privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விமக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?

மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?

-

கேள்வி : மக்களைக் கண்காணிக்காமல் அரசு ஒன்றினைக் கட்டிக்காக்க முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எந்த நோக்கத்தோடும் உருவாக்கப்படும் அரசொன்றுக்கு எதிரிகளும் அவ்வரசுக்கெதிரான சூழ்ச்சிகளும் இருந்தபடிதான் இருக்கும். அவ்வாறான நிலையில் மக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்காமல் அரசொன்று தன்னை எவ்வாறு நிலை நிறுத்திக்கொள்வது? அரசும் கண்காணிப்பும் ஒரு நாணயத்தின் பிரிக்க முடியாத இரு பக்கங்களா?

சொந்த மக்களை உளவு பார்க்காத அரசொன்றினை எவ்வாறு உருவாக்குவது?

அரசு என்ற ஒன்றையே இல்லாதொழிப்பதன் மூலம்தான் கண்காணிப்பினை இல்லாதொழிக்கலாமா?

வினவின் விளக்கமான பதிலினை எதிர்பார்க்கிறேன்.

என்று ஸ்னோடன் கட்டுரை ஒன்றில் தோழரொருவர் கேட்டிருந்தார்.

அரசு, மக்கள் இரண்டையும் குறித்து முதலாளித்துவ அறிவுலகில் வைக்கப்படும் பொருள் மயக்கத்திலேயே பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றனர். ஒரு பொதுவான பொருளில் இவ்விரண்டையும் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை குறித்த குறிப்பான விளக்கத்தை ஆய்வு செய்யும் போது பாரிய அளவில் வேறுபடுகின்றன. அரசு என்றால் என்ன என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளும் போது மக்கள் மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளுக்கான பதிலையும் கண்டுபிடிக்கலாம்.

அரசு எனும் ஆட்சி செய்யும் உறுப்பு, ஒரு நாட்டில் நடுநிலையாக மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்று முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லும் பொருளே தவறு. அது தவறு என்பதோடு குறிப்பான பொருளை மறைப்பதற்காக வேண்டுமென்றே முன்வைக்கப்படுகிறது. அரசு என்பது எப்போதும் நடுநிலையான ஒன்றல்ல. அது ஒரு தரப்பினுடையதாகவே இருக்கும். சோசலிச அரசாகவே இருந்தாலும் இதுதான் உண்மை. ஆனால் பெரும்பாலான மக்கள் அரசு என்றால் நடுநிலையான ஒன்று என்றுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசு ஏன் நடுநிலையாக இருக்க முடியாது அல்லது இருக்கவில்லை? அதற்கு அரசு ஏன் தோன்றியது என்பதிலிருந்து பார்க்கலாம்.

புராதன பொதுவுடைமை சமூகம்
அரசு இல்லாத புராதன பொதுவுடைமை சமூகம்

புராதான பொதுவுடைமை அல்லது கானகங்களில் மக்கள் திரிந்த போது எளிமையாக கிடைத்ததை கூட்டு வாழ்க்கையாக உண்டு வாழ்ந்த காலங்களில் சமூகத்தில் வர்க்கப் பிரிவினை இல்லை. சொத்துடைமை வைத்து இருப்போர், இல்லாதோர் என்ற முரண்பாடு அப்போது இல்லை. பின்னர் சமூகங்கள் சொத்துடைமையை வைத்து வேறுபட்ட வர்க்கங்களாக பிரிய ஆரம்பித்தன. சரியாகச் சொன்னால் பிரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் அந்த சொத்துடைமை என்பது, யார் அதிகம் அடிமைகளை வைத்திருக்கிறார்கள் என்றும், பின்னர் யார் அதிகம் நிலத்தை வைத்திருக்கிறார்களெனவும் இருந்தன. தற்போது செல்வத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிலம், எரிபொருள், கட்டிடங்கள், ஆலைகள், தொழிலாளிகள், நிபுணர்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம் என்பதை வைத்து சொத்துடைமை தீர்மானிக்கப்படுகின்றது.

உடைமை வர்க்கங்களாகவும், உடைமையற்ற வர்க்கங்களாகவும் மனித சமூகம் பிரிந்ததோடு கூடவே வர்க்கப் போராட்டமும் ஆரம்பித்து விட்டது. மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும் இந்த முரண்பாடே தீர்மானிக்கின்றது. இந்த முரண்பாட்டில்தான் உடைமை வர்க்கங்களின் பிரதிநிதியாக அரசு தோன்றுகிறது. ஆரம்பத்தில் அரசனாகவும், இன்றைக்கு முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அரசாகவும் இருந்தாலும் உடைமை வர்க்கங்களின் பிரதிநிதி எனும் அடிப்படையில் இரண்டு அரசுகளும் ஒன்றே.

ஆனால் ஆரம்ப கால அரசர்கள் போல இன்றைய அரசுகள் தாங்கள் இன்ன கூட்டத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக அனைவருக்கும் பிரதிநிதி என்றும், அனைவரையும் அரசியல் சட்டப்படி நடத்தும் நடுநிலையான எந்திரம் என்பதாகவும் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்த அரசர்கள், இன்றைக்கு இருக்கிற சில சர்வாதிகாரிகள் தவிர நடப்புலகில் நிலவும் பாராளுமன்ற அரசு நடுநிலையாகத்தானே செயல்படுகிறது என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம்.

அமெரிக்க ஜனநாயகம்
சொத்துடைமையாளர்களின் ஜனநாயகம்

எல்ல நாட்டு ஜனநாயக அரசுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. அதன்படி பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, பயண உரிமை, வாக்களிக்கும் உரிமை இவற்றினையெல்லாம் பார்த்தால் அரசு என்பது அனைவருக்குமான பிரதிநிதி என்பதாகத் தோன்றலாம். ஆனால் இந்த அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான உரிமையை பலரும் பார்ப்பதில்லை. அதுதான் சொத்துரிமை. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை, சொத்துக்களை அதிகரிக்கும் உரிமை, சொத்துக்களை பாதுகாக்கும் உரிமை என்பதாகவும் இதை விளங்கிக் கொள்ளலாம். ஆக இந்த உரிமைக்கு கட்டுப்பட்டுத்தான் மற்ற உரிமைகளுக்கு அனுமதி தரப்படும். இவற்றினை கேள்வி கேட்கும் நிலை வந்தால் மற்ற உரிமைகள் மறுக்கப்படும்.

போலி ஜனநாயகம் நிலவும் இந்தியாவிலோ, இல்லை முதலாளித்துவ ஜனநாயகம் உலவும் அமெரிக்காவிலோ இருக்கும் அரசுகள் முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன, பேசுகின்றன, போர் புரிகின்றன என்பதை அனைவரும் அறிவர் என்பதால் இங்கே எடுத்துக்காட்டுகளை பட்டியலிடவில்லை.

எனவே அரசு (State) என்பது சொத்துடைமை கொண்ட ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு சொத்துடைமை இல்லாத வர்க்கங்களை ஒடுக்குவதற்காக செயல்படுகிறது. அந்த வகையில் அரசு என்பது ஆயுதம், சிறை, இராணுவம், நிர்வாக எந்திரம், பாராளுமன்றம், நீதிமன்றம் முதலியவற்றைக் கொண்டு அந்த ஒடுக்குமுறையை செய்கிறது. அரசின் பல்வேறு உறுப்புகளில் ஒன்றுதான் அரசாங்கம் (Government). மக்களால் தேர்வு செய்யப்படும் பாராளுமன்றம், அதிபர், பிரதமர், அமைச்சரவையைத்தான் அரசாங்கம் என்கிறோம். ஒரு நாட்டில் அரசாங்கம் இல்லையென்றாலும் அரசு இருக்கும். சான்றாக தமிழகத்தில் கவர்னர் ஆட்சி இருக்கும் போதும், பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் காலங்களிலும் கூட அரசு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். எனினும் பலரும் அரசு, அரசாங்கம் இரண்டையும் சேர்த்து ஒரு பொருளில் பயன்படுத்துகிறார்கள்.

