படம் : நன்றி தி இந்து)

நடுத்தர வர்க்கத்துக்கு உதவியாக வரி விதிப்பதற்கான வருமானம், வரி விலக்குக்கான சேமிப்பு, வரி விலக்குக்கான வீட்டுக் கடன் வட்டி ஆகியவற்றின் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம், சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தும், ஆண்டு வருமானம் ரூ 20 லட்சம் உடைய ஒருவருக்கு ரூ 36,000 வரிச் சலுகை கிடைக்கும். ரூ 12 லட்சம் ஆண்டு வருமானம் உடையவருக்கு ரூ 25,570 வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், இந்த உயர் நடுத்தர வர்க்க நபருக்கு கிடைக்கவிருக்கும் சலுகை, பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் வாயு விலை, ரயில் கட்டண உயர்வு என்று மறுபக்கத்தில் திருடப்பட்டு விடும்.

முதலாளிகளுக்கு வரி விலக்கை அதிகரித்து, நடுத்தர வர்க்கத்துக்கு சில ரொட்டித் துண்டுகளை வீசியிருக்கும் மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, கனிமங்கள், அலைக்கற்றை விற்பனை மூலம் வரி சாராத வருவாயை 25% அதிகரிக்க விருக்கிறது. அதாவது, இன்னும் சில ஆண்டுகளில் கூடுதல் கட்டணத்தில் தனியார் ரயில் சேவை, உயர் விலையில் தொலைபேசி சேவை, அதிக கட்டணத்தில் மின்சாரம் என்று மக்கள் மீதான சுமை அதிகரிக்கப்படும்.

ஒரு பக்கம் மறைமுகமான அடி என்றால் இன்னொரு பக்கம் நேரடியாக மானிய வெட்டு என்ற வகையில் அடி விழவிருக்கிறது. 2012-13 ஆண்டில் ரூ 2.47 லட்சம் கோடியாக இருந்த மானிய செலவு 2013-14 ஆண்டுக்கு ரூ 2.45 கோடியாக குறைந்திருக்கிறது. இது 2008-09 ஆண்டில் ரூ 2.19 லட்சம் கோடியாக ஆக இருந்தது.

சமையல் வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உணவுப் பொருட்கள், விவசாயிகளுக்கு உரம் இவற்றிற்கான மானியங்கள் குறைக்கப்படவிருக்கின்றன. ரயில் கட்டணம் ஏற்கனவே உயர்ந்து விட்டது. கேஸ் விலை உயரும், பெட்ரோல் விலை உயரும், உர விலை உயரும். இதுதான் மன்மோகன் சிங் செய்தது, இதையேதான் மோடியும் செய்கிறார். முன்பை வீட தீவிரமாக. .

நிதிப் பற்றாக்குறையை குறைக்க ‘உணவு மானியம், உர மானியம் போன்ற வீண் செலவுகளை ஆய்வு செய்து குறைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் அரசும் முதலாளித்துவ ஆய்வாளர்களும், முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் பல லட்சம் கோடி ரூபாய் வரி விலக்கினால் என்ன பயன், அதனால் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாகின என்று இதுவரை எந்த ஆய்வும் செய்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் வரி விலக்கை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

தேர்தலின் போது மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, இன்றைக்கும் மோடி அரசுக்கு சப்பை கட்டிக் கொண்டிருக்கிற டெக்கான் குரோனிக்கிளை எடுத்து பார்த்தால், அதில் இப்படி ஒரு தலையங்கம்.

மோடி - ஜெட்லி
படம் : நன்றி தி இந்து

சந்தை அடிப்படைவாதிகள், “மானியங்கள் ஏன் ஒழித்துக் கட்டப்படவில்லை? வரி விதிப்பை முழுக்கவே ஒழித்துக் கட்டி முதலீட்டுக்கு சாதகமான சூழலை ஏன் உருவாக்கவில்லை? தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கு வசதியாக தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏன் மாற்றப்படவில்லை? பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான திட்டத்தை பட்ஜெட்டிலேயே ஏன் அறிவிக்கவில்லை” என்று அவசரப்படுகிறார்கள் என ஆரம்பிக்கும் அந்த தலையங்கம் மோடியின் அரசு அவர்கள் விரும்பும் பொதுவான திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாக ஆறுதல் சொல்கிறது.

“பா.ஜ.கவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. இந்த ஆண்டு வரவிருக்கும் ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றால்தான் அந்த நிலைமையை மேம்படுத்த முடியும். அதை சாதித்த பிறகு அரசியல் விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல் சுதந்திர சந்தை வாதிகள் விரும்பும் மாற்றங்களை மோடி அரசு செய்ய ஆரம்பிக்கும்.”

“சட்டசபை தேர்தல்களில் வாக்குகளை அள்ளும் நோக்கத்தில்தான் பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்ட நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு சில வரிச்சலுகைகள் வழங்கியிருக்கிறது மோடி அரசு. மேலும் கிராமப் புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு உதவும் 100 நாள் வேலை திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் இவற்றில் கை வைக்காமல் இருக்கிறது” என்று விளக்கி விட்டு,  “மாநில சட்டசபை தேர்தல்கள் சீக்கிரம் வரவிருக்கும் நிலையில் மோடி பொருளாதார அடிப்படைவாதிகள் விரும்பும் வகையில் செயல்பட முடியவில்லை. கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்” என்கிறது டெக்கான் குரோனிக்கிள். நீண்ட கால நோக்கங்களுக்கு அச்சாரமாக அரசு செலவுக் குறைப்பு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு, தனியார்-அரசு கூட்டு போன்ற வாக்குறுதிகளை சுட்டிக்காட்டுகிறது.

மோடி மன்மோகன் சிங்கின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதோடு நில்லாமல் மக்கள் மீது மேலும் கூடுதல் சுமைகளை இறக்கி வைப்பார், முதலாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வார் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. தொழில்துறை வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம், விவசாய வளர்ச்சி என அடிப்படை துறைகளில் சுயசார்பு பொருளாதாரத்தை முடக்கிப் போடும் உலக வர்த்தகக் கழகத்தின்  கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்திய அரசு இப்போது ரியல் எஸ்டேட் குமிழிகளை உருவாக்குவதன் மூலம்தான் ஓரிரு ஆண்டுகள் வளர்ச்சி என்று போக்கு காட்ட முடியும்.

ஜெயலலிதா, கருணாநிதி
நவீன நகரங்கள் கட்டுவதற்கான காண்டிராக்டுகளை தத்தமது கட்சிக்காரர்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற அக்கறை இவர்களை மோடியின் கால்களை சுற்றி வரச் செய்கிறது.

அந்த வகையில் 100 நவீன நகரங்கள் அமைக்கப் போவதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொன்னேரியில் ஒரு நவீன நகரம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, வேலூர், திருப்பூர் என சிறுநகரங்களை எல்லாம் மாநகராட்சி ஆக்கி ரியல் எஸ்டேட் மதிப்புகளை ஊதிப் பெருக்கி, ஆளும் கட்சியினருக்கு புதிய காண்டிராக்டுகளை வாரி வழங்கியதைப் போல இப்போது இந்த நவீன நகரங்கள் திட்டம் உருவெடுத்து வருகிறது. இதில் நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி விட்டு பிறகு இந்த ரியல் எஸ்டேட் குமிழ் உடையும் போது அதன் சுமையையும் சேர்ந்து சுமக்க வேண்டும்.

காங்கிரஸ் அரசுகள் நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்களை திட்டங்களுக்கு சூட்டி மக்களுக்கு மொட்டை போட்டதை மாற்றி, 1951-ல் பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கிய சியாமா பிரசாத் முகர்ஜி பெயரில் RURBAN mission, ஜனசங்க தலைவர் தீன்தயாள் உபாத்யாயா பெயரில் கிராம் ஜ்யோதி யோஜனா, பனாரஸ் இந்து பல்கலைக் கழக ஆசிரியர்  பண்டித மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய ஆசிரியர் பயிற்சி திட்டம் என்று இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பெயர்களை சூட்டி மகிழ்கிறார் மோடி. இதில்தான் மோடி அரசின் பட்ஜெட் மன்மோகன் சிங் பட்ஜெட்டுகளிலிருந்து மாறுபடுகிறது.

இதை இன்னும் விரிவுபடுத்தி கோட்சே, பிரக்யா சிங், அசீமானந்தா, ஆஸ்ரம் பாபு, நித்தி போன்ற மேன்மக்கள் பெயரில் திட்டம் வரும் என்று நம்புவோம்.

இந்த பட்ஜெட்டைதான், ‘நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொறுப்புடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக’ ஜெயலலிதாவும், ‘மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத் தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன’ என்று கருணாநிதியும் வரவேற்றுள்ளனர். நவீன நகரங்கள் கட்டுவதற்கான காண்டிராக்டுகளை தத்தமது கட்சிக்காரர்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற அக்கறை இவர்களை மோடியின் கால்களை சுற்றி வரச் செய்கிறது. ஜெயலலிதாவுக்கோ சொத்துக் குவிப்பு மற்றும் வருமான வரி வழக்கினை முடக்க மோடியின் தயவு தேவைப்படுகிறது. இல்லையேல் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டையே இப்படி காக்காய் பிடிப்பாரா என்ன?

