இப்போது நான் மலேசியாவில் பணி புரியும் ஒரு அந்நிய நாட்டு தொழிலாளி. இங்கு யார் மீதும், அல்லது இந்நாட்டின் மீதோ அவதூறு கூறும் நோக்கம் எனக்கு இல்லை. அந்நிய நாட்டில் வேலை வாய்ப்பு தேடும் பொழுது ஏற்படும் வலிகளையும் ஏமாற்றங்களையும் முடிந்தவரை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
______________________________________________
அந்நிய நாட்டுக்கு வேலை தேடி செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தமிழ்நாட்டு தமிழனாக இருந்தால், ஊரில் சம்பாதிப்பதை விட குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு சம்பாதித்து பின்னர் ஊர் திரும்பி வளமான வாழ்வு வாழலாம். வாட்டும் வறுமையில் இருந்து தப்பிக்கலாம். கூடப் பிறந்த சகோதர சகோதரிகளை கரையேற்றலாம். ஊரிலேயே சம்பாதித்து அடைக்க முடியாத கடனை வெளிநாட்டில் சென்று சம்பாதித்து அடைக்கலாம். இலங்கை தமிழனாக இருந்தால் காரணம் சொல்லாமலே புரியும். இப்படி காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம் இறுதியில் எல்லோரும் சந்திப்பது ஒரே நேர்கோட்டில் தான்.
அந்நிய நாட்டு வேலைக்காக முகவர் நிலையத்தில் பணத்தை கட்டுவதில் இருந்து அலைச்சல்களும் உளைச்சல்களும் ஆரம்பமாகி விடுகின்றன. அம்மாவின், சகோதரியின், மனைவியின் நகைகள், சேர்த்து வைத்த நிலங்கள் எல்லாவற்றையும் விற்று இல்லை கடன் வாங்கியோ, முகவருக்கு கொடுத்து பின்னர் அவர்களுக்கு பின்னாலேயே நாயாய் பேயாய் அலைந்து ஒருவாறாக விமானமேறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு நாள் காலையில் வந்து இறங்கும் ஒரு அந்நிய தொழிலாளியின் ஏமாற்றங்களும், துன்பங்களும் இங்கு புதிதாக ஆரம்பிப்பதில்லை. ஊரில் முகவர்களிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கட்டுவதில் இருந்தே அவை தொடங்குகின்றது.
முகவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்களா? அல்லது ஒழுங்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்களா?, வெளிநாட்டு வேலையை பற்றி, சம்பளத்தை பற்றி அவர்கள் கூறியதெல்லாம் உண்மைதானா? எல்லாம் நிறைவேறும் போது மட்டுமே கண்டுகொள்ள முடியும். இங்கு என்னையே உதாரணத்திற்க்கு எடுத்துக் கொள்ளலாம். இலங்கை தலைநகரில் வெள்ளவத்தையில் உள்ள ஓர் பிரபலமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம். அவர்கள் என்னிடம் கூறிய வேலை, கணினி வன்பொருள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் பொதி செய்யும் வேலை. அவர்கள் கூறியதை நம்பினேன். அவர்கள் கூறியதை வேறு வழிகளில் உறுதிப்படுத்தும் வழிகள் இருந்த போதும் அத்தகைய மனநிலையில் நானும் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் கொழும்பில் அப்போதிருந்த நெருக்கடியில் அங்கிருந்து வெளியேறினால் போதும் எனும் மனநிலையே இருந்தது.
_________________________________________
அப்படிப்பட்ட நிலையில் அந்நிய நாட்டில் வந்திறங்கிய அடுத்தநாள் அதே நிறுவனம் ஒரு கணினி வன்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை அல்ல, ஒரு கட்டுமான குத்தகை நிறுவனம் என்பதும், அடுத்தநாள் காலையில் உங்களுக்கு ஓர் பாதுகாப்பு காலணியும், பாதுகாப்பு தலைக்கவசமும் தந்து கையில் மண்வெட்டியுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் நெடுஞ்சாலையில் பிரிமிக்ஸ் அள்ளிப்போடும் வேலைக்கு அனுப்பினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எனக்கு அப்போதிருந்த மனநிலையில் என்னை இங்கு அனுப்பி வைத்த முகவர் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாராவது என் முன் வந்திருந்தால் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்குமென்றே தோன்றுகிறது. வெளிநாட்டு வேலைக்கு வந்த முதல் நாளே ஆத்திரத்துடன் கூடிய கடுமையான ஏமாற்றத்தை சந்தித்தேன்.
நான் நினைத்திருந்தால் அடுத்த ஆறாவது மாதத்தில் என்னுடைய சொந்த செலவிலேயே விமான பயண சீட்டு எடுத்து நாடு திரும்பியிருக்க முடியும். ஆனால் முகவர் நிலையத்துக்கு கட்டிய ஒரு லட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாவும், நான்கு வருடத்திற்கு முந்திய இலங்கை நிலவரமும் என்னை சமாதானம் செய்ய வைத்தது. வேறுவழி? இதுகூட பரவாயில்லை. விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்று, எம்மை பொறுப்பேற்க எமது நிறுவனத்தை சார்ந்த யாரும் வராததால், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எங்களை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு இடைத்தங்கல் தடுப்பு முகாமில் கொண்டு சென்று விட்டனர். அங்கு இந்தியா பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த பலர் அங்கு இருந்தனர்.
ஒவ்வொருவருடைய கதையும் மிக மோசமான சோகக் கதைகள். தமிழ்நாடு வேதாரணியம் பகுதியை சேர்ந்த ஒருவர், அவர் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் காத்திருப்பதாகவும், தனக்கு கூறப்பட்டிருந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் வந்து தன்னை அழைத்து செல்லவில்லை என கூறி வேதனைப்பட்டார். இதே போல் இன்னொரு தமிழக தமிழர் இவருக்கு வேலை தரும் முகவர்களால் கூறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு நிறுவனமுமே இங்கு செயல்படவில்லை என குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் இவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி “எங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுங்கள்” என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட போது, “அது இந்திய தூதரகம் முயற்சி எடுத்தால் நீங்கள் இந்தியா திரும்பலாம். நாங்கள் அவர்களுக்கு அறிவித்து விட்டோம்” என கூறியிருந்தார்கள்.
இது இவ்வாறிருக்க கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இன்னொருவரின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் கிட்டத்தட்ட சித்தப்பிரமை பிடித்தவர் போல் வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம். இருந்த நிலத்தை அடமானம் வைத்தும், நகைகளை விற்றும் முதல் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் மலேசிய நாட்டுக்கு விமானம் ஏறியிருக்கிறார். வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் கம்பனியை சேர்ந்த யாரும் வந்து அழைத்து செல்லாத நிலையில், வீட்டுக்கும் தகவல் சொல்லமுடியாத நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர் கூறினார். இவர்களை போல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு தங்கி இருக்கும் இந்திய நாட்டவர்கள் இன்னும் பலர் இதே நிலையில் இருந்தனர்.
இவர்கள் எல்லோரும் கட்டிட நிர்மாண வேலைகளுக்காகத்தான் இங்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர். இங்கு இவர்கள் வெவ்வேறு இடங்களில் செய்யப் போகும் வேலை ஒன்று. ஆனால் அதற்கு இவர்கள் தங்கள் முகவர்களிடம் கொடுத்த தொகையோ ஆளாளுக்கு மாறுபடுகிறது. இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே பயம் பிடித்து விட்டது. எனக்கும் இவ்வாறு ஆகிவிட்டால்? நான் அங்கு இருந்த நான்கு நாட்களில் அத்தடுப்பு முகாமிற்கு பலர் வந்து கொண்டிருந்தனர். வந்த அடுத்த நாளிலோ அல்லது அதற்கு பின்னரோ அவர்கள் வேலை செய்யப் போகும் நிறுவனத்தை சார்ந்தவர்கள் வந்து அவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தனர். இவர்களை அழைத்து செல்லத்தான் யாரும் வரவில்லை.
ஆனால் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறினால் மட்டும் இவர்களது துன்பங்களுக்கு முடிவு கிட்டுவதில்லை. கதையே இங்குதான் ஆரம்பம். முகவர்களின் ஏமாற்று எங்கே ஆரம்பிக்கிறது என பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கப்பல் திருத்தும் துறைமுகம் ஒன்றில் பணிபுரிய தமிழ் நாட்டில் இருந்து சிலர் வருகின்றனர். கப்பல் திருத்தும் தொழிலகத்தில் பணி புரிவதற்கு முன்னர் பணி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அடிப்படையிலேயே பணிக்கு அனுப்பப்படுவர். வந்தவர்களில் ஒரு சிலர் படிப்பு வாசனையே அற்றவர்கள். இப்போது இவர்களின் நிலை என்ன? “ஊரில ஏஜெண்ட் கப்பல் வேலைன்னு சொன்னான், மாசம் பதினையாயிரம் சம்பாதிக்கலாம்னும் சொன்னான், ஆனால் பரீட்சை எழுதனும்னு சொல்லலையே படுபாவிங்க, தொண்ணூறாயிரம் ரூபாவை சுளையா வாங்கிட்டான்களே?, என்ன பண்ணுவேன்” என புலம்பினார்.
இப்பொழுது இப்படிப்பட்ட நிலைமையில் இவர் நாடு திரும்பவும் முடியாது. வந்த கடனை அடைத்தே தீர வேண்டுமானால் வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டி வரும். அப்படி செய்வதானால் அது சட்டவிரோதம். மலேசியாவில் அந்நிய தொழிலாளர் சட்டவிதிகளின் படி, எந்த நிறுவனத்தில் வேலை செய்ய வந்தார்களோ, அதில்தான் அவர்களின் ஒப்பந்த காலம் முடியும் வரைக்கும் வேலை செய்யலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சம்பள தகராறுகள் அல்லது முதலாளி மீதான அதிருப்தி காரணமாக ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை. வேறு நிறுவனங்களில் வேலை செய்தால் அது சட்ட விரோதம். ஆனால் அதையும் மீறி சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் உருவாகும் இடம் இங்கே தான்.வந்த நிறுவனத்திலும் வேலை செய்ய முடியாது, வேறு நிறுவனத்திற்கும் போகமுடியாது, ஊரில் வேறு கடன் வாங்கி வந்திருக்கிறோம், ஆதலால் சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை. பிடிபட்டால் தண்டனை நிச்சயம்.
______________________________________________________
இங்கு பெரும்பாலான இடங்களில் எட்டு மணி நேரத்திற்கான அடிப்படை சம்பளம் மலேசிய வெள்ளி பதினெட்டில் இருந்து இருபத்தி ஐந்து வரைக்கும் இருக்கிறது. குறிப்பாக உணவகங்கள், கார் கழுவும் இடங்கள் போன்றவை. ஒப்பந்தத்தில் என்னவோ எட்டு மணி நேர வேலையின் பின்னர் கிடைக்கும் மேலதிக ஒவ்வொரு மணிக்கும் மேலதிக வேலை நேரக் கூலி இருந்தாலும், அன்றாடம் பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுவதுண்டு. அயலில் உள்ள இந்திய முஸ்லீம் உணவகம் ஒன்றில் ஒன்றில் வேலை செய்யும் ஒரு வெளிநாட்டு பணியாளர் காலை ஏழு மணிக்கு இறங்கினால் மாலை ஏழுமணிக்கு தான் பணி முடிவு பெறும். பொதுவாக இங்குள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் பணி செய்யும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வார விடுமுறைகளோ, மாத விடுமுறைகளோ கிடையாது (வருடத்தில் ஒரு நாள் வரும் ரமலான் பெருநாள் பண்டிகைக்காக வழங்கப்படும் விடுமுறையை தவிர).
உடம்புக்கு முடியவில்லை என்று அவர்களாக விடுப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே உண்டு. இங்கு யாரும் யாருடனும் நியாய அநியாயங்கள் குறித்து பேசமுடியாது. பேசினால் முரண்பாடுகள் உருவாகும். முரண்பாடுகள் உருவாகினால் வேலை பறிபோகலாம். கட்டுமானத்துறை சார்ந்த வேலைகளை குத்தகை எடுத்து செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் நிலை இன்னும் சிக்கலானது. கட்டிட நிர்மாண துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் சற்றே அதிகம். எட்டு மணி நேர வேலைக்கு வெள்ளி முப்பத்து ஐந்திலிருந்து நாற்பத்தைந்து வரைக்கும் வழங்கப்படுவதுண்டு. காரணம் இது கடினமான வேலை என்பது மட்டும் காரணமில்லை.
இதையும் எனது நிலையில் இருந்தே விளக்கலாம். நான் பணிபுரியும் நிறுவனம் ஓர் குத்தகை நிறுவனம். குறிப்பிட்ட பிரதேசத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பிரதான புதிய நீர்க்குழாய்களை பதித்து, பின்னர் அதில் இருந்து வீடுகளிற்கு புதிய இணைப்பு வழங்குவது எங்கள் பணி. எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை ஒன்றை முழுவதும் முடிக்க எடுக்கப்படும் காலம் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள். எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை அதன் காலம் முடிவடைவதற்குள், டெண்டர் போடப்பட்டு புதிய குத்தகை நிறுவனத்திற்கு கிடைத்தால் எமக்கு வேலைக்கு பிரச்சனை இல்லை. சம்பளம் மாதம் தவறாமல் கிடைத்து விடும். இல்லை எனில் நிலைமை சிக்கல். கிடைக்கப்போகும் புதிய குத்தகைக்காக ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு வேலை இல்லாமல் காத்திருக்கும் காலப் பகுதியில் சம்பளம் கிடைக்காது.
ஆக வேலை இல்லாமல் குந்திக்கொண்டிருக்கும் காலங்களுக்கும் சேர்த்தே இந்த அதிக சம்பளம். வருடத்தில் குறைந்தது நான்கு மாதங்கள் இவ்வாறு புதிய வேலைக்காக காத்திருக்க வேண்டி வீணே உட்கார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரிய வீடமைப்பு திட்டங்கள், பால கட்டுமான திட்டங்களில் பணிபுரிபவர்கள் நிலைமை ஓரளவு பரவாயில்லை என கூறலாம். அந்நிய தொழிலாளர்களின் வேலையிட நலன்கள் இப்படி இருக்கின்றனவெனில் சமூகப் பாதுகாப்பு மிக மோசமானது.
என்னுடன் சிறிது காலம் பணியாற்றிய தமிழகத்தவர் ஒருவரின் காதில் ஒரு வெட்டுக்காயம் ஒன்று இருக்கும். அவரிடம் கேட்டேன்,”எதனால் இவ்வாறு ஏற்பட்டது”? அவர் எமது நிறுவனத்தில் பணி புரிவதற்கு முன்னர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டுமானத் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், நிலுவையில் இருந்த தனது இரண்டு மாத சம்பளத்தை தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் முதலாளி அருகில் இருந்த கத்தியை தூக்கி தமிழக தொழிலாளி மீது வீசி காதில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அன்றிலிருந்து அவர் சட்ட விரோத தொழிலாளியாகவே வேலை செய்தார். சிறிது காலத்தின் பின்னர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றில் பிடிபட்டு, தண்டனை காலம் முடிந்த பின்னர் தமிழ் நாட்டுக்கு சென்று விட்டார்.
