கடந்த 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் இயங்கி வரும் “செயிண்ட் பால் & பீட்டர் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ்” என்ற தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் மிகக் கொடூரமான அமோனியா நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. ஆலையின் முறையற்ற பராமரிப்புக் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், ஆலையில் தகரக் கொட்டகைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் இரத்த வாந்தி எடுத்தும், மூச்சுத் திணறலாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர்.
1984 போபால் நச்சு வாயுப் பேரழிவை நினைவுபடுத்தும் இக்கோர விபத்து குறித்து பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு) தோழர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் கண்டறியப்பட்டன. அதனடிப்படையிலேயே இக்களச்செய்தித் தொகுக்கப்பட்டுள்ளன.
இக்கள ஆய்வில் பு.ஜ.தொ.மு. தோழர்களான தோழர் ம.சரவணன் மற்றும் தோழர் ப.சக்திவேல் ஈடுபட்டனர். முன்னாள் கவுன்சிலரான தோழர் திரு.குமார் மற்றும் கன்னிகைப்பேர் கிராம பிரமுகர்கள் இந்த ஆய்விற்கு உதவினர்.
ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்கள்
- திருவள்ளூர் அமோனியா விசவாயு கசிவால் சுமார் 80 பேர் இரத்தம் கக்கியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அமோனியா வாயு ஏற்படுத்தும் நீண்டகால உடல்நல பாதிப்புக் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
- இறந்தவர்கள் மற்றும் உயிருக்குப் போராடுபவர்களில் பெரும்பான்மையானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். சில பெண் தொழிலாளர்கள் கேரளத்திலிருந்தும் ஜார்க்கண்டிலிருந்தும் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
- இதில் இன்னொரு அயோக்கியத்தனம் வெளியில் வந்திருக்கிறது. விபத்தில் சிக்கியவர்களில் கணிசமானோர் பெண் தொழிலாளர்கள் ஆவர். உள்ளூர் பிரமுகர்கள் கொடுத்த தகவலின்படி இறந்த ஒரு பெண்ணின் வயது 15 ஆகும். இது குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்செயல் ஆகும்.
- உலர் இறாலைப் பதப்படுத்தும் மொத்த வேலைகளையும் பெண் தொழிலாளர்கள்தான் செய்கின்றனர். இந்தப் பதப்படுத்தல் பிரிவில் அமோனியாவின் பயன்பாடு பிரதானம்.
- சுமார் 450 பேர் வேலை செய்கின்ற இந்த ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் என்று சொல்லக்கூடிய அளவில் யாரும் இல்லை.
- இவர்கள் சுதந்திர தொழிலாளர்கள் அல்ல. ஆலைக்குள்ளேயே கட்டப்பட்டுள்ள தகர-சீட் கொட்டாய்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 12 மணி நேரத்திற்குச் சுரண்டப்படுகின்றனர்.
- 8 மணிநேர வேலை என்கிற சட்டமெல்லாம் இந்த ஆலை வளாகத்தில் செல்லுபடியாகாது. ஏறக்குறைய நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கிறது. சமீபத்தில் வடமாநிலங்களில் நடந்த தொழிலாளர் போராட்டங்களின் துவக்கப்புள்ளி இந்தத் தகர-சீட் கொட்டடிகள்தான்!
தொழிலாளர்களை பலியாக்கிய கொலைகார நிறுவனம்
- கடலோர, மீன்பிடிப்பகுதியான வடசென்னை காசிமேடில் தலைமை அலுவலகம் வைத்துள்ள “செயிண்ட் பால் & பீட்டர் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் (பி) லிமிடெட்” என்கிற இந்நிறுவனம் ஆண்டொன்றுக்கு ரூ.250 கோடிக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி செய்கிறது.
- முக்கியமாக அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளில் வலுவான சந்தையை வைத்திருக்கிறது. வியட்நாம், தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
- இந்த ஆலை வளாகத்தில் மூன்று இடங்கள் இருக்கின்றன:
- முதலாவதாக, இறாலை பதப்படுத்தி பேக்கிங் (Packing), லோடிங் (Loading), அன்-லோடிங் (Un-loading) செய்யப்படும் உற்பத்தி பகுதி.
- அடுத்ததாக, தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ‘குடியிருப்பு’ பகுதி.
- மூன்றாவதாக, பதப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் அமோனியா வாயுக் கிடங்கு பகுதி.
- இந்த மூன்றும் தனித்தனியே இருக்கின்றன. ஆனால், அமோனியா வாயு கசிந்தால், அது சில நிமிடங்களில் கிலோ மீட்டர் தொலைவிற்குப் பயணிக்கும். இதனால்தான் குறைந்த அளவு வாயு கசிந்தால் கூட பக்கத்தில் இருக்கும் கன்னிகைப்பேர் கிராமம் தடுமாறிவிடும். “ஒருவேளை அந்தக் கிடங்கு வெடித்திருந்தால்… நினைத்தாலே குலைநடுங்குகிறது” என்கின்றனர், உள்ளூர்வாசிகள்.
- சம்பவ தினத்தன்று, அமோனியா வாயுக்கிடங்கில் கசிவு அதிகமாகி கட்டுக்கடங்காத அளவில் பரவியது. சில நிமிடங்களில் கிடங்குக்கு சற்று தூரத்தில் இருந்த தொழிலாளர் குடியிருப்பிற்குள் வாயு புகுந்து கணப்பொழுதில் நிலைகுலைய வைத்துள்ளது.
- யார், யார் எங்கிருந்தார்களோ அங்கேயே மயங்கி விழுந்தனர். சற்று தள்ளி இருந்தவர்கள் இதைப் பார்த்து எச்சரிக்கையடைந்து வெளியே தகவல் சொன்னார்கள்.
- 10-15 நிமிடங்களில் மயங்கி விழுந்தவர்கள், இரத்த வாந்தி எடுத்தவர்களது எண்ணிக்கை 80 என்கிற அளவைத் தாண்டியது. சிலரது நாடித்துடிப்பும் அடங்கத் தொடங்கியது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த உள்ளூர் மக்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கினர்.
- மாண்டவர்கள் ‘இந்திக்காரர்கள்’ என்றெல்லாம் வேற்றுமை பாராத உழைக்கும் மக்களது களப்பணியாலேயே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு என்கிற அளவில் மட்டுப்படுத்தப்படிருக்கிறது!
சுற்றுச்சூழல் பாதிப்பும் அரசுத் துறைகளின் கண்துடைப்பும்
- அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட இந்த ஆலையில் விபத்து என்பது புதிதல்ல, இதுவரை பலமுறை நடந்துள்ளது. இம்முறை உயிரிழப்பு அதிகம் என்பதால் செய்தி வெளியில் வந்துள்ளது.
- இறாலை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலை வெளியிடும் நச்சு வாயு, நச்சு கலந்த நீரால், நீரும் நிலமும் காற்றும் மாசமடைந்து சுற்றுப்புற பகுதிகள் வாழத் தகுதியற்றதாகும் அபாயம் அதிகரித்து வருகிறது.
- இந்த ஆலை, இப்பகுதி மக்களை நோயாளியாக்கியும், எப்போதும், எதுவும் நடக்கலாம் என்கிற பீதியில் வாழும் அவலத்திலும் தள்ளியுள்ளது. இதற்கெதிராகப் பலமுறை போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், வழக்கம் போலத் தொழிற்சாலை துறையும் சுற்றுச்சூழல் துறையும் கண்துடைப்பு சோதனைகளை மேற்கொள்ளுமேயன்றி, வேறெதுவும் நடக்கவில்லை!
- விபத்து நடந்த கன்னிகைப்பேர் பகுதி சமீப காலமாக விவசாயத்தை இழந்து ஆலைப்பகுதியாக மாறி வருகிறது.
- ஜெயபுரம், கன்னிகைப்பேர், மஞ்சங்கரணை எனப் பல கிராமங்கள் தொழிற்சாலை மையங்களாக மாறி வருகின்றன. பிர்லாவின் ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (HIL), பென்னார் இண்டஸ்ட்ரீஸ், ராம்தேவின் பதஞ்சலி ஃபுட்ஸ் (முன்னர் ருச்சி எண்ணெய்) என இப்பட்டியல் நீள்கிறது.
- இந்த ஆலைகள் எல்லாவற்றிலும் புலம்பெயர் தொழிலாளர்களே பிரதான சக்தி. குறிப்பாக, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் தொழிலாளர்கள் நிரம்பியுள்ளனர். சப்ளையர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்படும் இந்த தொழிலாளர்களை வைத்து எத்தகைய வேலையிலும், எந்தப் பயிற்சியோ அனுபவமோ இல்லாத நிலையில் உற்பத்தியை நடத்துகின்றனர்.
இலாபத்திற்காக உயிரைக் குடிக்கும் வல்லூறுகள்
- கட்டுப்பாடற்ற வேலை நேரம், வெளியே சென்று விடாத அளவுக்கு மறைமுகப் பிணைத் தொழிலாளி (Bonded labour), தேவைப்பட்டால் அடி- உதை நடவடிக்கைகள்…. இவ்வாறுதான் இந்த ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை எல்லாம் உள்ளூர் தொழிலாளியிடம் சாத்தியமில்லை. அதனால், புலம்பெயர் தொழிலாளர்களைப் பொன் முட்டையிடும் வாத்தைப் போல முதலாளிகள் பார்க்கின்றனர்.
- ஒருவேளை பெரிய விபத்து ஏற்பட்டு, தொழிலாளர்கள் செத்துப் போனால், சில இலட்சங்களைக் கொடுத்து படுகொலையை மூடிமறைப்பது இவர்களுக்கு சர்வ சாதாரணம்.
- கேள்வி கேட்பாரற்ற உழைப்பாளிகள், மலிவான நிலம், ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், இலகுவான சரக்கு போக்குவரத்து எனக் கொள்ளை இலாபத்துக்குப் பஞ்சமில்லை. ஆனாலும், முதலாளிகளின் இலாபவெறிக்கு எல்லைக்கோடு என்பதே கிடையாதல்லவா?
- மேலும், பயிற்சியோ, முன் அனுபவமோ இல்லாத தொழிலாளர்களை வைத்தும், புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தும் வேலை வாங்குவதில் முதலாளிகளுக்கு இன்னொரு இலாபமும் இருக்கிறது. எந்திரங்கள் பராமரிப்புக்கோ, பழுது நீக்குதலுக்கோ செலவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.
- பராமரிப்பற்ற, பழுதடைந்த இயந்திரங்களை இயக்கினால் என்ன ஆகிவிடும்? மிஞ்சிப்போனால் விபத்து நடக்கும், சிலரோ, பலரோ சாகக்கூடும்; அதனால் என்ன? ஆலை விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் அரசு சில இலட்சம் நிதியுதவி அளிக்கும். குரூப் இன்சூரன்ஸ், விபத்து இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கும். இவ்வாறுதான் இந்த ஆலைகள் இயங்குகின்றன.
- செலவைக் குறைத்து இலாபத்தைப் பெருக்கும் முதலாளிக்கு இயந்திரம் பழுது பார்த்தல் ஒரு செலவென்றால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஏற்படும் இழப்பும் வேண்டாத செலவுதான். விபத்து நடந்தால், நடக்க வேண்டியதை அரசே செய்து விடுகிறது. முதலாளிக்கு எந்த நட்டமும் இல்லை. சில ஆயிரம் அபராதம் தவிர வேறு தண்டனையும் இல்லை.
- இந்த சாதகமான நிலையில் உற்பத்திக்கு பாதகமில்லாத வரையில், இயந்திர பராமரிப்பு முதலாளிக்கு அவசியமானதாக இல்லை. அதே போல வேகக் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பு நடைமுறைகளால் உற்பத்தி வேகம் குறையுமானால், எவன் செத்தாலும் பரவாயில்லை, கட்டுப்பாட்டுக் கருவிகளை நீக்கு என்பதே முதலாளிகளின் கருத்தோட்டம்.
- ஆகவே, கட்டற்ற இலாபத்தைச் சாதிக்க எவன் செத்தால் எனக்கென்ன என்று நினைக்கும் முதலாளிகளையும், முதலாளிகளது மனம் நோகச் செய்தால் முதலீடு கிடைக்காது என்று நினைக்கிற அரசு எந்திரமும் தொழிலாளி வர்க்கத்தின் பிணத்தின் மீது வேட்டை நடத்தும் வல்லூறுகள். இந்த வல்லூறுகளிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
7397404242
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











