முகப்புசெய்திஇலக்கிய அறிமுகம் - 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி!

இலக்கிய அறிமுகம் – 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி!

-

அறிமுகம் 1

லூ ஷூன் (Lu Xun, 1881-1936) சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி!

lu xun லூ ஷூன் லூ சூன்(

vote-012சீனாவில் முதலாளியத்தின் கை ஓங்கியுள்ள போது மாஓவிற்குரிய இடத்தை முற்றாக மறுதலிக்க இயலாமைக்கு அடிப்படையான காரணம் மாஓ சீனாவின் தலையாய புரட்சிகர சிந்தனையாளராக இருந்ததற்கும் மேலாகத் தலைமைப் போராளியாக இருந்ததற்கும் மேலாகச் சீனாவின் தேசிய விடுதலையின் வழிகாட்டியாகவும் இருந்தமைதான். எனவேதான் சீனாவுக்கு மாஓவின் முக்கியத்துவம் பெரிது. மாஓ ஒரு நல்ல கவிஞரும் கூட. பழைய இலக்கியப் பரிச்சயத்திற்கும் மேலாக நவீன இலக்கியத்திலும் ஈடுபாடுடையவர். அவருக்கு மிகவும் விருப்பமான படைப்பாளிகளுல் லூ ஷூன் முக்கியமான ஒருவர்.

லூ ஷூன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரல்ல. முதலில் ஒரு புரட்சிகர ஜனநாயக வாதியாகத் தன்னை அடையாளப்படுத்திய லூ ஷூன் காலப்போக்கில் ஒரு கம்யூனிஸ்டாக முதிர்ச்சி கண்டார். அவரை மாஓ கட்சி உறுப்பினர் அட்டையில்லாத கம்யூனிஸ்ட் என்று கூறுவார். சிறுகதை ஆசிரியராகவே சீனாவில் புகழ்பெற்ற லூ ஷூன் பல கவிதைகளும் எழுதியுள்ளார். அவரது வசன கவிதைகள் ”காட்டுப் புல்” (Wild Grass) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை விட ”திரும்பச் சொல்லப்பட்ட பழங்கதைகள்” (Old Tales Retold) என்ற தொகுப்பும்,  அவர் எவ்வாறு மரபுக்கும், நவீனத்துவத்துக்கும் ஒரு பாலமாயிருந்தார் எனக் காட்டுகிறது. அவரது சிறுகதைகளில் ஒரு பகுதி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்று நூல் வடிவில் வந்துள்ளன.

அவரது சிறுகதைகளில் முக்கியமானவற்றுள் அவரது முதலாவது சிறுகதையான ”ஒரு பித்தனின் நாட்குறிப்பு”, ”ஆ க்யூவின் உண்மைக்கதை”, ”புத்தாண்டுத் தியாகம்” எனும் மூன்றும் சீனாவில் மிகவும் மெச்சப்பட்ட படைப்புக்களாக விளங்கின. அவரது மொழிநடையில் வலிந்து யாரையும் நோக வைக்காத பண்பான நகைச்சுவை இழையோடும்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ரஷ்யப் படைப்பாளிகள் அறியப்பட்ட அளவுக்கு பிற சோசலிச நாடுகளின் படைப்பாளிகள் அறியப்பட்டதாகக் கூற இயலாது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆங்கில வாயிலாகவே இந்திய துணைக்கண்டம் உலக இலக்கியத்தை அறிய இயலாமலிருந்தமை அவற்றுள் முக்கியமான ஒன்று. லூ ஷூன் சிறுகதைகளின் ஆங்கில மொழி மாற்றங்கள் 1960ம் ஆண்டிலேயே நூல் வடிவு பெற்றன. வெகு விரைவிலேயே சீன-இந்திய எல்லைப் போரும், சீன-சோவியத் அரசியல் முரண்பாடும் வெடித்தெழுந்ததன் விளைவாக லூ ஷூன் சிறுகதைகள் சென்றடைந்திருக்க கூடிய இடங்களைச் சென்றடையவில்லை.

