privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!

ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!

-

ழத்தில் உள்ள அநேகமான தடுப்பு முகாங்களுக்கு சென்ற பிறகு தந்த அனுபவங்களை பெரும் மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். சில தடுப்பு முகாங்களுக்குள் சில நாள்கள் வாழ நேர்ந்ததும் அவ்வப்போது அவற்றுக்கு சென்று வரும்பொழுதும் பல விடங்கள் அதிர்ச்சியளிக்கிறவிதமாக இருக்கிறது. அண்மையில் உன்னதம் ஜூலை இதழில் கௌதம சித்தார்த்தனுடன் நடத்திய நேர்காணலில் இந்த தடுப்பு முகாங்கள் பற்றி சுருக்காமாக பேசியிருந்தேன். அண்மையில் வவுனியா தடுப்பு முகாங்களை பார்வையிட்ட பிறகு ஏற்பட்ட அனுபவங்கள் பயங்கரமாக ‘பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் பற்றிய துயரங்களை பெரியளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பயங்கரமாக பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள்

000

இப்பொழுது ஈழத்தில் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் பற்றிய துயரம் எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. ஈழத்தின் வடக்குப் பகுதி முழுவதும் பல தடுப்பு முகாம்கள் அமைக்ப்பட்டு வன்னியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 முகாம்கள் இருக்கின்றன. மொத்தமாக எழுபதாயிரம் பேர் வரையாவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அல்லாரை தடுப்பு முகாம் மண்மேடுகாளாலும் முட்பம்பிகளாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றுடன் கைதடி தடுப்பு முகாம், நாவற்குழி தடுப்பு முகாம், மிருசுவில் தடுப்பு முகாம், கொடிகாமம் தடுப்பு முகாம் என்று பல முகாங்கள் இருக்கின்றன. முகாம்களுக்கு முகாம் இராணுவத்தினா; வெவ்வேறு விதிகளை ஏற்படுத்திக்கொண்டு, வெவ்வேறு நடைமுறைகளைக் கையாண்டு கொண்டு தமது அதிகாரத்தை பல வடிவங்களில் பல கோணங்களில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பு முகாங்கள் வெறும் சிறைச்சாலைகளாக மட்டும் இல்லை அவை மனதளவில் பாரிய விளைவுகளையும் உளைச்சல்களையும் மாற்றங்களையும் உண்டு பண்ணுகிற திறந்த தண்டனைக் களங்களாகவும் இருக்கின்றன. போர் வடுக்களை மேலும் வதைப்புக்குள்ளாக்கிற காலத்தின் சிறையாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்து தடுப்பு முகாங்களையே பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு வவுனியா தடுப்பு முகாங்களுக்கு செல்ல நேர்ந்தபோது மனதில் மேலும் பெரு அவலம் விளைந்தது.

வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் இருக்கும் தடுப்பு முகாம் நோக்கி பயணத்தை தொடங்கினேன். வவுனியா நகரத்திற்குள் வைத்தியசாலைக்கு பின்பக்கமாக ஒரு தடுப்பு முகாம் இருக்கிறது. மன்னார் வீதியில் வவுனியா காமினி மகா வித்தியாலயம் என்ற சிங்கள பாடசாலையில் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட ஆண் மாணவர்கள் உள்ளடங்களான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் முட்கம்பிகளுக்கால் எப்பொழுதும் தெருவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கும் காமினி மகாவித்தியாலய வேலிக்குள் இடையில் கிடட்டத்தட்ட ஐந்து முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேப்பங்குளத்தில் இருக்கிற முஸ்லீம் பாடசாலையிலும் அப்படித்தான் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். நெளுக்குளம் கல்வியல் கல்லூரியில் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்க பம்பமடு பல்கலைக்கழக கட்டிடத்தில் பெண்களும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். அவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும். அதுவும் அவர்களது பெற்றோர்கள் மட்டுமே பார்க்க முடியும். கட்டாய ஆட்சோர்ப்புக்குள்ளானவர்களை தடுத்து வைப்பதற்கு பம்பமடுவை சூழ உள்ள பகுதியிலுள்ள காடுகளை வெட்டி அதில் நீல மற்றும் வெள்ளை நிறமான இறப்பர் கூடாரங்களை அமைத்து முட்கம்பி வேலிகளை படையினர் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் கல்வி கற்ற மற்றும் தொழில் புரிந்த இளைஞர்களை பலவந்தமாக கொண்டு சென்று ஆயுதப் பயிச்சி அளித்தும் அளிக்காதும் அவர்களிடம் துப்பாக்கியை கொடுத்து கள முனைகளில் நிறுத்தினார்கள். அவர்களில் அநேகமானவர்கள் படையினரிடம் சரணடைந்திருக்கிறார்கள். அவர்களை இப்பொழுதுக்கு அவர்களின் குடும்பங்களுடன் இணைத்து விடும் எண்ணம் அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை. கட்டாய போருக்கு கொணடு சென்று மனதளவில் பாதிக்கப்படட அவர்கள் தற்போது இராணுவத்தின் வதைச்சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பொழுதே செத்துப்போயிருக்கலாம் என்பதைத்தான் பார்க்க போகும்பொழுதெல்லாம் தனது மகன் சொல்லுவதாக ஒரு தாய் பேருந்தில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்களில் பலர் மொட்டை அடிக்கப்பட்டிருந்தார்கள். தொடர்ந்து அவர்களுக்கு மொட்டை அடிப்பதுடன் இரவு நேரங்களில் கொடுமையான சித்திரவதைகளையும் படையினர் செய்கிறார்கள். அவர்கள் வரிசையாக நின்று உணவினை பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

முழுக்க முழுக்க வன்னிப்போருடன் தொடர்பு பட்ட இந்த மக்கள் அவற்றைப் பற்றி வைத்திருக்கிற நினைவுகள் சொல்லுகிற கசப்பான அனுபவங்கள் அவர்களை தொடர்ந்து மன வதைப்பிற்கு உள்ளாக்குவதுடன் தொடர்ந்து இந்தச் சூழல்  வதைப்பிற்குள்ளும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். யாரிடம் போனாலும் யாரைப் பார்த்தாலும் நடந்தவைகளை சொல்லத் தொடங்குகிறார்கள். உண்மைக்கு எதிரான புனைவுகள் சிதறுகின்றன. இராணுவத்தின் போர் வெறிக்குள்ளும் புலிகள் அரணாக நிறுத்திய துயரத்தையும் துப்பாக்கிகளை தமக்கு எதிராக திருப்பி நீட்டிய புலிகள் பற்றியும் கதைகளையும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

வன்னிப்போர் விளைவித்திருக்கிற இந்த முகாம்கள் அந்தச் சனங்கள் அனுபவித்த போர் துயரத்தின் நீட்சியாக  அவர்கள் மீதே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

000

வவுனியா ‘மெனிக்பாம்’ தடுப்பு முகாம் எனறுதான் எல்லோராலும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களும் வவுனியாவிற்கு வெளியிலிருப்பவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மெனிக்பாம் என்பது 1996ஆம் ஆண்டு வன்னியிலிருந்து இடம்பெயாத்ந்தவர்களை செட்டிக்குளத்தில் குடியிருத்திய கிராமம். மதவாச்சியிலிருந்து மன்னாருக்குச் செல்லும்பொழுது வலது பக்கமாக இருக்கிறது அந்தக் குடியிருப்பு. இடது பக்கமாக இருந்த பெருங் காடுகளை அழித்து அப்பகுதியில் ஆறு தடுப்பு முகாங்கள் தொடர்ச்சியாக அமைக்பப்பட்டிருக்கின்றன. பிரமாண்டமான முட்கம்பிகளால் அமைக்கப்பட்ட இந்த தடுப்பு முகாங்கள் கிட்டத்தட்ட ஏழு-ஏழு கிலோமீற்றர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து மதவாச்சி மன்னார் வீதியில் இடது பக்கமாக முதலில் ‘வலயம் ஆறு’ தடுப்பு முகாம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கதிர்காமர் முகாம், ஆனந்தகுமாரசாமி முகாம், இராநாதன் முகாம், அருணாச்சலம் முகாம், வலயம் நான்கு, வலயம் ஐந்து முதலிய முகாம்கள் பக்கம் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முகாமிற்கும் கிராம அலுவர், மாவட்ட செயல அலுவலகம் என்பன காணப்படுகிறது. இந்த சிவில் அலுவலகங்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. ஓவ்வொரு வலயத்திற்கும் “ஷோன் கொமாண்டர்” எனப்படுகிற இராணுவ பொறுப்பதிகாரிகள்தான் எல்லா விடயத்தையும் தீர்மானிக்கிறார்கள்.

காடுகள் வெட்டி ஒதுக்கப்பட்ட பெரும் வெளியில் சிவப்பு மண்ணின் புழுதியையும் தூசுகளையும் காற்று முகங்களில் அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. கடுமையான வெப்பத்தில் உடல் எரிவுடன் வியர்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு தடுப்பு முகாமின் முன்னாலும் அவர்களை சந்திப்பதற்கு உறவுகள் வந்து போய் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பிரிக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள் நின்றுகொண்டு தூரத்தில் தங்கள் உறவுகள் வந்து நிற்பதாக கைகளை காட்டிகொண்டிருப்பதும் வேறு எவரையோ தங்கள் உறவு என கைகாட்டி ஏமாறுவதுமாக இருந்தது முன்பக்கம். கடுமையான வெயிலிலும் மழையிலும் துணிகளை தலையில் போட்டுக்கொண்டு யாராவது வருவார்கள் என்று அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

சந்திக்கும் இடத்திற்கு தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது என இராணுவம் சுலோகங்களை எழுதி விட்டிருந்தது. சிம் காட்டுகளையும் சார்ஜ்யர்களையும் கொண்டு போனால் கடுமையான தண்டனை என்றும் மிரட்டிக்கொண்டிருந்து. சில தடுப்பு முகாங்களில் அதனை வாங்கி வைத்துவிட்டு டோக்கன்களை கொடுக்கும் இராணுவம் சில முகாங்களில் அவற்றை வாங்கி வைத்திருக்காமல் கொண்டு போகவும் கூடாது என சொல்லிக்கொண்டிருந்தது. வந்தவர்கள் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். சில முகாங்களில் சந்திக்கும் இடத்திலேயே சாப்பிட்டு செல்லுவதற்கான உணவு முதல் எந்தப்பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள் இல்லை. ‘கோமரசன் குளம்’ என்ற இடத்தில் இருக்கிற தடுபபு முகாமில் கொண்டு சென்ற உணவுப் பொருட்களை தூரத்தில் வைத்து விட்டு உள்ளே வந்து சந்திக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் படையினர். பணியில் நிற்கிற இராணுவத்தினர் ஆளுக்கொரு சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். பொறுப்பிலிருக்கிற ‘கொமாண்டோக்கள்’ வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இங்கு பணிபுரிகிற தொண்டு நிறுவனப் பணியாளார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் தமது பணிகளை சரியாக செய்ய முடியாதிருக்கிறார்கள். எனினும் சில தொண்டு நிறுவனங்களின் உதவிகள் மக்களுக்கு கிடைக்கிறது. அவார்கள் அதனை வைத்தே காலத்தை கடத்துகிறார்கள். ஆடை, சவற்காரம், பற்பசை, சில சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்குகிறார்கள். மக்கள்மீதும் தொண்டு மீதும் ஆர்வமுள்ள பல உள்ளுர் இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் படையினரது கடுமையான சோதனை நடவடிக்கைகளை எதிர் கொண்டே அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

சிலவேளை சந்திக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு 4 தொடக்கம் 5 மணிநேரங்கள் கால் கடுக்க நிற்க வேண்டியிருக்கிறது. செட்டிக்குளத்தில் உள்ள முகாங்களில் உறவுகளை சந்திப்பதற்கு எப்பொழுதும் சனங்கள் திரண்டபடியிருக்கிறார்கள். வந்ததும் உறவுகளின் பெயர் அவர்களது கூடார இலக்கம்; கூடாரம் அமைந்திருக்கிற பிரிவு இலக்கம் என்பவற்றை கொடுத்து ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வருவதற்கு ஒன்று தொடக்கம் இரண்டு மணிநேரங்கள் கூட எடுக்கிறது. மிகவும் தூரத்திலிருந்தும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வர வேண்டும். சிலவேளை அவர்களது கூடாரம் அமைந்திருக்கும் பகுதிக்கு அந்த அறிவிப்பு கேட்காமல் விட்டால் அவர்கள் உறவினரை சந்திக்காமலே திரும்பிச் செல்லவும் நேரிடுகிறதையும் காண முடிந்தது.

உறவுகளை சந்திப்பதற்கு அரை மணிநேரம் முதல் இருபது நிமிடம் பத்து நிமிடம் ஐந்து நிமிடம் என்று வழங்கப்படுகிறது. இதுவும் முகாங்களுக்கு முகாம் வித்தியாசப்படுவதுடன் நிற்கும் படையினர் நாளுக்கு நாள் வித்தியாசமாக நேர சூசிகையை வைத்திருக்கிறார்கள். வரிசையில் நின்று அந்த நேரத்தில் அறிவிப்பதற்கு விபரத்தை கொடுத்து விட்டு மீளவும் வரிசையில் நின்று சென்று சந்தித்துக்கொண்டிருந்தார்கள் சனங்கள். சந்திக்கும் இடமோ மிகவும் பிரமாண்டமாக முட்கம்பிகளால் பின்னப்பட்டிருந்தது. இரண்டு முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் நின்று ஒருவரை ஒருவர் தழுவும் முடியாமல் பிள்ளைகள் ஒரு பக்கம் தாய்மார் ஒரு பக்கம் என்றும் அதுபோல ஏனைய பிரிந்த உறவுகள் அழுதுகொண்டு நின்றார்கள். துயரத்தின் சொற்களும் கண்ணீரும்தான் சந்திக்கிற கொட்டில்களினுள் நிறைந்து கிடந்தன. உலுக்குளத்திலிருக்கிற தடுப்பு முகாமில் இரண்டு வேலிகளுக்கு இடையில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் போட்டு அடுக்கப்பட்டிருந்தன. தமது குழந்தைகளை உறவினரிடம் கொடுத்து விடுவதனால்தான் இப்படி விரிசலான வேலிகளை போட்டிருப்பதாக இராணுவம் சொல்லுகிறது. சந்திக்க வருபவர்கள் முகாங்களுக்கு முகாம் அவைகளின் வாசல்கள் தோறும் அலைந்து கொண்ருப்பதைத்தான் எங்கும் பார்க்க முடிந்தது.

000

இந்த பிரமாண்டமான தடுப்புக் முகாம்களின் ‘உள்ளே’ செல்ல முடிந்தபோது மனம் கனத்து மனதில் பெரும் துயரம் பரவிக்கொண்டிருந்தது. ஒரு பெரிய சனக்கூட்டம் தடுத்து துப்பாக்கிகளாலும் இராணுவ காவலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்து ஏமாற்றப்பட்ட மக்களாக அவர்கள் நிற்கிறார்கள். அந்தரம் ஏக்கம் தவிப்பு என்பவற்றுடன் இந்த முட்கம்பிச் சுருள்களுக்குள் அவர்களது வாழ்க்கை நசிந்துகொண்டிருந்தது.

அருகருகாக தகரங்களாலும் இறப்பர் கூடாரங்களிலும் மக்கள் இருந்தனர் ஒரு கூடாரத்தில் இரண்டு குடும்பங்கள் நான்கு குடும்பங்கள் என்று தங்க வைக்கப்பட்டிருந்தன. தலைமுடியில்லாத பெண்கள் மற்றும் சிறுமிகள் அநேகமான கூடாரங்களின் முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழுகிக்கொண்டிருக்கும் குழாய் தண்ணீரில் வெறும் வெளியில் நின்று குளித்துக்கொண்டிருந்தார்கள். பெண்களும் குழந்தைகளும் தண்ணீருக்காக காத்துக்கொண்டு நின்றார்கள். சில இடங்களில் தண்ணீர் குழாய்கள் கிடங்கில் தாழ்த்து வைக்கப்பட்டிருக்க அதற்குள் இறங்கி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாh;கள். தண்ணீருக்கான ‘டோக்கன்கள’; கயிறுகளில் கொழுவப்பட்டிருந்தன. மதியம் கொலுவிய டோக்கனுக்கு இரவு 12 மணிக்குத்தான் தண்ணீர் பெற முடிகிறது.

கடைகள் தடுப்பு முகாங்களின் உள்ளே இருக்கின்றன. கூட்டறவு கடைகள், பலபொருள் விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. கூடாரங்களோ நிமிரமுடியாதவையாக இருந்தன. வெம்மையை மழைபோல அவை பொழிந்துகொண்டிருந்தன. அவைகளுக்குள் நோய் வாய்ப்பட்ட மெலிந்த சனங்கள் கொடுமையான வெயில் எரித்துக்கொண்டிருக்கும் பொழுதிலும் படுத்திருந்தார்கள். மலசலகூடங்கள் ஆபத்து நிறைந்த கிடங்குகளாக இருந்தன. கூடாரங்களுக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதுடன் அவை எப்பொழுதும் நாற்றம் வீசிக்கொண்டிருந்தன. இலையான்கள் நிறைந்து கிடந்தன. அதிகாலை விடிய முதலே மலசலகூடத்திற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இப்படி தண்ணீருக்கும் மலசலகூடத்திற்கும் கடையில் பொருட்களை வாங்குவதற்கும் பக்கத்து முகாமில் உள்ள உறவுகளிடம் செல்ல வரிசையில் நிற்பதுடன் அவர்களின் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. பக்கத்தில் உள்ள முகாமிற்கு செல்லுவதற்குகூட பல அனுமதிகளை பெற்று பல மணிநேரம் காத்து சிலவேளை வெறுமையுடன் திரும்புவர்களை பார்த்திருக்கிறேன். அங்கு நிற்கிற படையினர் மக்களை கடுமையாக கேவலமாக நடத்திக்கொண்டிருந்தார்கள். மிகவும் காட்டு மிராண்டித்தனத்துடன் தடிகளுடன் நிற்கும் மிகவும் இளம்வயது படையினர் எல்லோரையும் தாக்கிக்கொண்டு நின்றார்கள். சிவப்பு புழுதியால் படிந்து கிடக்கின்றன இந்த கிரராமங்களும் கூடாரங்களும். ஒவ்வொரு துண்டு நிலத்தையும் கழிவு வாய்க்கால் பிரித்து கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

அங்கு சமைத்து கொடுக்கும் சாப்பாட்டினால் வயிற்றுளைச்சல் போன்ற நோய்கள் வருவதாக சொல்லுகிறார்கள். அங்கு குழுக்குழுவாக சேர்ந்து சமைக்கிறார்கள். உணவினை பெறுவதற்கு சிலவேளை மாலை மூன்றுமணிகூட எடுக்கிறது. சிலர் தங்கள் கூடாரங்களில் முன்பாக சிறிய அடுப்புக்களை வைத்து அதில் முடியுமான உணவினை சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சைவமத குருமார்கள் வேறு ஒரு பகுதியில் பிரத்தியேகமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். காலையில பெரும்பாலும் கஞ்சிதான் கிடைக்கிறது என்று ஒரு சிறுமி வெறுத்தபடி சொல்லுகிறாள். அந்தச் சாப்பட்டை சாப்பிட்ட பிறகு எப்பொழுது உணவினை தூக்கினாலும் எனக்கு அந்த சாப்பாடும் அழுகையும்தான் வந்து முன்னுக்கு நிற்கின்றன.

பள்ளி செல்லும் பிள்ளளைகள் கலார் சட்டைகளுடன் பள்ளிக்குடம் சென்றுகொண்டிருந்தார்கள். சிறுமிகள், பெண்கள் பாலியல் வதைப்புக்குளுக்கம் மீறல்களுக்கம் உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் கொண்ருக்கிற பெற்றோர்கள் அது பற்றி விழிப்புடன் இருக்கிறார்கள். சில இடங்களில் அப்படி நடந்ததாக சொல்லும் ஒரு தாய் தனது பிள்ளைகளை தனியாக கடைக்கும் பாடசாலைக்கும் அனுப்புவதில்லை என்று கூறினாள். அங்கிருக்கும் சிறிய மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டவர்கள் நிறைந்திருந்தாhக்ள். கறுத்து மெலிந்து போனவர்களின் அப்படியேயிருக்கிற பிள்ளைகள் எங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். யுத்த களங்களின் வெம்மையால் அவர்களது தோல் ஒரு விதமாக கறுத்துப்போய் பழுதடைந்த மாதிரி இருக்கிறது. அந்த நிலத்து புழுதி சேறு என்பன பிறண்ட ஆடைகளுடன் வெம்மை தோய்ந்த உருவங்களுடன் இருக்கிறார்கள்.