ஒரு விஷயம் புரிகிறது. மன்மோகன் சிங்  பிரதமராக இருக்கும் போது பொது மக்களிடம் இருந்து வாங்கிய வசவுகளால மனம் நொந்து போய் மோடியிடம் பேசியிருக்கிறார். ‘எப்படியாவது எனக்கு நல்ல பேரு வாங்கி கொடுங்க’ என்று கெஞ்சியிருக்கிறார்.

பழைய காலத்துல ஒரு கிராமத்துல ஒரு வழிப்பறிக் கொள்ளையன் இருந்தானாம். வழியில போறவங்களை கொள்ளை அடிச்சு எல்லா பொருளையும் பறிச்சுகிட்டு, கட்டிக் கொள்ள ஒரு துண்டு மட்டும் கொடுத்து துரத்தி விடுவானாம். அவனை எல்லா மக்களும் கரிச்சு கொட்டினாங்களாம். அவன் சாகும் போது மகன்கிட்ட, ‘எப்படியாவது ஜனங்க என்ன பாராட்டுற மாதிரி நடந்துக்க’ன்னு சொல்லிட்டு செத்துட்டானாம்.

மகனும் அப்படியே செய்திருக்கான். அவன் வழி மறித்து கொள்ளை அடித்தவர்களுக்கு ஒரு துண்டு கூட கொடுக்காம புடுங்கிகிட்டு, தலையையும் மொட்டை அடிச்சு தொரத்தி விட்டானாம். “இவன் அப்பனாவது பரவாயில்ல, ஒரு துண்டையாவது கொடுத்து அனுப்பினான்” என்று ஜனங்க அப்பன பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அது போல மோடி வந்து மன்மோகன் சிங்கை நல்லவன் ஆக்கி கொண்டிருக்கிறார்.

– அப்துல்

மேலும் படிக்க

ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?

4

சாராய ரவுடியாக தொழிலை ஆரம்பித்த ஜேப்பியார் பின்னர் கல்வி வள்ளலாக அவதரித்து சத்யபாமா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஜேப்பியார், பனிமலர், மாமல்லன், செயின்ட் ஜோசப் போன்ற ஜேப்பியாரின் கல்லூரிகள் அனைத்தும் அங்கு பயிலும் மாணவர் நோக்கில் கிளைச் சிறைகள் என்றால் சத்தியபாமா பல்கலைக்கழகத்தை மத்திய சிறை என்று கூறலாம்.

வெளியிலிருந்து பார்த்தால் பளபளப்பான சுதந்திர நவநாகரீக வளாகமாக காட்சியளிக்கும் சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே சென்று பார்த்தால் இது உண்மையிலே ஒரு கல்வி நிறுவனம் தானா என்கிற சந்தேகம் வரும். பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது. செல்போன் வைத்திருக்கக் கூடாது, அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள், வளாகத்திற்குள் சிரிக்கக்கூடாது என்கிற நிபந்தனை இருக்கிறதா என்று தெரியவில்லை. பொதுவாக கல்லூரிகளில் மாணவர்களின் பயிற்சி, வளர்ச்சியை முன்னிட்டு கட்டுப்பாடுகள் இருப்பது சரியென்றாலும் இங்கே அது எல்லை மீறி ஜேப்பியாரின் பண்ணையடிமைத்தனமாக மாற்றப்பட்டுவிட்டது.

மாணவர்கள் இந்த நிபந்தனைகளில் எதையாவது மீறினால் திடீரென்று பாய்ந்து வரும் குண்டர்கள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் செல்வார்கள். அவர்களை கவனிப்பதற்கென்று பல்கலைக்கழகத்திற்குள் விசாரணையறைகள் என்ற பெயரில் தனி இருட்டறைகள்  உண்டு.

நிர்வாகத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக 2006-ம் ஆண்டு ஒரு கடுமையான எதிர்வினை நிகழ்ந்தது. அப்போது படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஜேப்பியாரின் இந்த நாட்டாமைத்தனத்திற்கெதிராக கொதித்தெழுந்தனர். மாணவர்கள் அதுவரை தமது நெஞ்சங்களில் தேக்கி வைத்திருந்த கோபத்தை அன்று ஒரு சிறிய கலவரம் மூலம் தீர்த்துக் கொண்டனர். பல்கலைக்கழகத்தின் விடுதிகள், சேர்மன் அறை, முதல்வர்  அறை, உதவியாளர் அறை, கான்பரன்ஸ் ஹால் அனைத்தையும் உடைத்து நொறுக்கித் தீ வைத்து கொளுத்தினர். நள்ளிரவு இரண்டு மணியை தாண்டியும் தீயணைப்பு படையினர் தீயை அனைத்துக் கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவு நேரத்திலும் மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இப்படி கொதித்தெழுந்தது வேறு எங்கும் இல்லை. இதிலிருந்தே ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் சித்திரவதை கட்டமைப்பை புரிந்து கொள்ளலாம். மறுபுறம் இப்படி எதிர்ப்பை போராட்டமாக காண்பிக்காமல் மனமுடைந்து தற்கொலையும் செய்து  கொள்கிறார்கள். இதில் நிர்வாகத்தின் அடக்குமுறையால் தற்கொலை செய்துகொள்பவர்கள் தான் அதிகம். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இதுவரை பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை அன்று அந்த வரிசையில் மற்றொரு ‘தற்கொலை’ யும் சேர்ந்திருக்கிக்றது. நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்த ஹேமலதா (21) என்கிற மாணவி கல்லூரி விடுதியில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த பருவ தேர்வில் (semester) ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர் தேர்வுக்கு பிறகு அதை தனியாக எழுதி தேர்ச்சியடைந்து விடுகிறார். ஆனால் அந்த தேர்வுத்தாளின் இறுதியில் “give me a pass mark” என்று எழுதி விடுகிறார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த துறைத்தலைவரும், கல்லூரி நிர்வாகிகளும் ஹேமலதாவை அழைத்து கடுமையாக திட்டியுள்ளனர்.

“நீ ஒழுங்காக படிப்பதில்லை, ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறாய், நீ அப்படி இப்படி நடந்து கொள்கிறாய்” என்று உளவியல் ரீதியாக பாதிக்கும்படியான வார்த்தைகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். திட்டியதுடன் பெற்றோரையும் அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். ஹேமலதாவும் பெற்றோரை அழைத்து வந்திருக்கிறார். “உங்கள் மகள் சரியாக படிப்பதில்லை” என்று பெற்றோரிடம் புகார் பட்டியலை வாசித்துள்ளனர். “சரி இனிமேல் அப்படி நடக்காது நாங்கள் சொல்கிறோம்” என்று கூறிய பெற்றோர் ஹேமலதாவுக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஹேமலதாவை அவருடைய பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளனர். அதற்காக இருந்த நிலத்தையும், நகைகளையும் விற்றுள்ளனர்.

அவர்கள் கிளம்பிய பிறகு மறுபடியும் ஹேமலதாவை அழைத்த துறைத்தலைவர் பாரதி மறுபடியும் ஒரு பேயாட்டம் போட்டிருக்கிறார். “நீயெல்லாம் எதுக்கு காலேஜ்க்கு வர்றன்னு எனக்கு தெரியும், நீ ரூம்ல இருக்கும் போது என்ன பண்றேன்னு தெரியும், நீயெல்லாம் படிக்கிறதுக்கே வரலடி” என்று மிக மோசமாக திரும்பவும் ஏசியுள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹேமலதா இரண்டு நாட்கள் யாருடனும் பேசாமல் இறுக்கமாக இருந்திருக்கிறார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. அவருடைய அறையில் இருந்த மாணவிகள் அனைவரும் வகுப்பிற்கு சென்ற பிறகு விடுதியின் ஜன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த நிர்வாகம் உடனடியாக குப்பையை அப்புறப்படுத்துவதைப் போல ஹேமலதாவை பல்கலைக்கழகத்திலிருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, “உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டாள், உடலை ராயப்பேட்டைக்கு அனுப்பி விட்டோம் அங்கே போய்விடுங்கள்” என்று பெற்றோருக்கு தகவல் கூறிவிட்டு பிரச்சினையிலிருந்து நழுவிக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்] – படங்கள் : நன்றி நக்கீரன்

பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினர். அவர்கள் மருத்துவமனையிலிருக்கும் போது தொலைபேசியில் அழைத்த பல்கலைக்கழக நிர்வாகம், “வந்து ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போய்விடுங்கள்” என்று கூறியுள்ளனர். “கையெழுத்து போட முடியாது” என்று மறுத்தவர்கள் “எங்களுடைய மகளின் சாவுக்கு நீங்கள் தான் காரணம்” என்று கூறியதுடன் பல்கலைக்கழகத்தின் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒரு புகாரும் கொடுத்தனர். ஆனால் பெயருக்கு புகாரை பெற்றுக் கொண்ட ஜேப்பியாருக்கு வாலாட்டும் செம்மஞ்சேரி காவல் நிலையம், புகார் அளித்ததற்கான ரசீதை கூட (CSR Copy) ஹேமலதாவின் பெற்றோருக்கு கொடுக்கவில்லை.

