தாயகத்தின் மடி கிழித்து,
மலைகளின் மார்பு பிளந்து,
கனிமங்களின் பச்சை உதிரம் குடித்து
உண்டு கொழுக்கும்
கார்ப்பரேட் பிணந்தின்னிகளுக்காக,
அதிகாரத்தில் அமர்ந்து
காவிப் படைகள் பாதை விரிக்க,
எஜமானனின் சொல் தட்டாது
தலையாட்டும் நீதியின் மேசைகள்
தீக்கிரையாக்கும் தீர்ப்பொன்றைக் கீறிவிட,
ஆயிரமாயிரம் கூரைகளின்
சாம்பல் மேடைகளில்
நிர்வாணமாய்
நெருப்பில் வெந்து அலறுகிறாள் –
ஏழு சகோதரிகளில் ஒருத்தி!
அவள் மேனியெங்கும் ஒலித்த
எம் பாட்டன் பூட்டனின்
பழங்குடியினப் பாடலின் பல்லவிகள்
பற்றி எரிந்து,
மலைமுகடுகளெங்கும்
இன்று ஒலிக்கின்றன
மரணத்தின் ஒப்பாரி ஓலங்கள்!
அதிகாரத் துருப்பிடித்த
சட்டப் புத்தகங்கள்
அடிமைத்தனத்தின் அத்தியாயங்களை
நீதியெனப் போதிக்கும் போது,
இனியும் அமைதி காப்பது
தற்கொலைக்கு நிகரன்றோ?
அதிகாரத்தின் விருந்து மேசையிலிருந்து
சிதறி விழும் எச்சில் துண்டுகளோ,
அடக்குமுறையின் காலடியில் கிடக்கும்
பிச்சைப் பாத்திரமோ அல்ல
நமக்கான ஜனநாயகம்!
சுருங்கிய இரைப்பைகளோடு
வீதி முனைகளில்
தீப்பந்தமேந்தித் திரளும்
எம் வியர்வையின் உப்புக் கரிப்பில்,
வரலாறு வார்க்கும்
விடுதலைச் சாசனமே
இனி நமக்கான ஜனநாயகம்!
தேகமெங்கும் ரத்தம் வழிய,
மணிப்பூரின் குரல்வளையை
பாசிசத்தின் நச்சுப் பற்கள்
நெரிக்கும் போது,
நகத்தின் நுனியில்
தொட்டுத் தடவிய
ஒரு சொட்டு மை மட்டும்,
எம் முதுகில் பதிந்த
குருதி வழியும் ரணங்களுக்கு
மருந்தாகுமோ?
![]()
யாழினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











