கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமார், “மேகதாது அணை கட்டத் தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை, அணையை கட்டியே தீருவோம்” எனப் பேசியதால் இரு மாநில காவிரி நீர் சிக்கல் மீண்டும் வெடித்துள்ளது. அவரது இந்தத் திமிர் பேச்சுக்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் இயற்றப்பட்டது. இத்தீர்மானத்தில், “மேகதாது விவகாரத்தைப் புதிய நதிநீர் சிக்கலாகக் கருதி, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்” என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் உடனடியாக இணைத்துக்கொண்டார்.

மேகதாது விவகாரம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்குப் பின் உருவான புதிய சட்டச் சிக்கல் என்பதால், புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது எனத் தி.மு.க. வலியுறுத்துகிறது.
ஆனால், புதிய நடுவர் மன்றம் கோருவது, இதுவரை தமிழ்நாடு மக்கள் போராடிப் பெற்ற குறைந்தபட்ச சட்டப்பூர்வ உரிமைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் துரோகச் செயலாகும்.
ஏற்கெனவே கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. இந்நிலையில், புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் இறுதித் தீர்ப்பு வர 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம். இந்த நீண்ட இடைவெளியில், நீதிமன்றத் தடைகளின்றி கர்நாடகா அரசு மேகதாது அணையை வேகமாக கட்டி முடித்துவிடும். மேலும், வழக்கு விசாரணையைக் காரணம் காட்டிப் பழைய தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தருவதையும் தட்டிக்கழிக்கும். எனவே, புதிய நடுவர் மன்றம் அமைப்பதெல்லாம் தீர்வாகாது; அது தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையைப் பறிப்பதற்கே வழிவகுக்கும்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் புகைத்துக் கொண்டிருப்பதன் நோக்கம் காலத்திற்கேற்ப மாறியுள்ளது. இனவெறி, ஓட்டு வங்கி அரசியல் என்றிருந்த இப்பிரச்சினை கடந்த 25 ஆண்டுகளில் கார்ப்பரேட் சேவை என்ற புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. மாண்டியா, மைசூர் விவசாயிகளின் நீராதாரம் மற்றும் பெங்களூருவின் குடிநீர் தேவையை மையமிட்டிருந்த இப்பிரச்சினை, தற்போது கார்ப்பரேட்டுகளின் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் – பா.ஜ.க. கட்சிகள் தங்களின் கார்ப்பரேட் சேவையை மறைக்கவே, பெங்களூரு குடிநீர் தேவை என்ற பழைய அரிதாரத்தைப் பூசிப் பொய் பேசி வருகின்றன.
அதேசமயம், தமிழ்நாட்டு காங்கிரஸ் – பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் மேகதாது அணைத் திட்டத்தை எதிர்க்கின்றன. இவ்வாறு மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாடு என இரு கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன. காங்கிரசைப் பொறுத்தவரை, இந்த இரட்டை நிலைப்பாடு அந்தந்த மாநில வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆகும். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, தனக்கு அடிபணியாத தமிழ்நாட்டை பழிவாங்குவதற்கான துருப்புச் சீட்டாக இவ்விவகாரத்தைக் கருதினாலும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கு எதிராகப் பேசினால் இங்கு காலூன்ற முடியாது என்பதற்காகவே மேகதாது அணையை எதிர்க்கிறது. இவ்வாறு இவ்விரு கட்சிகளும் “பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்” கதையாகத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற எத்தனிக்கின்றன.
திட்டமிடப்படாத பெங்களூரு நகர விரிவாக்கமும்
நீரைச் சூறையாடும் கார்ப்பரேட் தரவு மையங்களும்
“பெங்களூருவின் குடிநீர்” தேவைக்காக மட்டுமே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்டப்போவதாகக் கர்நாடக அரசு திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. ஆனால், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளுக்குப் பிறகே பெங்களூருவின் நீர் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. 1990-களுக்கு முன்பு வரை தோட்ட நகரமாக இருந்த பழைய பெங்களூரு மெஜஸ்டிக், ஜெயநகர், மல்லேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இதன் பரப்பளவு வெறும் 226–276 ச.கி.மீ. மட்டுமே.
2007-க்குப் பின் இந்தியாவின் “சிலிக்கான் வேலியாக”(Silicon Valley) மாறிய பெங்களூரு, தன் நீர்நிலைகளை இழந்து கான்கிரீட் காடாக மாறியது. நீர்வழிப்பாதைகளை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆக்கிரமித்தன, பெங்களூருவிற்கு அருகில் இருந்த கிராமங்கள், பெங்களூருவுடன் இணைக்கப்பட்டன.
“பிருகத் பெங்களூரு மகாநகர பலிகே” (BBMP) திட்டத்தின் கீழ் வொயிட்ஃபீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற பகுதிகள் இணைக்கப்பட்டு, நகரின் பரப்பளவு 741 ச.கி.மீ. ஆகவும், மக்கள் தொகை 57–84 லட்சமாகவும் உயர்ந்தது.
தற்போது, ஒசகோட்டே, தேவனஹள்ளி, தொட்டபல்லாபூர், நெலமங்கலா, ராமநகரா, ஆனேக்கல் ஆகிய ஊரகப் பகுதிகளை உள்ளடக்கி 8,000 ச.கி.மீ. பரப்பளவில் “பெங்களூரு பெருநகர பிராந்தியம்” (BMR) என்ற பெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தேவனஹள்ளியின் புகழ்பெற்ற திராட்சைத் தோட்டங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கார்ப்பரேட் தொழிற்பேட்டைகளாகவும், சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
இப்பகுதிகளின் குடிநீர் தேவை என்பது பெரும்பாலும் நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறது.
பெங்களூருவின் 90 சதவிகிதப் பகுதி கான்கிரீட்மயமாகி விட்டதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டன. பெல்லந்தூர், வர்த்தூர் போன்ற மாபெரும் ஏரிகள் இன்று கார்ப்பரேட் ரசாயனக் கழிவுகளால் சாக்கடைகளாக மாறியுள்ளன. இவ்வாறு, நிலத்தடி நீர் உயர்வதற்கோ, மழை நீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டன. எனவேதான் மழைக்காலங்களில், வொயிட் ஃபீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறுகின்றன.
இச்சூழலில், இப்பெருநகரப் பிராந்தியம் முழுமைக்கும் காவிரி நீரையே விநியோகிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 2024-25 ஆண்டுகளில், குழாய்கள் மூலம் காவிரியிலிருந்து நீர் கொண்டுவர 5-வது கட்டத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே, நகரின் தினசரித் தேவையான 2,600 மில்லியன் லிட்டரில் (MLD), 1,650 மில்லியன் லிட்டர் நீர் காவிரியிலிருந்தே எடுக்கப்படுகிறது. இது மேலும் விரிவாக்கப்பட்டு பெருநகர பிராந்தியத்தின் தண்ணீர் தேவையை காவிரியிலிருந்து மட்டுமே எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவேதான், மேகதாது அணையைக் கட்ட வேண்டும் என்று காங்கிரஸ்-பா.ஜ.க. கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஒலிக்கின்றன.
ஒருபுறம் நகரவிரிவாக்கம், மற்றொருபுறம் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி, உள்நாட்டு-பன்னாட்டு தரவு மையங்களும் பெங்களூருவில் இயங்கி வருகின்றன. நெக்ஸ்ட்ரா (ஏர்டெல்) (Nxtra (Airtel)), அதானிகனெக்ஸ் (AdaniConneX), கண்ட்ரோல்எஸ் (CtrlS), சிஃபி (Sify), என்டிடி குளோபல் டேட்டா சென்டர்ஸ் (NTT Global Data Centers) என சிறிதும், பெரிதுமான சுமார் 32 தரவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பெங்களூருவின் நன்னீர் ஆதாரங்களை தங்களது இலாப வெறிக்காகச் சுரண்டி வருகின்றன. கர்நாடக அரசின் “தரவு மையக் கொள்கை 2022-2027” (Data Centre Policy) இந்த நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா நீர் விநியோகத்தை உத்தரவாதம் செய்கிறது.
1 மெகாவாட் (MW) திறன் கொண்ட தரவு மையத்திற்கு ஒரு நாளைக்கு 65,000 லிட்டர் தண்ணீரும், 20 மெகாவாட் மையத்திற்கு 14 லட்சம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. இது 27,000 நகர்ப்புறக் குடும்பங்களின் தினசரித் தேவையாகும். இம்மையங்களைக் குளிர்விக்கப் பயன்படும் இந்நீர் ஆவியாகிவிடுவதால், இதை மறுசுழற்சி கூட செய்ய முடியாது. உலகமே நீர் திவால்நிலையை நோக்கிச் செல்லும்போது, பெங்களூருவில் நிலத்தடி நீர் பூஜ்யமாகிக் கொண்டிருக்கும் சூழலில், நீரை கொள்ளையடிக்கிற இத்தகைய தரவு மையங்களை அமைப்பது தற்கொலைக்குச் சமமாகும்.
ஒருபுறம், பெங்களூரு நகரத்தின் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் போதிய நீரின்றி அலைந்து கொண்டிருக்கும் சூழலில், பன்னாட்டு நிறுவனங்கள் இலாபத்தில் கொழுப்பதற்கு இலட்சக்கணக்கான நீரை கொள்ளையடிக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பதே அரசுக்கொள்கையாக மாறியுள்ளது. இதுதான் மறுகாலனியாக்கத்தின் உச்சம்.
பெங்களூருவில் கார்ப்பரேட் முதலீட்டைத் தக்கவைப்பது, தமிழ்நாட்டின் காவிரிப் படுகையிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது என இரு மாநில கார்ப்பரேட் நலன்களுக்காகவே, சொந்த மக்களின் நீர் உரிமையையும் தமிழ்நாட்டின் வரலாற்று உரிமையையும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் காலில் மிதித்து மேகதாது அணையைத் தீவிரமாக கட்டத் துடிக்கிறது கர்நாடக அரசு. இதை ஒன்றிய பா.ஜ.க. அரசும் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசு
மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஓரவஞ்சனையும்
சர்வதேச நீர்பங்கீட்டுச் சட்டங்களின்படி, ஒரு ஆற்றின் நீர் அந்த ஆற்றின் இயற்கை வடிநிலத்திற்குள் (River Basin) வாழும் மக்களின் பயன்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெங்களூரு நகரமோ காவிரி ஆற்றிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது; அதன் எந்தவொரு பகுதியும் காவிரியின் கரையில் அமையவில்லை. விருஷபாவதி, அர்க்காவதி ஆகிய ஆறுகள் மட்டுமே பெங்களூருவில் பாய்கின்றன. இதில் அர்க்காவதி ஆறு, சென்னையின் கூவம் நதியைப் போல் கழிவுநீர் சாக்கடையாக மாற்றப்பட்டுவிட்டது. காவிரியின் இயற்கை நீர்வழிப்பாதையில் அமையாத பெங்களூருவிற்கு அதிலிருந்து நீர் எடுப்பது சட்டவிரோதமாகும். இச்சூழலில், பெங்களூருவைப் பெருநகரப் பிராந்தியமாக 8,000 ச.கி.மீ. பரப்பளவிற்கு விரிவாக்கி, அப்பகுதிகளுக்கும் காவிரி நீரைக் கொண்டு சேர்க்க நினைப்பது சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் அயோக்கியத்தனமாகும்.

நடத்தும் விவசாயச் சங்கங்கள்.
பெங்களூருவின் உள்ளூர் நீராதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, அண்டை மாநிலத்திற்குரிய நீரைப் பறிப்பது அப்பட்டமான அடாவடித்தனமாகும். கர்நாடகாவின் இந்தத் தன்னிச்சையான போக்கை ஒன்றிய அரசோ, உச்சநீதிமன்றமோ கண்டிப்பதில்லை; மாறாக கர்நாடகாவின் அடாவடித்தனத்திற்கு காவல் காத்து நிற்கின்றன. 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 4.75 டி.எம்.சி. நீரை பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக உச்ச நீதிமன்றம் தாரைவார்த்தது. தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை உரிய காலங்களில் வழங்காமல் கர்நாடகா காலம் தாழ்த்துவதையும் நீதிமன்றங்கள் தட்டிக்கேட்பதில்லை.
மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) முற்றிலும் நிராகரிக்காமல் மத்திய நீர் ஆணையம் இழுத்தடித்து வருகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) விதிகளில் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக விலக்குகளை அளித்து வருகிறது. இவற்றுள் எதுவும் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் கணக்கில் கொள்வதே இல்லை. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்த ஒன்றிய அரசு, மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு மறுக்கிறது என்ற காரணத்தைக் கூறி, ஏன் கர்நாடகாவின் முயற்சிகளைத் தடுக்கவில்லை? உச்சநீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவையே தமிழ்நாட்டின் மீதான ஓரவஞ்சனைக்கு பிரதான காரணமாகும்.
மேகதாது – சூழலியல் பேரழிவுத் திட்டம்
சூழலியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கூற்றுப்படி, மேகதாது அணை என்பது காவிரியின் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் அழிக்கும் ஒரு பேரழிவுத் திட்டமாகும். இத்திட்டத்தினால் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் மையப்பகுதியில் உள்ள 5,252 ஹெக்டேர் (சுமார் 13,000 ஏக்கர்) அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கடிக்கப்படும். மேலும், பன்னெர்கட்டா மற்றும் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை இணைக்கும் தென்னிந்தியாவின் மிக முக்கியமான யானை இடப்பெயர்வு வழித்தடம் முற்றிலும் துண்டிக்கப்படும். இது கர்நாடகா – தமிழ்நாடு எல்லையோரக் கிராமங்களில் மனித-விலங்கு மோதல்களை அதிகரிக்கும்.
மேகதாதுவில் அணை கட்டப்படுவதால் காவிரியின் இயற்கையான ஓட்டம் தடுக்கப்பட்டு, ஆற்று நீருடன் வரும் காடுகளின் இயற்கை ஊட்டச்சத்துக்களும், வண்டல் மண்ணும் கீழ்மடைக்கு வராமல் அணையிலேயே தேங்கிவிடும். இது ஆற்றின் சூழலியல் ஒருமைப்பாட்டைச் சிதைத்து, மண்ணின் வளத்தைக் குறைப்பதுடன், நன்னீர் வாழ் உயிரினங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் முடக்கும்.
கீழ்மடைக்கு நன்னீர் வராதபோது கடல் நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுவதால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும்; இதனால் கடைமடைப் பகுதியின் வாழ்வாதாரமும் சுற்றுச்சூழல் சமநிலையும் முற்றிலும் அழிந்துவிடும். கடல் அரிப்பிலிருந்து நிலத்தைக் காக்கும் முகத்துவாரப் பகுதிகளும், அலையாத்திக் காடுகளும் அழிந்து, கடலின் உயிர் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும். இது மீன்கள், இறால்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தைத் தடுத்து, ஒட்டுமொத்த நில மற்றும் கடல்வாழ் உணவுச் சங்கிலியைச் சீர்குலைக்கும்.
புவிவெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் இயற்கைப் பேரழிவுகள் இயல்பாகிவிட்ட இக்காலத்தில், நிலம் மற்றும் கடல் சூழலியலைக் கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய பேரழிவுத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதே புவியின் உயிர்க்கோளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.
நதிகள் இணைப்புத் தீர்வாகுமா?
நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. அண்மையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஆற்று நீர் வீணாகக் கடலில் கலக்கிறது; எனவே கோதாவரியையும் காவிரியையும் இணைக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வாதமானது சுற்றுச்சூழல் மற்றும் கடல் சூழலியலைப் புரிந்துகொள்ளாமல், மனிதனை மட்டும் முன்னிறுத்திப் பார்க்கின்ற முதலாளித்துவ நுகர்வுக் கண்ணோட்டமாகும். கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இக்கருத்து விதைக்கப்பட்டு வருகிறது.
நதிகள் என்பவை அவை உருவாகும் நிலப்பரப்பிற்கு ஏற்பவே தங்களுக்கேயுரிய வேதியியல் பண்புகளைக் (Chemical Properties) கொண்டிருக்கும். இத்தகைய வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட ஆறுகளைச் செயற்கையாக இணைப்பது, அந்த ஆறுகளின் இயற்கையான வாழ்விற்கே எதிரானதாக முடிந்துவிடும்.
தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கங்கை – தாமோதர் – சுபர்ணரேகா நதிகள் இணைப்புத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் அரிய வகை காடுகளும், புகழ்பெற்ற பெட்லா தேசிய பூங்கா (Betla National Park) மற்றும் பலாமு புலிகள் காப்பகத்தின் (Palamu Tiger Reserve) முக்கியப் பகுதிகளும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதனால் யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டு, பழங்குடி மக்கள் தங்களின் பண்பாட்டு வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றின் இயற்கையான நீரோட்டம் மாறுபடுவதால் மண் அரிப்பு ஏற்படுவதுடன், நதிகளின் வேதியியல் பண்புகள் சிதைந்து மீன் வளமும் பெருமளவு குறைந்துள்ளது. மேலும், செயற்கையான நதிகள் இணைப்பால் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் செல்லாமல் வறட்சி ஏற்படுவதோடு, சில இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது. இத்தகைய மாபெரும் நிதிச்சுமையையும் சுற்றுச்சூழல் பேரழிவையும் ஏற்படுத்தும் நதிகள் இணைப்புத் திட்டங்களைக் கைவிடக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பழங்குடி மக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?
காவிரி நீர் பிரச்சினையின் அடிநாதம் கார்ப்பரேட் கொள்ளையேயாகும். அதாவது மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பை அறுத்தெறிவதாகும். இயற்கை என்பது மனிதனின் நுகர்வுக்கானது என்ற முதலாளித்துவக் கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, இயற்கையின் ஒரு அங்கமே மனிதன் என்ற கண்ணோட்டத்தை விதைப்பது முதன்மையானதாகும்.
குடிநீர் ஒரு வியாபாரப் பொருள் என்பது தடைசெய்யப்பட வேண்டும். மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் புனரமைக்கப்படாத நீர்வழிப்பாதைகள், நீர்நிலைகளைத் தூர்வாரி மீட்டெடுக்க வேண்டும். இதற்கு பொதுப்பணித்துறையை மட்டும் நம்பியிராமல் மக்கள் அதிகாரக் குழுக்களைக் கட்டியமைக்க வேண்டும். இக்குழுக்களின் மேற்பார்வையில் ஆண்டுதோறும் ஏரி, வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும். தூர்ந்துபோன ஆழ்துளைக் கிணறுகளை நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகளாக மாற்றியமைப்பதன் மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். தொழிற்சாலை மற்றும் பூங்கா பராமரிப்பு போன்றவற்றிற்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம். இதற்காக அரசே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து கழிவு நீரைச் சுத்திகரித்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.
காடுகளை அழித்து பெரிய பெரிய அணைகள் கட்டுவதற்குப் பதிலாக சிறுசிறு தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். இத்துடன் சுற்றுச்சூழலை நாசமாக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கப் பணிகள் தடைசெய்யப்பட வேண்டும். உணவு உற்பத்தியும் ஏற்றுமதி சார்ந்ததாக அல்லாமல், திட்டமிட்ட உள்நாட்டுத் தேவையின் அடிப்படையிலானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இரு மாநிலங்களுக்கிடையிலான நீர் பங்கீட்டில் தேசிய இனங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். நீர் பகிர்வை, இருமாநில சிறு-குறு விவசாயிகள், தொழிலாளர்கள், சூழலியலாளர்கள், நீரியல் நிபுணர்களை உள்ளடக்கிய அதிகாரமிக்க மக்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுக்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமே, காவிரிப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
ஆனால், தற்போதைய ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசோ புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்கிறது. இதன்மூலம் மறைமுகமாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு வழி அமைத்துக்கொடுக்கிறது. மேலும், சமீபத்தில் தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துக்கூடிய இப்பதவியில் அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியோ அல்லது மூத்த அரசியல்வாதிகளோதான் நியமிக்கப்படுவார்கள். அரசியல் அனுபவமோ, தமிழ்நாட்டு வரலாற்று மரபோ தெரியாத ஒருவர் எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக வாதாடுவார் என்ற அச்சம் ஜனநாயக சக்திகள் மத்தியில் எழுந்திருக்கிறது.
எனவே, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு, மேற்கூறிய தீர்வுகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் உடனடி கடமையாக மாறியிருக்கிறது.
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











