privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பால் பாக்கெட் !

-

ந்த வருச கோடைக்கு எங்க கிராமத்துக்குப் போயிருந்தேன். வீட்டுல புளிக்கொழம்பு வச்சுருந்தாங்க. வெய்யுலு வேற எரிஞ்சுக் கெடக்கு புளிக்கொழம்ப நெனச்சாலே வயிரு பகபகன்னுச்சு. சாப்புட புடிக்காம ஒக்காந்திருந்தேன். அதப்பாத்த எங்கப்பா இரு வாரேன்னு சொல்லிட்டு போனவரு, கையில லோட்டாவோட வந்தாரு “வாம்மா, பசுமாட்டு தயிரு வாங்கிட்டு வந்துருக்கேன் சாப்புடு” அப்புடின்னாரு.

“பசும்பால் தயிரா? சாப்புட்டு எவ்வளவு நாளாயிடுச்சு, பசும்பால் தயிருல இருக்குற மணமே ஒரு புடி அதிகமா சாப்புட வைக்குமே. எங்கப்பா கெடச்சுச்சு தயிரு ஒங்களுக்கு” அப்டின்னேன்.

பசுவின் பால்’பெரியப்பா வீட்டுல சீமமாடு கண்ணுப் போட்டுருக்கு, பெரியம்மா குடுத்துச்சு, வாங்கிட்டு வந்தேன். மாடே அவங்கள்தான்னு இருந்தாலும் தொடந்து சாப்புட முடியாது. ஆசைக்கி நாளுநாளைக்கி கறந்து குடிச்சுக்க வேண்டியதுதான். டிப்போவுக்குக் பாலு குடுக்க ஆரம்பிச்சுட்டா, அப்பறம் அவங்களும் பாலுக்கு டிப்போக்காரங்கிட்ட பாத்தரத்த ஏந்திகிட்டு நிக்க வேண்டியதுதான்.’’ அப்டின்னார்.

உண்மைதாங்க, பசுமாட்டு தயிருன்னு குறிச்சு சொல்லிக்கிற அளவுக்கு அபூர்வமானதா இருக்குங்றதுதான் நெசம். கிராமத்துல பசும்பாலு, தயிரு, கெடைக்கிறதுங்கறதே அதிசயமாவும், ஆச்சர்யமாவும் சொல்லிக்கிற நெலம இருக்குங்கறத நெனச்சா வருத்தமாதான் இருக்கு.

நம்ம வீட்டுல பால் இல்லன்னா பக்கத்து வீட்டுலதான் பால் வாங்குவாங்க. ஆனா இப்ப பால் வேணுன்னாலே மளிகைக் கடைக்குதான் போக வேண்டியிருக்கு. கோமாதா, ஆரோக்கியா, கவின், திருமலான்னு பாக்கெட் பால்தான் விக்கிறாங்க அதுவும் நூத்தி இருபது நாள் கெடாத பாலுன்னு சொல்லி, அழுத்தமான சீட்டுல அடச்சுருக்குற பாலக் குடுக்குறாங்க.

பரம்பர பரம்பரையா வீட்டுல மாடு வளத்தவங்க, மண்ணு பாணையில பாலக் காச்சனும். ராட்டி (வறட்டி) எரியப் போட்டுதான் பால காச்சனுமுன்னு பக்குவத்தோட பசும்பாலக் காச்சி, பாலுன்னு, மோருன்னு குடிச்ச வெவசாய கிராமத்த, பால்னாலே நூத்தி இருவது நாள் பாக்கெட்ப் பால்தாங்கறக் கட்டாயத்துக்குக் கொண்டு வந்துட்டாங்க.

கிராமத்துல வீட்டுக்கு வீடு நாட்டு பசு இருக்குமுங்க, அதுக்குன்னு தனியா எந்த வேலையும் பாக்க தேவையில்ல. நம்ம வயவேலைக்கிப் போறப்ப மாட்டையும் ஓட்டிக்கிட்டு போயி தரிசு காட்டுல விட்டுட்டு, வயவரப்புல புல்லருக்கலாம், களையெடுக்கலாம், மருந்தடிக்கலாம், வரும் போது ஒரு கட்டு புல்லும் கொண்டுட்டு வந்துரலாம். வேலைக்கு வேலையும் ஆச்சு மாடும் மேச்சா மாதிரி ஆச்சு.

