ந்த நகரத்தை இடித்துவிடுங்கள்
இந்த நகரத்தின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்குச் செல்ல
எனக்கு மூன்று மணி நேரமாகிறது
எனக்கு அரைமணி நேரத்தில் போயாக வேண்டும்

இந்த நகரத்தின்
அடுக்கு மாடி குடியிருப்புகளை இடித்துவிடுங்கள்
அரசாங்க கட்டிடங்களை இடித்து விடுங்கள்
பிரமாண்டமான மால்களை இடித்துவிடுங்கள்
எங்கும் நிரம்பியிருக்கும் வணிகக் கட்டிடங்களை இடித்து விடுங்கள்
நட்சத்திர விடுதிகள்
ஆடம்பர உணவகங்கள்
எல்லாவற்றையும் இடித்து விடுங்கள்
நான் இந்த நகரத்தை வேகமாக கடப்பதற்கு
அவை தடையாக இருக்கின்றன

எனக்கு இந்த நகரத்தில்
ஒரு வழிச்சாலைகள் போதாது
எட்டுவழிச்சாலைகள் வேண்டும்
நான் வேகமாக வளரவிரும்பும் மனிதன்
எனவே வேகமாகச் செல்ல விரும்புகிறேன்
அதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும்
இடித்துத்தள்ள விரும்புகிறேன்
வேகமாகச் செல்வதற்கு
தடையாக இருக்கும்
மரங்களை எப்படி வெட்டுவீர்களோ
கிணறுகளை எப்படி மூடுவீர்களோ
ஓடைகளில் எப்படி மண்ணை அள்ளிப்போடுவீர்களோ
மலைகளை எப்படி உடைப்பீர்களோ
அதே போல இந்த நகரத்தின் குறுக்கே இருக்கும்
அத்தனை தடைகளையும்
உடைத்தெறியுங்கள்

’வளர்ச்சி’க்காக அழிக்கப்படும் வனங்களும், வயல்களும்

இந்த நகரத்தின்
ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்குச்செல்ல
எனக்கு மூன்றுமணி நேரமாகிறது
நான் அரைமணி நேரத்தில் செல்ல வேண்டும்
எனக்கு பொறுமையில்லை
என்னால் மெதுவாகச் செல்ல முடியாது
நான் வளர்ச்சியின் மனிதன்
நான் சாலையில் வேகமாகப் போனால்தான்
வேகமாக வளர முடியும்

இந்த நகரம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது
சீக்கிரம் எல்லா தடைகளையும்
அகற்றுங்கள்
நம் வனங்களை மழித்ததுபோல
இந்த நகரத்தையும் மழித்து
வெறும் தார்ச்சாலைகளாக்குங்கள்
நான்கு வழிச்சாலை
எட்டு வழிச்சாலை
பதினாறு வழிச்சாலை
நரகத்திற்குப்போக
இருபத்திநான்கு வழிச்சாலை

நன்றி: மனுஷ்ய புத்திரன்