ஆளும் வர்க்கங்கள் சார்பாக செயல்படும் அரசின் முக்கியமான நோக்கமே ஆளப்படும் வர்க்கங்களை ஒடுக்குவதுதான். அந்த வகையில் பெரும்பான்மை மக்கள் இந்த அரசுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல கண்காணிப்பிலும் இருப்பார்கள் என்பது இயல்பானது. அந்த வகையில் முதலாளித்துவ அரசுகள் அந்த நாட்டு மக்களையும் பிறநாட்டு மக்களையும் ஒட்டுகேட்கிறது என்றால் அதில் ஆச்சரியம் தேவையில்லை. எண்ணிக்கையில் உடைமை வர்க்கங்களின் மனிதர்கள் சிறுபான்மையாக இருப்பதால் முதலாளித்துவ அரசுகளைப் பொறுத்தவரை கட்டுப்பாடும் கண்காணிப்பும் கடுமையாக இருக்கும்.

முதலாளித்துவ ஜனநாயகம்
ஜனநாயகத்தில் வாக்காளர்தான் மன்னர். (அவர் எத்தனை கோடி கொடுத்து ஏலம் எடுக்கிறார் என்பதைப் பொறுத்து)

ஏனெனில் பெரும்பான்மை மக்கள் ஆளும் வர்க்கங்கள் மீதான எதிர்ப்பு கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இதற்கு உரிய போராட்டங்கள் நடக்கவில்லை என்றால் இந்த முரண்பாடு மங்கிய நிலையில் இருக்கிறது என்று பொருள். அல்லது வர்க்கப் போராட்டங்கள் கூர்மையாகும் யதார்த்த நிலைமை இன்னும் கனியவில்லை என்றும் சொல்லலாம். ஆனால் இந்த அமைதி ஒப்பீட்டளவில் கொஞ்ச காலத்திற்குத்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பை விட மேற்குலகில் தற்போது அரசெதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம் முதலாளித்துவ அமைப்பில் வர்க்க முரண்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது என்பதே.

ஆகவே அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இல்லை இந்தியாவின் அரசுகளோ தமது சொந்த நாட்டு மக்களை கண்காணிக்கும் தேவை முன்னெப்பொழுதை விடவும் அதிகரித்திருக்கிறது. முதலாளிகளின் பிரதிநிதியாக ஆளும் மேற்குலக அரசுகளோ இவர்களின் தரகு முதலாளிகள் ஆளும் ஏழை நாடுகளின் அரசுகளோ தத்தமது வர்க்க இயல்பின், தேவையின் காரணமாக பெரும்பான்மை மக்களை கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட உண்மைகளை விடுத்து இதை வெறுமனே தனிநபர் சுதந்திரம் என்று பேசுவது திசை பொருளற்றது.

முதலாளித்துவ அரசுகள் இருக்கும் நாட்டில் ஒரு தனி முதலாளியின் சொத்து சுதந்திரமே முக்கியமானது. அதற்கு உட்பட்டே குடிமக்களின் ஏனைய சுதந்திரம் இருக்கும். இல்லை, அமெரிக்க குடிமக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது என்று சொல்வோர் அரசு குறித்த முதலாளித்துவ மயக்கங்களில் மூழ்கிக்கிடப்போரே.

சாரமாகச் சொன்னால் அரசு எந்திரத்தின் பணியே ஒடுக்குமுறை எனும் போது மக்களைக் கண்காணிப்பதெல்லாம் ஒரு விசயமே அல்ல.

சரி, சோசலிச நாடுகளில் இத்தகைய கண்காணிப்பு இருக்குமா?

இதற்கும் அரசு குறித்த விளக்கமே பதிலளிக்கிறது. சோசலிச அமைப்பில் பெரும்பான்மை மக்கள் ஆளும் வர்க்கமாக அமைகிறார்கள். முதலாளித்துவ வர்க்கம் மட்டும் ஆளப்படும் வர்க்கமாக இருக்கும். அந்த வகையில் சோசலிச அரசில்தான் பெரும்பான்மை மக்களுக்கு முற்றிலும் முழுமையான சுதந்திரம் கிடைக்கிறது. முதலாளிகளுக்கு அந்த சுதந்திரம் இருக்காது அல்லது கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

சோசலிச அரசு
பெரும்பான்மை மக்களின் அரசு ரகசியமாக கண்காணிக்க தேவையில்லை.

அடுத்தது சோசலிச அரசில் மட்டும்தான் பெரும்பான்மை மக்கள் அரசு எந்திரத்தில் நுழைகிறார்கள். ஒரு பாட்டாளி வர்க்க அரசு உண்மையில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதன் அரசு பாட்டாளி மயமாக மாற வேண்டும். உழைக்கும் மக்கள் அரசின் உள்ளே வந்து சேரும் போது அந்த அரசு உண்மையிலேயே மக்கள் அரசாக செயல்படுகிறது. ஒருவேளை இதில் தோல்வி அடைந்தால் அந்த சோசலிச அரசு தூக்கி ஏறியப்படும். அந்த இடத்தில் முதலாளிகள் வந்து அமர்ந்து கொள்வார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் சோசலிச அரசின் கண்காணிப்பு எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். சோசலிச அரசில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் முதலாளித்துவ வர்க்கங்கள்தான். ஆனால் அந்த கண்காணிப்பிற்காக சதித்தனமான வேலைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. அதாவது முதலாளிகளின் சதித்திட்டத்தை ஒரு சோசலிச அரசு முறியடிக்க வேண்டுமென்றால் அதன் அரசு மக்கள் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும். நாடெங்கும் உள்ள மக்களின் கண்காணிப்பில் சோசலிச அரசு இருக்கும் போது முதலாளிகளின் சதித்திட்டங்களை முறியடிப்பது சுலபம். அதே நேரம் அந்த சோசலிச அரசு மக்களின் கண்காணிப்பு, பங்களிப்பில் இல்லை என்றால் முதலாளித்துவ வர்க்கங்களை முறியடிக்க முடியாது.

எனவே கண்காணிப்பின் நோக்கம் எந்த வழியில் சுலபமாக தீர்க்கப்படுகிறது என்பதை வைத்தும் இதைப் புரிந்து கொள்ளலாம். சீனாவில் மாவோவின் காலத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட் பீரோ வரையிலும் முதலாளித்துவத்தை ஆதரிக்கும் நவீன திரிபுவாதிகள் ஊடுருவினார்கள். இந்த சதியை மாவோ மக்களிடையேயும், அணிகளிடையேயும் கொண்டு சென்றார். லியோ ஷோசி, டெங்சியோ பிங் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்களெல்லாம் மக்கள், அணிகளால் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கையை சந்தித்தார்கள். இங்கே அவர்களது படுக்கையறையில் காமராவோ, செல்பேசி ஒட்டுக் கேட்போ தேவைப்படவில்லை என்பதை புரிந்து கொண்டால் சோசலிச அரசில் கண்காணிப்பு தேவையில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ அரசில் முதலாளிகளின் சொத்துரிமையை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்கள் மட்டுமல்ல முதலாளிகள் கூட கண்காணிக்கப்படலாம். ஏனெனில் முதலாளிகளின் சொத்துரிமையை விட தனிநபர் சுதந்திரம் முக்கியமானதல்ல. அல்லது முதலாளிகள் தமது வங்கி லாக்கர்களைத்தான் பாதுக்க விரும்புகிறார்களே அன்றி படுக்கை அறையின் பிரைவசியை அல்ல.

சோசலிச அரசில் பெரும்பான்மை மக்களுடைய அரசில் சொந்த மக்களை உளவு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதோடு அந்த மக்கள் ஆதரவு இருக்கும் வரையிலும் முதலாளித்துவ வர்க்கங்களை கண்காணிப்பதை வெளிப்படையாகவே செய்ய முடியும். திருட்டுத்தனம் எதுவும் தேவையில்லை.

வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் முடியும் வரை, கம்யூனிசம் அதைச் சாத்தியமாக்கும் வரையிலும் அரசுகள் என்பன இப்படித்தான் இருக்கும்.