கொலைகார திட்டத்திற்கு உதவாதே ! Google ஊழியர்கள் எதிர்ப்பு !

அமெரிக்க இராணுவத்தின் கொலைகார திட்டத்திற்கு பயன்பட மாட்டோம் என கூகுள் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது என்ன கொலைகார திட்டம்?

அமெரிக்காவில் இருக்கும் கூகுள் தலைமை நிறுவனத்திலிருந்து 12-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளார்கள். கூகுள் நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து புரொஜெக்ட் மேவன் என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இது கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளையும் அதன் அனுபவங்களையும் அமெரிக்க இராணுவ தேவைக்கு பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டது. அதில் தாங்கள் வேலை செய்யமாட்டோம் என்று மறுத்து இவர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மேற்கண்ட திட்டத்தைக் கண்டித்து கூகுள் நிறுவனத்தின் 4000-த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்டு அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் கடிதம் அளித்திருந்தார்கள். ஊழியர்கள் எழுதியுள்ள கடிதத்தில் “சமீபத்தில் கூகுள் ஊழியர்கள் மேவன் புரொஜெக்ட் குறித்து கவலை எழுப்பினோம். அப்போது டயேன் கிரினி இத்தொழில்நுட்பம் டிரோன்களை இயக்க பயன்படுத்தப்படாது என்று தெரிவித்திருந்தார். இது நேரடியாக தாக்குதலில் பயன்படுத்தப்படாது என்றாலும் இத்தொழில்நுட்பத்தை இராணுவத்திடம் அளித்ததும் தாக்குதலுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்தபடும் என்று தெரிகிறது” என்பது இடம் பெற்றிருக்கிறது.

தாங்கள் இராணுவத்திற்காக தயாரிக்கும் தொழில்நுட்பம் நேரடியாக கொலை செய்யாது என்று கூகுள் கூறினாலும் கொலை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை.

மேலும் அக்கடிதத்தில் இத்திட்டம் கூகுள் நிறுவனத்தின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதனால் இத்திட்டத்தை உடனடியாக கைவிடுவதோடு கூகுள் நிறுவனமோ இல்லை அதன் காண்டிராக்ட் நிறுவனங்களோ போர் சார்ந்த தொழில்நுட்பங்களை தயாரிக்க உதவுவதில்லை என்று நிறுவனக் கொள்கையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தார்கள்.

கூகுள் நிறுவனத்தின் மேக கணினியம் (google cloud) பிரிவு வழியாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினால் பல பில்லியன் டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு வருமானமாக கிடைக்கும். அது போக அமெரிக்க மேலாதிக்கத்திற்கு துணை நிற்பது கூகுளின் தலையாய பணிகளில் ஒன்று. ஆக மேற்கண்ட கடிதத்தை கூகுள் நிறுவனம் கண்டு கொள்ளவில்லை.

பெண்டகனின் டிரோன் போர்முறைகளுக்கு தாங்கள் உதவுவது அறமற்ற செயல்(unethical) என்றும் அவ்வூழியர்கள் கருதுவதால் தற்போது வெளியேறி உள்ளார்கள்.

டிரோன் என்ற ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வழியாக ஆப்கானிஸ்தான், ஏமன், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகிறது அமெரிக்கா. கடந்த ஆண்டு ஈராக்கில் நடத்திய டிரோன் தாக்குதலில் 200 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதே போன்று தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் பொதுஇடங்களில் தாக்குதல் நடத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்திருக்கிறது அமெரிக்க டிரோன்கள். இதை அறிந்து தான் கூகுள் ஊழியர்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

தற்போது மேற்கண்ட டிரோன்களை தொலைதூர கட்டுப்பாட்டின் மூலம் மனித மூளைகள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் டிரோன்களின் காமிரா வழியாக வரும நேரலப் பதிவுகள் அனைத்தையும் உடனடியாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் சிரமம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றுணர்கள் மூலம் மனித தலையீடு இல்லாமலேயே டிரோன்கள் கொலை தொழிலில் ஈடுபடமுடியும். காமிராவின் மூலம் எது பொருள், எது மனித உயிர் என பிரித்து பார்த்து மிக துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். இதோடு கூகுளின் தகவல்களும் சேர்ந்து கொண்டால் பிறகு குறிப்பிட்ட நபரையோ மக்கள் திரளையோ கொலை செய்ய அதுவே ஸ்கெட்ச் போட்டு நிறைவேற்றும்.

இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து தங்கள் வேலையை ராஜினாமா செய்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் கூகுள் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் :