privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!

அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!

-

ஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.ஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது.   நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசலாம், ஆனால், ஈராக்கின் எண்ணை வயல்களை எப்படி உறிஞ்ச முடியும்?

ஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்?  பீதியுடன் கால் பதித்த அமெரிக்கா, துரோகிகளின் பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த ஈராக் மக்களின் சுதந்திர வேட்கை போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா.  ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த நகரம் அது.  இங்கே தண்டகாரன்யா காட்டு வேட்டையில் ஆதிவாசிப் பள்ளிகளை இராணுவ முகாம்களாக மாற்றுவதுபோல இந்திய அடிவருடிகளின் எஜமானர்களான அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்றத் தலைப்பட்டது. இருநூறுக்கும் மேலான மக்கள் உடனடியாகக் கூடி  இந்த முயற்சியை முறியடிக்கப் போராடினர்.  அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாறுமாறான துப்பாக்கி சூடு நட்த்தி 17 பேரைக் கொலை செய்தது.  அடுத்த இரண்டாவது நாளில் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது மீண்டும் அமெரிக்க சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் மாண்டனர்.

இச்செயல் பரந்துபட்ட மக்களின் கோபாவேசத்தை மூண்டெழச் செய்தது. ஃபலூஜா அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தின் மையமானது.  கொடூரமான போர்க் குற்றங்கள் பல செய்திருந்த ’ப்ளாக்வாட்டர் யூ.எஸ்.ஏ’ என்ற தனியார் கூலிப்படையின் அணி வரிசையை மார்ச் 31, 2004 அன்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தியது. ப்ளாக்வாட்டர் கூலிப்படையினர் நால்வர் வாகனத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு அடித்து, எரித்து யூப்ரடீஸ் நதியின் பாலத்தில் தொங்கவிடப்பட்டனர். இது கண்ட தொன்மைச் சிறப்பு மிக்க யூப்ரடீஸ் நதி தான் ஊட்டி வளர்த்த நாகரீகம் மீண்டும் தழைக்கும் என்ற புது நம்பிக்கையில் மகிழ்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

அபரிமிதமான அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்துக்கு எதிராக ஃபலூஜா மக்கள் நடத்திய நெஞ்சுரம் மிக்க போராட்டங்களும், அடைந்த வெற்றிகளும் நாடெங்கிலும் மக்களால் கொண்டாடப்பட்டது, உலகத்தார் கவனத்தை எல்லாம் ஃபலூஜா தம் பக்கம் ஈர்த்துக் குவித்தது.  அமெரிக்க ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

வெறிகொண்ட அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் நவம்பர், 2004-ல் அதற்கு எதிர்வினை ஆற்றியது. ஃபலூஜா சுற்றி வளைக்கப்பட்டது.  உள்ளிருப்போர் அனைவரும் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நகரம் படுபயங்கரமான ஆயுதங்கள் தரித்த ஈவிரக்கமற்ற ஏராளமான இராணுவத்தினரின் விளையாட்டுக் களம் ஆக்கப்பட்டது.  தப்பி ஓட முயன்ற மக்கள் குடும்பத்துடன் மீண்டும் அந்த கொலைக் களத்தில் பிடித்துத் தள்ளப்பட்டனர் என்று எழுதியது அசோசியேடட் பிரஸ்.

பேரழிவு இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் புளுகிக்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை மிகப் பெரும் அளவில் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியது. போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில் மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.

மக்கள் பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது.  இத்தோடு நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத் தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தால் உயிருடன் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் (1300-1500 பேர்) அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இதையே வேறு சொற்களில், “ஆயுதப் போராளிகள்” 1400 பேர் கொல்லப்பட்டனர் என்ற தனது அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியது அமெரிக்கா.  ஃபலூஜா மக்களைப் பழிவாங்கும் தனது நோக்கத்தை இந்த செயலின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டது. படுகாயமுற்றுப் பரிதாப நிலையில் இருந்த ஒரு ஈராக்கியரை அமெரிக்க சிப்பாய் ஒருவன் சுட்டுக் கொல்வதைப் NBC செய்தி படம் பிடித்திருந்தது. தனது பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதே இந்த செயல் என அமெரிக்க இராணுவ விசாரணை பின்னாளில் கண்டறிந்து கூறியது. சுய மரியாதையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மனிதன் உயிருடன் இருக்கும் வரை தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்ல ஒரு விசாரணை எதற்கு?

பத்து நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் 51 அமெரிக்க சிப்பாய்கள் இறந்தனர்.  நகரத்து மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.  இத் தாக்குதலுக்கு முன்னதாக பல பத்தாயிரம் மக்கள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் நகரத்தை விட்டு வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு முந்திய ஃபலூஜாவின் மக்கள் தொகை 4 ¼ –  6 லட்சம்.  தற்போதைய ஜனத்தொகையோ வெறும் 2 ½  –  3 லட்சம் மட்டுமே இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இத் தாக்குதலில் நகரத்தின் கட்டிடங்கள் பாதிக்கு மேல் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன.  ஈராக்கின் பல பகுதிகளைப் போலவே ஃபலூஜாவும் இடிபாடுகளுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.  கழிவு நீர் வெளியேற்ற வழிகள் செயல்படவில்லை, குப்பைகள் தெருக்களில் மலையாய்க் குவிகின்றன.  குடிநீர் வினியோகம் மாசுபட்டு இருக்கிறது.  டி.பி., டைஃபாய்ட், கழிச்சல் நோய்களுக்கு ஏராளமான மக்கள் ஆளாகின்றனர். தாக்குதல் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இதுதான் நிலை. இதுவும் ஒரு தாக்குதல் தானே.  இந்த நிலைமையை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அனுவலகத்தின் IRIN –ன் சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது

ஃபலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக் காட்டிலும் படுமோசமாக உள்ளது

”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.

அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.

RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.

அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.

பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.  மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….

“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன.  அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன.  அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…

“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன.  அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.

பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது.  ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது.  “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை?  ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.

ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.

அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people…. You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.

இரண்டாம் உலக யுத்தம் முடிவுபெறும் தருவாயில், 1945 ஆகஸ்ட், 6-8 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி, யுத்தத்தின் ஊற்றுக்கண் வற்றிவிடவில்லை; ஹிட்லர் இடம் பெயர்ந்திருக்கிறான், இறந்துவிடவில்லை என்று உலகுக்கு அறிவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அன்று தொட்டு இன்று வரை மனித குலத்தைக் குதறியெடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அடிவருடிகளின் அட்டூழியங்கள் இப் புவிப்பரப்பையே அழித்தொழிக்கும்வரை நாம் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறோமா?

______________________________________________________________

கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010

– அனாமதேயன்
________________________________________________________

  1. அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!…

    ஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே….

  2. நாட்டாமை அப்படியே திபெத்திலும் உங்க செங்கொடி பங்காளிகள் நிகழ்த்தும் கொடுமைகளையும் உங்க மரத்தடி நீதிமன்றத்தில் எடுத்து உங்க தீர்ப்ப கூறுங்களேன்.

  3. ஆனாலும் எப்படி கணக்கு போட்டாலும் ஸ்டாலின் போன்ற மனிதநேயம் மிக்கவர்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையில் கால்வாசி கூட வராது போலிருக்குதே!

    • //தமிழன்
      ஆனாலும் எப்படி கணக்கு போட்டாலும் ஸ்டாலின் போன்ற மனிதநேயம் மிக்கவர்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையில் கால்வாசி கூட வராது போலிருக்குதே//

      ஆக, இதுவரை கொன்னதைப்போல இன்னும் மூனு மடங்கு அதிகமான அப்பாவி மக்களை அமெரிக்கா கொன்னாதான் உங்க மனசு ஆறும் இல்லையா?
      உங்க மனிதாபிமானத்தை நினைக்கும்போது அப்படியே ………………………………………
      அருமையான புனைப்பேரு’ தமிழன்’.
      புல்லரிக்குது.

      • here the question is why u not blame stalin, even though you people knows very well stalin killed more than 2 crores of people,
        if America did mistake immediatly you condemn and warning the same thing why you not show your condemn against russia,

        • இந்த புனித பாரத தேசத்தில் முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரிக்கவும் அவர்களுக்கு எதிரான அநீதிகளை ஆதரித்து எழுதவும் 1000 பத்திரிக்கைகள் இருக்கின்றன..

          உங்களைப்போன்ற புல்லுருவிகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தமிழன் என்ற புனைப்ப்பெயரில் இருக்கும் மனிதன் போல நிறைய பேர் இருக்கிறார்கள் அந்த பாராட்டில் புழங்ககிதம் அடைந்து கொண்டிருக்குரீரா?

          இராக்கில் கொல்லப்படும் அப்பாவி மக்களைப் பற்றி வினவின் பதிவிருக்கு முன்பு எங்காவது கேள்விப்படீர்களா … இல்லை அதை படித்த பின்பு அந்த கொடுமையை நினைத்து மனம் துடித்தீர்களா ?…

          உம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து வாயை மூடிக்கொண்டவது இரும்.

          இது போன்ற அநீதியை தட்டி கேட்கும் வினவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

          Raja

  4. ஹுசைன் அவர்களுக்கு

    இந்த புனித பாரத தேசத்தில் முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரிக்கவும் அவர்களுக்கு எதிரான அநீதிகளை ஆதரித்து எழுதவும் 1000 பத்திரிக்கைகள் இருக்கின்றன..

    உங்களைப்போன்ற புல்லுருவிகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தமிழன் என்ற புனைப்ப்பெயரில் இருக்கும் மனிதன் போல நிறைய பேர் இருக்கிறார்கள் அந்த பாராட்டில் புழங்ககிதம் அடைந்து கொண்டிருக்குரீரா?

    இராக்கில் கொல்லப்படும் அப்பாவி மக்களைப் பற்றி வினவின் பதிவிருக்கு முன்பு எங்காவது கேள்விப்படீர்களா … இல்லை அதை படித்த பின்பு அந்த கொடுமையை நினைத்து மனம் துடித்தீர்களா ?…

    உம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து வாயை மூடிக்கொண்டவது இரும்.

    இது போன்ற அநீதியை தட்டி கேட்கும் வினவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    Raja

  5. when america attacks iraq i was in kuwait, daily we are watching the news, we are very sad about this incident, and we did lot of condems against america and its coialation forces,
    my question is why vinavu website is blindly supporting stalin and lenin, they also not a good leader, you must right about stalin black face also then only vinavu is honest website.

Leave a Reply to Tweets that mention அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!! | வினவு! -- Topsy.com பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க