மறுநாள் சனிக்கிழமை, தற்கொலை சம்பவத்தை அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனடியாக களத்திற்கு சென்றனர். ஹேமலதாவின் கொலையில் சந்தேகம் இருப்பதால் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி அவருடைய பெற்றோரும், உறவினர்களும் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தை முற்றுகையிட்டனர். அடுத்ததாக பெற்றோர் உறவினர்களோடு தோழர்களும் மருத்துவமனைக்கு முன்பாக உள்ள சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மாணவியின் தாய் ஜெயந்தி கூறும் போது, “என்னுடைய மகளின் சாவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தான் காரணம், இன்று என்னுடைய மகள் இறந்துவிட்டாள். நாளை வேறு ஒரு பிள்ளைக்கு இந்த கதி ஏற்படக்கூடாது என்றால் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சின்ன சின்ன விசயங்களுக்காக மாணவர்களை இழிவுப்படுத்துவதால் தான் இதுபோன்ற  விசயங்கள் நடக்கின்றன. இதில் உண்மை நிலை தெரியும் வரை அவளுடைய உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது” என்று ஆவேசமாக கூறினார்.

பெற்றோர்கள், உறவினர்களுடன் இணைந்து தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரியளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உடனடியாக போலீசு குவிக்கப்பட்டது. தோழர்களையும், உறவினர்களையும் கைது செய்து வண்டியில் ஏற்றிச் சென்றனர். எனினும் இப்போராட்டத்தின் நெருக்கடியால் தற்கொலையாக பதிவு செய்யப்பட்ட வழக்கு 174 வது பிரிவின் கீழ் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று மாற்றப்பட்டது. அதன்பிறகு சில மாணவர்கள் ஹேமலதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு முன்பு முழக்கமிட்டுள்ளனர். உடனே ஜேப்பியாருக்காக பதறிக்கொண்டு வந்த போலீசு அவர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு பறந்தது.

ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர். சுங்குவார்சத்திரத்தில் அவர் பெயரில் கட்டிக்கொண்டிருந்த கல்லூரி இடிந்து விழுந்ததில் பல தொழிலாளிகள் இறந்து போன வழக்கும் அவர் மீது இருக்கிறது. அவரது கல்லூரியில் ஓட்டுநராக இருந்த தோழர் வெற்றிவேல்செழியன் தொடுத்த வழக்கில் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்தாமல் நீதி மன்றத்தை அவமதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த அரசும் நீதி மன்றமும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

poster

ஹேமலதா தன் கையால் தான் தூக்கு மாட்டிக் கொண்டார் என்றே நடந்திருந்தாலும் அந்தக் கைகளை அப்படித் தூண்டியது ஜேப்பியாரின் சர்வாதிகார நிர்வாக அமைப்புதான். ஆகவே இதை கொலையாகவும் விசாரிக்க வேண்டும். ஹேமலதாவை போன்று இதற்கு முன்பும் பல மாணவ மாணவிகள் இந்த கல்விக் கொள்ளையர்களால் தற்கொலை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இனியும் இத்தகைய தற்கொலைகள் தொடராமல் இருக்க வேண்டுமானால் தனியார் கல்விக் கொள்ளையர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும். அரசே ஆரம்ப பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்தையும் நடத்துவதற்கு நாம் போராட வேண்டும். இதன்றி ஹேமலதாக்களை நாம் காப்பாற்ற முடியுமா?

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

பகவானே இது அடுக்குமா ?

4

ரும் செப்டம்பர் மாதம் தன்னை வெள்ளை மாளிகையில் சந்திக்க வரும்படி அழைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பிதழை அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் சென்ற வாரம் மோடியிடம் கொடுத்திருக்கிறார். விசா தராமல் விளையாடிய பகவனே இப்போது மனமிரங்கி தரிசனத்திற்கு நாள் குறித்தால் பக்தன் அடையும் பேரின்பத்திற்கு ஈடேது?

மோடி - ஒபாமா
பிரதமரானவுடன் மோடி மீது பொங்கும் அமெரிக்க பகவானின் கருணை.

ஒபாமாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த மோடி, சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அது இருதரப்பு உறவுக்கு புதிய உந்துதலையும் ஆற்றலையும் தரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். தன்னையும் ஒரு ஆளாக மதித்து, குற்றச்சாட்டுகளை மறந்து கூப்பிடும் பகவானின் பெருந்தன்மை நிச்சயம் மோடிக்கு பேராற்றலைக் கொடுக்குமென்பதில் ஐயமில்லை.

பிரதமரானவுடன் மோடி மீது பொங்கும் அமெரிக்க பகவானின் கருணை எத்தகையதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள சில ஆண்டுகள் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது.

2002 குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் நழுவி வந்த மோடியின் முயற்சிகளைப் பற்றி மும்பையில் இருக்கும் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய கடித விபரங்களை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘தகவல் அறியும் சட்டத்தின்’ கீழ் இந்த தகவல்களை அமெரிக்க அரசிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்றிருக்கிறது. பகவான் தனது  திருவிளையாடல்களை பதிவு செய்திருப்பதும் பக்தர்கள் சம்பந்தப்பட்டவை என்றால் உடன் பகிரங்கமாக்குவதும் நல்ல விசயங்களே!

2010 டிசம்பர் மாதம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் குஜராத்துக்கு போய் வந்தது குறித்து 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பிய அறிக்கையில், “2000 பேரை பலி வாங்கிய 2002-ம் ஆண்டு கலவரங்களுக்கு மோடி உடந்தையாக இருந்தார் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவரை விசா பெற தகுதியற்றவர் என்று அறிவித்திருந்தன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைக்கு பகவான் இப்படி இருந்தது உண்மையா என்பதை பகவான் இன்றைக்கு எப்படி நடந்து கொள்கிறார் என்பதில் பாருங்கள்!

இஷான் ஜாஃப்ரி கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி “மோடியை குற்றமற்றவர் என்று அறிவிக்க ஊடகங்கள் துடிப்பு” என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. “சிறப்பு புலனாய்வுக் குழுவின் முடிவு பற்றி அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாவதற்கு முன்னரே மோடியின் அனுதாபி ஒருவர் இந்த செய்தியை கசிய விட்டிருக்கிறார்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்றைப் பற்றி தூதரகம் கூறியிருந்தது. பக்தன் இப்படி வெளிப்படையாக அழுகுணி ஆட்டம் ஆடுவது பகவானுக்கு குறையாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் பகவான் ஆடினால் அது தொழில் முறையில் பாதுகாப்பாக இருக்கும்.

மார்ச் 2010-ல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மோடியை அழைத்திருந்தது.

“குறைந்தபட்சம் ஒரு வன்முறை நிகழ்விலாவது அவரது ஈடுபாடு குறித்த கேள்விகளை மோடி எதிர் கொள்ளவிருக்கிறார்” என்று குறிப்பிட்ட தூதரகம் அவர் புலனாய்வுக் குழுவின் அழைப்பை ஏற்றுக் கொள்வாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. பகவானே ஒரு த்ரில்லர் விறுவிறுப்பில் காத்துக் கொண்டிருந்தார் போலும்.

ஜெர்மனியில் மோடி
பிரிக்ஸ் மாநாட்டுக்கு போகும் வழியில் ஜெர்மனியில் இறங்கிய மோடி

“பிப்ரவரி 2002 முதல் இன்று வரை கோத்ராவைத் தொடர்ந்த வன்முறை தொடர்பாக தன்னை எந்த புலன் விசாரணை அமைப்பும் விசாரிப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு அவர் ஆஜராவாரா என்பது சந்தேகத்துக்குரியது, அப்படி ஆஜரானாலும் விசாரணை எவ்வளவு சீரியசாக நடத்தப்படும், குறிப்பாக முக்கியமான பிப்ரவரி 27, 2002 கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுமா” என்றும் அமெரிக்க தூதரகம் சந்தேகம் தெரிவித்திருந்தது. வரம் வாங்கி பக்தர்களே பின்னர் சதாம் மாதிரி எல்லை மீறிவிடுவதால் இப்போதே ஏதாவது கால்கட்டுகள் போட்டு விட்டால் பின்னர் பெட்டிப்பாம்புகளாக இருப்பார்களே!

“மோடி இன்னமும் பல்வேறு சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்பு ஆஜராவதை தவிர்க்க முயற்சிப்பார். இதுவரை செய்து வந்தது போலவே 2002 நிகழ்வுகளில் அவரது பங்களிப்பைப் பற்றிய கேள்விகளையும் விசாரணைகளையும் வெற்றிகரமாக தடுத்து விடுவார்” என்று குறிப்பிட்டிருந்தது. மோடியின் சாமர்த்தியத்தை பகவானே வியந்து பாராட்டுகிறார்.

அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் குறித்து வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பும் நோக்கத்துடன் மோடி நடந்து கொண்டார் என்றது அமெரிக்க தூதரகம். சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மனைத் தொடர்ந்து ஒரு வாரம் அமைதி காத்த மோடி “மார்ச் 21-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்துக்கு போகவில்லை. மாறாக, மார்ச் 22-ம் தேதி தன்னை 21-ம் தேதி விசாரணைக்கு அழைக்கவேயில்லை என்று குஜராத் மக்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் எழுதினார். சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு தான் ஆஜராகாததை விமர்சிப்பவர்கள், “குஜராத்தை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள்” என்றும் அவர் கூறியதை அமெரிக்க தூதரக செய்தி சுட்டிக் காட்டியிருக்கிறது. இது நம்ம உத்தியாச்சே என்று பகவான் பரவசமடைந்திருக்கலாம்.

ஆனால், “ஒரு வழியாக மார்ச் 27-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு மோடியை 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தது” என்று மார்ச் 2010 தேதியிட்ட இன்னொரு கேபிள் தெரிவிக்கிறது. பரவாயில்லை பகவான் எதிர்பார்த்த மாதிரி பக்தன் விசாரணைக்காவது போயிருக்கிறார்.

மெர்க்கல் - மோடி
மோடிக்கு மெர்க்கலுடன் “டின்னர்” சாப்பிடும் வாய்ப்பு இல்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.கவின் தேசிய செய்தித் தொடர்பாளர், “மோடி ஒரு பொறுப்பான குடிமகனாக கௌரவமாக நடந்து கொண்டார். இது கட்சிக்கு எந்த அவமானமும் இல்லை” என்று சப்பைக் கட்டியதை குறிப்பிட்டு விட்டு, அப்போதைய சட்ட அமைச்சர் காங்கிரசின் வீரப்ப மொய்லி, “இது போன்ற ஒரு நிலையில் மோடி மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டகரமானது. ஆனால் யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது” என்று சொன்னதை குறிப்பாக சுட்டிக் காட்டியிருக்கிறது அமெரிக்க தூதரகம். பாருங்கள் காங்கிரசு கூட பாஜகவின் இந்துத்துவத்திற்கு எதிரிகள் இல்லையென்று பகவானே படம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் வரும் செப்டம்பரில் அமெரிக்க அதிபரை சந்திக்கப் போகும் மோடி, “அப்பாடா, ஒரு வழியாக தப்பித்து விட்டேன்” என்று பணிவோடு நடந்து கொள்வார். “எங்கள் ‘மனித உரிமை’ கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்ப வேலை செய்ய வேண்டும்” என்று அமெரிக்கா அவருக்கு உத்தரவிடும். அதன்படி பகவான் மூக்கில் விரலை வைக்கும்படி மோடியின் உலகமய நடவடிக்கைகள் புயல் வேகத்தில் நடக்கும்.

இதற்கிடையில் பிரேசில் சொகுசு சுற்றுலா நகரமான போர்ட்டலிசாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் அமைப்பின் 6-வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மோடி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஒருநாள் தங்கியிருக்கிறார். ஜெர்மனியின்  பிராங்க்பர்ட் வழியாக பயணிப்பது என்ற திட்டத்தை ஜெர்மன்  அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பெர்லினில் ஒரு நாள் தங்கி போவது என்று மாற்றியிருக்கிறார் மோடி. ஏஞ்சலாவைப் பார்க்கப் போனது பகவானுக்கு பிடிக்குமா, வெறுக்குமா?

ஆனால், மெர்க்கல் ரியோ டி ஜெனிராவில் ஜெர்மன் அணி பங்கு பெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை பார்க்க போய் விட்டிருக்கிறார். ஜெர்மனி கால்பந்தில் வெற்றி பெறுவதை பார்க்கப் போவது, மோடி போன்ற அடிமையை சந்திப்பதை விட முக்கியமானது என்று மெர்க்கல் கருதியிருக்கலாம். ஜெர்மன் பகவானே மோடிக்காக காத்திருக்கவில்லை என்றால் உண்மையில் பக்தர்களின் யோக்கியதை என்ன?

பெர்லினில் பிராண்டன்பெர்க் கேட் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த மோடிக்கு மெர்க்கலுடன் “டின்னர்” சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான ஜெர்மன் ரசிகர்களை அவர் கண்டு கழித்திருப்பார் என்கிறது தி ஹிந்து செய்தி. பாருங்கள் கடைசியில் இந்துத்துவா தலைவனுக்கு பகவானுடன் ஒரு டின்னர் சாப்பிடவோ, சம்சாரிக்கவோ கூட வாய்ப்பில்லை. வல்லரசாகி என்ன பயன்?

மேலும் படிக்க…

முண்டாசுப்பட்டி : சிரிப்பது குற்றமா வினவு !

9

பார்ப்பவர் எவரையும் சிரிக்க வைக்காமல் விடாது இந்த திரைப்படம். அதுவும் எஸ்.வி.சேகர், சந்தானம் வகையிலான சவுண்டு காமடிக்கு வாக்கப்பட்ட வயிற்று போக்கு சிரிப்பாளர்கள் இடைவிடாமல் சிரிக்கிறார்கள்.

நாங்கள் மூன்று தோழர்கள் சேர்ந்து படம் பார்த்தோம். ஒரு தோழர் படத்தின் மையச்சரடை புரிந்து கொண்ட பிறகு சிரிக்க ஆரம்பித்தார் (இவர் சிரித்தது லேசுப்பட்ட விசயமில்லையாம், என்னா ஒரு பில்டப்பு!). ஒரு தோழர் நாம் சிரிக்கலாமா, கூடாதா என்ற குழப்பத்தில் இருந்தார். இடைவெளிக்கு பிறகு சிரிக்கலாமென கொள்கை முடிவெடுத்து கொஞ்சம் பிகு பண்ணி சிரிக்க ஆரம்பித்தார் (பாவம் புதுத் தோழராக இருப்பாரோ?). இடையில் இருந்த மூன்றாவது தோழர் சீரியசாக இருக்கும் அந்த தோழர் இப்படிச் சிரிக்கிறாரே, யதார்த்தமாக இருக்கும் இந்தத் தோழர் சிரிக்காமல் இருக்கிறாரே என்ற குழப்பத்தில் சிரித்தும் சிரிக்காமலும் ஒரு விதமான அத்வைத அவஸ்தையில் இருந்தார். கேட்டால் சிரித்தேன் என்றார். இத்தனைக்கும் இவர் எளிமையாக சிரிக்கக் கூடியவர்தான் (யாரு பெத்த புள்ளையோ!).

பேஸ்புக் பார்வை
முகநூலின் சிறைப்பார்வை

என்ன செய்வது, ‘சிரிப்ப’தற்கு கூட தோழர்கள் மாபெரும் கொள்கை முடிவெடுக்க வேண்டியதிருக்கிறது!

ஆனால் தோழர்களுக்கு அருகாமையில் இருந்த தம்பதியினர் படம் ஆரம்பித்த உடனேயே சிரிப்பானை எட்டுக் கட்டையில் ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அது கொள்கை கோட்பாடு குழப்பமற்ற ‘யதார்த்த’மான சிரிப்பு. அதிலும் ஆணாக இருந்த அன்பர் அவருக்கு என்ன சோகமோ தெரியவில்லை, அப்படி ஒரு சிரிப்பு! இருக்கட்டுமே, ஏதோ ஒரு படத்தை பார்த்து மக்கள் மனதார சிரிப்பது வினவு-க்கு பொறுக்கவில்லையா, இதற்குமா விமரிசனம்? நீங்கள் அந்த ‘நிரந்தர’ அம்புகளை தொடுக்க நினைப்பது புரிகிறது!

“ஒரு சினிமா எடுப்பது எவ்வளவு கடினம், முடிந்தால் நீங்கள் எடுத்துப் பாருங்களேன், சலித்துப் போன வாழ்க்கையில் சிக்கியிருக்கும் மக்கள் ஒரு இடை ஓய்வாக சிரிப்பதை நேர்மறையில் பார்க்காமல் இப்படி வலிந்து விமரிசனம் என்ற பெயரில் கொத்து பரோட்டா தட்ட வேண்டுமா, உங்கள் அரசியல் வாழ்க்கையில் இப்படி எத்தனை பேரை சிரிக்க வைத்திருக்கிறீர்கள்,” என்றெல்லாம் அறம் பாடத் தோன்றுமே?

அப்படியான பாடல்களை கொஞ்சம் ஒத்திப் போட்டுவிட்டு வாருங்கள், இந்த திரைப்படம் குறித்து சிரிப்பதற்கும் மேலாக சிந்திப்பதற்கு விசயம் உண்டு. தொலைக்காட்சி தொடர்களை பார்த்து அழும் மக்கள்தான் இங்கே வாய்விட்டு சிரிக்கிறார்கள். அந்த அழுகை தவறென ஏற்கும் நீங்கள் இந்த சிரிப்பு எத்தகையது என்று யோசிக்க வேண்டாமா? இரண்டின் எதிரெதிர் உணர்ச்சிகளில் ஒரே மனிதன் ஒரே காரணத்தால் ஒன்றியிருப்பது சாத்தியமா, சரியா என்றெல்லாம் பார்க்க கூடாதா?

முண்டாசுப்பட்டி திரைப்படம் பார்த்த அனைவரும் ஒரே மாதிரியாக ரசித்து சிரித்த மாதிரியே விமரிசனங்களும் ஒன்றின் நகல்களாகவே இருக்கின்றன. படைப்பெனும் பிரதி பல நூறு, ஆயிரம் வகைப்பட்ட வாசிப்புகளை சாத்தியப்படுத்தும் பின் நவீனத்துவ பாக்கியம் இந்த திரைப்படத்திற்கு ஏன் இல்லை?

“பிரச்சார நெடி இல்லாத மூடநம்பிக்கை எதிர்ப்பு படம், காளி, ராம்தாஸ் இரண்டு புதிய நகைச்சுவை நட்சத்திரங்களின் உதயம், கூர்மையான வசனம், இடைவிடாத சிரிப்பு, 80-களின் காட்சியமைப்பை கொண்டு வந்த கலை இயக்குநர் – ஒளிப்பதிவாளர், பொருத்தமான பின்னணியிசை, குறும்பட இயக்குநராக அறிமுகமாகி முதல் சினிமாவிலேயே சாதனை படைத்த இயக்குநர், படத்தின் முதல் அரை மணி நேரம் மட்டும் சற்று இழுவை…..” இவைதான் நகல்களின் சாரம்!

முதல் பத்து நிமிடத்தை தவற விடாதீர்கள் என்று சில படங்களுக்கு விளம்பரம் செய்வது போல, முதல் அரை மணி நேரத்தை தவறவிடுங்கள் என்று இந்த படத்திற்கு பிரச்சாரம் செய்யலாமென ஒரு பதிவர் எழுதியிருந்தார். பலருக்கும் முதல் முப்பது நிமிட காட்சிகளில் ஒன்ற முடியவில்லை. ஒரு படைப்பாளி ஒரு படைப்பின் துவக்கத்தில் சுமாராகவும், பின்பு சூப்பராகவும் படைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி இருந்தால் ஒரு படைப்பிற்குள்ளேயே நல்ல, கெட்ட, சுவாரசியமான, இழுவை என்று பல பிரிவுகள் இருக்கும் சாத்தியம் உண்டா? உண்டெனில் பல்சுவை வார இதழுக்கும் ஒரு கலைப்படைப்புக்கும் வேறுபாடில்லையா?

எழுத்திலக்கியம் போல காட்சிக் கலை இல்லைதான். அதே போன்று இரண்டையும் வாசிப்பவர், பார்ப்பவருக்கு வேறுபாடு உண்டல்லவா? எழுத்தை கூர்ந்தோ அசை போட்டோ கொஞ்சம் உழைப்பு செலுத்தியோதான் படிக்க வேண்டும். ஐம்புலன்களையும் எளிதான முறையில் கவர்ந்திழுக்கும் காட்சிக் கலை பெரும் உழைப்பு எதையும் கோருவதில்லை. நேரெதிராக உடனடி பரவசமும், கட்டுண்டு போவதும் இதில் அதிகம். இதனால் திரைப்படத்தை ஒரு நாவல் அனுபவம் போல உணர முடியாது என்பதல்ல. பொதுவில் உள்ள நிலையையும் அந்த நிலைக்குரிய கலை விதிகளின் கூறுகளையுமே இங்கே நினைவுபடுத்துகிறோம்.

இணையம்
சுட்டியின் சுதந்திரம் அமெரிக்க கத்திரியின் தந்திரம்

மாறிவரும் வாழ்க்கைக்கு தோதாக, மாறியோ மாற்றப்பட்டோ வரும் சினிமா ரசனை, திரைக்கதையின் வேகம், காட்சிகளின் திருப்பம், வசனத்தில் பஞ்ச், மொத்தத்தில் பரபரவென்று ஓடுகிறது. வணிக சினிமா படைப்பாளிகள் இந்த ஓட்டத்தை மனதிற் கொண்டே காட்சிகளை அடுக்குகிறார்கள், செதுக்குகிறார்கள். அதனாலும் கூட படைப்புக்குள்ளே தொய்வு, சீர்மை என்று பிளவு வரலாம். எனினும் ஒரு படைப்பு தன்னளவிலே முழுமையான ஒருங்கிணைவையே கொண்டிருக்கும். வாசிப்பிலோ நுகர்விலோ அப்படி வேறுபடும் பட்சத்தில் வாசகராகிய நமது ஒருங்கிணைவில்தான் ஏதோ பிரச்சினை இருக்க வேண்டும். அல்லது ஒரு படைப்பை ஏற்பதிலும், நிராகரிப்பதிலும் ஒரு முழுமை இருந்தாக வேண்டும். 50 – 50யெல்லாம் இங்கே இருக்க முடியாது.

கிராமத்து மக்களின் எளிய மூடநம்பிக்கைகளை கேலி செய்யும் பின்னணியில் ‘கேலிக்கோ – கேள்விக்கோ’ இடமற்ற காதல் கதையை சொல்லும் களம்தான் முண்டாசுப்பட்டியின் கதை. உண்மையில் கேலிக்கு அனைத்து தகுதிகளும் கொண்ட நகரத்து வாழ்வின் ஃபாஸ்ட் புட் காதலை விடவா கிராமத்து மூடநம்பிக்கை சுண்டக்கறி ஒரு பிரச்சனை? பழக்க வழக்கங்களில் இருக்கும் மூட நம்பிக்கைளைவிட பண்பாட்டு அழுத்தமாக இருக்கும் நுகர்வு கலாச்சாரக் காதலின் மூடநம்பிக்கைகள் பிரச்சினை இல்லையா?

ஒரு வேளை தற்கொலைத் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும இளவரசனது உண்மையான  கதையை காமடியாக சொல்ல முடியாதோ? இல்லை தமிழகத்து காபி ஷாப் காதல் நம்பிக்கைகளை பார்த்து சிரிக்க முடியாதா? தமிழக காதலின் தலையான பிரச்சினையாக ஆதிக்க சாதி வெறி அரிவாளோடு மறிக்கும் நிலையில் முண்டாசுப்பட்டியின் காதலர்கள் பதில் சொல்லாமல் நழுவுவது ஏன்?

எது எப்படியோ ரசிகர்கள் யாரும் இயக்குநரின் காதல் அத்தியாயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கதையின் நாயகன் விஷ்ணு, நாயகி நந்திதாவை காதலிப்பதற்கு பீடிகை போடும் முதல் காட்சிகளைத்தான் நமது நண்பர்கள் போர் என்கிறார்கள். ஆனாலும் இந்தக் கதைக்கு இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.

முண்டாசுப்பட்டி கிராமத்தில் கொள்ளையடிக்க வந்த கள்வர்களை கொன்றோ பயமுறுத்தியோ விழுந்த விண் கல், ஊர்க்கோவிலின் பழைய தெய்வத்தை மாற்றி விட்டு, இல்லை புது வேடம் போட்டு வான முனியாக அவதரிக்கிறது. இந்தக் காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த போது படத்தை வெளியிட்டிருக்கும் ஹாலிவுட் ஸ்டூடியோவான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நினைவுக்கு வந்தது.

பினாக்கியோ
பொய்களுக்கேற்ப துருத்தி வளரும் வாஷிங்டன் நினைவக தூண் (பினாக்கியோ)

விண்ணிலிருந்து ஆப்பிரிக்க பழங்குடிகளின் மண்ணில் விழும் விமானமோ, கோக் பாட்டிலோ இறை தூதராகவோ, தேவதையாகவோ, இயற்கை சக்தியாகவோ நம்பப்பட்டு கருப்பின மக்கள் மண்டியிட்டு தொழும் காட்சிகளை பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கிறோம். வெள்ளையர்களின் தங்க வேட்டைக்காக உயிரை மலிவாக கொடுக்கும் கருப்பின பழங்குடிகளின் இந்த நடவடிக்கையை பார்த்து சிரிப்பவர் எவருக்கும் மம்மி பிரமீடுகளில் தங்கம் தேடும் ராயல் கனவான்களின் கொள்ளை வெறி நெருடலாக தோன்றுவதில்லை. செவ்விந்தியர்களை பூண்டோடு கொன்று ஒழித்து வெள்ளை மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டதை கௌபாய் படமாக சிலாகித்தவர்கள் அதே செவ்விந்திய மக்களின் மூடநம்பிக்கைகளை திரையில் பார்த்து சிரிக்கிறார்கள்.

கிண்டல் என்பதே ஆண்டைகளின் அதிகாரத்தை எதிர்த்து அடிமைகள் கட்டிய நாட்டுப்புறப் பாட்டில் இருந்து பிறந்தது என்றால் இங்கே அது நவீன ஆண்டைகளின் பார்வைக்கு கடத்தி செல்லப்படுகிறது. இந்தக் கடத்தலில் சமூக நேயத்தை இழக்கிறோம் என்பது சிரிப்போர் அறிவதில்லை. அந்த வகையில் இது வெற்றுச் சிரிப்பல்ல – விசமச் சிரிப்பு.

வான முனியின் இடம் ஓரிரு நிமிடம்தான் என்றாலும் அதன் பின்னே இருக்கும் மேற்கு உலகம் நாகரீகமானது, கிழக்குலகம் காட்டுமிராண்டித்தனமானது என்ற கருத்துதான் இன்றைக்கும் உலக ரவுடியாக மேலாதிக்கம் செய்யும் அமெரிக்காவை ஜனநாயக சொர்க்கம் என்று நம்ப வைப்பதோடு அந்த நம்பிக்கையில் சேருமாறு பலரையும் மதமாற்றமும் செய்கிறது. சாரத்தில் இது ‘மூட’ நம்பிக்கை குறித்த பிரச்சினை அல்ல, அதிகாரத்தின் ‘முரட்டு’ நம்பிக்கை குறித்த சமரசம்.

