மேற்கு வங்கத்தில் மார்ச் 1 அன்று கல்வித் துறை அமைச்சர் பிரத்யா பாசு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்குப் பயணம் செய்த போது, மாணவர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
2017 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவில்லை. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க கல்வி அமைச்சரான பிரத்யா பாசு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தார்.
அப்போது பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி, இந்திய மாணவர் சங்கம் (SFI), புரட்சிகர மாணவர் முன்னணி (RSF) மற்றும் பிற இடதுசாரி மாணவர் அமைப்புகளின் மாணவர்கள் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் மாணவர்களின் இந்த சட்டப் பூர்வமான கோரிக்கைக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதனால் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில நபர்கள் அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அமைச்சரின் வாகனம் போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதிச் சென்றுள்ளது.
படிக்க: தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்
இதில் மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் கண் பகுதியில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், மேற்குவங்க அரசு கல்லூரி வளாகத்தில் கலவரம் ஏற்படுத்தி பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்ததாக மாணவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சரின் காரை மறித்து அவருக்குக் காயம் ஏற்படுத்தி, அவரது உடைமைகளைத் திருடியதாகக் குறிப்பிட்டு இந்திரனுஜ் ராய் உள்ளிட்ட மாணவர்கள் பலரின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் மொத்தம் 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர் அமைப்புகள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் மார்ச் 3 அன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது.
செப்டம்பர் 2023-இல் கல்கத்தா உயர் நீதிமன்றம் மாணவர் சங்கத் தேர்தலை நடத்துமாறு மேற்கு மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram