திவ்யதர்ஷினி – பார்த்திபனை கொலை செய்த குற்றவாளிகள் மீது
கொலை வழக்குப் பதிவு செய், குற்றவாளிகளைக் கைது செய்!
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கு!
ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலைத் தடை செய்!
ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் உடனே இயற்று!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் கடந்த ஜூலை 6 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10:30 மணியளவில் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம், ஆதிக்கச் சாதிவெறியர்கள் பேசிவரும் நாடகக் காதல் எனும் நச்சுப் பிரச்சாரத்தைத் தோலுரித்துக் காட்டி பேசினார்.
அடுத்ததாக உரையாற்றிய திராவிட விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட தலைவர் தோழர் காமாட்சி பாண்டியன், “எட்டு பட்டியல் சாதியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்தோம் என்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையையும் விசில் அரசு எடுக்கவில்லை” என்பதை அம்பலப்படுத்தினார்.
அடுத்ததாக கண்டன உரையாற்றிய இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் நிவேதா, த.வெ.க. ஆட்சியில் இந்த இரண்டு மாதத்தில் ஒன்பது ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தினார்.
ஆதித்தமிழர் பேரவையின் கலை இலக்கிய அணி தோழர் செல்வம் பேசும்போது, அதிகார வர்க்கம் சாதிவெறியர்களைப் பாதுகாப்பதை அம்பலப்படுத்தினார்; ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் இன்குலாப், திவ்யதர்ஷினி -பார்த்திபன் ஆணவப் படுகொலை வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக உரையாற்றிய நாட்டு மாடு நலச் சங்கத் தலைவர் தோழர் கலைவாணன், “மக்களைத் திரளாகத் திரட்டி சாதிவெறியர்களைச் சிறை வைப்போம்” எனப் பேசி முடித்தார்.
ஆதித்தமிழர் விடுதலைக் கட்சியின் அமைப்புச் செயலாளர் தோழர் சந்துரு, மக்களே தீர்ப்பு வழங்கும் நிலைக்கு வர வேண்டும் எனப் பேசினார்.
தமிழ்த் தேச குடியரசு இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மெய்யப்பன் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மணிவாசகம் ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.
தமிழ் மாநில பங்குஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தோழர் மின்னல்வரதன், காதலை யாராலும் தடுக்க முடியாது, ஒழிக்க முடியாது எனப் பேசி முடித்தார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மதுரை கிழக்கு மாவட்டத் தோழர் பரமேஷ், “ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதைக் கூட நாம் போராடிதான் பெற முடியும்” என வலியுறுத்திப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடகக் குழு தோழர் ஜெயக்குமார் பேசுகையில், “ஆணவப் படுகொலை குற்றவாளிகளை ஒழித்துக்கட்ட ஒன்று சட்டம், இரண்டு திட்டம் கொண்டு வாருங்கள்” என்று வலியுறுத்தியதுடன், இரண்டுமே இல்லாமல் இருக்கிறது என ஆளும் த.வெ.க. அரசை அம்பலப்படுத்தினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் தீபன், “காதலுக்கு எதிராக உள்ள ஆதிக்கச் சாதி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை தடை செய்ய வேண்டும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக மாவட்டம் தோறும் கூட்டமைப்புகளைக் கட்ட வேண்டும்” என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.
மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் தோழர் சு.க. முருகவேல் ராஜன் பேசும்போது, “ஒரு நாட்டில் பேய் ஆண்டால் சாத்திரங்கள் பிணம் தின்னும் என ஒரு பழமொழி உண்டு. அதுபோல் ஒரு நாட்டில் ஆணவப் படுகொலை நடக்கிறது என்றால் அதை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதே பொருள்” என்ற அடிப்படையில் விரிவாகப் பேசினார்.
இறுதியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் இணைச் செயலாளர் தோழர் குருசாமி பேசுகையில், “வெறிபிடித்த நாயை தடை செய் என்பது போல, ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்ய வேண்டும். ஜனநாயகத்தை அழிப்பதாகவும் சாதிவெறி சங்கங்களே உள்ளன. எந்த சாதியில்தான் வீரன் இல்லை? எந்த சாதியில்தான் கோழை இல்லை? எந்த சாதியில் தான் திருடன் இல்லை? என் சாதி வீரமானது என சொல்லிக்கொள்ள எவனுக்கும் உரிமை இல்லை. மாபெரும் மக்கள் போராட்டங்கள்தான் நாம் முன்வைக்கக் கூடிய, ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலைத் தடை செய் ஆகிய கோரிக்கைகளைச் சாதிக்கும்” என அழுத்தம் திருத்தமாகப் பேசி முடித்தார்.
இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் உமா நன்றி உரையாற்றினார்.
இடையிடையே மக்கள் அதிகார கழகத் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
திரளாகக் கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள், தோழர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சிகரமாக நடத்த உறுதுணையாக இருந்தனர்.
தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