இலங்கையில் கூட லூ ஷூன் பற்றிய அறிவு குறைவாகவே இருந்தது. 1970 களில் கே. கணேஷ் லூ ஷூன் படைப்புக்கள் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தினார். கைலாசபதியும் 1970 களிலேயே லூ ஷூன் பற்றிப் பேசத் தொடங்கினார். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் லூ ஷூன் அறியப்பட்டது அறவே போதாது என்பதே என் எண்ணம்.

லூ ஷூன்னின் இலக்கியம் பற்றிய பார்வை இலக்கியம் மக்களுக்கானது என்ற அடிப்படையிலானது. அதை அவரது ஆக்கங்களே தெளிவாக உணர்த்தும். தனது இருப்புப் பற்றிய லூ ஷூன்னின் பார்வையை அவரது கவித்துவமிக்க இரண்டு வரிகள் உணர்த்தும்.

”நீளும் ஆயிரம் விரல்களைச் சினந்த புருவங்களுடன் நிதானமாய் மறுத்து நிற்பேன். இசைவான ஒரு எருது போல தலை தாழ்த்தி குழந்தைகட்கு பணியாற்றுவேன்”

லூ ஷூன் சீனாவின் நவீன பண்பாட்டுப் புரட்சியின் தலைமைத் தளபதியாகவும், சீரிய சிந்தனையாளராகவும் அரசியல் கருத்துரையாளராகவும் சீனாவின் நவீன இலக்கியத்திற்கு அத்திவாரமிட்டவராகவும் கொண்டாடப்படுகின்றார். ஒருவரால் எவ்வாறு உன்னதமான இலக்கியவாதியாகவும் மக்களால் கொண்டாடப்படும் படைப்பாளியாகவும் அமைய முடியும் என்பதற்கு லூ ஷூன் நல்ல எடுத்துக்காட்டாவார்.

—————————————————————–

லூ ஷூன்னின் படைப்புகள்:

நூல் முன்னுரைப் பகுதி:

இளவயதில் எனக்கு பல கனவுகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நினைவில் இல்லை. அதைப்பற்றி வருந்த எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த காலத்தை நினைவு கூர்வது உங்களை மகிழ்வூட்டலாமென்றாலும் சில சமயம் தனிமையான உணர்வையும் தரக் கூடும். கடந்துபோன தனிமையான நாட்களில் உணர்வொன்றிப் போவது பயனற்றது என்றாலும், என்னுடைய பிரச்சினை ஏதென்றால், என்னால் முற்றாக மறக்க முடியவில்லை என்பதுதான். இக்கதைகள் என் நினைவிலிருந்து அழிக்க இயலாதவற்றின் விளைவானவையே..

நான்காண்டுகட்கும் மேலாக நான் அநேகமாக நாள் தவறாமல் ஒரு அடமானக் கடைக்குப் போவேன். அப்போது எனக்கு என்ன வயதென்று நினைவில்லை. ஆனால் மருந்துக்கடையின் கவுண்டர் என்னுடைய உயரம், அடமானக்கடைக் கவுண்டர் என்னைப் போல இரண்டு மடங்கு உயரம். இரண்டு மடங்கு உயரமான கவுண்டரில் துணிகளையும், சிறிய நகைகளையும் கொடுத்து ஏளனத்துடன் தரப்படும் பணத்துடன் என்னளவு உயரமான கவுண்டருக்குப் போய் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த என் தகப்பனாருக்கான மருந்துகளை வாங்குவேன். வீடு திரும்பினால் எனக்கு அங்கே வேறு வேலைகள் காத்திருக்கும். ஏனென்றால் மருந்துகளைப் பரிந்துரைக்கிற வைத்தியர் பேர் பெற்றவர். அவர் சில வழக்கமான மருந்துகளைப் பாவிப்பார். குளிர் காலத்தில் பிடுங்கப்பட்ட சோற்றுக் கற்றாழை வேர், மூன்று ஆண்டுகளாக உறைபனிக்குட்பட்ட கரும்பு, இரட்டைச் சிள்வண்டு,… எல்லாமே பெறக் கடினமானவை. ஆனால் என் தகப்பனாரின் நோய் அவர் சாகும்வரை மோசமாகிக் கொண்டே போனது.

வாழ்ந்து கெட்டவர்கள், அதன் போக்கில், உலகம் உண்மையிலேயே எப்படியானது என விளங்கிக்கொள்ளக் கூடும் என நினைக்கிறேன்…

-”போரிட அழைப்பு” (a call to arms) என்ற நூலின் முன்னுரையின் தொடக்கப்பகுதி

——————

சிறுகதை: ஒரு நிகழ்வு

கிராமத்திலிருந்து நகரத்துக்கு நான் வந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. அக்காலத்தில் அரச அலுவல்கள் என்று சொல்லப்படுகிறவற்றைப் போதியளவுக்குக் கண்டும் கேட்டும் விட்டேன். அவற்றில் எதுவுமே என்னில் ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என் மீது அவற்றின் சூழ்வலி என்னவென்று கேட்டால் அவை என் முன்கோபத்தை மோசமாக்கின. மனந்திறந்து சொன்னால் அவை என்னை மேலும் மேலும் மனித வெறுப்புடையவனாக்கின.

எவ்வாறாயினும், ஒரு நிகழ்வு முக்கியமானதாக எனக்குப் பட்டது. அது என்னை என் முன் கோபத்திலிருந்து எழுப்பி விட்டது. இன்றும் கூட என்னால் அதை மறக்க இயலவில்லை.

அது 1917ம் ஆண்டின் குளிர்காலத்தில் நிகழ்ந்தது. கடுமையான வடபுலக் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும் என் வயிற்றுப் பிழைப்புக்கு நான் வேளைக்கே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. தெருவிலே ஒரு சீவராசியையும் காணவில்லை. என்னை வாயிலுக்கு கொண்டு செல்ல ஒரு ரிக்ஷாவை அமர்த்துவதற்குப் பெரும்பாடாகி விட்டது. தற்போதைக்கு காற்று சிறிது அடங்கி விட்டது. கட்டற்றுக் கிடந்த தூசி எல்லாம் ஊதி எறியப்பட்டு தெரு துப்புரவாயிருந்தது. ரிக்ஷாக்காரன் தனது ஓட்டத்தைத் துரிதப்படுத்தினான். நான் வாயிலை நெருங்கிக் கொண்டிருந்த வேளை, வீதியைக் கடந்து கொண்டிருந்த யாரோ எங்கள் வண்டியில் சிக்குண்டு மெல்ல விழுந்தார்.

அவர் ஒரு பெண். தலைமயிரில் வெள்ளைக் கீற்றுக்கள் இருந்தன. கந்தையான உடைகள் அணிந்திருந்தார். ஒரு எச்சரிப்பும் இல்லாமல் எங்களுக்குக் குறுக்காகத் தெருவைக் கடப்பதற்காக நடைபாதையிலிருந்து இறங்கி விட்டார். ரிக்ஷாக்காரன் வழி விலகியபோதும் அப்பெண்ணின் பொத்தான் கழன்ற கந்தலான வெளிச்சட்டை காற்றில் படபடத்து வண்டியின் கைத்தண்டில் மாட்டிக் கொண்டது. நல்ல வேளையாக ரிக்ஷாக்காரன் துரிதமாகவே வண்டியை நிறுத்தி விட்டான். இல்லாவிடின் அப்பெண் மோசமாக விழுந்து கடுமையாகக் காயப்பட்டிருப்பார்.

அப்பெண் தரையிலேயே கிடந்தார். ரிக்ஷாக்காரன் வண்டியை நிறுத்தினான். கிழவிக்குக் காயமேற்பட்டதாக நான் எண்ணவில்லை. நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லை. எனவே ரிக்ஷாக்காரனை வம்பில் மாட்டி என்னையும் தாமதப்படுத்தும் விதமான இக் கடமை மீறிய செயல் எனக்கு எரிச்சலூட்டியது.

”பரவாயில்லை, நீ போகலாம்” என்றேன்.

ரிக்ஷாக்காரன் அதைக் கருத்திற் கொள்ளவில்லை. ஒரு வேளை அது காதில் விழாமலிருந்திருக்கலாம். கைத் தண்டுகளைத் தரையில் அமர்த்தினான். கிழவியை மெதுவாக எழுப்பி விட்டான். அவளை ஒற்றைக் கையால் தாங்கியபடி ”உங்களுக்கு ஒன்றுமில்லையே?” என்று கேட்டான்.

”எனக்கு அடிபட்டு விட்டது”.

கிழவி எவ்வளவு மெல்ல விழுந்தாள் என்று கண்டேன். நிச்சயமாக அவளுக்குக் காயப்பட்டிருக்காது. அவள் பாவனை செய்கிறாள். அது எனக்கு வெறுப்பூட்டியது. ரிக்ஷாக்காரன் வலிந்து வம்பை வரவழைத்தான். இப்போது அனுபவிக்கிறான். இனி அதிலிருந்து தப்ப அவனே தான் வழி தேட வேண்டும்.

கிழவி தனக்கு காயப்பட்டதாகச் சொன்ன பின்பு ரிக்ஷாக்காரன் ஒரு கணமும் தயங்கவில்லை. கிழவியின் கரத்தைப் பற்றியவாறு மெல்ல மெல்ல அவள் முன்னால் செல்ல உதவினான். எனக்கு வியப்பாக இருந்தது. நேரே பார்த்த போது ஒரு காவல் நிலையம் தெரிந்தது. கடுமையான காற்றினால் அங்கே யாரும் வெளியில் நிற்கவில்லை. கிழவி காவல் நிலைய வாயிலை நோக்கிச் செல்ல ரிக்ஷாக்காரன் உதவினான்.

திடீரென எனக்குள் விநோதமான ஒரு உணர்வு. விலகிச் சென்று கொண்டிருந்த அவனுடைய உருவம் அக்கணத்தில் பெரிதாகத் தோன்றியது. அவன் தூர தூரச் செல்ல, நான் அவனை அண்ணாந்து பார்க்கும் வரை, அவன் மேலும் மேலும் பெரியவனாகத் தெரிந்தான். அதேவேளை அவன் என் மீது மெல்ல மெல்ல ஒரு அழுத்தத்தைச் செலுத்துவதாகத் தோன்றியது. அது நான் அணிந்திருந்த மயிர்த்தோல் வைத்துத் தைத்த மேலாடைக்குள் இருந்த சிறியவனான என்னை அடக்குவது போல மிரட்டியது.

என்னுடைய வீரியம் வடிந்தாற் போலிருந்தது. வெறுமையான மனத்துடன் ஒரு போலிஸ்காரன் வரும் வரை அசைவின்றி அமர்ந்திருந்தேன். பின்பு வண்டியிலிருந்து இறங்கினேன்..

போலிஸ்காரன் என்னிடம் வந்து ”வேறொரு ரிக்ஷாவை அமர்த்து. அவனால் உன்னை இதற்கு மேல் இழுத்துச் செல்ல முடியாது” என்றான்.

சிந்தனையின்றி என் மேற்சட்டைப் பையிலிருந்து ஒரு கையளவு செப்புக்காசுகளை எடுத்து போலிஸ்காரனிடம் கொடுத்தேன். ”இதை அவனிடம் கொடுங்கள்” என்றேன்.

காற்று முற்றாகவே அடங்கி விட்டது. ஆனாலும் தெருவில் யாருமே இல்லை. யோசித்தபடியே நடந்தேன். எனினும் சிந்தனையை என் மீது திருப்ப பயப்பட்டேன் எனலாம். முன்பு நடந்த அனைத்தையும் ஒரு புறம் வைப்போம். கையளவு செப்புக் காசுகளைக் கொடுத்ததற்கு என்ன பொருள்? அது ஒரு பரிசா? ரிக்ஷாக்காரனை மதிப்பிட நான் யார்? என்னால் மறுமொழி கூற இயலவில்லை.

இன்றும் அது என் மனதில் அந்த நிகழ்வு தெளிவாகவே உள்ளது. இது பலமுறை எனக்கு மனவேதனையை ஏற்படுத்தி என்னைப் பற்றிச் சிந்திக்க முயலுமாறு என்னைத் தூண்டியுள்ளது. அக்காலத்தின் ராணுவ அரசியல் விவகாரங்கள் சிறுவயதில் நான் கற்ற காவியங்களைப் போன்று எனக்கு அறவே மறந்து போய் விட்டன. எனினும் இந்த நிகழ்வு மட்டும், நிசமான வாழ்வை விட உயிரோட்டமாக என்னிடம் மீண்டும் மீண்டும் வந்து எனக்கு வெட்கத்தைக் கற்பித்துச் சீர்திருத்துமாறு தூண்டி எனக்குப் புதிய தைரியத்தையும், நம்பிக்கையையும் தருகிறது.

