பீகாரில் டிசம்பர் 13 ஆம் தேதி அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வை (Combined Competitive Examination – CCE) ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசு தடியடி நடத்தி கலைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 28 அன்று ஆணையத்தின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசு கைது செய்தது.
இதனையடுத்து டிசம்பர் 29 அன்று பாட்னாவில் உள்ள காந்தி திடலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஜேபி கொலம்பூர் நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்களை போலீசு தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கூறியது. மாணவர்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசு மாணவர்கள் மீது கொடூரமான முறையில் தடியடி நடத்தியது. மிருகத்தனமாக மாணவர்களைக் கையாண்டது. போலீசின் தாக்குதலால் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு தடியடி நடத்தியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாணவர்கள் மீது வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
பீகார் அரசின் இந்த அடக்குமுறையை எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “அரசு தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மோசடியை மறைக்க பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் மிருகத்தனமான லத்திசார்ஜ் மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு மாணவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். சர்வாதிகாரத்தின் தடியால் இளைஞர்களின் மன உறுதியைக் குலைக்கும் முயற்சி மிகவும் வெட்கக்கேடானது; கண்டிக்கத்தக்கது. வினாத்தாள் கசிவு நெட்வொர்க்கை பா.ஜ.க-வினர் நாடு முழுவதும் விரித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பீகாரில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் ஊழல், முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவற்றைத் தடுப்பது அரசின் வேலை. ஆனால் ஊழலை நிறுத்துவதற்குப் பதிலாக, மாணவர்கள் குரல் எழுப்ப விடாமல் தடுக்கப்படுகிறார்கள். இந்த கடும் குளிரில் இளைஞர்கள் மீது தண்ணீர் பீரங்கி மற்றும் லத்தி சார்ஜ் செய்வது மனிதாபிமானமற்ற செயல். பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் அரசு, இளைஞர்கள் மீதான இரட்டை அட்டூழியங்களின் அடையாளமாக மாறியுள்ளது.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் போலீசின் கொடூரத் தாக்குதலைக் கீழ்க்கண்ட புகைப்படங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
புகைப்படங்கள்: என்.டி.டிவி
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram