விஞ்ஞானத்தின் பிடியில் கடவுள் சிலைகள் !

ந்திரம் என்பது 6 அங்கங்களைக் கொண்டதாம்! மந்திரத்தை கூறியவர் 1 – ரிஷி, 2 அந்த மந்திரத்திற்கான உச்சரிப்புகள் -சந்தஸ், 3. அந்த மந்திரத்திற்கான – தேவதை, 4. மந்திரம் அடங்கியுள்ள பகுதி – பிஜம், 5. மந்திரத்தின் ஆற்றல் – சக்தி, 6. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது – கீழகம் போன்றவையாம். ஆனால் இன்றைய நிலை என்ன?

அதாவது ‘இந்த உலகம் கடவுளுக்கு அடக்கம், கடவுள் மந்திரத்திற்கு அடக்கம், மந்திரம் பார்ப்பனர்களுக்குள் அடக்கம், ஆகவே பார்ப்பனர்கள்தான் கடவுளை விட உயர்ந்தவர்கள் என்று கூறும் பார்ப்பனர்கள், எந்த வித பெரும் பிணி, பீடை, பெருநாசம் போன்றவற்றையும் மந்திரத்தால் அடக்கிவிடுவோம் என்கிறார்கள். வைணவப் பார்ப்பனர் கூறுகிறார் – துளசி தீர்த்தம் போதும் பெரு நோய் ஓட என்று! சைவப் பார்ப்பனர் கூறுகிறார் வில்வமே பெருநோய்க்கு மருந்து என்று! இடைப்பட்ட மக்கள் வேப்பிலை, துளசி, வில்வம் என மூன்றையும் தண்ணீரில் போட்டு மஞ்சள் கலந்து தெளிக்கிறார்கள். கேட்டால் எந்த நோயும் அண்டாது என்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒரு வேடிக்கை, கோவில்களில் ஆல்கஹால் (சாராயம்) கலந்த கிருமி நாசினியைத் தெளிக்கிறார்கள். ஏன் தெரியுமா? பொதுவாகவே கோவில்களில் பூஜை செய்யும் கற்சிலைகள்மீது நெய், பால், தயிர் உள்ளிட்ட பல பொருட்களை ஊற்றிக் கொட்டி அதை பிசுபிசுப்பாகவே வைத்திருப்பார்கள். காற்றில் எந்த ஒரு கிருமிகள் வந்தாலும் மிகவும் எளிதாக இந்த பிசுபிசுப்புகளில் ஒட்டிக்கொள்ளும், ஆகவே, கரோனா தொற்று முடிவிற்கு வரும்வரை சிலைகளில் எந்த ஒரு பொருளாலும் அபிஷேகம் செய்யமாட்டார்களாம். முடிந்தவரை சிலைகளை நன்றாக பிசுபிசுப்பு நீக்கி சுத்தப்படுத்தி காய வைக்க வேண்டும். பிசிபிசுப்பு நீங்க ஆல்கஹால் கலந்த திரவம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெறும் தண்ணீரை ஊற்றிக் கழுவினால் பிசுபிசுப்பு போகாது. இவர்கள் கூறுவதுபோல் இலை, மஞ்சள், தண்ணீர் போன்றவைகளை ஊற்றி கழுவினால் கிருமிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கும்பகோணம் மகாமகக் குளத்தில் அதிகம் பேர் நீராடி அந்த நீர் மிகவும் சீர்கெட்டுவிட்டதாகவும், அப்பகுதி சேறுகளில் ஊறுவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளது என்றும் கூறி மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினி தெளிக்க முயன்றபோது, இதே பார்ப்பனர்கள் என்ன கூறினார்கள்?

கும்பகோண மகாமகக் குளத்து நீரின் புனிதத் தன்மையைக் கேலி செய்வதா? நோய்ப்பிணி நீக்கும் தெய்வீகக் குளத்து நீர் மாசடைந்து விட்டது என்றும், அதன் கரைப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் என்றும் கூறுவது கோடிக் கணக்கான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. கோடிக் கணக்கில் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கூடும் மக்கள் இருந்த போதிலும் உத்தரப்பிரதேச அரசு கிருமிநாசினி தெளிப்பதில்லை காரணம் அவர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தமாட்டார்கள்; மேலும் கும்பமேளாவில் கூடும் மக்களின் ஆன்மீகப் பலத்தால் அவர்களுக்கு எந்த நோயும் அண்டாது. ஆனால், தமிழகத்தில் ஆளும் அரசு இந்து விரோத செயல்களைச் செய்கிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பொங்கித் தள்ளவில்லையா?

அதில் பலர், இந்து அறநிலையத்துறை அரசின் கைகளில் இருப்பதால்தான் இதுபோன்ற நம்பிக்கைச் சீர்குலைவு நடவடிக்கையில் இறங்குகிறார்கள். ஆகவே, அரசு கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பதைக் கைவிட்டு பக்திமான்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்ட கோவில் நிர்வாகிகளின் கைகளிலேயே ஒப்படைக்க வேண்டும் என்று முழங்கினார்கள்.

படிக்க:
கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

இன்று என்ன நடக்கிறது? சிலைகளுக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்க முதலில் கொதிநீரை ஊற்றிக் கழுவுகிறார்கள். பின்னர் அதை ஏர் டிரையர் என்னும் காயவைக்கும் கருவி கொண்டு காயவைக்கிறார்கள். அதன் பிறகு சாராயக் கலவை அதிகம் கொண்ட கிருமிநாசினி கொண்டு தூய்மைப் படுத்துகிறார்கள். கரோனா தொற்று முடியும் வரை சிலைக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யமாட்டார்களாம். அதே போல் மாலைகள் மற்றும் இதர அலங்காரப் பொருட்களை சாத்த மாட்டார்களாம். முக்கியமாக பக்தர்கள் கொண்டுவரும் எந்த பொருளையும் சாமிக்கு படைக்க மாட்டார்களாம். பக்தர்களே தூரமாக நின்று சிலைக்கு முன்னால் அவற்றைக் காண்பித்துவிட்டு அப்படியே சென்றுவிடவேண்டுமாம். பார்ப்பன அர்ச்சகர் தட்டில் விழும் காசையும் நோட்டையும் கையில் கிளவுஸ் போட்டு சில்லறைகளைத் தனியாக பிரித்து கொதிநீரில் போடுவார்களாம். ரூபாய் நோட்டுகளை அயன்பாக்ஸில் வைத்து தேய்த்துக் கொள்வார்களாம்.

அர்ச்சகர்கள் பெரும்பாலும் முகக்கவசத்தோடுதான் அர்ச்சனைத் தட்டை நீட்டுவார்கள். இன்னும் எத்தனைப் பாதுகாப்பு? இதிலிருந்து என்ன தெரிகிறது? பார்ப்பானுக்கு நன்றாகத் தெரியும் கற்சிலைக்கு எந்த சக்தியும் கிடையாது. அதனால்தான் சிலைக்கு அருகில் இருந்து பூஜை செய்யும் தனக்குக் கரோனா நோய்த்தொற்று வந்துவிடுமோ என பயந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இவ்வளவும் செய்கிறார்கள்.

கரோனா பல கெடுதல்களைச் செய்துள்ளது – ஆனாலும் கடவுள் சக்தி என்ற பொய்யைத் துடைத்துத் தூர எறிந்து விட்டது என்பது மட்டும் உண்மையே!

நன்றி : ஃபேஸ்புக்கில் கலி. பூங்குன்றன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க