Wednesday, September 27, 2023
முகப்புசுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?
Array

சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?

-

இந்த ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் ஜெகத்ரட்சகன் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளின் பகிரங்க கொள்ளை வெளிவந்து சில தினங்களுக்குள்ளேயே சூடு தணிந்துவிட்டது. தமிழக அரசும் பெயருக்கு சில கல்லூரிகளில் ரெய்டு என்று யாரையும் தண்டிக்காமலேயே கடமையை செய்து விட்டது. பெற்றோர்களும் வழக்கம் போல கடன் வாங்கி சில இலட்சங்களை இறைத்து தமது வாரிசுகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம் வாங்கினால் பல ஆயிரம் சம்பளம் உள்ள வேலை உறுதி என்ற மூடநம்பிக்கையின்படி அலைகிறார்கள்.

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த, கட்டணத்தை கல்லூரிகளே தேவைக்கேற்றபடி உயர்த்தி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சக முதலாளிகளின் சோகமறிந்து கிழக்கு பதிப்பகம் பத்ரி தீர்வு சொல்கிறார். அதாவது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வழிப்பறிக்காரனின் குற்றத்தை தடுத்து நிறுத்த அந்த வீட்டுக்காரரே பணத்தையும், நகையையும் கொடுத்துவிட்டால் பிரச்சினை இல்லையல்லவா! உலகமய தாசர்கள் இப்படித்தான் தனியார் மயத்திற்கு பச்சையாக ஜே போடுகிறார்கள்.

உண்மையில் புற்றீசல் போல பெருகி வரும் இந்த சுயநிதிக் கல்லூரிகளால் யாருக்கு ஆதாயம்? இந்த உயர்கல்வியினால் மாணவர்களுக்கு உத்திரவாதமான எதிர்காலம் உண்டா? உலகெங்கிலும் தனியார் கல்லூரிகள் குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் பகாசுர வளர்ச்சியில் செல்வதன் காரணமென்ன? கல்விக்கான பொறுப்பில் அரசு விலகுவதால் யாருக்கு நட்டம்? இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரை விடை தருகிறது. இதை நீங்கள் படிப்பதோடு குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நட்புடன்

வினவு

********************************************

dsc_0006

கடந்த 2007 ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பன்னீர் செல்வத்தின் கதை,  நக்கீரன், ஜூ.வியில் வந்த சினிமா நடிகை பத்மாவின் கதை போல புலனாய்வுத் தொடருக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்த “சமூகப் பிரச்சினையல்ல.’ மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது மகனுக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாத ஒரு ஏழையின் “வழக்கமான தனிப்பட்ட பிரச்சினை.’ எனவே, தன் மகனை “அவையிடத்து முந்தியிருப்பச் செய்ய’ முடியவில்லையே எனக் குமைந்த அந்த ஏழைத் தகப்பனின் கதையை பத்திரிக்கைகள் அன்றோடு முடித்துக் கொண்டன.

அந்தச் சுவாரசியமற்ற கதை இதுதான். தெருத் தெருவாய் காய்கறி விற்ற பன்னீர் செல்வமும், கூலி வேலை செய்யும் செங்கமலமும் தமது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். வறுமைக்கு மீறிப் படித்த மூத்த மகன் சுரேஷ் பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறி பொறியியல் படிக்க ஆசைப்பட்டான். பலர் கையில், காலில் விழுந்து பணம் திரட்டி இரண்டாண்டுகள் படிக்க வைத்தார் தந்தை பன்னீர்செல்வம்.

மூன்றாமாண்டுப் படிப்பிற்குக் கட்டணம் கட்ட நேரம் வந்தது. “எவ்வித நிபந்தனையும் இல்லாமல், வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும்’ என்ற செட்டிநாட்டு சிதம்பரத்தின் சத்தியப் பிரகடனத்தை பத்திரிக்கைகளில் படித்துவிட்டு அதை நம்பி வங்கிகளுக்கு நடையாய் நடந்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவமதிப்பையும், நிராகரிப்பையும் சந்தித்தார். ஒரு கையாலாகாத தகப்பனாக தன் மகனுக்கு முன் நிற்க விரும்பாமல் தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது வங்கிகள் அவரது மகனுக்கு கல்விக் கடன் தர முன்வந்திருக்கின்றன.

இது வெறுமனே ஒரு தனிநபரின் சோகக் கதையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் கல்விக் கடன் கிடைக்காததால், ஏழாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவி ரெஜினாவின் துயரக் கதையும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் துப்புரவுப் பணி செய்யும் பழனியம்மாளுக்கு மகனை பொறியியல் படிக்க வைக்க ஆசை. ஆனால் அவரது மாதச்சம்பளம் ரூ.400. அவரது கணவர் மின் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர். அவரது சம்பளம் ரூ.850. பத்மாவதி பொறியியல் கல்லூரியில் பையனுக்கு இடம் கிடைத்து விட்டது. ஆண்டுக் கட்டணம் ரூ.36,250. அரும்பாடு பட்டு 16,250 புரட்டிவிட்டார்கள். மீதிப்பணத்துக்கு வங்கியில் கல்விக்கடன் கேட்டால் “சொத்து இருக்கிறதா’ என்று கேட்கிறார்களாம். “கல்விக் கொடையாளர்கள் உதவுங்கள்’ என்று கோரிக்கை விடுக்கிறது தினமணி (செப்4).

ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும்போதும் இத்தகைய சோகக்கதைகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்த ஆண்டு இப்பிரச்சினை இரண்டு அரசியல் பரிமாணங்களை எடுத்தது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நன்கொடைக் கொள்ளையடிக்கும் சுயநிதிக் கல்லூரிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் ராமதாஸ். புகார் கொடுத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசுக்காரனைப் போல தந்திரமாகப் பேசிச் சமாளித்துப் பார்த்தார் கல்வி அமைச்சர். சமாளிக்க முடியாத அளவுக்கு கல்விக்கொள்ளை தலைவிரித்து ஆடவே மொட்டைக் கடிதாசி போட்டாலும் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். பிறகு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நாடகங்கள் நடந்தன. பிரச்சினை அத்தோடு முடிந்து விட்டதா என்ன?

கல்விக் கட்டணம்: தீர்மானிப்பது யார்?

தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்பை வாங்க உதவும் பொறியியல் கல்வியில், ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சம் மாணவர்கள் சேருகின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் விரல் விட்டு எண்ணத்தக்க சில அரசுக் கல்லூரிகளோடு சேர்த்து, 262 (தற்போது சுமார் 300) பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வின் மூலம், அரசு நிரப்பவுள்ள இடங்களின் மொத்த எண்ணிக்கை 62,337. இவற்றில், சுயநிதிக் கல்லூரிகளில், ஒரு மாணவனுக்கான கல்விக் கட்டணம் ரூ.32,000/ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 37,838 இடங்கள் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வருகின்றன. இவற்றுக்கான கட்டணம் சாராயக் கடை ஏலத்தைப் போல பல லட்சங்களில் கல்வி வள்ளல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் பிரச்சினை இருக்கட்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமே நியாயமானதுதானா? நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமாக ரூ.1,20,000 அடங்கலாக இதர செலவுகள் சேர்த்து ஏறத்தாழ 2 லட்சம் ரூபாய் முதலீடாகப் போடுவதற்கு இந்த நாட்டின் எத்தனை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களால் முடியும்? மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. மக்களின் வெறுப்பைச் சமாளிக்க, சொத்து ஜாமீன் கேட்காமல் கடன் கொடுக்க வேண்டும் என்று அரசு வங்கிகளுக்கு உத்திரவு போட்டார் சிதம்பரம்.

அப்படிக் கடன் வாங்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காவிட்டால் அவர்களால் கடனை அடைக்க முடிவதில்லை. பட்டம் பெற்றவுடன் மாணவர்களுக்கு சிதம்பரம் வேலை வாங்கித் தருவாரா அல்லது வாராக்கடனை அவர் அடைப்பாரா? அரசு வங்கிகளுக்கு உத்திரவு போடும் சிதம்பரம் தனியார் வங்கிகளுக்கு உத்தரவு போடாத மர்மம் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசு வங்கி ஊழியர்கள்.

சிதம்பர இரகசியம்!

“அம்பானிக்கும் டாடாவுக்கும் வாராக்கடனை வாரிக் கொடுக் கிறாயே, ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன கேடு? அரசு வங்கிப் பணம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?” — என்பது ஏழைப் பெற்றோர்கள் அரசு வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எழுப்பும் கேள்வி. தங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பது உண்மையில் தங்களுக்கு வழங்கப்படுவது அல்ல, அது சுயநிதிக்கல்லூரி முதலாளிகளுக்கு தங்கள் வழியாகப் போய்ச்சேரும் மக்கள் பணம் என்பதை ஏழைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. ஏழை மாணவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல, சீட்டு நிரம்பாமல் கஷ்டப்படும் சுயநிதிக் கொள்ளையர்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் வங்கிப் பணத்தை வாரிவிடச் சொல்கிறார் சிதம்பரம் என்கிற உண்மையையும் அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, ராமதாசின் கிடுக்கிப்பிடி, பொன்முடியின் அதிரடி, சிதம்பரத்தின் எச்சரிக்கை, நீதிமன்றங்களின் உத்தரவு, கல்வி வள்ளல்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி.. என இவையனைத்தும் யாருக்கும் ஏனென்றே புலப்படாத அதிபயங்கரமான சக்திகள் கல்வித்துறையை ஆட்டிப் படைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

90களுக்குப் பிறகான உயர்கல்விக் கொள்கைச் சீர்திருத்தங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று கல்விக்கடன். உயர் கல்வி வழங்கும் பொறுப்பை அரசு கைவிட்டு, அதை முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்ற இந்தச் “சீர்திருத்தத்தின்’ விளைவுதான் கல்விக்கடன். பம்பர் லாட்டரி தொழிலதிபர்களைப் போல சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் இப்படிக் கல்விச் சேவையில் தங்களை “அர்ப்பணித்துக்’ கொள்ள வேண்டுமென யார் அழுதார்கள்?

தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சீட் நிரப்பிக் கொடுக்கும் சிரமத்திற்குள்ளாகி, பொன்முடி போன்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதை விட, உயர்கல்வி முழுவதையும் அரசே ஏற்று நடத்தலாமே! இந்தக் கேள்வியை மட்டும் யாரும் எழுப்புவதில்லை. கவனமாகத் தவிர்க்கப்படும் இந்தக் கேள்விக்குள்தான் அரசின் உடைந்து விட்ட உயர்கல்வி அமைப்பும், அதனை வழிநடத்தும் சூத்திரதாரிகளும் மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

உயர்கல்வி: ஒரு சின்னத்தனமான வரலாறு

இந்திய உயர்கல்வித் துறை நேருவின் அரைவேக்காட்டு சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முறையில் துவக்கப்பட்டது. “லைசன்ஸ் ராஜ்’ என இன்று முதலாளித்துவவாதிகளால் இகழப்படும் அன்றைய காலகட்டத்தில்தான் இன்று உயர்கல்வியில் பெயரளவு அதிகாரத்தோடு இயங்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1950-51களில் 49.4 சதவிகிதமும், 1986-87களில் 75.9 சதவிகிதமுமாக, உயர் கல்விக்கான நிதி வரவு பெரும்பான்மையாக அரசைச் சார்ந்தே பெறப்பட்டது.

இக் காலகட்டத்தில்தான், மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணமாக பெறப்பட்ட நிதி வரவு 36.8 சதவிகிதத்திலிருந்து, 12.6 சதவிகிதமாகக் குறைந்தது. மேலும், இந்தியாவின் அறிவுக் கோவில்கள் என கொண்டாடப்படும், ஐ.ஐ.டி முதலான உயர் கல்வி நிறுவனங்களும் இக்காலகட்டத்தில்தான் உருவாக்கப் பெற்றன. எனினும், பொதுவில் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில், உயர்கல்விக்கு பத்து சதவிகிதம் மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஸ்டான்லி வோல்போர்ட் எனும் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல, “”நவீன இந்திய அதிகாரம் மற்றும் வாய்ப்பு வசதிகளின் சிகரங்களைத் தொடுவதற்கான வேகமான வழியாக, உயர்கல்வித் துறையை நடுத்தர வர்க்கம் உணரத் துவங்கியது.” அதிகரித்து வரும் உயர்கல்வித் தேவையை ஈடு கட்ட, புதிய நிறுவனங்களை உருவாக்கவும், சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுமான தேவை உருவாகியது.

இச்சூழலில்தான் 90களின் துவக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. 1994, 1995ல் வெளியிடப்பட்ட உயர் கல்வி குறித்த அறிக்கைகளில், “”கல்விக்கான ஒதுக்கீடு அதிகரித்து வருவதால், அடிப்படை மற்றும் பள்ளிக் கல்வியில் முழுமையான, தரமான, நியாயமான வாய்ப்புக்களை வழங்குவதில் போதுமான நிலையை அடையாத நாடுகளில், பொது வளங்களில், உயர்கல்விக்கு அதிகபட்ச ஒதுக்கீடு கூடாது” என சாணக்கியத்தனமான நீதியை உலக வங்கி முன்வைத்தது. உயர்கல்வியை பள்ளிக் கல்வியின் எதிரியாகக் காட்டுவதன் வாயிலாக, அதிலிருந்து அரசு விலகுவதற்கு வழி சொல்லிக் கொடுத்தது. உலக வங்கியின் இந்தப் பொன்மொழி உயர் கல்விக்கான புதிய மனுநீதியாக இந்திய ஆளும் வர்க்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

யாருக்கு லாபம்?

1997இல் இந்திய அரசின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட””இந்தியாவில் அரசு மானியங்கள்” என்ற அறிக்கை உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டியது. உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை என்பதாலும், அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகமிருப்பதாலும் உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என வாதிட்டது. ஏதோ அடிப்படைக் கல்விக்கும், பள்ளிக் கல்விக்கும் கோடி கோடியாகக் கொட்டி முன்னேற்றப் போவதைப் போலக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய “முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதென்று கூற புள்ளிவிவரங்கள் தேவையில்லை.

உடனடியாக, “நன்மை தரக் கூடிய சமூகநலப் பட்டியலிலிருந்து’ உயர்கல்வி நீக்கப்பட்டது. பின்னர் “இரண்டாம் பட்ச சமூகநலப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டது. விவசாயத்தை மாநிலப் பட்டியலுக்குத் தள்ளிவிட்ட மத்திய அரசு, கல்வியை மட்டும் பொதுப்பட்டியலிலேயே வைத்துக் கொண்டது. இதைக் காரணம் காட்டி, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டுமென பொன்முடி இப்பொழுது வாதிடுகிறார்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்து விட்டால், ஜேப்பியாரையும், உடையாரையும் பொன்முடி உள்ளே தள்ளி விடுவாரோ? அவர்களுடைய காசில் தானே எல்லா ஒட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் கல்லாப் பெட்டியும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தால், இன்னும் பல நூறு ஜேப்பியார்கள்தான் அதிகரிப்பார்கள் என்பது வெளிப்படை.

2001ல் உயர்கல்வி சீர்திருத்தங்களை ஆய்வு செய்ய “மாபெரும் கல்வியாளர்களான’ முகேஷ் அம்பானி மற்றும் குமாரமங்கலம் பிர்லா ஆகியோரை உள்ளடக்கிய கமிட்டியை அரசு அமைத்தது. அக்கமிட்டி உலக வங்கியின் புதிய மனுநீதியை அச்சுப் பிறழாமல் வாந்தியெடுத்தது. மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வரவை அதிகரிக்க அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் உருவாக்கிய நீதிபதி புன்னையா கமிட்டி, சுவாமிநாதன் கமிட்டி, பைலி கமிட்டி, அனந்த கிருஷ்ணன் கமிட்டி, முகமதுஉர்ரெஹ்மான் கமிட்டி என அனைத்துக் கமிட்டிகளும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதையே முக்கிய நடவடிக்கையாக வழிகாட்டின.

கல்விக் கடன் வழங்குவதன் மூலமும், கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும்தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான செலவை நிறுவனங்கள் திருப்பி எடுக்க முடியும் என கொள்கை வகுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டது. இதன் மூலம் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டு கல்வி வியாபாரிகள் கடை விரிக்க வழி வகுத்தது.

மறுபுறம் கல்விக் கடன் மூலமாக சுமையை வங்கிகளுக்கும், வங்கிகள் மூலமாக தனிநபர்களுக்கும் மாற்றி விட்டது என்கிறார் கல்வியாளர் கீதா ராணி. (“இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களும், உயர் கல்வி நிதி முதலீடும்’, 2003). மேலும், உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் கல்விக் கடன்கள் சரியாகத் திருப்பியளிக்கப்படுவதில்லையென காலப் போக்கில் கைவிடப்பட்டதையும், பெண்களுக்கு எதிர்மறை வரதட்சிணையாகக் கருதப்படுவதையும், நமது நாட்டில் பின்தங்கிய பிரிவினரின் குறிப்பான தகவல்கள், பொருளாதார நிலை, பின்புலம், அதற்கேற்ற வழிமுறைகள், வட்டி, தவணைகள் என சிறப்புக் கவனமின்றி பொத்தாம் பொதுவாக வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டும் அவர், நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் கல்விக் கடன் என்பது தொடராது. மாறாக சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு விடும் என ஆணித்தரமாக வாதிடுகிறார்.

கல்வி: முதலாளித்துவக் கொள்ளையனுக்கே பாடம் சொல்லும் இந்தியா!

இக்கொள்கைகளின் விளைவாக 90களுக்குப் பிறகு, அரசுக் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவுகள் துவக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டத்திற்கிடையே பல்கலைக் கழகங்களோடு இணைக்கப்பட்டன. தனியார் பல்கலைக் கழகங்கள் புற்றீசல் போலப் பரவின. 2002-04 ஆண்டுகளில் மட்டும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் 96% உயர்ந்திருக்கிறது. சுயநிதிக் கல்லூரிக் கொள்ளைக்கோ அளவே இல்லை.

2005ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் மாணவர்களில் 23.2% பேர்தான் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். இந்தியாவிலோ உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 63.2% பேர் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கின்றனர். முதலாளித்துவக் கல்விக் கொள்ளையில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிவிட்டது இந்தியா.