கோலாலம்பூர் பிரதான புகையிரத நிலையத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். தலையும் ஆடையும் கலைந்திருந்தது.வயது இருபத்தியிரண்டு இருக்கலாம். கையில் ஒரு பழைய துணியால் கட்டுப் போட்டிருந்தார். தயங்கியபடியே என்னை நோக்கி வந்தார். “அண்ணை தமிழோ” என கம்மிய குரலில் வினவினார். “ஆமா, என்ன பிரச்சனை” என்று கேட்க “தான் ஒரு தமிழரின் கார் கழுவும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், நேற்றிரவு கூடுதலான நேரம் வேலை பார்த்ததால் காலையில் வழமையான நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை, அதனால் முதலாளிக்கும் எனக்கும் பிரச்சனையாகி விட்டது, அங்கு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அவர் என்னை இரும்புக் கம்பியால் தாக்க முற்பட்டபோது, தடுத்ததில் உள்ளங்கையில் கிழிந்து விட்டது,” எனகூறி காயத்தை காட்டிய போது எனக்கு கண்கள் இருண்டு விட்டது. “சரி ஏன் காயத்துக்கு மருந்து கட்டவில்லை” என கேட்க, “கையில் காசில்லை, பாஸ்போர்ட் முதலாளியிடம் இருக்கு” எனக் கூறினார்.
அப்போது என்னால், அவரை ஒரு கிளினிக்கிற்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்து கட்டிவிட்டு, அன்றைய நாளிற்கான உணவு செலவிற்கு பணம் கொடுக்க மட்டும்தான் முடிந்தது. அவரிடம் இருந்து விடை பெறும் போது “அண்ணை எனக்கு எங்கேயும் ஒரு வேலை வாங்கி தரமுடியுமா?” என வினவினார். அவருக்கு எனது நிலையை தெரிவித்து விட்டு “அவரின் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அதற்கு ஏதேனும் மக்கள் நல அமைப்பின் உதவியை நாடுங்கள், அல்லது மலேசிய இந்தியர் அரசியல் அமைப்புக்களிடம் உதவி கேளுங்கள் என கூறிவிட்டு விடை பெற்றேன்.
நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வேலை செய்பவர்கள் ஒருபுறமிருக்க, நிறுவனங்களில் இடம்பெறும் இது போன்ற காரியங்களும் சட்ட பூர்வமாக இருக்கும் ஒரு தொழிலாளியை சட்டவிரோத தொழிலாளராக மாற்றி விடுகின்றன. இதை விடவும் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளி, தனது நிலுவை சம்பளத்தை கேட்ட காரணத்திற்காக, தமிழர்களான வீட்டு உரிமையாளர்களினாலேயே அறைக்குள்ளேயே சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, உடம்பில் கொதிநீர் ஊற்றி சித்திரவதை செய்து செம்பனை தோட்டத்தில் வீசப்பட்ட செய்திகள் பலர் அறிந்திருக்க கூடும். தமிழ் நாட்டு தொழிலாளர்கள் சிலரை, அவர்கள் தமது கூலியை கேட்ட ஒரே காரணத்திற்காக தனது நண்பர்களை கொண்டு அடித்து துவைத்த முதலாளி, சிறிது காலத்தின் முன்னர் கோழிப்பண்ணையில் வேலை செய்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் அடைத்து வைத்து சித்திரை என சம்பவங்கள் பல. இதை விட ஏனைய இந்தோனேசியர்களின் கொள்ளை முயற்சிகளில் சிக்கி தமது அவயங்களில் வெட்டுக் காயத்துடன் நாடு திரும்பிய தமிழக தொழிலாளர்களும் உள்ளனர்.
வேலையிடம் ஒன்றில் அங்கிருந்த இயந்திர உபகரணங்களை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்த பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசியர்கள் நால்வர், அங்கிருந்த தமிழக தொழிலாளியை தாக்கியதில் வலது கையில் நான்கு விரல்களிலும் மோசமான வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன் கழுத்திலும் காயமடைந்தார். நஷ்டஈடு? அதைப்பற்றி யாரும் பேசவுமில்லை, அந்த தொழிலாளியும் அதை கேட்கவும் இல்லை. மலேசியாவும் வேண்டாம், வேலையும் வேண்டாம் உயிரோடு ஊர் போய் சேர்ந்தால் போதும் என வந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே நாடு திரும்பிவிட்டார்.
மலேசியாவில் பாதிப்புக்குள்ளான தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலோர் மலேசிய தமிழ் முதலாளிகளினாலேயே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது கொஞ்சம் வேதனையான உண்மை. பிற இன முதலாளிகளினால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இருப்பினும் அவற்றுக்கு நிர்வாகத்திற்குள்ளேயே தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. சித்திரவதை செய்யும் அளவிற்கு மோசமான சம்பவங்கள் இடம்பெறவில்லை.
தமிழ் நாட்டில் பணம் பிடுங்கும் முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வை தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டபூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவர்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது நலன்விரும்பிகளோ அவர்களது செலவில் பயணசீட்டு வாங்கித் தரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் நாடு திரும்பலாம். இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது.
பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் இறுதியாக தஞ்சம் புகும் தருணத்திலும், அங்கும் இவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது வடஇந்திய தொழிலாளர்களாக இருந்தால், அவர்களிற்கான தூதரகத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியாகவும், தென்னிந்திய தொழிலாளர்களுக்கான அணுகுமுறை ஒரு மாதிரியாகவும் இருப்பதாக புகார்கள் பத்திரிகையில் செய்திகளாக வந்துள்ளன. அந்நிய தொழிலாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானது. இங்கே தமிழக தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியதன் காரணம் இந்த நாட்டில் வேலை பார்க்கும் பதினேழு இலட்சம் இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என செய்திக் குறிப்பொன்று கூறுகின்றது.
தேவைக்கு அதிகமாகவே சட்டரீதியான, சட்டவிரோதமான அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் நலன் பேணும் விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம், அல்லது நாடு திரும்பலாம் என இருக்கும் பட்சத்தில் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் உணவகத்துறை உட்பட்ட சேவைத் துறைகளில் அந்நிய தொழிலாளர்களை ஆட்குறைப்பது பற்றியும் அந்த இடங்களுக்கு உள்நாட்டவர்களை நியமிப்பது பற்றியும் அரசதரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
___________________________________________________
கனவுகளைச் சுமந்து வரும் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைகள் இங்கே ஏராளம். அடிபட்டு, காயம்பட்டு, சிறைபட்டு, இறுதியில் எப்படியாவது தாய்நாடு திரும்புவோமா என்று எண்ணுபவர்களும் அதிகம். அப்படி ஊர் திரும்பினாலும் அங்கே அவர்கள் வாங்கிய கடன் மிச்சமிருக்கும் வாழ்வை சித்திரவதை செய்யப் போதுமானது. அதனாலேயே இங்கே சட்டவிரோதமாக தங்கிக் கொண்டு கடுமுழைப்பு செய்து குறைந்த கூலியிலும் காலத்தை ஓட்டுபவர்கள் ஏராளம்.
மற்ற முதலாளிகளை விட தமிழ் முதலாளிகள்தான் தமிழனென்ற முறையில் இந்த சுரண்டல் மோசடியை அதிகம் செய்கின்றனர். தேசிய இனப்பெருமிதம் இங்கே வறியோனை வலுத்துவன் சுரண்டுவதற்கே உதவுகிறது. மலேசியாவிலிருந்து ஒரு பார்வதி அம்மாள் இந்தியா வருவதற்கு இவ்வளவு பிரச்சினை என்றால் அவரைப் போன்ற பிரபல பின்னணி இல்லாமல் மலேசியாவில் நாளைத் தள்ளும் சாமானியர்களின் கதி?
தமிழ்நாட்டு முகவர்கள், மலேசிய முதலாளிகள், மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் மலேசிய அரசின் கண்டு கொள்ளாமை, இந்தியத் தொழிலாளிகளின் நலனை கவலைப்படாத இந்தியத் தூதரகம் என்ற இந்த அதிகார வலைப்பின்னலில் விட்டில் பூச்சிகளாய் சிக்கி வதைபடும் தொழிலாளிகளை யார் காப்பாற்றுவார்கள்? விடை தெரியாத கேள்விகளோடு நானும் வாழ்வை ஓட்டுகிறேன். வேறு வழி?
_______________________________________________
– பிரகாஷ், மலேசியா.
பின்குறிப்பு: வாசகர்களும் படைப்பாளிகளாக வினவில் பங்கேற்க வேண்டும், பங்கேற்பார்கள் என்ற எமது அவாவின் மற்றுமொரு அறிமுகமாக நண்பர் பிரகாஷை இங்கே பெருமையுடன் அறிமுகம் செய்கிறோம். – வினவு
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- கருகும் கனவுகள் !
- கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!
- துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
- ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!
- ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் தாக்கப்படுதல்! மனுவாதிகளுக்கே மனுதர்மம் கற்பித்த உலகமயம்!!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !!
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!
- தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!
- தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!
- ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழிலன்
நானும் மலேசியாவில் ஒரு வருடம் அடிமையாக இருந்தவன் தான் நிறைய உண்மைகள் பேசவேண்டியது இருக்கிறது
இந்தியன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா
இந்தியாவின்ற சண்டித்தனம் ஈழத் தமிழரோட மட்டும்தான். தன்னுடைய குடி மக்களுக்கே வாழ்வாதாரம் வழங்க முடியாத நாடு ஒரு நாடா.
பிரகாஷ்’னு பின்னூட்டம் போடுவாரே அவரா இது.. அருமையான படைப்பு.
தொடர்ந்து எழுதுங்கள் பிரகாஷ், ‘எம்பெட்டட்’ ஜர்னலிஸ்டு காலத்தில் இது போன்ற பீபிள்ஸ் ஜர்னலிசம்தான் உண்மையை சொல்லக்கூடிய ஒரே சாதனம். மலேசிய தெழிலாளர்களை மீதான இந்திய அரசின் / மீடீயா வின் துரோகத்தை ஆஸ்திரேலிய உயர்குடி தாக்குதலில் அவை கடைப்பிடிடத்த அனுகுமுறையுடன் ஒப்பிட்டு பார்த்தால் வர்க்க அரசியலை உணரலாம்.
ஹைதர் உங்க அனுபவத்தையும் எழுதுங்களேன்.
கவான் கேள்விக்குறி அவர்களுக்கு (திரிம காஸி பாய்ங்க) தப்ப நினைக்காதீர்கள் மலாய் மொழியில் கவான் என்றால் தோழர் என்று பொருள் திரிம காஸி பாய்ங்க என்றால் மிகவும் நன்றி என்று பொருள் நான் கண்டிப்பாக என்னுடைய கஷ்ட்டமான அனுபவத்தை எழுதுகிறேன்
ரொம்ப நன்றி ஹைதர், பல மெழி தெரிஞ்சு வச்சிருக்கீங்க, 14 வயசுல மஞ்சப்பையை தூக்குனதிலிருந்து பல ஊர் பாத்திருக்கீங்க, உங்க அனுபவம் நம்ம சமூகத்த புரிஞ்சுகிட நிச்சையமா உதவும்… (மீள் பின்னூட்டம்)
ஐயோ…கொடுமை…!
நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு…மலேஷியா,குவைத், துபாய் போன்ற நாடுகளுக்கு சென்ற போது நீங்கள் சொன்ன அனைத்தையும் அங்கு வாழும் அந்நிய தொழிலாளிகள் சொல்லி கேட்டிருக்கிறேன் !
ரொம்ப வருத்தமான விஷயம் ! சரியான முகவர்கள் வந்தால் தான் நிலைமை சரியாகும் என்று நினைக்கிறேன்.
எத்தனையோ தடவை இந்த மாதிரி செய்திகள் வந்தும், அரசாங்கம் ஒண்ணும் செய்யாம அமைதியா இருக்க மாதிரியே இருக்கு…!
கட்டுரை அருமை ! வாழ்த்துக்கள் பிரகாஷ்!
அண்டா குண்டா அடகு வச்சு
ஆத்தா தாலிக்கு விலையும் வச்சு
சீமை வேலையின்னு நம்பிப் போனா
சிறையில போய் கம்பி எண்ணனும்
ஊருக்கு வந்தா கடன்காரன் மிரட்டுவான்
அங்கேயே இருந்தா முதலாளி அரட்டுவான்
போக்கத்தவனா பொறுமையாக இருந்தா
ஆக்கங்கெட்டவன் அடிமையா நடத்துவான்
கனவை காண்பதை நிறுத்து
கண்கள் சிவக்கட்டும் வருத்தி!!
மலேசியாவுல கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே அதனோட வலி நிறைஞ்ச அனுபவங்களை சொல்லி படிக்கிறவங்களுக்கு மலேசியா பத்தி ஒரு கண்ணோட்டத்தை கொடுக்கிற மாதிரி கட்டுரை இருக்கு. பிரகாஷூக்கு வாழ்த்துக்கள்!
நானும் மலேசியாவில் பணிபுரிகிறேன். நீங்கள் எழுதிருப்பது நூறு சதவீதம் உண்மை. இதை நான் சொந்த அனுபவத்திலும் சக தொழிலாளர்களின் அனுபவத்திலும் நேரடியாக கண்டேன். மலேசியாவில் உள்ள, மலேசியா நாட்டு குடியுரிமை உள்ள பல தமிழர்கள், தமிழகத்திலிருந்து வேலைக்கு வரும் தமிழர்களை ஏனோ மிகவும் கேவலமாக பார்க்கின்றனர் மற்றும் “ஊர்க்காரன்” என்றும் தாழ்வாக பேசுகின்றனர் . அவர்களுடைய முன்னோர்களும் அந்த காலத்தில் பிழைப்பு தேடி தமிழகத்தில் இருந்துதான் வந்தார்கள் என்பதை நினைத்துபார்ப்பதே இல்லை. உயர் தர, அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு வேண்டுமானால் மரியாதை இருக்கலாம்.
ஆனால் பெருமைப்படும்படி ஒரு சில நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வேதாரன்யத்திலிருந்து
இரா. உலகேஷ்
R.உலகேஸ்வரன்:சரியாக சொன்னிர்கள் கேவலமாக பேசுவதில் அவர்கள் கில்லாடிகள் நான் மலேசியா போன புதிதில் ஒரு மலேசியா தமிழரிடம் பேசியபோது ஆமாவ ஈன்டியாவுல (காடி)காருலாம் இருக்க ஈன்டியாவுல பெரிய கட்டிடம்மேல்லாம் இருக்க அப்புடின்னு கேட்டார் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை முறைத்து பார்த்து விட்டு நடக்க ஆரம்பித்தேன் இதுல ஈன்டியா என்று நான் எழுத்துபிழையாக எழுதவில்லை மலேசியா தமிழர்களின் சொல் வழக்கே அப்படித்தான்
வெளிநாட்டுக்கு போறவுக என்னமெல்லாம் கஷ்டப்படுதாகன்னு பிரகாஷ் விளக்கமாக எழுதியிருக்கார். கஷ்டப்படுத ஜனங்களை காப்பாத்த வக்கில்லாத நாட்டுல இருந்துதான் நடிகமாரு அடிக்கடி கலைநிகழ்ச்சி நடத்துததக்கு கோலாலம்பூருக்கு போறாக. கஞ்சிக்கு வழியில்லாத தமிழனெல்லாம் அதுக்கு அடிச்சு பிடிச்சு பாத்து இரசிக்கிறாக. அதையும் கொஞ்சம் எழுதுங்க பிரகாஷ் தம்பி.
என்ன அண்ணாச்சி சவுக்கியமா??? ஆளயே காணோம்???
கேள்விகுறி அண்ணே “அண்ணாச்சி” என்பது ஒரு சாதியின் குறியீடு தானே சாதி இல்லை இல்லை என்று வாய் கிழிய முழங்கும் நீங்களும் வினவு கூட்டமும் ஏன் சாதியை திரும்ப திரும்ப நினைவு படுத்துகிறீர்கள் மற்றபடி பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டதிற்கு மன்னிக்கவும்.
இது என்ன கொடுமை எழில் தம்பி, வட்டார வழக்குக்கும் சாதிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு சமூக அறிவு இல்லாம இருக்கியேப்பா… பெரியவங்களை ‘அண்ணாச்சி’ ன்னு அழைப்பது நெல்லைத்தமிழுக்கே உள்ள சிறப்பு, மத்தபடி வினவ மட்டம் தட்டுற முயற்சியிலதான் உனக்கு சமூக அறிவு இல்லாத விசயம் உனக்கே தெரியவருவதால எல்லாம் நல்லதுக்குதான் நடக்கு
கேள்வி குறி வட்டார வழக்கு என்பதும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மை சாதியினரின் வழக்கு தான் ஏன் தமிழ் மொழியே சாதி பார்க்கும் சாதி காப்பாற்றும் மொழி என்பது பெரியாரின் வாக்கு ,இது சமூக அறிவு அல்ல மானுடவியல் எந்த அறிவுமே இல்லாமல் இருக்கும் உனக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது ??????
தம்பி எழில் எப்பவுமே பெரியவுக சொன்னா அத ஏத்துகிடுத பணிவு வேணும். நெல்லை வட்டாரத்துல எல்லா சாதிக்காரவுகளும் ஏன் நம்ம நெத்தியடி பாய்மார்களும் வயசுல மூத்தவுகள அண்ணாச்சின்னு கூப்புடுவாக. இதுல சாதியோ, மானிடவியலோ எந்த புண்ணாக்கும் கிடையாது பாத்துக்கிடுங்க. மலேசியாக் கட்டுரையில அங்கன நம்ம மக்கள் கஷ்டப்படுத விசயத்தை பேசாமல் இப்பிடி ஆக்கெக்கங்க கெட்ட லூசுமாதிரி உளறக்கூடாது. எங்க ஊர்ல இந்த லூசுங்கிற வார்த்தைக்கு பதில் மூதின்னு சொல்வாக. அதுவும் வட்டார வழக்குதான். இருந்தாலும் உங்கள அப்படி சொல்லலை, பாத்துக்கிடுங்க
தம்பி கேள்விக்குறி நான் சவுக்கியந்தான். இன்னும் எத்தனை காலத்துக்கு பின்னூட்டத்துலயே காலத்த போக்குவீக. நீங்களும் வினவுல எழுதணும்றது இந்த அண்ணாச்சியோட அன்புக்கோரிக்கை. வினவுக்காரவுக உங்ககிட்ட கேட்டாகளோ என்னமோ தெரியல. ஆபிசுல டிமிக்கி கொடுத்துப்புட்டு மறுமொழி போடுதது கொஞ்சம் சிரமமா இருக்கு. மத்தபடி வினவை படிச்சுகிட்டு ஓட்டு போட்டுகிட்டுத்தான் இருக்கேன்.
அவருக்கு தான் கேள்வி கேக்கற அறிவு மட்டும் தான் இருக்கே பதில் சொல்லவே அறிவு இல்ல.அமைதிபடை படத்துல சத்யராஜ் மணிவண்ணன பாத்து சொல்வாரு அது தொணுதுனால தாண்டா மணியா நான் எம்.எல்.ஏ. வா இருக்கேன் அது தோணாம போனதால தாண்டா நீ எடுபிடியாவே இருக்கேநு அதே கதை தான் இங்கேயும்
குறைகுடம் ரிக்கார்ட் டான்ஸ் கூட ஆடும் …
எழில் முட்டாள்தனத்திற்கும் பிழைப்புவாதத்திற்கும் நடுவுல நின்னுகிட்டு இது என்ன் உளரல், கொஞ்ச நாளுக்கு வினவுல தமிழனவாதிங்கள விமரிசனம் பண்ணப்ப தமிழினவாதின்னு பீத்திகிட்டியே தம்பி அப்ப எங்க போனாரு பெரியாரு??? இல்ல பசும்பொன் முத்துராமிலிங்கத்துக்கு மாலை போட்ட சீமானுக்காக சீன் போட்டபோது எங்க போனாரு பெரியார்????
வட்டார வழக்கு பெரும்பான்மை சாதியினரின் வழக்குன்னு சொல்வது அடி முட்டாள்தனமென்றால், இங்க பெரியாரை இழுப்பது காரியவாதம்… தம்பி மேல மேல வினவையும் என்னையும் திட்டி அம்பலப்பட்டு போக தமிழன்னை துணைபுரிவாளாக
என்ன பிழைப்பு வாதம் நு கொஞ்சம் விளக்க முடியுமா ? என்னோடது பிழைப்பு வாதம்னா உங்களோடதேல்லாம் இன்னா ?
எப்படியும் வாழனும்னா ஏதோ ஒரு வேலை செஞ்சு தான் ஆகணும் அதெல்லாம் பிழைப்பு வாதமா ? கேள்வி குறி கொஞ்சம் கொஞ்சமா குறிய இழந்துட்டு வருகிறார் என்பது மிகை அல்ல
எழில் … அதான் விளக்கி எழுதிட்டேனே படிக்கலையா?
@@@@கொஞ்ச நாளுக்கு வினவுல தமிழனவாதிங்கள விமரிசனம் பண்ணப்ப தமிழினவாதின்னு பீத்திகிட்டியே தம்பி அப்ப எங்க போனாரு பெரியாரு??? இல்ல பசும்பொன் முத்துராமிலிங்கத்துக்கு மாலை போட்ட சீமானுக்காக சீன் போட்டபோது எங்க போனாரு பெரியார்????@@@@
இதுதான் பிழைப்புவாதம்…. வேலைக்கு போவதெல்லாம் பிழைப்புவாதம் இல்ல… என்ன கொடுமை இது, அரசியல் அனா ஆவன்னா தெரியாதவங்க்கூடல்லாம் மல்லுகட்ட வேண்டிகிடக்கு…
@@@கேள்வி குறி கொஞ்சம் கொஞ்சமா குறிய இழந்துட்டு வருகிறார் என்பது மிகை அல்ல@@@@
இதுல இது வேறையா… என்னால பதிலுக்கு இதுமாதிரி உன்ன திட்ட தோனல தம்பி.. என்னமோ போ….
ஒரு தமிழினவாதியாக நான் பெரியாரை எடுதுகாட்டியத்தில் எந்த தவறும் இல்லை.எந்த தமிழினத்துக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோமோ அதே தமிழினத்தின் மேம்பாட்டிற்காக தன வாழ் நாள் முழுவதும் பெரியார் உழைத்தார் அதனால் தான் நாங்கள் மேற்கோள் காட்டுகிறோம்
கம்மீநிச்டுகள் என்று சொல்லிகொள்ளும் உங்களை போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதே பெரியார் தான் சொல்லி சென்றுள்ளார்.ஸ்டாலின் போன்ற இறக்குமதி செய்யப் பட்ட கொடுங்கோல் “கடவுள்களை” கண்மூடித்தனமாக வணங்கும் உங்களை போன்றவர்களிடம் பகுத்தறிவை எதிர்பார்ப்பது மடத்தனம்
முத்துராமலிங்கத்துக்கு மாலை போட்ட விவகாரத்தில் சீமான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டார்.
அரசியல் ல அ,ஆவண்ணா தெரியாத ? ஆமா நீர் என்ன முனைவர் பட்டம் வாங்கியவரோ ? ஏதோ சில கம்முனிச உளறல்களை படித்துவிட்டு இணையத்தில் பின்னூட்டம் போட்டு கேள்வி மட்டும் கேட்கும் “கூர்மையான” மதி நுட்பம் வாய்ந்தவர்களிடம் அரசியலை எதிர்பார்த்தால் அதுவும் மூடத்தனமே.நாங்கள் மட்டுமே அறிவாளிகள் மற்ற அனைவரும் அரசியல் தெரியாத கம்முநிசம் தெரியாத முட்டாள்கள் என்பது ஒரு ஆணவ மன நோயின் வெளிப்பாடு.இதுவே உன்னைப் போன்றவர்களை தமிழினத்திடம் இருந்து பிரிக்கிறது துரோகியாக செயல்படவும் வைக்கிறது பட்டி மொங்களுக்கும் வக்காலத்து வாங்க வைக்கிறது.
காளமேகம் போன்ற “பெரியர்வகளுக்கு” நான் “பெரியவர்கள்” சொன்னார்கள் என்பதற்காகவே எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் உங்களைப் போன்று பகுத்தறிவற்றவன் அல்ல.இன்று சீமானுக்கு ஆதரவு அதிகரிக்கிறது அந்த எரிச்சல் உங்களுக்கு தாங்க முடியவில்லை.எனவே எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நாக்கை தொங்க போட்டபடி காத்திருக்கிறீர்கள் ஏனென்றால் உலகில் நீன்ன்கள் மட்டுமே “அறிவாளிகள் “
3 நாள் என்ன 300 நாள் உக்காந்து முக்கி முக்கி யோசிசாலும் இதைவிட சிறந்த பதில உன்னால தயாரிக்க முடியாது ஏன்னா உனக்கு பொறாமையும் கோபமும் இருக்குற அளவுக்கு பணிவும் நேர்மையும் இல்ல, அரசியல் அறிவை பற்றி கேட்கவே வேண்டாம்… பூஜ்யம், சைபர் – ஜீரோ … அடுத்தமுறை எனக்கு வெட்டித்தனமா கிடக்க 10 நிமிசம் கிடைக்கும் போது பதில் எழுதறேன்… அதுவரை ஹாவ் அ பீஸ்ஃபுல் லைஃப் மை டியர் பிரதர் எழில்…..
பின்னூட்டம் என்பதே வேண்டாம் என்று முன்பு ஒரு முறை நான் பின்னூட்டம் அனுப்பியிருந்தேன். அந்தக் கருத்து எவ்வளவு தவறு என்பதை, காப்பி கட்டுரையும், இந்த மலேசிய கட்டுரையும் பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டன.
கட்டுரை படித்து மனம் கசிந்தது.
இந்த அவலம் என்று தீருமோ?
ஏழைகள் எங்கு சென்றாலும் பிரச்சனைதான் .இந்தியாவில் வாழ்ந்துகொண்டு போராடுவதுதான் சரியானது உங்கள் அனுபவம் மற்றவருக்கு நல்ல உதாரணம்.
நண்பரின் கட்டுரையை படித்துவிட்டு மிகவும் வேதனை அடைந்தேன். நான் 13 வருடங்களாக இங்கே இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன். தவறு முழுவதும் நம் மக்களிடையேதான் இருக்கிறது. பல ஆயிரக்காண தமிழர்களை இங்கே சந்தித்து விட்டேன். பல நண்பர்களுக்கு என் கம்பனியில் வேலை செய்யும் தமிழ் நண்பர்கள் மூலம் பணம் கலக்ட் செய்து இந்தியாவிற்கு டிக்கட் வாங்கி அனுப்பியுள்ளேன். நிறைய நண்பர்களுக்கு அறிவுரை சொல்லி திருப்பி அனுப்பிருக்கிறேன். நன்றாக விசாரித்துவிட்டு அல்லவா வேலைக்கு வரவேண்டும்? நகைகளை அடகு வைத்துவிட்டு இங்கு வந்து ஏன் கஷ்டப்படவேண்டும். நான் சந்தித்த நிறைய நண்பர்கள் திருமணம் முடிந்த கையோடு வந்திருக்கிறார்கள். இதுவரை நான் சந்தித்த எவரும் அவர்கள் 8000 ரூபாய் மாத சம்பளத்திற்கு மேல் வாங்குவதாக தெரியவில்லை. ஏன் 8000 ரூபாய் இந்தியாவில் சம்பாதிக்க முடியாதா? எதற்காக இங்கே வந்து கஷ்டப்பட வேண்டும். நான் இதை பார்த்து எ கமபனியில் நிறைய பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். ஆனால் யாரும் தொடர்ந்து வேலை செய்யவில்லை. இங்கே நம் நாட்டு மக்களை கோலாலம்பூர் ஏர்போர்ட் டாய்லட்டிலும், ரோடு போடும் வேலைகளிலும் பார்த்து பல முறை ரத்தக்கண்ணீர் விட்டுள்ளேன். நிறைய நபருக்கு உஅதவி உள்ளேன் என்பதில் எனக்கு ஒரு சந்தோசம். இந்த கட்டுரையை படிப்பவர்களாவது நம் மக்களிடம் சொல்லி யாரையும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, விசாரிக்காமல் வரவேண்டாம் என்று சொல்லுங்கள்.மற்றபடி மலேசியா மாதிரி ஒரு நாட்டில் வேலை செய்ய கொட்டுத்து வைத்திருக்க வேண்டும். ஹைகமிஷனையும் குறை சொல்லக்கூடாது. தினமும் இது போல் 1000 பேர் போனால் அவர்களும் என்ன செய்வார்கள்? நண்பருக்கு ஏதேனும் உஅதவி தேவை என்றால் எனக்கு மெயில் அனுப்ப சொல்லுங்கள்.
என்றும் அன்புடன், என்.உலகநாதன். iniyavan2009@gmail.com
///மற்றபடி மலேசியா மாதிரி ஒரு நாட்டில் வேலை செய்ய கொட்டுத்து வைத்திருக்க வேண்டும். ஹைகமிஷனையும் குறை சொல்லக்கூடாது. தினமும் இது போல் 1000 பேர் போனால் அவர்களும் என்ன செய்வார்கள்///அண்ணே உலகநாதன் வாய கேளராதீக மலேசியாவில் உயர்ந்து நிற்கும் ஒவ்வோரு கட்டடமும் இந்தோனேஷியா கட்டட தொழிலாளின் உழைப்பை அதன் பின்னுள்ள சோகத்தை சொல்லும் .
உலகநாதன் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். எல்லாம் தெரிந்திருந்தும், நாம் மீண்டும் மீண்டும் போய் விழுந்தால் யாரால் எப்படி காப்பாற்ற முடியும். இங்கே தமிழகத்தில், வடநாட்டவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்று பாருங்கள். நிச்சயம், இங்கே அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலை உள்ளது. நாம், அதை தாண்டி தேடும்போது தான் அனேக சிக்கல்.
மதிப்பிற்குரிய நண்பர் உலகநாதனுக்கு, நீங்கள் மலேசியாவில் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நிச்சியமா உங்களுக்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பில்லை. முழுமையாக அறிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன். ஒரு உதாரணம் நான் வேலை செய்த உணவகத்தில் சாம்பாரில் ருசி சற்று குறைவாக இருந்தது என்று மலேசியா தமிழ் முதலாளி சாம்பாரை கொதிக்க கொதிக்க சமையல்காரரின் முகத்தில் ஊற்றினார். தமிழக தொழிலாளர்களை அழைப்பது கெட்ட வார்த்தையில்தான். அதே கடையில் வேலை செய்யும் இந்தோன் மற்றும் மலாய்காரர்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தமிழ்நாட்டு தமிழன் காலையில் இரண்டு ரொட்டி, மதியம் குருணை அரிசி சோறு, சாம்பார் அல்லது ரசம் (அசைவம் சாப்பிடமுடியாது). இரவு மதியம் சமைத்த மீதம் உள்ள குருணை சோறு. காலையில் ஏழு மணிக்கு வேலை, அதற்குள் தேநீர் குடிக்கவேண்டும்(தேநீர் மட்டும்தான் குடிக்க முடியும்). ஏழு மணிக்கு மேல் குடித்தால் பறித்து ஊற்றிவிடுவர்கள். எனது நண்பர் ஒருநாள் ஆசை பட்டு தோசை சாப்பிட, 5 வெள்ளி சம்பளத்தில் வெட்டி விட்டார்கள். இது ஒரு உதாரணம்தான் இன்னும் நிறைய எழுதமுடியாமல் உள்ளது. இதெல்லாம் நீங்கள் அனுபவித்திருக்க முடியாது. அதனாலதான் மலேசியா தமிழர்கள் நல்லவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் எல்லோரையும் சொல்லவில்லை. பெரும்பான்மையனவர்கள் அப்படித்தான். நானும் 3 வருடம் படாதபாடு பட்டுவிட்டு, தற்போது 3 வருடமாக வேறு ஒரு தமிழரிடம் வேலைசெய்கிறேன். ஆனால் இவர் மலேசியாவில் உள்ள ஒரு சில சிறந்த மனிதர்களுள் இவரும் ஒருவர். தமிழ்நாட்டிலிருந்து இங்கு அறியாமல் வந்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதைப்பற்றி எழுதி இருந்தீர்கள் அது முழுக்க முழுக்க நம் நாட்டு ஊழல் மற்றும் சுரண்டல் அரசியல்வாதிகளால். நேர்மையா ஒரு தேர்வெழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தால் அரசியல்வாதியின் அதிகாரம் அங்கு விளையாடி பணத்தை வாங்கிக்கொண்டு வேலை போட்டு விடுகிறார்கள். வேறு என்ன செய்வது….. …..
//மலேசியாவில் உயர்ந்து நிற்கும் ஒவ்வோரு கட்டடமும் இந்தோனேஷியா கட்டட தொழிலாளின் உழைப்பை அதன் பின்னுள்ள சோகத்தை சொல்லும் .//நண்பரே, உண்மைதான். நன்கு அறிவேன். நான் கட்டுரையை எந்த இடத்திலும் குறை கூறவோ, மறுக்கவோ இல்லை. இனி மலேசியா வர விருப்பம் உள்ளவர்கள் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
நன்றி உலகநாதன் அவர்களே
நானும் 2004 -ல் மலேசியாவில் வேலை செய்தவன் என்கிற முறையில் இந்த பதிவின் உண்மையை உணருகிறேன் ……தவறுகள் யார் மீதின் இருப்பினும எல்லோரையும் மனிதர்களாக நடத்த வேண்டும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறேன்….கண்ணிருடன்……..
பிரகாஷ் கூறியவையாவும் நூற்றுக்கு நூறு உண்மை. மலேசியாவிலும் Middle-East Countries-லும் தொழிலாளர்கள் இதுமாதிரி துன்புறுத்தப்படுகிறார்கள். பஸ் ஸ்டாப்பில் பஸ் நிக்கவில்லை என்றாலும் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணி வரவில்லை என்றாலும் பொது நல வழக்கு போடும்-Traffic Ramaswamy- இதை ஒரு Public Interest Litigation case- ஆக போடலாமே? பொது நல வழக்கு புகழ் Traffic Ramaswamy இதை செய்வாரா?
இல்லை என்றால் இதுமாதிரி செய்திகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு நீதிபதிகளே அந்த செய்தியை Writ- ஆக எடுத்துக்கொள்ளலாமே. அதுமாதிரி Writ- ஆக எடுத்த முன்மாதிரிகள் நிறைய உண்டு. ஜூனியர் விகடன், ஆ. விகடன், குமுதம், தினமலர் போன்ற பத்திரிகைகளில் இது மாதிரி செய்திகள் அனேக முறை வந்துள்ளது. நமது நீதிபதிகள் பாதிக்கப்பட்டவன் இந்திய குடிமகன் என்பதால் அவன் எந்த நாட்டில் சேலை செய்தாலும் நமது நீதிமன்றங்களுக்கு தீர்ப்பு சொல்ல உரிமை உள்ளது. அதற்க்கு அந்த அரசாங்கங்கள் கட்டுபட்டே ஆகவேண்டும். உண்மையை வெளியில் கொண்டுவர முடியும். நமது நீதிபதிகள் இந்த செய்தியை (ஜூனியர் விகடன், ஆ. விகடன், குமுதம், தினமலர் போன்ற பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் சேர்த்து) Writ-ஆக எடுத்து கொள்வார்களா? நமது நேர்மையான் நீதிபதிகள் கவனத்திற்கு இந்த செய்திகள் இன்னும் சென்று அடையவில்லை என்று நினைக்கிறேன். அதை செய்தால் மலேசியாவிலும் Middle-East Countries-லும் உள்ள சகோதர சகோதரி தொழிலாளர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
இந்த இடுகையை Traffic Ramaswamy – கவனத்திற்கு எடுத்து சென்றால் கை மேல் பலன் கிடைக்கும். ஏனென்றால் அவர் எந்த Public Interest Litigation Case போட்டாலும் நள்ளிரவே ஆனாலும் விடுமுறை என்றாலும் நீதிபதிகள் உடனே எடுத்துக் கொள்வார்கள் என்று நான் பல பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். அதனால் தான் Traffic ராமஸ்வாமி-இந்த Case -ஐ போடவேண்டும். தயவு செய்து இந்த இடுகையை Traffic Ramaswamy – கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள். நமக்கு வேண்டியது நமது சகோதர சகோதரிகள் கஷ்டப்படக்கூடாது. அதை யார் செய்தால் என்ன? பொது நல வழக்கு புகழ் Traffic Ramaswamy செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அன்புடன் ஆட்டையாமப்ட்டி அம்பி!?
நான் 20௦ வருடமாக சௌதியில் வேலைப்பார்க்கிறேன்
பல கஸ்டங்கல் பல இன்னல்கல் ஒவ்வொறு முறையும்
விடுமுறை முடிந்து வரும்போதும் இதுவே கடைசிமுறையாக
இறுக்கவேண்டும் என என்னுவேன் என்ன செய்ய என்னைப்போல் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஊதியமும் குறைவு வேலையும் அதிகம்.
http://nizamroja01.blogspot.com/2009/10/blog-post_23.html
மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்திதான் இது. இது போன்ற செயல்கள் மலேசியா மட்டுமல்ல, வளைகுடா நாடுகளிலும் அதிகமாகவே நடக்கின்றது.
இதில் மிக அதிகமாக குற்றமிழைப்பவர்கள் நாம்தான். காரணம், வெளிநாட்டு வேலை என்றவுடன் ஏஜண்டுகளிடம் ஆயிரக்கணக்கில் கொண்டு கொடுக்க தயாராகிவிடுகிறோம். அதிகமான விசாரணைகளை தவிர்க்கிறோம். ஏனென்றால், இந்த வேலை வேறுயாருக்காவது போய்விடுமோ என்ற அச்சத்தில் கேட்ட பணத்தை எதையாவது விற்றோ அடகு வைத்தோ கொடுத்து விடுகின்றோம்.