-1920 ஜூலை

——————————

(வசன கவிதை)

நாயின் பரிந்துரை

ஒடுங்கிய ஒழுங்கை வழியே என் உடைகள் கந்தையாக ஒரு பிச்சைக்காரன் போல நான் நடந்து செல்லக் கனாக் கண்டேன்.

நாயொன்று என் பின்னிருந்து குரைக்கத் தொடங்கியது.

ஏளனத்துடன் திரும்பிப் பார்த்து அதனிடம் கத்தினேன்:

‘அடீக்! பொத்து வாயை! எச்சில் நக்கி நாயே!”

அது தனக்குள் சிரித்தது.

”இல்லவே இல்லை!” என்றது. ”அவ் விடயத்தில் நான் மனிதருக்கு நிகரில்லை”.

பெரிதுஞ் சினங் கொண்டு ”என்ன!” என்றேன். அது அதி மோசமான அவமதிப்பாய்த் தெரிந்தது.

”செப்புக்கும் வெள்ளிக்கும் இடையே, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே, அதிகாரிகட்கும் சாமானியருக்கும் இடையே, எசமானர்கட்கும் அவர்தம் அடிமைகட்கும் இடையே… என்னால் வேறுபாடு காண இன்னமும் இயலவில்லை என்று சொல்லக் கூச்சப்படுகிறேன்”

நான் திரும்பி ஓடத் தொடங்கினேன்.

”கொஞ்சம் பொறு! நாம் இன்னமும் பேசலாம்…” என் பின்னாலிருந்து என்னை நிற்குமாறு அது என்னை வற்புறுத்தியது.

ஆனால் நான் நேராக, என்னால் இயன்றளவு வேகமாக, என் கனவிலிருந்து வெளியேறி எனது கட்டிலுக்கு மீளும் வரை ஓடிக் கொண்டிருந்தேன்.

-23 ஏப்ரல், 1925

——————————————————————–

-சி.சிவசேகரம்.

தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமரிசனம் குறித்த அவரது கட்டுரைகள், “விமரிசனங்கள்” என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. அவர் ஓய்வு பெற்ற பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய-லெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். வினவின் வாசகர்களுக்காக உலக முற்போக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார். கட்டுரை தொடர்பான உங்கள் ஆர்வங்களை அறியத்தாருங்கள். தோழர் சிவசேகரம் வினவில் பங்கேற்பதில் மகிழ்வடைகிறோம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  • நல்ல தொடர். வாழ்த்துக்கள்.ஒரு கதை ஒரு கவிதை என எடுத்துக்காட்டுக்களுடனான வடிவும் மிக சிற்ப்பாக இருக்கின்றது

  • டாக்டர் ஐயா உங்க தொடருக்கும் நாங்க வாழ்த்து சொல்ல ஆவலா கொதிபறக்க காத்துக் கிடக்கோம். எங்களையும் கொஞ்சம் கண்டுகிடுங்க.

 1. மன்னியுங்கள். பதிவுக்கு அப்பாற்பட்டு… ஒரு தகவல் :
  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ம.க.இ.க. மையக்குழு கலைநிகழ்ச்சியுடன், பொதுக்கூட்டம்.

  மாலை 6.00 மணி, அத்திப்பட்டு புது நகர், இரயில் நிலையம் அருகில் (சென்னை)
  தொடர்பு கொள்ள : 9444834519, 9444442374
  நிகழ்ச்சி துண்டறிக்கை அறிய :
  http://vrinternationalists.wordpress.com/2009/12/10/%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae/
  http://socratesjr2007.blogspot.com/2009/12/blog-post_10.html

 2. தோழர் சிவசேகரத்தின் கிண்டலும், கூர்மையும் கொண்ட இலக்கிய விமரிசனங்கள் முன்பு படித்த்துண்டு. இப்போ வினவில் அவர் உலக இலக்கியத்தை அறிமுகம் செய்வது உண்மையில் மகிழ்வாக இருக்கிறது. நன்றியும், வாழ்த்துக்களும்