தரமான பொருளுக்கு விலை அதிகமாகத்தான் இருக்கும் என்ற முதலாளித்துவ மூட நம்பிக்கை வலிமையான பொதுக் கருத்தாக மாற்றப்பட்டு விட்டதால், இந்த அநீதிக்கு எதிரான போராட்டம் மிக அரிதாகவே இருக்கிறது. உயர்கல்வியின் விலை அதிகரித்து விட்ட காரணத்தால்தான்,

17-24 வயது வரையுள்ள வயதுப் பிரிவினரில் 7 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயிலச் செல்லுகின்றனர். வல்லரசு ஜம்பமடிக்கும் இந்தியாவை விடப் பின்தங்கிய நாடுகள் என அழைக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதனை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள், தனியார் கொள்ளைக்கே வழி வகுத்திருக்கின்றன. 2003 சௌரப் சௌத் வழக்கில், நீதிபதி லட்சுமணன், நிலவும் சூழலை விவரிக்கிறார்.””ஒவ்வொரு ஆண்டும் அட்மிஷன் காலங்களில் தொழில்முறைப் படிப்புகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் அளவில்லாத உளைச்சலையும், முறைகேடுகளையும் அனுபவிக்கிறார்கள். தெளிவில்லாத கொள்கைகள், முரண்பாடான முறைகள், தகவல் பற்றாக்குறை ஆகியவை இதற்குக் காரணம். தொழில் முறைப் படிப்புகளுக்கான கல்லூரிகளும், இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க, புதிய புதிய படிப்புகள் வந்து குவிய, கல்வி வாய்ப்புகளைத் தேடி மாநில எல்லைகளைக் கடந்து மாணவர்கள் அலைய வேண்டியிருக்கிறது. பெற்றோர், மாணவர்களின் துயரங்கள் ஒவ்வோரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன”. கல்லும் கரைந்துருகும் விதத்தில் பேசும் நீதிபதி, கல்வி வியாபாரமாக்கப்பட்டது தான் இவையனைத்திற்கும் காரணம் என்பதை மட்டும் கூறாமல் தவிர்த்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சுயநிதிக் கல்வி: வரமல்ல, சாபம்

கல்வி என்பது “சமூக மேம்பாட்டிற்கான லாப நோக்கற்ற சேவை’ என்ற நிலையிலிருந்து, விற்கத் தக்க, லாபமீட்டக் கூடிய தொழிற் சேவை என உலக வங்கியாலும், உலக வர்த்தகக் கழகத்தாலும் வரையறுக்கப்பட்டு அதைக் கொள்கை ரீதியில் அரசு பின்பற்றி வருகிறது. எனினும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகக் கருதப்பட்டு, அவற்றின் வருமானத்திற்கு இன்றளவும் வரிவிலக்கும் அளிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இந்த ஆண்டும் கவுன்சலிங்கில் நிகழ்ந்த குளறுபடிகள், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி ஒரு சீட்டிற்கு 14 லட்சம் வசூலிப்பது, நீதிமன்றக் குழப்படிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு சீட்டுகளை நிரப்பித் தருவதில் அரசு காட்டும் முனைப்பு என திக்குத் தெரியாத காடாக, ஐந்திலக்கச் சம்பளக் கனவில் பணத்தைத் தொலைக்கும் லாட்டரியாக உயர்கல்வி, குறிப்பாக பொறியியல் கல்வி மாறி நிற்கின்றது.

நுனி நாக்கு ஆங்கிலமும், டீசென்டான’ நடை, உடை பாவனைகளும், தோற்றமும் இல்லாதவர்களுக்கு கல்விக் கடன் மட்டும் மறுக்கப்படவில்லை, பன்னாட்டுக் கம்பெனிகளின் நுழைவாயில்களும் திறக்க மறுக்கின்றன. அவ்வாறு உபரியாகக் கழித்துக் கட்டப்படும் இளைஞர்கள் சென்னையிலும், பெங்களூரிலும் சில ஆயிரங்களுக்கு, சில இடங்களில் சம்பளம் கூட இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். பலர் சொல்லப்படும் பொறியியல் கல்வி தேவைப்படாத கடைநிலைப் பணிகளுக்கு வேறு வழியின்றி தள்ளப்படுகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் (குமுதம், 18.7.2007) சுட்டிக் காட்டுவதைப் போல, 2004ல் ரயில்வேயில் கடைநிலைப் பணியான கலாசி வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 20,000 பேர் பொறியியல் படிப்புப் படித்தவர்கள் என்றால், அங்கே தெரிகிறது உயர்கல்வியின் லட்சணம்! மேலும், தமிழகத்திலிருந்து ஒவ்வோராண்டும் வெளியேறும் 70,000 பொறியியல் பட்டதாரிகளில் பத்து சதவிகிதத்தினருக்குத்தான் வேலை உத்திரவாதமுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

கல்வியாளர் பி.ஜி. திலக்கின் சொற்களில் சொல்வதானால்,””கணக்கு வழக்கில்லாத சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், மேலாண்மை நிறுவனங்களும் உயர் தகுதி வாய்ந்த அறிவியல், தொழில் நுட்ப மனித வளத்தை உருவாக்கவில்லை. மாறாக, ஐ.டி. கூலிகளைத் தான் உருவாக்கியிருக்கிறது. முழுமையாகக் குழம்பிக் கிடக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல், பொருளாதார அரங்குகளின் நிகழ்வுகள் கண்டு மாணவர்களிடையே பயபீதியைத் தோற்றுவித்துள்ளது.” (“இந்தியாவில் உயர்கல்வித் தனியார்மயம்’, 2002)