அடுத்து தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்தவுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு நமக்கு கிடைக்கவில்லை. அல்லது போதிக்கப்படவில்லை. வெளிநாட்டில் சம்பாதித்து நமது நாட்டின் அன்னிய செலவாணியை அதிகரிக்கும் இந்த அப்பாவிகளுக்கு நமது அரசாங்கம் குறைந்த பட்சம் இது குறித்த தகவல்களையாவது தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மிகவும் அயோக்கியர்கள் யார் என்றால் தனக்கு கிடைக்கும் சில்லறை லாபத்திற்காக (சப்..சப்..சப் ஏஜென்ட்கள் என கணக்கு பார்த்தால் ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம்) எத்தனை அப்பாவிகளின் வாழ்க்கையை அடகு வைக்க துடிக்கின்றனர். இவர்களை எல்லாம் விட விபச்சாரிகள் எவ்வளவோ மேல். எனது தனிப்பட்ட கருத்து, இதுபோல யாராவது ஏமாறுவார்களேயானால் எந்த ஏஜென்டிடம் காசு கொடுத்தார்களோ அவர்களை மனிதாபிமானம் பாராமல் அடித்து துவைக்க வேண்டும். இவர்களை அரசாங்கம் ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தால் அது கானல் நீராகவே இருக்கும். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இனிவரும் நாட்களில் மற்றவர்களை ஏமாற்ற மாட்டார்கள். அட்லீஸ்டு உண்மையை சொல்வார்கள். காரணம், கட்டிட வேலைக்கு செல்ல தயாராக இருப்பவர்களை அந்த வேலைக்கு அனுப்புவதில் தவறில்லை. மாறாக, பட்டதாரிகளை கூட அனுப்பி விடுகிறார்கள். இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு காண இதுதான் சிறந்த முறை.
இன்றைக்கு இந்தியாவின் வருமானத்தில் 3சதவீதம் வருவது வளைகுடா வாழ் இந்தியர்களின் மூலமிருந்துதான். ஆனால், இந்தியாவில் இருந்து வளைகுடாவிற்கு சென்றவர்கள் எத்தனைபேர். அவர்கள் அங்கு என்ன வேலை செய்கிறார்கள் என்ற தகவல்கள் எதுவும் நமது அரசாங்கத்திடம் கிடையாது. அட்லீஸ்டு எத்தனை பேர் செத்தார்கள் என்ற தகவல் கூட கிடையாது. ஆனால், இதுபோன்ற தகவல்களை பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டினர் மிக அழகாக கவனமாக கையாளுகின்றனர். நமது அரசாங்கம் அடித்தட்டு வேலை பார்க்கும் இது போன்றவர்களின் நலன் குறித்து எந்த அக்கறையும் செலுத்துவதில்லை.
வெளிநாட்டு வேலைக்கு வரும் நண்பர்களுக்கு சொல்வதெல்லாம், யாரையும் நம்பி வராதீர்கள் அரசாங்கம் உட்பட. வருமுன்னதாகவே எந்த நிறுவனத்திற்கு வருகிறோமோ அதைப்பற்றி நன்றாக விசாரித்துவிட்டு வரவும். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், இன்றைக்கு மலேசியா, வளைகுடா நாடுகளில் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக நமது நாட்டிலேயே சம்பாதிக்கலாம். ஆனால், அதற்கு தேவை கடுமையான முயற்சி.
அல்லாமல், வந்துவிட்டு கஷ்டப்பட்டு அழும்போது நடக்கப்போவது ஒன்றுமில்லை
அன்புடன்
முஹம்மது பைசல்
////அவர்கள் கூறியதை நம்பினேன். அவர்கள் கூறியதை வேறு வழிகளில் உறுதிப்படுத்தும் வழிகள் இருந்த போதும் அத்தகைய மனநிலையில் நானும் அப்போது இருக்கவில்லை.////
—- வெளிநாடு சென்று வேலை பார்ப்பது என்றால் அதன் அஸ்திவாரமே இதுதான்….//உறுதிப்படுத்தும் வழிகள் //… இதை முறையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டியது தன் வாழ்க்கையின் மீது அக்கறை கொண்ட வெளிநாடு செல்லும் ஒவ்வொருவர் மீதும் இன்றியமையாதது….
இது சரி இல்லை என்றால் மொத்த வாழ்க்கையும் சோகத்தில்தான் போய் முடியும் என்பதற்கு இப்பதிவு ஒரு நல்ல படிப்பினை….
மேலும்…
///இந்தியத் தொழிலாளிகளின் நலனை (பற்றி) கவலைப்படாத இந்தியத் தூதரகம் ///—-மலேசியாவில் மட்டுமல்ல… கிட்டத்தட்ட உலகெங்கும்…
///(பணம் ஒன்றே குறிக்கோளான சுயநல)தமிழ்நாட்டு(அல்லது இந்திய) முகவர்கள்/// — அனுப்பிவிடப்படுபவன் எக்கேடுகேட்டால் என்ன….
====>>>இவர்கள் இருவருமேதான் வெளிநாடுவாழ் தொழிலாளிகளின் வில்லன்கள்…
இவை இரண்டையும் முறையாக வரையறுக்க வேண்டியது இந்திய அரசின் மீது காலத்தின் கட்டாயம்…..
உண்மைகளை உடைத்து ஊரறிய சொன்னதற்கு நன்றிகள் பிரகாஷ்..
//விடை தெரியாத கேள்விகளோடு நானும் வாழ்வை ஓட்டுகிறேன். வேறு வழி?// …முயன்றால் வழி கிடைக்கும் …. தொடர்ந்து முயலுங்கள்…. வழி கிடைக்க….
நல்ல எளிமையான நடையில் ஆனால் நன்கு உணரும்படி எழுதியிருக்கிறீர்கள் பிரகாஷ்.
கோலாலம்பூர் விமானதளத்தில் இந்த மக்களைக்கடந்து செல்லும்போது சொல்லொணா வலி ஏற்படும்.
இதயம் கனக்கிறது.
அவலத்தை உணர்த்திய கட்டுரை…பிரகாஷ் தொடர்ந்து எழுத வேண்டும்.
நல்ல பதிவு
தமிழ்நாட்டு முகவர்கள், மலேசிய முதலாளிகள், மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் மலேசிய அரசின் கண்டு கொள்ளாமை, இந்தியத் தொழிலாளிகளின் நலனை கவலைப்படாத இந்தியத் தூதரகம் என்ற இந்த அதிகார வலைப்பின்னலில் விட்டில் பூச்சிகளாய் சிக்கி வதைபடும் தொழிலாளிகளை யார் காப்பாற்றுவார்கள்?
….. நியாயமான கேள்விகள்….. இந்திய தூதரகம், விழிப்புணர்வு வேலையில் இன்னும் பங்கு பெற வேண்டும்…
’அவர்கள் கூறியதை நம்பினேன். அவர்கள் கூறியதை வேறு வழிகளில் உறுதிப்படுத்தும் வழிகள் இருந்த போதும் அத்தகைய மனநிலையில் நானும் அப்போது இருக்கவில்லை’
இன்றைக்கு இணையம் இருக்கிறது.பதிவர்கள் இருக்கிறார்கள்.ஆக விசாரித்து முடிவு செய்திருக்கலாம்.அங்கு போகும் பலருக்கும் தெரிந்திருக்கிறது- சொல்லப்படுவது நடப்பதும் வேறு என்று.போலி ஏஜெண்டுகளிடம் ஏமாற வேண்டாம் என்று அரசு சொன்னாலும் கேட்காமல் ஏமாறுவோம் என்றால் யார் என்ன செய்ய முடியும், தூதரங்கள் இன்னும் கவனமாக,அனுசரனையாக இருக்கலாம்.ஆனால் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களாலும் ஒரளவிற்கு மேல் தலையிடுவது கடினம். இன்று இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.வேலையே கிடைக்காது என்ற நிலை இப்போது இந்தியாவில் இல்லை.சுரண்டல் உண்டு.கேரளா,கர்நாடாகாவில் பல ஆயிரம் பேர் பிற மாநிலங்களிலிருந்து வேலை செய்ய வருக்கிறார்கள். ஒரளவேனும் பிழைத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் நிலையும் உயர வேண்டும்.ஆனால் வெளி நாட்டு கனவினை நம்பி ஏமாறுவதை மக்கள் மனது வைத்தால்தான் முடியும்.ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றிவோர் இருப்பர்.
நெஞ்சு பதைபதைக்கிறது வினவு