   • அஆர்.வி அண்ணாச்சியை கையும்  களவுமாய் பிடித்த சூப்பர் ஸ்டார் தம்பி கேள்விக்குறி என்னயும் ஒரு ஆளா மதிச்சு, அதிலயும் அண்ணாச்சி மொழி நடையையும் மறக்காம கேட்டதுக்கு நன்றி. விவாத்த்துக்கு சம்பந்தமில்லாத மறுமொழிகளை அண்டார்டிகாவில போட்டுருவாகன்னு வினவுல இப்பதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. இலக்கியத்துக்கு எல்லயில்லைன்னு சொல்லுவாக, அந்த கணக்காய் வினவுக்காரவுக இத எடுக்கிடணும். தம்பி கேள்விக்குறி அண்ணாச்சி மொழியிலேயே எல்லா சரக்குகளையும் ஒட்ட பெரும்பாடா இருக்கு. அதான் மாறியிரலாம்னு முயற்சி பண்ணுதேன்

    • என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிபுட்டீங்க.. நேட்டிவிடி எஃபெக்டோட வர்ற உங்க மறுமொழிகள கவினிக்காம இருக்க முடியுங்களா? நீங்க சொல்றதும் சரிதான் தமிழ் சினிமாவுல மண்டல பாசைங்கள காமெடி ஆக்கிட்டாங்க அதனால ஊர் பாசையில சீரிசா எதுவும் சொல்ல முடியாதுங்கள நெலம.

 3. லூ சூனைப்பற்றிய எளிய, சிறப்பான அறிமுகத்திற்கு நன்றி. இலக்கியவாதிகளொடு பிரெக்ட் முதலான நாடக ஆளுமைகள், பால் ராப்சன் போன்ற இசை ஆளுமைகள், மற்றும் “தாய்” போன்ற தனிச்சிறப்பான நாவல்கள் இவர்களையும் இந்த தொடரில் சேர்த்துக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

 4. நல்ல துவக்கம்.. பொதுவில் தமிழ்ச்சூழலில் இலக்கியம் என்பது தன்மோகம், சக படைப்பாளியின் மேலான காழ்ப்பு, தனது உலகமே உலகம் என்ற
  கருத்தோட்டம் கொண்டவர்களால் நிரம்பியுள்ளது. மிகக் குறைவான பேர்களே மக்கள் இலக்கியம் படைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
  உலக இலக்கிய அறிமுகம் என்பதும் முந்தையவர்களால் உலகளவில் அதே தன்மையுடையவர்களை முன்நிறுத்தி தமது அல்பத்தனங்களை
  மேண்மையாக காட்டிக் கொள்வதற்காகவே இருந்து வருகிறது.

  இந்நிலையில் புரட்சிகர இலக்கிய அறிமுகம் மிகமிகத் தேவையானதாய் இருக்கிறது. அவ்வகையில் இம்முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
  தோழர் சிவசேகரத்தின் மற்றைய படைப்புகளையும் அறிமுகப்படுத்துவது இன்னமும் சிறப்பாக இருக்கும்.

  வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • மக்களிசையில் ஒரிரு வாரம் இடைவெளி விழுந்து விட்டது. மற்றபடி அதை தொடர்ந்து வெளியிடவே திட்டம். வெளியிடுகிறோம்.

 5. பின்னூட்டங்கட்கு மிக்க நன்றி.
  மிகவும் பரிச்சயமற்ற முக்கிய படைப்பாளிகள் சிலரை முதலில் அறிமுகம் செய்த பின்பு பிரெஹ்ட் போன்றவர்கட்குக் கவனமெடுக்க எண்ணம்.