பால் பாக்கெட்
தனியாரு பால் கம்பனிக்காரன் கிராமத்துல டிப்போ தொறக்க ஆரம்பிச்சான்

வய்க்கெ(வைக்கோல்), பயிறு, கடல, சோளம், கம்பு, வரகு இதோட கொலறு(கழிவு), தவுடு, புண்ணாக்கு, கழனி, கஞ்சின்னு வெவசாயம் பண்ணுனதுல, நல்லது மனுசனுக்கு, கழுச்சுக் கட்டுனது மாட்டுக்குன்னு மிச்சமீதிய போட்டாலே போதும். சாணமும் வயலுக்கு உரமாச்சு. இதுக்குன்னு பராமரிக்கத் தனியா இதுக்குன்னுச் செலவு செய்யத் தேவயுமில்ல.

மாடு கன்னு போட்டா பசுங்கன்னாயிருந்தா வளத்து வீட்டுத் தேவைக்கி வச்சுக்குவாங்க, இல்ல அவசர தேவைக்கி வித்துக்குவாங்க, காள கன்னாயிருந்தா ஒழவுக்கு, வண்டி மாட்டுக்குப் பழக்கிக்குவாங்க, பொண்ண கல்யாணம் செஞ்சுகுடுத்தா பாலுக்காக ஒரு பசுவும் கன்னும் சீரா கொடுப்பாங்க.

நாட்டுப் பசுமாடு கொறச்சலா ஒரு நேரத்துக்கு ரெண்டு லிட்டரும், அதிகமா மூனு லிட்டரும் ஒரு நாளைக்கி ரெண்டு வேளை கறக்கும். வீட்டுக்கு தேவையான பாலு போக மிச்சத்த அக்கம் பக்கத்துல விப்பாங்க. இல்லன்னா டீக்கடைக்குக் குடுப்பாங்க. கொழம்பு காச்ச, வெத்தலப் பாக்கு வாங்கன்னு அன்னன்னய தேவையை சரி செஞ்சுடும். கிராமத்துல மாடு வளப்புங்கறது வாழ்க்கைக்கும், பொழப்புக்கும் உதவுறமாதிரி ஒன்னுக்கொன்னு தொடர்புடையதா இருக்கும்.

நாட்டு மாடு வளப்ப துண்டிச்சா மாதிரி சீமப்பசு வந்துச்சு. கூட்டுறவு சொசைட்டி மூலமாக் கவருமெண்ட்டே லோனுக் குடுத்து சீம மாடு வாங்க ஏற்பாடு செஞ்சுச்சு. மாடு பேர்ல கடன் கொடுத்ததால, மாட்ட விக்கவும், வாங்கவும், முடியாத அளவுக்கு கவுருமென்ட்டே அடயாளத்துக்குக் காதுல கடுக்கன் போட்டுதான் குடுக்கும். அப்பரம் ஊரு பூராவும் கடுக்கன் போட்ட மாடுதான் வர ஆரம்பிச்சுச்சு.

கடன் தீர்ர வரைக்கும் நம்ம தேவைக்கி பால் எடுத்துக்க முடியாது. பேருக்கு கொஞ்சோண்டு குடுப்பாங்க. மாசம் முடிச்சா மொத்தமா காசு கொடுப்பாங்க. வீட்டுச் செலவு, மாட்டுக்கு தீவனமுன்னு மொத்த காசும் சரியா போயிடும். மாட்டுக் கடன எப்புடி அடைக்கிறது. தண்ணில போட்ட கல்லுக் கணக்கா கடன் பாட்டுக்கும் இருக்கும்.

நாட்டு மாடு மாதிரி சீம மாட்ட பராமரிக்க முடியாது. மாட்டுத் தீவனம், புண்ணாக்கு, தவுடு, பருத்திக்கொட்ட, அரிசிக் கஞ்சி, சீமப் புல்லுன்னு மெத்து மெத்துன்னு சாப்பாடு குடுக்கனும். மரத்து நெழலுல கட்ட முடியாது. அதுக்குன்னு கொட்டகை போடனும். மழையில நெனஞ்சா நடக்க சொரம் வந்துரும், வெய்யில்ல போனா இழுப்பு வந்துரும். மேக்கெயும் ஓட்டிட்டு போக முடியாது வீட்டுலயே பக்குவமா பாத்துக்கனும். நம்மாளு கருப்பா இருப்பான் வெயிலுக்கும், மழைக்கும் நின்னு நல்லா வேலைப்பாப்பான், ஒன்னும் பன்னாது, ஆனா செவப்பா தொரமாரு மாதிரி ஐயருக்கணக்கா மெலுக்கா இருக்குறவன் ஊளச் சதையாதான் இருப்பான். புல்லு தடிக்கி விட்டாலே விளுந்துருவான். அதுபோலத்தான் இந்த சீம பசுமாட்டு ஒடம்பும்.

டெட்ரா பேக் பால்
பாக்கெட்டு பால் கெட்டுப் போறதால, இப்ப நூத்தி இருவது நாள் கெடாத பாலுன்னு விக்கிறாங்க.

ஒன்னு ஒன்ரை கறக்குற மாட்ட வச்சுகிட்டு என்னத்த செய்ய என்ற நெனப்ப உண்டு பண்ணிட்டாங்க. சனங்களும் நாட்டு மாட்ட வித்துட்டு சீம மாடு வாங்குனாங்க, நாட்டு மாட்டை அடிமாடா பயன்படுத்தி அழிச்சுட்டாங்க. நாளா வேலையும் பாக்குற சாதாரண குடும்பத்த சேந்தவங்களால இப்டியெல்லாம் மாட்ட பராமரிக்க முடியாம, நெரையா மாடுங்க செத்துப்போயி கடனாளி ஆனதுதான் மிச்சம்.

கொஞ்ச வருசங்கழிச்சு படிப்படியா கூட்டுறவு சொசைட்டி மூலமா கெவுருமெண்டு லோனுக் குடுக்குறத நிப்பாட்டிருச்சு. சீம பசுவும் கொறஞ்சுப் போச்சு. கிராமத்துல பாலுக்கு திண்டாட்டமா போச்சு. டீக்கடைக்குக் கூட பால் தட்டுப்பாடு வந்துட்டு. கோமாதா, திருமலான்னு, மாட்டுப்பேர வச்சுகிட்டு பாக்கெட் பால் ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுச்சு. கிராமத்து கடைகள்ல ப்ரிஜ் வசதியெல்லாம் இல்லாமெ பாக்கெட்டு பால் கெட்டுப் போறதால, இப்ப நூத்தி இருவது நாள் கெடாத பாலுன்னு விக்கிறாங்க.

கெவுருமென்ட்டு பால் கூட்டுறவு சொசைட்டிய மூடிட்டுது. தனியாரு பால் கம்பனிக்காரன் கிராமத்துல டிப்போ தொறக்க ஆரம்பிச்சான். அவனே லோனும் தாரான், பாலையும் வாங்கிக்குறான். அவங்க தேவைக்கிக் கூட பால் தரமாட்டேங்கறான். பணம் அவனுது, மாடு அவனுது, பால் அவனுது, மாடு மேய்க்கிற பண்ணக்காரன் போலதான், மாட்டுச் சொந்தக்காரன் இருக்கான்.

எந்த திட்டமும் மொதல்ல கெவுருமெண்டு ஆரம்பிச்சு பின்னாடி தனியாருக்கு தாரவாக்குற சூச்சமந்தான் இதுலயும் நடந்துச்சு. திட்டம் போட்டாப் போலவே இருவத்தஞ்சு வருசத்துக்குள்ள நாட்டு மாடுங்குறதே இல்லாமப் பண்ணி, பாலுக்கு திண்டாட விட்டுட்டாய்ங்கெ. கிராமத்துல வெவசாயம் செஞ்சு பொழைக்கிற சனங்க அவங்க பொழைப்போட சேந்து மாடு வளத்தாங்க, தெம்பா தைரியமா வேலைப்பாக்க பாலு, மோரு குடிச்சாங்க. இப்ப ஒருவா காப்பித்தன்னிக்கி ஏங்கிப் போயி நிக்கிறாங்க.

கடையில வாங்றது பாலு தோசைமாவுப் போல இருக்கு, மோரு கஞ்சித்தண்ணி போல இருக்கு, மருந்து மாதிரி குடிக்க வேண்டியதா இருக்கு. வளமா வெவசாயம் பண்ணி, சத்தா சாப்புட்டு, ஆரோக்கியமா இருந்தவங்கள, அவங்களுக்கெ தெரியாம கலப்பின பசு, கலப்பின விதை, ரசாயன உரம்ன்னு, எல்லாத்துலயும் கலப்படம் பண்ணி கிராமத்து வாழ்க்கைய, சக்கையா ஆக்குறாங்க. நகரத்து மொதலாளி பெரியாளா வரதுக்கு கிராமத்து மக்கள கண்ணக் கட்டி கையத் திருகி புடுங்குற கணக்கா அவங்க பொழப்ப அழிக்கிறாய்ங்க.

நடக்குறது எல்லாமே திட்டம் போட்டுதான் நடக்குதுங்கறத புரிஞ்சுகிட்டு மக்கள் ஒன்னு சேந்து போராடினாதான் இருக்குறதையாவது தக்க வச்சுக்க முடியும், என்ன சொல்றீங்க?

– சரசம்மா