மழை பெய்யப்போகிறது என்றவுடன் அச்சமடைந்தார்கள் சனங்கள். சில கூடாரங்களின் கீழாக வெறும் நிலத்தில் தரப்பால் விரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மழையோ திரும்பத் திருப்ப பெய்து கொண்டிருந்தது. சில கூடாரங்கள் தண்ணீரில் மிதக்கத் தொடங்கின. சேறும் சகதியுமாக மாறிக்கொண்டிருந்தது தடுப்புமுகாங்கள். வெம்மை அடங்கி குளிர் அதிகரிக்க குழந்தைகளை தூங்க வைக்க நிற்க இடமில்லாமல் தாய்மார்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சனங்களின் முகங்கள் ஊறிப்போயிருந்தன. இப்படியே நிலமையிருந்தால் பருவ மழையின்போது அவர்கள் பெரும் அழிவுகளையும் அவலத்தையும் சந்திக்கப் போகிறார்கள். ஏனென்றால் முக்காவாசி கூடாரங்கள் மிகவும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

000

இந்த அனுபவங்கள் நிலைகுழையச்செய்து விட்டன. இவற்றை எழுதவும் முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. முன்பு வருகிற யுத்தக் கனவுகள் அற்று அந்த தடுப்பு முகாம் பற்றிய கனவே வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விடுவிக்கப்படுகிறபோதும் மீள குடியமர்த்துவதன் வாயிலாகத்ததான் இடப்பெயர்வின் பேரவலத்தை தடுத்து நிறுத்தலாம். யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்படுவதாக அரசு சொன்னதும் பலரும் தாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று பதிந்து வெளியேறிவிட திட்டமிடுகிறார்கள். வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் இப்படி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் வன்னி மக்களில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பேரே இதுவரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகரசபைத் தேர்தலுக்காக  சில மக்களை விடுவிப்பதன் முலம் அரசாங்கம் வாக்குகளை பெற திட்டமிட்டிருந்தது. சில அழுத்தங்கள் ஊடக பதற்றங்களை தவிர்ப்பதற்கு குறிப்பிட்டளவு மக்களை விடுவிக்கிறது.

சாம்பலாகிப்போயிருக்கிற வன்னி மண்ணை தனது கையிற்குள் வைத்திருக்கிறது அரசு. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற படைகளையும் பார்த்தேன். அவர்களிடம் இப்பொழுதுக்கு வன்னி மக்களை மீள் குடியமர்த்தும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. சிங்கள பெயர் பலகைகளையும் புத்தர் சிலைகளையும் இராணுவ பிரிவு தளங்களையும் நிறுவுகிறார்கள். பெருங் காயங்களுடன் பேரமைதியுடன் பெருந்துயரத்தை பிரதிபலித்தபடியிருக்கிறது வன்னி நிலம். வீழ்த்தி எடுத்த நிலத்தில் படையினர் மட்டும் விரும்பியடி வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். வன்னி நிலத்தின் அடையாளம், வளங்கள், சேமிப்புக்கள் சுரண்டப்படுகின்றன.

மேலும் மேலும் நம்மை பதற்றத்தில் உள்ளாக்கிற வித்தில் மிக நுட்பமாக வன்னி நிலம் அழிக்கப்பட மறுபுறத்தில் அதன் சனங்கள் மிகக்கொடூரமாக சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பு முகாங்களின் வாசல்களிலும் அதற்கு உள்ளாக எங்கும் ஜனாதிபதி மற்றும் அவரின் சகோதர்ர்களின் புகைப்படங்களை பெரிய அளவில் நிறுவியுள்ளார்கள். சனங்களின் நிலத்தை வென்ற யுத்த வெற்றியின் களிப்பு ஏறிய அந்த முகங்கள் துயர் மிகுந்த அந்தப் பகுதியில் அவருவருப்பான முகங்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. சிங்களத் தேசியகீதம், சிங்களக் கொடி, சிங்கள ஜனாதிபதி என்பவைகளின் முன்னால் பிணங்களாக எமது சனங்கள் அடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களால் இலங்கை- சிங்கள தேசியத் திணிப்பை ஏற்றக்கொள்ள முடியாதிருக்கிறது. வேற்று நாட்டில் வாழ்வதைப்போலவும் வேற்று நாட்டுப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதைப்போலவும் இருக்கிறார்கள் இந்தச் சனங்கள்.

