தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்

ஏ.பி.வி.பி கும்பல் மீன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் புகுந்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மாணவர்களைத் தாக்கியுள்ளது.

புது தில்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தில் (South Asian University – SAU) புதன்கிழமை (பிப்ரவரி 26) அன்று பல்கலைக்கழக உணவகத்தில் வழக்கம் போல புலால் (அசைவ) உணவு பரிமாறப்பட்டது. மகா சிவராத்திரி நாளன்று புலால் உணவு சாப்பிட்டதாகக் கூறி மாணவர்களை ABVP குண்டர்கள் தாக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளன. அதில் ஒரு உணவகத்தில் புலால் சாப்பிடும் மாணவர்களுக்கு புலால் உணவும் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு சைவ உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகா சிவராத்திரி என்பதால் புலால் உணவே பரிமாறப்படக்கூடாது என்று கூறி ஏ.பி.வி.பி குண்டர்கள் கோரியுள்ளனர். உணவு உண்பது அவரவர் தனியுரிமை என்பதால் உணவகத்திற்குப் பொறுப்பான மாணவர் கமிட்டி அதை நிராகரித்துவிட்டது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஏ.பி.வி.பி கும்பல் மீன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் புகுந்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மாணவர்களைத் தாக்கியுள்ளது.

இதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏ.பி.வி.பி குண்டர்களுக்கு எதிராகப் போராட்டத்திலும் இறங்கியுள்ளது.

ஆனால் இதுவரை போலீசு கலவரம் செய்த கும்பல் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதிலிருந்தே தன்னை காவி கும்பலின் கையாட்கள் என்பதை அம்பலப்படுத்திக் கொள்கிறது.

போலீசிடம் கேட்டால் தற்போது சுமூகமான சூழ்நிலை நிலவுவதாக போலியான அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் மாணவர் பிரிவான இந்த ஏ.பி.வி.பி குண்டர் படை நமது உணவில் கை வைப்பதை நாம் அனுமதிக்க முடியுமா?

மதுரையிலே உள்ள பாண்டி, முனீஸ்வரர் கோயிலுக்கு வருடத்தில் 365 நாட்களும் கிடா வெட்டு நடக்கிறது. இதுபோல் குலதெய்வ வழிபாடு அனைத்திலும் ஆடு, கோழி வெட்டுவது என்பதெல்லாம் சாதாரணமான ஒரு நிகழ்வு.

இந்தக் காவி கும்பல் நம்மிடம் சொல்ல வருவதுதான் என்ன?

அப்படியானால் நாட்டிலுள்ள புலால் ஓட்டல்களை எல்லாம் அடைத்து விடலாமா? வேண்டுமானால் போய் சைவ ஓட்டலில் சாப்பிடலாமே? அதைச் செய்யாது இந்த காவி கும்பல். மற்றவர்களின் உணவு உரிமையைத் தடுப்பதுதான் இவர்களின் நோக்கம்.

ஆதலால் இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி குண்டர் படையின் சித்தாந்தமே புலால் உணவு கூடாது என்பதுதான். அதை படிப்படியாக எல்லா இடங்களிலும் அமல்படுத்த நினைக்கிறார்கள். அப்படிச் சாப்பிடக்கூடிய மக்களின் உணவு உரிமைகளை படிப்படியாகப் பறிக்க நினைக்கிறார்கள். இதுதான் ’இந்து கலாச்சாரம்’ என்று ஒற்றை கலாச்சாரத்தை நிறுவ நினைக்கிறார்கள். இதுதான் இந்து ராஷ்டிரம் என்கிறார்கள்.

இதை நாம் அனுமதித்தோம் என்றால் நாளை நமது ஒட்டுமொத்த உணவு உரிமையிலும் கை வைப்பார்கள். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களே இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி குண்டர்கள். இவர்களை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிப்பு செய்வதோடு இவர்களுக்கு எதிரான போராட்டத்தைக் களத்தில் கட்டியமைக்க வேண்டும்.

ஒரு இனத்தின் மொழி மீது மட்டும் இவர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை பண்பாடு கலாச்சாரம் உணவுரிமை அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்கள். தாக்குதல்கள் எல்லாம் ஆக்கிரமிப்புக்காகவும் கைப்பற்றுவதற்காகவும் தான். அது அம்பானி அதானி சேட்டு மார்வாடி பணியா கும்பல்களுக்காகத்தான்.

இதை எச்சரிக்கையாக இருந்து முறியடிக்க அனைவரும் களத்தில் இறங்குவோம்.


தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க