முகப்புஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
Array

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!

-

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் நடத்திய வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. National Aviators’ Guld தேசிய விமானிகள் அமைப்பு என்ற தொழிற்சங்கத்தை ஜெட் ஏர்வேசின் விமானிகள் ஆரம்பித்ததை ஒட்டி நிர்வாகம் இரண்டு விமானிகளை வேலைநீக்கம் செய்தது. மொத்தம் 750 விமானிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விமானிகள் இந்த சங்கத்தில் இணைந்திருந்தனர். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக இரண்டு சக ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது விமானிகளுக்கு கடும் ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி இந்த விமானிகள் சங்கம் கடந்த வாரத்தில் நோய்விடுப்பு என்ற பெயரில் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது. சாதாரணமாக தொழிற்சங்கம் என்பது தொழிற்சாலைகளில்தான் இருக்கும் விமானிகளுக்கெல்லாம் எதற்கு சங்கம் என்று வெகுண்ட நிர்வாகமும் முதலாளியும் மேலும் இரண்டு விமானிகளை வேலை நீக்கம் செய்தனர். இதைக் கண்டு அஞ்சாத விமானிகள் தங்களது வேலை நிறுத்தத்தை காலவரம்பின்றி நீட்டித்தனர்.

வேலைநீக்கம் செய்த விமானிகளை பயங்கரவாதிகள் என்று தூற்றினார் ஜெட்ஏர்வேசின் முதலாளி நரேஷ் கோயல். தினமும் நாற்பது கோடி நட்டம் ஏற்படுவதோடு (ஐந்து நாள் நட்டம் 200 கோடியாம்), விமான நிறுவனத்தில் தொழிற்சங்கமெல்லாம் வந்து விட்டால் முதலிட்டாளர்கள் அச்சமடைவார்கள், என்றெல்லம் கணக்குப்பார்த்து கோயல் விமானிகளை புழுதிவாரித் தூற்றினார். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்த ‘குற்றத்திற்காக’ விமானிகள் பயங்கரவாதிகளானார்கள். விமானங்களை வைத்து இரட்டைக் கோபுரத்தை தகர்த்தாகக் கூறப்படும் பின்லேடனுடன் இப்போது ஜெட் ஏர்வேசின் விமானிகளும் சேர்க்கப்பட்டனர்.

ஊடகங்களும் ரத்தான விமான சேவைகளால் பாதிக்கப்பட்ட மேட்டுக்குடியின் சொந்தக் கதை சோகக்கதைகளை சென்டிமெண்டாக போட்டுத் தாக்கி விமானிகளை வில்லன்களாக்க முயன்றனர்.

ஆனால் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் விமானிகள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவேண்டுமென தொடர்ந்து போராடினார்கள். இந்த போராட்டத்தால் ஜெட்ஏர்வேசின் ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மாற்று பைலட்டுகளை வைத்து, அல்லது வெளிநாட்டு பைலட்டுகளை வைத்தாவது சர்வீசை தொடரலாம் என கணக்கு போட்ட கோயலின் முயற்சி பலிக்க வில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விமானிகளும் இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்தனர்.

முதலாளிகளிடம் கோடி கோடியாய் பணமிருந்தாலும் தொழிலாளிகள் இன்றி ஒரு தொழிற்சாலை இயங்க முடியாது என்ற உண்மை இங்கேயும் வேலைசெய்தது. நான்கைந்து நாட்களுக்கு பின்னர் பணிந்து வந்த நிர்வாகம் தொழிலாளர்கள் ஆணையத்தின் தலையீட்டின் பெயரில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இரண்டு நாட்கள் நெடுநேரம் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு விமானிகளையும் மீண்டும் வேலையில் சேர்க்க முதலாளிகள் ஒத்துக் கொண்டனர். தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை அதை அங்கீகரிக்கும் முடிவை தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் அரசுப் பதிவாளரிடம் விடலாமென முடிவு செய்யப்பட்டது.

ஜெட்ஏர்வேசின் நிர்வாக இயக்குநர் சரோஜ் தத்தா ” சில தவறான புரிதலால் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அன்பில் விரிசல் வந்துவிட்டது.இனிமேல் எந்தப் பிரச்சினை வந்தாலும் நிர்வாக தரப்பில் ஐவரும், விமானிகள் தரப்பில் ஐவரும் அடங்கிய கமிட்டி பரீசீலிக்கும் இனி ஜெட் ஏர்வேசின் ஊழியர்கள் அனைவரும் அன்பான ஒரே குடும்பமாக செயல்படுவோமென” திருவாய் அருளியிருக்கிறார். வேறு வழியின்றி ‘பயங்கரவாதிகளை’ குடும்பத்தில் ‘அன்பாக’ சேர்த்த கருமத்தைப் பற்றி அவரோ கோயலோ மனதிற்குள் எப்படி புழுங்கியிருப்பார்கள் என்பதை நாம்தான் மெனக்கெட்டு ஊகிக்க வேண்டும்.

விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் கிரீஷ் கவுசிக் தங்களால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், நீக்கம் செய்யப்பட்ட நால்வரை மீண்டும் பணியில் சேர்த்தமைக்காகவும் நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

தாராளமயம், தனியார்மயத்தை அமல்படுத்திய உலகமயத்தின் முக்கிய விதியே தொழிலாளர் உரிமைகள், சலுகைகளை ஒட்டப் பறிப்பதே. இதற்குத்தான் பல சங்க உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவுகள் மாற்றப்படுகின்றன அல்லது மாற்றுமாறு எல்லா தனியார் முதலாளிகளும் அரசை மிரட்டுகின்றனர். எல்லா நீதிமன்றங்களும் இத்தகைய வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன. சாதாரணமாக அரசு மற்றும் பொதுத்துறையில்தான் சோம்பேறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அதுவும் தங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதால் போராடுவார்கள் என தனியார்மய தாசர்கள் அவதூறு செய்வார்கள்.

ஆனால் தனியார் முதலாளிகளிடம்தான் தொழிலாளிகள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஹரியாணாவில் நடந்த ஹீரோ தொழிற்சாலை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தையும் அதை போலீசு கொடூரமாக ஒடுக்கியதையும் நாம் அறிவோம். இங்கு சென்னையில் கூட ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்காமல் நிர்வாகம் சிலரை வேலைநீக்கம் செய்ததையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் அந்த தொழிலாளிகள் தமது தொழிற்சங்க உரிமைக்காக போராடி வருகிறார்கள்.

அரசு, பொதுத்துறையில் இருக்கும்  பணிப் பாதுகாப்பு இதர சலுகைகள்  என்பது தனியார் நிறுவனங்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. அப்படி சட்டப்படி கூட கோரக்கூடாது என்பதே முதலாளிகளின் உத்தரவு. பல பன்னாட்டு நிறுவனங்கள் கேட்பார் கேள்வியின்றி தமது ஊழியர்களை கொத்துக் கொத்தாய் வீட்டுக்கு அனுப்புவதும் அதை சட்டப்படி கூட தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலைதான் இந்தியாவில் நிலவுகிறது.

இந்நிலையில் முதலாளிகளின் அதி முக்கிய கேந்திரமான விமான நிறுவனத்தில் விமானிகள் ஒன்று சேர்ந்து தமது போராட்டத்தில் பாதி வெற்றியை ஈட்டியிருப்பது வரலாற்று சிறப்பு மிக்கதுதான். இவ்வளவிற்கும் இலட்சங்களில் ஊதியம் வாங்கும் மேட்டுக்குடி தொழிலாளிகள் என்றாலும் அவர்கள் தமது போராட்டத்தில் காட்டிய உறுதியும், கோரிக்கைகளை வென்றதையும் சாதரணாமாக பார்க்க இயலாது. மேலும் விமானிகள் ஸ்டரைக் என்பதால் போலீசைக் கொண்டெல்லாம் ஒடுக்க முடியாது என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். இதே வேலைநிறுத்தம் சாதாரண தொழிற்சாலை ஒன்றில் நடந்திருந்தால் முதலாளி வீசும் பணத்தை அள்ளிவிட்டு அரசின் ஆசியோடு போலீசு தொழிலாளிகளை பந்தாடியிருக்கும்.

ஆனால் ஆளும் வர்க்கத்தின் அடிமடியில் இருக்கும் முக்கிய துறைகளில் இப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தால் அது இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதாக இருக்கும்.

இந்த வேலைநிறுத்தத்தை வைத்து மற்ற தனியார் விமான முதலாளிகள் பயணிகள் கட்டணத்தை பலமடங்கு ஏற்றி பிளாக்கில் விற்று சுருட்டியது தனிக்கதை. இது அப்பட்டமாக வெளிப்படையாக நடந்தாலும் அரசு சும்மா கையக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடமைக்காக ஒரு விளக்க கடிதத்தை மட்டும் அனுப்பி முடித்துக் கொண்டது. ஏர் இந்தியாவில் மட்டும் இந்த காலத்தில் டிக்கெட்டுகள் பழைய கட்டணத்திலேயே விற்கப்பட்டன என்பதை வைத்துப் பார்த்தால் இந்தியாவிற்கு தேவை தனியார் துறையா, பொதுத்துறையா என்பது புரிய வரும்.

இந்த வேலைநிறுத்தத்தில் விமானிகள் பாதி கோரிக்கையைத்தான் வென்றிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமையை பதிவாளர் முடிவு செய்வார் என்று விட்டுக்கொடுத்திருப்பது சரியல்ல. அதேசமயம் தொழிற்சங்கங்களின் பதிவாளர் சட்டப்படி இந்த விமானிகள் சங்கத்தை அங்கீகரித்தே தீர வேண்டும். இருப்பினும் அரசும், முதலாளிகளும் கொல்லைப்புற வழியாக இந்த சங்கத்தை கருவறுப்பதை நிச்சயம் செய்வார்கள். மேலும் மற்ற தனியார் விமான முதலாளிகளும் இதனால் கதி கலங்கியிருப்பதால் அவர்களும் இந்த சங்கத்தை கருவிலேயே ஒழிக்க முயல்வார்கள்.

எது எப்படியிருந்தாலும் தங்களது ஒன்று பட்ட போராட்டமே முதலாளிகளை பணிய வைத்திருக்கிறது என்பதையும் வேலைநிறுத்தம் செய்ததற்காகவே தங்களை பயங்கரவாதிகள் என்று தூற்றிய கோயலையும் அவர்கள் எப்போதும் மறக்கக் கூடாது. முதலாளிகள் என்ற முழுப்பானைக்கு இந்த கோயல் என்ற ஒரு பருக்கை என்ன பதமென்பதை நாமும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !