privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைஎங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா

எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா

-

ங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ?

வாணக்காரையா
உண்மைப் படமல்ல, மாதிரிக்காக இணையத்தில் எடுக்கப்பட்டது.

இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.

வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.

“ஐயனார்  கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.

“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்க. ஐயனார நான் கும்பிட்டா ஒண்ணும் தப்பில்ல”ன்னு சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.

ஊருகள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.

Ayyanar temple
அய்யனார் கோவில், மாதிரிப் படம்

எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.

எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.

தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.

வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.

வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. மதம் வேறயா இருந்தாலும், “என்னையும் சேத்துத் தானே உங்க சாமி பாத்துக்குது அதுக்கு எதுன்னா நான் செய்யணு”முன்னு முன்வருவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.

வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.

வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.

இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.

“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.

fireworksதுக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.

“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.

வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.

அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.

பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.

சரசம்மா

(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)