இத்தனைக்குமிடையில் இந்தியா டுடே, தினமணி முதல் பல வண்ணப் பத்திரிக்கைகளும், கல்வி, வேலைவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஊதிப் பெருக்குகின்றன. எதிர்கால வேலை வாய்ப்புகளின் புள்ளி விவர மதிப்பீடுகளை அள்ளி வீசுகிறார்கள். ரீடெய்ல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட், ஏர்ஹோஸ்டஸ் மேனேஜ்மென்ட் என புதிய, புதிய படிப்புகள் சேவைத் துறைக்கு பொற்காலம் வரப் போவதாக உறுமியடிக்கப்படுகின்றன.

இத்தகைய தனித் திறன் தேர்ச்சிப் படிப்புகள் நீண்ட கால அடிப்படையில் உதவாது என்பதையும், ஊதிப் பெருக்கப்படும் துறைகளின் சந்தைத் தேவையின் நிச்சயமற்ற தன்மை, கொள்ளளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, சில ஆண்டுகளில் இச் சந்தைக்கான தேவைகள் தீர்ந்து தேவையற்ற உபரியாக இளைஞர்கள் கழித்துக் கட்டப்படுவார்கள் என கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மொத்தத்தில், ஒருபுறம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தரமான, உத்திரவாதமான உயர் கல்வி என்பது இந்தப் பகற்கொள்ளையில் காணாமற் போய்விட்டது. இன்னொருபுறம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு உயர் கல்வி நிர்த்தாட்சண்யமாக மறுக்கப்படுகிறது.

உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகம். எனவே, உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என்று கூறும் அரசின் கொள்கை அறிவிப்பை இப்போது பரிசீலித்துப் பாருங்கள். அரசு இப்படிக் கூறும்போது “கடன் கொடு’ என்று அரசு வங்கிகளுக்கு சிதம்பரம் ஏன் உத்தரவிட வேண்டும்?

பன்னாட்டுக் கம்பெனிக்கு ஆள் சப்ளை

இது சுயநிதிக் கொள்ளையர்களின் லாபத்துக்காக மட்டும் அன்று. ஃபோர்டு, ஹூண்டாய்க்குத் தேவையான பொறியியல் பட்டதாரிகளையும், வால் மார்ட்டுக்கும் அம்பானிக்கும் தேவையான ரீடெய்ல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளையும் சப்ளை செய்யப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, அந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப “உங்களை நீங்கள் உங்களுடைய சொந்தக் காசிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்’ என்று மக்களிடம் கூறுகிறது. பணமில்லாவிட்டால் கடன் கொடுக்கிறேன் என்றும் முன்வருகிறது.

கட்டினால் பெற்றோரின் பணம். கட்டாவிட்டால் அரசு வங்கிகளில் உள்ள மக்கள் பணம். மக்கள் ஆதரவோடு அரசுத்துறையைக் கொல்லுகின்ற ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வேலை இது. விவசாயக்கடன் என்பது உரம், பூச்சிமருந்து, விதை முதலாளிகளுக்குப் போவதைப் போல, வங்கிக் கடன் வள்ளல்களின் கல்லாவுக்குப் போகிறது. பயிற்றுவிக்கப்படும் மாணவனின் திறமையையோ செலவே இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் வரவு வைத்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவதற்கான சட்ட மசோதா தயாராகி வருகிறது. தனியார் பல்கலைக் கழக மசோதாவும் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மருத்துவமனைகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதைப் போல பல்கலைக் கழகங்களும் பங்குச்சந்தையில் குதிக்கின்றன. (பார்க்க: பெட்டிச் செய்தி)

லாட்டரியாக மாறி விட்ட உயர்கல்வியை மென்மேலும் மேலிருந்து சீர்திருத்தங்கள் அல்லது முறைப்படுத்துதல்களைச் செய்வதன் மூலம் மாற்ற முடியாது. கமிசன்களும், நீதிமன்றங்களும் கவைக்குதவாதவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமுமே நாட்டின் உண்மையான எஜமானர்களாக விளங்க, அவர்களுடைய கைத்தடிகளான ஓட்டுப் பொறுக்கிகளிடம், நாம் என்னதான் தொண்டை கிழியக் கத்தினாலும், உயர்கல்வியை அரசு ஏற்று நடத்தப்போவதில்லை.