வவுனியாவில் இருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிற செட்டிக்குளம் பகுதியில் வாழ்வு மீது நிகழ்த்தப்படும் இந்த துயரை பார்க்கும்பொழுது இன்னும் கொடுமையாயிருக்கிறது. மக்கள் வெளியேற்றப்ப்ட வன்னி நிலம் தவிர்ந்த வடக்கு பகுதி முழுக்க இப்படி தடுப்பு முகாங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன. எங்கும் பார்க்க முடியாத அறிய முடியாத துயரங்கள் நிகழ்ந்தேறுகின்றன என்பதைத்தான் ஒவ்வொரு நாளும் உணர முடிந்தது. சில நாட்களுக்குள் முகாங்களுக்குள் வாழ்ந்து அவ்வப்போது போய் வருகிற எனக்கே இப்படி பதற்றமாக இருக்கிறபோது அவைகளுக்குள் வாழ்கிறவர்களின் அனுபவங்களை சொற்களில் நிரப்ப முடியாததாகவே இருக்கிறது.

மீறப்பட்ட போர் விதிகளையும் இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்களின் அகதி விதிகளையும் மனிதாபிமான அமைப்பு எனறு சொல்லுகிறவையும் அதிகார நாடுகளும் அறிந்திருந்தும் கொஞ்சமேனும் மாற்ற முடியாத அதிகாரமற்ற தன்மையிலும் அக்கறையற்ற தன்மையாலும் இருக்கின்றன. அகதிகளுக்கானதாக சொல்லுகிற அய்.நாவால் என்ன செய்ய முடியும்? அது இந்த அகதிப்பேரவலத்திற்கு காரணமானதாக இருக்கிறது. இப்படி இந்த குற்ற நாடுகளின் குற்ற அதிகார அமைப்புக்களை அடுக்கிக்கொண்டே போக முடியும். தங்கள் சின்னங்களை அவர்கள் அகதிகளாக எமது சனங்கள்மீது மிக ஆழமாக பொறித்திருக்கிறார்கள். எமது மக்கள் இந்த அகதிச் சின்னங்களிலிருந்து எப்பொழுது விடுபடுவார்கள் என்ற ஏக்கம் அந்த மக்களைப்போல எங்கள் பலருக்கு இருக்கிறது.

எமது சனங்களை நிரந்தர அகதிகளாக்கி இந்த வெம்மை மிகுந்த வனங்களில் நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டாலும் அதனை யாராலும் கேட்க முடியயாது. இலங்கை அரசு நினைத்தால்தான் மீள சனங்களை நிலத்தில் குடியிருத்தும். அது நினைத்தால் எமது மக்களின் மண்ணை நிரந்தரமாகவே பறித்து விடும். இலங்கை அரசு என்பது அதன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அவரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபாயராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்பியுமான பசில் ராஜபக்ஷ முதலியவர்களின் அதிகாரத்திற்குள் இருக்கிறது இந்த விவகாரம். இந்த மூன்று தனிநபர்களாலும் மூன்று லட்சத்திற்கு மேற்பாட்ட சனங்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு கொள்ளப்பட வைத்த சனங்கள்; தாய் நிலத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள. கொடுமையாக உலகம் நடத்திய ஒரு யுத்ததின் விளைவாகத்தான் இப்படி அதிகாரத்தின் முட்கம்பிகள் மக்கள் மீது பிரமாண்ணடமாகவும் குறுக்கும் மறுக்குமாகவும் பயங்கரமாகவும் பின்னப்பட்டுள்ளன.

-தீபச்செல்வன், உன்னதம்’2009

தீபச்செல்வன் ஈழத்தை சேர்ந்தவர், கவிஞர். இவரது கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளன. தமிழக சிறுபத்திரிகைகளில் இவரது எழுத்து காணக்கிடைக்கும். கிளிநொச்சியை பூர்விகமாகக் கொண்ட தீபச்செல்வனது தங்கையும், தாயும் வவுனியா தடுப்பு முகாமில் உள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அவர்களை சந்தித்திருக்கிறார்.

இங்கே வன்னியின் தடுப்பு முகாம்களின் இரத்தமும், சதையுமான அவல வாழ்வை நேரில் கண்டு மனமுடைந்து இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஏதோ அகதி முகாம் என்று ஈழத்தைப் பற்றி கவலைப்படுபவர்களது மனதில் இந்த வதை முகாம்களின் நிஜங்களை ஒரு நெஞ்சை உலுக்கும் திரைப்படம் போல காண்பிக்கிறார். உன்னதம் இதழில் வெளியான இந்தக் கட்டுரையை இங்கு அனுமதியுடன் மீள்பதிவு செய்கிறோம். தீபச்செல்வனின் வலை முகவரி http://deebam.blogspot.com/

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்