இதனால் ஒரு நாட்டின், ஒரு இனத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை மற்றவர் விமரிசிக்க கூடாது என்பதல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்ப்பனிய சாதி அமைப்பு விதித்திருக்கும் தண்டனைகளை டர்பன் மாநாட்டில் கூடியிருக்கும் சர்வதேச சமூகத்தின் முன் யாரும் பேசலாம். அமெரிக்க கருப்பின மக்களுக்கு இழைக்கப்படும் நிறவெறிக் கொடுமைகளை நாம் பேசுவது சரியெனும் போது அதே உரிமை மற்றவருக்கும் உண்டு. ஆனால் சக மனிதனை தாழ்வாக நடத்தும் அந்த ஆதிக்கத்தினை எதிர்ப்பதும் அந்த ஆதிக்கத்தை தவிர்த்து விட்டு எளிய மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்வதும் ஒன்றல்ல.

முண்டாசுப்பட்டி மக்கள் புகைப்படம் எடுத்தால் சாவு வரும் என்று நம்புகிறவர்கள். இது ஒரு மூடநம்பிக்கைதான் என்றாலும் ஆபத்தான நம்பிக்கை அல்ல. ஆனால் கிராமத்து பள்ளிக்கூடத்தை பாழடைய வைத்தது அதை விட ஆழமான மூடநம்பிக்கைதான். இது போக குற்றவாளி ஒருவர் குறி சொல்லும் சாமியாராக மாறி, கள்ள உறவுக்காக ஊரை விட்டு போவது, வான முனி கடவுள் கல்லை கடத்தி விற்கும் பண்ணையார் என்று சில நம்பிக்கைகள் கேலி செய்யப்பட்டிருந்தாலும் பொதுவில் இவற்றை பெரும் பிரச்சினைகளாக கருத முடியவில்லை.

புகைப்படத்திற்கு பயப்படும் மக்கள் நகரத்திலிருந்து வரும் புகைப்படக்காரன் விஷ்ணுவை ஊர் மாப்பிள்ளையாக கடைசியில் ஏற்கிறார்கள். காரணம் அவன் ஊர் கோவிலில் இருந்து காணாமல் – காதலுக்காக அவன் செய்யும் கடத்தல் நாடகம் – போகும் வான முனியை காப்பாற்றி மீட்டு வருகிறான்.

வர்க்கம்
சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு வாழ்க்கை

சத்தியமங்கலம் அருகில் இருக்கும் முண்டாசுப்பட்டியை ஒரு புவியியல் வாதத்திற்காக கவுண்டர்கள் இருக்கும் ஊர் என்றே வைப்போம். எனில் விஷ்ணு என்ன சாதி என்று தெரியாமல், தமக்கு கீழே இருக்கும் சாதியா என்று சந்தேகப்படாமல் இந்த ஏற்பு எப்படி சாத்தியம்? ஊரில் பிடிபட்ட திருடனை பஞ்சாயத்து கூட்டி கையை உடைக்கும் முண்டாசுப்பட்டி மக்கள் ஆதிக்க சாதி கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் எதை உடைப்பார்கள் என்பதல்லவா முக்கியமானது?

கொங்கு தமிழில் பணிவுடன் பேசியும், நிலபுலம் அதிகமிருந்தாலும் எளிய விவசாயிகளின் வாழ்க்கையை வாழும் கவுண்டர்கள், சாதி என்று வரும் போது மட்டும் விசுவரூபமெடுப்பார்கள். அருந்ததி மக்களை அவர்கள் நடத்துவதும், பேசுவதும் நாரசரமாக இருக்கும். இதை கிண்டல் செய்திருந்தால், அல்லது கதையின் திருப்பமாக கொண்டிருந்தால் பாமகவும், கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரனும், அவரை கூட்டணியில் வைத்திருக்கும் பாஜக பொன்னாரும் பொங்கியிருப்பார்கள். குறைந்த பட்சம் கண்டன அறிக்கையாவது விட்டிருப்பார்கள்.

மல்டிபிளக்சில் நடனக் கலைஞர்களை ப்ளாஷ் நடனம் ஆட வைத்து விளம்பரம் செய்யும் முண்டாசுப்பட்டி தயாரிப்பாளருக்கு மேற்கண்ட பிரச்சினை பெரும் விளம்பரத்தை தந்திருக்கும். எனினும் ஆதிக்க சாதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களை இவ்வளவு சுலபமாக சிரிக்க வைத்திருக்க முடியுமா? முடியும் என்பது நமது கருத்து. இதை விட காட்டமாக கருத்துக்களை முன் வைத்த பெரியார் என்ன யாருமில்லாத டீக்கடையிலா பிரச்சாரம் செய்தார்? அவரது பேச்சை ஆதிக்க சாதிகளில் பிறந்த தமிழனும், ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்த தமிழனும் அருகருகே இருந்து கேட்கவில்லையா?

இதனால் முண்டாசுப்பட்டியின் அறிமுக இயக்குநர் ராம் குமார் சமூகப் பார்வை கொண்டவர் அல்ல என்று சொல்லவில்லை. படத்தில் வரும் மயான வேலை செய்யும் தொழிலாளியே விஷ்ணுவுக்கும் அவர் நண்பர் காளிக்கும் நட்பாக இருக்கிறார். பள்ளிக்கூடத்தை பாழடைய விட்ட ஊர் மக்களின் முட்டாள்தனத்தை கேலி செய்கிறார். இப்படி ஒரு காட்சியை வெள்ளுடை வேந்தர்களாக முண்டாசு கட்டிய கவுண்டர்களின் ஊரில் வைப்பது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் அது ஒரு தோற்றப் பார்வையில் மட்டும் வந்து போகிறது. அல்லது இது ஒட்டாத ஒரு ‘பிரச்சாரம்’ என்றும் வகைப்படுத்தலாம்.

வான முனிக் கல்லை தான் தொட்டால் தீட்டு, ஊரார் ஏற்கமாட்டார்கள் என்று அந்த மயான தொழிலாளி வாதிடும் போது, “கோவிலுக்குள்ளே இருக்கும் வரைதான் இது சாமி, இப்போ வெறும் கல்லு” என்று விஷ்ணு தொட்டு தூக்க உற்சாகப்படுத்துகிறார். இந்த உற்சாகத்தில் சமத்துவமோ, சுயமரியாதையோ எங்கே இருக்கிறது? கல்லாக இருந்தால் தொடலாம், சாமியாக இருந்தால் தொடக்கூடாது என்பதல்லவா இதன் பொருள்!

காரட்டும் கழுதையும்
அமெரிக்க காரட் வழிநடத்த ஐ.எஸ்.எஸ் காலிஃபா முன்னேறுகிறார்.

எங்கே எப்படி பிரச்சினையின்றி தொடுவதுதான் பிரச்சினையா? இல்லை ஏன் தொடக்கூடாது என்பது விசயமா? இதனால் நாயகன் விஷ்ணு புரட்சி வசனம் பேச வேண்டுமென கோரவில்லை. ஆனால் காதலுக்காக உயிரை பணையம் வைத்து ஊரின் தண்டனைக் கைதியாக வாழும் நாயகன் இங்கே மட்டும் ஊர் வழக்கப்படி பேசுவது சரியா? காதலுக்கு புரட்சி, கல்லுடன் சமரசமா?

படத்தில் சிரிப்பு வெடிகளை அள்ளக் அள்ளக் குறையாமல் கொண்டிருக்கும் மூன்று அட்சய பாத்திரங்கள் கள்ள உறவு, ஆண்மைக் குறைவு, சினிமா ஆசை. முறையே சாமியார், பண்ணையார் ஆனந்த ராஜ், முனிஸ்காந்தாக வரும் ராம்தாஸும் இயக்குநரின் ‘சாமர்த்தியமான’ கதையோட்டக் காட்சிகளால் திரையரங்கை வெடிச் சிரிப்பால் நிரப்புகிறார்கள்.

பிளாஷ்பேக்கில் சிறைக்கைதியாக அலைந்து இந்த கிராமத்தில் ஒதுங்கி விபத்து போல ஊர்க்கோவில் பூசாரியாக மாறுகிறார் அந்த நபர். இவரது காட்சிகளில் கிராமத்து மக்களின் மதம், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சாமியாடுதல், குறி சொல்லுதல், சகுனங்கள் அனைத்தும் கேலி செய்யப்படுவது யதார்த்தமாகவும், மக்கள் ஏற்கும்படியாகவும்தான் இருக்கிறது.

இதற்காக இயக்குநரை பாராட்டும் அதே வேளையில் நாட்டுப்புற தெய்வங்களை விட பெரும் தெய்வங்களும், நாடு முழுவதும் இருக்கும் மாற்ற அனுமதியில்லாத பெருவழிச் சம்பிரதாயங்களும், சாதி அமைப்பில் தலைமை பூசாரியாக இருக்கின்ற பார்ப்பனர்களும் கொண்ட பார்ப்பனிய மதம்தான் இந்தியாவின் அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன் நீர்த்துப் போன வடிவங்களே கிராமங்களில்  நிலவுகின்றது. ஜயேந்திரன், தேவநாதன், நித்தி போன்றோரை கேலி செய்யாமல் கிராமத்து அப்பாவி பூசாரியை கிண்டல் செய்து என்ன பயன்?

இவர்கள் பூசாரி போல விபத்தாக அதிகாரம் கொண்ட ஆதீனப் பதவிகளை அடையவில்லை. பார்ப்பனிய சமூகத்தால் திட்டமிட்டு தயாரிக்கப்படுகிறார்கள். மாட்டிக் கொண்டாலும் திட்டமிட்டு காப்பாற்றப்படுகிறார்கள். படத்து பூசாரி மாட்டிக் கொண்ட பிறகு தொழிலை தலை முழுகி ஓடிப் போகலாம். இவர்கள் ஓட மாட்டார்கள். அப்படி விரட்டுவதற்கும் ஆளும் வர்க்க சமூக அமைப்புகள் தயாராக இல்லை. இவையெல்லாம் இந்த புதிய இயக்குநரின் பார்வையில் இல்லை.

அதே வேளை கிராமங்களில் நிலவும் அனைத்து மூடநம்பிக்கைகளும் ஆபத்தற்றவை என்று வாதிடுவதும் தவறு. நரபலி, கொடூரமான ஆணாதிக்க நடைமுறைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான எண்ணிறந்த அடக்குமுறைகள் எல்லாம் கிராமத்து நம்பிக்கையின் பெயரில்தான் நீடிக்கின்றன. ஆனால் இவற்றின் வேரான பார்ப்பனியத்தை விடுத்து ஒரு சில ஆபத்தற்ற விளைவுகளை மட்டும் கேலி செய்யும் போது இது ஆப்பிரிக்க பழங்குடிகளை கேலி செய்யும் மேட்டிமைத்தனத்தை அடைந்து விடுகிறது.

தேர்தல்
தேர்தல் தெரிவு முதலாளிகளின் முடிவு.

வான முனிக் கல்லின் கனிமவளம் காரணமாக அதை கடத்தி வெள்ளைக்காரனுக்கு விற்க முயலும் பண்ணையார் ஆனந்தராஜ் ஆண்மைக்குறைவு காரணமாக பூனைகளை வளர்த்து சூப் போட்டு குடிக்கிறார். இவரும், அடியாட்களும் காமடியாக வந்து போகிறார்கள். நிஜத்தில் கீழத்தஞ்சை கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற கொடூரமான வில்லன்களான பண்ணையார்கள் இப்படி சிரிப்பு மூட்டுவது இருக்கட்டும்.

இவர் பூனை சூப் குடிப்பது எதற்கு என்று முனிஸ்காந்த் பேசும் போது விஷ்ணு காரணத்தை விளக்குகிறார். அதை “துருப்பிடித்த துப்பாக்கிக்கு தோட்டா எதற்கு?” என்று முனிஸ்காந்த் கேலி செய்யும் போது திரையரங்கம் அதிர்கிறது. ஆண்மைக் குறைவு என்பது இங்கே இன்னமும் மர்மமான பூடகமான விசயமாக கருதப்படுவதற்கும் இந்த வெடிச்சிரிப்பிற்கும் தொடர்பேதுமில்லையா? இவ்வளவு மருத்துவ முன்னேற்றம் வந்தாலும் சிட்டுக்குருவி லேகிய புகழ் சேலம் சிவராஜோ இல்லை மூத்திரச் சந்துகளில் ஒட்டப்படும் பரம்பரை வம்ச விருத்தி வைத்திய சுவரொட்டிகளோ குறையவில்லை.

இதே வசனம், காட்சி ஒரு ஹாலிவுட் படத்தில் வருவதோ இல்லை வந்தால் சிரிப்போ சாத்தியமில்லை. ஏனென்றால் அங்கே ஆண்மைக் குறைவு என்பது ஒருவரின் மருத்துவப் பிரச்சினை மட்டுமே. இங்கோ அது சமூகத்தில் கவுரவமான இடத்தை தீர்மானிக்கும் சமூகப் பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவில் இந்து மேட்டுக்குடியினருக்கு காமசூத்ரா இருந்தாலும் இங்கே பெரும்பான்மை மக்களுக்கு காமம் என்பது பேசவோ, ஐயங்கள் தீர்க்கவோ முடியாத ஒன்று. அதிலும் இந்தப் பிரச்சினையில் பெண்கள் பாடு அதிகம். ஆண்மைக் குறைவோ இல்லை குழந்தைப் பேறின்மையோ எதுவாக இருந்தாலும் ஆணை விட பெண்களே அதன் சுமையை பாவமாக, இரண்டாம் தாரமாக, மலடி எனும் பழிச்சொல்லாக சுமக்கிறார்கள். அந்த பழியும் இந்தப்படம் உருவாக்கும் சிரிப்பும் நெருடலாக இல்லையா?

முண்டாசுப்பட்டியில் மன்னிக்கவே முடியாத கண்டிக்கப்படவேண்டிய ஒரு நகைச்சுவை, கள்ள உறவு அத்தியாயம். ஊர் தலைவரின் அடுத்த தகுதியில் இருக்கும் ஒருவர் தனது மனைவியை புகைப்படம் எடுக்குமாறும், மனைவியோ கணவனை எடுக்குமாறும் விஷ்ணுவிடம் தனியாக கூறுகின்றனர். புகைப்படம் எடுத்தால் சாவு வரும் என்ற இந்த விருப்பத்தின் பின்னே கற்பு, குடும்ப உறவுகளின் போலித்தனத்தையும், ஜனநாயகமற்ற வழிமுறைகளையும் காட்டும் அளவில் இதை இத்தோடு நிறுத்தியிருக்கலாம். பிறகு அந்த மனைவியோடு பூசாரி தொடர்பு எனக் காட்டி அத்தோடும் விடாமல், பூசாரியை கையும் களவுமாக விஷ்ணுவும், காளியும் பிடிக்கும் போது நள்ளிரவில் அந்த பெண் வீட்டில் இருந்து பல பத்து முண்டாசுக்காரர்கள் வெளியேறுகிறார்கள்.

தற்போது அந்த பெண் உடம்பு சுகத்திற்காக ஊர் ஆண்கள் பலரோடும் உறவு வைத்திருக்கிறாள், கிட்டத்தட்ட காசு வாங்காத விலைமாதாக காட்டப்படுகிறாள். இதற்கும் திரையரங்கம் சிரித்து மாளவில்லை. மக்களை விடுங்கள், பெண்ணுரிமை போராளியான கவின்மலருக்கு கூட இது உறுத்தவில்லை. இந்தியா டுடே இதழுக்காக அவர் எழுதியிருக்கும் விமரிசனத்தில் வரிக்கு வரி படத்தை கொண்டாடியிருக்கிறார். போகட்டும், ஆனால் இந்த கள்ள உறவில் ஒரு பெண் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பது கூட ஏன் தோன்றவில்லை?

மனிதாபிமானம்
கொலைகார சி.ஐ.ஏ தலைவன் கொஞ்சவும் செய்வான்

ஆண்மைக் குறைவு, கள்ள உறவு இரண்டும் தமிழ்ப்படங்களில் பல முறை நகைச்சுவையாக கவுண்டமணி காலத்தில் இருந்தே இடம் பெறுகிறது. மலையாள பிட்டு படங்களில் அது மையக்கருவாகவும் இருக்கிறது. முன்னதில் சிரிப்பு பின்னதில் காமக் கவர்ச்சி. ஆனால் சமூக யதார்த்தத்தில் கள்ள உறவு என்பது பெரும் சமூக வன்முறையாக மாறி வரவில்லையா? தமிழக சிறைகளில் இருக்கும் பாதிப்பேர் கள்ள உறவு வன்முறை சம்பந்தமுடையவர்கள் என்றால் அது மிகையான எண்ணிக்கை அல்ல. கூடவே பெருமைப்பட முடியாத அவலமும் கூட.

ஆணோ, பெண்ணோ விருப்பமின்றி வாழவேண்டிய குடும்ப நிர்ப்பந்தம், விவாகரத்து, மறுமணம் எதுவும் ஏழு கடல் மலை தாண்டி பெற வேண்டிய விடுதலை என்ற சமூக நிலைமை இங்கே கொலையாகவே முடிகின்றன. கள்ள உறவுச் சண்டைகள் பல பெண்களை கொலை செய்தே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன. ஆண்களுக்கு இது கவுரப் பிரச்சினையாகவும், பெண்களுக்கு இருட்டு சுதந்திரமாகவும் இருக்கின்றது. ஜனநாயக வெளிச்சமின்மையின் விளைவுகள் இப்படித்தானே இருக்கின்றன?

பரஸ்பரக் காதல், சமத்துவம், பொருளாதாரச் சுதந்திரம் எதுவும் இல்லாமல் ஒரு குடும்பமோ, பெண்ணோ அமைதியாக வாழ முடியுமா? காதலுக்கு சுதந்திரம் இல்லாத போது கள்ளக் காதல் பெருக்கெடுத்து ஓடத்தானே செய்யும்? இத்தகைய பரிமாணங்களை விடுத்து அதை சிரிப்பாக்குவது எதைக் காட்டுகிறது?

தமிழ்ப் படங்களில் தனியான காமடி டிராக்காகவும், மலையாள பிட்டு படங்களில் அது மையமான கதையாகவும் வருவதே இதை புரிந்து கொள்ள போதுமானது. பிட்டு பட கள்ள உறவு ஆண்களின் ஏக்கத்தையும், தமிழ்ப்பட காமடி தானெல்லாம் யோக்கியன் என்று மற்றவர்களை பார்த்து சிரிக்கும் போலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. கள்ள உறவுக்காக கொலை செய்த தைரியமான ஆண்கள் சிறையிலும், கள்ள உறவையோ, கொலையையோ செய்ய முடியாத தைரியமற்றவர்கள் சிரிப்பதற்கு சாத்தியம் உண்டா இல்லையா?  இல்லையென்றால் சிரித்தவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

சினிமா ஆசை முனிஸ்காந்த்தின் பாத்திரம் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஊர்த்தலைவர் இறந்த பிறகு எடுத்த புகைப்படம் சரியாக பதிவாகததால் இவரது சினிமா கனவை பயன்படுத்தி செத்துப் போன ஊர்த் தலைவர் போல சிங்காரித்து படமெடுக்கிறார்கள் விஷ்ணுவும் காளியும். படத்தின் கதையோட்டத்தை தீர்மானிக்கும் முனிஸ்காந்த் மட்டுமல்ல அநேக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்தான் நாயகன் நாயகியை விட மனதில் பதிகிறார்கள். இதையெல்லாம் சாதித்த இயக்குநர் சமூகபாத்திரத்தின் வீச்சை தவற விட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் காமடி, சடையர் எனும் இருவார்த்தைகளும் நகைச்சுவையை குறிக்க்கின்றன என்றாலும் பொருள் வேறு. முன்னது வெறும் சிரிப்பு, பின்னது சமூக நோக்கிலான நகைச்சுவை. தோற்றம், நடத்தை, சூழல், உரையாடல் போன்றவற்றில் ஒரு மெலிதான சீர்குலைவு விபத்து போன்று நடைபெற்றால் தோன்றுவது சிரிப்பு. சமூகவியல் நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் குறிப்பிட்ட சமூக அமைப்பின் முரண்பாடுகளை, போலித்தனத்தை, அவை வெளிப்படும் நிகழ்வுகள் – ஆளுமைகள் – பிரச்சினைகளிலிருந்து உணர்த்த வைப்பது.

வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தால் வருவது வெறும் சிரிப்பு. சங்கரன் கோவில் இந்து முன்னணி ஜீவராஜின் கொலையை ஒட்டி, மனைவியை ஜிகாதியாக்கி, மகாபாரதத்தை ரியல் எஸ்டேட் போராக்கி எழுதுவது சமூகவியல் நகைச்சுவை. தமிழ் சினிமா அநேக தருணங்களில் வெறும் சிரிப்பாகவே – அதுவும் சப்தங்களின் – விரயமாகி போகிறது. அதனால்தான் இங்கே காமடி டிராக் எனும் தனி சிருஷ்டியை மையக் கதையோடு ஒட்ட வைக்கிறார்கள்.

ஒருக்கால் முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் போன்ற முழுநீள நகைச்சுவை படங்களும் கூட தனித்தனிக் காட்சிகளின் நகைச்சுவை அவியலாகவே ஒட்டப் படுகிறது. முண்டாசுப்பட்டியின் முதல் காட்சிகளில் அத்தகைய தனித்தனி நகைச்சுவைதான் போரடிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் பின்னர் அதே தனித்தனி நகைச்சுவைக் காட்சிகளால்தான் சிரிக்கிறோம் என்பதும் புரியும். ஆண்மைக் குறைவு, கள்ள உறவு அனைத்தும் இந்தக் கதையென்று இல்லை, எந்தக்கதையில் சொருகியிருந்தாலும் வரவேற்பு பெற்றிருக்கும். எனில் ஒரு மையக் கதை அதன் சொந்த பலத்தில் நகைச்சுவையை தோற்றுவிக்க முடியாதா என்று ‘நாளைய இயக்குநர்கள்’ யோசிக்க வேண்டும்.

நாளைக்கு சமூகம் எப்படி மாறும், மாறவேண்டும் என்ற பொறுப்பு இருக்கும் போது மட்டுமே இன்றைய சமூகத்தின் இயக்கத்தை பார்த்து கதை எழுத முடியும். சமூக முரணை புரிந்து கொண்டவர்கள் புரட்சிக்காக பாடுபடுகிறார்கள் என்றால், அதே முரணை கலையில் உணர்ந்தவர்கள் சமூகவியல் நோக்கிலான நகைச்சுவை படைப்புகள் – சார்லி சாப்ளின் போல – தர முடியும்.

ஆகவே முண்டாசுப்பட்டியை பாருங்கள், சிரியுங்கள், இந்த விமரிசனத்தையும் பரிசீலியுங்கள்!

கொலைகாரனுக்குப் பாதுகாப்பு ! நீதி கேட்டால் பொய்வழக்கு ! !

0

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு.

தீஸ்தா சேதல்வாத்
குஜராத் அரசால் பொய்வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்).

குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குச் சட்ட உதவிகள் செய்வதை நோக்கமாகக் கொண்டு “நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு” என்ற தன்னார்வ அறக்கட்டளையை தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்த் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, மும்பை இந்துவெறி பயங்கரவாதத்துக்குப் பின்னர் “சப்ரங்” என்ற தன்னார்வ அமைப்பை 1993-ல் இவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

குஜராத் படுகொலையின்போது, குல்பர்க் சொசைட்டி எனும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் கொடூரமான முறையில் 69 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய பாசிச வெறியாட்டத்தின் வரலாற்று சாட்சியமாக அந்த இடத்தையே ஒரு நினைவகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குல்பர்க் நினைவகத்துக்காக இவர்கள் திரட்டிய தொகை ரூ 4.5 இலட்சத்தில் ரூ 50 ஆயிரம் மட்டுமே வெளிநாடுகளிலுள்ள தீஸ்தாவின் நண்பர்கள் வழங்கிய நன்கொடை. இதற்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், குல்பர்க் குடியிருப்பைச் சேர்ந்த சிலரை மிரட்டி, தீஸ்தாவுக்கெதிராக நிதி மோசடிக் குற்றம் சாட்டி பொய்ப்புகார் ஒன்றை எழுதி வாங்கியிருக்கிறது குஜராத் போலீசு. பொய்வழக்குப் போட்டு சிறை வைக்க முயன்றது. அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது. எனினும், உயர்நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி யிருக்கிறது.

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்டு குஜராத் அரசின் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதை தீஸ்தாவும் குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரசு எம்.பி.யான இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரியும் உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டில் ஆதாரங்களுடன் அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் கடைசி முனை மோடியை நெருங்கியதால், அன்று முதலே தீஸ்தாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடங்கி விட்டன. இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. மோடியின் நேரடிப் பார்வையில்தான் குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதைச் சட்ட ரீதியாகவே நிலைநாட்டுவதற்கு வலுவான சாட்சியங்கள் இருந்தபோதிலும், சிறப்புப் புலனாய்வுக் குழு படுகொலைக்கு அவரைப் பொறுப்பாக்குவதற்கான சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 2012-ல் மோடியை விடுவித்தது.

இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்யுமாறு மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது உச்ச நீதிமன்றம். சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று அவரது அறிக்கை கூறியது. மோடியைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார் ஜாகியா ஜாப்ரி.

கார்ப்பரேட் முதலாளிகளின் அதிகார பலம், பண பலம், சட்ட வல்லுநர்கள் படை, அரசு அதிகாரம் ஆகிய அனைத்து வலிமைகளும் பொருந்திய ஒரு பாசிஸ்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் இத்தகைய விடாப்படியானதொரு சட்டப்போராட்டம் நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. தன் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தகைய நடவடிக்கையில் யாரும் இறங்க முடியும்.

இதுவரை 5 பொய் வழக்குகள் தீஸ்தாவின் மீது போடப்பட்டிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற பெண்ணை மிரட்டியும் பணம் கொடுத்தும் தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது பாரதிய ஜனதா கும்பல். அதனையெல்லாம் சட்டரீதியாக முறியடித்தது மட்டுமல்ல, இந்து பாசிசம் கோலோச்சும் அந்த மாநிலத்தில், தம் குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்தவர்களான சாட்சிகளுக்குத் தைரியம் கொடுத்து, அவர்களைச் சாட்சி சொல்ல வைத்து குற்றவாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பும் பெற்றிருக்கிறார் தீஸ்தா.

ரதயாத்திரை, மும்பை படுகொலை உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்துள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் எதிலும் இதுநாள்வரை இந்து வெறியர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை. குஜராத்தில் இதுவரை 117 இந்துவெறியர்கள் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் உழைப்பும் பங்கும் முக்கியமானவை.

தீஸ்தா, ஜாகியா ஜாப்ரி மற்றும் பிற மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தை ஆதரித்து தோள்கொடுப்பதன் மூலம்தான், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உந்துதலையும் துணிவையும் அனைவருக்கும் ஏற்படுத்த முடியும்.

– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________