இது வெறுமனே உயர் கல்வி சார்ந்த பிரச்சினையும் அல்ல. விவசாயத்திலிருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்படுவதும், ஆலைகளிலிருந்து தொழிலாளர்கள் துரத்தப்படுவதும், மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதும் தனித்தனிப் பிரச்சினைகளல்ல. பன்னீர் செல்வமும், ரெஜினாவும், தற்கொலை செய்து கொண்டு மடிந்த 3000க்கும் மேற்பட்ட ஆந்திர விவசாயிகளும், விதர்பா விவசாயிகளும், சுட்டுக் கொல்லப்பட்ட நந்திகிராம் விவசாயிகளும் வெவ்வேறு எதிரிகளால் கொல்லப்பட்டவர்களல்ல. எனவே, இப்புதிய மனுநீதிக்கெதிராக, மறுகாலனியாக்கம் எனும் இந்த பகாசுர எதிரிக்கு எதிராக, கல்வியுரிமை மறுக்கப்படும் மாணவர்களும், மக்களும் முழுமையாக, தீர்க்கமாக அணிதிரண்டு போராடுவதைத் தவிர இதற்கு வேறு தனிப்பட்ட தீர்வு ஏதுமில்லை.

பன்னீர் செல்வம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பின்னிருக்கும் சூத்திரதாரிகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு கனரா வங்கி அதிகாரிதான் எதிரியாகப்பட்டிருப்பார். கடன் வாங்கப்போன பன்னீர் செல்வத்தின் வாழ்க்கையையும், கடன் கொடுக்க மறுத்த கனரா வங்கியின் நிதி நிர்வாகத்தையும் ஆட்டிப்படைப்பவை உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளாத வரை, பன்னீர் செல்வங்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை நாம் தடுக்க முடியாது.

பல்கலைக்கழகப் பங்குகளில் இன்றைய விலை…!

அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகமான மும்பை பல்கலைக் கழகத்தை லாபமீட்டும் நிறுவனம் என்று அறிவித்து, அதனைப் பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு டாயிஷ் வங்கி என்ற ஜெர்மன் பன்னாட்டு வங்கியிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். இதனை அமல்படுத்த வேண்டுமானால் பல்கலைக் கழகங்கள் குறித்த மத்திய மாநில அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

“உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் ஒரு அரசுப் பல்கலைக்கழகம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில்லை.. ஒரு கல்வி நிறுவனத்தைத் தொழில் நிறுவனமாக மாற்றினால் பிறகு செனட், சிண்டிகேட் முதலிய அமைப்புகள் அதனை நிர்வகிக்க முடியாது. கல்வித்துறை மேம்பாடும் அதன் நோக்கமாக இருக்க முடியாது. பங்குதாரர்களுக்கு அதிகமான லாப ஈவுத்தொகையை ஈட்டித் தருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கும். கல்வி என்பது வெறும் வியாபாரம் அல்ல” என்று கூறி இம்முடிவைக் கண்டித்திருக்கிறார் மும்பை பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.மய்யா. (பிசினெஸ் ஸ்டாண்டர்ட், ஆகஸ்டு 22, 2007)

“அதுக்காக இப்படியா’ என்று பங்குச் சந்தைக் காரர்களே பயந்து அலறும் அளவுக்கு அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவ லாபவெறி. கல்வியை தொழில்வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி!

– புதிய கலாச்சாரம், செப்டம்பர்’2007

vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. தமிழகத்தில் நடக்கும் கல்வி கொள்ளைகளை நன்றாக வெளி கொண்டுவருகிறீர்கள் . அண்ணாமலை பல்கலை கழகத்தில் லெக்சரர் பதவிக்கு 15 – 20 லட்சம் வரை லஞ்சம் வாங்கி அரசு செலவில் சம்பளம் கொடுக்கிறார்கள். அட்டண்டர் பதவிக்கு கூட பல லட்சம் லஞ்சம் வாங்குகிறார்கள்.
    இப்பல்கலைகழகத்தில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்கலின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    வட நாட்டு மாணவர்களிடம் காசு வாங்கி இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்துள்ளனர். ஏழைகளின் கல்விக்காக தொடங்கபட்ட இந்த பல்கலைகழகத்தில் ஊழலும் லஞ்சமும் பூந்து விளையாடுகிறது.

    அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பங்கு போவதால் யாருமே அதை பற்றி கேள்வி கேட்பதில்லை. நீங்களாவது இந்த கொடுமையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்

  2. //உண்மையில் புற்றீசல் போல பெருகி வரும் இந்த சுயநிதிக் கல்லூரிகளால் யாருக்கு ஆதாயம்? இந்த உயர்கல்வியினால் மாணவர்களுக்கு உத்திரவாதமான எதிர்காலம் உண்டா? உலகெங்கிலும் தனியார் கல்லூரிகள் குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் பகாசுர வளர்ச்சியில் செல்வதன் காரணமென்ன?///

    Until 1984. there were no self-financed professional collages in TN. what is the same situation has continued til date. that is no private self financed collage had been permitted till date ? then this post will not be needed now. Govt should have used its money which it wastes on trivial items like colour TVs, to set up more collages.