 6. அய்யா இலக்கியம் இருக்கட்டும் முதலில் அடிப்படையை சொல்லிக்கொடுங்கள் கம்னிஸியம் என்றால் என்ன? மவோ யார்? மூலதானம் என்றால் என்ன? இதுபோன்று ஒன்றுமே தெரியாத என்னை போன்றவர்களுக்கு அது சம்சந்தமான புத்தங்களை இந்த இனையதளத்தில் வேளியிட்டல் நன்றாக இருக்கும் நானும் ஒவ்வோரு கம்னிச தளமாக தேடிப்பார்க்கிறோன் கிடைக்கவில்லை எந்த இஸ்லாமிய இனையதளத்திற்கு சென்றாலும் அவர்களின் அடிப்படையான குர்அன் மற்றும் அடிப்படை புத்தங்கள் கிடைக்கும் அதுபோன்று நிங்களும் அதுபோன்ற புத்தங்களை வைக்கலாம் இலக்கியம் சில படித்தரங்களுக்கு மேல் சென்றப்பிறகு தேவைப்படுபவை

 7. சமூக நெருக்கடியும், போராட்டங்களும் உள்ள சமகாலங்களில், புரட்சிகர இலக்கியம் குறித்த அறிமுகம் மிக அவசியமானது.

  வினவில் தொடர் எழுத துவங்கியவர்கள், சிலர் தொடரமாலே போயிருக்கிறார்கள். தோழர் சிவசேகரம் தொடர்ச்சியாய் எழுத வேண்டும்.

 8. தலத்தியம்,பெண்ணியம்,மார்க்சியத்தின் போதாமை போன்ற உள்றல்களுக்கெல்லாம் பொட்டில் அறைந்தது போல் பதிலடி கொடுக்கும் தோழர் சிவசேகரம் வினவில் வந்தமைக்கு மகிழ்ச்சி. சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்க முன் வந்தால் இன்னும் மகிழ்வோம். நன்றி. குருசாமிமயில்வாகனன்.

 9. அற்புதமான தொடர், அன்பிற்கும் நட்புக்குமுரிய பேராசிரியர் சி.சிவசேகரத்தின் இத்தொடரை வாசிக்கத் துடிக்கும் எல்லோரையும் போலவே நானும், ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

 10. மிகவும் புரிதலுக்கு உட்பட்ட எழுத்து நடை. அதன் சாரமும் நடையின் எளிதான போக்கும் நம்மை மகிழ்ச்சின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
  நன்றி

  தோழன் மபா

 11. நல்ல முயற்சி. லூசூனை பற்றிய அறிமுகம் நன்று. எனினும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சிறுகதையும், வசன கவிதையும் சிறப்பானவையாகத் தோன்றவில்லை.

 12. தோழர் சிவசேகரத்தின் நேர்காணலை பு.ஜ. வில் படித்தேன்.மார்க்சிய‍‍‍‍‍‍/லெனினிய ஒளியில் ஆழ்ந்த அக்கறையோடு ஈழ‌ம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இவரின் அறிமுகம் கூட தாமதமானது, எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் முக்கியமானது.வினவில் தொடர்ந்து தோழ‌ரின் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

 13. இளைய தலைமுறைக்கு முற்போக்கு புரட்சிகர இலக்கிய‌த்தை அறிமுகம் செய்யும் சிறந்த முயற்சி. கம்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு புரட்சி பேசும் பேர்வழிகளை சட்டை செய்ய வேண்டாம், வெளிநாடுகளுக்கு போய்விட பல வாய்ப்புகளிருந்தும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக்கட்சியுடன் இனைந்து நிற்கும் தோழர் சேகரத்திற்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  தோழமையுடன்
  சூப்பர்லிங்ஸ்

  • தயவு செய்து தனிப்பட்ட மோதல்கட்குப் போவதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவர் சிறு பிள்ளைத்தனமாக எதையோ இட்டார். அது இப்போது நீக்கப்பட்டு விட்டது. பிரச்னையை அங்கேயே விடுவது பயனுள்ளது.

 14. அய்யா, நான் தங்கள் வலைக்குப் புதியவன். சமீபத்தில் சதுரகிரி மலை சென்று வந்தேன். (இதழாளன் என்ற முறயில்.)

  அங்கு, பக்தி என்ற பெயரில் ஒரு அற்புதமான காட்டடையும், காட்டு விலங்ககுகளளையயுமம் வன்புணர்ச்சி செய்து வருகிறார்கள். பக்திமான்கள். இது பற்றி வினவுக்கு எழுதலாமா? எப்படி எழுதுவது?

Leave a Reply to கார்க்கி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க