    Or, allow unlimited number of collages with its own fees structure and examinations freely and openly. then there will be tens of thousands of collages and the badly run and inefficent collages will die in the long run, while those which give quality and a lowest price will win. Income tax should be abolished for all educational institutions to curb the black money in them.

    It costs tens of crores to set up a private engg collage and they are not run for charity but for business and some service motive. (Depends on promotos) ; hence it is naive to expect them to
    provide their services below cost or freely. only free competition will reduce prices in the long run. already many low quality collages are making enormous losses and will die soon. unfilled seats are plenty and increasing every year.

    Private collages can be compared to private hospitals. same parameters and logic can be applied for both.

    • அதியமான் நீங்க சொல்ல விரும்பும் விடயத்தை தமிழில் சொல்லுங்கள் இது போன்ற ஆங்கில வியாக்கியானங்கள் இந்து பத்திரிக்கைக்கு வாசகர் கடிதமாக மட்டுமே பயன்படும்

      • ம‌.செ. (துங் ? ),

        எமது தமிழ் டைப்பிங் மிக மிக மெதுவானது. விரைவாக எழுத ஆங்கிலம்
        இலகுவாக வருவாதல், அதில் எழுதுவது அதிகம்.

        வினவு தள பின்னோட்டங்கள் பல ஆங்கிலத்தில் பார்த்திருக்கிறேனே.
        பிறகு என்ன ?

        அது சரி, இந்து நாளிதழுக்கு அனுப்படும் கடிதங்கள் என்றால் அவ்வளவு
        கேவலாமாக போயிற்றா ? ஒட்டுமொத்தமாக அவை அனைத்தும்
        வேஸ்ட் அல்லது ஏற்க்கமுடியாதவை என்ற கருத்து பகுத்தறிவல்லவே.
        இன்னும் சொல்லப்போனால், இந்து பத்ரிக்கை, ஈழ விசியங்கள் தவிர‌
        பிற பல விசியங்களில் பெரியாரிய / மார்க்ஸிய கொள்கைகளைதாம்
        ஆதரிப்ப‌தாக தோன்றுகிறதே. இந்துத்வாவை கடுமையாக எதிர்க்கிறது.
        இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. இடதுசாரி பொருளாதாரத்தை ஒரு சில‌
        ஆசிரியர்களும், வலதை வேறு சில ஆசிரியர்களும் முன்மொழிகின்றன்ர்.
        பல அரிய கட்டுரைகள், ஆய்வுகள். மிகவும் மதிக்கபடும் நாளிதழ் அது.

        எனது பின்னோட்டத்திற்க்கு மட்டும் பதில் எழுதினால் போதுமே.

  3. //நுனி நாக்கு ஆங்கிலமும், டீசென்டான’ நடை, உடை பாவனைகளும், தோற்றமும் இல்லாதவர்களுக்கு கல்விக் கடன் மட்டும் மறுக்கப்படவில்லை, பன்னாட்டுக் கம்பெனிகளின் நுழைவாயில்களும் திறக்க மறுக்கின்றன//

    உண்ன்மை……….வலிக்கதான் செய்கிறது.

    இன்னொரு விசயம். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றும் இது ஒரு விவசாய நாடு என்றும் கூறி கொள்ளும் நம்மிடம் விவசாயத்திற்கான கல்வியும் ஆய்வு கூடமும் எவ்வளவு உள்ளது? எந்த நிலையில் உள்ளது

  4. //இன்னொரு விசயம். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றும் இது ஒரு விவசாய நாடு என்றும் கூறி கொள்ளும் நம்மிடம் விவசாயத்திற்கான கல்வியும் ஆய்வு கூடமும் எவ்வளவு உள்ளது? எந்த நிலையில் உள்ளது//

    விவசாய கல்லூரி நிறையவே உள்ளது. ஆனால் அங்கு படிக்கும் மாணவ்ர்களுக்குதான் வேலை வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. யாராவது அது பற்றி கேட்டால் சுய தொழில் செய்ய சொல்கிறார்கள்.
    அங்கு ஆராய்ச்சி என்ற பெயரில் அடிக்கும் கூத்து அதைவிட வெட்க கேடானது

  5. பெற்றோர்கள் மோகம் உள்ளவரை இந்த கொள்ளை சாபம் தொடர்கதை தான்.

  6. The first students movement to demand Jagadratchagans resignation was AISA. led by Com.Bharathi. SFIs silence and AISFs token protest are worth noting.

  7. கல்லூரி போடும் மொட்டை!…

    வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வழிப்பறிக்காரனின் குற்றத்தை தடுத்து நிறுத்த அந்த வீட்டுக்காரரே பணத்தையும், நகையையும் கொடுத்துவிட்டால் பிரச்சினை இல்லையல்லவா! இப்படித்தான் ஒரு தீர்வை முன்வைக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி https://www.vinavu.com/2009/06/19/s

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க